Loading

நீதான் என் காதல் மழை 12

யாழி அடக்காமாட்டாது சிரித்திட, மூக்கினை தேய்த்தபடி நிதிஷா யாழை முறைத்தாள்.

தனக்கும் சிரிப்பு பொங்கிவர, பெரும் முயற்சிக்கு பின் கட்டுப்படுத்தி நின்ற அஜய்,

“யாழ்…” என்று கண்காட்டி விட்டு, நிதிஷாவை தூக்கிவிட்டான்.

மூக்கின் நுனி நன்கு சிவந்து தடித்து விட்டிருந்தது.

“ஷூட்டிங் போச்சு.” அவளின் முகம் பார்த்து அஜய் முணகினான்.

“எல்லாம் இவளால் தான்” என்று நிதிஷா கடுப்புடன் சொல்ல…

“நீயா வந்து விழுந்துட்டு அவளை எதுக்கு காரணம் காட்டுற நிதிஷா” என்ற அஜய், “உனக்கு காலேஜ் டைம் ஆகலையா? ஓடு” என யாழை விரட்டினான்.

யாழி அங்கிருந்து நகர்ந்திட…

“உன்னோட இன்டன்ஷன் என்னன்னு எனக்கு புரியுது நிதிஷா. பட், நான் இந்த ஃபீல்டில் நீ பாக்குற மத்த ஆண்களைப் போல இல்லை. எனக்கு யாழி மட்டும் தான். அவளைத் தவிர மத்த யாரா இருந்தாலும், என்கிட்ட உணர்வற்ற பார்வை தான். புரிஞ்சிக்க” என்று அழுத்தமாக சொல்லிய அஜய், “சீரீஷ் உன்னை ட்ரூவா லவ் பண்றான். அவனுக்கு துரோகம் பண்ணாதே” என்றான்.

மொட்டை மாடியோடு இணைந்த அறை என்பதால், அஜய் பேசியவை யாழிக்கு நன்கு கேட்டது.

நெஞ்சமெல்லாம் பூ பூத்திட, முகம் முழுக்க வசீகரம் கொண்டாள்.

“அவன்கிட்ட உன் அளவு சார்ம் இல்லையே அஜய். பணம் நிறைய இருக்கு. அதுக்காகத்தான் ஓகே சொன்னேன். இந்த டாப் மாடல் பொசிஷன் எல்லாம் இளமை இருக்க வரைதான்னு தெரியும். அதுக்கு அப்புறம் செட்டில் ஆக, சீரிஷ் மாதிரி ஒரு ஆள் தான் சரி. அவனுக்கு உண்மையா இருக்க தான் முயற்சிக்கிறேன். லாஸ்ட் வன் சான்ஸ்… உன்னை மட்டும்” என்று கொஞ்சமும் தயக்கமின்றி சொல்லியவள், “எல்லாரும் என்னைத்தேடி வருவாங்க. ஆனால், நான் கண்ணு வச்சு மிஸ் ஆன ஆள் நீ மட்டுந்தான்” என்றாள்.

“உன்னையெல்லாம் மாத்த முடியாது” என்று நகர்ந்த அஜய்யின் கையை பிடித்து இழுத்து நிறுத்திய நிதிஷா, “வன் டே எனக்கு ஓகே தான். அப்புறம் சீரிஷ்க்கு உண்மையா இருக்கேன். உன்னோட ஸ்டாப் பண்ணிக்கிறேன்” என்றாள்.

அவள் சொல்லியதன் அர்த்தம் யாழுக்கு அதீத அதிர்வென்றால், அஜய் அவளை அடிக்க கையை ஓங்கிவிட்டான்.

“ச்சை…” என்று அடிக்காது கையை இறக்கிய அஜய், “நான் திலீப்க்கு கால் பண்றேன். ஷூட் முடியும் வரை நீ அங்கவே ஸ்டே பண்ணிக்கோ” என்று அவள் மறுத்துக் கூறும் முன்பு சென்றுவிட்டான்.

தன்னுடைய அறைக்குள் கோபமாக நுழைந்த அஜய், அதே வேகத்தில் யாழின் அறைக்குள் நுழைந்து அதிர்ந்து நின்றிருப்பவளை இறுக்கி அணைத்திருந்தான்.

“மாமா!”

“கட்டிக்கணும் போல இருக்குடி” என்ற அஜய், “லவ் யூ அம்மு” என்று அவளின் நெற்றியில் இதழ் பதித்து விலகினான்.

“ஆச்சரியமா இருக்கு.”

“என்னது?” அஜய்யின் புருவம் உயர்ந்தது.

“இப்போ நீங்க பண்ணது” என்ற யாழி, “இன்னொன்னு கிடைக்குமா?” எனக் கேட்டாள். கண்களை சுருக்கி. தன் கன்னத்தைக் காட்டி.

“போடி” என்ற அஜய், “காலேஜ் கிளம்பு” என்று திரும்பிச் சென்றான். மென் புன்னகை அவனது உதட்டில் உறைந்து நின்றது.

அன்று கல்லூரி முடித்து யாழி வீட்டிற்கு வந்தபோது நிதிஷா இல்லை.

‘சொன்ன மாதிரி ஹோட்டலில் தங்க வசிட்டாரோ!’ நினைத்த யாழி காந்தளிடம், “நிதிஷா போயாச்சா?” எனக் கேட்டுக்கொண்டே, அவர் முன்பிருந்த முறுக்கை எடுத்து வாயில் போட்டவளாக உணவு மேசை இருக்கையில் அமர்ந்தாள்.

“என்னவோ தெரியல. அருளுக்கும் அந்தப் பொண்ணுக்கும் பயங்கர விவாதம். அப்போலேர்ந்து உர்ருன்னு உட்கார்ந்திருக்கான். எனக்கு அந்த ஹிந்தி ஒன்னும் புரியல” என்று மாடியை ஒரு பார்வை பார்த்தார்.

ஏற்கனவே நிதிஷா, நானும் அஜய்க்கு விருப்பம் தெரிவித்தேன் என்று சொல்லியதையே காந்தளால் ஏற்க முடியவில்லை. இதில் காலையில் நடந்ததை சொன்னால் அவ்ளோ தான் என நினைத்த யாழி,

“எதும் ஷூட்டிங் விஷயமா இருக்கும் அத்தை” என்றாள்.

“ம்… என்னவோ” என்ற காந்தள், “கல்யாணத்தை ரொம்ப பக்கம் வாச்சாச்சு. அதுக்குள்ள அருள் அந்தப்பொண்ணை அனுப்பி வச்சிட்டா போதும்” என்று எழுந்து சென்று யாழுக்கு தேநீர் கொண்டு வந்து கொடுத்தார்.

தேநீரையும், மாலை நேர சிற்றுண்டியையும் முழுதாக முடித்த பின்னரே யாழி மேலே சென்றாள்.

“அவனை வந்து சாப்பிட சொல்லு யாழி” என்றார் காந்தள்.

மாடி கூடத்தின் டீபாயில் பையை வைத்தவள், அஜய் அறையை எட்டிப் பார்த்தாள்.

மூடிய கண்களுக்கு மேல் ஒற்றை கை வைத்தவனாக படுத்திருந்தான்.

‘தூங்கிட்டு இருக்காங்களா!’ நினைத்தவள் திரும்பி செல்ல முற்பட, “யாழ்” என்று விளித்திருந்தான் அஜய்.

“தூங்கலையா?” எனக் கேட்டு உள்ளே நுழைந்த யாழி, மெத்தையில் அவனருகில் சென்று அமர்ந்தாள்.

சட்டென்று தன் தலையை அவளின் மடிக்கு மாற்றியிருந்தான்.

“மாமா!” ஒரு கணம் அவளுக்கு மூச்சே நின்றுபோனது.

“என்னடி சிலையாகிட்டியா?” என்று அவளின் மடியிலேயே தலையை அவள் முகம் பார்க்க வைத்தான்.

“ஹான்… ஒன்னுமில்லை… ஒன்னுமில்லை மாமா” என்றவளுக்கு தேகம் சிலிர்த்தது.

“நிதிஷா ஓவரா போற மாதிரி தெரியுது அம்மு. நிறைய பேசிட்டேன்” என்ற அஜய் அதற்கு மேல் அவளுடனான வாதத்தை சொல்லவில்லை.

எப்படி சொல்லுவான்? சொல்லும் மாதிரியான பேச்சுக்களையா அவள் பேசினால்.

“அவளோட ஆளுக்கு கால் பண்ணிட்டேன். வன் வீக்ல, நிலா வளைகாப்புக்கு முன்ன ஷூட் முடிச்சு அவளை அனுப்பி வச்சிடணும்” என்றான்.

“ஹ்ம்ம்” என்ற யாழிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“என்ன மேடம் அமைதியா இருக்கீங்க?” என்ற அஜய், “என்னாச்சு யாழ்?” என்று எழுந்து அமர்ந்தான்.

“அவங்க என்ன சொன்னாங்க மாமா?”

“யாரு?”

“நிதிஷா!”

“அவளை விடு. வேலை முடிஞ்சா அவளோட பார்ட் ஓவர். இனி வேறெந்த ஷூட்டுக்கும் அவளை புக் பண்ணக்கூடாது” என்றான்.

“அப்போ ரொம்ப டீப்பா எதோ சொல்லியிருக்கா?” என்று யாழ் புருவம் உயர்த்த, “சொன்னா வடாபாவ்ல வடையில்லைன்னு” என்று முனகினான் அஜய்.

“என்னன்னு சொல்லு மாமா?” என்ற யாழி, “நீ இப்போ சொல்லல, நான் அவகிட்டவே கேட்டுப்பேன்” என்று விரல் நீட்டி மிரட்டினாள்.

“என்னடி… ரொம்ப அடம் பிடிக்கிற!” அஜய் அவளின் கன்னத்தை வலிக்கக் கிள்ளி வைத்தான்.

“வலிக்குது மாமா” என்று கன்னத்தை தேய்த்தவள், “சொல்லு மாமா. உன்னை முடக்கிப்போடுற மாதிரி அவங்க எதோ சொல்லியிருக்கீங்க. அதான் நீ சாப்பிடக் கூட இல்லாம ரூம்குள்ளவே இருந்திருக்க” என்றாள்.

சொல்லாமல் அவள் விடப்போவதில்லை என அவன் தான் இறங்கி வரும்படி ஆனது.

“அவள் சொன்னது தான். நீ என்னை தப்பா நினைக்கக் கூடாது” என்ற அஜய், அவளின் தலையாட்டலில், “அவளுக்கு என் பிஸிக் மேல தான் ரொம்ப அட்ராக்ஷனாம். ஒருவாட்டியாவது…” அவன் முடிக்கும் முன் வாயில் கை வைத்து தடுத்திருந்தாள்.

“போதும்.” யாழின் கண்கள் இரண்டும் நொடியில் சிவந்து போனது.

அஜய் மீது நம்பிக்கை இருந்தாலும் நிதிஷாவின் வார்த்தை அவளை அதிர வைத்திருந்தது.

நிதிஷாவிற்கு இரண்டு மாதத்தில் சீரீஷ் உடன் திருமணம். இடைப்பட்ட நாட்களில் தான் திலீப்பின் தொடர் வேண்டுகோளால் இந்த விளம்பரப் படத்தில் நடிப்பதற்கு வந்து இருக்கிறாள்.

இன்னொருவனுடன் திருமணம் ஏற்பாடு செய்துவிட்டு, அஜய்யிடம் எப்படி அவளால் இப்படி சொல்ல முடிகிறதென நினைத்த யாழுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. மனதில் எழுந்த அருவருப்பில்.

“கொஞ்சம் தள்ளியே இரு மாமா!”

அவளின் பதட்டம் அவளுக்கு. சொல்லிவிட்டாள்.

“அப்போ மேடம் என்னை நம்பல?” அஜய்யின் குரலில் தான், தான் சொன்னதன் பொருள் உணர்ந்து தலையில் தட்டிக் கொண்டாள்.

“எப்படி வேணா நினைச்சிக்கோ மாமா. ஆனால் அவகிட்டேர்ந்து தள்ளியே இரு” என்ற யாழி எழுந்து சென்றுவிட்டாள்.

காலையில் தன்னை அத்தனை நம்புவதாக சொல்லியவள், தற்போது இப்படி சொல்லவும் அஜய்க்கு கோபம் தான் வந்தது. யாழி மீது பெரும் மனத்தாங்கல் உண்டானது.

அதன் தாக்கத்தில் யாழியிடம் கடந்த சில தினங்களாகக் காட்டிய நெருக்கத்தை முற்றிலும் தவிர்த்துவிட்டான். அவளாக பேசினால் பேசினான்.

இதற்கிடையில் வெண்ணிலாவின் வளைகாப்பும் முடிய, இரண்டு நாட்கள் வந்து அன்னை வீட்டில் தங்கியிருந்தவளை மூன்றாம் நாள் குமரன் மலைக்கு அழைத்துச் சென்றுவிட்டான்.

இதற்குள் விளம்பரத்தை முடிக்க வேண்டுமென அஜய் நினைத்திருக்க, வளைகாப்பு முடிந்தும் இன்னும் காட்சிகள் நிறைவு பெறவில்லை.

அன்று மொட்டை மாடியில் மூக்கு உடைபட்டதை காரணமாக வைத்து, நான்கு நாட்களுக்கு நிதிஷா நடிக்க முடியாது என்றிட, அஜய்க்கு தன் பொறுமை எல்லை கடந்தது.

“அவ்ளோ பெரிய அடியில்லை. மேக்கப்பில் கவர் பண்ணிடலாம்” என்று அஜய் எவ்வளவோ சொல்லியும் நிதிஷா முடியாதென மறுக்க, “நான் வேற மாடல் வைத்து எடுத்துக்கொள்கிறேன். நீ கிளம்பு” என்றுவிட்டான் அஜய்.

அதில் அதிகம் பதறியது திலீப் தான்.

“நோப்… நிதி தான் நடிக்கணும் அஜய்” என்று திலீப் திட்டவட்டமாக சொல்ல, “உன் கார்டர்ன் பூக்கள் வச்சு அழகா இருக்கு. இப்போ எடுத்தா தான் சினாரியோ அழகா எதிர்பார்த்த மாதிரி வரும். நாளாச்சு பழைய பூக்கள் பிஞ்சு வச்சு காய்ந்த லுக் வீவ் ஆகும். சோ, என்னை கன்வீன்ஸ் பண்ணாம, அவளை இன்னைக்கே நடிக்க சொல்லு, இல்லை நான் ஆளை மாத்திடுவேன்” என்று அத்தனை கோபம் கொண்டிருந்தான் அஜய்.

அதன் பின்னர் திலீப் என்ன பேசினானென்று தெரியவில்லை. நிதிஷா நடிப்பதற்கு சம்மதம் சொல்லி ஷூட்டிங் ஆரம்பமாகியது. என்ன தான் துரித கதியில் அஜய் செயல்பட்டாலும், இரண்டு வாரங்கள் ஓடியிருந்தன. இன்னும் முடிக்கவில்லை.

நிகில் வேறு தன் திருமண விடயமாக அல்லாடிக் கொண்டிருக்க, அஜய்… நிகில் இல்லாது மற்ற பணியாட்களுடன் திண்டாடிப்போனான்.

நாட்களும் விரைவாக நகர்ந்தது.

அஜய்யின் வேளைப்பளுவினால் வீட்டிற்கு உறங்கும் நேரம் மட்டும் தான் வந்தான்.

அவன் வர நேரம் யாழி உறங்கியிருப்பாள். என்ன தான் அன்றைய அவள் சொல்லினால் சிறு வருத்தம் இருந்தாலும், அவளை பார்க்காது அவனுக்கு அந்நாள் முடியாது. உறங்கும் தன்னவளை சில நிமிடங்கள் ரசித்துவிட்டே தனது அறைக்குள் வந்து முடங்குவான்.

அன்றும் அஜய் இரவு வெகு தாமதமாக வர, வீடே இருளில் மூழ்கியிருந்தது.

எடுத்த காட்சிகளை சரிபார்த்து செய்ய வேண்டியவை செய்து வர தாமதமாகிவிட்டது.

“அவள் இல்லையா?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டே மாடியேற, மாடியும் மின் விளக்கின்றி இருளாக இருந்தது.

யாழி, அஜய் வரவில்லை என்றால் மாடி கூடத்து மின்விளக்கை அணைக்காது போட்டு வைத்திருப்பாள். இன்று வெளிச்சமின்றி இருக்க, யாழின் அறையை எட்டிப் பார்த்தான். அவளின் அரவமின்றி வெறுமையாக இருந்தது.

“எங்க போயிட்டா இவ?” என்று மொட்டை மாடியையும் எட்டிப் பார்த்து அலசிவிட்டான். அவனது அம்மு தான் அங்கிருப்பதற்கான தடயம் எதுவுமில்லை.

வீட்டில் தன்னவள் இல்லை என்பதை அறிந்த அஜய், அடுத்த நொடி நேரத்தைப் பொருட்படுத்தாது அவளுக்கு அழைத்துவிட்டான்.

அழைப்பினை ஏற்ற யாழின் குரல் உறக்கக் கலக்கத்தில் வெளிவந்தது.

“எங்கடி போயிட்ட?” அத்தனை தவிப்பு அஜய்யிடம்.

“என்னைத் தேடுறியா மாமா நீ?” யாழின் அந்தக் கேள்வியில் அஜய்யின் இதயம் அதிர்வை உள்வாங்கியது.

சில நாட்களாக அஜய் யாழிடமிருந்து தள்ளித்தான் இருக்கிறான்.

நிதிஷாவாக நெருங்கி வரும்போது இவன் விலகவேச் செய்கிறான். அது தெரிந்தும் யாழி அன்று தள்ளியே இரு என்று சொல்லிய கோபம் அவனிடம். இருப்பினும் ஒருநாளும் அவளது முகம் பாராது இருந்ததில்லை. வெளிப்படையாய் அம்முகம் கண்டு தன் கோபத்தைக் காட்டியதுமில்லை.

“காலையில ஷூட் போகும் அவசரத்தில் உன்னை சரியாக்கூட பார்க்கல அம்மு. இப்போ உன்னை பார்க்காம எப்படிடி தூங்குறது” எனக் கேட்டான்.

“நான் மலைக்கு வந்துட்டேன் மாமா!”

“ஏன்?” ஒற்றை வார்த்தை அவனிடமிருந்து அத்தனை வேகமாக வெளிவந்திருந்தது.

“அடுத்தவாரம் இந்நேரம் உன் பக்கத்தில் பொண்டாட்டியா இருக்கணும்ல… அதுக்குத்தான்” என்றாள்.

“இப்போவே நீ என் பொண்டாட்டி தான்டி… சொல்றதை புரியுற மாதிரி சொல்லு” என்றான்.

“இன்னும் ஏழு நாளுல கல்யாணம். நினிவிருக்கா இல்லையா உங்களுக்கு?” கோபமாகக் கேட்டிருந்தாள். அவளோ அத்தனை எதிர்ப்பார்ப்பாய் நடக்கவிருக்கும் தங்கள் திருமணத்திற்காகக் காத்திருக்க, அவனோ நினைவில்லாது இருக்கிறான் என்று.

“அதுக்குள்ள வந்திடுச்சா?” என்ற அஜய், “இந்த ஷூட் ஆரம்பிச்சதலேர்ந்து நாள் போறதே தெரியல” என்றான்.

அவனின் வேலைப்பளு புரிந்து தன் கோபத்தை மறைத்துக் கொண்டாள்.

“நிதிஷா எப்போ கிளம்புறாங்க?”

“நாளையோட ஷூட் முடிஞ்சிடும்” என்றான்.

“ம்” என்ற யாழி, “சரி வைக்கட்டுமா?” எனக் கேட்டாள்.

“என்ன அவசரம்?” என்ற அஜய், “நீயெதுக்கு அங்கபோன?” என்றான்.

“கல்யாண சடங்கு எல்லாம் எனக்கு இங்கிருந்து தான் செய்யணுமாம். ஈவ்வினிங் தான் அப்பா, அம்மா வந்து கூட்டிட்டு வந்தாங்க” என்றாள்.

“ஹோ” என்ற அஜய், “பார்க்கணும் போல இருக்குடி” என்றான்.

“என்னாச்சு இன்னைக்கு. வழக்கமா நீங்க இப்படிலாம் பேசமாட்டிங்களே” என்றாள்.

“அதான் கல்யாணம் ஆகப் போகுதே!”

“இன்னும் ஏழு நாள் இருக்கு.”

“அது இருக்கட்டும். தாலி கட்டுறது இவங்களுக்காகத்தான். உன்னை என் மனசு விரும்ப ஆரம்பிச்சப்பவே, நீ என் பொண்டாட்டி ஆகிட்ட” என்றான்.

அஜய்யின் வெளிப்படையான காதல் பேச்சுக்களில், அங்கு செம்மை கொண்டு எழுந்து அமர்ந்திருந்தாள் யாழினி.

“உங்களுக்கு இப்படிலாம் பேச வருமா மாமா?”

“உன்கிட்ட மட்டும் வருதே!” என்ற அஜய், “வீடியோ கால் வா” என்றான்.

அடுத்த நொடி இருவரும் காணொளி அழைப்பில் ஒருவரின் முகம் பார்த்து விழி மொழி பேசிக் கொண்டிருந்தனர்.

உறக்கத் தோற்றத்தில் அவனை சுண்டி இழுத்துக் கொண்டிருந்தாள் பாவை.

“என்ன மாமா அப்படி பாக்குற?”

“பார்த்துட்டே இருக்கத் தோணுது.”

“கூடவே இருக்கும்போது இப்படிலாம் பேசமட்டியா மாமா நீ? இப்போ ரொம்பவே தேட வைக்கிற நீ” என்றாள்.

“உன்னை யாருடி என்கிட்ட சொல்லாம போக சொன்னது?” கோபம் கொண்டான்.

“பாருடா, நீங்க தான் என்கிட்ட கொஞ்ச நாளா சரியாவே பேசுறதில்லையே! அப்புறம் என்ன?” என்றவள், “கிளம்பும் போது உங்களுக்கு கால் பண்ணேன். நீங்க எடுக்கல. மெசேஜ் பண்ணேன். இன்னும் பார்க்கல. இப்போ என்கிட்ட வந்து எகிருறீங்க!” என்று படபடவென பொரிந்தாள்.

“இந்த நிதிஷாவை சீக்கிரம் பேக் பண்ணுற டென்ஷன்லே, ஷூட் முடிக்கிற பரபரப்பு. அதுல மொபைல் எடுக்கவே நேரமில்லை யாழ்” என்ற அஜய், “நாளைக்கு முடிஞ்சிடும். நைட் திலீப் பார்ட்டி அரெஞ் பண்ணியிருக்கான். அத்தோடு எல்லாம் ஓவர். அப்புறம் கொஞ்சநாள் பொண்டாட்டியோட தான் மத்த கமிட்மென்ட்ஸ் எல்லாம்” என்று ஒற்றை கண்ணடித்து அவளை சிவக்க வைத்தான்.

“ச்சூ… மாமா” என்றவள், “என்னவோ படபடப்பாவே இருக்கு மாமா. கல்யாணம் சந்தோஷமா நடந்திடும் தானே?” எனக் கேட்டிருந்தாள்.

அவள் ஏன் அப்படிக் கேட்டாலென அவளுக்கேத் தெரியவில்லை.

“பொண்ணும் ரெடி பையனும் ரெடி. கல்யாணம் பண்ணி வைக்க பெரியவங்களும் ரெடி. நடக்காம எப்படி?” என்ற அஜய், “இன்னும் சிக்ஸ் டேஸ் என் பக்கம் இருக்கமாட்டியா நீ?” எனக் கேட்டான்.

“இப்படிலாம் கேட்காத மாமா. இப்போவே உன் கைக்குள்ள வந்திடனும் போலிருக்கு” என்றாள்.

“வாடி…” தன்னிரு கைகளையும் நீண்டு விரித்து, பார்வையால் தன் மார்புப் பகுதியைச் சுட்டி அழைத்தான்.

“பயங்கர லவ் ஃபார்மில் இருக்கீங்க போல” என்ற யாழி, “இந்த நாளெல்லாம் எப்போ முடியும்? உன் பக்கத்தில் எப்போ உட்காருவேன்னு இருக்கு மாமா” என்றவளிடம் அதீத ஏக்கம்.

“சீக்கிரம் ஓடிடும்” என்ற அஜய், “ரொம்ப லேட் ஆகுது. நாளைக்கு டான் எபெக்ட் ஷூட்” என்றான்.

“அப்போ ஏர்லி மார்னிங் எல்லாம் முடிஞ்சிடுமா?”

“ம்ம்… நிதிஷா ஒழுங்கா ஆக்ட் பண்றது பொறுத்து. இந்த திலீப் வேற மாடலே இல்லைன்னு இவள் தான் வேணும்னு அவ்ளோ டார்ச்சர். பேக்கப் செய்து, புட்டேஜ் செக்கிங் எல்லாம் முடிச்சு கிளம்ப ஈவ்வினிங் ஆகிடும்” என்றான்.

“ஹோ” என்ற யாழி, “சரி நீ தூங்கு மாமா” என்றாள், நாளை நடக்கவிருக்கும் விபரீதம் அறியாது.

அஜய்யும் தன்னவளுடன் பேசிய இதத்தை இதயத்தில் சேமித்தவனாக உறங்கிப்போனான்.

_______________________

மலை மேலிருக்கும் திலீப்பின் ரிசார்ட் அது.

நெடுநேரமாக நீண்டு ஒலிக்கும் அலைபேசி அழைப்பில் கண் திறந்த அஜய்க்கு தலையெல்லாம் வலித்தது.

எழ முடியாது தடுமாறி எழுந்தமர்ந்தான்.

கண்கள் எரிந்தது. காட்சிகளில் தெளிவில்லை.

“ஓ காட்” என்ற அஜய் எட்டி அலைபேசியை எடுத்தான்.

“எத்தனை தடவை மாமா போன் போடுறது. எங்க இருக்க நீ? நைட் வீட்டுக்குப் போகலையா? அத்தையும் நானும் நைட் முழுக்க போன் பண்ணிட்டு இருக்கோம்” என்று படபடத்த யாழி, “நிதிஷா இப்போ தான் வீட்டுக்கு வந்தாங்கலாம். உன்னை கேட்டதுக்கு எதுவும் சொல்லாம, டூ ஹவர்சில் பிளைட். நான் கிளம்புறேன் சொல்லி, ரிசார்ட்டில் ஸ்டே பண்ண போகும் முன்ன முக்கியமான திங்க்ஸ் பாதுகாப்பா இருக்கும்ன்னு இங்கவே வசிருந்தங்களாம். அதை எடுத்துகிட்டு கிளம்பிட்டாங்களாம்” என்றாள்.

“நான் தான் நைட் பார்ட்டி இருக்கு சொல்லியிருந்தேனே யாழ்” என்று கண்களை கசக்கியபடி நன்கு இமை திறந்தான்.

தெளிவில்லாத காட்சி தெளிவு பெற்றது.

‘நான் எப்படி இங்கு ரூமில்?’ அவனது கேள்விக்கு அவனிடமே பதிலில்லை.

“பார்ட்டி இருக்கு சொன்ன… வரமாட்டேன்னு சொல்லலையே” என்றாள் யாழி.

“ம்… ஜூஸ் தான் குடிச்ச மாதிரி இருந்தது…” என்று இழுத்த அஜய், சட்டென்று தானிருக்கும் நிலை புரிந்தவனாக, “நீ வை. நான் இப்போ கிளம்பிடுவேன் அம்மாக்கு சொல்லிடு” என்று வைத்துவிட்டான்.

படுக்கையிலிருந்து எழுந்து நின்ற அஜய் தன்னையும், அவ்விடத்தையும் வேகமாக ஆரயாந்தான்.

ஷார்ட்ஸ் பட்டும் அணிந்திருந்தான். இரவு பார்ட்டிக்காக அவன் உடுத்தி வந்திருந்த ஆடை அங்கொன்றும் இங்கொன்றுமாக தரையில் கிடந்தது.

“ஜூஸ் குடிச்சேன். உடனே வீட்டுக்கு கிளம்பிட்டேன்” என்று நெற்றியைத் தேய்த்துக் கொண்டவனுக்கு, தன்னை திலீப் வந்து தாங்கிப் பிடித்தது நினைவு வந்தது.

“நான் எப்படி அன்கான்சியஸ் ஆனேன்?” அவனிடம் பெருமூச்சு.

உடனே திலீப்புக்கு அழைத்தான்.

“குட் மார்னிங் அஜய்” என்ற திலீப், “ஹேங் ஓவரெல்லாம் போச்சா?” எனக் கேட்டான்.

“வாட் யூ மீன்?”

“ட்ரிங்க்ஸ் பண்ணமாட்டேன் சொல்லிட்டு முழுசா மட்டையாகிட்டியே அஜய்” என்று சிரித்த திலீப், “நீ ஸ்டெடியா இல்லை. அதான் ட்ரைவ் பண்ண முடியாதுன்னு, அங்கே காட்டேஜில் தங்க வச்சேன்” என்றான்.

“ஹோ, தேங்க்ஸ்” என்று வைத்திட்ட அஜய்க்கு… திலீப் தன்னை படுக்கையில் படுக்க வைத்தது ஓரளவிற்கு நினைவு வந்தது.

“ட்ரெஸ் யாரு ரிமூவ் பண்ணியிருப்பா?” என்று தலையை பிடித்துக்கொண்டு மெத்தையில் அமர்ந்தான். அதனை திலீப்பிடமே கேட்கலாம். ஆனால் வேறு எதுவும் தவறாக நடந்து அதனை தானே காட்டிக்கொடுத்ததுபோல ஆகிவிடக் கூடாதென கேட்காது விடுத்தான்.

பல குழப்பம். பல கேள்விகள்.

தலை வெடித்திடும் போலிருந்தது.

எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தான் தெரியவில்லை. நேரமாவதை உணர்ந்து எழுந்தவனின் கரம் மெத்தையில் ஊன்றிட, கையில் எதுவோ தட்டுப்பட்டது. என்னவென்று பார்க்க காதணி.

“ஸ்டட்? இதெப்படி இங்க?”

நிதிஷா அணிந்திருந்தது நினைவு வந்தது. ஷூட்டிற்காக தேர்வு செய்து வைத்திருந்த காதணி. தன்னுடைய ஆடைக்கு பொருத்தமாக இருப்பதாக நிதிஷா எடுத்துக் கொண்டிருந்தாள்.

அறை அவளுடையதாக இருக்கும்போது, அவளுடைய பொருட்கள் அங்கிருப்பதில் என்ன ஆச்சரியம்?

“அவளோடது…?”

ஆவென்று கத்த வேண்டும் போலிருந்தது.

தவறுதலாக ட்ரிங்க்ஸ் பருகிவிட்டோம். நினைவு இழந்துவிட்டோம் என்பது மட்டும் புரிந்தது.

எழுந்து நின்று கோபமாக காலை தரையில் உதைத்து உதரியவனின் காலில் மாட்டியது நிதிஷாவின் ஆடை.

ஏதேதோ எண்ணம் மனதில் எழும்ப, தன்மீதே அத்தனை கோபம், ஆத்திரம்.

நடந்திருக்கும் என்பதை நம்பும் வகையில் கண் முன்னே காணப்படும் காட்சிகள் யாவும் அஜய்யின் திடத்தை கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைத்தது.

தேவையில்லாது நிதிஷாவின் குரல் அவன் செவி தீண்டியது.

“உன் ஃபிசிக் மேல எனக்கொரு கண்ணு அஜய். டூ ஹாட்…”

“இல்லை அப்படியில்லை. எதுவும் நடக்கல…” என்று தலையை உலுக்கிய அஜய், தன் சுயம் இழந்த வேளையில் என்ன நடந்தது என்பது அறியாது அவ்வறையின் பொருட்கள் யாவற்றையும் சிதறி அடித்தான்.

பூச்சாடி நிலைக் கண்ணாடியில் பட்டு பாதி உடைந்து சிதற, தொக்கி நின்ற பாதி கண்ணாடியில் தன் உருவம் பார்த்த அஜய்க்கு அதீத வெறுப்பு தன் மீதே.

தான் நினைப்பது போன்று எதுவும் நடந்திருக்காதென அவன் நம்பினால், தான் நிற்கும் நிலை நடந்து முடிந்த அனர்த்தம் உண்மை என சன்றாய் அவனைப் பார்த்து எள்ளி நகைத்தது.

“அவக்கிட்டேர்ந்து நீ கொஞ்சம் தள்ளியே இரு மாமா!” யாழி எந்த அர்த்தத்தில் சொல்லியிருப்பாள் என்று இக்கணம் புரிந்தது.

கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை உற்று கவனிக்க, அவனுக்கே அருவருப்பு பாவனை. பரபரவென தேய்த்து அழிக்க முயன்றான்.

வலது பக்க தோளில் கீறல்.

‘இதெப்படி?’ என்று நிலைக் கண்ணாடியில் பார்த்து ஆராய்ந்தான்.

யாவும் அவனின் உண்மை தன்மைக்கு எதிராக இருந்திட…

“யாழ்” என்று வெடித்துச் சிதறினான்.

அவனது கத்தல் அவ்வறையை நடுங்க வைத்தது.

வேகமாக தன்னுடைய ஆடையை எடுத்து உடுத்திக் கொண்டு, ரிசார்ட்டின் காவலர் பகுதிக்குச் சென்றான்.

மேலாளரின் உதவியோடு இரவு என்ன நடந்தது என்பதை அறிய கண்காணிப்பு காணொளியை ஆராய்ந்து பார்த்தான்.

திலீப் கைத்தாங்கலாக அழைத்து வந்து அவனை அறைக்குள் அழைத்துச் சென்று வெளிவருவது தெரிந்தது. அஜய் நினைவின்றி இருக்க உள்பக்கம் தாழிடாத முடியாததால், திலீப் கதவினை லாக் செய்யாது சாற்றிவிட்டு சென்றிருந்தான்.

சிறிது நேரத்தில் தள்ளாடியபடி வந்த நிதிஷா, அஜய் அறையின் முன் கதவில் முட்டி நின்று தட்டுவதும், பின் தாழிடப்படாத கதவு தானாக திறக்க உள்ளே தள்ளாடியபடி செல்வதும் தெரிந்தது.

மீண்டும் காலை எவ்வித பதட்டமும் இல்லாமல் நிதிஷா வெளியே வருவதும் தெரிந்தது.

அதுவரை அப்படியிருக்காது என்று மனதின் ஓரமிருந்த அஜய்யின் சிறு நம்பிக்கையும் காணாமல் போயிட,

அஜய்யின் சர்வமும் உறைந்தது. மூச்சடைக்க கண்ணில் கண்ணீர் வழிவதும் உணராது வீடு வந்து சேர்ந்தான்.

 

Epi 13

நீதான் என் காதல் மழை 13

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
27
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்