நீதான் என் காதல் மழை 10
காதல், திருமணப் பந்தத்தில் கை சேரவிருக்கிறது. காதல் ஈடேறிய மகிழ்வில், ஆர்வத்தில் அன்பை கட்டுப்படுத்தத் தெரியாது ஏதேதோ செய்துவிட்டாள். காட்டத் தெரியாது காட்டி அஜய்யை மூச்சு முட்ட வைத்திட்டாள் யாழினி.
அதீத சுவை எப்போதும் அத்தனை விரைவில் திகட்டிவிடும்.
அப்படி தங்களின் காதல் திகட்டலை தொட்டுவிடாது துளி துளியாய் தேனின் சுவையை நாவின் அடி ஆழம் அறிவதைப்போல் ஆழ்ந்து நெஞ்சம் சேர வேண்டுமென நினைக்கும் அஜய்யின் மனம் புரிந்திட, யாழியும் அவனது விருப்பம் போல் ஆர்ப்பாட்டம் இல்லாது அமைதியாய் அழுத்தமாய் தன் காதலை காட்டிட முடிவெடுத்துவிட்டாள்.
காலை கண் விழித்த யாழி அஜய்யின் அறையை எட்டிப்பார்க்க, அவனோ மொட்டை மாடியில் யோகா செய்து கொண்டிருந்தான்.
“என்ன நடந்தாலும் இதை மட்டும் விடறது இல்லை” என முணுமுணுத்த யாழி, அஜய் கண் மூடி ஆசனம் செய்து கொண்டிருக்க, அவனைத் தாண்டிச் சென்று மாடியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தாள்.
கண்கள் மூடியிருந்தாலும் யாழின் கொலுசு சத்தம் வைத்து அவள் இருப்பை உணர்ந்த அஜய்…
“என்ன சைலண்ட்டா இருக்காள். இந்நேரம் மாமா மாமான்னு எதும் செய்திருக்கணுமே” என நினைத்த அஜய் ஒற்றை கண்ணை மட்டும் திறந்து பார்க்க, செடிகளுக்கு நீர் ஊற்றி முடித்த யாழி, அங்கிருந்த மேடையில் கால்களைத் தொங்கப் போட்டு அமர்ந்து, மடியில் கை ஊன்றி கன்னம் தாங்கி அவனையே தான் பார்த்திருந்தாள்.
‘என்ன இப்படி பாக்குறா?’ தன்னவளின் பார்வைக்கு சில்லு சில்லாய் சிதறினான்.
“குட்மார்னிங் மாமா” என்றவள், “நைட் சரியா தூங்கலையா?” எனக் கேட்டாள்.
“நல்லா நிம்மதியா தூங்கினேன்” என்ற அஜய், “நீ என்ன காலேஜ் கிளம்பாமல் இருக்க?” என்றான்.
“கிளம்பும் முன்ன லவ் பண்ணிட்டு போலாம்னு உனக்காக தான் வெயிட் பன்றேன். இங்க வா மாமா” என தன்னருகில் வந்து அமருமாரு கையால் தட்டி காண்பித்தாள்.
‘போகாத வம்பு பண்ணுவாள்.’ மனதிற்குள் சொல்லிக்கொள்ள மட்டுமே முடிந்தது. அவனது பேச்சினை அவனின் கால்களே கேட்கவில்லை.
அவளருகில் சென்றவன் சற்று இடைவெளிவிட்டு அமர்ந்தான்.
“ஹான்… பாருடா, ரொம்பதான்” என்றவள் அவனை ஒட்டி அமர்ந்து, அஜய்யின் புஜம் வழி தன் கை நுழைத்து அவனின் கையோடு பிண்ணிக்கொண்டவளாக விரல்கள் கோர்த்து, அவன் தோள் சாய்ந்தாள்.
“என்னவாம் யாழுக்கு?” தன் தோளில் சாய்ந்திருந்த அவளின் தலை இடித்தான் மெல்ல.
“ஒண்ணுமில்லையே” என்ற யாழி, “நேத்து ரொம்பவே பயம் காட்டிட்டனா?” எனக் கேட்டாள்.
“உயிர் போயிடுச்சு அம்மு” என்ற அஜய்யின் குரலில் இப்போதும் சிறு நடுக்கம் தென்பட்டது.
“மாமா!”
“நாலு நாளுல எப்படி இவ்ளோ லவ் தெரியலடி… எனக்கு அதை சொல்லவும் தெரியல. ஆனால் நீயில்லாமா… ம்ஹூம்” என்று ஒன்றுமில்லை என்பதைப்போல கைகளை விரித்துக் காட்டியிருந்தான்.
இப்போது அவள் இல்லாமல் ஒன்றுமே இல்லையென சொல்லும் அஜய், அவளையே வேண்டாமென சொல்லவிருக்கிறான். அதில் அவளைக் காட்டிலும் அவன் அதிகம் துடித்து நிற்கப் போகிறான்.
“சாரி…”
“நானும் சாரி சொல்லணும். என்னைவிட்டு போக நீ எப்படி இப்படியொரு முடிவெடுக்கலான்னு கண் மூடித்தனமா கோபம். அதான் பட்டுன்னு அடிச்சிட்டேன்” என்றான்.
“அதான் நைட்டே மருந்து போட்டியே மாமா” என்றவளின் பதிலின் உட்பொருள் அவனுக்கு புரியவில்லை.
“உன்னை அடிச்சிட்டு எனக்கு தான் வலியாப்போச்சு. அதான் மருந்து தடவி விட்டேன்” என்ற அஜய் அவள் பக்கென சிரித்ததில், “நீ எதை சொல்ற?” எனக் கேட்டு அவள் குறும்பாய் கண் சிமிட்டியதும், “சேட்டை… நீ தூங்கலன்னு உன் மெசேஜ் வந்ததும் தெரிஞ்சிடுச்சு” என்றான்.
“யாழை அப்படி என்ன திணற வச்சாங்களாம்?” என்று இரவு அவள் அனுப்பிய தகவல் குறித்து வினவியவனாக அவளின் கன்னம் ஏந்தி நெற்றி முட்டினான்.
“ஓவரா எக்ஸ்போஸ் பண்ணிட்டேன்ல மாமா…” கேட்டவளை பக்க விழியாக கூர்ந்து நோக்கினான்.
“நமக்கே நமக்குன்னு மட்டும் நம்ம காதல் போதும் மாமா. உன்னை வேற நிறைய பேச வச்சிட்டேன்” என்றாள்.
அஜய் எதும் பேசாது அவளையே பார்த்திருக்க…
“நிகில் அண்ணாகிட்ட நீங்க பேசிட்டு இருந்ததைக் கேட்டுட்டேன்” என்றாள்.
“அதுக்காக யாழி அஜய்கிட்ட கண்ட்ரோல் பண்ண வேண்டாம். நீ நீயா இரு அம்மு. நம்ம லவ். நமக்கானதா மட்டும் இருக்கணும். நேத்து நீ பண்ண இருந்த காரியம் நம்ம குடும்பத்தையே ஆட்டம் காண வச்சிருக்கும். குமரன் தான் அதையும் சமாளிச்சிருப்பான். நம்ம விஷயம் இன்னொருத்தரை பாதிச்சிடக் கூடாது” என்றான்.
“புரியுது மாமா” என்றவள், மேலும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க, ரசனையாகக் கேட்டுக் கொண்டிருந்தவன், நேரமாவது உணர்ந்து…
“டைம் ஆச்சு அம்மு. நானும் ஸ்டுடியோ போயிட்டு, திலீப் ரெசிடன்ஷியல் போகணும்” என்றான்.
சரியென எழுந்துகொண்ட யாழி, “அவங்களும் வருவாங்களா?” எனக் கேட்டாள்.
“ஆமா, அவள் வந்ததே இந்த ஆட் ஷூட்டுக்காக தான். அப்புறம் அவள் இல்லாம எப்படி?” என்றான்.
“ஜாலியா சிரிச்சு பேசினா மட்டும் போதும்… ஹக், கன்னம் உரசுறதுலாம் வேணாம்” என்றாள் அழுத்தமாக.
“ஹேய் யாழ்… இதெல்லாம் சோசியல் வெல்கம். நார்மலான ஒன்னு” என்று அஜய் அவளின் உரிமை உணர்வை உள்வாங்கியவனாக சொல்லிட…
“அதெல்லாம் எனக்கும் தெரியும். ஆனா நீங்க என் மாமாவாச்சே! நிகில் அண்ணா உங்க கையை பிடிச்சாலே கோபம் வரும். இவங்க வந்ததும் அப்படி கட்டிப்பிடிக்கிறாங்க” என்றாள் முகம் சுருக்கி,
சத்தமிட்டு சிரித்து யாழின் மூக்கை பிடித்து ஆட்டியவன், “இனி யாரோட நிழல் கூட என் மேல் படாம இருக்கேன் போதுமா?” எனக் கேட்டான்.
“ம்… ஓகே” என்று இதழ் விரித்தவளின் தலையில் கை வைத்து அழுத்தம் கொடுத்த அஜய், “லவ் யூ அம்மு. நீ இப்படியே சிரிச்சிட்டே இருக்கணும்” என்றான்.
அவளின் சிரிப்பு மொத்தமாக தொலைய இருப்பதே தன்னால் தான் என்பதை அறியாது.
“அஜய் இருக்கும் போது யாழி எப்பவும் ஹேப்பி தான் மாமா” என்ற யாழி, கீழே கேட்ட காந்தளின் விளிப்புக்கு, “அத்தை கூப்பிடுறாங்க” என வேகமாக கீழிறங்கி ஓடினாள்.
அஜய் மெல்ல புன்னகைத்தபடி தனது அறைக்குள் நுழைந்தான்.
யாழி கீழே வர, அக்குடும்பத்தின் பெரியவர்கள் அனைவரும் கூடத்தில் அமர்ந்திருந்தனர்.
“என்ன காரியம் செய்ய இருந்த நீ?” என்று சுலோச்சனா அடிக்க அருகில் வர, கண்ணன் குறுக்கே புகுந்து தடுத்திருந்தார்.
“யாழி…” எம்பிரான் மகளின் தலை வருட, “சாரிப்பா” என்று அவர் தோள் சாய்ந்தாள்.
“பெரியப்பா நான் இருக்கும் போது உன் ஆசை நடக்காம விட்டுடுவேனா டா… குமரன் சொல்லியதும் நெஞ்சமே பதறிப்போச்சு” என்றார் ராஜேந்திரன்.
“சாரி பெரியப்பா” என்ற யாழி, வீரபாண்டி மற்றும் கமலம் முன் சென்று அமர,
அவர்கள் பேத்தியை எதும் சொல்லாது அணைத்து விடுத்தனர்.
“அடுத்த மாசத்துல நல்ல முகூர்த்த நாள் வருது காந்தள். ரெண்டு பேர் நட்சத்திரத்துக்கும் அமோகமா பொருந்தி வருது. அப்போவே வச்சிக்கலாம். இதை விட்டா அருளு ஜாதகத்திற்கு கல்யாணம் தள்ளிப்போவும்ன்னு இருக்கு. நீ என்ன சொல்ற?” எனக் கேட்டார் கமலம்.
“நான் தனியா சொல்ல என்னம்மா இருக்கு. இவ நேத்து பார்த்த வேலைக்கு அருளுகிட்ட இவளை ஒப்படைச்சிட்டு, நானும் மலைக்கே வந்திடலாம் இருக்கேன்” என்றார் காந்தள்.
ஆளாளுக்கு தன்னை குறித்து வருந்துவதில் தான் அஜய் மீதுள்ள காதல் ஒன்றை மட்டும் பார்த்து, தன்மீது அன்பு வைத்திருக்கும் உள்ளங்களை எத்தனை வருத்தியிருக்கிறோம் என்பதும் அஜய் எதற்காக அவ்வாறு எல்லாம் பேசினான் என்பதும் யாழுக்கு முற்றும் முழுதாகப் புரிந்தது.
“அப்போ சரி… பத்து நாளில் நிலா சீமந்தம் முடிஞ்சதும் கல்யாண வேலையை பரபரப்பா பார்க்க வேண்டியது தான்” என்று கண்ணன் சொல்ல அனைவரும் ஆமோதித்தனர்.
யாழுக்கு உள்ளம் எல்லாம் பல வகை வண்ணங்கள் நிரம்பியக் காட்சி.
அதை தன் பேச்சால் சட்டென்று வடிய வைத்தார் சுலோச்சனா.
“அப்போ யாழி இனி மலையில் இருக்கட்டும்” என்ற சுலோச்சனா, “நீ இன்னைக்கு காலேஜ் முடிச்சிட்டு அங்க வந்திடு” என்றார்.
“ம்மா” என்று அதிர்ந்து விளித்த யாழி, “எக்ஸாம் டைம் ம்மா. ரொம்ப கஷ்டம்” என்றதோடு, “அப்பாஸ் சொல்லுங்க” என ராஜேந்திரன் மற்றும் கண்ணனை துணைக்கு அழைத்தாள்.
“மாமா நீங்க எதும் சொல்லாதீங்க. கல்யாணம் இவள் அங்கிருந்து நடக்கிறது தானே முறை. வெளியில் யாரும் எதும் சொல்லுவாங்க” என்றார் சுலோச்சனா.
கால்களை தரையில் உதைத்துக் கொண்டு, முடியாது என சிணுங்கியவளாக வேகமாக மாடியேறிச் சென்றாள் யாழ்.
“ஏன் சுலோ… கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்ன கூப்பிட்டுக்கலாம். பிள்ளையை அலைய வைக்க வேண்டாம்” என்றார் ராஜேந்திரன்.
“இப்போ வெளியில பையன் அப்படின்னா நீ சொல்றது சரி. இது அவளோட அத்தை வீடு. உரிமைப்பட்டவ… யாரென்ன சொல்ல முடியும்” என்றார் கண்ணன்.
“ஆமா சுலோ, யாழி இங்கவே இருக்கட்டும். பரீட்சைக்கு நடுவுல வகுப்பும் இருக்கே. தினமும் மலை ஏறி இறங்கிறதுல புள்ளை சோர்ந்து போயிடுவாள்” என்று வீரபாண்டியும் பேச சுலோச்சனா எதும் சொல்லாது அமைதியாக இருந்தார்.
மாடிக்கு வந்த யாழி, நேராக அஜய் அறைக்குள் நுழைந்தாள்.
அஜய் அப்போது தான் குளித்து முடித்து, இடையில் கட்டிய துண்டோடு வந்து கண்ணாடி முன் நின்று ஈர கேசத்தில் ஜெல் தடவிக் கொண்டிருந்தான்.
இருந்த கோபத்தில் யாழி அஜய் இருக்கும் நிலையெல்லாம் கருத்தில் கொள்ளவில்லை.
நேராக அவனருகில் வந்தவள், அவனை பின்னிருந்து அணைத்து நின்றாள்.
இன்னும் முழுதாக துடைக்காது அஜய்யின் உடலில் ஆங்காங்கே நீர்த் திவளைகள் எஞ்சியிருந்தன.
ஈர உடலில் சூடாய் தன்னவளின் ஸ்பரிசம் தீண்ட, அஜய்க்குள் உணர்வுப் பிரவாகம் கட்டுடைத்தது.
“பெருசு எல்லாம் வந்திருக்கு. என்னால உன்னை விட்டுப் போக முடியாது மாமா. மலைக்கெல்லாம் நான் போகமாட்டேன். நீ வந்து சொல்லு” என்றாள்.
சில்லென்ற முதுகில் அவளின் கன்னம் அழுத்தமாக ஒட்டியிருக்க, அவனுள் பேரவஸ்தை.
“அம்மு…” கரகரப்பாக ஒலித்த அவனது குரலில் தான், தன் உடல் நனைக்கும் ஈரம் உணர்ந்து பட்டென்று விலகியிருந்தாள்.
அஜய்யின் முகம் மேல்நோக்கி உயர்ந்திருக்க… அவனது கண்கள் அழுத்தமாக மூடியிருந்தன. கண்ணாடியின் முன் மேசையை கைகளால் இறுகப் பற்றியிருந்தான்.
அவனால் சட்டென்று உள்ளுக்குள் ஆர்ப்பரிக்கும் காதல் அலைகளை கரை சேர்த்திட முடியவில்லை.
ஒற்றை அணைப்பில் அவனை மொத்தமாக அலைப்புற வைத்திட்டாள்.
அஜய்யின் அத்தோற்றம் அவளுள் ரசனையாய் அகம் நுழைய…
“ராஸ்கல்… சைட் அடிச்ச கொன்னுடுவேன். போடி” என்றிருந்தான் அஜய். திரும்பாது, அவள் முகம் காணாது.
“கொஞ்ச நேரத்துல உயிரை உருவ பார்த்தாளே! ஷ்ஷ்…” என்று யாழி வெளியேறியதும் இரு பக்கமும் தலையை ஆட்டிகொண்ட அஜய், “ஷீ இஸ் வெரி டேன்ஜெரஸ்” என்று கண்ணாடியில் தன் முகம் பார்த்து, மீசை நுனியை மந்தகாசமாக திருகினான்.
“நீ என்ன பண்ணாலும் அள்ளுது மாமா!” சட்டென்று ஒலித்த குரலில் திரும்பிய அஜய், வாயிலோரம் நின்றிருந்த யாழை கண்டு, “நீ இன்னும் போகல?” என்றான்.
“நான் சொன்னது கவனிச்சிங்களா இல்லையா?” என்று உள்ளே வராது முகம் சுருக்கினாள்.
“மேரேஜ் டேட் எப்போ?” கேட்டுக்கொண்டே, ஆடை மாற்றும் பகுதிக்குள் நுழைந்து திரையை இழுத்து மூடியவன் ஆடை உடுத்தி வந்தான்.
“ரொம்ப பண்றீங்க மாமா நீங்க!”
என்னவென்று தெரியவில்லை அவனுக்கு…
“நான் ஒன்னும் உங்களை கடிச்சி சாப்பிட்டிட மாட்டேன்” என்றாள் அவள்.
என்ன சொல்ல வருகிறாள் என்பது புரிந்தது. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
“நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல?” கண்ணாடி பார்த்து தன் அடர்ந்த சிகையை கைகளால் சரி செய்தான்.
“அண்ணி வளைகாப்பு முடிஞ்சு பதினைந்து நாளில்” என்றாள்.
அஜய் தன் அலைபேசியை எடுத்து நாட்காட்டியில் நாள் கணக்கு பார்த்தான்.
“சரியா டுவென்டி செவன் டேஸ் தான்டி இருக்கு. அப்புறம் மொத்தமா என் கூடதான் இருக்கப்போற. கொஞ்ச நாள் அங்கதான் இரேன்” என்று அஜய் சொல்லி முடிக்கும் முன்…
“முடியாது” என பட்டென்று சொல்லியிருந்தாள்.
“நீ பக்கம் இருந்தால் ரொம்ப சைட் அடிக்கிற” என்று சத்தமாக சொல்லிய அஜய், “டெம்ப்ட் பண்ணியே எதும் பண்ண வச்சிடுவ” என்று அவளுக்கு கேட்காது வாய்க்குள்ளே முணகினான்.
“இப்போ உங்களால் வந்து பேச முடியுமா? முடியாதா?” விரல் நீட்டி மிரட்டினாள்.
“சரி என்ன சடனா மரியாதை?” என்று காலையிலிருந்து அவளின் பேச்சினை கவனித்தவனாகக் கேட்டுக்கொண்டே, மெத்தையில் கிடந்த தன்னுடைய மடிக்கணினியை எடுத்து அதற்குரிய இடத்தில் வைத்தான்.
“உங்களை எப்பவும் அப்படித்தானே சொல்வேன்.”
“நடுவுல ரெண்டு நாளு இந்த ‘ங்க’லாம் இல்லையே” என்றான்.
“அது அப்பப்போ ஓவர் லவ் ஆச்சுன்னா வரும்.”
“அப்போ இப்போ இல்லையா?”
“அச்சோ மாமா…” என்று தரையில் கால் உதைத்த யாழி, “நீ வா வந்து பேசு. என்னால உன்னை பார்க்காமலாம் இருக்க முடியாது. அதுவும் வன் மந்த். சான்சே இல்லை” என்று தன் விழிகளை உருட்டினாள்.
அஜய் தன் இடையில் கைக்குற்றி அவளை விவரிக்க முடியாத பார்வையால் ஏறிட்டான்.
“என்ன மாமா?” என்ற யாழி, “இப்போ இங்க நீ மட்டும் தான மாமா இருக்க. உன்கிட்ட கண்ட்ரோல் வேண்டாம்… நானா இருன்னு தானே சொன்ன? அதான் இதை கீழவே எல்லார் கிட்டவும் சொல்லாம, உன்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்கேன். பார்க்காம இருக்க முடியாதா என்னன்னு உடனே கேட்காத. என்னால முடியாது, அவ்ளோ தான். பார்க்காம இருக்கவும் பழகிக்கோன்னு சொல்லாத, அப்படியொரு சூழல் நமக்குள்ள வரவே வராது. நீ வேலை விஷயமா வெளியில் தங்க வேண்டியதிருந்தாலும் வீடியோ கால் பண்ணி டார்ச்சர் பண்ணுவேன்” என்றாள்.
“உன்னைத் திருத்த முடியாதுடி… வாலு…” என்று அவளின் தலையில் மெதுவாகக் கொட்டிய அஜய், “தள்ளு” என வாயிலில் நின்றிருந்தவளை விலக்கி அறையை விட்டு வெளியில் வந்து அங்கிருந்த கூடத்தில் அமர்ந்தான்.
வா என யாழை கண்ணால் அழைத்து தன் முன் இருக்கையை காண்பித்தான்.
“என்ன? அங்க போய் இருன்னு சொல்லப் போறீங்களா? முடியாது மாமா… பிளீஸ்” என்றவளின் கையை எட்டிப் பிடித்து இழுத்து அமர வைத்தான்.
“ஜஸ்ட் வன் மந்த் அம்மு. அங்க இரு. அதுதான் சரியும் கூட. மேரேஜ் முடிஞ்சா… அந்த நொடியிலிருந்து என்னோட தான் இருக்கப்போற” என்றான்.
“மாமா… அது முடியாதே!” சிறுபிள்ளையாய் முகம் சுருக்கினாள்.
“கொஞ்ச நாள் டிஸ்டன்ஸ் லவ் எப்படியிருக்கு ஃபீல் பண்ணுவோமே!” என்று அவளின் மூக்கை பிடித்து ஆட்டினான்.
“அதெல்லாம் வேணாம்” என்று எழுந்தவள், அஜய்யின் அழுத்தமான பார்வையில் மீண்டும் அமர்ந்தாள்.
“நான் சொல்லிக் கேட்கமாட்டியா நீ? அத்தை, மாமா வந்து அனுப்பி வை கேட்கும்போது எப்படி மறுக்க முடியும் யாழ். இப்போதைக்கு என்னைவிட அவங்களுக்குதான் உரிமை அதிகம்” என்றான்.
“ஏன் மாமா புரிய மாட்டேங்குது உனக்கு?” என்ற யாழ், “உனக்கு நான் இல்லாம இருக்கணுமா? இருந்துக்கோ” என்று எழுந்து கொண்டவள் அறைக்குள் ஓடிவிட்டாள்.
பெரியவர்கள் வந்திருக்கின்றனர் என்ற போதும் அஜய் கீழே செல்லாது யாழ் கல்லூரி செல்ல கிளம்பி வரும்வரை அங்கே தான் அமர்ந்திருந்தான்.
“நீ பக்கம் இருந்தால் என்னோட கன்ட்ரோல் மிஸ் ஆகுது யாழ். நீ கூடவே இருக்கிறது… ம்ப்ச்” என நெற்றியைத் தேய்த்துக்கொண்டே, “இந்த கேப் எனக்கு வேணும் யாழ். உன்மேல எனக்கிருக்கும் லவ்வை நான் முழுசா தெரிஞ்சிக்க கொஞ்சம் தள்ளி இருக்கணும். வன் மந்த் வேகமா ஓடிடும். லவ்வுல இருக்க எல்லா ஃபீலிங்சும் நாம அனுபவிக்க வேண்டாமா?” என தன்னைக் கவனித்தும் கடந்து சென்றவளை தடுத்து நிறுத்திக் கூறினான்.
விழி உயர்த்தி அவனது முகம் பார்த்தவள், ஒன்றும் சொல்லாது கீழே சென்றுவிட்டாள்.
அஜய்யும் அவள் பின்னால் செல்ல, அனைவரும் உணவு மேசை இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
“வாய்யா அருளு. உட்காரு. சாப்பிடுவோம்.” வீரபாண்டியன் சொல்ல ராஜேந்திரன் அருகில் இருக்கை காலியிருக்க, அதில் அமர்ந்தான்.
அவனுக்கு எதிரே கண்ணன் அருகில் அமர்ந்திருந்த யாழுக்கு, கண்ணன் உணவு ஊட்டிக் கொண்டே தானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அவள் இராஜேந்திரனிடம் பேசிக்கொண்டு இருந்தாலும் அஜய்யை பார்க்கவில்லை.
அஜய் அவளையே தான் பார்த்திருந்தான். வேண்டுமென்றே அவன் மேல் படிய தவிக்கும் பார்வையை அடக்கி வைத்தாள்.
“ரொம்பத்தான்” என்று அஜய் முணுமுணுக்க… “எதும் சொன்னியா?” எனக் கேட்டார் ராஜேந்திரன்.
“இல்லை மாமா” என்ற அஜய், வீரபாண்டியன் கேட்டதுக்கு பதில் பேச ஆரம்பித்துவிட்டான்.
“ஹாய் ஆல்…” நிதிஷாவின் குரல் ஒலித்ததும், வேகமாக எழுந்த யாழி அஜய்யின் அருகில் காலியாக இருந்த இடத்தில் சென்று அமர்ந்தாள்.
அஜய் யாழின் செயலுக்கான காரணம் புரிந்து முறைத்தான்.
“எனக்கு பொங்கல் போதும் ப்பா. மாமா பூரி சாப்பிடுறாரே! ரெண்டு வாய் வாங்கிக்கிறேன்.” தான் உணவு ஊட்டிகொண்டிருக்க யாழி சட்டென்று எழுந்து சென்றது ஏன் என புரியாது கண்ணன் பார்த்திருக்க… பதில் வழங்கினாள் யாழினி.
நிதிஷா அருகில் வர அப்போதுதான் அவளை அனைவரும் கவனித்தனர். கையில்லா சட்டை மற்றும் தொடை வரையிலான ட்ருவுசர்ஸ் அணிந்திருந்தாள்.
ராஜேந்திரன் முகழ் சுளிப்பாக தட்டில் தலையை குனிந்து கொண்டார். கண்ணன் நிமிரவே இல்லை. எம்பிரான் மற்றும் சுலோச்சனா தங்களுக்குள் பார்வையை மாற்றம் செய்து கொண்டனர்.
“யாரு காந்தள் பொண்ணு?” வீரபாண்டி கேட்க, காந்தள் தன் தந்தையை சங்கோஜமாக பார்த்தார்.
காலை எழுந்ததும் வீட்டிற்கு தன் மகனின் வேலை விடயமாக வந்திருக்கும் பெண்ணை பார்த்து நலம் விசாரித்து வருவோம் என்று காந்தள் கையில் தேநீருடன் சென்று நிதிஷாவை எழுப்பிட, அவளோ பல அழைப்புகளுக்கு பின்னர் தான் எழுந்தாள்.
காந்தள் தன்னை முறையாக அறிமுகம் செய்துகொள்ள…
“ஹாய் ஆண்ட்டி…” என்ற நிதிஷா, “அஜய் அழகுக்கு நீங்க தான் காரணம் போல” என்று கண்ணடித்து, “அதுக்குள்ள ஏன் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணியிருக்கீங்க? அஜய்க்கு எங்க பீல்டு கேர்ள்ஸ் கிட்ட எவ்ளோ கிரேஸ் இருக்குத் தெரியுமா?” என்று அவள் போக்கில் பேசிக்கொண்டே இருக்க, காந்தளால் அப்பேச்சுக்களை ரசிக்க முடியவில்லை.
ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தவள் திடீரென ஹிந்தியில் எதோ சொல்ல காந்தளுக்கு புரியவில்லை.
அவரின் முக பாவனை வைத்து கண்டுகொண்ட நிதிஷா, “ரொம்பவே நல்ல பையனா வளர்த்துட்டிங்க ஆண்ட்டி. நான் எவ்ளோ ட்ரை பண்ணேன் தெரியுமா?” என்றாள்.
காந்தள் மனதில் மூண்ட எரிச்சலை பாடுபட்டு முகத்தில் காட்டாது தவிர்த்தார்.
“டீ?”
“நோ ஆன்ட்டி… மார்னிங் எழுந்ததும் வன் ஷாட் ஷாம்ஃபையன் ஆர் வோட்கா, இதெல்லாம் பழக்கமில்லை” என நிதிஷா அருவருப்பாக சொல்ல, காந்தளுக்குத்தான் உள்ளுக்குள் அதீத அருவருப்பாக இருந்தது.
“சரிம்மா” என்று அவர் அமைதியாக சொல்லியதே பெரிய விஷயம்.
கொண்டு சென்ற தேநீரை கையோடு எடுத்துக்கொண்டு வந்தவருக்கு, அஜய்யை திட்டினால் என்னவென்று ஆத்திரமாக வந்தது.
அப்போதுதான் ராஜேந்திரன், கண்ணன், வீரபாண்டி, எம்பிரான் வந்தனர். அவர்களிடம் கவனம் செல்ல, நிதிஷாவை மறந்துப்போனார் காந்தள்.
பார்த்ததும் நிதிஷாவை பிடிக்காத காந்தளுக்கு தற்போது அவள் வந்து நிற்கும் தோற்றமும் பிடிக்கவில்லை.
அஜய் தன் குடும்ப உறுப்பினர்களின் முகத்தை கவனிக்கவில்லை.
“குட்மார்னிங் நிதி. கம் அண்ட் சிட்” என்று யாழி முன்னர் அமர்ந்திருந்த இருக்கையை காண்பித்து, “அம்மா அவளுக்கும் வையுங்க” என்றான்.
“யாரு அருளு இவங்க?” சுலோச்சனா நிதிஷாவை முறைத்துக்கொண்டு வினவினார்.
“மும்பை மாடல் அத்தை. மலையில் திலீப் ரெசிடன்ஷியல் ஃபார்ம் ஆட் ஷூட்டுக்காக வந்திருக்காங்க” என்றான்.
“அதுக்கு இங்க ஏன் தங்க வச்சிருக்க? அந்த திலீப் ஹோட்டலிலே இருக்கலாமே?” எனக் கேட்டார்.
“வீட்டு சூழல் வேணும் கேட்டாங்க அத்தை” என்ற அஜய், ‘எதுக்கு இவ்வளவு கேள்வி’ என அப்போது தான் அனைவரின் முகத்தையும் கவனித்தான்.
அவன் பாவமாக ராஜேந்திரனை ஏறிட,
“என்ன இது நம்ம பிள்ளை மேல நமக்கு நம்பிக்கை இல்லையா? வேலை முடிஞ்சதும் அந்தப் பொண்ணு கிளம்பிடப் போகுது. விடுங்க” என்று சொல்ல மற்றவர்களும் அதன் பின்னர் எதும் கேட்கவில்லை.
இவர்கள் முழுக்க தமிழிலேயே பேசிட, அவளுக்கு சுத்தமாக ஒரு வார்த்தையும் புரியவில்லை. தானே உணவினை எடுத்து வைத்து சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
“அப்போ கிளம்புறோம்” என்று புறப்பட, “யாழ் ஈவ்வினிங் அங்க வந்திடுவா அத்தை” என்றான் அஜய்.
அவனுக்கு அருகில் நின்றிருந்த யாழி அவனின் கையிலே கிள்ளினாள்.
“இருக்கட்டும் அருளு. அவளுக்கு அலைச்சலாப் போகும். கல்யாண நேரத்துல சோர்ந்து கிடப்பா அப்புறம்” என்று, “யாழி இங்கவே இருக்கட்டும்” என சொல்லிவிட்டார்.
யாழுக்கு உள்ளுக்குள் ஒரே குதியாட்டம்.
மற்றவர்கள் இதே காரணத்தை சொல்லும்போது யோசித்த சுலோச்சனா, நிதிஷாவை கண்டதும் யாழ் இங்கவே இருக்கட்டுமென பட்டென்று சொல்லிவிட்டார்.
ஏனோ அவருக்கு நிதிஷாவை பார்த்ததும் மனதில் ஒரு அலைப்புறல். இன்னதென்று சரியாக விளங்கவில்லை.
“சூப்பர் பிரெக்பாஸ்ட் ஆண்ட்டி” என்றாள் நிதிஷா. காந்தள் வலிய சிரித்து வைத்தார்.
“ஸ்டுடியோ எப்போ போறோம் அஜய்?”
காந்தளிடம் ஆங்கிலத்தில் பேசியவள், அஜய்யிடம் ஹிந்தியில் பேசினாள்.
“என்ன சொல்றா யாழி?” காந்தள் யாழின் காதில் மெல்ல வினவினார்.
யாழ் அவள் பேசியதை சொல்லிட,
காலையில் நிதிஷா தன்னிடம் பேசியதை அப்படியே சொல்லிவிட்டார்.
“எனக்கு பக்குன்னு ஆகிப்போச்சு யாழி. எவ்ளோ தைரியம் பெத்தவ என்கிட்டே உங்க பையனை…” என்று நிறுத்தியவர், அவள் சொல்லியதை சொல்ல முடியாது “சொல்லுவேன்னு சொல்லுவா?” என்று பொருமினார்.
இருவரும் உணவு மேசையை சுத்தம் செய்தபடி பேசினர்.
அஜய் மற்றும் நிதிஷா, கூடத்தில் அமர்ந்திருந்தனர்.
அஜய் மடிக்கணினியில் நிதிஷாவுக்கு எதையோ காட்டிக் கொண்டிருந்தான்.
காந்தள் சொல்லியதும் யாழின் பார்வை அஜய் மீது நிலைக்க… அவளின் பார்வை உணர்ந்தவனாக,
‘யார் இருக்கான்னு கூட பார்க்கமாட்டேங்கிறா… எப்போ பாரு சைட்…’ என தன்னவளை திரும்பி பார்க்க… இருவரின் பார்வையும் ஒன்றையொன்று தழுவி நின்றன.
Epi 11
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
47
+1
+1
2
1 Comment