Loading

(இக்கதை கதிர் நிலவு கதையில் வரும் அஜய்க்கான கதை. கதிர் நிலவு படிக்கவில்லை என்றாலும் இக்கதை புரியும்.)

 

 

நீதான் என் காதல் மழை 1

*காதல் என்றாலே வலியை கடந்து தான் சேர வேண்டும் என்பது காலத்தின் நியதியோ!.
_______________________

ஆழ்ந்த உறக்கத்தை சத்தமிட்டு களைத்த அலாரத்தை அணைத்து, புரண்டு படுத்து, விட்ட தூக்கத்தை தொடர்ந்தான் அஜய் (அருள் மணி).

சேலத்தில் விளம்பர நிறுவனம் ஒன்று வைத்துள்ளான். திறமைக்கு இருக்கும் இடம் பெரிதல்ல என்பதற்கு சான்று அஜய். மும்பை வர இவன் மிகவும் பிரபலம். பெரிய பெரிய மாடல்கள் இவனிடம் சேர்வதற்கு காத்துக்கிடக்கின்றனர்.

அஜய்யின் குடும்பம் மிகப்பெரியது.

அஜய்க்கு அப்பா கிடையாது. அம்மா காந்தள். அரசுப்பள்ளி ஆசிரியர். விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருக்கிறார். அஜய்க்கு ஒரு தங்கை வெண்ணிலா. திருமணம் முடிந்துவிட்டது. கணவன் கதிர் குமரன். காந்தளின் முதல் அண்ணன் மகன். வீட்டின் அனைவருக்கும் விருப்பமானவன் கதிர். கதிருக்கும் அஜய்க்குமான பந்தம் கூட அதீத நெருக்கம் வாய்ந்தது. அஜய்க்கு நான்கு மாமாக்கள். ஒரு பெரியம்மா. அனைவரும் ஏற்காடு மலையில் வசித்து வருகின்றனர்.

அங்கு வீரபாண்டியன் எஸ்டேட் மற்றும் கதிரின் தோட்டம் மிகவும் பிரபலமானது.

மீண்டும் பத்து நிமிடங்களில் சத்தம் கேட்க, இம்முறை அணைத்தவன், எழுந்து அமர்ந்து கண்களை கசக்கியபடி, அலைபேசியை எட்டி எடுத்தான்.

இன்றைய பணி என்ன என்பதை அலைபேசியின் குறிப்பேட்டில் பார்வையிட்டவன், குளியலறை புகுந்து அரை மணியில் கிளம்பி தயாராகி கீழே வந்தான்.

காந்தள் தொலைக்காட்சியில் பக்திப்பாடல்கள் கேட்டவாறு குளம்பி நீரை நிதானமாக பருகிக் கொண்டிருந்தார்.

“குட்மார்னிங் காந்தள்” என்று அவரின் அருகில் வந்தவன்,

“காஃபி டேஸ்ட் அல்லுது போலவே!” என்றான். அவரின் முகத்தில் தெரிந்த ரசனையில்.

“ம்ம்… குமரனோட தயாரிப்பாச்சே ருசி அதிகமாதான் இருக்கும்” என்றவர், ஃபிலாஸ்கிலிருந்து ஊற்றி அவனுக்கும் ஒரு கோப்பையை நீட்டினார்.

“நீ உன் மருமகனை விட்டுக் கொடுப்பிய என்ன?” எனக் கேட்ட அஜய், “இது இன்னும் மார்க்கெட்டுக்கே வரல. ஆனால் அத்தைக்கு மட்டும் மார்கெட் பண்ணிட்டான்” என்றான்.

“அவனுக்கு நான் ருசி எப்படியிருக்குன்னு சொல்லணும்” என்றார் புன்னகையாக.

“ம்க்கும்… அவன் உன்னை வச்சு டெஸ்ட் பண்ணுறாம்மா. அவனுக்கு நீ சோதனை எலி” எனக்கூறி அஜய் சத்தமிட்டு சிரிக்க…

“போடா… ராஸ்கல்” என மகனின் தோளில் செல்லமாக அடித்த காந்தள், “நீயென்ன இவ்ளோ சீக்கிரம் கிளம்பி வந்திருக்க?” எனக் கேட்டார்.

“இந்த பொடிக்கு ஆட் ஷூட் இன்னைக்கு… மார்க்கெட்டுக்கு வரதுக்கு முன்ன ப்ரமோட் பண்ணனுமே… நிலா காஃபி பொடி இப்போ இண்டர்நேஷனல் பிராண்ட் ஆகிப்போச்சே!” என்று காலி கோப்பையை டீபாயில் வைத்துவிட்டு எழுந்து கொண்டான்.

“நம்ம வீட்டு விளம்பரம் அஜய். நல்லா பண்ணிடு. விளம்பரம் பார்க்கும்போதே இந்த பொடியை வாங்கணும் தோணிடனும். அப்படி எடுக்கணும் நீ” என்றார்.

“பேசாம நீயே வந்து நடிச்சிடும்மா. நல்லாவே பண்ற நீ” என்றவன், “எங்க சேட்டையை காணும்?” எனக் கேட்டு பார்வையை ஓடவிட்டான்.

“இன்னைக்கு அவளுக்கு லீவு தானே பொறுமையா எழுந்துகட்டும்” என்றவர், “காலையிலே அவளை வம்பிழுக்க தேடுற நீ” என்றார்.

“நானா? சரிதான். நைட்டு முழுக்க பேய் படம்… இதுல மேடத்துக்கு டிடிஎச் சவுண்ட் எபெஃக்ட் வேற. நீங்க மாத்திரை போட்டு தூங்குறதால நைட்டுல அவள் அடிக்கிற கொட்டம் உங்களுக்குத் தெரியல. இன்னைக்கு லீவுன்னு விடிய விடிய படம் பார்த்துட்டு இப்போ இழுத்து போர்த்திக்கிட்டு தூங்கிட்டு இருக்கா” என்றான்.

“விடுடா… சும்மா எப்போ பாரு அவளை எதுவும் சொல்லிகிட்டு” என்ற காந்தளிடம்,

“நம்மளை நம்பி மாமா இங்க விட்டிருக்கார். அவள் சரியா படிக்கலன்னா… நீங்க தான் பதில் சொல்லணும். லீவு தானே இன்னைக்கு, போனவாரமே எக்ஸாம் இருக்குன்னு இவ மலைக்கு போகலதானே… நேத்து காலேஜ் முடிச்சிட்டு போயிருக்கலாம்ல…” என்றான்.

“இப்போ என்ன பிரச்சினை உங்களுக்கு… எப்பவும் எதாவது சொல்லிகிட்டு இருக்கீங்க?”

அஜய் பேசியதையெல்லாம் கேட்டுவிட்டேன் என்பதற்கு சான்றாய், தனது அறை வாயிலில் மூக்கு விடைக்க நின்றிருந்தாள் யாழினி.

காந்தளின் மூன்றாவது அண்ணன் எம்பிரான், மற்றும் அவரது மனைவி சுலோச்சனாவின் இரண்டாவது மகவு. பொறியியல் முதுகலை முதல் வருடம் இறுதியில் இருக்கிறாள்.

மலைக்கு தினமும் போய் வருவது சிரமமாக இருந்திட, இளங்கலை விடுதியில் தங்கிதான் பயின்றாள். நான்காம் வருடம் விடுதி உணவு ஒத்துக்கொள்ளாது மருத்துவமனையில் ஒரு வாரம் இருந்ததால், அது முதல் காந்தள் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறாள். விடுமுறை தினங்களில், காஃபி ஆலைக்கு வரும் அவளை, அவளது இரண்டாவது பெரியப்பா மகன் குணா மலைக்கு அழைத்துச் சென்றிடுவான்.

எம்பிரான், சுலோ… முறை பையனான அஜய் இருக்கும்போது வயது பெண்ணை எப்படி விடுவதென்று சற்றும் யோசிக்கவில்லை. அதுவே அஜய்க்கு மகிழ்வை கொடுத்திருக்க… யாழினியின் விஷயத்தில் அதிகப்படியான கண்டிப்பும், அக்கறையும் அஜயிடம் தானாக வந்துவிட்டிருந்தது.

அவள் தான் மொத்த குடும்பத்தின் கடைக்குட்டி. அனைவருக்கும் செல்லமும் கூட. அப்படியிருக்கையில் அவள் மீது அஜய் மட்டும் கண்டிப்பு காட்டுவதில் அவளுக்கு சற்று சுணக்கம் தான்.

“இப்போ உன்னை என்ன சொல்லிட்டாங்க… ஹான். சவுண்ட் பலமா வருது? லெக்ச்சர் பண்ணனும் ஆசை இருந்தா மட்டும் போதாது. அதுக்கு பர்ஸ்ட் ஒழுங்கா படிக்கணும். பிஜி ஸ்கோர் பண்ணா தான் எம்ஃபில் உன்னை கைட் பண்ண ஆள் கிடைக்கும். அதைவிட்டு எந்நேரமும் ஹாரர் மூவி பார்த்து டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க நீ. அதை சொன்னா கோபம் வருதா உனக்கு?” என்று கேட்டவன், அவளின் சுண்டிவிட்ட முகத்தை கண்டதும் தன் சத்தத்தை குறைத்து, “லாஸ்ட் இன்டர்ணல் ஸ்கோர் பண்ண முடியல புலம்பின தானே… லாஸ்ட் மினிட் படிச்சா அப்படிதான். தினமும் படிக்கனும். இல்லைன்னா நினைச்சது கிடைக்கலன்னு புலம்பிட்டு தான் இருக்கணும்” என்றான்.

“ம்ப்ச்… இப்போ எதுக்குடா அவளை திட்டுற?” என்று மகனை அதட்டிய காந்தள், “அவன் எப்பவும் அப்படிதானே… கண்டுக்காதடா நீ” என்றார் யாழினியிடம். அவளின் கன்னம் வருடி.

“இன்னும் மடியில வச்சு கொஞ்சுங்க” என்ற அஜய், “ஏன் மலைக்கு போகல?” எனக் கேட்டான்.

“ஈவ்வினிங் ஃப்ரெண்ட் வெட்டிங் ரிசப்ஷன்” என்றாள்.

“மாமாகிட்ட சொல்லிட்டியா?”

அஜய் கேட்டதும் யாழினி தன் அத்தையை பாவமாக ஏறிட்டாள்.

“எங்க ரிசப்ஷன்?” இருவரையும் கவனித்து அடுத்த கேள்வியை கேட்டிருந்தான்.

“மேட்டூர்…” மெல்ல ஒலித்தது அவள் குரல்.

“டைம்?”

“செவன்…”

“ம்ம்… போகக்கூடாது” என்றவன் தனது அலுவலகம் கிளம்பிவிட்டான்.

“டிபன் செஞ்சதும் கால் பண்ணுங்கம்மா… ஆள் அனுப்புறேன். கொடுத்து விடுங்க. லன்ச்சுக்கும் வீட்டுக்கு வர முடியாது நினைக்கிறேன்” என காந்தளிடம் கூறியவன்,

“நைட் முழுக்க முழிச்சிருந்தது முகம் எப்படி இருக்கு பாரு. போ, பர்ஸ்ட் நல்லா தூங்கி எழு” என்று யாழினியை அதட்டிச் சென்றான்.

அஜய்யின் வண்டி செல்லும் சத்தம் மறைந்ததும் மூச்சினை இழுத்து விட்டு, பாதத்தை தட்டி அடி வைத்தவளாக இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

“எதுக்கு அத்தை இப்படியொரு மிளகாயை மகனா பெத்தீங்க? மொத்த எரிச்சலையும் என்கிட்ட காட்டுறாங்க. ஒருநாள் என்கிட்ட மாட்டிகிட்டு மிழிக்க வைக்கிறேன் பாருங்க” என்றாள். பொருமலாய்.

காந்தள் சிரித்திட…

“சிரிக்காதீங்க அத்தை. எல்லார்கிட்டயும் ஜாலியா தானே இருக்காங்க. அதுவும் குமரன் அண்ணா, குணா அண்ணா, வருண்(அவளின் உடன்பிறப்பு) எல்லாரும் சேர்ந்துட்டா எவ்ளோ கொட்டம் அடிக்கிறாங்க… இப்போ ஜாலியா இல்லாம வேறெப்போ இருக்கிறது?” என்றவளின் சத்தம் அஜய்யின் கணைப்பில் காணமல் போனது.

‘இன்னும் இவங்க போகலையா?’ திருட்டு முழி முழித்தாள்.

“உன் நல்லதுக்கு சொன்னா நான் உனக்கு எரியுற மிளகாவா தெரியுறனா?”

“அது… சும்மா… அத்தைகிட்ட…”

“அடிங்க…” அஜய் ஒரு அடி முன் வைக்க துள்ளி குதித்து ஓடியிருந்தாள்.

“ரொம்ப செல்லம் கொடுத்து கெடுக்காதீங்க” என்றவன் டீபாய் மீது வைத்துவிட்டுச் சென்றிருந்த அலைபேசியை எடுத்துக்கொண்டு சென்றிருந்தான்.

அறைக்குள்ளிருந்து மெல்ல எட்டிபார்த்த யாழி, “ஷப்பா போயாச்சு” என்று வெளியில் வந்தாள்.

“அப்போ ரிசப்ஷன் போக முடியாதா அத்தை.” பாவம் போல் கேட்டாள்.

“நீ போயிட்டு வா. அவனை நான் சமாளிச்சுக்கிறேன். நைட் அவ்ளோ தூரம் போயிட்டு வரணுமேன்னு வேண்டாம் சொல்லியிருப்பான்” என்றார் காந்தள்.

“ஃபிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து டெரயினில் தான் அத்தை போறோம்” என்றவள், “எனக்காக உங்க பிள்ளைகிட்ட ஒருமுறை கேட்டு பாருங்களேன்” என்றாள்.

“எதுக்கு என் மேல ஏறுறதுக்கா? போறதுன்னா கவனமா போயிட்டு சீக்கிரம் வந்திடு. அதுக்கு அப்புறம் அவனை நான் பார்த்துக்கிறேன்” என்றவரிடம்,

“போகக்கூடாது சொல்லிட்டு போயிருக்காங்க. எப்படி போக?” என்று சிணுங்கினாள் யாழினி.

“அவன் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கிறியா நீ?” காந்தள் நம்ப முடியாது வினவினார்.

“அதட்டி மிரட்டினாலும், திட்டினாலும் அதுல என் மேல இருக்கும் அக்கறை தான் தெரியும் அத்தை. அதை கொஞ்சம் சாஃப்ட்டா சொல்லலாம் தோணும். அவ்ளோ தான். அதுக்காக மாமா பேச்சை நான் எப்போ கேட்காம இருந்திருக்கேனாம்?” என்றவள், காந்தள் அவளது பேச்சில் அதிசயத்து வாயில் கை வைத்ததை கண்டு சத்தமிட்டு சிரித்தாள்.

“மாமா சாப்பாடு கொடுத்தனுப்ப ஆள் அனுப்புறேன் சொன்னாங்க தானே? நானே கொண்டுப்போறேன். திரும்ப ஒருமுறை நேரா கேட்டு பார்க்கிறேன்” என்றாள்.

“நீ அவன்கிட்ட அடி வாங்காம வீடு திரும்பமாட்ட…” என்ற காந்தள் சமையலறைக்குள் சென்றார்.

தனது ஸ்டூடியோவிற்கு அஜய் வரும்போது, எல்லாம் துரித கதியில் தயாராகிக் கொண்டிருந்தது.

“கிச்சன் செட்டப் ரெடியா?”, அஜய்.

“ரெடி சார்” என்ற நிகில், “லேடி மாடல் இன்னும் வரல சார்” என்றான்.

“வாட்?” என்று நொடியில் கோப முகம் காட்டிய அஜய்… “ரீசன் என்னன்னு தெரிஞ்சுதா?” எனக் கேட்டான்.

செட்டிங் பகுதியை பார்வையால் அலசியபடி…

“கால் பண்ணேன். டுவெண்ட்டி மினிட்ஸ்… ரீச் ஆகிடுவேன் சொன்னாங்க. இன்னும் வரல” என்றான் நிகில்.

“ஹ்ம்ம்… ஃபியூவ் மோர் மினிட்ஸ்… வெயிட் பண்ணிட்டு கால் பண்ணுங்க” என்ற அஜய், “ஓபன் கிச்சன் செட்டப் தானே? எதுக்கு இந்த ஸ்கிரீன். சீக்கிரம் ரிமூவ் பண்ணுங்க. கிச்சன் வால் கலரில் டைனிங் டேபுள் ஸ்பிரட் ஷீட் கலர் சேன்ஞ் பண்ணுங்க” என தன் கண்ணில் படும் சிறு சிறு குறைகளையும் கவினித்து திருத்திக் கொண்டிருந்தான் அஜய்.

“லைட்டிங் ஒன்ஸ் செக் பண்ணுங்க” என்ற அஜய் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக உட்காராது பம்பரமாக சுழன்று கொண்டிருந்தான்.

“டேய் நிகில் இன்னுமாடா அந்த மாடல் வரல?” அப்போதுதான் அஜய் சற்று ஓய்வாக அமர்ந்தான்.

“நம்ம மாடல்ஸ் யாரையும் செலக்ட் பண்ணியிருக்கலாம் சார். இந்த பொண்ணு ஃபோனே அட்டென்ட் பண்ண மாட்டேங்குது. ஃபீல்ட்க்கு புதுசு. ஓவரா சீன் போடுது” என்று கடுப்பாக பதில் கூறினான் நிகில்.

“புது ப்ரோடக்ட் டா. நியூ ஃபேஸ் நல்லாயிருக்கும் நினைச்சேன்” என்ற அஜய், “நீ கொண்டு வந்த போட்டோஸ் பார்த்து தான் செலக்ட் பண்ணேன். நீ என்கிட்ட கொண்டுவரும் முன்னவே நல்லா விசாரிச்சிருக்கணும்” என்றான் அஜய்.

“திரும்ப ட்ரை பன்றேன்” என நிகில் நகர்ந்தான்.

“அவருக்கு மேக் ஓவர் முடிஞ்சுதா?”

ஆண் மாடலுக்கு மேக்கப் போடும் நபரிடம் அஜய் கேட்க,

அந்த மாடல் சந்தீப்பின் அறைக்குள் மேக்கப் மேன் அவசரமாக உள் நுழைந்தார்.

அஜய் சலித்துக் கொண்டான்.

இன்று இதனை முடித்தே ஆக வேண்டும். குமரன் காபிதூள் வெளிவரும் தேதியை வெளியிட்டு இருக்க, இந்த வாரத்தில் விளம்பரம் ஒளிபரப்பு செய்திட வேண்டும்.

ஏற்கனவே காபிப்பொடி பற்றி குறிப்பு போல் சிறிய அளவிலான முன்னோட்ட விளம்பரம் ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கும் நிலையில், நாட்கள் நீளமாக அதை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்க முடியாது.

அதை வைத்து போட்டி நிறுவனங்கள் தங்களது பொருட்களின் மூலக்கூறினை கண்டறிய வாய்ப்புள்ளது.

அந்த அவசரமே அஜய்யிடம்.

கடைசி நொடி பரபரப்பிற்கு காரணம், அவனது வேலைப்பளு.

அவனது துறையில் பல பெரும் நிறுவனங்கள் தேடும் நபர் அஜய். அஜய் விளம்பரம் செய்து கொடுத்தால் அந்த பொருள் ஹிட் அடிக்கும் என தன் உழைப்பால் அஜய் சொல்ல வைத்திருந்தான். பிடித்த வேலை என்பதால் சிரமம் பாராது ஓடிக் கொண்டிருக்கிறான்.

இன்று இதனை முடித்துவிட்டு நாளை அவன் மும்பையில் இருக்க வேண்டும். அதற்காகவே இத்தனை அவசரம் அவனிடம்.

அஜய்யிடம் வந்த நிகில், “கால் அட்டென்ட் பண்ணல சார்” என்க, அஜய் திட்டுவதற்கு வாய் எடுக்கும் முன்,

“யாழினி வந்திருக்காடா. நீ போய் என்னன்னு கேட்டுட்டு வா. நான் அதுக்குள்ள அந்த மாடலை பிடிக்கிறேன்” என அவசரமாக திசைத்திருப்பி தப்பித்தான்.

நிகில் அஜய்யிடம் வேலைக்கு சேர்ந்து பின்னர் சில நாட்களில் இருவரிடமும் நட்பு உண்டாகியிருந்தது. வேலை நேரத்தில் மட்டுமே இருவருக்குமிடையே பாஸ், பணியாள் என்கிற தோற்றம் இருக்கும்.

“நான் வந்து உன்னை கவனிச்சிக்கிறேன். இன்னைக்கு இந்த ஷூட் முடியல…” என்று நிகிலை மற்றவரின் கவனம் ஈர்க்காது எச்சரித்து,

‘இவளை யாரு இப்போ இங்க வர சொன்னது?’ என்று மனதிலே யாழியை திட்டியவனாக தன்னுடைய அறை நோக்கிச் சென்ற அஜய்,

அனைத்தையும் ஒரு பார்வை பார்த்து,

“பார்த்துக்கோ வந்திடுறேன்” என நிகிலின் தோளில் தட்டிச்சென்றான்.

அஜய் தன்னுடைய அறைக்குள் நுழைய, அங்கு மாட்டப்பட்டிருந்த மாடர்ன் ஓவியங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்த யாழினி வேகமாக திரும்பினாள்.

“நீ எதுக்கு வந்த?”

அஜய்யின் கேள்விக்கு பதில் சொல்லாது, அவ்வறையின் ஓரத்தில் இருந்த சிறு மேசையில் தான் கொண்டு வந்திருந்த பையிலிருந்து உணவு டப்பாக்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்தாள்.

“நான் தான் ஆள் அனுப்பறேன் சொன்னனே?” கேட்டபோதும் கையினை கழுவிக் கொண்டு வந்து அமர்ந்தான்.

“ஷூட் ஸ்டார்ட் பண்ணியாச்சா?” உணவினை தட்டில் நிரப்பியவளாகக் கேட்டாள்.

“இன்னும் இல்லை” என்ற அஜய், “நீ சாப்பிட்டியா?” என்றான்.

“ம்ம்…” என்று அவள் சொல்லும் போதே தன்னுடைய உணவடங்கிய கையினை அவள் முன் நீட்டியிருந்தான்.

மறுக்காது ஆ வாங்கியவள், 

“நான் சாப்பிட்டேன். நீங்க சாப்பிடுங்க” என்று அவனுக்கு முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

அவ்வீட்டு பிள்ளைகளிடம் இப்படி உணவு ஊட்டுவதெல்லாம் சகஜமான ஒன்று. உறவு வேறுபாடின்றி இயல்பானது.

அஜய் உண்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவள்,

“நான் போயிட்டு வரட்டுமா?” என மெல்லிய ஒலியில் கேட்டிருந்தாள்.

“வேண்டாம்.” உடனடியாக மறுத்திருந்தான். அழுத்தமாக. இனி இதைப்பற்றி பேச ஒன்றுமில்லை எனும் தொனி. அதைத்தாண்டி மீண்டும் கேட்க முடியாது.

“கிளம்பு. வீட்டுக்கு போயிட்டு மெசேஜ் பண்ணு” என்று அஜய் செட் அமைத்திருக்கும் இடம் நோக்கி நகர,

“நானும் வரட்டுமா?” எனக் கேட்டாள்.

அஜய் என்ன என்று திரும்பி பார்த்திட,

“அத்தை அண்ணியை(வெண்ணிலா) பார்க்க மலைக்கு கிளம்பினாங்க. இப்போ வீட்டுக்கு போனாலும் தனியா இருக்கணும். அதான் இங்கவே ஷூட் பார்க்கட்டுமா?” என்றாள்.

“ம்ம்” என்ற அஜய் உடன் அப்பகுதிக்கு வந்தாள்.

பெண் மாடல் வந்திருக்க, வேகமாக அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.

மானிட்டர் முன்பு தனக்கான இடத்தில் சென்று அமர்ந்த அஜய், பக்கத்தில் ஒரு இருக்கயை தானே இழுத்துப்போட்டு யாழியை அமர வைத்தான்.

“சந்தீப் ரெடியா?”, அஜய்.

“யா… அஜய்.”

“நிகில் லைட்டிங் செட் பண்ண சொல்லுங்க” என்று காமிரா மேனை ஒரு பார்வை பார்த்த அஜய்,

“தூங்கி எழற சீன். அதுக்கெதுக்கு இவ்வளவு மேக்கப்” என்று பற்களை கடித்தான் அஜய்.

தன் முன் தயாராகி வந்து நின்ற பெண் மாடல் தாரிகாவை பார்த்து.

“லைட்டிங்கில் அப்போ தான் பளிச்சுன்னு தெரியும் அஜய். ஃபேஸ் களோயிங்கா இருக்கும்” என்று கொஞ்சும் குரலில் பதில் வழங்கியவளின் நெளிவில் யாழி முகம் சுளித்தாள்.

“யாழ்…”, அஜய்.

“சாரி…”, யாழினி.

தாரிகா யாழியை முறைத்துக் கொண்டிருக்க,

“மிஸ்?” என்று விளித்தான் அஜய்.

“சொல்லுங்க அஜய்” என்றாள் தாரிகா.

“மேக்கப் கம்மி பண்ணிட்டு வாங்க” என்ற அஜய், “மொத்தமா கழுவிட்டு பொட்டு மட்டும் வச்சிட்டு வந்தால் இன்னும் பெட்டர்” என்றான்.

“வாட்… வித்தவுட் மேக்கப்பா?” என்று அதிர்ந்த தாரிகா, “நோ சான்ஸ் அஜய்” என்றாள்.

“ஷாட்டுக்கு வந்துட்டா நான் சொல்றதை மட்டும் தான் கேட்கணும்” என்று அடர்த்தியாய் மொழிந்த அஜய், “டேய் நிகில்… இதை என்னன்னு பாரு” என்றான்.

அஜய் இது என்றதில் தாரிகாவிடம் கோபம். ஆனால் காட்டிட முடியாதே! அஜய் இத்துறையில் கொடிகட்டி பறப்பவன் அவனை பகைத்துக்கொள்ள முடியாது. தனக்கு இதுதான் இரண்டாவது விளம்பரம். அஜய்யிடம் நற்பெயர் வாங்கிவிட்டால், இதில் விரைவிலேயே உயரம் சென்றிடலாம். எல்லாம் யோசித்து தாரிகா அமைதியாக நகர,

“இது காஃபி பொடி ஆட். ட்ரெஸ் கொஞ்சம் நீட்டா வியர் பண்ணிட்டு வரலாம்” என்றான்.

அவள் புடவை தான் உடுத்தியிருந்தாள். ஆனால் முன் கழுத்தும், இடையும் அத்தனை இறக்கமாகக் காட்டியிருந்தாள்.

மேக்கப் மேன் உடன் நகர்ந்த தாரிகா,

“என்ன நிகில் இது… எல்லாத்துக்கும் குறை சொல்றார்” என்று தன் ஆதங்கத்தை நிகிலிடம் தெரிவித்தாள்.

“அதை ஏன் குறைன்னு நினைக்கிறீங்க… சார் எல்லாத்துலயும் பெர்ஃபெக்ஷன் எதிர்பார்ப்பார்” என்றான் நிகில்.

“சந்தீப் உங்க ஷாட்” என்ற அஜய், சந்தீப் மார்க்கில் நிற்கவும், மானிட்டரை பார்க்க…

“நீங்க இதெல்லாம் நோட் பண்ணுவீங்களா?” எனக் கேட்டாள் யாழினி.

“எதையெல்லாம்?”

“அது… அவங்க… ஒன்னுமில்லை” என்றவள், அஜய் பார்த்த பார்வையில் “லேடி மாடல் டிரெஸ்ஸிங்” என்றாள் அவனது முகம் பாராது.

“எதை எப்படி பார்க்கணும் எனக்குத் தெரியும்” என்று பற்களைக் கடித்த அஜய், “எனக்கு ஸ்விம்மிங் டிரஸில் வந்து நின்னாலும் கல்லையும் மண்ணையும் பாக்குற மாதிரிதான் இருக்கும்” என்றான்.

“என்னையுமா?”

யாழினி இப்படி கேட்பாளென்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அவளை எப்போதும் வீட்டின் கடைக்குட்டியாக, சிறு பெண்ணாகத்தான் பார்த்திருக்கிறான். இப்போது அவளது கேள்வியில் தான் அவள் வளர்ந்த பெண் எனும் நினைவே அவனுக்கு மனதில் தோன்றியது.

“நீ மட்டும் என்ன ஸ்பெஷல்?” என்று கேட்டாலும், அவள் ஏதோ ஒரு வகையில் தன்னை ஈர்க்கிறாள் என்பதை அக்கணம் உணர்ந்தான். உணரும் முன்பே விரட்டியும் இருந்தான்.

“புரியுது… உங்களுக்கு என்னை திட்ட மட்டும் தானே நேரமிருக்கும்” என்றவள், “போர் அடிக்குது ஃபோன் கொடுங்க. ரீல்ஸ் பாக்குறேன்” என்றாள்.

“உன்னோடது இல்லையா?” எனக் கேட்டபோதும், தன்னுடைய அலைபேசியை எடுத்து அவளிடம் கொடுத்திருந்தான்.

சந்தீப்பிற்கு காட்சியை விளக்கிய நிகில் ஆயாசமாக அஜய்யின் அருகில் வந்து அமர்ந்தான்.

“என்னடா… ரெடியா? டேக் போலாமா?”

“போன ஆட் நீதானே நடிச்ச… இப்பவும் நீயே பண்ணிடலாம். சந்தீப்புக்கு ரொமான்டிக் எக்ஸ்பிரஷனே வரமாட்டேங்குது டா. எதோ எருமையை பாக்குற மாதிரி பார்க்கிறான்” என்று நிகில் புலம்ப, அவன் சொல்லியதில் யாழினி பட்டென்று சிரித்திருந்தாள்.

“போன ஆட் சோலோ பர்ஃபாமென்ஸ் டா… குமரனும் நீயே பண்ணுண்ணு கேட்டான். பண்ணேன். இப்போ இது காம்போ டா…” என்ற அஜய், “பார்ப்போம்… ஒத்து வரலைன்னா பண்ணிக்கலாம்” என்றான்.

“நான் தாரிகாவை பார்த்திட்டு வரேன்” என நிகில் எழுந்து செல்ல…

“நீங்களே நடிச்சிடுங்க… போன ஆட் செம ரீச். என் ஃபிரெண்ட்ஸ்லாம் கூட உங்களை க்ரஷ் லிஸ்டில் வச்சிக்கிட்டு சுத்துதுங்க” என்று யாழி கண்ணடித்துக் கூறினாள்.

“இன்ட்ரஸ்ட் இல்லை” என்ற அஜய், அடுத்து வேலையில் கவனமானான்.

தாரிகாவும் அஜய் சொல்லியது போன்று தயாராகி வர, முழு திருப்தி இல்லையென்றாலும், முன்பு போட்டு வந்த மாவு மூஞ்சிக்கு இது பரவாயில்லை என காட்சிப்படுத்த துவங்கினான்.

நேரம் நீண்டது… அஜய்க்கு சுத்தமாக பொறுமை போய்விட்டது. அது அவன் ஒலிவாங்கியை சுழற்றியதிலே நிகில் கண்டுகொண்டான்.

“சாரிடா… நான் இந்தபொண்ணை சஜஸ்ட் பண்ணியிருக்கவே கூடாது” என்று நிகில் மன்னிப்பு வேண்டிட,

“விடுடா… அவன் மட்டும் என்ன ஒழுங்கா நடிக்கிறான். பேக்கப் சொல்லிடு” என்ற அஜய் இருக்கையில் பின் சரிந்தான்.

“நீங்களே சோலோவா… காஃபி டேஸ்ட் பண்ற மாதிரி பண்ணிடுங்க” என்றாள் யாழினி.

முன்பும் அதுபோல் தான் பண்ணியிருந்தான். மீண்டும் அதுவே வேண்டாம் என யோசித்து வேறு கருவை உண்டாக்கி காட்சிப்படுத்த முனைய நடிகர்கள் சொதப்பி வைக்கின்றனர்.

அஜய் தீவிர யோசனையில் இருந்தான்.

அவனையே பார்த்திருந்த யாழினி, தன்னுடைய அலைபேசி ஒலிக்கவும் அங்கிருந்த சன்னல் அருகே தள்ளிச்சென்றாள்.

சூரிய ஒளி பின்னணியில் அவளின் நிறம் பொன் மின்னலுக்கு போட்டியாய் தேவதையோ எனுமளவில் தோற்றம் கொண்டிருந்தாள்.

“அஜய்… சீ ஹெர்…” நிகில் சொல்லிய திசையில் அஜய் பார்த்திட… அவன் கண்களுக்கு மஞ்சள் நிலவாய் தெரிந்திட்டாள் பேதை.

“யாழியை நடிக்க வைக்கலாம் அஜய். நீ எதிர்பார்க்கிற இயற்கை அழகு” என நிகில் சொல்ல… “அவள் உனக்கு தங்கச்சி… அப்படி மட்டும் பாரு” என்றான் அஜய்.

“அடேய்… நான் நம்ம ஷூட்டுக்கு மாடல்ஸ் பாக்குற மாதிரி தான்டா பாக்குறேன். யாழி யாருன்னு எனக்கு மட்டும் தெரியாதா என்ன?” என்றான் நிகில்.

“ம்ம்…” என்று யாழியையே பார்த்திருந்த அஜய்… “அந்த பொண்ணை போகச் சொல்லு” என்றான்.

“யாரடா?”

“அவளைத்தான்… அந்த மாடல்” என்றான் அஜய்.

அஜய்யின் பார்வையை உணர்ந்து திரும்பிய யாழினி, தன்னுடைய பேச்சினை முடித்துக்கொண்டு, அவனிடம் வந்தாள்.

“ஃப்ரெண்ட் கால். ரிசப்ஷன் வரியா கேட்டாள்…” என்று யாழி விளக்கம் கொடுக்க, “சாரி வியர் பண்ணத் தெரியுமா?” எனக் கேட்டான் அஜய்.

“ஹான்…” யாழினி புரியாது பார்க்க…

“அந்த ரூம் போ… வரேன்” என்று ஒரு அறையை காண்பித்தான்.

யாழி எதற்கென்று தெரியாத போதும்… அவனது பேச்சினை தட்ட முடியாது அறைக்குள் சென்றாள்.

அடுத்து அஜய் எம்பிரானுக்கும், குமரனுக்கும் கான்பிரன்ஸ் கால் செய்திட்டான்.

இருவருக்கும் சேர்த்து அஜய் சூழலை விளக்கிட, எம்பிரான் சற்று யோசித்தாலும், நம் வீட்டு தொழிலுக்கு தானே என ஒப்புக்கொண்டார். அவருக்கு அஜய் மீது அந்தளவிற்கு மதிப்பும் நம்பிக்கையும் இருந்தது.

குமரன் சற்று யோசித்திட…

“இன்னொரு மாடல் பிடிக்க டைம் இல்லை குமரா” என்றான் அஜய்.

“யாழிக்கு ஓகேன்னா எனக்கு பிரச்சினை இல்லை மச்சான்” என்று குமரன் வைத்திட, எம்பிரானுக்கு அஜய் நன்றி தெரிவித்தான்.

“நமக்குள்ள என்னப்பா” என்று எம்பிரானும் வைத்திட, அஜய் யாழினி இருக்கும் அறைக்குச் சென்றான்.

தாரிகா செல்லும் போது வெளிப்படையாகவே அஜய்யை திட்டயபடி சென்றாள்.

தாரிகா அணிந்திருந்த புடவையை நிகில் எடுத்துக்கொண்டு செல்ல… அஜய் யாழினியிடம் அவள் நடிக்க இருப்பது குறித்து விளக்கிக் கொண்டிருந்தான்.

“என்னால முடியும் தோணல… சொதப்பிடுவேன்” என்றாள்.

“நான் இருக்கேன் யாழ்” என்று அவளை ஆயிரம் சமாதானம் செய்து ஒப்புக்கொள்ள வைத்த அஜய், நிகில் கொண்டு வந்த புடவையை பார்த்துவிட்டு, “இது வேணாம். மும்பை ஷூட்க்கு ஒரு சாரி எடுத்து வச்சோமே அதை எடுத்திட்டு வா” என்றான்.

யாழி படபடப்பாக விரல்களை கோர்த்து பிரித்து என அல்லல் பட, அவளின் உச்சியில் கை வைத்து அழுத்தம் கொடுத்தான் அஜய்.

நிகில் புடவையை கொண்டு வர,

“கட்டிட்டு கூப்பிடு” என்று நிகிலுடன் வெளியேறினான்.

சில நிமிடங்களில் யாழி கதவினை திறக்க, உள்ளே சென்ற அஜய் அவளை கீழிருந்து மேல் பார்த்தான். ஒருவித ரசனையை தானாகக் காட்டிக்கொடுத்தது அவனது கண்கள்.

அஜய்யின் பார்வை வீச்சில் மனதால் தடம் புரண்டாள் யாழினி. சில்லென்ற இதம் இதயத்தில் ஊடுருவியது.

“பிலவ்ஸ் பிட் லூசா இருக்கே” என்ற அஜய்… ஆடை வடிவமைப்பாளரை அழைத்து அதனை சரி செய்திடக் கூறினான்.

அவர் அருகே வர, யாழினி பட்டென்று அஜய்யின் கையை பிடித்திருந்தாள்.

அவளின் பார்வையில் என்ன கண்டானோ?

“நீங்க சொல்லுங்க நான் பண்றேன்” என்று யாழியின் பின் சென்றான் அஜய்.

‘இவங்க மட்டும் ஆம்பளை இல்லையாக்கும்.’ மனதில் நினைத்த யாழி, அசையாது நின்றாள்.

ஆடை வடிவமைப்பாளர் சொல்லிய இரண்டு கயிற்றை இணைத்து முடியிட்டவன், முதுகில் துணியை கோர்த்து சிறு அலங்கார வளையம் வைத்து கட்டிட்டிட்டான்.

வெற்று முதுகில் அவன் விரல் ஸ்பரிசத்தில் அவள் தான் மூர்ச்சையாகி இருந்தாள்.

அடுத்து அஜய் மேக்கப் மேன் அழைத்திட…

“நானே… நானே போட்டுக்கிறேன்” என தடுத்திருந்தாள்.

நெற்றியில் சிறு பொட்டு, கண்ணுக்கு மை. அவ்வளவு தான். குட்டி தேவதையாக தெரிந்தாள்.

“ஹேய்… யாழ்! சாரில அழகா இருக்க” என்ற அஜய், அவளுக்கு காட்சியை விளக்க…

“நீ…நீங்க பண்ணலாமே” என்றாள். அவளிடம் அப்பட்டமான நடுக்கம்.

“சும்மா ஆக்ட் தான் யாழ்.”

“நீங்கன்னா எனக்கு பயம் இருக்காது. நீங்க தொட்டாலும் கம்ஃபர்டபுளா இருக்கும்” என்று அவள் தயங்கித் தயங்கி சொல்ல,

இடையில் கை குற்றி, அவள் சொல்லிய கம்ஃப்ர்டபுள் என்ற வார்த்தை கொடுத்த தாக்கத்தில் அவளையே பார்த்திருந்தான் அஜய்.

 

Here is the epi 2 🖇️ 

நீதான் என் காதல் மழை 2

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
57
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்