Loading

நீதான் என் காதல் மழை 11

கல்லூரி செல்ல நேரமாகியதும் யாழி கிளம்பிவிட்டாள்.

“போயிட்டு வரேன் அத்தை” என்ற காந்தளின் கன்னம் கிள்ளிய யாழி, அஜய்யை திரும்பிப் பார்க்க அவனோ இன்னமும் மும்முரமாக நிதிஷாவுடன் எடுக்கப் போகும் விளம்பரப்படம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.

நிதிஷாவின் முன்பு எதுவும் வேண்டாமென்று யாழியும் அமைதியாக சென்றுவிட்டாள்.

வேலையென்று வந்துவிட்டால் அஜய் அனைத்தும் மறந்திடுவான். அவன் தன் பணியில் கண்ணாக இருந்திட, நிதிஷாவின் பார்வை அவன் மீது நிலைத்துவிட்டது.

அதனை தாமதமாகத்தான் காந்தள் கவனித்தார்.

“என்ன இப்படி பாக்குறா” என்று முகம் சுளித்த காந்தள், “அருளு” என்று சத்தமாக அழைத்திட…

“என்னம்மா?” என்ற போதும் அவன் மடிக்கணினியை விட்டு தலையை திருப்பவில்லை.

அந்நேரம் நிதிஷாவின் அலைபேசி இசைக்க…

“சீரீஷ்” என்று அஜய்யை பார்த்து கண்ணடித்தவள், பேசிவிட்டு வருவதாக எழுந்து சென்றாள்.

காந்தள் மகன் முன்பு வந்து அமர்ந்தார்.

“சொல்லுங்கம்மா” என்று முகம் நிமிர்த்திய அஜய், அவரின் முகம் காட்டிய பாவனையில், “என்னாச்சு?” எனக் கேட்டு அவரின் அருகில் வந்து அமர்ந்தான்.

“அந்தப் பொண்ணை எனக்கு பிடிக்கல.” பட்டென்று சொல்லிவிட்டார்.

“ஏன்?”

“அவளும், அவ டிரஸும்!” முணுமுணுத்தார்.

“அம்மா… ம்மா…” என்ற அஜய், “அவள் மும்பை மாடல்… இதெல்லாம் அவளுக்கு நார்மல்” என்றான்.

“ஆனால் நமக்கு நார்மல் கிடையாது அஜய். வெண்ணிலா, மதி, யாழிலாம் இப்படி போட நீ முதலில் அலோவ் பண்ணுவியா?” எனக் கேட்டார்.

“பண்ணமாட்டேன்” என்று உடனே பதில் சொல்லியிருந்தான்.

“ஆனால், அவங்களா பிடித்து பண்ணும் போது நோ சொல்லவும் மாட்டேன்” என்றான். எதார்த்தமாக பதில் கூறினான். அவரால் அடுத்து வேறென்ன பேசிட முடியும்?

“அவள் வந்து நிக்கும் போது உன் தாத்தா, மாமக்கள் முகத்தையே நீ பாக்கலையா?” எனக் கேட்டவர், “நிலா வளைகாப்பு… அடுத்து உன் கல்யாணம், பெரியவங்க வரப்போக இருப்பாங்க. ஒவ்வொரு முறையும் நிதிஷாவை பார்த்து முகம் சுளிக்க வைக்க முடியாது” என்றார்.

“ட்ரெஸ் தான் பிரச்சினையாம்மா?”

“அதுவும் தான்” என்ற காந்தள், “என்கிட்டவே உன்னை…” என்று நிறுத்தியவர், “அதை எப்படி அருளு சொல்றது” என்றார்.

“புரியுது” என்ற அஜய், “அவள் எனக்கு புரோபோஸ் பண்ணா… ஆனால் நான் முடியாது சொல்லிட்டேன் ம்மா. அதை அவ இப்போ இருக்க மாடர்ன் ஸ்டைலில் சொல்லியிருப்பாள். உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?” எனக் கேட்டான்.

“இதுல நம்பிக்கை எங்க வந்துச்சு அருள்?” என்ற காந்தள், “அவளை இங்க தான் தங்க வைக்கணும் என்ன தேவை?” என்றார்.

“அவளுக்கு ஹோம் அட்மாஸ்பியர் வேணுமாம்” என்றான்.

“ஸ்டூடியோல தங்க வை. மென் மாடல்ஸ் வந்தா அதைத்தானே செய்வ” என்ற அன்னையை ஏறிட்ட அஜய்,

“உன் மருமக சொல்ல சொன்னாளா?” எனக் கேட்டான்.

“அவள் ஏன் சொல்லப்போறாள். அவகிட்ட இதை சொன்னதுக்கு, அவளே உனக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டுப்போறா” என்றார். கடுப்பாக.

“ஸ்டுடியோல தங்க வைக்கப் பார் அருளு. இல்லையா, திலீப் ஆர்கானிக் தோட்டத்துக்கு தானே விளம்பரம். அவன் ஹோட்டலில் தங்க வை” என்றார்.

“ஹோட்டலில் தங்க அவள் ஒத்துக்கமாட்டாம்மா” என்ற அஜய், “நான் ஸ்டுடியோவில் லேட் நைட் வரை இருக்க வேண்டி வரும். எங்கிட்ட வேலை பார்க்குறவங்களே அந்த மாதிரி நேரத்தில் தவறாக நினைக்க வாய்ப்பு இருக்கு. இங்க நீங்க இருக்கீங்க… சோ, யாரும் தப்பா நினைக்க வாய்ப்பில்லை. புரிஞ்சிகோங்க பிளீஸ்” என்றான்.

“என்னவோ… சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு அவளை அனுப்பி வை” என்று அவர் எழுந்துக்கொள்ள,

“அவளுக்கு ஆள் இருக்கும்மா” என்றான்.

“இருந்துமா இன்னும் உன்னை திங்குற மாதிரி பார்க்கிறாள்” என்று தான் கவனித்ததை எரிச்சலாக சொல்லிச் சென்றுவிட்டார்.

தன் துறையில் இதெல்லாம்… இப்படி ஒருசிலர், ஆண்களே கூட நடந்துகொள்வது சாதாரணம். அஜய் தன் எல்லைக்குள் நின்றிடுவான். அதனை அவனால் விளக்கிட முடியவில்லை. மகன் மீது நம்பிக்கை இருப்பினும், நாமே வலிய சென்று இழுத்துக்கொள்ள வேண்டுமா என நினைத்தே மகனுக்கு அறிவுறுத்தினார் காந்தள்.

சீரீஷ் உடன் பேசி முடித்து வந்த நிதுஷா, அஜய்யை இடித்துக்கொண்டு அமர்ந்தாள்.

அஜய் தன்னைப்போல் விலகி அமர்ந்தான்.

அவளிடம் இப்படி இரு, இதை செய்யாதே என்று எடுத்து சொல்வது வீண். அவனுக்குத் தெரியும். வேலை விஷயமாக மும்பை மட்டுமில்லாது பல இடங்களுக்கு செல்பவனுக்கு இத்துறையில் இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென அவர்களுக்குள்ளாகவே பல எழுதப்படாத விதிகள் உள்ளதே. அதிலிருந்து தாம் ஒதுங்கியிருக்கலாமே தவிர, அவர்களை இப்படியிரு அப்படியிரு என்று சொல்லிட முடியாது.

ஏற்கனவே பல பேர்…

“நீ எப்படி அஜய் இந்த பீல்டில் இருக்க?” எனக் கேட்டுள்ளனர். அஜய் தனித்து தெரிவது, நாகரீக கலாச்சாரம் என்ற பெயரில் எவ்வித அதீத மாற்றத்தையும் தனக்குள் உட்புகுத்திக் கொள்ளாததே! அவன் குணம் மாறாமல் இருப்பது அவனது பெரும் பலமாகவும் அங்கு உள்ளது.

அவனை வளைத்துப்போட பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் முயன்று தோற்று இருக்கின்றனர்.

அப்படி நெருங்குபவர்களை அஜய்யால் முற்றிலும் தவிர்த்திட முடியாது. நட்புறவு கொண்டு தான் ஆக வேண்டும்.

அஜய்க்கு எங்கிருந்தாலும் தன்னுடைய எல்லை எதுவென்று தெரியும். அதனால் அவனால் அனைத்தையும் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடிகிறது.

அஜய்க்கு ஆரம்பத்தில் இதிலெல்லாம் ஒன்ற முடியாது தவித்து இருக்கிறான். இப்போது அவனது அனுபவம், உயரம் யாவும் அவனுக்கு இத்துறையில் அதீத பழக்கம் கொண்டுவிட்டது.

ஆனால் அவனது குடும்பத்தாருக்கு புதிது தானே!

போக போக தன்னைப்போல் வேலை என்று மட்டும் எண்ணத் துவங்கிடுவர் என்று நம்பிக்கை கொண்டான்.

தற்போது அஜய் பயம் கொள்வது யாழிக்காக மட்டுமே!

காந்தள் பள்ளி ஆசிரியை, வாழ்வில் நிறைய அனுபவம் உள்ளது. பலதரப்பட்ட மக்களை பார்த்து பழகியிருக்கிறார். அவரே நிதிஷா விடயத்தில் சகஜமாக இல்லாது இத்தனை கவனித்து பேசிட, சிறு வயது, காதல் மனது, ஆர்வக்கோளாறான யாழி தன்மீது உள்ள உரிமை உணர்வில் என்னவெல்லாம் நினைப்பாளோ என அச்சம் கொண்டான்.

அஜய்க்கு யாழ் தன்மீது கொண்டுள்ள காதலின் ஆழம் தெரிந்த அளவுக்கு, அவள் அவன் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அளவு தெரியவில்லை.

அவள் கொண்ட நம்பிக்கையை அஜய் தெரிந்துகொள்ள பெரும் யுத்தம் ஒன்று நடக்கயிருப்பதை அவன் மட்டுமல்ல, யாழியும் அறிந்திருக்கவில்லை.
____________________________

கல்லூரி முடிந்து யாழ் வீட்டிற்கு வந்த சமயம் அஜய் வீட்டிலில்லை.

“மாமா எங்க அத்தை?” எனக் கேட்டுக்கொண்டே மேசை மீதிருந்த தண்ணீரை எடுத்து பருகிய யாழி,

“அவங்க இருக்காங்களா?” என சத்தத்தைக் குறைத்து நிதிஷாவின் அறையை காண்பித்துக் கேட்டாள்.

“இப்போ தான் கொஞ்ச முன்ன ரெண்டு பேரும் கிளம்பி போனாங்க” என்ற காந்தள், “எப்போ பாரு அருளை ஒட்டிக்கிட்டே இருக்கு அந்தப்பொண்ணு” என்றார்.

காந்தள் காட்டிய பாவனையில் யாழுக்கு சிரிப்பு வந்திட,

“பார்த்து பொரை ஏறப்போவுது குட்டி” என்றார் காந்தள்.

“அவங்க உங்களை கடுப்பேத்துறாங்க போல” என்ற யாழி அவர் அருகில் அமர்ந்தாள்.

“கடுப்பா… எரிச்சலா இருக்கு யாழி. நீ பேசிப்பாரேன் அருளுகிட்ட” என்றார்.

“இது மாமாவோட வேலை அத்தை. வேலையா மட்டும் பாருங்க” என்ற யாழி, “இதுக்கே இப்படின்னா… ஷூட் பண்ணும் போது உங்களை கூட்டிட்டுப் போய் காட்டணும். மாமா மாடலோட லிப்ஸ்டிக் கலர்ல இருந்து, ஹிப்ல நிக்கிற சாரி எத்தனை இன்ச் இறங்கி இருக்கணும் வரை நோட் பண்ணுவார். அதுக்கு என்ன சொல்லுவீங்க?” எனக் கேட்டு காந்தள் சுளித்த சுளிப்பில் பொத்துக்கொண்டு சிரித்தாள்.

“இதெல்லாம் அவன் ஏன் பண்ணனும்?” என்ற காந்தள், “உனக்கு தெரிஞ்சும் சும்மா எப்படி இருக்க?” எனக் கேட்டார்.

“அதெல்லாம் அவருக்கு கல்லையும் மண்ணையும் பார்க்குற போலத்தானாம். இது மாமாவே சொன்னாங்க. இது போதுமே அத்தை. மாமாக்குத் தெரியும், எப்படி நடந்துக்கணும் அப்படின்னு. நீங்க சும்மா அவங்களை நோட் பண்ணி டென்ஷன் பண்ணிக்காதீங்க” என்று எழுந்து சென்றாள்.

“என்னவோ… இருந்தாலும் அருளை தள்ளியிருக்க சொல்லனும்” என சொல்லிக்கொண்டார்.

இரவு பத்துக்கு மேலாகியது.

அஜய், நிதிஷா இன்னும் வரவில்லை.

வேலை விஷயமாக இருக்கும்போது அஜய் அழைப்பை ஏற்கமாட்டான் என்பதால், நிகிலுக்கு அழைத்தார் காந்தள்.

“ரெண்டு பேரும் திலீப் ஃபார்ம் போயிருக்காங்கம்மா. நாளைக்கு ஷூட் ஸ்டார்ட் ஆகுது. எனக்கு பேமிலில கொஞ்சம் பிரச்சினை. நான் போகல. அஜய் தான் எல்லாம் பார்க்கணும். அரென்ஜ்மெண்ட் முடிச்சிட்டு வந்திடுவான்” என்றான்.

“சரிப்பா” என்ற காந்தள், “வந்தனா வீட்டில் என்ன தான் சொல்றாங்க” என அவனது பிரச்சினைக் குறித்து கேட்டுத் தெரிந்துகொண்டு அழைப்பை வைத்தார்.

“சரி அவன் வர லேட்டாகும் போல யாழி. நீ போ தூங்கு. நானும் தூங்குறேன். வந்தா கால் பண்ணுவான்” என்று தன்னுடைய அறை நோக்கி நகர்ந்த காந்தள், “முன்ன மாதிரி எங்க முழிச்சு உட்கார்ந்திருக்க முடியுது” என்றபடி சென்று கதவடைத்தார்.

மேலும் சிறிது நேரம் காத்திருந்த யாழி, அஜய்க்கு அழைத்தாள். முழு அழைப்பு சென்று நின்றது. எடுக்கப்படவில்லை.

சில நிமிடங்களில் அவனே அழைத்தான்.

“எப்போ வருவ மாமா?” சாதாரண வார்த்தைகளிலும் ஏக்கம் சுமந்த காதலை காட்டிட முடியுமா? அஜய்க்கு யாழின் குரலும் அத்தனை காதலை உணர்த்தியது.

“கிளம்ப டென் மினிட்ஸ் ஆகும் யாழ். மலைக்கு இந்தப்பக்கம் உச்சியில் இருக்கோம். வர டூ ஹவர்ஸ் ஆகும். நீ தூங்குடா” என்றவன், “வெளிய லாக் பண்ணிட்டு கீ மேட் கீழ வச்சிட்டு, மாடி வழியா நீ ரூமுக்கு போயிடு யாழ்” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ஹேய் அஜய்… கம் மேன், கம் அண்ட் செக் திஸ் அவுட்ஃபிட்” என்று கிறங்கி ஒலித்தது நிதிஷாவின் குரல்.

அடுத்து அஜய் யாழிடம் ஒன்றும் கூறாது இணைப்பைத் துண்டித்திருக்க…

யாழி அலைபேசியை காதிலிருந்து அகற்றி அதனையே வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

நேரம் விரைந்து ஓடியது. அவளில் மாற்றமில்லை. நிதிஷாவின் பேச்சிலிருந்து, தான் என்ன அறிந்துகொள்ள வேண்டும்? குழப்பியடித்த சிந்தனையை தலை உலுக்கி புறம் ஒதுக்கினாள்.

“உன் மாமா மேல உனக்கு நம்பிக்கை இல்லையா யாழி?” தனக்குத்தானேக் கேட்டுக்கொண்டு எழுந்தவள், வண்டி சத்தத்தில் மணியை பார்த்தாள்.

“இவ்வளவு நேரம் ஒன்னுமில்லாததை நினைச்சிட்டு உட்கார்ந்திருந்தோமா?” என முணகியவள், “முழிச்சிட்டு இருக்கிறதுக்கு திட்டுவாரே!” என்றவாறு கதவினை திறக்க,

அஜய் நிதிஷாவை தன்னிரு கைகளில் தாங்கி பிடித்திருக்க, அவளோ அவனது மார்பில் அத்தனை அழுத்தமாக தலை சாய்த்திருந்தாள்.

பார்த்த காட்சியில் யாழின் இதயம் அதி வேகத்தில் சீரற்றுத் துடிக்க, கண்கள் காணும் காட்சியை நம்ப மறுத்து தவித்தது.

அஜய் நிதிஷாவை தன்னிரு கைகளில் தாங்கி பிடித்திருக்க, அவளோ அவனது மார்பில் அத்தனை அழுத்தமாக தலை சாய்த்திருந்தாள்.

பார்த்த காட்சியில் யாழின் இதயம் அதி வேகத்தில் சீரற்றுத் துடிக்க, கண்கள் காணும் காட்சியை நம்ப மறுத்து தவித்தது.

“ஹேய் அஜய்… தும் சே பியார் கர்த்தே ஹூ மேன். நீ ஓகே சொல்லியிருந்தா நான் சீரீஷ் பின்னாடி போயிருக்கமாட்டேன். உனக்கு ஏன் மேன் என்னை பிடிக்கல?” நிதிஷா எல்லாம் ஹிந்தியில் பேசிட, அஜய் யாழின் முகத்தை தான் அவதானித்துப் பார்த்தான்.

எவ்வித உணர்வையும் முகத்தில் காட்டாது… அஜய்யின் மார்பில் நிதிஷா சாய்ந்து இருப்பதை கண்ட முதல் கட்ட அதிர்விலேயே யாழி நின்றிருந்தாள்.

“இப்போ இந்தப்பேச்சு எதுக்கு நிதிஷா?” என்ற அஜய், “அவள் ட்ரிங்க் பண்ணியிருக்கா அம்மு” என்றான், யாழிடம்.

“உன்னை பார்க்க பார்க்க மிஸ் பண்ணிட்டேன் ஃபீல் வருது மேன். நம்ம ஃபீல்டில் உனக்கு எவ்ளோ மவுஸ் அண்ட் பாப்புலாரிட்டி இருக்கு. ஆனால் நீ இன்னும் இந்த சின்ன டவுனுக்குள்ள இருந்துட்டு, உனக்கு வொர்த் இல்லாத பொண்ணை கல்யாணம் பண்ணிக்க இருக்க… எனக்கு உன்னை நினைச்சா வருத்தமா இருக்கு அஜய். எனக்கு தான் நோ சொல்லிட்ட, அந்த ***** பட ஹீரோயினுக்காவது ஓகே சொல்லியிருக்கலாம். உன் ரேன்ஞ் எங்கையோ போயிருக்கும். பாலிவுட் டாப் ஹீரோயின் அவ, இப்படி உன் வொர்த் உனக்கே தெரியல அஜூ…” என்று அவள் போதையில் அஜய்யோடு ஒட்டி உரசி தள்ளாடியபடி பேசிக்கொண்டே போனாள்.

அஜய் விட்டால் அவள் கீழே விழுந்திடுவாள். விழுந்து முகத்தில் அடிபட்டுவிட்டால், கெடுவது அவனது வேலை தான். அதற்காகவே தாங்கிக் கொண்டு நிற்கிறான்.

“எனக்கு யாரு மேட்ச் ஆவா, ஆகமாட்டாங்க எனக்குத் தெரியும். நீ எனக்கு பொருத்தம் பார்க்க வேண்டாம். யாழ் லவ்வுக்கு நான் தான் கம்மி” என்று ஹிந்தியிலே சொல்லிய அஜய், “உன்னை ஹோட்டலிலே தங்க வச்சிருக்கணும். அங்கயே தள்ளாடிட்டு ரூமிலே கிடந்திருப்ப” என்று சலிப்பாக நெற்றியைத் தேய்த்துக்கொண்டான்.

அஜய் சொல்லிய வார்த்தைகளுக்கு பின்னர் யாழின் இறுக்கம் தளர்ந்தது.

எத்தனை பேர் கண்முன் வந்து நின்றாலும், அஜய்க்கு யாழி தான் எனும் விதையை அவனை அறியாது யாழின் மனதில் விதைத்திருந்தான். அவளின் காதல் மனம் சரியாக அவனை உள்வாங்கிக் கொண்டது என்றும் சொல்லலாம்.

அஜய், பிடி நழுவி அவள் கீழே சரிய, “ஹேய்” என்று இழுத்துப் பிடித்திருந்தான்.

“யூ டாம்…” என்று கத்திய அஜய், “ஒரு வீட்டுல கெஸ்ட்டா ஸ்டே பண்ணும் போது எப்படி நடந்துக்கணும் தெரியாதா?” என்று கடிந்தான்.

அஜய் ஹிந்தியில் திட்டிய போதும், இருக்கும் நிலையில் நிதிஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

“நீ எதோ கோபமா பேசுற தெரியுது. பட் புரியல அஜூ” என்று உதடு குவித்து இழுத்த நிதி சட்டென்று அஜய் எதிர்பாராது அவனின் கன்னத்தில் இதழ் பதித்திருந்தாள்.

அதுவரை அவள் கீழே விழுந்துவிடக் கூடாதென தாங்கி நின்றிருந்த அஜய் இமைக்கும் நொடியில் அவளை உதறி தள்ளியிருந்தான்.

நிச்சயம் அஜய் தள்ளிய வேகத்திற்கு விழுந்திருந்த நிதிஷாவுக்கு உடலில் வலி ஏற்பட்டிருக்கும். ஆனால் அவள் அதைக்கூட உணரும் நிலையில் இல்லை.

“அப்படியே வர கோவத்துக்கு” என்று அடக்கி கையை ஓங்கியவனை யாழி தான் வேகமாக ஓடி வந்து தடுத்திருந்தாள்.

“மாமா என்ன பண்றீங்க? இப்போ அவங்க தெளிவா இல்லை… நீங்க ரூம் போங்க” என்ற யாழி, நிதிஷாவை மெல்லத் தூக்கி தன் மேல் சாய்த்து அவளது அறைக்கு அழைத்துச் சென்றாள்.

“ஐ மிஸ்டு யூ அஜய்…” அவள் குழரலாக மொழிய, “அடியேய்… நீ மட்டும் தெளிவோடு இதை சொல்லியிருக்கணும்… வாய் வெத்தலை பாக்கு போட வச்சிருப்பேன்” என்ற யாழி, அவளை படுக்க வைத்துவிட்டு கதவை சாற்றி வர, அஜய் இன்னும் அங்கு தான் நின்றிருந்தான்.

“சாப்டிங்களா?”

“ம்…”

“வேற என்ன… போய் தூங்குங்க” என்ற யாழி கிச்சனிற்குள் நுழைய அஜய்யும் அவள் பின்னே சென்று வாயிலில் சாய்ந்து நின்றான்.

“என்ன மாமா?” போத்தலில் நீரினை நிரப்பியபடி கேட்டாள்.

“அது…”

அஜய்யின் தடுமாற்றத்தை முதல் முறை பார்க்கிறாள்.

“எனக்கு உன்னை புரியும் மாமா. நீ விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை” என அவனின் கையில் போத்தலை திணித்தவள், “போ மாமா” என்றாள்.

“அம்மு…”

“லவ் யூ மாமா” என்று நிதிஷா முத்தம் வைத்த அவனது கன்னத்தில் தன் உள்ளங்கையை அழுத்தமாக வைத்தாள்.

“யாழ்…”

“விடு மாமா. இதுக்கெல்லாமா ஃபீல் பண்ணுவ. அதான் வேகமா தள்ளி விட்டுட்டியே… எதும் நினைக்காம தூங்கு மாமா” என்றாள்.

“காலையில அம்மா சொன்னாங்க… அவங்களுக்கு இருக்கும் பயம் உனக்கு எதுமில்லையா?” எனக் கேட்டான்.

மெல்ல அவனை நெருங்கி நின்ற யாழ்,

“கட்டிக்கவா?” என்று அவனது கூர் விழிகளை சந்தித்தாள்.

அசைந்ததோ எனும் விதமாக அஜய்யின் தலை சரியென ஆடியது.

அவனின் இடையோடு கையிட்டு அதீத அழுத்தமின்றி அணைத்துக் கொண்ட யாழி, அவனது நெஞ்சத்தில் தன் முகத்தை அழுத்தமாக பதித்தாள்.

“இங்க நான் மட்டும் தான் இருக்கேன்னு தெரியும். யார் வந்தாலும் உன்கிட்ட எனக்கான இடம் எதுன்னும் தெரியும். நீ வெளிப்படையா உன் காதலை காட்டணும் தேவையில்லை மாமா. உன் கண்ணு ரெண்டும் போதும்” என்றாள்.

அஜய் தான் அவள் தன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் ஆழத்தில் விழி விரித்தான். அவளின் நம்பிக்கை இதைவிட ஆழமானது என்பதை அவனுக்கு உணர்த்திட வலிக்க வலி கொடுக்கும் நிகழ்வு ஒன்று அரங்கேற உள்ளது.

சிறுபிள்ளைத்தனம், ஆர்வக்கோளாறு, பக்குவமில்லை என அவளைப்பற்றி அவனது கணிப்பு யாவும் அவளின் தற்போதைய பேச்சில் காணாமல் போனது.

“அம்மு…” அவனின் பிடியில் அணைப்புக் கூடியது.

“நீ ரொம்ப டெரர் பீஸ் மாமா. அப்படி பார்த்துதான் பழக்கம். இப்படி ஒடுங்கி நிக்காத” என்று தானே அவனிடமிருந்து விலகி நின்றாள்.

“உன்னை நினைச்சு தான் ரொம்பவே பயந்தேன். நீ சரியா புரிஞ்சிக்கணும் அப்படின்னு. இந்த மெச்சூர்ட் உன்கிட்ட எதிர்பார்க்கல… தேங்க்ஸ் அம்மு” என்றான்.

“உன் விஷயத்தில் எப்பவும் சரியா இருப்பேன் மாமா. அஞ்சு வருஷ லவ், குமரன் அண்ணா உன்னை கூட்டிட்டு வந்து நின்னப்போ… பட்டுன்னு மனசுல ஒட்டிக்கிட்ட. நீ எங்களோட இருந்தப்போ நான் சின்னப்பொண்ணு. உன்னை அவ்ளோ நினைவும் இல்லை. ஆனால் நாங்க எல்லாரும் ஒண்ணா மீட் பண்ணுற நேரம், குமரன் அண்ணாவும், குணா அண்ணாவும் அருளும் நம்மளோட இருந்தா நல்லாயிருக்கும் பேசும் போது உள்ளுக்குள்ள உங்களை பார்க்கணும் ஆர்வம் தானாவே ஒட்டிக்கிச்சு. அந்த ஆர்வம் தான் உங்களை பார்த்ததும் பிடிச்சுது. எல்லாரும் அதுவரை சொன்னது வச்சு உங்களை ஒருமாதிரி ஆன்டி-ஹீரோன்னு நினைச்சிருந்தேன். ஆனால் , தாத்தா பாட்டி சதாபிஷேகம் முதல் நாள் நைட், அத்தை, பழனி மாமாகிட்ட நீங்க நிலா அண்ணிக்காவும், குமரன் அண்ணவுக்காகவும் பேசுனது உங்களை ஹீரோவா காட்டுச்சு. அது எந்தப் புள்ளியில் காதலா மாறுச்சு தெரியாது. ஆனால் உன்னோட சின்ன சின்ன அசைவையும் அவ்ளோ ரசிப்பேன். அந்த ரசிப்பை எனக்குள்ளே வச்சிக்கணும் தான் தோணுச்சு. ஆனால் நானே எதிர்பாராம உன்கிட்ட சொல்லிட்டேன். சொல்லவே முடியாம இருந்த என் காதலை உன்கிட்ட சொல்லிட்டேங்கிற சந்தோஷத்தில் கிறுக்குத்தனமா எதெதோ பண்ணிட்டேன். அதுக்காக உன் விஷயத்தில் சைல்டிஷ்ஷா, உன் மேல நம்பிக்கை இல்லாம இருப்பேன்னு நீயா எப்படி நினைக்கலாம்?” கண்களில் காதலைக் கொட்டி சொல்லிக் கொண்டிருந்தவள், இறுதியில் அவனை முறைத்து வைத்தாள்.

யாழி சொல்ல சொல்ல அவளின் காதலின் ஆழத்தை உள்ளுக்குள் உள்வாங்கிக் கொண்டிருந்த அஜய்க்கு எப்படி இருக்கிறதாம்?

ஆனால் இந்த நம்பிக்கையும் காதலும், பெரிதாய் ஒன்று நடக்கவிருப்பதில் உறுதியாக இருந்திடுமா? இதே நம்பிக்கையின் ஆழம் அப்போதும் யாழுக்கு அஜய் மீது நிலைத்து நிற்குமா?

“அம்மு” என்று தன்னிரு கைகளாலும் அவளின் கன்னம் பற்றி முகத்தை ஏந்தியவன், நெற்றி முட்டி…

“லவ் யூ அம்மு… லவ் யூ” என்றான். தழுதழுப்பாய். ஒட்டுமொத்த காதலையும் குரலில் தேக்கி.

“பாருடா மிர்ச்சிக்கு கண்ணுலாம் கலங்குது?”

“அதெல்லாம் இல்லை” என்று பிரிந்த அஜய், “இந்த வாலுப் பொண்ணு தான் காதலைக் காட்டி அழ வைக்கிறாள்” என்று அவளின் கன்னம் கிள்ளினான்.

“லவ் பண்ணி முடிச்சிட்டிங்கன்னா… கொஞ்சம் வழி விடுங்கடா” என்ற காந்தள் குரலில் இருவரும் விலகி நின்றனர்.

அஜய் அன்னையை பார்க்க முடியாது வேகமாக மாடியேறி மறைந்தான்.

“ரொம்ப நேரமா தண்ணி குடிக்க வந்து நின்னுட்டு இருக்கேன். உங்களுக்கு லவ் பண்ண வேற இடமே கிடைக்கலையா? தள்ளு…” என்று யாழியை ஒரு இடி இடித்து சமையலறை உள் சென்றார்.

“படுக்கப் போகும்போதே பாட்டலில் தண்ணி கொண்டுபோயிருக்கணும் அத்தை. அதைவிட்டு சின்னஞ்சிருசுக்கு நடுவுல நந்தி மாதிரி வந்துட்டு எங்களை திட்டுற” என்று அவரை வம்பு செய்தாள்.

“ஹான்… இப்போவே என்னப்பேச்சு பேசுற நீ” என்று கேட்டவரின் முகத்தில் துளியும் கடுமை இல்லை.

“எப்பவும் அருளு மேல இருக்கும் உன் நேசம் குறையக் கூடாது யாழி. உன் பேச்சுல மனசு நிறைஞ்சுப் போச்சுடா. பெரிய உறவுகள் இருந்தும், ஒத்தையிலே நின்னுட்டான். அவன் இழந்த பாசம் முழுக்க மொத்தமா உன் உருவத்துல அவனுக்கு கிடைங்கிறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.

யாழி புன்னகையே பதிலாக வழங்கினாள்.
____________________________

காலை வழக்கம்போல் யாழி மொட்டை மாடி செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வர, அஜய் ஒற்றை கை மடக்கி முதுகில் வைத்து ஒற்றை கை தரை ஊன்றி புஷ்ஷப் செய்து கொண்டிருந்தான்.

யாழின் அரவத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டே அவளை திரும்பி பார்த்த அஜய்,

“என்ன அதுக்குள்ள கிளம்பிட்ட?” எனக் கேட்டான்.

“டைம் ஆச்சு மாமா” என்ற யாழி, அஜய்யை கூட பார்க்காது அவசர அவசரமாக செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.

“மெதுவா செய்… எதுக்கு அவசரம்? சீக்கிரமே எழுந்திருக்க வேண்டியது தானே?” என்றான்.

“அப்போ நீ தினமும் சீக்கிரம் வந்திடு மாமா. உன்னை பார்க்காம படுத்தா தூக்கம் வராது” என்று சொல்லிய யாழி,

“குட் மார்னிங் அஜய்” என்ற குரலில் திரும்பி பார்க்க, ஷார்ட்ஸ் அண்ட் சிறிய சட்டையும் அணிந்து நிதிஷா நின்றிருந்தாள்.

‘இப்போ என்ன செய்யப் போறாள் தெரியலையே.’ நினைத்த யாழி பெரு மூச்சொடு செடிகள் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

“ஹாய் யாலா!” என்ற நிதிஷாவுக்கு அவள் தன் பெயரை சொல்லத் தெரியாது சொன்னதில் கடுப்பாக வந்தாலும் முயன்று சிரித்து வைத்தாள்.

“நைட் ஓவரா போயிட்டேனா அஜய்?”, நிது.

‘ரொம்ப ஓவரா போயிட்ட நீ?’ என்று அஜய் நினைத்து முடிக்கும் முன் அவள், புஷ்ஷப் எடுத்துக் கொண்டிருக்கும் தன்மீது அமர வருகிறாள் என்பதை புரிந்து சடுதியில் நகர்ந்து திரும்பிட, அஜய்யின் முதுகில் படுக்க வந்த நிதிஷா, அவன் சட்டென்று நகர்வான் என்பதை எதிர்பார்க்காது தரையில் குப்புற விழுந்து மூக்கு உடைபட்டாள்.

கண்டக்காட்சியில் எவ்வளவு முயன்றும் சிரிப்பினை அடக்கிட முடியாது யாழி சத்தமிட்டு சிரித்திட, அஜய் பொங்கி வரும் சிரிப்பை கடினப்பட்டு அடக்கி வயிற்றை பிடித்துக்கொண்டு நின்றான்.

 

Epi 12

நீதான் என் காதல் மழை 12

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
44
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்