தங்கள் சிக்னலுக்கு பதில் சிக்னல் கிடைத்ததும், ச்சா மைக்கைத் திருப்பி “ஹலோ” என்றான். எதிர் முனையிலிருந்து “ஜ்ட்ரவ்ச்த்வுய்டே” என்று கேட்டது. ச்சா குழப்பத்துடன் என்ன சொல்லுவது என்று விழித்துக்கொண்டிருந்தான். ச்சு மைக்கைத் தன்னகப்படுத்தி “ஜ்ட்ரவ்ச்த்வுய்டே, மை ஸி இந்திய்” என்றது. மறுமுனையிலிருந்து ஏதோ கூறினார்கள் அதற்க்கு ச்சு, “த த” என்றது. மைக்கை வைத்து விட்டுத் திரும்பிய ச்சுவிடம்,
“என்னடா ச்சு என்னமோ பேசுற? யாரு அது? என்ன விவரம்?” என்று கேட்டான் ச்சா. “மிஸ்டர் ச்சா அது ரஷ்யன் லாங்குவேஜ், நம்ம ஸ்பேஸ் ஸ்டேஷன் தான்… நம்மள கூட்டிட்டு போக ஒருத்தர் வருவாங்க அதுவரைக்கும் நாம இங்க வெயிட் பண்ணனும்” என்று கூறியது ச்சு.
இவர்களை அழைத்துச் செல்லவிருக்கும் நபருக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். ஆறு மணி நேரம் காத்திருப்புக்குப் பின் தங்கள் இருப்பிடத்தினுள் இருந்து வெளியே பார்த்தனர். இப்பொழுது அவர்கள் கண்களுக்குத் தொலைவில் இருந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் தெரிந்தது. ச்சா அதனைச் சுட்டிக் காட்டினான். இருவரும் தங்களது விண்வெளி உடை அணிந்து தயார் நிலையில் இருந்தனர்.
இவர்கள் இருவருக்கும் மைக்கிலிருந்து செய்தி வந்ததும், இருவரும் லேண்டரிலிருந்து வெளியே இறங்கினார்கள். ச்சா தனது கால்களை நிலவில் பதித்தான் தன் கனவுகளுடன். தூரத்தில் இவர்களை நோக்கி யாரோ வருவது தெரிந்தது.
ச்சாவும், ச்சுவும் அவரை நோக்கிச் சென்றனர். வருவது யார் என்ற யூகங்கள் இல்லை. இது ஆபத்தை விளைவிக்குமா அல்லது அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுமா? எதுவும் புலப்படவில்லை. எனினும் ச்சா துணிந்து தன் பணியை மேற்கொண்டான்.
அந்த நபரின் அருகில் சென்றதும், ச்சா “தமிழ்ல பேசலாமா? தெரியுமா? என்று கேட்டான். அந்த நபர் தெரியும் என்று பதிலளித்தார். பின் அவன் விசாரணையைத் தொடங்கினான்.
“நீங்க இங்க எப்போ வந்தீங்க? ஏன் ரஷ்யன்ல பேசுனீங்க? லாஸ்ட் மிஷ்ன்ல வந்த மூணு பேர்ல ஒருத்தரா?” அந்த நபர் ச்சாவிடம், “நா யாருன்னு இப்போ சொல்ல முடியாது, உங்க ஹெல்ப்காகத் தான் இவ்ளோ நாள் வெயிட் பண்ணிட்டு இருந்தோம். இங்க இருக்குற ஸ்பேஸ் ஸ்டேஷன்ல கம்யூனிகேசன் கட் பண்ணிருக்கோம். இப்போ உங்க கிட்ட இதுக்கு மேல சொல்ல முடியாது. ஸ்டேஷனோட ரேடார் உள்ள போயிட்டா அவங்களுக்கு கேட்டிரும். ஸ்டேஷன் உள்ள போனா உங்களுக்கே புரிஞ்சுரும்” என்று ஏதோ விடுகதைப் போலக் கூறினார்.
ச்சா தன் சிந்தனைகளில் முழ்கினான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ச்சுவிடம், “என்ன டா இவங்க என்னமோ புதிர் போடுறாங்க… அப்படி என்ன சிக்கல் இருக்கு? உள்ள யாருக்கு பயந்து இருக்காங்க? ஒண்ணுமே புரியலையே….. நிலவுக்கு வர்ற ஆசைல நாம ஏதோ பெரிய புதைக்குழில விழுந்துட்டோமோ?” என்று ரகசியமாய் கூறினான் ச்சா.
அந்த நபர் இப்பொழுது இவர்கள் இருவருக்கும் முன்னே சற்று தொலைவில் சென்றார். இதனைக் கவனித்த ச்சாவுக்கு சில கணிப்புகள் இருந்தது. அதனை உறுதி செய்ய வேண்டும் அவன். எப்படி என்ற யோசனையின்போது ச்சு இவனிடம், “மிஸ்டர் ச்சா, சம் ஒன் இஸ் ட்ரையிங் டு ஹேக் மீ” என்றது. ச்சாவிற்கு பொறித்தட்டியது.. தாங்கள் கண்காணிக்கப் படுகின்றோம் என்று உணர்ந்துக்கொண்டான். முன் செல்பவனை முழுதாக நம்ப முடியவில்லை. அவனையும் தன் சந்தேக வட்டதினுள் வைத்துக்கொண்டான்.
ச்சுவிடம் “டேய் நண்பா!! இந்த இடத்தைப் பார்த்தா உனக்கு என்ன ஞாபகம் வருது?” என்று கேட்டான் ச்சா. “அவர் லாஸ்ட் மிஷன் மிஸ்டர் ச்சா” “ஹ்ம்ம் ஹேக்கர்ஸ்கு அதையே கொடுத்திரு” ச்சு தனது கட்டை விரலை உயர்த்தியது.
ச்சா உற்சாகச் சிரிப்புடன், “ஹலோ!!! முன்ன போறவரே!!! இவ்ளோ தூரம் நடக்க விடுறீங்களே!! ஒரு வண்டிய, இல்ல ஜெட் பாக் எதாச்சும் எடுத்துட்டு வந்துருக்கலாம்ல.. என்ன பாஸ் நீங்க விவரம் இல்லாம இருக்கீங்க…” என்று நொடித்துக்கொண்டு அவர் பின்னே சென்றார்கள்.
ச்சா சுற்றிலும் என்ன இருக்கிறது என்று கூர்ந்துக் கவனித்தான். அவர்கள் நிலவில் நிறுவப்பட்டுள்ள நமக்குச் சொந்தமான ஆய்வகத்தினுள் நுழைந்தார்கள்.
ஆய்வகத்தில் எந்தச் செயல்பாடுகளும் நடைமுறையில் இருப்பது போன்று தெரியவில்லை. அனைத்து கணினிகளும் வெற்று திரையினைக் காட்டியது. வியப்புடன் ச்சா தன்னை அழைத்து வந்த நபரிடம், “பாஸ் ஸ்டேஷன் வொர்கிங்ல தான் இருக்கா? நீங்க இன்னும் உங்க பெயர சொல்லல… அப்படி என்ன மர்மம் இருக்கு இங்க… இப்படின்னு நாங்க கிளம்புறப்ப எதுவும் சொல்லலையே… ஏதோ மெசேஜ் வந்துச்சு ரெண்டு வருஷமா காண்டாக்ட்ல இல்ல இப்போ ஏலியன் நடமாட்டம் சஸ்பெக்ட்னு, ஆனா அது மாறி எதும் தெரியலையே…”
ச்சாவின் கேள்விக்கு அந்த நபரிடம் எந்தப் பதிலும் இல்லை. அவர் நேராக உள்ளிருந்த லிப்டில் நுழைந்து இவர்கள் இருவரையும் உள்ளே வருமாறு சைகை செய்தார். ச்சா மற்றும் ச்சு அவரைத் தொடர்ந்து லிப்டினுள் ஏறினார்கள்.
அந்த ஆராய்ச்சி ஆய்வகம் வெளியே ஒரு சிறிய கூடம் போலத் தோற்றமளித்தது. ஆனால் உள்ளே நுழைந்தால் மிகப் பெரிய அடுக்கு மாடி கட்டிடமாகக் காட்சியளித்தது. நிலவின் மேற்பரப்பில் ஒரு தளமும் மற்ற அனைத்து தளங்களும் நிலவின் பாதாளத்தில் அமைக்கப்பெற்றிருந்தது.
அந்த ஆய்வகம் ஒரு க்ரேட்டரின் வெளி பாதையில் நிறுவப்பட்டுள்ளது. லிப்டினுள் இருந்து மற்றொரு பக்கம் க்ரேட்டரின் குழியைக் காண முடிந்தது. லிப்ட் சரியாக ஐந்தாம் தளத்தில் நின்றது. மூவரும் லிப்ட்னிலிருந்து வெளியேறினார்கள்.
இப்போது அந்த நபர், அந்தத் தளத்தில் இருந்த ஒரு அறையின் முன் சென்று தனது கைரேகையைப் பதித்து உள்செல்லும் கதவைத் திறந்தார். ச்சா மற்றும் ச்சு சற்று தயக்கத்துடன் நின்றனர்.
அப்பொழுது உள்ளே இருந்து ஒருவன், “டேய் சந்திரா உன்ன எதிர்பாக்கல நான்” என்று கூறிக்கொண்டே வந்து ச்சாவை இறுக அணைத்தான். ச்சாவும், “வசு நீயும் இந்த மிஷ்னுக்கா வந்துருக்க? உங்க அப்பா நீ ஸ்டேட்ஸ்க்கு போயிருக்கிறதா சொன்னாங்க!!” என்று வியந்து கேட்டான்.
“லாஸ்ட் மினிட் சேஞ்சஸ் சந்திரா.. அது ஒரு பெரிய கதை. அத அப்புறம் சொல்றேன். நீ எதுக்காக இங்க வந்துருக்க?” என்று கேட்டான் வசு.
“ஏன் வந்தனு கேட்கிறியா?” ச்சா சிரிப்புடன் பதில் கேள்வி கேட்டான்.
“நோ நோ அப்படி கேட்கல, இன் ஃபாக்ட் யாராச்சும் வரமாட்டாங்களான்னு வெயிட் பண்ணிட்டு இருந்தோம். இங்க சில பிரச்சனைகள் இருக்கு எங்களுக்கும் ஹெல்ப் தேவைப்படுது. நீ வந்தது நல்லதா போச்சு வொர்க் ஈஸியா முடிஞ்சுரும்” என்று நக்கலுடன் கூறினான் வசு.
ச்சு மெதுவாக ச்சாவின் கையைச் சுரண்டியது, ச்சா திரும்பி என்னவென்று கேட்டு சைகைக் காட்டினான். ச்சு தனது கண்களில் இச்செய்தியை ஒளிபரப்பியது “மிஸ்டர் ச்சா, இவரு நல்லவரா? கெட்டவரா?” ச்சுவின் தலையில் ஒரு குட்டு வைத்து ச்சா, “ரொம்ப ப்ரில்லியன்ட்னு நினைப்பு… ஏதாவது ஆபத்தான சிச்சுவேசன்ல யூஸ் பண்ண சொல்லிக் கொடுத்தா எப்ப யூஸ் பண்ற பாரு.. அவ்ளோ சீன்லாம் இல்ல… வீ வில் ஸீ” என்றான்.
இவர்களின் சம்பாஷனை இங்கே நடைபெற்று கொண்டிருந்த சமயம், வசுவிடம் இவர்களை அழைத்து வந்த நபர், “மேட் நான் என் ஸ்டேஷன் போறேன் நீங்கச் சொன்ன மாதிரி செஞ்சுட்டேன் என்று அங்கே இருந்த கணினியில் எதையோ காட்டிக்கொண்டிருந்தான்.”
ச்சா வருவதை உணர்ந்த வசு “கணினி திரையில் இருந்ததை க்ளோஸ் செய்துவிட்டு சரி நான் அப்புறம் பாக்குறேன்” என்று கூறி விடைக்கொடுத்தான்.
விரைந்து செல்லவிருந்த அந்த நபரை ச்சா, “பாஸ்… என்ன நீங்க… உங்கள பத்தி சொல்லவே இல்லையே” என்று அவரைக் கைப்பிடித்து நிறுத்திக் கேட்டான். அந்த நபர் பதில் உரைப்பதற்க்குள் வசு “இது ஹர்ஷா சந்திரா… இந்த மிஷன்க்கு வந்த இன்னொரு ஆராய்ச்சியாளர்.” என்றான்.
“ஓஹ்!!! ஏன் இப்படி பதட்டமாவே இருக்காரு?” ச்சா சந்தேகத்துடன் கேட்டான். “அது ஒன்னும் இல்ல இங்க நடந்த விபத்தப் பார்த்துக் கொஞ்சம் பயந்துட்டாரு… அதான். நத்திங் எல்ஸ்” வசு பதிலளித்தான்.
“ஓகே ஓகே ஹர்ஷா பாஸ், டோன்ட் வொர்ரி உங்கள சேஃப் பண்ணத்தான் வந்துருக்கேன்.” ச்சா நம்பிக்கையுடன் கூறி ஹர்ஷாவின் கைகளைக் குலுக்கினான்.
ஹர்ஷாவும் இருவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு தன் இருப்பிடத்திற்கு சென்றான். செல்லும் ஹர்ஷாவை உற்று நோக்கினான் ச்சா. பின் வசுவிடம் இங்கே என்ன நடந்தது என்று விசாரிக்க ஆரம்பித்தான்.
வசு நிகழ்வுகளைக் கூற ஆரம்பித்தான், “சந்திரா எர்த் டைம் படி 2 யியர்ஸ் பாக் நிலவுல ஒரு விண்கல் விழுந்துச்சு. அதுவும் நம்ம ஸ்டேஷன் பக்கத்துல தான். அதோட எபக்ட், இங்கே கீழ இருக்குற ரெண்டு ப்ளோரும் அக்செஸ் பண்ண முடியல. சர்வர் எல்லாம் கீழ தான் இருக்கு, அது ஆப்பரேட் பண்ண முடியல. அந்த இன்சிடென்ட் அப்பறம் நாங்களும் நிறைய முயற்சிகள் பண்ணுனோம். பட் எங்களுக்கு ரிசோர்ஸ் பத்தல… மூணு பேரு தான இருக்கோம் … இப்ப தான் நீ வந்துட்டியே நாம சரி செஞ்சுறலாம்.” என்று தன் கூற்றை நிறுத்தினான்.
ச்சா தன் தலையசைத்து ஏற்றுக் கொண்டான். இரு வினாடி இடைவெளியில் “சரி விண்கல் விழுந்து சர்வர் அக்செஸ் போச்சு, உங்க கூட வந்த இன்னொருத்தர் எங்க அவங்கள நான் இன்னும் பாக்கலையே…” என்று கேட்டான்.
“அது தான் சந்திரா நாங்க எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல… அவங்க நங்கை… அவங்கள இப்போ காணோம். இங்க வந்ததுமே ரிசோர்ஸ் நமக்குத் தேவைப்படும்னு சொன்னதே அவங்க தான். அதுக்கான வேலைல தான் ஈடுபட்டிருந்தாங்க. இந்த ஸ்டேஷன் இல்லாம வெளில ஒரு மூணு லேப் பில்ட் பண்ணோம். அவங்க லேப்ல தான் எப்பவுமே இருப்பாங்க.. இந்த விண்கல் விழுந்த அன்னையிலிருந்து அவங்கள காணோம்.” என்றான் வசு.
“ஓஹ்! அ பெர்சன் இஸ் மிஸ்ஸிங்…. பட் எங்களுக்கு இங்க இருந்து தான் ஏலியன் நடமாட்டம் இருக்குனு மெசேஜ் வந்துச்சு. அது எப்படி சாத்தியம்… வசு நீ சொல்றத வச்சு பார்த்தா இன்னும் இங்க நமக்குக் கம்யூனிகேசன் பிரச்சனை சரியாகல , அப்பறம் எப்படி எங்களுக்கு இன்டிமேஷன் வந்தது… ஒன்னும் புரியலையே!! வீ ஆர் மிஸ்ஸிங் சம்திங்… என்னனு பார்ப்போம்” என்று தீவிர சிந்தனையுடன் கூறினான் ச்சா.
“மிஸ்டர் ச்சா, ஐ நீட் டு ரீசார்ஜ்” என்றது ச்சு. “ஒஹ்! மை பாய்! வசு எனி பாசிபிளிட்டி ஹியர்?” என்று கேட்டான் ச்சா.
“இங்க பண்ண முடியாது சந்திரா, இரு நான் இன்போர்ம் பண்றேன்” என்றுரைத்துவிட்டு, வசு கணினியில் ஏதோ டைப் செய்தான், பிறகு அவர்களை அழைத்துக் கொண்டு முதல் தளத்திற்கு சென்றான்.
சிறு காத்திருப்பிற்கு பிறகு யாரோ வரும் அரவம் கேட்டது.
ச்சா வாயிலை நோக்கித் தனது பார்வையைச் செலுத்தினான். விண்வெளி உடையில் ஒருவர் உள்ளே நுழைந்தார். தலைக்கவசம் அணிந்திருந்ததால் யார் என தெரியவில்லை. ச்சுவின் பேட்டரி டவுன் ஆனதால் அவனிடம் கேட்க முடியவில்லை. அவன் சிந்தனையைத் தடை செய்தது வசுவின் கூற்று.
“சந்திரா நீ இவங்களோட போ. அவங்க காட்டுவாங்க எங்க சார்ஜ் போடனும்னு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நீ இவங்களோட ஒரு ரவுண்டு போயிட்டு வா… அதுக்குள்ள இங்க எல்லாத்தையும் செட் பண்ணிவைக்கிறேன்”
வாசலில் இருந்தவரிடம் “டேக் கேர்” என்று அவசர கதியில் உரைத்துவிட்டு லிப்ட்டை நோக்கிச் சென்றான் வசு .
வந்தவரோ இவர்களைத் தன்பின் வருமாறு சைகை செய்து விட்டுச் சென்றார். வந்தவர் ரோபோ இல்லை, பின்னே யாராக இருக்கக்கூடும் என்ற யோசனையுடன் ச்சா மற்றும் ச்சு பின் தொடர்ந்தனர்.
இவர்கள் சென்ற இடம் ஒரு சிறிய லேப் வகையைச் சார்ந்தது. அதனுள் நுழைந்ததும் தனது ஹெல்மெட்டை நீக்கித் தான் யார் என வெளிக்காட்டினாள்.
அவளைப் பார்த்ததும் ச்சா எவ்வாறு உணர்ந்தானென்று தெரியவில்லை. தனது அதிவேக மூளையின் கட்டளைப்படி செயல்பட துணிந்தான். ஆனால் அவனது பயிற்சி அவனை நிதானத்தில் வைத்தது.
“ஹலோ! நான் ச்சா, இவங்க மை ஃப்ரெண்ட் ச்சு, நீங்க?” என்று தன்னை அறிமுக படுத்திக்கொண்டு அவளை வினவினான். அதற்கு அவள் “நா லூனா” என்று உரைத்துவிட்டு திரும்பிப் பாராமல் சென்றாள். அவள் செயலில் சற்றே கோபமுற்று தன் நண்பனிடம், “என்ன டா ரெஸ்பான்ஸ் சரி இல்லையே!! அவள… ஹே லூனா” என்று சத்தமாக உரைத்தான்.
இவனுடைய சத்தம் கேட்டு அங்கே இருந்த அனைவரும் திரும்பி “எந்த லூனா” என ஒரு சேர கேட்டனர். அனைவரையும் சுற்றிப் பார்த்தவன் திகைத்து நின்றான். லூனா எனத் தன்னை அறிமுக படுத்தியவள் அவனிடம் நெருங்கி நின்று, “இங்க எல்லாரும் லூனா தான், கால் மீ யூசிங் மை ஐடென்டிட்டி, லூனா 145, ஃபாலோவ் மீ ” என்றாள்.
“என்னது லூனா 145 ஆஹ், அப்படி கூப்புட்டு முடிக்கிறதுக்குள்ள நீ நாலு ஸ்டேஷன் தாண்டிப் போயிருவ, சோ, இனிமேல் நீ எனக்கு நிலா பொண்ணு. சரியா நிலா பொண்ணு, இப்போ வா, போலாம். ச்சு ஃபாலோவ் மீ.” என்று கூறிக்கொண்டு முன் சென்றான்.
லூனா ஒரு இடத்தைக் காண்பித்து, “இதுக்குள்ள சார்ஜ் போட்டுக்கோங்க” என்று கூறினாள்.
அவளைப் பார்த்துக்கொண்டே,
“நீ…நீ.. நீ….
மர்லின் மன்றோ குளோனிங்கா
இல்ல ஜெனிஃபர் லோபேஸொட ஸ்கேனிங்கா…
ஒன் டே மட்டும் கேர்ள் ஃப்ரண்டாக வரியா….” என்று பாடினான் ச்சா.
ச்சு தனது ஸ்கேனிங்கை முடித்துவிட்டு, “கேர்ள் ஃப்ரண்டா இருக்கலாம் தப்பில்லை” என்றது. ச்சுவின் பதிலில் ஆச்சரியமுற்று மந்தகாச புன்னகை புரிந்தான் ச்சா.
இவர்களின் பேச்சு புரியாமல் நின்ற லூனா தன் தலையை உலுக்கிக்கொண்டு தனக்கு இட்ட பணியைச் செய்யத் தொடங்கினாள்.
ச்சாவும் தன் நண்பனுக்குத் தீனி போட அறையினுள் நுழைந்தான். அவனுக்கு சில விஷயங்கள் முரண்பாடாகத் தோன்றியது. ச்சுவை ஆப் செய்து சார்ஜ்ஜில் போட்டான். நடந்தவைகளை ஒவ்வொன்றாகத் திரும்பிப் பார்க்கலானான்.
‘முதலில் இவர்கள் ஏன் ரஷ்ய மொழியில் பேச வேண்டும்? வேறு யாரையாவது எதிர்ப்பார்தார்களா?’ பலவாறு யோசனை செய்தாலும் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை அவனுக்கு.
‘ச்சுவை எதற்காக ஹேக் செய்யப் பார்க்கிறார்கள்… ஒரு வேலை என்னுடைய பயண குறிப்பை அறிவதற்காகவா? இல்லை ச்சுவின் திறமையை அறிவதற்கா? அதுவும் இல்லாமல் ச்சுவை அவர்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்லவா?’ இதனைப் பொறுத்திருந்து அறிந்து கொள்ளலாம் என்று எண்ணினான் ச்சா.
மிக முக்கியமாக அவன் கருதியது, வசு, ஹர்ஷா இருவரின் கூற்றிக்கும் உள்ள வித்தியாசம், வசு நிலவின் இயற்கை விதியால் ஆராய்ச்சி கூடத்தில் சேதாரம் என்றான், ஆனால் ஹர்ஷா, அவர்களே தொலைத்தொடர்ப்பை நிறுத்தியவாறு கூறினான். இதில் எது உண்மையென விளங்கவில்லை ச்சாவிற்கு.
இவையனைத்தையும் விட நங்கை, அவனின் பயணத்தின் அடி நாதம். அவளைக் காணவில்லை. இங்கு இருக்கும் அவள் உருவத்தைக் கொண்ட இவர்கள் யார்.. க்ளோன் முறையில் உருவாக்கப்பட்டவர்களா? ஏன்? அவள் எங்குச் சென்றாள்.? என்னானது அவளுக்கு? அனைத்தும் மர்மமாக இருந்தது.
தனது தலையை உலுக்கிக் கொண்டு வெளியே வந்தான். அந்த க்ளோன்களின் செயல்பாட்டை ஆராய்ந்தான். எதுவும் சந்தேகம்கொள்ளும் அளவு இல்லை. மிகச் சாதாரணமான செயல்களே செய்தார்கள். இதிலிருந்து இவர்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்த உருவாக்கப்பட்டவர்கள் எனக் கணித்துக்கொண்டான்.
இந்தக் கூட்டத்தில் தனக்கு அறிமுகமாகிய லூனா 145யை எப்படி கண்டுபிடிப்பது என்று யோசித்தவாறு, நிலா பொண்ணு என்று சத்தமாக அழைத்தான்.
அதில் ஒரு பெண் மட்டும் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவளைப் பார்த்து கண்களைச் சிமிட்டினான். தன் கைகளை நெட்டி முறித்து அவள் அருகில் சென்றான்.
நிலா பொண்ணு நீ எங்க தங்குவ? என்று கேட்டான் ச்சா. அவனை ஏற இறங்க பார்த்தாள் அவள். “எங்க எல்லாருக்கும் மெயின் ஸ்டேஷன்ல தான் ஸ்லீபிங் பாட் இருக்கும் அங்க தான்.” என்று உரைத்தாள்.
“ஓஹ்!! இங்க யாரு இருப்பாங்க?” “இங்க யாரும் தங்க மாட்டோம்… வசு வோட ஆர்டர் சோ அங்க தான்” என்று தெளிவாகக் கூறினாள்.
“ஓகே ஓகே நிலா பொண்ணு. அப்பறம் நிலா எனக்கு இங்க இருக்குற மூணு லேப்பையும் பாக்கணும். அதுக்கு முன்ன நான் லேன்ட் ஆனா லேண்டர்ல இருந்து இன்பார்ம் பண்ணனும் டூ தி டீம் தேர். ஜெட் பாக் இருக்கா? ஷால் வீ கோ டுகேதர்” எனக் கேட்டான் ச்சா.
“வசு அப்ரூவ் பண்ணனும்.” என்றாள் அவள். “யா யா.. வசுவும் ஹர்ஷாவும் ரெண்டு பேரும் தான் வர்றாங்க” என்று கூறும்பொழுது அவள் முக பாவனையைக் கவனித்தான். “அவங்க தான் முக்கியம் பட் உன்ன பத்தியும் நா ரிப்போர்ட் பண்ணனும்” என்று அவளை உற்று நோக்கிக் கூறினான்.
அவள் முகத்தில் கீற்று புன்னகை அரும்பியதோ, அவன் அதை உள்வாங்குவதற்குள் அவளின் முகம் எந்த உணர்ச்சியும் அல்லாத ஜடம் போலக் காட்சியளித்தது.
“ஹ்ம்ம் நிலா ச்சுக்கு கொஞ்சம் ரெஸ்ட் தேவைப்படுது அவன் இங்க இருக்கட்டும் ஆனா செக்யூரிட்டி கன்சர்ன் இருக்கு. எனக்கு அந்த டோர் அக்செஸ் கன்ட்ரோல் மாத்தணும். கேன் ஐ டூ?” என்று கேட்டான்.
நிலாவோ “வசு கன்ட்ரோல் தான் எல்லாம். நீங்க சேஞ்ச் பண்ணனும்னா அவங்க தான் காட்டனும்… எங்களுக்குக் கம்ப்யூட்டர் அக்செஸ் கிடையாது. மானிட்டர்ல வர்ற டிஸ்ப்ளே மெசேஜ்ஜஸ் தான் எங்களுக்குக் கம்மாண்ட்” என்றாள்.
“ஓ…. ஓகே வசு கிட்ட பேசிக்கிறேன்” என்ற ச்சாவிற்கு அனைத்தும் வசுவின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது விளங்கியது.
“நிலா போர் அடிக்குதே என்ன பண்ணலாம்? நா வந்த மிஷன் இவ்ளோ சீக்கரமா முடியும்னு நினைக்கல… இங்க இருந்து உங்கள சேஃப்பா கூட்டிட்டு போகனும்… அவங்க இரண்டு பேருக்கும் ஓகேன்னா உன்ன என்ன பண்ணலாம்னு கேட்டுக்கலாம்.. இன்னைக்கு நைட்டே கிளம்பிருவோம்… சோ… இப்போ நாம கொஞ்சம் டைம் பாஸ் பண்ணலாம்… உன்ன பத்தி சொல்லு… இதுக்கும் வசு ஃபர்மிஷன் குடுக்கனும்னு கதைய ஆரம்பிக்காத” என்று சலிப்புடன் கூறினான்.
நிலா எதுவும் பேசவில்லை. திரும்பி மானிட்டரைப் பார்த்தாள், அதில் எந்த ஒரு செய்தியும் இல்லை. ஆகையால் அவளது பணியான நிலவின் கனிமங்களை வகைப்படுத்தி அதனை பத்திரப்படுத்திக் கொண்டிருந்தாள்.
இவள் எதுவும் பேசமாட்டாள் என்று உணர்ந்து ச்சா தனது ஜாகையை மற்ற க்ளோன்களிடம் இடம் பெயர்த்தான். அவனும் பல்வேறு வழிகளில் பலவிதமாகத் தனது கேள்விக் கணைகளைத் தொடுத்துப் பார்த்தான். ஆனால் விடை என்னவோ பூஜ்ஜியம் தான். அவர்கள் பெயரைத் தவிர, அவர்களின் பணி, வேறு எதுவும் அவனுக்குக் கிட்டவில்லை.
நிலாவிடம் சென்று “இங்க ஜெட் பாக் இருக்கா?” என்று கேட்டான். இருக்கு என்று கூறி ஓர் அறையைக் கட்டினாள் அவள். அந்த அறை மூடியிருந்தது. ஆக இங்கே தன்னால் சுயமாக எதையும் செய்ய இயலாது என்று உணர்ந்துக்கொண்டான். ச்சுவை தனியே விட்டுச் செல்வது சரியல்ல என்று புரிந்துப்போனது அவனுக்கு.
தான் வந்த காரியத்தை நிகழ்த்த அரும்பாடுபட வேண்டும் என்றும் அறிந்துக் கொண்டான். அதற்குத் திட்டங்களை வகுக்க வேண்டும். எங்கிருந்து ஆரம்பிப்பது என்று யோசனை செய்தான். அனைத்து கட்டுப்பாடும் வசுவிடம் தான் , ஆகையால் அவனிடமிருந்து தான் தனது லீலைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று உறுதிப்படுத்திக்கொண்டான் இந்த நிலவின் அரசன். நிலா முகம் என்ற பெயரைக் கொண்ட சந்திரவதன்.
இனி…