Loading

 

 

 

நான் நினைத்தால் வருவாயோ அன்பே 04

 

 

 

 கலங்கிய கண்களோடு யசோதா வந்ததை பார்த்து தான் என்னவோ ஏதோ என்று பதறினார்கள் மீரா மற்றும் விஐபி இருவரும்..

 

 

 நேரமின்மை காரணமாக சுருக்கமா யசோதா நடந்ததை கூறி உடனடியாக அவர்களை அழைத்துக் கொண்டு பிளைட் மூலமாக மதுரை வந்து சேர்ந்தார்கள்..

 

 

 விஐபி செலிபிரிட்டி என்பதால் உடனடியாக பிசினஸ் கிளாஸ் டிக்கெட் தான் இறுதியாக கிடைத்தது அதில் அட்ஜஸ்ட் பண்ணி வந்து சேர்ந்து விட்டார்கள்..

 

 

 

 அங்கிருந்து கேப் பிடித்து ஒன்றரை மணி நேர பயணம் செய்து அந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்கள்…

 

 

 

 யசோதா கண்ட காட்சியை அவர் கண்ணால் நம்பவே முடியவில்லை..

 

 

 விஐபிக்கு மனதில் ஒரு இனம் புரியாத சந்தோச உணர்வு..

 

 

 அதையும் தாண்டி அவள் எவ்வாறு இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளப் போகிறாள் என்ற ஒரு தவிப்பும் இருந்தது அவனிடம்..

 

 

 அவனுக்கு தானே அவள் வாழ்க்கை மீது பொறுப்பு இருக்கிறது..

 

 

ஆம் மணக்கோலத்தில் சீதா கழுத்தில் தாலியுடன் நின்றாள்..

 

 

இன்று நடக்க இருந்ததோ ஒரு திருமணம் ஆனால் நடந்ததோ இரண்டு திருமணம்..

 

 

அப்படி என்னதான் நடந்தது என யசோதா தெளிவாக மகளிடம் கேட்டார்..

 

 

அவள் நடந்தவற்றை சொல்ல வாய் திறக்கும் போது இடையில் வந்த ராம் “ நீங்க இவளுக்கு யார்னு தெரிஞ்சிக்கலாமா?.. ” என்றான்..

 

 

மகளிடம் பேச விடாமல் தடுக்கும் அவனை பார்த்த யசோதா “ நீங்க யார் தம்பி என் பொண்ணுகிட்ட பேசவிடாம தடுக்குறீங்க?.. “

 

 

“ ஓ நீங்க தான் இவ அம்மாவா?. அப்போ எனக்கு அத்தை தானே.. அப்ப அவங்க யார்.?. ” என்றான்.

 

விஐபி மற்றும் மீராவை கை காட்டி..

 

 

“ தம்பி நான் கேட்கிறேன்னு தவறாக எடுக்காதீங்க.. வந்ததிலிருந்து நீங்க என்ன கேள்வி கேட்டுகிட்டு இருக்கீங்க. பட் நீங்க யாருன்னு என்கிட்ட இதுவரைக்கும் சொன்னதே இல்லை.. இவங்க என்னோட அண்ணி மீரா.. இவர் சிங்கர் விஐபி என் அண்ணன் மகன்.. என் பொண்ணை அவ இவனு சொல்லி பேசுறீங்க. இப்பவாவது நீங்க யாருன்னு சொல்லுங்க. தம்பி என் பொண்ணு கிட்ட நான் கொஞ்சம் பேசணும்..” என்றார்.

 

 

யசோதாவின் பெரியப்பா அந்த பெரியவர் அழைத்து சீதாவிற்கு திருமணம் முடிந்து விட்டது சீக்கிரம் இங்கே வருமாறும் அதன் பின் அனைத்தையும் பேசலாம் என்றும் யசோதாவிடம் கூறினார்..

 

 

 இதுதான் யசோதாவிடம் தெரிவிக்கப்பட்ட விஷயம்.. என்ன நடந்தது என்று தெரியாமல் இதைக் கேட்டு தான் அவர் பதறி துடித்து வந்தார்..

 

இங்கு வந்து பார்த்தால் திருமணத்துக்கு என வந்த மகள் கழுத்தில் தாலியுடன் திருமணமாகி நிற்பதை கண்டதும் அவர் மகளுக்கு என்ன நடந்ததோ?. ஏன் யார் திருமணம் செய்து கொண்டார்கள். திடீரென எப்படி திருமணம் நடந்தது?. என பல கேள்விகளுடன் நிற்கும் பொழுது அவர்களை நிறுத்திவைத்து மகளுடன் பேசவிடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டு தொல்லை செய்யவும் பொறுமையாக இருக்கும் யசோதாவே சற்று கோபம் கொண்டு விட்டார்..

 

 

 

 

 யசோதாவின் பேச்சில் தெரிந்த கோபத்தை கண்ட ராம் அவரின் இடத்தில் இருந்து பார்த்தான்.. தாய்க்கு குடும்பத்துக்கு தெரியாமல் மகள் திருமணம் செய்து கொண்டால் அவர் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று புரிந்து கொண்டபடியால் அவர்கள் மூவரையும் அறைக்குள் அழைத்துக் கொண்டு சென்று நடந்ததை கூற ஆரம்பித்தார்கள்..

 

 

அவர் பேத்தி திருமணத்திற்கு வந்த ஊர் மக்கள் அனைவரும் அவர்களை வாழ்த்தி பரிசு பொருட்களை கொடுத்துவிட்டு உணவு உண்ண சென்று விட்டார்கள்..

 

 

 ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இருந்த இடத்தில் இவர்களது திடீர் திருமணம் அனைவரது வாய்க்கும் அவலாக போய்விட்டது..

 

 

“ ஓசிலையே திருமண செஞ்சுட்டான் பா..”

 

 

“ முத்து கஞ்ச பையன் தெரியும்.. ஆனா செலவு செய்யாமல் திருமணம் செய்ற அளவுக்கு கஞ்ச பையன்னு இப்பதான் தெரியும்..”

 

 

“ பொண்ணு பார்க்க வெள்ளை தக்காளி மாதிரி இருக்கு. இவன் அண்டங்காக்கா மாதிரி இருக்கான்.. புள்ள நல்ல பணக்காரி வேற வெள்ளை கலர். அவளை விட்டா புடிக்க முடியாதுன்னு சொல்லி என்ன பண்ணி அவளை உடனடியா இப்படி எல்லாரும் முன்னுக்கும் தைரியமாக கல்யாணம் பண்ணிக்கிட்டான்னே தெரியல?.. “

 

 

“ அம்மாவுக்கு ஒரே பொண்ணு போல. இனி அவங்க மொத்த சொத்தும் முத்துக்கு தானே வரும்.. பிடிச்சாலும் புடிச்சான் பெரிய இடமா தான் புடிச்சிருக்கான்.. இனி அந்த டப்பா ஆட்டோ முத்து ஓட்ட தேவையில்லை கார்ல சும்மா ராஜா மாதிரி வருவான்..”

 

 

 இதுபோல பல வதந்திகளை அவனை பிடிக்காதவர்கள் கூடி நின்று பேசி தூற்றினார்கள்..

 

 

 தாய் இல்லாமல் தந்தையின் வளர்ப்பில் சுயமாக வளர்ந்து குடும்பத்தை அன்பாக பொறுப்பாக பார்த்துக்கொள்கிறான்.. இதுவரை காலமும் வெளி ஆட்களிடம் கடன் என்று அவன் வாங்கியது இல்லை..

 

 

 முத்து போல வேறொரு புள்ளை இருக்கா?.. என அந்த ஊரில் கேட்காத ஆட்களே இல்லை..

 

 

 அவர்கள் பிள்ளைகள் எவ்வாறு தான் அன்பையும் பாசத்தையும் கொட்டி வளர்த்தாலும் அவன் போன்று பொறுப்பாக இல்லாமல் ஊதறித்தனமாக இருப்பதால் அவன் மேல் சிறு பொறாமையில் இவ்வாறு பேசி அவர்களது வயிற்று எரிசலைக் கொட்டி தீர்த்துக் கொண்டார்கள்..

 

 

 

“ நம்ம முத்துக்கு ஏத்த ஜோடி தான் அந்த பொண்ணு.. உண்மையிலேயே சீதா ராமன் மாதிரிதான் ஜோடி பொருத்தம்.. முத்து உயரத்துக்கும் அந்த பொண்ணோட உயரத்துக்கும் கலருக்கும் சும்மா அள்ளுது.. அவன் கஷ்டப்பட்டதுக்கும் நேர்மையான உழைப்புக்கும் அவன் நல்ல மனசுக்கும் நல்லா இருக்கணும்..” என்று அவனுடன் பழகுபவர்கள் அவன் மீது அன்பு வைத்திருப்பவர்கள் அவனை வாழ்த்தினார்கள்..

 

 

 உணவு நடக்கும் பந்தியில் அமர்ந்து கொண்டு பல மாதிரி அவர்களைப் பற்றி நல்லதும் கெட்டதும் அவர்கள் பார்க்கும் கண்ணோட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள்..

 

 

 என்னதான் விஐபி சொந்தமாக இருந்தாலும் அவன் ஒரு அந்நிய ஆண்மகன் என்பதால் அவர்களுக்கிடையில் நடந்ததை பற்றி அவனை வைத்து சொல்ல சங்கடப்பட்டு கொண்டு அவனை கொஞ்சம் வெளியே இருக்குமாறு கூறிவிட்டு யசோதா மீரா இருவரையும் ஒரு தனி அறைக்குள் அழைத்துக் கொண்டு சீதா மற்றும் ராம் சென்றார்கள்..

 

 

 விஐபி கைபேசியை எடுத்து அவனது இதயராணியிடம் எவ்வாறு முதல் பேச்சை ஆரம்பிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்..

 

 

 சீதாவின் கண்ணில் அனல் தெரித்தது..

 

 மாட்டேன் என்று சொன்னவளை கட்டாயப்படுத்தி அனுப்பிய தாய் மீது கட்டுக்கடங்காத கோபம் வந்தது..

 

 

 இங்கு வராமல் இருந்திருந்தால் இவ்வாறு ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை அல்லவா..

 

 நடந்தது நடந்து விட்டது இனி யார் மீதும் குற்றம் சொல்ல முடியாது என்னும் பக்குவம் அவளுக்கு இன்னும் வரவில்லை..

 

 

 தாய் மற்றும் அத்தை அவளது ஆசை அத்தான் அவர்கள் வந்தும் அவர்களிடம் எவ்வாறு பேசுவது?.. பேசினால் கத்தி விடுவாள்.. என்பதால் அமைதியாகவே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளுக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாத தோரணையில்..

 

 

 யார் அழைத்து அவளது குடும்பம் இங்கே வந்தது என்று தெரியாது..

 

 

 திடீரென வந்து விட்டார்கள்..

 

 

 இங்க வந்தீங்களா?. இவன் சொல்ல போற கதையை கேட்டுட்டு போங்க..

 

 

 என்னை ஆளை விடுங்க..

 

என்று கையை கட்டிக்கொண்டு அவளுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாததை போன்று அங்கே அந்த அறையில் இருந்த ஓர் இருக்கையில் சாய்ந்து கண்ணை மூடி அமர்ந்து விட்டாள்..

 

 

 பயணம் பண்ணி வந்தவர்களுக்கு முதலில் அறைக்கு உணவு தண்ணீர் யூஸ் போன்றவற்றை வரவழைத்து அவர்களை அமர்த்தி உண்ண வைத்து குடிக்க வைத்து அவர்களுக்கு ரிலாக்ஸ் ஆவதற்கு நேரம் கொடுத்து விட்டு.

 

வெளியே அவ்வளவு பெரிய பாடகன் இருக்கான் அந்த புள்ளைய யாரும் ஏன்னுகூட கவனிக்க நாதி இல்லாம போய்ட்டிங்களேடா..

 

 

 அவனும் அவளது அருகே இருந்த மற்றொரு இருக்கையில் அவர்களுக்கு எதிரே அமர்ந்தான் ராம்..

 

 

 

 

 

 

“ என் பேரு முத்துராமன் கணேசன்.. இங்கிருந்து இரண்டாவது வீடு தள்ளி இருக்கிற வீடு தான் எங்களோடது.. நான் பிளஸ் டூ வரைக்கும் படிச்சிருக்கேன்.. கைநீட்டி சம்பளம் வாங்குறது எனக்கு பிடிக்காது. அதனால சொந்தமா அப்பாவோட ஆட்டோ ஓட்டுறேன்.. இப்படி இருக்க எனக்கு புடிச்சிருக்கு.. சீக்கிரம் புது ஆட்டோ வாங்குறதுக்கு பணம் சேமிக்கிறேன்.. பணம் போதுமான அளவு சேர்க்கவும் வாங்கிடுவேன்.. இன்னைக்கு காலைல நடந்த அசம்பாவித்தால தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையில் உங்க பொண்ணோட கழுத்துல தாலி கட்ட வேண்டியதா போயிருச்சு.. ” என்றான்..

 

 

 

 

 

 

 அந்தக் கடத்தல் கும்பல் இருவரும் பேசியதை கேட்டவள். ஒரு நிமிட நேரம் கூட கண்மூடி உறங்காமல் இதை எவ்வாறு தடுப்பது என்ற சிந்தனையிலேயே அவளது அறையில் இருந்தாள்..

 

 

 அருகே யமுனா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்..

 

 

 

 யாருக்காவது அழைத்து இந்த விடயத்தை கூறி தடுப்பதற்கு கூட அவளுக்கு யாரை அழைப்பது என்ற எந்த ஒரு ஐடியாவும் வரவில்லை..

 

 

முதலில் அந்த பெரியவரையும் யமுனாவையும் தவிர இங்கு அவளுக்கு யாரையும் தெரியாது..

 

 

 தாய்க்கு அழைத்து விடயத்தை சொல்லி ஏதாவது செய்ய முடியுமா என்றும் யோசித்தாள்.. ஆனால் நேரம் பார்த்துவிட்டு தாய் மருந்து எடுத்துக் கொண்டு உறங்குவார் தொல்லை செய்ய வேண்டாம் என்று தவிர்த்து விட்டாள்..

 

 

தாய் அழைக்கலாமா என யோசித்தவளுக்கு இவ்வளவு நடந்தும் அத்தான் என உருகும் விஐபி நினைவு அவளுக்கு வரவேயில்லை..

 

அவனிடம் கூறி இருந்தால் இவ்வளவு நடக்க விட்டிருக்கவே மாட்டான்.. அவன் பவர் வைத்து இதை தடுத்து இருப்பான்.. ஆனால் அவனையே நினைத்துக்கொண்டு இருக்கிறேன் என தன்னையே ஏமாற்றி கொண்டு இருக்கும் சீதாவிற்கு அவன் நினைவு துளியும் வராமல் போனது தான் விந்தை..

 

 

 

 

‘ யார் அந்த முத்து வேகமாக அவனை இங்கே எவ்வாறேனும் வர வைத்து விடு.’ என்று நினைத்துக் கொண்டாள்..

 

 

 நேரம் அன்று பார்த்து வேகமாக சென்றது..

 

 

 எவ்வளவு யோசித்தும் அவளுக்கு எதுவும் ஐடியா வரவில்லை..

 

 

 

 தாய் தந்தை சகோதரர்கள் இல்லாமல் தாத்தா பாட்டி உடன் வளர்ந்த பெண் துர்கா..

 

 யமுனா மூலம் கல்யாண பெண் துர்காவுக்கும் முத்துக்கும் இடையில் நடந்த காதல் அதனால் அவள் கிணத்தில் குதித்தது என அனைத்தும் அவளுக்கு தெரிந்திருந்தது..

 

 

  கடத்தல்காரர்கள் பேசியதையும் கேட்டதால் இந்த திருமணம் நின்றால் அந்த பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்று அவள் தெரிந்து கொண்டாள்..

 

 

 

 

 

 இங்கு யாரையாவது எழுப்பி அவர்கள் மூலம் இதை தடுக்க முடியும் தான். ஆனால் திருமணமாக இருக்கும் இந்த நேரத்தில் இதன் மூலம் அந்த பெண்ணிற்கு வேறு ஏதும் பிரச்சினைகள் வந்தால் அந்த பெண்ணின் வாழ்க்கை பாதிக்கும்..

 

 

அதனால் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டாள்..

 

 

  அரை மணி நேரத்திற்கு முன்பு தான் சமையல் வேலைக்கான ஆயத்தம் செய்தார்கள்.. அவர்களும் தற்பொழுது உறங்கச் சென்று விட்டார்கள்…

 

 

இது அனைத்தையும் முன்பே அறிந்து கொண்டு தான் அவர்கள் மூன்று மணி என நேரம் குறித்தது..

 

 

 இனியாவது நேரம் கடத்த வேண்டாம் ஏதாவது செய்து அந்த பெண்ணை காப்பாற்றி ஆக வேண்டும் என்று நினைத்து அறையை விட்டு வெளியே வந்தாள்..

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்