இடம்: தமிழக ஆராய்ச்சி தலைமையகம்
அந்தக் கலந்தாய்வு அரங்கத்தில் சலசலப்புக் கூடிக்கொண்டிருந்தது. அனைத்து விஞ்ஞானிகளும் அங்கே குழுமியிருந்தனர். அவர்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் நடுவே நமது நாயகனும் அமர்ந்திருந்தான். அரங்கத்தில் உள்ள திரை உயிர் பெற்றதும் சலசலப்பு அடங்கியது. திரையில் தலைமையகத்தின் செயலாளர் தோன்றி தம் உரையைத் தொடங்கினார்.
“தலைமையகத்தின் வேண்டுகோளுக்கிணங்க இங்கே கூடியிருக்கும் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் என் வணக்கங்கள். அனைவரும் ரெட் அலெர்ட் செய்தி பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதனை விவாதிக்கவே இக்கூட்டம். நமக்குக் கிடைத்துள்ள தகவல் நம்மை அச்சம் கொள்ளச் செய்வதாக இருக்கிறது. நமக்கு வந்துள்ள தகவல் உண்மையெனில் அது மனித இனத்திற்கே பெரும் ஆபத்து. அச்செய்தி உண்மையா இல்லை அயல்நாட்டு சதியா என்ற தெளிவு கிடைக்கவில்லை. ஆறு வருடங்களுக்கு முன்பு நிலவுக்கு நாம் அனுப்பி வைத்த மூன்று விஞ்ஞானிகளின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. நிலவில் தரையிறங்கி நான்கு வருடங்கள் தொடர்ப்பில் இருந்தனர். பின்னர் அவர்களைப் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. நிதி பற்றாக்குறையால் இன்று வரை நம்மால் மற்றொரு விண்கலம் மனிதர்களைக் கொண்டு அனுப்ப முடியவில்லை. ஆனால் நேற்றைய தகவல் நம் முடிவை மறுபரிசீலனைச் செய்ய வைத்துள்ளது.
அனைத்து துறை தலைவர்களுடன் கலந்தாய்வுச் செய்து இம்முடிவினை எடுத்துள்ளோம். அம்முடிவு ‘சூசைடல் ஸ்குவாட் அபரேசன்’ (suicidal squad operation). இத்திட்டத்திற்கு விருப்பமுள்ளவர்களைப் பயிற்சி முகாமிற்கு அழைக்கிறோம். பதினைந்து நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு அதில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே நிலவிற்கு அனுப்பி வைக்கப்படுவார். இதைத் தங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேறு கேள்விகள் ஏதும் இருப்பின் கேட்கலாம்.”
கூட்டத்தில் ஒரு விஞ்ஞானி, “நிலாவிற்குச் செல்லும் விண்வெளி வீரர் எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்?” என்று கேட்டார். செயலாளரின் பதில், “விண்வெளி வீரரின் உடல் பலம் மற்றும் மன வலிமையை அடிப்படையாய்க் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுவார். விண்வெளியில் வாழ, இப்பதினைந்து நாட்களின் பயிற்சியில் எவர் சிறப்பாகச் செயல்படுகிறாரோ அவரைத் தேர்ந்தெடுப்போம்.”
நமது நாயகன் செயலாளரிடம், “தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் ஏதேனும் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டியிருக்குமா?”
செயலாளர் நமது நாயகனை உற்று நோக்கி, “எந்த உடன்படிக்கையிலும் கையெழுத்திட வேண்டாம்” என்று பதிலுரைத்தார். நமது நாயகன் முகத்தில் வெற்றி புன்னகை. அத்துடன் அக்கலந்தாய்வுக் கூட்டம் முடிவுற்றது.
அக்கூட்டத்தில் ஒருவரான சித்திக் என்னும் விஞ்ஞானி, “என்ன மிஸ்டர் ச்சா நீங்க நிலவுப் பயணம் மேற்கொள்ளத் தயார் ஆகிடீங்க போல.” என்று கேட்டார்.
அனைவராலும் ச்சா என்றழைக்கபட்ட சந்திரவதன், “வொய் நாட்?” என்று வெற்றிச் சிரிப்புடன் கூறினான். “ஆல் தி பெஸ்ட் மேட்” என்று வாழ்த்தி விடைப்பெற்றார் சித்திக்.
அந்தப் பதினைந்து நாட்கள் பயிற்சி முகாமில் சந்திரவதனுடன் மேலும் நான்கு வீரர்கள் உடன் பயின்றனர். அப்பயிற்சி முகாமில் பங்கேற்ற ஐவரின் பின்புலமும் ஆராயப்பட்டது. பாதகமில்லாத மூவர் முதற்கட்ட சோதனையின் முடிவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அம்மூவரில் நம் நாயகன் சந்திரவதனின் புத்திக்கூர்மையும் மன வலிமையும் அனைவராலும் கவனிக்கப்பட்டது. மேலும் சந்திரவதன் இதற்கு முன் பல சோதனைகளைக் கடந்து வெற்றி பெற்றவன். சூரியனைப் பற்றிய ஆய்வில் முக்கிய பங்கு வகித்தவன். அவனது அல்ட்ரா ஸ்பீட் மூளையின் செயலாக்கம் சக விஞ்ஞானியை வியப்புக்குள்ளாக்கியது. பதினைந்து நாட்களின் முடிவில் சந்திரவதன் அனைத்து பயிற்சியிலும் முதன்மை பெற்று நிலவிற்குச் செல்ல தேர்வானான்.
நமது நாயகன் தன்னுடைய ஆட்டத்தைத் தொடங்க ஆயத்தமானான். தன் பயணத்திற்கு முன்பு செயலாளரைச் சந்தித்து தன்னுடன் தனது சொந்த உழைப்பில் உருவான ரோபோட்டை உடன் அழைத்துச் செல்ல அனுமதி வேண்டினான். பயணத்திற்கு இரு நாட்களே உள்ள நிலையில் செயலாளற்கு அனுமதி வழங்குவதைத் தவிர வேறு வழிகள் இல்லை. சந்திரவதன் தன் திட்டத்தின் முதல் வெற்றியுடன் நிலவு பயணத்திற்குத் தயாரானான்.
ஒரு நேர்காணலில் , இந்தத் திடிர் நிலவுப் பயணம் எதற்காக? அந்த ரெட் அலெர்ட் செய்தி என்ன? என்ற ஊடகங்ளின் கேள்விக்கு ஆராய்ச்சி தலைமையகத்தின் செயலாளர் பதிலுரைத்துக்கொண்டிருந்தார், ரெட் அலெர்ட் செய்தி கூறுவது யாதெனில், நிலவில் ஏலியன் நடமாட்டம் காணப்படுவதாகவும், அவை பூமியை நோக்கிப் பயணம் செய்ய இருப்பதாகவும், மனித குலத்திற்கு அதனால் பெரும் ஆபத்து ஏற்படும் என்றிருந்தது. இத்தகவல்கள் இரண்டாண்டுகள் முன் நம் கட்டுப்பாட்டில் இருந்த விண்கலத்தின் மூலம் நமக்குக் கிடைத்துள்ளது. இதனை அனுப்பிய மறுநொடி விண்கலத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
அதனால் இதனை ஆராய்வதற்கே இந்த ‘சூசைடல் ஸ்குவாட் அபரேசன்’. நிருபரின் அடுத்த கேள்வியானது, “இத்தகைய அபாயகரமான பரிசோதனைக்கு எதற்கு மனிதரை அனுப்புகிறீர்கள். செயற்கை நுண்ணறிவாற்றல் கொண்ட ரோபோட்டை அனுப்பலாமே? ஏனென்றால் முன்னர் சென்ற மூன்று விண்வெளி வீரரின் நிலை என்ன என்று நாம் இன்று வரை ஆராயவில்லை.” அதற்கு செயலாளரின் பதில், “ரோபோட்டை அனுப்பலாம் ஆனால் அதனுடைய நம்பகத்தன்மை கேள்விக்குரியது. வி கேன் ரீப்ரோகிராம் இட் எனிடைம். இட் இஸ் ஹைலி டேன்ஜரஸ். நம் ரோபோக்களை ஏலியன் கைப்பற்றலாம். அதனின் மூலம் நம்மிடையே குழப்பங்களை உருவாக்கலாம். இதனைத் தவிர்க்கவே மனிதரைத் தேர்வுச் செய்துள்ளோம். அண்ட் டு ஆன்சர் யுவர் கொஸ்டின் ரோபோவும் உடன் செல்கிறது இப்பயணத்தில். இப்பயணம் அந்த மூன்று விஞ்ஞானிகளின் நிலையையும் நமக்கு தெரியப்படுத்தும்” நிருபரின் அடுத்தக் கேள்வி, “நிலவுக்குச் செல்லும் வீரரைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துவீர்களா?” செயலாளரின் பதில், “நிலவுக்குச் செல்லும் வீரர் மிஸ்டர் ச்சா என்னும் சந்திரவதன். இவர் சூரியனைப் பற்றிய ஆய்வில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். இது மக்களுக்கும் தெரியும். அவர் தான் இந்த மிஸ்ஸனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர். அவர் எல்லா சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாளுவர் என்ற நம்பிக்கையில் இந்நிலவு பயணத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார்”
இந்த நேர்காணலைத் தன் வீட்டுத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார் ஜெயவர்தன். அவருக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் கிடைக்கப்பெற்றது. அவற்றைத் தன் மனைவியிடம் பகிர்ந்தார்.
சந்திரவதன் தன் நிலவு பயணத்திற்கு ஆயத்தமானான். தன்னுடன் அழைத்துச் செல்லவிருக்கும் ரோபோட்டை சரிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அழைத்துச் செல்லவிருக்கும் ரோபோ இன்று சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. அதனைக் கடக்க தேவையான அனைத்து தரவுகளையும் பதித்து ரோபோவை மேம்படுத்திக் கொண்டிருந்தான். சில தரவுகளை மாற்றி அமைத்து, மிக முக்கியமான தரவுகளுக்குக் கடவுச்சொல் பாதுகாப்புக் கொடுத்திருந்தான். இறுதியாகச் செயற்கை நுண்ணறிவாற்றலின் பலகீனத்தைத் தன் தேவைக்காகச் சமயோசிதமாக பயன்படுத்தினான். அதன் பொருட்டுத் தனது அரும்பெரும் நண்பனாகக் கருதும் ரோபோ சுப்ரமணியை அப்க்ரேட் செய்து புதுப் பெயர் சூட்டினான்.
தனது புதுபிக்கப்பட்ட ரோபோவுடன் தலைமையகத்திற்குள் நுழைந்தான். சோதனை அறையில் செயலாளர் மற்றும் ஐவர் கொண்ட குழு ரோபோவைப் பரிசோதிக்கத் தயாராக இருந்தனர். செயலாளர் நமது நாயகனிடம், “மிஸ்டர் ச்சா இந்த ரோபோவ ஏன் உங்களோட கூட்டிட்டுப் போகனும்னு கேட்டீங்க? எனி ஜஸ்டிஃபிகேஷன்?” “ஜஸ்ட் ஃபார் ஃபன்” என்று ச்சா இருக்கையில் அமர்ந்து கால்மேல் கால் போட்டு அசிரத்தையாகப் பதில் கூறினான்.
அவன் செயலில் ஆத்திரமுற்று அவனை முறைத்தார் செயலாளர் ராஸ். ச்சாவோ எதையும் கண்டுக்கொள்ளாதவாறு தன் ரோபோவைப் பார்த்து அமர்ந்திருந்தான். ராஸ் அந்த ஐவர் குழுவிடம் பரிசோதனையை ஆரம்பிக்கச் சொன்னார்.
ஐவர் குழு தங்களின் கேள்விக்கனைகளைத் தொடுக்க ஆரம்பித்தனர். முதல் கேள்வியான எக்ஸ்ப்ளைன் யூவிற்கு ரோபோவின் பதில், “ஐம் ச்சு வெர்சன் 5.௦, மூன்று மொழிகளில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள ப்ரோகிராம் செய்யப்பட்டுள்ளேன் தமிழ், ஆங்கிலம், ரஷ்யன்.” அடுத்த கேள்வியான நிலவு பயணத்திற்கு என்ன ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதிற்கு, “நிலவின் தட்ப வெப்ப நிலையை எதிர்கொள்ள எனது வெளிபாகம் அதிக வலிமை கொண்ட அலாய் எஃகு மூல பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் நான் அதிக வெப்பம் 15௦ டிகிரி செல்சியஸ் நிலையுலும் அதிக குளிர் -180 டிகிரி செல்சியஸ் எனும் நிலையுலும் தடையின்றி செயலாற்ற முடியும் என்று ச்சு விளக்கமளித்தது”.
ஆபத்தான கட்டத்தில் என்ன முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளக் கற்றுத் தரப்பட்டுள்ளது? என்ற கேள்விக்கு, ச்சுவின் பதிலில் அனைவரும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்தனர். ச்சுவின் பதிலானது “போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்.” இப்பதிலைக் கேட்டதும் அனைவரும் ஸ்தம்பித்தனர். அவர்கள் ஏதும் புரியாமல் ச்சாவைப் பார்த்தனர். ச்சா சிரிப்புடன், “டியர் காம்ரேட்ஸ் , மிஷனுக்கு நீங்க ஏற்கனவே என்னை இந்த டெஸ்ட்லாம் வச்சு தேர்ந்தெடுத்திடீங்க திஸ் ரோபோ இஸ் ப்யூர்லி ஃபார் மை என்ட்டர்டைன்மன்ட்” என்றுக் கூறி தனது தோள்களைக் குலுக்கினான். குழுவில் இருந்த ஒருவர் “திஸ் இஸ் நாட் ஃபேர்! யூ ஹாவ் டு ட்ரெயின் இட் ப்ராப்பெர்லி, அன்லெஸ் தென் திஸ் ரோபோ வில் நாட் பி அல்லோவ்ட்” என்றுக் கூறினார். அவரின் விவாதத்திற்கு சிறு சிரிப்பைப் பதிலாகத் தந்துவிட்டு ச்சுவிடம், “ச்சு ஆபத்து ரியாக்ட்” என்று ச்சா கூறியதும் சுற்றி உள்ள அனைத்தையும் ஸ்கேன் செய்து எதிரில் உள்ள மனிதர்களை நோக்கித் தன் கதிர் வீச்சை பாய்ச்சத் தொடங்கும் சமயம், ச்சு ஸ்டாப் என்ற தன் எஜமானின் கட்டளைக்கிணங்க தன் செயல்பாட்டை நிறுத்தியது.
ஒரு நொடிப்பொழுதில் அனைவருக்கும் மரண பயத்தைக் காட்டிவிட்டது ச்சு. ச்சா அந்த ஐவர் குழுவிடம் “ப்ரோம்ப்ட் இன்ஜினியரிங்… கரெக்டான கேள்விக்குக் கரெக்டான பதில் கிடைக்கும். கோட் வேர்ட் அனாலிசிஸ் ஃபார் நாட் பீயிங் மிஸ்யூஸ்ட்” என்று தன் விளக்கத்தைக் கூறினான். இவ்வாறு சில கேள்விகளுக்குச் சரியாகவும் பல கேள்விகளுக்குப் பொருந்தாத பதில்களையும் மொழிந்தது ச்சு என்கிற ரோபோ. ஒரு வழியாக அந்த ஐவர் குழுவைச் சமாளித்து ச்சுவும் தனது நிலவு பயணத்திற்குத் தயாரானது.