Loading

  • அனைவருக்கும் வணக்கம். நான் சுபா பாலாஜி. இது இந்த தளத்தில் என்னுடைய முதல் கதை. படித்து கருத்துக்களை சொல்லுங்க நட்புக்களே. உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்களுக்காக காத்திருக்கிறேன்
  •  
  • நினைவெல்லாம் நீயே 1

    காலை மணி ஐந்து என அலாரம் அடித்ததும் வேகமாக எழுந்த ஆராதனா, அதை நிறுத்தி விட்டு பக்கத்தில் திரும்பி பார்க்க..

    அந்த விடிவிளக்கின் ஒளியில் அசந்து தூங்கி கொண்டு இருந்த அம்மா கண்களில் தெரிய, அவர் இரவெல்லாம் ஆஸ்துமாவினால் தூங்காமல் அவதிப்பட்டது நினைவுக்கு வந்தது.

    சத்தமில்லாமல் எழுந்து கதவை திறந்து வெளியே வந்தவள் வேகமாக வாசல் தெளித்து சின்ன கோலம் ஒன்று போட்டு விட்டு பின்னால் அவர்களுக்கென இருந்த காமன் குளியலறை போய் குளித்து விட்டு வந்தாள்.

    “என்ன ஆராதனா… இன்னிக்கும் ஷீட்டிங்க்கு போகணுமா…
    எங்க…எந்த லாங்க்வேஜ்…யாரு டைரக்டர்…” என ஆர்வமாக கேட்டபடி வந்த எதிரே வந்த அத்தை சுசீலாவை பார்த்து சின்னதாக சிரித்தவள் “ஆமா அத்தை இன்னும் நாலு நாளைக்கு சென்னைல தான்.. ஓ. எம். ஆர்ல ஷூட்டிங்…தமிழ் படம்…”

    “எல்லாம் அந்த விவகாரமானவன் தான் டைரக்டர்…அவனுக்கு எப்பவுமே ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் னாலே எளக்காரம் தான்..”

    “எடுத்த ஷாட்டே எடுத்து படுத்துவான்..இன்னிக்கு சாங்க் கன்டினியுடி வேற..எங்களை எல்லாம் என்ன பாடுபடுத்த போறானோ தெரியல..”

    “அவனுக்குனு ஒரு டைம்ல வருவான்..எப்ப வருவானு தெரியாது… வருவானானே தெரியாது..காத்திருக்க வெச்சு சாவடிப்பான்”

    “வந்தான்னா பசி, தூக்கம் கூட இல்லாம பேய் மாறி வேலை செய்வான்..மத்தவங்களும் அவனை மாறி இருக்கணும்னு எதிர்பார்பான்.. “

    “அவன் சொன்ன மாறி கொஞ்ச கூட மாத்தாம அப்டியே நடிக்கணும்..சின்ன தப்பு பண்ணா கூட எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும். ..யாரு என்னானே பாக்காம கொஞ்சம் கூட யோசிக்காம… எல்லா மொழிலயும் இருக்கற கெட்ட வார்த்தையால திட்டி தீத்திடுவான்…”

    “ஹீரோ எட்டு மணி ஷுட்டிங் னு ஏழரை மணிக்கே மேக்கப் போட்டுட்டு ரெடியா இருக்கான்…..பெரிய நடிகரோட பேரன்னு நிரூபிக்கறான்..”

    “அவன் ஸ்பாட் இருக்கற இடம் தெரியாம இருக்கான்…ஆனா அவனோட அல்லக்கைங்க தொல்லை தான் தாங்கவே முடியல.. ஏகப்பட்ட பந்தா அத்தை..”

    “யாருடி ஹீரோயின்”

    “எல்லா உனக்கு பிடிச்ச தேவதை தான்”

    “நிஜமாகவே அவ அவ்ளோ அழகா வெள்ளையா இருக்காளா டி..கிட்ட பாத்தியா நீ”

    “ம்க்கூம்…எங்க..கேரவேன்ல ஏறினா ஷாட்னு சொன்னதும் வருவா..முடிஞ்சதும் ஓடி போயிடுவா..”

    “நீ என்ன ஹீரோயின் எல்லாம் புதுசாவா பாக்கற அத்தை..எல்லாம் மேக்கப் தான்..ஏதோ அவ பக்கத்துல உக்காரவே எனக்கு தெரிஞ்சது..”

    “ம்ம்ம்..பரவால்ல டி இப்ப ஹீரோயின் பக்கத்துல எல்லாம் உக்காரரீங்க..ஆனா எங்க காலத்துல எல்லாம் ஏதோ பெரிய வியாதிக்காரவங்க மாறி எங்கள தனியா ஒதுக்கி வெப்பாங்க..”

     “காம்பிநேஷன் ஷாட்ல கூட தள்ளி தான் நடிக்கணும்..அது ஒரு காலம்…”

    ” சரி அத்தை..நீ விட்டே பேசிட்டே இருப்ப..எனக்கு கேக்க நேரமில்ல..கிளம்பணும்”

    “ஷுட்டிங் முடிச்சு வர எத்தனை மணி ஆகுமோ தெரியாது..நல்ல வேளை மணி அண்ணன் கூட இருக்காரு…
    கவலை இல்லாம இருக்கலாம்..” என வேகமாக தகவல்களாக சொன்னவள்…

    “நேத்து நைட் பூரா அம்மா கொஞ்ச நேரம் கூட தூங்கவே இல்ல…ஆஸ்துமா தொந்தரவு அதிகமா இருந்தது…நீ கொஞ்சம் அம்மாவை கூடவே இருந்து பாத்துக்க..”

    “சமையல் முடிச்சிட்டேன்…சாதம் வடிச்சு…மிளகு குழம்பு வெச்சிருக்கேன்..எதாவது சூப் வேணும்னு கேட்டா நீ கொஞ்சம் வெச்சு குடு அத்தை…”

    “இன்னிக்கு அம்மாவை டாக்டர் கிட்ட கூப்பிட்டுகிட்டு போகணும் அத்தை…தாத்தா கிட்ட ஏற்கனவே பணம் கேட்டிருக்கிறேன்… வாங்கிட்டு அம்மாவை கூப்பிட்டு போயிட்டு வா அத்தை”

    ” உள்ளே சாமி மாடத்துல ரெண்டாயிரம் ரூபாய் வெச்சிருக்கேன்…ராமு அத்தான் வீட்டுக்கு வந்ததும் அதை இன்சூரன்ஸ்க்கும், போஸ்ட் ஆபீஸுக்கு கட்டினத்துக்கும் எடுத்துக்க சொல்லு…சரியா…”

    “அத்தை எனக்கு மணியாச்சு நான் கெளம்பறேன்..” என சொல்லி விட்டு வேகமாக வீட்டுக்குள் நுழைந்து அடுத்த ஐந்து நிமிடத்துக்குள் தயாராகி வீட்டுக்கு வெளியே வந்தவள் இவளை போல துணை நடிகர்களை அழைத்து போக வரும் கம்பெனி வேனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

    அவள் போனதை பார்த்தபடி இருந்த சுசீலா..பாவம் ஆராதனா…அத்தான்
    இருக்கறவரை கஷ்டமே தெரியாம சந்தோஷமா வளர்ந்த பொண்ணு…இப்ப இப்டி வாழ்க்கையில கஷ்டப்படுதே..

    இனி மேலாவது அவளோட வாழ்க்கை நல்லா இருக்கணுமே.. என மனதுக்குள் நொந்தபடி சுசீலா தன் வேலைகளை பார்க்க சென்றார்

    ஆராதனா வீடு தமிழ் சினிமாவின் சொர்க்கம் என சொல்லப்படும் கோடம்பாக்கத்தில் ஒரு ஒண்டு குடித்தனத்தில் இருந்தது.

    அவளுடைய அம்மாவும்,சுசீலாவும் திருநெல்வேலிக்கு பக்கத்தில் இருந்த மானூர்(கற்பனை) கிராமத்தை சேர்ந்தவர்கள்.

    இருவருமே மிக வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். வரலட்சுமிக்கு ஒரு அண்ணனுக்கு சுசீலாவின் அக்காவை கல்யாணம் செய்திருந்ததால் அவர்கள் உறவினர்களாகவும் இருந்தனர்.

    அவர்களின் இளவயதில் ஊரில் ஷீட்டிங் எடுப்பதை பார்த்தவர்கள், அதில் ஈர்க்கப்பட்டு சினிமாவில் நடிக்கும் ஆசையால் இருவரும் யாருக்கும் தெரியாது சினிமாவில் நடிப்பவர்களோடு இணைந்து தங்களது ஊரை விட்டு ஓடி வந்து விட்டார்கள்.

    சென்னை வந்ததும் அவர்களுக்கு எங்கே போவது என தெரியாது மலைத்து போய் நின்றனர். நல்ல வேளையாக அதே ட்ரெயினில் அவர்களோடு வந்த சினிமா காஸ்ட்யூமர் பராங்குசத்தின் கண்களில் படவே, அவர் இவர்களின் தோற்றத்தை பார்த்து இருவரையும் தனியாக அழைத்து கேட்க…தாங்கள் சினிமாவில் நடிப்பதற்காக வந்திருப்பதாக பெருமையாக சொன்னார்கள்.

    அதை கேட்டு அதிர்ந்தவர், மிக பொறுமையாக அவர்களிடம் சினிமாவின் உள்ள ஆபத்துகளை பற்றி நல்ல வார்த்தைகளில் எடுத்து சொல்லி அவர்களின் மனதை மாற்றி, திரும்பி அவர்களின் வீட்டுக்கு அழைத்து போனார்.

    அதற்குள் ஊரில் பலரும் பல விதமாக பேசவே, அந்த வார்த்தைகளை தாங்க முடியாத அவர்கள் வீட்டில் தங்களது குடும்ப மானம் போய் விட்டது என சொல்லி இவர்கள் இருவருக்கும் இறந்து போய் விட்டதாக சொல்லி காரியமே செய்து விட்டனர்.

    அதன் பின் அங்கேயே நின்று அழுதபடி இருந்த அவர்களை ஆறுதல் சொல்லி தன்னோடு அழைத்து வந்தவர், அவர்களிடம் தன் வருமானத்தில் அவர்களை தன்னுடன் வைத்து காப்பாற்ற முடியாத அவரின் இயலாமையை சொல்லி, சினிமாவில் சின்ன சின்ன வேடங்கள் நடிக்க சான்ஸ் வாங்கி குடுத்து வாழ வழி காட்டினார்.

    பராங்குசம் என்றாலே கறார் பேர்வழி என சினிமா வட்டாரங்களில் பேர் இருக்கவே அவரை தாண்டி இவர்கள் இருவரையும் யாரும் எந்த கெட்ட எண்ணத்தோடு நெருங்க கூட முடியவில்லை.

    இருவரின் இள வயதை கணக்கிட்டு அவரே சொந்த பெண்களுக்கு வரன் பார்ப்பது பார்த்து பார்த்து வரலட்சுமிக்கு அசிஸ்டெண்ட் கேமராமேன் சிதம்பரத்தையும், சுசீலாக்கு அசிஸ்டெண்ட் டைரக்டர் மனோகரனையும் மாப்பிளையாக தேர்ந்தெடுத்து நல்லபடியாக கல்யாணம் செய்து வைத்தார்.
    அதன் பின் மிகுந்த சந்தோஷத்தோடு
    அவர்களின் வாழ்க்கை சென்றது.

    வரலட்சுமி ஒரு மகன், மகள் சுசீலா இரண்டு மகன்கள் என வாழ்க்கை அமைதியாக சென்றது.

    வரலட்சுமியின் மகன், சுசீலாவின் மகன்கள் நல்லபடியாக தங்களது படிப்பை முடித்து வேலையும் தேடி கொண்டனர்.

    எல்லாம் நல்லபடியாக இருந்ததை பார்த்து யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை, ஷீட்டிங் எடுக்கும் போது ஆற்றில் வந்த வெள்ளத்தில் மூழ்கி சிதம்பரமும், மனோகரனும் இறந்து போக மறுபடியும் திசை தெரியாது தவித்தவர்களை அரவணைத்த பராங்குசம் தம்பதிகள் ஆறுதலாக நின்றனர்.

    ஆனாலும் கணவன் இறந்த அதிர்ச்சியில் படுக்கையில் விழுந்த வரலட்சுமியை எந்த வைத்தியத்தினாலும் எழுந்து உட்கார வைக்க முடியவில்லை.

    மெல்ல மெல்ல வீட்டில் இருந்த பல சாமான்கள் அடகு கடைக்கு போக, சில மாதங்களில் வீட்டின் நிலையை புரிந்த ஆராதனா பராங்குசத்திடம் போய் தயங்கியபடி ” தாத்தா நானும் சினிமாவில நடிக்கறேன்.. ஏதாவது சான்ஸ் கிடைத்தால் சொல்லுங்க” என சொன்னாள்

    அதை கேட்டதும் பெருங்கோபத்தோடு பராங்குசத்தின் மனைவி கமலா “ஏன் டி உனக்கு அறிவு ஏதாவது இருக்கா இல்லையா.. எதுக்குடி உனக்கு இந்த சினிமா ஆசை..உலகம் கெட்டு கெடக்கு டி..நீ வேற சின்ன பொண்ணு டி.. அதான் உங்கண்ணன் இருக்கான்ல.. அவன் உங்களை பொறுப்பா பாத்துக்க மாட்டானா டி” என மனம் தாங்காமல் திட்டினார்.

    அதை கேட்டதும் பெருங்கேவலோடு அழுத ஆராதனா “பாட்டி.. உங்களுக்கு விஷயம் தெரியாதா.. அப்பா போயிட்ட பிறகு இத்தனை நாளுக்கு அப்பறம் அண்ணன் ரெண்டு நாளைக்கு முன்னால வீட்டுக்கு வந்திருந்தான்..”

    “அவன் கம்பெனில கூட வேலை பண்ற பொண்ணை யாருக்கும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டானாம்.. அவன் பொண்டாட்டியையும் கூப்பிட்டுகிட்டு வீட்டுக்கு வந்திருந்தான்.. ” என சொல்லி அழுதாள்.

    “ஆளை பாக்கவே படு லோக்கலா இருந்தது பாட்டி… ஆனா அந்தம்மா என்னவோ பெரிய ராயல் பேமிலி மாதிரி எங்களை பாத்து முகத்தை சுளிச்சிட்டு வீட்டுக்குள்ள வராம வெளியவே நின்னுக்கிட்டாங்க.. இவன் தான் வீட்டுக்கு உள்ளே வந்தான்”

    “அப்பறம் என்னாச்சு டி” என சுலோச்சனா அதிர்ந்து கேட்டார்
    (தொடரும்)

     
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்