2,995 views

விதுவிற்கு பெண் பார்க்க போகிறோம் என்றதும், விது அனுவின் நினைவில் வாடினான்.

ஒரு மனம் அவள் தான் வேண்டும் என்று தீர்மானமாக சொன்னாலும், மற்றொரு மனமோ, தன்னால் தன் குடும்பத்திற்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது என்று உறுதியாய் இருந்தது.

அனைவரும், பெண் பார்க்க கிளம்ப, விதுவின் மனம் தீயில் விழுந்த புழுவாய் துடித்துப் போனது. அதனை மற்றவரிடம் மறைக்கவே அவன் அரும்பாடு பட்டான்.

இறுதியில், அவன் மட்டும் கிளம்பாமல் இருக்க, உத்ரா, “என்னடா இன்னும் கிளம்பலையா நீ…? சீக்கிரம் ரெடி ஆகு” என்று பரபரக்க,

அவன் “நான் எதுக்கு நீங்க போயிட்டு வாங்க…” என்று சத்தம் வராத குரலில் சொல்ல,

துருவ் “பொண்ணு உனக்கு பார்க்க போறோமா இல்லை எங்களுக்கா…? நீ தான் முக்கியமா வரணும். வா சீக்கிரம்”  சொல்ல, அவன் “இல்ல துருவ் நான் வரல” என்று பிடிவாதம் பிடிக்க, அர்ஜுனும் அஜயும் வலுக்கட்டாயமாக அவனை அறையில் தள்ளி, உடையை மாற்ற வைத்தனர்.

நேராய் குளியலறைக்குள் புகுந்து கொண்டவனுக்கு, அவளை நினைத்து கண்ணீரே வந்தது.

இந்த அளவு, அவள் தன் மனதில் ஆழமாய் இருப்பாள் என்று அவனே எதிர்பார்க்கவில்லை. அவளுடனான நினைவுகளை நினைத்து தன்னிச்சையாய் உதட்டில் புன்னகையும், கண்ணில் நீரும் வர தன்னை நிலைப்படுத்திக் கொண்டு முகத்தில் தண்ணீரை வாரி அடித்து மேலும் சிறிது நேரம் அழுது விட்டு வெளியில் வந்தான்.

 உத்ரா அவன் அருகில் சென்று, “ஏண்டா கண்ணுலாம் சிவந்துருக்கு” என்று கேட்க,

அவன் “அது தூசி விழுந்துருச்சு உதி…” என்றதும்,

அவள் அவன் கண்ணை துடைத்து, ஊதி விட்டு, “இப்போ ஓகே வா டா” என்று கேட்க, அவனுக்கு மேலும் கண் கலங்கியது.

அதனை துடைத்துக் கொண்டு, ம்ம்… என்று தலையாட்டியவன், “நான் வரலை உதி. நீங்க போட்டு வாங்களேன்” என்று மறுபடியும் ஆரம்பிக்க,

துருவ், அர்ஜுன் அஜயிடம் “டேய் தூக்குங்கடா இவனை” என்றதும், இருவரும் அவனை அலேக்காக தூக்கி காரில் அமர வைத்தனர். விதுன் தான் தலை வலிக்கிறது என்று சொல்லி, கண்ணை இறுக மூடி அமர்ந்து விட்டான்.

“சார் சார்… சாரி சார்” என்று அவளின் குரல் காதில் கேட்க, காதையும் கண்ணையும் இறுக மூடிக்கொண்டு, தன்னை கட்டுப்படுத்திக்கொண்டிருந்தான்.

மணப்பெண் வீட்டில் கார் நிற்க, குனிந்த தலை நிமிராமல், அவன் சென்று சோஃபாவில் அமர்ந்தான். மற்றவர்கள் பேசியது கூட அவன் காதில் விழவில்லை.

பெண் காஃபியுடன் அங்கு வரவும், உதி “டேய் பொண்ணை பாருடா” என்று சொல்ல, அவன் “நான் பார்த்துட்டேன்…” என்று நிமிராமல் இருக்க, அர்ஜுனும் அஜயும் “பொண்ணு என்ன தரையிலயா இருக்கு… நேரா பாருடா” என்று அடம்பிடித்தனர்.

விதுன் “ப்ச் நீங்க பாத்துட்டீங்கள்ல… அது போதும்…” என்று சற்று எரிச்சலாய் கூற, துருவ் அவன் முடியைப் பிடித்து நிமிர்த்தினான்.

அதில் கோபமாக “இப்போ என்னடா உனக்கு…” என்று நிமிர அவன் கண்கள் ஆச்சர்யத்தில் சாசர் போல் விரிந்தது.

எதிரில் அழகோவியமாய் அவனின் அடிமை பட்டுடுத்தி, கன்னம் சிவந்து அவனை சிரிப்புடன் பார்த்திருந்தாள்.

விதுனுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை. அவளை விட்டு கண்ணை நகர்த்தவும் முடியவில்லை. கண் இமைத்தால் கூட மறைந்து விடுவாளோ என்று மனம் படபடத்தது.

அதன் பிறகே, அவன் இருந்த இடத்தை கவனித்தான். எதிரில் அவனது மாமனார் மினிஸ்டர் கரண் அமர்ந்து கருணாவிடம் பேசிக்கொண்டிருந்தார்.

துருவ், “கடைசிவரை உன் மனசுல இருக்கறதை எங்க கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணவே இல்லைல…” என்று சற்று வருத்தமாய் கேட்க, விதுன் அதிர்ந்து, “உங்களுக்கு எப்படி?” என்று குழம்ப,

உத்ரா, “என் அண்ணன் மனசுல என்ன இருக்கு… யாரு இருக்கான்னு கூடவா எனக்கு தெரியாது… ம்ம்?” என்று கேலியாய் கேட்க, அவன் சொல்லாமலேயே தன் மனதை படித்து விட்ட, தங்கையை கண் கலங்க பார்த்தான்.

அர்ஜுன், “ஆமா டா. நீ அன்னைக்கு அனுவை பார்க்க போனப்பவே எங்களுக்கு டவுட் தான். அப்பறம் தான்… அவள் உன்னை காப்பாத்த அவள் கழுத்தை கட் பண்ண போய்ட்டான்னு மீரா சொன்னாள். ஆனால் நீ ஏன் சொல்லாம இருந்தன்னு எங்களுக்கு காரணம் புரிஞ்சுது.

அப்பறம் துருவ் தான், அவனால உன் வாழ்க்கை கெட கூடாதுன்னு மினிஸ்டர்ட்ட சமாதானம் பேசி  அவரை கரைச்சு, அப்பறமும் அவரு ஒத்துக்கலைன்னதும் அவரை அவருக்கே எதிரான ஆதாரத்தை காட்டி மிரட்டி, அப்பறம் அனுவே உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அவங்க அப்பாகிட்ட ஒத்தை கால்ல நின்னாள். அப்பறம் தான் ஒரு வழியா ஒத்துக்கிட்டாரு” என்று சொல்லி முடிப்பதற்குள்,

 விதுன் துருவை தாவி அணைத்துக் கொண்டான்.

“தேங்க்ஸ் டா…” என்று கமறிய குரலில் சொல்ல, அவன் சிரித்துக் கொண்டு, “போடா போய் இப்போவாவது ப்ரொபோஸ் பண்ணு” என்று அனுப்ப,

அஜய்,  “பெரிய தியாக செம்மல் இவரு… பாத்ரூம் குள்ள போய் அழுதுட்டு வந்து கண்ல தூசினு சொன்னா சின்ன புள்ளை கூட நம்பாது. நாங்க நம்பிடுவோமாடா” என்றதும்,

உத்ரா, “அப்போ கூட ஏண்டா சொல்லல… நீ சொல்லுவன்னு கடைசி வரை எதிர்பார்த்தேன்” என்று ஏமாற்றமாய் சொல்ல, அவன் மெலிதாய் சிரித்து கொண்டு,

“எனக்கு என் காதலை விட, உன் வாழ்க்கை தான் முக்கியம்” என்று சாதாரணமாய் சொல்லிவிட, இப்பொழுது கண் கலங்குவது உத்ராவின் முறையாயிற்று.

நால்வருமே ஒவ்வொரு விதத்தில் அவன் அனுவை காதலிப்பதை உணர்ந்து கொண்டாலும், அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தனர். ஆனால் துருவ் அவன் நிச்சயம் சொல்லமாட்டான் என கணித்து, மினிஸ்டரிடம் சென்று பேசினான். அதை உத்ராவிடம் கூட அவன் சொல்லவில்லை. ஆனால் அவனை கண்டு கொண்ட உத்ரா தான் அப்பொழுது, அவன் திருட்டு தனம் செய்வதாய் சொல்லி காட்டியது.

இப்படியே இவர்கள் பேசிக்கொண்டிருக்க, மீரா தான் “ஷப்பா போதும் உங்க செண்டிமெண்ட் சீனு பார்க்க முடியல… பொண்ணு ரொம்ப நேரமா வெட்டிங் அண்ணா சீக்கிரம் போங்க” என்க,

விது, “நல்ல ட்ரைனிங் டா” என்று அர்ஜுனிடம் மீராவை பார்த்து சொல்ல, மீரா உதட்டைக் கடித்து சிரித்தாள்.

பின், அவன் பார்த்ததுமே உள்ளே சென்ற அனுவிடம் சென்றவன், “போலி டாக்டர்…” என்று அழைக்க, அவள் அவனை பொய்யாய் முறைத்தாள்.

அதில் சிரித்தவன், “அன்னைக்கு ஏன் அப்படி பண்ணுன அனு…” என்று கேட்க, அவன் புரியாமல் “என்னைக்கு?” என்று கேட்க,

“என்னை காப்பாத்த, ஏன் அப்படி பண்ணுன…” என்று மீண்டும் கேட்டதும், அவள் அவன் மெல்ல அருகில் வந்து, “தெரியல…” என்று தலையை சாய்த்து பாவமாக சொன்னாள்.

பின்,” நிஜமா எனக்கு தெரியல… ஆனால் உங்களுக்கு எ
ஏதாவது ஆச்சுன்னா என்னால உயிரோட இருக்க முடியாதுன்னு மட்டும் தெரிஞ்சுச்சு. அதான் அப்படி பண்ணுனேன்” என்று கண்ணில் நீர் கோர்க்க சொல்ல, அதில் திகைத்தவன்,

“ஏன் அனு… நான்… நான் உன்னை ரொம்ப கிண்டல் தான் பண்ணிருக்கேன். சொல்லப்போனா உன்கிட்ட என் காதலை கூட சொல்லல…” என்று குழம்ப,

அவள் லேசாக சிரித்து, “ம்ம்… ஆனால் நீங்க அப்படி இருக்குறது தான் எனக்கு ரொம்ப பிடிச்சுச்சு. அப்பறம், உங்க ஃபாமிலி கூட.. ரொம்ப ஜாலியா, எல்லார் மேலயும் அன்பா, அதே நேரம், அடாவடியா…” என்று சொல்ல, அவளையே ரசித்தவன், “ஆனாலும்…” என்று ஏதோ பேசவர,

அதில் கடுப்பானவள், “டேய் நீ எப்போ தாண்டா ப்ரொபோஸ் பண்ணுவ. சும்மா நொய் நொய்ன்னு கேள்வி கேட்டுகிட்டு…” என்று முறைக்க, அதில் வாய் விட்டு சிரித்தவன் , அவளை நெருங்கி வந்து, “எப்படி ப்ரொபோஸ் பண்ணனும்னு சொல்லு பண்ணிட்றேன்” என்று கிசுகிசுக்க,

அவள் படபடத்து, “அது அது… நீங்க தள்ளி நின்னே சொல்லுங்க” என்று அவனை தள்ள, அவன் மேலும் நெருக்கமாய் நின்று கொண்டு, “இவ்ளோ தள்ளி நின்னா போதுமா?”
என்றான்.

அவள் சிவந்து, “பி… பி பின்னாடி தள்ளுங்க” என்று நடுங்கிய குரலில் கூற, அவன் அவள் இடையை இழுத்து, முகத்தை நிமிர்த்து, “லவ் யு அடிமை” என்று குறும்பாய் சொன்னான்.

அவள் “யூ யூ நான் உங்களுக்கு அடிமையா” என்று சரமாரியாக அடிக்க, அவன் அவள் கையைப் பிடித்து கொண்டு, “இல்லதான்… நான் தான் உன் அடிமை ஆகிட்டேன்” என்று ரசனையாய் சொல்ல, அவள் அழகாய் புன்னகைத்தாள்.

“அது சரி ரெண்டு பேரும் அடிமை தான்… இப்போ வெளிய வாங்க. இல்லன்னா… வீட்ல இருந்து எல்லாருக்கும் அடி கிடைக்கும்” என்று உத்ரா சத்தம் கொடுக்க, விது ‘நம்மளை அசிங்கப்படுத்த இவள் ஒருத்தி போதும்’ என்று நினைத்து கொண்டு, அனுவை பார்க்க, அவள் “வாங்க வெளிய போலாம்” என்று முன்னேற,

அவளைத் தடுத்தவன், “ஏய் போலி டாக்டர்… என்னை மட்டும் ப்ரொபோஸ் பண்ண சொல்லிட்டு நீ சொல்லாம போற…” என்று கேலியாய் கேட்க, அவள் “பண்றேன் பண்றேன்… கல்யாணத்துக்கு அப்பறம்” என்று குறும்பாய் சொல்லிவிட்டு, வெளியில் ஓடி விட்டாள்.

இப்படியாக, இரண்டு மாத இடைவெளியில் நால்வரின் திருமணமும் ஒரே நாளில், ஒரே மேடையில் ஒரே முகூர்த்தத்தில் வைக்கும் படி முடிவானது.

துருவும் ஆஸ்திரேலியா வந்து, அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான். நால்வரின் காதலும், அந்த திருமண நாளை எதிர்பார்த்து காத்திருக்க, அர்ஜுன் மீராவை சீண்டிக்கொண்டும், சுஜிக்கு இப்பொழுது காயமெல்லாம் ஆறி, அஜயிடம் சண்டை பிடித்து, சஞ்சுவை என்டர்டைன் செய்து கொண்டும், விதுன் அனுவை கிண்டலடித்து, தீண்டிக் கொண்டும் செல்ல, உத்ரா தான் தலைவனை பிரிந்த ஏக்கத்தில் உடல் மெலிந்தாள்.

இப்படியும், ஒரு நாளைக்கு இருபது தடவை வீடியோ காலில் பேசி விடுவான். அப்படி இருந்தும், அவளுக்கு தான் அவனை காணாமல் இருக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில், “எனக்கு உன்னை பார்க்கணும் புருஷா… ப்ளீஸ் இங்க வா…” என்று ஏங்கிப் போய் கேட்க,

அவன், “ஒரு வாரத்துல வந்துடறேன் ஹனி… ரொம்ப டைட் ஒர்க் இல்லைனா, நான் வராம இருப்பேனா” என்று சமாதானம் சொல்ல,

அவள் “சரி நானாவது வரேன்…” என்று சொல்ல, அவன் அதற்கும் மறுப்பு தெரிவித்தான்.

அவள் கோபமாக “அப்போ போ இனிமே எனக்கு போன் பண்ணாத” என்று பட்டென்று போனை அணைத்து விட்டாள்.

அவனுக்கு இருக்கும் வேலையில் அவன் பேசுவதே பெரிய விஷயம் என்று ஒரு மனதுக்கு புரிந்தாலும், அவளின் காதல் மனது அவனின் சீண்டலுக்காய் ஏங்கியது.

நான்கு நாட்களாய் அவனிடம் அவள் பேசவே இல்லை. அவனும் அழைக்கவே இல்லை. அதில் அவளுக்கு கோபம் சுறுசுறுவென ஏறியது.

பின், பக்கத்துக்கு பங்களாவில் சத்தம் கேட்க, லட்சுமி இடம் வந்து “இங்க யாரும் குடி வர்றாங்களா அத்தை” என்று கேட்க,

அவரும், “ஆமா உதி… யாரோ இந்த பங்களாவை வாங்கிருக்கங்களாம். யாருன்னு தெரியல… விதுன் தான் இதுக்கு இன்டீரியர் டெக்கரேஷன் பன்றான். உங்கிட்ட சொல்லலையா” என்று கேட்க,

அவள் புரியாமல், “இல்லையே என்கிட்டே எதுவுமே அவன் சொல்லல…”என்று குழம்பியவள்.. அங்கு சென்று விதுனிடம், “யாரு வீடு விது இது” என்று கேட்க,

அவன் “தெரியல உதி… துருவ் தான் அவனுக்கு தெரிஞ்சவங்க வாங்கிருக்காங்கன்னு, இன்டீரியர் ஒர்க் பண்ணி குடுக்க சொன்னான்” என்று சொல்ல,

அவள் “அவன் உன்கிட்ட பேசுனானா” என்று ஒரு மாதிரியாக கேட்டாள்.

“ம்ம் பேசுனானே… இன்னைக்கு காலைல கூட நாங்க எல்லாரும் கான்ஃபெரென்ஸ் கால் பேசுனோம்.” என்று தீயை வைக்க, அவளுக்கு தான் கடுங்கோபம் வந்தது. ‘என்கிட்ட பேச மட்டும் சார்க்கு வலிக்குது. இவனுங்ககிட்ட எல்லாம் பேசி இருக்கான்… ‘என்று கடுப்பானாள்.

மேலும், அவன் திருமணத்திற்கு பிறகு ஆஸ்திரேலியா செல்வது பற்றியும் இன்னும் ஒன்றும் பேசாமல் இருப்பது வேறு அவளுக்கு கோபத்தை கிளறியது. அவன் ஏதாவது பிளான் சொன்னால் தானே அவள் இங்கு இருக்கும் வேலையை மற்றவரிடம் ஒப்படைத்து விட்டு வரமுடியும். இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம் என்று குழம்பி போனாள்.

அவளை மேலும் குழப்பாமல், அடுத்த இரண்டு நாளில் துருவ் இந்தியா வந்தடைய  அவனை கண்டதும் என்னதான் கோபம் இருந்தாலும், சட்டென்று அது மறைய அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்.

துருவ் “ஹனி” என்று அழைக்க, அவள் அவனை சரமாரியாக அடித்து, “அது எப்படி நீ என்கிட்ட பேசாம இருக்கலாம். அவனுங்க கிட்ட எல்லாம் பேசுற…” என்று சிறுபிள்ளைத்தனமாக புகார் செய்ய,

அதில் புன்னகைத்தவன், “என் ஹனி எப்போ இருந்து இப்படி லாஜிக் இல்லாமல் பேச ஆரம்பிச்சா ஹ்ம்ம்…” என்று புருவத்தை உயர்த்தி வினவி விட்டு, “அங்க ரொம்ப ஒர்க் டா… அதான் பேச முடியல. சாரி ஹனி.” என்று சமாதானம் செய்ய, அவள் முகத்தை திருப்பி கொண்டாள்.

பிறகு, அங்கு அனு சுஜி எல்லாரும் வர  வீட்டினரும் பரபரப்பாய் கிளம்பி கொண்டிருக்க, இவளுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை.

அஜயைப் பிடித்து, “என்ன பங்கு எல்லாரும் ஒரே பரபரப்பா இருக்கீங்க” என்று கேட்க,

அவன் “நீ இன்னும் கிளம்பலையா? வா சீக்கிரம்…” என்று சொல்ல,

மீரா “என்ன உதி… இன்னும் கிளம்பாம இருக்க. துருவ் அண்ணா எங்க? நல்ல நேரம் முடியிறதுக்குள்ள போகணும்…” என்றதும்,

“கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள் இருக்கு. அப்பறம் எதுக்கு இதுங்க குழப்புதுங்க…” என்று தலையை சொரிந்து கொண்டிருந்தவளுக்கு, அனைவரின் முகமும் எப்போதும் விட பிரகாசமாய் இருப்பது போல் தோன்றியது.

பிறகு அவளையும் இழுத்துக் கொண்டு, எல்லாரும் பக்கத்து பங்களாவிற்கு செல்ல, அவள் பேந்த பேந்த முழித்தாள்.

அர்ஜுன் தான் “என்ன உதி உன் வீட்டுக்கு வந்தா வாங்கன்னு கூப்பிட மாட்டியா” என்று கேலி செய்ய “என் வீடா?” என்று விழி விரித்தாள்.

அனு, “நீ என்ன  கஜினி சூர்யா மாதிரி எல்லாத்தையும் ஆச்சர்யமாவே கேக்குற” என்று வினவ, சுஜி “அதான ப்ரோ உங்கிட்ட எதுவும் சொல்லலையா. கல்யாணத்துக்கு அப்பறம் நீயும் ப்ரோவும் இங்க தான் இருக்க போறீங்க. அதான் பால் காய்ச்ச இங்க வந்துருக்கோம்” என்று சொன்னதும்,

விது “ஆமா உதி… அவன் அவனோட பிசினெஸ்லாம் பாத்துக்க ஆள் செட் பண்ணிட்டு, இங்க இருந்தே மெயின்டெய்ன் பண்ணிக்க எல்லாமே பக்காவா ரெடி பண்ணிட்டு தான் வந்துருக்கான்…” என்று சொல்ல, உத்ரா திகைத்து நின்றாள்.

லட்சுமி வந்தவர்  “உதி… உன்னை விட்டு எப்படி பிரிஞ்சு இருக்குறதுன்னு நான் கூட ரொம்ப வருத்தப்பட்டேன். ஆனால் நாங்க சொல்லாமலேயே துருவ் எல்லாத்தையும் சரி பண்ணிட்டான்..
ரொம்ப சந்தோசமா இருக்கு. நீங்க ரெண்டு பேரும் எங்க கூட இருக்க போறது… எனக்கே இந்த விஷயம் காலைல தான் தெரியும்.” என்று மகிழ்ச்சியாக சொல்ல, அவள் வேகமாக துருவை தேடிப் போனாள்.

அங்கு, அவர்களுக்காகவே ஸ்பெஷலாக ஒரு ரூம் ஒதுக்கி, அங்கு பல வண்ண விளக்குகள் வைத்து, அவளுக்கு பிடித்த இளஞ்சிவப்பு நிறத்தில் அறையின் பொருட்கள் அடுக்கி, வெள்ளை நிற வண்ண பூச்சு அடித்து, ஆங்காங்கே அவளின் புகைப்படமும், மேலும் மூன்று வருடம் முன்பு, துருவ் மொபைலில் இருவரும் எடுத்த புகைப்படங்களும் மாட்டப்பட்டு இருந்தது.

அந்த அறையை ஒட்டியே ஒரு பெரிய பால்கனியும், அங்கேயே அவளுக்கு பிடித்த, பூச்செடிகள் வைத்து, சிறு தோட்டமும், கூடவே, ஒரு ஊஞ்சலும் கட்டி தொங்க விட பட்டிருந்தது.

அதனைக் கண்டவள் பிரமித்து துருவைப் பார்க்க, அவன் “வா” என்று கையை நீட்டினான்.

அடுத்த நொடியே அவனுள் அடைக்கலமாகியவள், பேச்சற்று அவன் மார்பில் புதைய, அவன் “உதி… இனிமே நம்ம இங்கயே இருக்கலாம். நிஜமா சொல்லனும்னா நான் இங்க வரும்போது, நீ மட்டும் தான் என் மனசுல இருந்த.

இப்போ இந்த குடும்பமே எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. மாமன், மச்சானா, அண்ணன் , தம்பிங்களா நல்ல பிரெண்ட்ஸ் கிடைச்சுருக்காங்க.

என்னை ஆசையா அண்ணன்னு கூப்பிட, மூணு தங்கச்சி கிடைச்சுருக்காங்க. நான் இழந்த குடும்ப சூழ்நிலையை திரும்ப அனுபவிக்க, சித்தி, சித்தப்பா, அத்தை , மாமான்னு ஒரு குடும்பமே கிடைச்சிருக்கு… அதுக்கு மேல சஞ்சு… என்னை அங்கிள்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தவன் இப்போ மாமா மாமான்னு என் பின்னாடியே சுத்துறான்…” என்று சிரித்தவன்,

“இவங்களை எல்லாம் விட்டுட்டு என்னாலேயே பிரிஞ்சு போக முடியாது அப்டி இருக்கும் போது, உன்னை எப்படி ஹனி இவங்க கிட்ட இருந்து பிரிப்பேன்…” என்று  தலையை சாய்த்து கேட்டவன்,

“எனக்கு தெரியும், உனக்கு உன் குடும்பத்தை எவ்ளோ பிடிக்கும்னு… உனக்கு பிடிச்சதை எப்படி ஹனி உன்கிட்ட இருந்து பிரிக்க முடியும். அதான், இங்கயே ஒரு வீடு பார்த்துட்டேன்… அதுக்காக இங்க தான் இருக்கணும்னு இல்லை உனக்கு எப்போ எல்லாம் தோணுதோ அப்போ எல்லாம் நீ உன் அத்தை வீட்டுக்கு போகலாம்… நீ” என்று பேச, சட்டென்று உத்ரா அவள் இதழ்களால் அவன் வாயை அடைத்தாள்.

இங்கு, அர்ஜுன் மீராவை ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்று அழைத்து போக, அவள் “எங்க அர்ஜுன்” என்று கேட்டுக்கொண்டே வந்தாள்.

அவன் “வந்தா தெரிஞ்சுட போகுது” என்று சிறு சிரிப்புடன் கூட்டி செல்ல, அங்கு சென்று பார்த்து, வியந்து போனாள்.

அது அவள் இருந்த ஆஸ்ரமம் தான். மூன்று வருடங்களுக்கு முன் இருந்த, சிறுவர்களும், அந்த விடுதியில் இத்தனை வருடமாய் அவளை வளர்த்த தலைவியும் இருக்க, அவள் ஓடி சென்று பசங்களை எல்லாம் அணைத்து கொண்டாள்.

அதில் விவரம் தெரிந்த சிறுவர்கள் மீராவை கண்டதும் துள்ளி குதித்தனர். அதன் பிறகே அர்ஜுன், அந்த ஆஸ்ரமத்தை தத்தெடுத்திருக்கிறான் என்றும், அங்கிருந்த, இனிமேல் வரப்போகும் அனைத்து குழந்தைகளின் படிப்பு செலவு முதல் அனைத்தும் அவனே ஏற்றுக்கொண்டிருக்கிறான் என்றும் தெரிந்து கொண்டவள் அவனை கண்ணீருடன் பார்த்தாள்.

அர்ஜுன் அழக்கூடாது என்று சைகை காட்ட அவள் லேசாக முறுவலித்து, பின், அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு, காருக்கு செல்ல, அர்ஜுனிடம், “எனக்காகவா அர்ஜுன்…” என்று கேட்க, அவன் “இல்ல…” என்று தலையசைத்து, “என் சீனிக்கட்டிக்காக… அவளுக்கு இந்த இடமும், இங்க இருக்குறவங்களும் ரொம்ப பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும். என் சீனிக்கட்டி, யாரை நினைச்சும் கலங்க கூடாது. அதான்” என்று சொல்வதற்குள் அவன் அவளின் இறுகிய அணைப்பில் இருந்தான்.

“லவ் யு அஜ்ஜு” என்று காதலுடன் சொல்ல, அவன் “வெறும் ஹக் மட்டும் தானா நான் வேற என்னம்மோ எதிர்பார்த்தேன்” என்று பொய்யாய் சலிக்க, அதில் புன்னகைத்தவள், “என்ன எதிர்பார்த்தீங்களோ அதை நீங்களே குடுத்துகோங்க” என்று வெட்கத்துடன் சொல்ல,

அதில், அவன் அவளை ரசித்து கொண்டு, “ஏன் அதை மேடம் குடுக்க மாட்டிங்களோ… அன்னைக்கு எனக்கு சரியாகி வீட்டுக்கு வந்ததும் நிறைய தரேன்னு சொன்னீங்க… ஹ்ம்ம்” என்று குறும்பாய் கேட்க,

அதில் ரோஜாவாய் சிவந்தவள், “எனக்கு வெட்கமா இருக்கு” என்று முகத்தை மூட, அவன் “அப்போ அதை முதல்ல சரி பண்ணுவோம். .” என்று அவள் கையை முகத்திலிருந்து எடுத்து, முத்தத்தில் திணறடித்தான்.

விதுவும் அனுவும் கண்களாலேயே பேசிக்கொள்ள, அவளை வீட்டில் விட்டு விட்டு வருகிறேன் என்று அவளை அழைத்து சென்றான். வீட்டின் அருகில் காரை நிறுத்தியவன், அவளுக்கு ஒரு கவரை கொடுக்க, அவள் என்ன இது என்று பார்த்தாள்.

அவன் “பிரிச்சு பாரு” என்று சொல்ல, அதனை பிரித்தவள், அதில், ஃபேஷன் டிசைனிங் படிப்பிற்கான அப்ளிகேஷன் ஃபார்ம் இருப்பதை கண்டு, விதுனை குழப்பமாக பார்த்தாள்.

அவன் “என்ன முழிக்கிற. நெக்ஸ்ட் மந்த்ல இருந்து நீ இந்த காலேஜ்ல தான் படிக்க போற…” என்று சொல்ல, அவள் திகைத்தாள்.

அவளுக்கு ஃபேஷன் டிசைனிங் படிப்பதும், அதில் தொழில் துவங்கவும் பெரும் கனவே இருந்தது. ஆனால், தன் ஸ்டேட்டஸ்காக அவளை டாக்டர் ஆக்கியே ஆக வேண்டும் என்று அவளின் அப்பா சொன்னதில், அவர் மேல் இருந்த பயத்தில், அதனை மறுத்து பேச முடியாமல் ஒப்புக்கொண்டாள்.

ஆனால் “அது இவனுக்கு எப்படி தெரியும்” என்று பார்க்க, அவன் “நீ கஷ்டப்பட்டு உனக்கு பிடிக்காததை செய்ய வேண்டாம் போலி டாக்டர். கல்யாணத்துக்கு அப்பறம் நீ இதை படிச்சு முடிச்சுட்டு நம்ம லைஃப் ஸ்டார்ட் பண்ணலாம் அதுவரைக்கும் லவ் பண்ணிகிட்டே இருக்கலாம்… ஓகே வா?” என்று விழி உயர்த்தி கேட்க, அவளுக்கு தான் என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை.

கண்ணில் இருந்து மட மட வென நீர் கொட்ட, அதில் பதறியவன், “ஹே… என்ன இது… அழுதுகிட்டு. நோ டார்லிங். இப்படிலாம் அழுக கூடாது. இதெல்லாம் நான் உனக்காக மட்டும் பண்ணல” என்று நிறுத்தி விட்டு,

“அன்னைக்கு மாதிரி எத்தனை பேருக்கு தப்பா ஊசி போட்டு கொலை பண்ண பார்ப்பியோ யாருக்கு தெரியும். மத்தவங்க உயிர் விஷயத்துல ரிஸ்க் எடுக்குறேனோ இல்லையோ, உன்னை டாக்டர் ஆக்கி, என் உயிருக்கு நானே உலை வச்சுப்பேனா? அதான் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டேன்” என்று குறும்பாய் சொல்ல,

அதில் அவள் “உன்னை நான் கொல்ல பார்த்தேனாடா… ஒரு மயக்க ஊசியை மாத்தி போட்டதுக்கு கடைசி எபி வரை என்னை கலாய்க்கிற” என்று அவனை அடித்துத் துவைத்தாள்.

இருந்தும், அவள் இதழ்கள் சிரிப்பையே தந்தது. அவளின் ஆசையை அறிந்து கொண்டு, அதற்காகவே இதனை செய்கிறான் என்று புரிந்தே வைத்திருந்தாள்.

அவன் சட்டையைப் பிடித்து, தன் இதழ் அருகே இழுத்தவள், “லவ் யு வினு…” என்று காதலுடன் கூற, அதில் விழி விரித்தவன் அவள் இதழ்களையே தாபத்துடன் பார்க்க, அனு சட்டென்று அவன் இதழில் அழுத்தமாய் முத்தமிட்டாள். அதில் அவன் திணற,  அவன் நெஞ்சிலே சாய்ந்து கொண்டு முத்தமிட்டாள்.

அவன் வலுக்கட்டாயமாக அவளை விலக்கி, “யம்மா பரதேவதை… சும்மா மனுஷனை சோதிக்காத.

மூணு வருஷம் உன்னை விட்டு தள்ளி இருக்கணும்… இதுல, நீ அரியர் வச்சு எத்தனை வருஷம் இழுப்பியோ… எதுக்கும்  நீ ரெண்டு ஸ்டெப் தள்ளியே இரு. அப்பறம் நான் பொறுப்பு இல்ல” என்று குறும்புடன் கூற, அதில் புன்னகைத்தவள், “போடா” என்று விட்டு வீட்டினுள் ஓடினாள்.

அஜய், சுஜியை அழைத்து கொண்டு, காரில் சுற்ற பொறுத்து பொறுத்து பார்த்தவள், “இப்போ எதுக்குடா…? இப்படி ஊர்வலம் போய்கிட்டு இருக்க என்னை கூட்டிகிட்டு…” என்று கடுப்படிக்க, அவன் “ஏண்டி லவர் வெளிய கூட்டிட்டு போகமாட்டானான்னு அவள், அவள் எதிர்பார்த்துக்கிட்டு இருக்காள். நீ என்னன்னா ஏன் இப்டி சுத்துறேன்னு கேக்குற” என்க,

அவள், “எங்கயாவது கூட்டிட்டு போனாலும் ஓகே… நீ இப்படி காரிலேயே சுத்துனா? அதான் கேட்டேன்” என்று சொன்னதும்,

அஜய், “நிஜமா எங்க கூட்டிட்டு போறதுன்னு எனக்கு தெரியல… பசங்கலாம் அவங்க அவங்க ஆளுக்கு சர்ப்ரைஸ் குடுக்க கூட்டிட்டு போயிருக்காங்க… இந்த விது கூட அனுவுக்கு ஏதோ சர்ப்ரைஸ் குடுக்குறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தான். பட் பஜ்ஜி, உனக்கு என்ன சர்ப்ரைஸ் குடுக்குறதுன்னு எனக்கு நிஜமாவே தெரியல.

உனக்கு பெருசா எதுலயும் இன்டெரெஸ்ட் இல்லைன்னு தெரியும். உனக்கு பிடிச்சது, நம்ம ஆஃபீஸ்ல ஒர்க் பண்றது, அப்படியும் இல்லைன்னா எங்க கூடவே தான் சுத்திகிட்டு இருப்ப. பட் உன்னை இம்ப்ரெஸ் பண்றமாதிரி என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல பஜ்ஜி” என்று பாவமாக சொல்ல, அவனை பார்த்து கலகலவென சிரித்தாள்.

அவன் முறைக்கவும், சுஜி, “லூசாடா நீ. ப்ரோ, அர்ஜுன், விதுன்லாம் அவங்க அவங்க ஆளை இம்ப்ரெஸ் பண்ண இதெல்லாம் பண்ணல. அவங்களை கல்யாணம் பண்ணிக்கும் போதும், அதுக்கு அப்பறமும் , அவங்க மனசுல எந்த காயமும், குழப்பமும், ஏக்கமும் இருக்க கூடாதுன்னு தான் இதெல்லாம் பண்றாங்க.

அண்ட் அவங்க பேசிக்கிறதுக்கு நிறைய விஷயம் கூட இருக்கலாம். பட் நம்ம அப்படி இல்லை. உன்னை பத்தி எனக்கும் என்னை பத்தி உனக்கும் தெரியாத விஷயமே இல்லை.

அண்ட் நீ என்ன சர்ப்ரைஸ் குடுத்தாலும், அது நீ இத்தனை வருஷத்துல, என் பர்த்டேக்கோ இல்ல வேற ஏதாவது அகேஷன்க்கோ நீ குடுத்ததா தான் இருக்கும்.

நீ சர்ப்ரைஸ் பண்ணுனா தான் நான் உன்னை லவ் பண்ணுவேன்னு உங்கிட்ட சொன்னேனா?

இதெல்லாம் இல்லாம கூட லவ் பண்ணலாம் அஜூ… சிம்பிள் ஆ… சண்டை போட்டுக்கிட்டு, அப்போ அப்போ கிண்டல் பண்ணிக்கிட்டு, அப்போ அப்போ கொஞ்சிகிட்டு… ” என்று பேசி முடிக்க, அவன் அவளையே சுவாரசியமாய் பார்த்திருந்தான்.

அதில் சிவந்தவள், “எதுக்கு இப்படி பார்க்குற” என்று தடுமாற,

“நீ ஒரு யூனிக் பீஸ் பஜ்ஜி…” என்று குறுகுறுவென பார்த்து விட்டு, “உனக்கு எந்த ஆசையும் இல்லையா… லைக் எதாவது சில்லறைத்தனமா இருந்தாலும் பரவாயில்லை” என்று கேட்க,

அதில் சிறிது யோசித்தவள், “ம்ம்… ஒண்ணு இருக்கு” என்று இழுக்க, அவன் ஆர்வமாக “சொல்லு சொல்லு என்னது…” என்று கேட்க,

அவள் “அது வேணாம்… ஒன்னும் இல்லை” என்று சமாளிக்க, அவன் “அதெல்லாம் முடியாது சொல்லியே ஆகணும் சொல்லு பஜ்ஜி…” என்று பிடிவாதம் பிடிக்க,

“அது எனக்கு எனக்கு…” என்று ஆரம்பித்து,

“உன் உன்” என்று திணற…

அவன் மேலும் சுவாரசியமாகி “ம்ம் என்…?” என்று கேட்க,

“வேணாம் எனக்கு வெட்கமா இருக்கு… நீ கிண்டல் பண்ணுவ” என்று சிணுங்கினாள்.

அவன் சிரிப்பை அடக்கி கொண்டு, “ஹே நிஜமா கிண்டல் பண்ண மாட்டேன் பஜ்ஜி சொல்லு…” என்றதும் வேறு வழி இல்லாமல், “எனக்கு உன் கூட…” என்று இழுத்தவள்,

“எனக்கு உன் கூட சிம்லாவுக்கு ஹனிமூன் போகணும்னு ஆசையா இருக்கு…” என்று முகத்தை மூடி கொண்டாள்.

அதனை கேட்டு வாய் விட்டு சிரித்தவன், அவளை தன் கை வளைவிற்கு கொண்டு வந்து, “அதுக்கென்ன போய்ட்டா போச்சு. என் பஜ்ஜி கேட்டு நான் வேணாம்னு சொல்லுவேனா… கண்டிப்பா சிம்லா போறோம் டாட்” என்று சொல்லி இதழால் கன்னத்தை உரச, அவள் அவனை தள்ளி விட்டு,

“கிளம்பு போலாம்” என்று அவனைப் பாராமல் சொல்ல,

அவன் “என்ன பஜ்ஜி? ஹனிமூன்லாம் பிளான் பண்ணிருக்கோம். இப்போ ஒரு சாம்பிள் கூட கிடையாதா” என்று சிணுங்கியபடி கேட்க, அவள் அவன் காதை திருகி, “ஒழுங்கா என்னை வீட்டுல விடு…” என்று பொய்யாய் மிரட்டி, சிவந்த முகத்தை அவனுக்கு காட்டாமல் திரும்பி அமர்ந்து கொண்டாள். அதில் சிரித்தவன், அவளை சைட் அடித்துக்கொண்டே வீட்டில் விட்டான்.

துருவை விடும் எண்ணமே இல்லாமல், இரு மாதத்து தவிப்பையும், அவளின் முத்தத்திலேயே உத்ரா காட்ட  அவன் தான் மூச்சுக்குத் திணறி அவளை தள்ள வேண்டியதாக போயிற்று.

உதட்டைப் பிடித்து கொண்டு, “ஹே… என்னடி நீ என்னையவே ஓவர் டேக் பண்ணிடுவ போல…” என்று மிரள,

அவள், “நீ கத்துக்குடுத்து தான…” என்று சிரிக்க, அவன் “அது சரி.” என்று நகைத்தான்.

அவன் கழுத்தை பிடித்து தொங்கிய உதி  “சாரி துருவ். நான் ரொம்ப சின்ன பிள்ளைத்தனமா நடந்துக்கிட்டேன்ல. நீ பிசினெஸ வேற ஒருத்தர்கிட்ட மாத்திட்டு வரணும்னா அங்க எவ்ளோ வேலை இருந்துருக்கும். அது போக, எவ்ளோ பேருக்கு பதில் சொல்ல வேண்டியது இருந்துருக்கும். அதுலாம் புருஞ்சுக்காம டிபிகல் லவர் மாதிரி நடந்துக்கிட்டேன்ல…” என்று பாவமாய் கேட்க,

அதில் அவன் அவள் நெற்றியில் முட்டி, “நீ கோபப்பட்டது அழகா இருந்துச்சு ஹனி. அப்பப்போ கோபப்பட்டு சண்டை போட்டு… கடைசியா இப்படி கிஸ் குடுத்து சமாதானப்படுத்து ஹனி செம்ம கிக்கா இருக்கு…” என்று ரசனையாய் சொல்ல,

அவள் அவனை முறைத்து, “ஆமா நானே கோபப்பட்டு, நானே சண்டை போட்டு, நானே உனக்கு கிஸ் குடுத்து சமாதானம் பண்றேன். நியாயமா நீ தான் சமாதானம் பண்ணனும்” என்று சிலுப்பிக் கொள்ள, அவன் அவளை விலக்கி விட்டு, வாசல் நோக்கி நடந்தான்.

அவள் புரியாமல் பார்க்க, அவன் அவளை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு, கதவை தாழ் போட்டான். அதில்

அவள் “எதுக்கு கதவை லாக் பண்ற,” என்று உள்ளே போன குரலில் கேட்க, அவன் அவளை ஆழமாய் பார்த்து “ம்ம் உன்னை லாக் பண்ணத்தான்” என்று அவளை நெருங்க, அவள் பின்னே நகர்ந்தாள்.

துருவ், “என்ன பண்ண போற…” என்று திக்கி திணறி கேட்க, அவன் “உன்னை சமாதானபடுத்த போறேன் ஹனி” என்று, அவளை அணைத்து முத்தங்களை மழையென பொழிந்தவன், கைகளும் இதழ்களும் எல்லை மீறிய பிறகே அவளை விட்டான்.

அவனின் எல்லை மீறலில் செங்கொழுந்தாய் சிவந்து நின்றவள், அவனை பார்க்கவே தடுமாற, அவன் மீண்டும் அருகில் வந்து, கலைந்திருந்த அவள் பொட்டையும், தலை முடியையும் சரி செய்து  புடவை மடிப்பையும் நீவி விட்டு, “இனிமே அடிக்கடி இப்படி உன்னை சமாதானப்படுத்துறேன்… சோ நிறைய கோபப்படு ஹனி ப்ளீஸ்” என்று குறும்பு மின்ன கேட்க, அவள் “போடா ஃபிராடு…” என்று சிரித்துக் கொண்டு, வெளியே ஓடியே விட்டாள்.

இவர்களின்  கொஞ்சலிலும்,  சீண்டலிலும், நாட்களே கடுப்பாகி, வேகமாக திருமண நாளை நெருங்கியது.

முந்தைய நாள் நான்கு பெண்களுக்கும் மெகந்தி ஃபங்க்ஷனும் ரிஸப்ஷனும் வைக்க, வீடே கோலாகலமாக இருந்தது.

நான்கு ஜோடிகளும் கல்யாண கனவில் மிதக்க, ஒரு புறம் பாட்டு கச்சேரி, ஒரு புறம் மெஹந்தி ஃபங்ஷன் என பெண்கள் குதூகலமாய் இருக்க, இந்த நான்கு ஆண்களை மட்டும் காணவில்லை.

உதி, ” சுஜி எங்க இந்த பசங்களை காணோம்” என்று கேட்க, அவள் “நானும் பார்க்கலை உதி” என்று சொல்ல,

அனு, “உதி அவங்க நமக்கு தெரியாம ஏதோ பண்றாங்க…” என்று சொல்லவும்,

மீராவும், “ஆமா… நேத்து கூட, நாலு பேரும் கான்ஃபெரென்ஸ் கால்ல குசுகுசுன்னு பேசிகிட்டு இருந்தாங்க. அர்ஜுன்ட்ட கேட்டா, ஒன்னும் இல்லைன்னு சொல்றாரு” என்று சொல்ல,

சுஜி, “என்னத்தை பண்ணிட போகுதுங்க… சர்ப்ரைஸ்ன்ற பேர்ல சில்லறைத்தனமா ஏதாவது பண்ணி நம்மகிட்ட மொக்கை வாங்குங்க.” என்று கிண்டலடிக்க, மூவரும் சிரித்தனர்.

அனு, “ஆஹான்… உதி அதுலயும் உன் அண்ணன் இருக்காரே. சரியான வேஸ்ட் ஃபெல்லோ…” என்று கேலி செய்ய,

அவள், “என்ன அண்ணியாரே… என்கிட்டயே எங்க அண்ணனை கலாய்க்கிறியா? அப்பறம் நாத்தனார் கொடுமைனா என்னன்னு காட்டிடுவேன்” என்று போலியாய் மிரட்ட,

மீரா, “அதை வேற நீ தனியா காட்டணுமா. உங்க கூட பேசுனாலே போதுமே, மொக்கை போட்டே கொடுமைபடுத்துவீங்க” என்று அனுவிற்கு சப்போர்டிற்கு வர,

சுஜி, “நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது” என்று மீராவை ஷாக்காக பார்த்து பாட,

உதி சிரித்து விட்டு, “நீ வேற பங்கு… மீரா இப்போல்லாம் நம்மளையே ஓவர் டேக் பண்றா இதுல கூட அனு வேற ஜால்றா…” என்று சொல்லி நால்வரும் ஒருவரை ஒருவர் கிண்டலடித்து கொள்ள,

திடீரென சுஜி, “பங்கு பங்கு பங்கு அங்க பாரு பங்கு… நம்ம ஹீரோஸ…” என்று கையைக் காட்ட, மற்றவர்களும் விழி விரித்து அவர்களை பார்த்தனர்.

நால்வரும், ஒரே மாதிரி சிவப்பு நிற குர்தா அணிந்து, ஸ்டைலாக நடந்து வந்து, பாட்டு கச்சேரி நடக்கும் இடத்தில ஏறி மைக்கை வாங்கினர்.

நால்வரும் அவரவர் நாயகனின் கம்பீரத்திலும், ஸ்டைலிலும் தொலைந்து அவர்களையே சைட் அடித்து கொண்டிருக்க, அவர்கள் நேராக, தத்தம் துணையின் அருகில் வந்து நின்றனர்.

உதி, “வாவ்… சூப்பரா இருக்கு துருவ்” என்று சொல்ல, மீரா அர்ஜுனிடம் சூப்பர் என்று சைகை காட்ட,

சுஜி, “செம்ம காமெடி… இதென்ன அலங்கோலம்” என்று நக்கலடிக்க, அனு, “அதெல்லாம் சரி இப்போ எதுக்கு கைல மைக்கோட வந்துருக்கீங்க…” என்று வினவினாள்.

  விதுன் தான், அஜயிடம், “இந்த ரெண்டுக்கும் ரொமான்டிக்காவே பேச வராதாடா” என்று கேட்க, அவன் “என்ன பண்றது… இட்ஸ் ஆல் அவர் ஃபேட்” என்று தலையில் கை வைத்தான்.

இதில் இருவரும், அவர்களை அடிக்கத் துரத்த, துருவ் கையில் இருந்த மைக்கில் உத்ராவின் அருகில் வந்து பாட ஆரம்பித்தான்.

மார்கழி மாசத்து மல்லிகை பூவொன்று மாலையில் சேருதடி
மாடப்புறாக்களும் ஜோடிப்புறாக்களும் ஆனந்தம் பாடுதடி…

என்று பாட, அவள் விழி விரித்து அவனை பார்க்க, அர்ஜுன்
 
முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி
ரத்தத்துல ஓடுது சாத்துக்குடி

என்று ஆட… மீரா வாயை பிளந்தாள்.

அஜய், பெண்ணுக்கு சீதனம் உண்டு பேசிய பேச்சுப்படி என்று கண்ணடிக்க,

விது, தலையணை மந்திரம் என்றால் என்னன்னு கேட்டுக்கடி என்று குறும்பாய் பாட,

இப்பொழுது நால்வரும், சேர்ந்து நடமாடிக்கொண்டே… அவரவர் துணையின் கையை சுற்றி அவர்கள் அருகில் நிற்க வைத்து,

திருமணம் நிலவுல வச்சுக்கடி..
தேனிலவு காதலர் இஷ்டப்படி…
என்று ஆட,

பெண்கள் வெட்கத்தில் சிவந்தனர்.

பின் துருவ்,

நாடு நகரம் யாவும் இங்கே எங்கும் நம் பேச்சு, என்று பாட

அர்ஜுன், தேதி பார்த்து, நேரம் குறித்து தேதியும் வச்சாச்சு,

உத்ரா, வாழை மரங்கள் வாங்கி வரவே ஆளும் போயாச்சா

மீரா, வானவில்லை தூக்கி வந்து தோரணம் போட்டாச்சா என்று தலையை சாய்க்க,

அஜய், கல்யாண நாளன்று ஊரில் விடுமுறை விடுவோமா… கச்சேரி கேட்பதற்கே நாம் கிளிண்டனை அழைப்போமா. என்று சுஜியின் இடையை வளைக்க,

விதுன், நேற்று உன்னை பார்த்த பார்வையோ நேர்மையானது என்க…

அனு, இன்று என்னை பார்க்கும் பார்வையில் ஏதோ இருக்கிறது.. என்று சிரித்தாள்.

பின், அனைவரும் சேர்ந்து, ஊரெங்கும் கேட்கணும் நாதஸ்வரம், காதலுக்கு ஏழல்ல நூறு ஸ்வரம்… லாலா லாலா லாலா லாலால..

மார்கழி மாசத்து மல்லிகை பூவொன்று மாலையில் சேருதடி
மாடப்புறாக்களும் ஜோடிப்புறாக்களும் ஆனந்தம் பாடுதடி..

 கவுண்டருல டிக்கெட்டு தீர்ந்துருச்சே..
தியேட்டர் இப்போ ஹவுஸ் ஃபுல் ஆகிடுச்சே…
ல ல ல ல லா ல ல லா ல லா..ல ல ல ல லா ல ல லா ல லா.. என்று நடனடமாடி, மகிழ்ச்சியில் களித்தனர்.

மறுநாள், நான்கு பெண்களும், அலங்காரம் செய்து கொண்டிருக்க.. உதி, சுஜியிடம் “பங்கு எனக்கு டவுட்…?” என்று யோசனையாய் கேட்க, அவள் என்ன என்று பார்த்தாள்.

இல்ல “நேத்து சுயம்வரம் சாங்லாம் பாடுனோம். அப்போ அந்த  படத்துல வர்ற மாதிரி நம்மளை கடத்திடுவாங்களோ” என்று கேட்க,

மீரா மிரண்டு, “க்ளைமேக்ஸ்ல கூட இந்த கடத்தலை விட மாட்டீங்களா” என்று கடுப்பாக,

உதி அசடு வழிந்து “ஈஈ… சும்மா கேட்டேன்.” என்று சொல்ல, அனு “போதும்.. இன்னொரு கடத்தலை இந்த கதை தாங்காது… போய் கிளம்புற வழியை பாரு” என்று இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்க, யாரோ கதவு தட்டும் சத்தம்கேட்டது .

சுஜி, “அய்யோயோ உண்மையிலே யாரோ கடத்த வர்றாங்க. வாங்க எல்லாரும் ஒளிஞ்சுக்குவோம்” என்று கூப்பிட, உத்ரா தலையில் அடித்து,

“ஹே சுத்தி. போலீஸ் இருக்குடி காவலுக்கு… அதை தாண்டி யாரு வர போறா…” என்று கதவை திறக்க, அதிர்ந்து நின்றாள்.

மூவரும், எதுக்கு இவ இப்படி நிற்கிறா, என்று அங்கு சென்று பார்க்க, அங்கு ரிஷி நிற்பதை கண்டு, சுஜியும், மீராவும் அதிர,அனு இது யாரு என்று பார்த்து கொண்டிருந்தாள்.

உத்ரா, “அண்ணா” என்று தாவி அணைத்துக் கொள்ள, அவன் சிறு சிரிப்புடன், “ஹே கல்யாண பொண்ணு… இந்த நேரத்துல போய் அழுதுகிட்டு.” என்று சமன்படுத்த, துருவ் அங்கு வந்தவன், இருவரையும் கை கட்டி பார்த்து கொண்டிருந்தான்.

உத்ரா “நீ எப்போ வந்த… நீ எப்படி ஜெயில்ல இருந்து” என்று கேட்க, அவன் துருவை பார்த்து “இவன் தான் வெளிய எடுத்தான்… இப்போ கூட அவன் நண்பனா கல்யாணத்துக்கு கூப்பிடல… அவரோட ஹனி நான் வரலைன்னா வருத்தப்படுவாள்னு கூட்டிட்டு வந்துருக்கான்…” என்று அவன் தோளை தட்ட, அதில் துருவ் அவனை “டேய்… நீ இப்படி கூப்பிட்டா தான வருவன்னு தான்டா…” என்று முறைக்க,

உத்ரா, சிரிப்புடன் துருவை ரசித்து விட்டு ரிஷியிடம், “அப்போ இனிமே எங்க கூடவே இரு ரிஷி…” என்று அவனை ஆர்வமாக பார்த்தாள்.

அவன், “நான் லண்டன் போறேன் உதி. என்னால இங்க இருக்க முடியாது. எனக்கு தனிமை தான் வேணும்… ப்ளீஸ்” என்று கெஞ்ச,

அவள் “ப்ச் நீ கல்யாணம்” என்று ஆரம்பிக்க,

“ப்ளீஸ் உதி… இப்போ எதுவும் பேச வேணாமே. எனக்கு கல்யாணத்துல இன்டெரெஸ்ட் இல்ல.” என்று மறுக்க, அந்த நேரம் அஜயும், விதுனும் வந்து அவனை அணைத்து கொண்டனர்.

இதில் விதுன் தான், “சரி சரி கல்யாணத்துக்கு நேரமாச்சு போய் கிளம்புங்க” என்று அவனைவரையும் கிளப்ப முயல,

அஜய், ” ஏண்டா இப்போ சங்கத்தை கலைக்கிற…” என்று முணுமுணுக்க, அவன், “டேய் இதுங்க எந்த நேரத்துல என்ன முடிவெடுக்குங்கனு சொல்ல முடியாது. திடீர்னு ரிஷி கல்யாணமும் சேர்ந்து இங்கயே நடக்கணும்னு சொல்லுச்சுங்க…

உன் மாமனாரும், என் மாமனாரும்  வேற யாருக்காவது மாமனார் ஆகிடுவாங்க” என்று புலம்ப, அஜய்க்கு அடி வயிறு கலங்க தான் செய்தது.

“சொல்ல முடியாது தாலி கட்டுற நேரத்துல முடிவை மாத்துனாலும் மாத்துங்க.” என்று அவனும் அவர்களை அனுப்ப முயன்றான்.

அர்ஜுன், சஞ்சுவுக்கு டிரஸ் மாற்றி விட்டு கிளப்பி கொண்டிருந்தான். பெரியவர்கள் அவனை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லியும், அவன் என்னுடன் தான் இருப்பான் என்று திட்டவட்டமாக சொல்லி விட்டான்.

உத்ராவும். துருவும் அவர்களின் ஸ்பேசில் நாம் தலையிட கூடாது என நினைத்து அவன் இஷ்டப்படி விட்டு விட்டனர்.

சஞ்சுவை தூக்கிக் கொண்டு, அவன் வெளியில் வர, அங்கு ரிஷியை பார்த்து, அவனும் சந்தோஷப்பட்டான்.

ரிஷி, சஞ்சுவை தூக்கி கொஞ்ச, அவனுக்கு தான் அவன் யாரென்று தெரியவில்லை.

உடனே. மீராவிடம் தான் தாவினான். அவள் செய்வதறியாமல் நிற்க, ரிஷி “பிடி மீரா. இவன் உயிரோட இருக்குறதுக்கு காரணமே நீதான். இவனை உங்கிட்ட இருந்து பிரிக்க மாட்டேன்…” என்றவன்,

“அப்பப்போ நான் வந்து இவனை பார்த்துக்கலாம்ல…” என்று கெஞ்சலாய் கேட்க,

அவள் பதறி “ஐயோ என்ன அண்ணா நீங்க… அவன் உங்க பையன் தான். உங்களுக்கு அவன் மேல எல்லா உரிமையும் இருக்கு. நீங்க நீங்க.. அவனை வச்சுகோங்கன்னா… உங்களுக்குனு அவனாவது உங்க கூட இருக்கணும்ல” என்று அவனுக்காக பேச,

அர்ஜுன் தான் ‘எப்படித்தான் எப்பவுமே அடுத்தவர்களுக்காகவே யோசிக்கிறாளோ’ என்று அவளை வியந்து பார்த்திருந்தான். மற்றவர்களும்தான்.

ரிஷி லேசாக சிரித்து, “நான் தான் நல்ல குடும்ப சூழ்நிலையில நல்லவங்ககிட்ட வளரல. ஆனால், என் பையனாவது நல்ல அம்மா கிட்ட வளரனும். அவன் உன்கிட்டயே இருக்கட்டும்” என்று சொல்லி அவளிடமே ஒப்படைத்தான்.

அனைவரும் ஒவ்வொரு உணர்ச்சி மிகுதியில் இருக்க, பின், மீண்டும் சென்று கிளப்ப ஆரம்பித்தனர்.

ரிஷி பெரியவர்களுடன் ஐக்கியமாகி விட, நேரம் நெருங்க நெருங்க, பெண்கள் கூட தயாராகி மணமேடைக்கே வந்து விட்டனர். ஆனால்.. இந்த ஆண்கள் மட்டும் வெகு நேரம் கழித்து தான் வெளியில் வந்தனர். அப்படியும் துருவ் இன்னும் வராமல் இழுத்தடிதான்.

அப்பொழுதுதான் அவன் வரவில்லை என்று உணர்ந்த மூவரும், எங்கடா அவன் என்று ஒருவரை ஒருவர் கேட்டு கொண்டனர்.

விது “அவன் ட்ரெஸ் மாத்துறேன்னு அந்த ரூமுக்கு போனான். இன்னும் வரலடா” என்க,

அஜய்.. “டேய்… பொண்ணு ரெடி, தாலி ரெடி. அதை கட்டவிடாம ஏண்டா டார்ச்சர் பண்ணுறீங்க…” என்று கதற,

அர்ஜுன், “ப்ச்… டேய்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே துருவ் பேண்ட் சட்டையில் வெளியில் வர,

உத்ரா, “என்ன துருவ் இது? உங்க வேட்டி சட்டை எங்க” என்று கேட்க, அவன் “அது வேணாம் எனக்கு பிடிக்கல” என்றதும், அவள் அவனை முறைத்து, “ஒழுங்கா போய் கட்டிட்டு வாங்க” என்று மிரட்ட,

அர்ஜுன், “டேய், என்னடா இந்த ட்ரெஸ்ல வந்து இருக்க… நாங்க குடுத்த வேட்டி எங்கடா. போய் கட்டிட்டு வா”  என்று சொல்ல துருவ் கடுப்பாகி,

“டேய் சும்மா கட்டு கட்டுன்னா எப்படிடா கட்டுறது. எனக்கு வேஷ்டியே கட்டத் தெரியாது. நான் வேணும்னா போய் கோர்ட் ஷூட் போட்டுட்டு வரவா…” என்று வினவ,

அஜய், “ஆமா இங்க என்ன பிசினெஸ் மீட் ஆ நடக்குது கோர்ட் ஷூட் போட…” என்று அவனை அப்படியே தள்ளிக் கொண்டு, மூவரும் அறைக்கு சென்றனர்.

சில பல நிமிடங்கள் கழித்து, மூவரும், டயர்ட் ஆகி, வேர்வையை துடைத்து கொண்டு வெளியில் வர, உத்ரா “என்னடா ஆச்சு…” என்று கேட்க,

“ஒரு வேட்டியை அவனை கட்ட வைக்கிறதுக்குள்ள ஷப்பா” என்று தலையில் அடித்து கொண்டு, மணவறையில் அமர்ந்தனர்.

துருவ் மெதுவாக வெளியில் வர, அவனை அந்த காஸ்டியூமில் பார்த்த உத்ரா வியப்பில், ‘ஹையோ எந்த ட்ரெஸ் போட்டாலும் ஹாண்ட்ஸமா இருக்கானே…’ என்று வாயை பிளந்து கொண்டு பார்க்க,

விது “யம்மா நீ சைட் அடிச்சது போதும்… போய் மணமேடைல உட்காரு.” என்று சொல்ல, அவள் முகத்தை சுளித்து கொண்டு போய் அமர்ந்தாள்.

முதலில், துருவ் உத்ராவின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவிக்க, சிரிப்புடனும் காதலுடனும் அதனை ஏற்றவள்,” இதோட நம்ம மூணாவது தடவை கல்யாணம் பன்றோம்  புருஷா”  என்று சொல்ல, அவன் காதருகில் வந்து, “மூணு தடவை கல்யாணம்  பண்ணியும்,இன்னும் ஒரு தடவை கூட ஃபர்ஸ்ட் நைட் நடக்கல ஹனி” என்று அவளை சிவக்க வைக்க,

அடுத்து, மடியில் சஞ்சு அமர்ந்திருக்க அர்ஜுன் மீராவிற்கு பொன்தாலியை அணிவித்தான். அதனை கண் கலங்கி ஏற்று கொண்டவள், கண்ணில் நீர் உருண்டோடியது.

எந்த சொந்தமுமே இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்த அவளுக்கு, இன்று இத்தனை சொந்தங்களைக் கொடுத்த அர்ஜுனை காதலுடன் பார்க்க, அவன் அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு,

“இங்க பாருடா உன் அம்மாவை… ஷேம் ஷேம் ஆ அழுகுறாங்க” என்று சஞ்சுவிடம் கிண்டலடித்து அவளை சிரிக்க வைத்தான்.

விது தாலி கட்ட போக, சட்டென்று அஜயிடம், “பங்கு, மூணு முடிச்சு தானடா போடணும்…” என்று சந்தேகமாய் கேட்க, கையில் தாலியுடன் காத்திருந்த அஜய், “எத்தனை முடிச்சாவது போட்டு தொலைடா…” என்று கடுப்படிக்க, அவன் சிரிப்புடன், அனுவை தன் மனையாளாக்கி கொண்டான்.

பின், அஜய் தாலி கட்டப்போக, விது, “பங்கு…” என்று பேச வர, அஜய், “இவனுங்க நம்மளை நிம்மதியா கல்யாணம் கூட பண்ண விடமாட்டானுங்க போல, கல்யாணம் ஆனதும் முதல் வேலையா இவனுங்க பிரெண்ட்ஷிப்ப கட் பண்ணனும்” என்று அவன் குரலை காதில் வாங்காதது போன்று வேக வேகமாய், சுஜிக்கு தாலி கட்டினான்.

பின், நால்வரும், அவரவரின் மனையாளுக்கு குங்குமம் வைக்க துருவ் உத்ராவின் நெற்றியில் குங்குமம் வைத்து, அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

அர்ஜுன் வேகமாக சஞ்சு கண்ணை மூடி, “டேய் என்னடா பண்ற…” என்று பதற,

விது, ” இதுக்குதான்… வெளிநாட்டுல இருந்துலாம் மாப்பிள்ளை இறக்ககூடாது. இப்போ பாரு இந்தியாவை இங்கிலாந்து ஆக்கிக்கிட்டு இருக்கான்.” என்று ஒருவரை ஒருவர் வாரி, மன நிறைவுடன், திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைத்தனர்.

துருவின் பங்களாவிலேயே அனைவருக்கும் முதலிரவு ஏற்பாடு ஆனது. இரவு சாப்பிட்டு கொண்டிருக்கையில் விது தான் அதி முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டான்.

“அர்ஜுன்… லவ் கல்யாணம் எல்லாம் ஒண்ணா நடந்த மாதிரி ஒண்ணா தான் குழந்தை பெத்துக்கணும்னு எதுவும் ரூல்ஸ் போட மாட்டீங்களே” என்று கேட்க, அதில் மற்றவர்கள் வெடித்து சிரித்தவாறு, “உன் இஷ்டம் டா அதெல்லாம்” என்று விட, ஹப்பா என்று நிம்மதி அடைந்தான்.

இரவு, அனு விது அறைக்கு வர, அவன் அவளை பார்த்து மெலிதாய் சிரித்தான். அவளும், அவனை பார்த்து வெட்கத்துடன் சிரித்து அவன் அருகில் வந்து அமர்ந்து கொள்ள, அவன் அவளிடம் அவளை பார்த்தது முதலான விஷயத்தை பற்றி பேசி நேரத்தை போக்கி விட்டு, “சரி நீ தூங்கு” என்று சொல்ல, அனு அவனை முறைத்து “தூங்குறதுக்கா இவ்ளோ ஏற்பாடு பண்ணிருக்கு” என்று சொல்ல,

அதில் சிரித்தவன், “உன் படிப்பு முடியட்டும்” என்று பேச வருகையில், அவள், “இந்த சாமியார் வேஷம்லாம் வேணாம் வினு. என் படிப்பையும், இதையும் நான் பாலன்ஸ் பண்ணிப்பேன். கல்யாணம் ஆகி, குழந்தை பெத்தவங்கள்லாம் படிக்கறது இல்லையா. இப்போ என் கூட குடும்பம் நடத்த முடியுமா முடியாதா உன்னால” என்று மிரட்டலை ஆரம்பித்தவள், மொத்தமாய் அடங்கினாள் அவன் அணைப்பில். அவளே சொன்ன பிறகு தள்ளி இருக்க, நான் என்ன லூசா என்று அவளை தன்னவளாக்கும் வேலையை செவ்வனே செய்தான்.

அஜய் அறையில், சுஜி, அவள் பாட்டிற்கு வந்து, அவள் செய்த அலங்காரங்களை அகற்றி கொண்டிருக்க, அவன் “அடியேய் என்னடி இப்படி வர்ற… கொஞ்சமாவது வெட்க்கபடுடி…” என்று கேட்க,

அவள் “வந்தா தான வெட்கப்பட முடியும். இப்போதான் நான் உன்னை புதுசா பார்க்குறேனா…” என்று அவள் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னாள் நிற்க, அவளை பின்னிருந்து அணைத்தவன் “உன்னை வெட்கப்பட வைக்கல நான் அஜய் இல்லடி…” என்று அவளை சிவக்க வைத்திருந்தான்.

மீரா, படபடப்புடன் அர்ஜுன் அறைக்கு வர, அர்ஜுன் அவளையே ஆழமாய் பார்த்திருந்தான். அதில் சிவந்தவள், “என்ன அர்ஜுன் அப்படி பார்க்கறீங்க…” என்று திணற,

அவன், “என்ன  இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க…” என்று ரசனையுடன் கேட்க, அவள் வெட்கத்துடன் அவனை முறைத்து, “அப்போ இவ்ளோ நாள் நல்லா இல்லையா…” என்று எதிர்கேள்வி கேட்க,

அவன் புன்னகைத்து கொண்டு, அவள் அருகில் நெருங்கி, “இல்லையே” என்று குறும்பாய் கூற, அவள் வெட்கத்தை விடுத்து, “ஹ்ம் அஜ்ஜு” என்று சிணுங்கினாள்.

அந்த சிணுங்களில் மொத்தமாய் தன்னை இழந்தவன், இத்தனை வருட காதலையும், மொத்தமாய் காட்டினான்.

உத்ரா, துருவ் அறைக்கு வர, அங்கு அவனைக் காணாமல், “எங்க போனான் இவன். கடைசி எபி வரை நமக்கு இவன் ஷாக் தான் குடுப்பான் போல…” என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டு, அவனை தேடி போக, அவன் பால்கனியில் இருக்கும் ஊஞ்சலில், அமர்ந்து நிலாவைப் பார்த்து கொண்டிருந்தான்.

அதனை பார்த்தவள், வேகமாக அவன் அருகில் சென்று, அவன் சட்டையைப் பிடித்து, “டேய் புருஷா… நீ எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு, நான் வரவும், என்னை சைட் அடிப்பன்னு பார்த்தா நீ அந்த நிலாவை பார்த்து சைட் அடிச்சுகிட்டு இருக்க.” என்று முறைக்க, அதில் சிரித்தவன்,

“ஹே ஹனி முதல்ல உட்காரு…” என்று அவளை மடியில் இழுத்து போட்டு கொண்டான்.

அவள் அவன் கழுத்தை கட்டிக் கொண்டு, “இங்க என்ன பண்ற புருஷா?” என்று கேட்க, அவன், “என்னால நம்பவே முடியல ஹனி. மறுபடியும் நீ எனக்கு கிடப்ப… இப்படி மடியில உட்காருவ. இப்படி நான் உன்னை கட்டிப் பிடிப்பேன்னு நான் நினைக்கவே இல்லை உதி…

உன்னை உன்னை தொலைச்சுட்டேன்னு தான் நினைச்சேன். நீ இல்லாம செத்துட்டேண்டி. இப்போ மறுபடியும் பிறந்த மாதிரி இருக்கு ஹனி.” என்று உணர்ச்சி மிகுதியில் பேசியவனை, பாவமாய் பார்த்தாள்.

தான் ஆசைப்பட்ட பொம்மை தனக்கு கிடைத்து விட்ட, குழந்தையின் மகிழ்ச்சியில் தான் அவன் இருந்தான். அவன் தலை முடியை ஆதரவாக அவள் கோத, துருவ் “உதி இனிமே எப்பவுமே, ஒரு நிமிஷம் கூட என்னை பிரிய மாட்டில…” என்று அவள் முகத்தைப் பார்த்து சிறு குழந்தையாய் கேட்க,. “என் பாப்பாடா நீ…” என்று அவன் கன்னத்தை கிள்ளியவள்,

“நீ ஏன் உணர்வுடா புருஷா. என் உடம்புல ஒரு பகுதிடா நீ. அதனால தான்.. உன்னை என் மூளை மறந்தாலும், என் உணர்வுகள் மறக்கல. லவ் யு டா புருஷா… உன்னை உன்னை அவ்ளோ லவ் பண்ணனும்னு தோணுதுடா… லைக் பைத்தியம் மாதிரி” என்று பேசிக்கொண்டே போக, அதில் உருகியவன், அவளை இறுக்கமாக அணைத்து கொண்டான்.

நேரம் ஆக ஆக அந்த அணைப்பு, அவனுக்கு வேறு உணர்வுகளை தோற்றுவிக்க, அவள் அதரங்களை சிறை பிடித்தான்.

சில நிமிடம் கழித்து விடுவித்தவன், “ஹனி நீ எனக்கு வேணும்டி இப்போவே” என்று தாபத்துடன் கூற, அவள் கையை தூக்கி “ஐ அம் ஆல்வேஸ் யுவர்ஸ்” என்று அனுமதி கொடுக்க, அவனின் மூன்று வருட, காதலையும், ஏக்கத்தையும், ஆசையையும், திகட்ட திகட்ட அவளுக்கு காட்டினான்.

அவனின் மென்மையான ஆக்கிரமிப்பில் உத்ராவும், மொத்தமாக சரணடைந்தாள் அவளின் ஊனோடு உறைந்தவனிடம்.

சில வருடம் கழித்து…

துருவ் கடுங்கோபத்தில் அவனின் இரண்டாவது செல்வ மகள் சாஹித்யாவை திட்டிக் கொண்டிருந்தான். 6 ஆம் வகுப்பு படிக்கும் சாஹித்யா, கை கட்டி, ஒன்றும் அறியாதது போல் முகத்தை வைத்து கொண்டு, அவன் திட்டுவதை கேட்டுக்கொண்டிருந்தாள்.

“திஸ் இஸ் டூ மச் சாஹி… கொஞ்சம் கூட உனக்கு டிசிப்பிளீனே இல்ல…” என்று திட்ட, துருவின் முதல் செல்வ புதல்வன், அபி நந்தன் தன் ஒரு வயதே குறைவான தங்கையை, பார்த்து, “ஆமா டேடி… இவள் ரொம்ப ஓவரா போறாள். இவள் மட்டுமா இந்த இங்க நிக்கிற எல்லாரும் தான் வானதியை தவிர” என்று கோள் மூட்டினான்.

வானதி, அர்ஜுன்-மீராவின் செல்ல மகள், சமத்தும் கூட. அப்படியே மீரா மாதிரி. அபிநந்தன் சுட்டி காட்டிய மற்ற வானரங்கள், அஜய் சுஜியின் மகள் ஜான்வியையும், விது அனுவின் மகன் சூர்யாவையும் தான். இதில்

அபிக்கும், சூர்யாவுக்கும் ஒரே வயது. சாஹித்யா, வானதி, ஜான்வி மூவரும் சில பல மாதம் முன்ன பின்ன என்றாலும், ஒரே வகுப்பு தான்.

மேலும் அபி, துருவிடம் “டாடி அவள் ரொம்ப சேட்டை பண்ணுறாள். அவள் கிளாஸ் பசங்களை மட்டும் இல்லாமல் என் கிளாஸ்க்கு வந்து பசங்களை டீஸ் பண்றா டாடி. முதல்ல இவளை ஒரு ஹாஸ்டல்ல சேர்த்து விடுங்க..” என்று சொல்ல அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த சாஹித்யா, துருவின் திட்டுக்கு பயந்து, ஃபைலை பார்ப்பது போல் ஆக்ஷ்ன் செய்து கொண்டிருந்த உத்ராவை நோக்கி,

“அம்மா, என்னை ஹாஸ்டல்ல சேருங்க. எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. ஆனால் தப்பி தவறி இந்த மிஸ்டர் பெர்ஃபக்ட்ட ஹாஸ்டல்ல சேர்த்துறாதீங்க. அங்க இருக்குற வார்டன் கூட இவன் பெர்ஃபக்ஷ்ன் பார்த்து ஓடிடுவாரு” என்று கிண்டல் செய்ய, ஜான்வியும், சூர்யாவும் கிளுக்கென சிரித்தனர்.

அபி அப்படியே துருவ் மாதிரி என்றால், சாஹி அப்டியே உத்ரா மாதிரி. இப்பொழுது கூட, வகுப்பு நடக்கும் நேரம் மூவரும் காம்பௌண்ட் சுவர் ஏறி பள்ளிக்கு வெளியில் குதித்து, ஐஸ் கிரீம் சாப்பிட்டு விட்டு, மீண்டும் உள்ளே வரும்போது, மாட்டிக்கொண்டார்கள்.

பள்ளி நிர்வாகம், துருவை அழைத்து, கிழி கிழி என கிழிக்க, அவன் அதை அவனின் மகளிடம் காட்டினான்.

“சாஹி, இந்த மாதிரி இன்னொரு தடவை நீ சுவர் ஏறி குதிக்கிறதை பார்த்தேன். நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று கண்டிப்பாய் கூற,

சாஹி, “பரவாயில்லை டாடி. நீங்க என்ன பண்ணுவீங்கன்னு யோசிச்சு சொல்லுங்க. உடனே சொல்லணும்னு அவசியம் இல்லை…”என்று குறும்பாய் சொல்ல, இப்பொழுது அபியும் சிரித்து விட்டான்.

அவன் “வாயி வாயி அப்படியே உங்க அம்மா மாதிரி” என்று உதட்டில் சிரிப்பை மறைத்து கொண்டு உத்ராவை முறைக்க, அவள், எதையுமே கண்டுகொள்ளவில்லை.

அவளை பார்த்து தானே அவர்கள் இவ்வளவும் கற்றுக்கொண்டார்கள் அப்பறம் எப்படி பேசுவாள்.

அப்பொழுது, ஆண்கள் மூவரும் வந்து நடக்கும் கூத்தை பார்க்க,  துருவ் மேலும் அவளுக்கு கிளாஸ் எடுக்க, அபி உடனே “டாடி சும்மா சாஹியை மட்டும் குறை சொல்லாதீங்க. உங்க ஹனியை பார்த்து தான் அவள் இப்படிலாம் பண்ணுறாள். லாஸ்ட் வீக் நீங்க ஆஸ்திரேலியா போயிருந்தப்போ, அம்மா, அஜய் சித்தப்பா, விது மாமா மூணு பேரும் நம்ம வீட்டு சுவரை ஏறி குதிச்சு வெளிய போனாங்க. அதை பார்த்து தான் அவளும் பண்ணிருக்கா” என்று அசால்ட்டாக மூவரையும் மாட்டிவிட,

 உத்ரா, அடப்பாவி… என்று பார்த்தாள்.

அர்ஜுன், வாய் விட்டு சிரித்து, “பார்த்தியா உதி எப்பயும் நீ தான் யாரையாவது மாட்டிவிடுவ. இப்போ உன்னையவே மாட்டிவிட ஒரு ஆள் வந்துருச்சு” என்று சொல்ல, அஜயும், விதுனும்  நைசாக எஸ்கேப் ஆகி விட்டனர். இல்லை என்றால், அடுத்த டோஸ் அவர்களுக்கு தான் என்று தெரியாதவர்களா அவர்கள்…

சாஹி, அவள் அம்மாவை காப்பாத்த, “டாடி இவன் பொய் சொல்றான். அம்மா தர்ஸடே நைட் வெளிய போகவே இல்லை… இது இது, ஹான் சூர்யா மேல ப்ரோமிஸ்” என்று தெளிவாக சத்தியம் பண்ண,

அவன் “மாமா இவள் எப்போ பார்த்தாலும் என் மேலயே பொய் சத்தியம் பண்ணுறா…” என்று புகார் கொடுக்க, பின்  துருவ் உத்ராவை முறைத்து கொண்டிருக்கும் நேரத்தை பயன்படுத்தி, அபி தவிர மற்ற வாண்டுகள் வெளியில் ஓடி விட,

உத்ரா, அபியிடம், “டேய் மிஸ்டர் பெர்ஃபக்ட்… எதுக்குடா என்னை கோர்த்துவிடற…” என்று முறைத்தாள்.

அவன், “ஆமா அப்படியே டாடிட்ட சொன்னாலும், அவங்களும் உங்களை திட்டிருவாங்க பாருங்க. ரெண்டே நிமிஷத்துல ஹனி ஹனி
ன்னு உங்க பின்னாடி தான் சுத்துறாங்க. உங்களுக்கு ஒரு நியாயம் என் தங்கச்சிக்கு ஒரு நியாயமா…” என்று துருவின் மகன் என்று நிரூபிக்க, அவ்வளவு நேரம் இவர்கள் அடிக்கும் கூத்தை பார்த்து கொண்டிருந்த,

சஞ்சு, “இப்போதானடா அவளை ஹாஸ்டல்ல சேர்க்க சொன்ன. அதுக்குள்ள இப்படி பேக் பல்டி அடிக்கிற…” என்று கேலி பண்ண,

அவனும் சிரித்து விட்டு, “வேற என்ன அண்ணா பண்றது? இல்லைன்னா அவள் ஸ்கூல்ல வந்து என்னை அசிங்கப்படுத்துறா” என்று வராத கண்ணீரை துடைத்து கொள்ள, இருவரும், சிரித்துக் கொண்டு வெளியில் சென்றனர்.

துருவ் அவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல், உத்ரா காதை திருகி, “எத்தனை தடவைடி சொல்றது… இப்படி சேட்டை பண்ணாதன்னு. இதுல உன் பொண்ணு உன்னை மாதிரியே வந்துருக்கா. ம்ம்ஹும் இன்னும் கொஞ்ச நாள்ல உன்னை ஓவர் டேக் பண்ணிடுவா போல. மூஞ்சிய மட்டும் பயந்த மாதிரி வச்சுக்கிட்டு, எப்படி பேசுறா பாரு…” என்று சொல்ல,

அவள் அவனிடம் இருந்து விலகி, “ஹலோ… உங்க பையன் உங்களை மாதிரி இருந்தா, அப்போ என் பொண்ணு என்னை மாதிரி இருக்க மாட்டாளா…” என்று சிலுப்பிக் கொள்ள, அவள் கன்னத்தை பிடித்து கிள்ளியவன்,

“நீ பண்ணுற சேட்டையை பார்த்து அவளும் சுவர் ஏறி குதிக்கிறா. கை கால் உடைஞ்சா வருமா…” என்று கண்டிக்க,

அவள், “நம்ம வேணும்னா, சுவர் ஏறி குதிக்கிற மாதிரி நல்ல க்ளோவ்ஸ் ஷூஸ் லாம் வாங்கிக்குடுத்துடலாமா துருவ். அடி படாம இருக்கும்ல…” என்று விழிகளை உருட்டி கேட்க,

“உன்னை..” என்று அடிக்க வர, அவள் ஓடியே விட்டாள்.

துருவ் தான் “யப்பா, இந்த வானரங்களை சமாளிக்கிறதே கஷ்டம். இதுல, இதுங்க எல்லாருக்கும் ஒரே மாதிரி வானரங்கள் வந்து இப்பவே சேட்டையை ஆரம்பிச்சுடுச்சு. எப்படித்தான் சமாளிக்க போறோமோ…” என்று நொந்தவன், உத்ராவை தேட, அங்கு அவள் தொழிலில் தொல்லை கொடுக்கும், ஒருவனை, போனிலேயே கதற விட்டு கொண்டிருந்தாள்.

எப்படித்தான், சேட்டையும் பண்ணிட்டு, பொறுப்பாவும் இருக்காளோ என்று நினைத்து அவள் போனை தூக்கி எறிந்து விட்டு, “லவ் யு ஹனி” என்று அணைத்துக் கொண்டான்.  

முற்றும்…
சுபம்.. சுபம்.. சுபம்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
78
+1
3
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *

    2 Comments

    1. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.