Loading

    லேண்டேரில் அய்வகத்தைத் தொடர்புக்கொண்டு இங்குள்ள நிலையை விளக்கினார்கள். வசு குறிப்பிட்டதைப் போன்று நங்கையைத் தேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நங்கைக்கு என்னானது என்று தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்துடன் லேண்டேரிலிருந்து மெயின் ஸ்டேஷனுக்கு கிளம்பினார்கள் ஐவரும்.

  அவர்கள் திரும்புகையில் ச்சா ஹர்ஷாவை நெருங்கி அவனிடம், “நீங்களே ஸ்டேஷன்ல தொலைதொடர்பை தடை செய்திருக்கிறதா சொன்னீங்களே உண்மையா?” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் ரகசியமாய் வினவினான். ஹர்ஷா திரும்பி வசுவைப் பார்த்தான். இதை கவனித்த ச்சா ச்சுவிற்கு செய்கை செய்தான். ச்சு வசுவிடம் சென்று, அவன் கவனத்தை தன் பக்கமாக வைத்துக்கொண்டது.

ஹர்ஷாவிடம், “ச்சு பார்த்துப்பான் நீங்க தைரியமா சொல்லுங்க” என்று ஊக்கப்படுத்தினான் ச்சா. ஹர்ஷாவும் தலையை மெல்ல அசைத்து ரகசியம் பேசத் தொடங்கினான், “எஸ் மிஸ்டர் ச்சா நான் தான் தடை செஞ்சேன். பட் ஈஸியா ரீஸ்டோர்  பண்ணிக்கலாம், ஆனா நானே எக்ஸ்பெக்ட் பண்ணாதது அங்க போகுறதுக்கான வழி சேதாரமாகிருக்குமிங்கறது. அன்னைக்கு நடந்த கலவரத்த நெனைச்சா இன்னும் பயமா தான் இருக்கு. நங்கைக்கு என்ன ஆச்சோனு கவலையா இருக்கு.” என்று அவன் வருத்தத்துடன் தெரிவித்தான்.

“ஓஹ்!!! என்ன கலவரம்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் ச்சா. ஹர்ஷாவும் வசுவின் கவனம் இவன் பக்கம் இல்லை என்பதை உருதி செய்துக்கொண்டு மேலும் விவரங்களைக் கூறினான், “வசுக்கு நங்கை மேல ஒரு இண்டரெஸ்ட் ஆனா நங்கை அதைக் கண்டுக்கவேயில்லை, வசு எவ்ளோ ட்ரை பண்ணியும் அவள் பொருட்படுத்தவே இல்லை. அதுல கொஞ்சம் வருத்தம் வசுக்கு. அவள தனியா லேப்ல அடிக்கடி பார்க்கப்போனான். எனக்கு என்னமோ தப்பா தெரிஞ்சது. அதுனால நங்கைகிட்ட கேட்டேன். அவ ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டா. நானும் அப்புறம் பெருசா எடுத்துக்கல.” என்று நிறுத்தினான்.

“ஹ்ம்ம் அப்பறம் என்ன ஆச்சு?” என்றான் கதை கேட்கும் பாவனையுடன் ச்சா. ஹர்ஷா முன்னே செல்பவர்களைப் பார்த்து மௌனம் காத்தான். வசு, ச்சு மற்றும் நிலா முன்னே சென்றுக் கொண்டிருந்தார்கள்.  “ச்சு அவங்கள பார்த்துப்பான் நாம பேசுற ரேடியோவேவ் அவங்களுக்கு கேட்காது. ஜாம்மர் போட்டுட்டான் ச்சு. ரொம்ப யோசிக்க தேவையில்லை. இந்த டிஸ்டன்ஸ்ல போனா நமக்குக் கேட்கும். அவங்க கிட்ட போயிட்டா நம்மளுக்கும் ஒன்னும் கேட்காது. தைரியமா சொல்லு.” என்று நம்பிக்கையூட்டினான் ச்சா.

“அப்போ தான் அந்தச் சம்பவம் நடந்துச்சு” என்றான் ஹர்ஷா. “என்ன சம்பவம்?” கேள்வியாய் கேட்டான் ச்சா. தன் தொண்டைக்குழி ஏற இறங்க வசுவை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு மெல்ல அவன் இதழ்களைப் பிரித்தான் ஹர்ஷா, “அது அன்னைக்கு வசுக்கும் நங்கைக்கும் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுச்சு…” “என்ன வாக்குவாதம்?” என்று அவனை இடையிட்டான். “மிஸ்டர் ச்சா இப்படி கூடக் கூடக் கேள்வி கேட்டா எனக்கு ஃப்லொவ் வராது…. இப்போ நான் சொல்லவா வேண்டாமா …” என்றான் கடுப்புடன் ஹர்ஷா.

“ஓகே… ஓகே… கூல்…. யூ ப்ரோசீட்…” என்று தன் கைகளை ஆட்டிச் சமாதானம் செய்தான் ச்சா. ஒரு நீண்ட பெருமூச்சுடன் தான் கூற வந்ததை சொல்லத் தொடங்கினான் ஹர்ஷா, “அன்னைக்கு தான் நங்கை உருவாக்குன க்ளோன் டெஸ்டிங் நடந்துச்சு… அதுவரைக்கு அவ உருவாக்குன க்ளோன்ல எதாவது ஒரு பிரச்சனை இருந்துச்சு. தட் வாஸ் அவர் டி-டே. ஒரு மூணு க்ளோன் கரெக்டா வேளை செஞ்சது. அங்க தான் ப்ராப்லம். நங்கை எல்லா க்ளோனையும் அவள போல உருவாக்கிருந்தா, இதுல தான் வசுக்கும் நங்கைக்கும் வாக்குவாதம் ஸ்டார்ட் ஆச்சு.” என்று இடைவெளிவிட்டான் ஹர்ஷா…

 “ஏன் அப்படி……?” என்று ச்சா கேட்டு முடிப்பதற்குள்… “அட கொஞ்சம் பொறுமை மிஸ்டர் ச்சா… சொல்லிட்டு தான இருக்கேன்… சொல்றேன்… சொல்றேன்…  ஏன் அப்படினா எல்லாமே நங்கை மாறி இருக்குறதுனால ஒரிஜினல் நங்கையை ஐடென்டிஃபயி பண்ண கஷ்டம்னு ஆரம்பிச்சு… அப்புறம் அவங்க பர்சனல் சண்டையாகிருச்சு” என்று சொல்லிவிட்டு ச்சாவைப் பார்த்தான் ஹர்ஷா.

அவனை நம்பாத பாவனையுடன்  தன் தலையை உலுக்கினான் ச்சா. ஹர்ஷா மீண்டும், “அது… அது வந்து எல்லாமே நங்கையா இருக்குறதுனால ஃபுல் கிரெடிட்ஸ் அவளுக்குத் தான் போகும்னு வசு நினைக்க ஆரம்பிச்சுட்டான்” என்றான் ஹர்ஷா.

அவனை ஏற இறங்க பார்த்தான் ச்சா… “அதுலாம் இருக்கட்டும் நீ எதுக்கு தொலைதொடர்பை தடை செஞ்ச?” என்று கச்சிதமாக அவனை மடக்கினான். ஹர்ஷா சற்று தயங்கி, “எங்க அவங்க சண்டை ஆய்வகத்துக்கு தெரிஞ்சு மிஷன்ன அபார்ட் பண்ண சொல்லிடுவாங்கலோனு தடை செஞ்சேன். அவங்க ஆய்வகத்த தான் அணுகிறதா பேசிகிட்டாங்க ஒரு முடிவுக்கு வர்ற” என்று நிறுத்தி நிதானமாகக் கூறிவிட்டு, “நான் பெரிய லட்சியத்தோட இங்க வந்துருக்கேன் இவங்களோட சண்டைக்காக நான் என் ட்ரீம்ம விட்டுக்கொடுக்க முடியாது அதான் அப்படி செஞ்சேன்” என்று கோவமாகக் கூறினான்.

“அப்படி என்ன ட்ரீம் உன்னோடது, நீ எவ்ளோ பெரிய பத்தியக்காரதனத்த செஞ்சுருக்கனு தெரியுமா…நீ தான் இந்த வேலைய செஞ்சன்னு சொன்னா உனக்கு ஜெயில் கண்ஃபார்ம்” என்று அதட்டலாகக் கூறினான் ச்சா.

“ஆமா ஆமா தெரியும் மிஸ்டர் ச்சா ப்ளீஸ் என்ன சேவ் பண்ணுங்க… திரும்பத் தொலைதொடர்ப இணைச்சுரலாம்னு தான் செஞ்சேன் பட் இப்படி ஆகும்னு நினைக்கல” என்று வருத்தத்துடன் கூறினான்.

“வீ டிட்ன்ட் கெஸ்… விண்கல் மழை பொழியும்னு. அதனால் ஸ்டேஷன்க்கு பாதிப்பு வரும்னு. மேட்டர் ஆப் செகண்ட்ஸ்ல நடந்துருச்சு…இதோ முன்ன போறளே இவ கூட அன்னைக்கு நடந்த விபத்துல தான் ஸ்லீப் பாட்ல இருந்து வெளிய வந்தா. நான் தான் அன்னைக்கு அவள காப்பாத்துனேன்.  ஸ்டேஷன் விட்டு வெளிய போனதும் ஆக்சிஜன்னுக்கு தவிச்சா. அவள உள்ள இழுத்துட்டு வந்தேன். அப்பறம் அவளுக்கு ட்ரீட்மென்ட் குடுத்து காப்பாத்திட்டோம்.” என்றான்.

“ஓஹ்!” என்று திரும்பி அவளை ஒரு முறை பார்த்துக்கொண்டான் ச்சா. “நீங்க ஏன் ரஷ்யன்ல பேசுனீங்க ஃபர்ஸ்ட்?” என்று தன் நீண்ட நேர சந்தேகத்தைக் கேட்டான் ச்சா.

 “அது ஒரு சின்னக் கணிப்பு, எங்களால நம்ம ஆய்வகத்த ரீச் பண்ண முடியல. ரஷ்யா இப்போ மேன் மிஷன் அனுப்புறதா எங்க நோட்ஸ்ல இருந்துச்சு. சோ, சிக்னல் குடுத்து ட்ரை பண்ணி பார்த்தோம்… அந்தச் சமயத்துல தான் உங்கக் கிட்டயிருந்து சிக்னல் வந்துச்சு… நீங்க வருவீங்கனு எதிர்பாக்கல” என்று ஒரு மாதிரி குரலில் கூறினான்.

“அப்போ வேற யாரையோ எதிர்பார்த்துருப்பீங்க போல?” என்றான் ச்சா ஏளன சிரிப்புடன். “அப்படியில்ல நீங்க வந்தது சர்ப்ரைஸ் எங்களுக்கு, அத தான் அப்படி சொன்னேன்.” என்று விளக்கினான் ஹர்ஷா.

“ஓகே… ஃபர்ஸ்ட் எங்கள பார்த்தப்ப ஏதோ அவங்க ரேடார்க்குள்ள போயிட்டா… அப்படின்னு நீங்கச் சொன்னீங்களே” என்று கூறி நிறுத்தி அவனைப் பார்த்தான் ச்சா.

“அது வசுவுக்கு பயந்து சொன்னேன். நங்கை காணாம போனதுல எனக்கும் பங்கு இருக்குனு சந்தேகப்படுறான். அதனால எல்லாத்தையும் அவன் கண்ட்ரோல்ல வச்சுருக்கான். எங்க நான் தான் இந்தத் தொலைத்தொடர்பை தடை செய்ததா தெரிஞ்சா, ஆய்வகத்துக்கு தெரியப்படுத்திருவானோன்னு ஒரு பயம். அதான் அப்படி சொன்னேன்.” என்று அவன் பயத்தைக் கூறினான்.

“சரி! இப்போ என்கிட்ட சொல்றியே நான் வெளிய சொல்லிட்டா?” என்றான் ச்சா. “மிஸ்டர் ச்சா….” என அவன் அதிர்ந்து கத்தும் நேரம் ஒரு விண்கல் அவர்களை உரசிச் சென்றது. என்னவென்று அவர்கள் சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்த விண்கல் விழத்தொடங்கியது. அவர்கள் ஐவரும் என்னவென்று உணர்வதற்குள் விண்கல் மழை பொழியத் தொடங்கியது. அவர்கள் தங்களைப் பாதுகாக்க மிகவும் சிரம்மப்பட்டனர். ஒன்றிலிருந்து தப்பி அந்தப் பக்கம் சென்றால் மற்றொன்று அப்பக்கம் அவர்களை நோக்கி வந்தது.

 அந்நேரம் என்ன செய்வதென்று ஏதும் புரியவில்லை அவர்களுக்கு. ச்சு ஜாம்மரை நிறுத்திவிட்டு, “மிஸ்டர் ச்சா என்ன பண்ணனும்? இந்த விண்கல் மழை நீடிக்கும் போல இருக்கு நாம பாதுகாப்பான இடத்துக்குப் போகனும்” என்றது. “ஆமா ச்சு. ஹர்ஷா இங்க பக்கதுல எதாவது மலைபோல மேடு இருக்கா?” எனக் கேட்டான் ச்சா. “இருக்கு இருக்கு கொஞ்சம் தூரம் தள்ளி. எனக்கு இடப்பக்கம் ஒரு மேடு இருக்கு” என்றான் ஹர்ஷா. “வலப்பக்கமும் இருக்கு ச்சா, சின்ன மேடுகள் தான்” என்று கூடுதல் தகவல் கொடுத்தான் வசு.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு பெரிய விண்கல் நிலாவை நோக்கி வந்தது. அது அவளைத் தாக்காமல் இருக்க அவளைப் பின்னுக்கு இழுத்தான் ச்சா. பின்னுக்கு இழுத்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தாள் நிலா. அவளைச் சற்றென்று கைபிடித்து தூக்கியது ச்சு.  நிலாவை இழுத்த வேகத்தில் சற்று தடுமாறிய ச்சாவின் இடது தோள்பட்டையை உரசிச் சென்றது அந்த விண்கல். அதன் வெப்பம் அவன் உடையைத் தாண்டி அவனது தோளில் தீக் காயத்தை ஏற்படுத்தியது.  ச்சா அதன் வலியில் முனங்கினான். அவன் நிலைப் பெறுவதற்குள், வசு அவனைக் கிழே தள்ளிவிட்டு எதிர்ப்புறமாகப் பறந்தான். ஹர்ஷா இவர்களுக்கு முன்பாகவே அவனின் இடப்பக்கத்தை நோக்கிச் சென்றுவிட்டான். கீழே விழயிருந்த ச்சாவை, ச்சு படகுபோல் உருமாறி தாங்கியது. ச்சாவை சுமந்து கொண்டு நிலாவை பின் தொடர்ந்துச்  சென்றது.

 நிலா விண்கற்கள் தன் மீது படாதவாறு குனிந்து சாய்ந்து வலப்பக்கம் இடப்பக்கமென வளைந்து நெளிந்து வேகமாக அந்த மேட்டிற்கு செல்ல எத்தனித்தாள். ச்சுவும் அவளைத் தொடர்ந்து மேலே கீழேயென மாறி மாறிப் பறந்தது. எனினும் சில விண்கற்கள் ச்சுவை சேதப்படுத்தியது. ஒரு வழியாக அந்த மலை போன்ற மேட்டிற்கு சென்று ஒளிந்துக் கொண்டார்கள் மூவரும். ச்சு மெல்ல ச்சாவை கீழே படுக்க வைத்தது. ச்சு மனிதனை போன்று உருமாறியது

  ச்சாவின் காயத்திற்கு மருந்திட காயத்தின் ஆழத்தை ஆராய்ந்தது. அதன் ஆழம் அதிகமாக இருந்தது. இன்ஃபெக்ஷன் ஆகாமல் இருக்க ஊசிப் போட வேண்டும் எனக் குறித்துக்கொண்டது. நிலாவையும் ஆராய்ந்தது ச்சு

 நிலாவிற்கும் ஆங்காங்கே சில சிராய்ப்புகள் இருந்தது. ச்சு தன்னிடமுள்ள முதலுதவி பெட்டியில் உள்ளவற்றை வைத்து ச்சாவின் இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்திட்டு பிளாஸ்த்ரி போன்றொரு கட்டு கட்டியது. வலி தெரியாமல் இருக்க அவனுக்கு ஊசி போட்டது. பின் நிலாவிற்கும் முதலுதவிகளைச் செய்தது. நிலாவும் ச்சுவும்  ச்சாவின் அருகில் சென்று அவன் முகத்தை உற்றுப் பார்த்தார்கள். ச்சா முனங்களுடன் கண்ணை சிறிதாகத் திறக்க முயன்றான். அவன் கண்களில் நிலாவின் முகம் மங்கலாகத் தெரிந்தது… அது அவன் நினைவலைகளைப் பின்னோக்கியிழுத்து சென்றது. அவன் நிலாவின் சந்துவாக இருந்த சமயம்… அழகிய வெள்ளை உடையில் அந்த நிலவுக்கு நிகரான அழகுடன், அவளின் மலர்ந்த முகத்தில் பூத்த இளநகையுடன் அவன் முன் சிறு கேக் துண்டை நீட்டியபடி நின்ற நிலாநங்கையின் தோற்றம் அவன் கண்முன்னே வந்தது. அந்தச் சிரிப்பை தன் எதிரில் இருந்த நிலாவிடம் தேடித் தோற்றான்… அவளின் வார்த்தைகள் செவியில் தேனூட்டியது… ‘சந்து வேக் அப்…..’ அந்த நினைவுகளுடன் அவன் நினைவுத் தப்பியது.

இனி….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்