Loading

அத்தியாயம் 2

அநிருத்தன் கைவிரல்கள் தாளமிட்டபடி இருக்க அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த ரகுவினை திரும்பி பார்த்தவன் “என்னடா” என்றான்.

 

“ரொம்ப ஹேப்பியோ”

 

“ம்ம் ரொம்ப ரொம்ப” என்று சொன்ன அநிருத்தனை பார்த்துச் சிரித்த அவனின் அம்மா “டேய் அவன் சின்ன வயசுல இருந்தே அவ மேல உயிரா இருக்கான். அவன் கிட்ட போய் இதென்ன கேள்வி” என்றாள் ரகுவிடம்.

 

“அதுசரி அவனுக்கு சந்தோசம் தான். ஆனா அண்ணிக்கு..?” என்று ரகு கேள்வி எழுப்ப “அவளுக்கென்ன? அவளுக்கும் இவனைப் பிடிக்குமே” என்றார் அம்மா. பிடிச்சா சரிதான் என்று நினைத்தவன் அதனை வெளியே சொல்லவில்லை.

 

அரு வருவதற்குள் எப்படியாவது விஜய் வந்துட்டா நல்லா இருக்கும் என்று நினைத்தவள் அவனுக்கு இன்னமும் முயற்சி செய்து கொண்டு இருந்தாள்… ஆனால் அவன் போனையும் ஆன் செய்து வைக்கவில்லை. வரவும் இல்லை.

 

அவள் போன் பண்ணுவதைப் பார்த்த  அர்ச்சனாவுக்கு பாவமாக இருந்த போதிலும் அந்த விஜய் மேல் நம்பிக்கையென்பதே அவளுக்கு கிடையாத காரணத்தினால் அவள் இப்படித்தான் நடக்க வேண்டுமென எப்போதும் எதிர்பார்த்தாள். அது இப்போது நடப்பதில் அவளுக்கு சந்தோசம் தான். ஏனென்றால் அநிருத்தனைப் பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும். சிறு வயதிலிருந்தே அவளைப் பற்றியே நினைத்து அவளுக்காகவே அவன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். அவன் காதல் வெற்றி பெற தங்கையின் காதல் தோற்றால் தான் என்ன என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் வலியை அனுபவிப்பவள் லத்திகா தானே..  அது மட்டும் ஏனோ யாருக்கும் புரியவில்லை.

 

வண்டியினை வீட்டின் முன் நிறுத்திய வேகத்தில் அவன் கண்கள் அந்த வீட்டினையே அளவெடுத்தது… இதுவரை எத்தனையோ முறை சொந்தக்காரனாய் வந்து போன வீடுதான். ஆனால் இன்று அவளுக்கே சொந்தக்காரனாய் மாறப் போகும் உணர்வோடு வருவதால் அந்த வீடு கூட வெகு அழகாய் மாறிப்போனதாய் அவனுக்குள் ஒரு தோற்றம்.

 

அதே உணர்வுடன் அவன் வீட்டினுள் வேகமாக நுழையப் போக “ஹலோ ப்ரதர்” என்று ரகுவின் குரல் அவனை இடைமறித்தது.

 

“என்னடா” என்று அவன் சலிப்பாய் உரைக்க “என்னதிது நீ பாட்டுக்கு இவ்வளவு வேகமா போற.கொஞ்சம் வெயிட் பண்ணு…” என்றான் ரகு.

 

“எதுக்கு”

 

“இப்படி போனா உன்னை பத்தி உன் மாமனார் என்ன நினைப்பார்.. “

 

“மாப்பிள்ளைக்கு பொண்ணு மேல ரொம்ப  ஆசைன்னு நினைச்சுக்குவார் ஏன்டா ரகு என்னை இப்படி டார்ச்சர் பண்ணுற. நான் பாவம் டா” என்று அவன் கெஞ்ச “சரி பொழச்சு போ” என்று சொல்லிவிட்டு ஒதுங்கி நின்றான் அவன்.

 

அதற்குள் உள்ளே இருந்து அவனின் மாமாவே வந்துவிட்டார் “வாங்க மாப்பிள்ளை… வாம்மா தங்கச்சி.. சின்ன மாப்பிள்ளை வாங்க” என்று வரவேற்க அனைவரும் உள்ளே நுழைந்தனர்.

 

அர்ச்சனாவும் வந்து அவர்களை வரவேற்க உள்ளே லத்திகாவுக்கு வயிற்றைக் கலக்கவே ஆரம்பித்துவிட்டது. அய்யோ வந்துட்டாங்களே என்று அவள் தவிப்பில் இருக்க வெளியே இருந்த அநிருத்தனுக்கோ லத்திகாவை எப்போதடா காண்போம் என்ற நினைவே இருந்தது.

 

அம்மாவும் மாமாவும் பேசிக் கொண்டுதான் இருந்தார்களே தவிர இவன் அவஸ்தையினை யாருமே கண்டு கொண்டதாக தெரியவில்லை. அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த அவனின் தம்பிக்கு அது புரிந்தது. உடனே அவன் அம்மாவின் காதில் “நீங்க இப்படியே பேசிட்டே இருங்க அவன் எந்திரிச்சு அப்படியே உள்ள போய்டுவான். அப்பறம் அது உங்களுக்கு தான் அசிங்கம்” என்று சொல்ல “மருமகள கூப்பிடுங்க அண்ணா” என்றார் அவர்..

 

அப்படியே எங்கயாவது ஓடிடுவோம் என்று எண்ணியிருந்தவளுக்கு இந்த வார்த்தைகள் உச்சபட்ச கடுப்பினைக் கிளப்பியது. ஆனாலும் இது இப்படித்தான் நடக்குமென எதிர்பார்த்திருந்ததால் அவள் எழுந்தாள். அர்ச்சனா வருவதற்கு முன்பே வெளியே வந்து நின்றவளை கண்ட அநிருந்தன் ஆவென வாயைப் பிளந்தபடி நிற்க பக்கத்தில் இருந்த ரகுதான் “டேய் மானத்தை வாங்காத டா” என்று அவன் தொடையில் தட்டி அவனை இயல்பாக்கினான்.

 

ரகுவிற்கு தெரியும் அண்ணனின் மனதினைப் பற்றி. ஆனால் அண்ணியின் முகத்தினைப் பார்க்கையில் அதில் எந்தவித ஈடுபாடும் இல்லையென்பது அப்பட்டமாக தெரிந்தது. அதைக் கண்டு ரகுவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஏன் அண்ணி ஒரு மாதிரியா இருக்காங்க. என்னாச்சு இவங்களுக்கு என்று நினைத்தவன் தன் அண்ணனிடம் திரும்பி “அண்ணா அண்ணியைக் கூட்டிட்டு போய் பேசு…”என்றான்.

 

“எனக்கு ஓகே.. ஆனா அண்ணி வருவாளா”

 

“அதெல்லாம் வருவாங்க. உன் மனசுல இருக்குறதை நீ அவங்ககிட்ட சொல்லிடு… அப்போத்தான் அவங்களுக்கும் அது புரியும்”

 

“சொல்லணும்னு தான் டா நான் இத்தனை நாளா காத்துட்டு இருந்தேன்”

 

“இனியும் சொல்லாம காலங் கடத்தாதன்னு தான் இப்பவே சொல்ல சொல்லுறேன்..” என்று அவன் சொல்ல அநிருத்தனுக்கும் அதுதான் சரியென பட்டது.

 

உடனே “மாமா நான் கொஞ்சம்..” என்றவன் அடுத்து என்ன பேசவென்று தயங்கி நிற்க “அரு வாங்க நாம மாடிக்கு போய் பேசலாம்” என்று அழைத்துச் சென்றாள் லத்திகா.

 

அவள் பின்னாலே செல்லும் அவனைப் பார்த்த ரகுவிற்கு ஏனோ சொல்ல முடியாத பாரம் இதயத்தினை அழுத்தியது. ஆனாலும் எல்லாம் சரியாகும் என்று அவன் மனதின் மூலையில் சின்னதாய் ஒரு நம்பிக்கையும் இருந்தது.

 

“லத்து” என்று அவன் ஆசையாய் அழைக்க அவளோ “சொல்லுங்க அரு” என்றாள்.

 

“எனக்கு என்ன பேசன்னே தெரியலை லத்துமா…” என்று கொஞ்சமாய் அவன் வெட்கப்பட்டு கொள்ள… அவளோ பதில் சொல்லாமல் அவன் முகத்தினையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“என்ன அப்படிப் பார்க்குற”

 

“இல்லை ரொம்ப நாளாச்சுல உங்களைப் பார்த்து” என்றாள் அவளும்.

 

“ம்ம் ஆமா லத்து… எனக்கும் அதே நினைப்புதான். உன்னைப் பார்க்காம என்னால இருக்கவே முடியலை. ஆனாலும் உன்னை தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு நான் அமைதியாக இருந்துட்டேன். இப்போ உன்னைப் பார்க்கும் போது எப்படி இருக்கு தெரியுமா?.. ரொம்ப சந்தோசமா இருக்கு. இவ்வளவு நாள் காத்திருந்த அந்த வேதனை இப்போ சுத்தமா இல்லை. எப்படி இருக்க லத்துமா…?” என்றான் அவன் வேகமாய்.

 

“எனக்கென்ன அரு. நான் நல்லா இருக்கேன்” என்று உண்மையினை மறைத்து அவள் பொய் சொன்னாள். அவளுக்கு அநிருத்தனை அவ்வளவு பிடிக்கும். ஏனோ அவன் மனம் கஷ்டப்படுவதைப் போல பட்டென்று பேச அவளால் எப்போதும் முடிந்ததே இல்லை. அதனாலே தான் அவள் இப்போது இவ்வளவு அமைதியாக இருக்கிறாள். இதுவே இந்த இடத்தில் வேறு யாராவது இருந்தால் அவள் தன் நிலையினை தெளிவாக சொல்லியிருப்பாள். ஆனால் ஆசையோடு வந்த அருவினை அவளால் ஏமாற்ற முடியவில்லை. அதன் காரணத்தை அவளால் இப்போது தெளிவாக புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. அதையும் அவள் ஒருநாள் புரிந்துக் கொள்வாள். அன்றுவரை அநிருத்தனின் நிலை….??? சற்றே சிந்திக்க வேண்டிய விசயம் தான்.

 

“லத்து ஏதாவது பேசேன்” என்று அவன் ஏக்கமாய் கேட்க “என்ன பேச அரு.. வேணும்னா நீ பேசு நான் கேக்குறேன்” என்றாள் அவள்.

 

“லத்து நீ அவ்வளவு அழகா இருக்க”

 

“நீ மட்டும் என்ன அரு. செமையா இருக்க அதுவும் இது என்னோட பேவரிட் கலர்”

 

“ம்ம் தெரியும் லத்து அதான் போட்டுட்டு வந்தேன்” என்றான் அவன் வேகமாய்.

 

“என்னைப் பத்தி எல்லாமே தெரியுமா…?”

 

“தெரியும்… உனக்கு என்னென்ன பிடிக்குமோ எல்லாமே தெரியும்…”

 

இல்லை அரு. உனக்கு என்னைப் பத்தி சரியாத் தெரியலை என்று அவனிடம் சொல்லாமல் மனதுக்குள்ளயே நினைத்துக் கொண்டாள்.

 

“என்ன லத்தி அப்படிப் பார்க்குற”

 

“ஒன்னுமில்ல நாம கீழ போகலாமா” என்றாள் அவள்.

 

“அதுக்கு முன்னாடி எதுக்கு வந்தேனோ அதைப் பத்தி பேசிட்டு போயிடுறேன்” என்று அவன் சொல்ல அவளோ “என்ன பேசணும்… எதைப்பத்தி” என்றாள்.

 

“ஓ… உனக்குத் தெரியாதா” என்று அவன் விஷமமாய் கேட்க “நீங்க என்ன பேசப்போறீங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்…” என்றாள்.

 

“அப்போ இன்னைக்கு ஏன் வந்தேன்னு கூட உனக்குத் தெரியாது அப்படித்தானே” என்று அவன் வினவ அவளோ திகைத்துவிட்டு “சாரி” என்றாள்.

 

அவள் நிலையை உணர்ந்தவன் மெல்லியதாய் சிரித்துக் கொண்டு “என்னைப் பார்த்ததும் கன்ப்யூஸ் ஆகிட்ட போல.. ஏன்னா எனக்கும் அப்படித்தான் இருந்தது உன்னைப் பார்த்ததும்” என்றான்.

 

அய்யோ இந்த அரு வேற என்று நினைத்தவள் பேசாமல் விஜயைப் பற்றி இவனிடம் சொல்லலாமா என்று யோசித்து பின் சட்டென்று அந்த எண்ணத்தினை அப்படியே அழித்துவிட்டாள்.

 

“சரி நீ முழிக்காத. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சுருக்கு.. உனக்கு என்னைப் பிடிச்சுருக்கா” என்று அவன் கேட்க “இதெல்லாம் கீழ இருக்காரே அந்த பெரிய மனுசன்கிட்ட கேளுங்க” என்று அவள் சொன்னதும் அவனுக்கு உண்மையிலே சந்தோசமாக போய்விட்டது.

 

அவள் ஓர் அர்த்தத்தில் சொல்ல அவனோ இதைப் போய் என்கிட்ட கேக்க வந்துட்டயோ டா. உன்னை எனக்குப் பிடிக்காதா என்ன… என்று திட்டுவதைப் போல் எடுத்துக் கொண்டான்.

 

“சாரி சாரி உன் மனசைப் பத்தி தெரிஞ்சும் கேட்டது என் தப்புதான். வா போகலாம்” என்று அவன் கைநீட்ட அவளும் பிடித்துக் கொண்டாள். இதற்கெல்லாம் அவள் தயங்கியதே இல்லை. ஆனால் இதற்கடுத்து நடக்கும் நிகழ்வுகளை எண்ணித்தான் அவள் முகமும் அகமும் சிணுங்கியது. அதை எவர்க்கும் தெரியாது மறைத்துக் கொண்டு அவனுடன் இணைந்து அவள் கீழிறங்கினாள். இணைந்திருந்த கைகளைப் பார்த்த லத்திகாவின் அப்பாவிற்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது…

 

அதன்பின் அனைவரும் பேச கடமைக்கென அவள் அங்கே அமர்ந்திருந்தாள். அவள் மனம் முழுவதும் விஜயின் செய்கையே நிரம்பியிருந்தது. ஏன் இப்படிச் செய்தான். அவனுக்கு என்னைப் பிடிக்காதா?.. வந்துவிடுவேன் என்று சொல்லி வராது இருந்துவிட்டானே… என்ன காரணமாக இருக்கும் என்று நினைத்து நினைத்தே அவள் இத்துக் கொண்டிருக்க அனைத்தையும் பேசி முடித்து அவர்கள் கிளம்பியிருந்தார்கள்.

 

அர்ச்சனா பேச வந்ததிற்கு கூட பதில் பேசாமல் தன் அறையில் தஞ்சமடைந்தவள் அதுவரை அங்கு கேட்பாரற்று கிடந்த போனை எடுத்து விஜய்க்கு போன் செய்தாள்.

 

ரிங் அடிக்க அவள் ஆர்வமுடன் அவன் பேச்சைக் கேட்க காத்திருக்க அப்போதும் அவன் எடுக்கவில்லை.

 

அடுத்தமுறை அவள் முயற்சி செய்ய அவன் வேகமாய் எடுத்து “லத்திகா” என்க “ஏய் விஜய் அறிவில்லை உனக்கு. என்ன பண்ணிட்டு இருக்க. ஏன் வரலை… உனக்காக எவ்வளவு நேரம் நான் காத்துட்டு இருந்தேன் தெரியுமா. ஆனா உனக்கு என்னைப் பத்தி எந்த கவலையும் இல்லை. அதான.. இருந்திருந்தா அப்பா சொல்லியிருக்காங்கன்னு சொல்லியும் இப்படி பொறுப்பில்லாம நடந்திருப்பயா… இப்போ என்ன நடந்திருக்கு தெரியுமா?” என்றாள் அவள்.

 

“தெரியும் தெரிஞ்சுதான் போன் எடுத்தேன்” என்று அவன் சாதாரணமாய் சொல்ல “விஜய் உனக்கு என்னாச்சு.ஏன் இப்படி பண்ணுற. உனக்கு இஷ்டமில்லைன்னா முதல்லயே சொல்லியிருக்கலாம்ல” என்றாள் அவள் அதிர்ச்சியுடன்.

 

“நான் காரணாமத்தான் வரலை”

 

“என்ன சொல்லுற”

 

“என்னதான் நான் வந்து உங்க அப்பாகிட்ட பேசுனாலும் அவர் கண்டிப்பா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டார். அவர் திட்டம் தெரிஞ்சுதான் நான் வரலை” என்று ஏதோ சொல்ல வேண்டுமென்று காரணம் சொல்ல “என்ன சொல்லுற நீ.. எங்க அப்பா அப்படி எல்லாம் கிடையாது. அவர் ப்ராமிஸ் பண்ணா கண்டிப்பா நிறைவேத்துவார். நீ வராம இருந்துட்டு இப்போ அவரை குத்தம் சொல்லாத” என்றாள் சற்றே குரலுயர்த்தி.

 

“இல்லை மா.. நான் சொல்லுறதை கேளு. நம்ம இரண்டு பேரும் சேர்றதுல அவருக்கு விருப்பமே இல்லை. அதான் உன்கிட்ட இந்த மாதிரி சொல்லி வச்சுருக்காரு… நான் வந்து பேசியிருந்தாலும் கண்டிப்பா எதாவது பேசி அவர் நம்ம கல்யாணத்தை நிறுத்திருப்பார்”

 

“ஏய் இங்க பாரு அப்பாவைப் பத்தி தப்பா பேசாத. அவரைப் பத்தி உனக்கென்ன தெரியும்” என்று ஏகத்துக்கும் எகிற “ஓ அப்பாவை சொன்னா அப்படி இருக்கா… ஓகே இனி நான் எதுவும் சொல்லலை. என்ன நடந்ததுன்னும் நான் சொல்ல மாட்டேன். ஆனா உனக்கேத் தெரியும் ஒரு நாள் என்ன நடக்குதுன்னு. அப்போ நீயே எனக்குப் போன் பண்ணுவ. அப்போ உன்கிட்ட பேசுறேன் பாய்” என்று அவன் வைத்துவிட அவளோ அவன் சொல்லுவது புரியாமல் அப்படியே நின்றாள்.

 

அவன் பேசி முடிக்க அந்த நேரத்தில் அநிருத்தன் போன் பண்ண அவளோ அதை எடுக்க மனமில்லாது அப்படியே இருக்க அவனோ அவளுடன் பேசப் போகும் ஆனந்தத்தில் இருந்தான்…

 

துணையாக வருவாயா…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்