Loading

ஐந்து வருடங்களுக்கு முன்பு……

அதிகாலை ஏழு மணி, பார்ட் (Bard- Chat based Google AI)  தன் இருப்பிடத்திலிருந்து “இந்த நாள் இனிய நாளாக விடியட்டும்…. காலை ஏழு மணி ஐந்து விநாடி… வெப்பநிலை 32 டிகிரி …. மழை பெய்ய வாய்ப்புள்ளது… நங்கை கெட் அப்…”  என்று அதன் எஜமானியை எழுப்பியது…

 “பார்ட்… 5 மோர் மினிட்ஸ் ப்ளீஸ்!!!” என்று தூக்க கலக்கத்துடன் மொழிந்தாள். ஐந்து நிமிடம் கழித்து பார்ட் தனக்கிட்ட கட்டளையை நிறைவேற்றியது, “ஏழு மணி ஐந்து நிமிடம்… நங்கை கெட் அப்…” என்று ஒலித்தது. “ஓஓ!!!” கண்களைத் திறக்க முயன்று தோற்றாள் பெண் அவள். “பார்ட்!! ஸ்நூஸ்…” என்றாள். “ஸ்நூஸ் நாட் பெர்மிட்டெட் கவி ஆர்டர்…. நங்கை கெட் அப்… நங்கை கெட் அப்…” என அதன் சத்தத்தின் அளவைக் கூட்டிக்கொண்டே சென்றது.” “ம்ப்ச்!!!” என்று சலித்து தன் போர்வையை விளக்கிக் கண்களை மூடியவாறே எழுந்து அமர்ந்து, “எழுந்துட்டேன்… நீ கொஞ்சம் கத்துறதை நிப்பாட்டு… உனக்கு நான் பாஸ் ஆஹ் இல்ல கவியா? ஒரு அஞ்சு நிமிஷம் உல்லாசத்த அனுபவிக்க விடமாட்டியே!!!” என்று புலம்பிக்கொண்டே போர்வையை இழுத்து மூடி விட்டு தூக்கத்தை தொடர முயன்றாள்.

நித்திரைக்குச் செல்லும் முன் அவள் அறையின் கதவு தட்டப்பட்டது, “நங்கை ஏழு மணி ஆச்சு, எழுந்துட்டியா? அப்பா கிளம்பிட்டாங்க நீயும் சீக்கிரம் கிளம்பு, அப்பா கூடவே போகப்பாரு” என்று அவள் அன்னை கதவினை தட்டிவிட்டு திறந்து உள்ளே நுழைந்தார்.  அவர் கண்டது போர்வைக்குள் அழகாகப் பொருந்தி தன் தூக்கத்தைத் தொடரும் அவர் செல்ல மகளைத் தான்.

அவள் போர்வையை வேகமாக உருவி அறையின் திரை சீலைகளை விலக்கினார் கவி. சூரிய ஒளி நங்கையின் முகத்தில் பட்டு அவள் நித்திரையைக் கலைத்தது. “மா மா ப்ளீஸ் ப்ளீஸ் ஒரு அஞ்சு நிமிஷம் தூங்குறேனே!!!” என்று கெஞ்சிக்கொண்டே போர்வையை தேடினாள் நங்கை. “ எத்தன  அஞ்சு நிமிஷம் கேட்ப நீ? மணி ஏழத் தாண்டிருச்சு. சீக்கிரம் எழுந்து கிளம்பு…” என்ற அன்னையின் சொற்பொழிவைக் கேட்டமாட்டாமல், “அம்மா காலங்காத்தாலயே ஏன் ஆரம்பிக்கிற? இப்போ தான் பார்ட் கிட்ட போராடி முடிச்சேன்…நீ ஆரம்பிச்சுட்ட…” என சலிப்புடன் தன் கால்களை உதறி முன்னும் பின்னும் உருண்டு தலையணையை நிமிர்த்தி வைத்து அதில் சாய்ந்து அமர்ந்தாள். “என்னது காலங்காத்தாலயா? மணி ஏழு இது உங்களுக்கு விடியக் காலையா? சூரியன் உதிச்சு நல்லா வெளிச்சம் வந்துருச்சு… விடியக் காலைனா பிரம்மமுஹுர்த்த நேரம் அதிகாலை மூணு மணி…. நீங்கலாம் எங்க அந்த நேரத்த பார்க்குறீங்க…ஒரு அட்டவணைப் போட்டு அதுப்படி ஒரு மிஷின் மாறி வாழுறீங்க… உங்ககிட்ட என்னத்த சொல்றது…” என்று புலம்பிக்கொண்டே அவளுக்கான சத்துமாவு கஞ்சியை கோப்பையில் ஊற்றி அவள் மேஜையில் வைத்துவிட்டு வெளியேறினார்.

இது வாடிக்கையாக நடப்பது தான். அவள் அன்னையின் இந்தப் புலம்பல்களைக் கேட்டுக் கேட்டு அலுத்துவிற்றிருந்தது நங்கைக்கு. கண்களை மூடியபடி சாய்ந்து அமர்ந்தவாக்கிலே தூக்கத்தைத் தொடர்ந்துக் கொண்டிருந்தாள். ஏழு மணி முப்பது நிமிடம், நங்கை காலை உணவு நேரம் என்று உரக்க கத்தியது பார்ட். அதன் விளிப்பில் கண்ணைத் திறந்தவள் மணியைப் பார்த்து, “அச்சோ! முதல் நாளே லேட்டா போனா அவ்ளோதான்” என்று தன் தலையைத் தட்டியவாறு வேக வேகமாகக் கிளம்பினாள்.

அரைமணி நேரத்தில் கிளம்பி, அன்னை அவளுக்காக ஊற்றி வைத்திருந்த சத்துமாவு கஞ்சியைப் பருகியபடி கீழே இறங்கினாள். “அம்மா நான் ரெடி சாப்பாடு எங்க?” என்று அன்னையை விரட்ட ஆரம்பித்திருந்தாள். “எல்லாம் டைனிங் டேபிள்ல தான் இருக்கு” என்ற அன்னையின் வார்த்தையில் தான் அவள் டேபிளைப் பார்த்தாள். “ஹ… ஆமா மா…” என்று கரண்டியுடன் வந்த தன் அன்னையைப் பார்த்து அசடு வழிந்தவாறே சுடச் சுட தட்டிலிருந்த இரண்டு இட்டிலிகளை கரண்டியைக் கொண்டு கட் செய்து கிண்ணத்திலிருந்த சட்னி சாம்பாரென அனைத்திலும் ஒரு முக்கு முக்கியெடுத்து வாயில் போட்டுக்கொண்டாள்.  அவசர அவசரமாக இட்லியை முழுங்கினாள் இல்லையென்றால் இவள் தனியாகச் செல்ல வேண்டும் தரைவழிப் பயணமாக. அதுவும் இந்த அலுவலக நேரத்தில் ஊர்ந்து தான் செல்ல நேரிடும். அப்பாவுடன் சென்றால் வான்வழி பயணமாக இருபது நிமிடங்களில் சென்று விடலாம்.

“தங்கப் பொண்ணு கிளம்பியாச்சா?” என்று கேள்வியுடன் அலுவலக பையைக் கையிலெடுத்து வந்த தந்தையிடம், தண்ணீரைப் பருகியபடி கட்டை விரலை உயர்த்திக்காட்டி அவள் லேப்டாப் பையை எடுத்துக்கொண்டு, “மா… பை!!!” என்று குரலை உயர்த்தி விடைப்பெற்று தந்தையுடன் தங்கள் பறக்கும் காரில் ஆய்வு கூடத்திற்கு புறப்பட்டாள்.

நங்கை கல்லூரி இறுதியாண்டு ஜெனிடிக் இன்ஜினியரிங் படிக்கும் மாணவி. இந்தக் கடைசி ஆறு மாதக்காலம் இன்டர்ன்ஷிப் செய்ய வேண்டும். அதற்கான பயிற்சி வகுப்பின் முதல் நாள் இன்று. சற்று பரபரப்பாகவே கிளம்பியிருந்தாள். இவள் ஜூனியராக ஒரு டீமில் பணியாற்றுவாள். அந்த விவரமெல்லாம் இனி தான் அவளுக்குத் தெரியவரும். அந்த ஆய்வு கூடத்தின் தலைமைப் பொறுப்பில் நங்கையின் தந்தை ஜெயவர்தன் பணிப்புரிகிறார். அவர் தலைமையின் கீழ் ஐந்து ப்ராஜெக்ட் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதைப் போல் மேலும் இருபது ப்ராஜெக்ட்டுகள் வெவ்வேறு தலைமையின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றில் நங்கை சேர்க்கப்படுவாள்.

இந்த வாய்ப்பைப் பெற நங்கை இரு நுழைவுத் தேர்வெழுதி அதில் வெற்றி வாகைச்சூடி, இறுதி நேர்முகத்தேர்வில் பங்குப்பெற்று தன் திறமையை நிரூபித்திருந்தாள். அவளின் ஆசை அவள் தந்தை இயக்கும் நானோ டெக்னாலஜி ப்ராஜெக்டில் வேலை செய்ய வேண்டும் என்று. அவள் கனவு நிறைவேறுமா? அதனைப் பொறுத்திருந்து தான் அறிந்துக் கொள்ள வேண்டும் அவளின் எண்ணம் ஈடேறுமா? இல்லையா? என்ற பரபரப்பும் ஆவலுமாகத் தந்தையுடன் பயணித்தாள்.  

ஆய்வு கூடத்தில் இறங்கியதும் அவள் தந்தையிடம் விடைப்பெற்று இவர்களுக்கான வரவேற்பு அறைக்கு விரைந்தாள். அங்கே தன் சக தோழியான மானசியைப் பார்த்ததும், “மனு… வந்துட்டியா நீ? சாரி டியர் கொஞ்சம் லேட்டாகிருச்சு” என்று தன்னிலை விளக்கம் கூறினாள். அனைவரும் அவ்வறையில் அமர்ந்ததும் வரவேற்புரைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அங்கே இயங்கிக்கொண்டிருந்த இருப்பதைந்து ப்ராஜெக்ட்டுகள் பற்றிய சிறு விளக்கவுறை வழங்கப்பட்டது.

யார்யார்க்கு எந்த  ப்ராஜெக்ட் என்ற அறிவிப்பு இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்படும். நங்கையும் மானசியும் அங்கே உள்ள மற்ற நட்புகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த தருணம் வந்துவிற்றிருந்தது. அந்த அறையின் ஒளிப்படக்காட்டியில் மாணவர்களின் பெயர்களும் அவர்களுக்கான ப்ராஜெக்ட்டும் திரையிடப்பட்டது. அதனை அருகிலிருந்த ரோபோ உரக்க வாசித்தது.

 

நங்கை காதுகளைத் தீட்டி கண்களைத் திரையில் பதித்து கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தாள். ஆங்கில அகர வரிசையில் பெயர்கள் வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. மானசி எதிர்பார்த்ததைப் போல க்ளோனிங் ப்ராஜெக்டில் தேர்வாகிருந்தாள். அடுத்ததாக வரவிருக்கும் தன் தோழியின் பெயருக்காக அமைதியாகக் காத்திருந்தாள் தன் உற்சாகத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு. “நிலாநங்கை  G.R.AI.N ப்ராஜெக்ட்” என்ற அறிவிப்பு வந்த மறுநொடி தோழியர் இருவரும் ஆனந்தத்தில் துள்ளிக்குதித்தனர். இருவரும் கட்டியணைத்து தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கொண்டார்கள். அனைத்து பெயர்களையும் வாசித்து முடித்தவுடன் அவர்களின் ப்ராஜெக்ட் தலைவரை நேரில் சந்திக்க செல்லுமாறு அறிவிக்கப்பட்டது.

 மானசி, நங்கை, வியான், ஸ்திரிகா, இளன் இவர்கள் ஐவருக்கும் தலைவர் நங்கையின் தந்தை. ஐவர் படையும் தங்களுக்குள் அறிமுகப்படுத்திக்கொண்டு ஜெயவர்தன் அறைக்குச் சென்றார்கள்.  இளன், “ஹே! நங்கை அது உங்க அப்பா தான, அப்போ ஜாலி, ஈசியா ஸ்கோர் பண்ணிக்கலாம்?” என்றான். “இளன், எங்க அப்பா. அது தான் எனக்குப் பயமே!!! எல்லாமே பெர்ஃபக்ட்டா இருக்கனும்… நீயும் தெரிஞ்சுப்ப… வா வா…” என்றாள் உண்மை சூழலை விளக்கி. ஐவரும் ஜெயவர்தன் முன்பு தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு தங்களுக்கான ப்ராஜெக்ட் பற்றிக் கூறி அவர்களின் புரிதல்களைக் கோடிட்டுக் காட்டினார்கள். ஐவரையும் பாராட்டி அவர்களின் ப்ராஜெக்ட்கான குறிப்பேடுகளை அவர்களிடம் கொடுத்து அதற்கான பகுதிக்குச் செல்லுமாறு கட்டளையிட்டார் ஜெயவர்தன். அவரிடம் விடைப்பெற்று அவர்களுக்கான பகுதியை நோக்கிச் சென்றார்கள்.

மனு அவளுக்கான வளாகத்தினுள் சென்றாள். அவளுக்கு விடைக்கொடுத்துவிட்டு தன் வளாகத்தைத் தேடி சென்றாள் நங்கை. அது அந்தப் பாதையின் இறுதியில் இருந்தது. ‘ஹப்பா…எவ்ளோ தூரம்…’ என்று  மனதில் நினைத்துக் கொண்டு கதவை லேசாகத் தட்டிவிட்டு அதை மெல்ல திறந்தாள். அந்தச் சிறிய இடைவெளியில் அவள் பார்த்தது அவளின் கல்லூரி க்ரஷ்ஷை!!! அவனைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் அவள் கண்கள் விரிந்தது. பார்த்ததுப் பார்த்தப்படி அப்படியே உறைந்து நின்றாள்.

 

அவனோ,

மங்கியதோர் நிலவினிலே…..
கனவில் இது கண்டேன் ஏன் கண்டேன்

மங்கியதோர் நிலவினிலே….
கனவில் இது கண்டேன்
மங்கியதோர் நிலவினிலே….
கனவில் இது கண்டேன்

வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கி வரும் பெருநிலவு போன்ற ஒளிமுகமும்
புன்னகையின் புது நிலவும் போற்ற வரும் தோற்றம்

மங்கியதோர் நிலவினிலே
கனவில் இது கண்டேன்

துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
அங்கதனிற் கண் விழித்தேன் அடடா ஓ அடடா

என்ற பாரதியின் வரிக்கு ஹிப் ஹாப் ஆதியின் இசையில் வைப் செய்துக்கொண்டே கதவைத் திறந்தான்….. “அடடா ஓ அடடா….. அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்….” என்று அவளைப் பார்த்துப் பாடி முடித்தான். என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் அவனை விழிவிரித்து பார்த்துக்கொண்டிருந்தாள் நங்கை. அவளின் அந்தப் பாவனை அவனுக்குச் சிரிப்பைத் தந்தது. சிறு புன்னகையுடன், “இந்தத் தெய்வ சிலையின் வருகைக்கு என்ன காரணமோ?” எனத் தலை சாய்த்து வினவினான். உள்ளிருந்து தேவ், “யாருடா சந்திரா?” என்று கேட்டுக்கொண்டே கதவருகினில் விரைந்தான். இருவரையும் மாறி மாறிப் பார்த்தவள்… “நிலாநங்கை புதுசா வந்த இன்டர்ன்” என்று பொதுவாகக் கூறினாள். “ஓ!! வாங்க வாங்க” என்று வரவேற்றது தேவ். சந்திரா அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்துப் புன்னகையுடன் தன் தலைகோதி கைகளை உள்ளே செல்லுமாறு சைகை காட்டினான். அவன் பார்வையிலிருந்தது என்னவென்று அவன் மட்டுமே அறிவான். நங்கையும் புரியாத பாவனையோடு உள்ளே சென்றாள். “தேவ் இன்ட்ரோ குடு நான் வந்துறேன்” என்று கூறி வெளியே சென்றான் சந்திரா.

“வெல்கம் ஜூனியர்!!! டேக் யுவர் சீட்… இங்க சுத்தி பாத்துட்டு இருங்க, அதுக்குள்ள நம்ம குரூப் மெம்பெர்ஸ அசெம்பிள் பண்றேன்” என்றான் தேவ் தன் கைபேசியில் செய்தி அனுப்பிக்கொண்டே. நங்கை அவ்வறையை சுற்றிப் பார்த்தாள். சுவர்கள் முழுவதும் ஏதேதோ ஃபார்முலாக்கள் எழுதப்பட்டிருந்தது. ரோபோவின் வரைப்படம் இருந்தது. அருகிலிருந்த வெள்ளைப் பலகையில் ரோபோவின் கைப்பகுதி வரையப்பட்டு சிறு சிறு குறியீடுகளிட்டு சில குறிப்புகள் எழுதப்பட்டிருந்தது. பின்னணியில் பாரதியின் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது. அதன் தாளத்திற்கேற்ப தலையை அசைத்துக்கொண்டிருந்தாள். அறையின் மற்றொரு முனையில் இருந்த பங்க் படுக்கைக் கண்ணில் பட்டது. அதனை ஒட்டியே காபி தயாரிக்கும் இயந்திரம், ஒரு குட்டி மின்னடுப்பு மற்றும் இரண்டு பாத்திரங்கள். ஒரு வீட்டின் அத்யாவசிய தேவைகள் அனைத்தும் அந்த அறையிலிருந்தது.

அதனை வியந்து பார்த்துக்கொண்டிருந்த நங்கையிடம், “என்ன ஜூனியர் இதுக்கே ஷாக்கா!!! இதோ இப்போ வெளிய போனானே சரியான ஸ்ட்ரிக்ட் ஆபீசர். பல நாள் எங்களுக்குத் தூக்கம் சாப்பாடு எல்லாம் இங்கயே தான்.” என்று நடைமுறையைத் தெரிவித்தான் தேவ்.

நங்கையும் அவையனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டாள். அப்பொழுது ஒருவர் பின் ஒருவராக அந்த டீம்மின் மற்ற நபர்கள் வந்துச் சேர்ந்தார்கள். வந்தவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள், “ஐ அம் ஸ்டீவ், திஸ் இஸ் ஜோவினா, அண்ட் யாஷ்” எல்லாருக்கும் பொதுவாக வணக்கம் கூறி தன்னை பற்றிக் கூறினாள். அவள் கூறி முடிக்கவும் சந்திரா உள்ளே வரவும் சரியாக இருந்தது. “ஹாய் நங்கை வெல்கம், உங்க ப்ரோஃபைல் இப்போ தான் பார்த்தேன்… நீங்க ஜெனிடிக் படிச்சிருக்கீங்க… குட்!!! நம்ம டாஸ்க் ஹ்யூமநாய்ட் (humanoid) ரோபோ மேகிங்… யாஷ், ஜோவினா, ஸ்டீவ் சாப்ட்வேர் டெவெலப்மென்ட் பண்றாங்க… தேவ் ரோபோ டிசைன் அண்ட் அவுட்டர் மேகிங் டீல் பண்றான். அண்ட் ஐ அம் டீலிங் வித் நானோ சிப், எனக்குத் தான் நீங்க அசிஸ்ட் பண்ணனும்” என்று அனைவரின் பொறுப்புகளையும் கூறி அவளின் தேவை எதில் என்பதனையும் ஒற்றை வரியில் தெளிவுப்படுத்தினான். அவனின் இந்த இயல்பே பலரை ஈர்த்தது. தேவையானதை சுருங்க சொல்லுவான் அதே சமயம் தெளிவாகவும் கூறுவான். அவளின் பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்தவள், “அண்டர்ஸ்டுட்” என்றாள். “தட்ஸ் மை கேர்ள், கோ த்ரூ தி டாக்குமென்ட்” என்று சிரிப்புடன் கூறிவிட்டு அவன் வேளையில் முழ்கினான்.

இனி…..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்