Loading

 நான் நினைத்தால் வருவாயோ அன்பே..

 

 அத்தியாயம் ஆறு..

 

 

 

 மீண்டும் சீதாலட்சுமிக்கு நெடுந்தூர பயணம் ஆரம்பித்தது..

 

 

ஆனால் இந்த முறை முட்டி மோதிய இருவரும் திருமண ஜோடியாக ஒன்றாக பயணம் செய்தார்கள்..

 

 

 போக வர எப்படியும் மூன்று நாட்கள் ஆகிவிடும் என்பதால் முன்கூட்டியே தீர்மானித்து நண்பனை அழைத்து தந்தைக்கு உதவியாக வீட்டில் தங்கும் படியும் திரும்பி வரும் வரை யமுனாவை தாத்தா பாட்டி வீட்டில் துர்காவோடு இருக்கும்படியும் கூறி அவர்களுக்கான பாதுகாப்பை ஏற்படுத்தி விட்டு சென்றான்..

 

 

 

 காரில் ஏறி அவன் காரை ஸ்டார்ட் செய்து ஹாரன் அடிக்கவும் அவளும் வேகமாக வந்து முன் சீட்டில் அமர்ந்து கொண்டாள்..

 

 

 அங்கிருந்து கார் புறப்பட்டது..

 

இரவு நெருங்கிய நேரம் என்பதால் ஏசியை போடாமல் கார் கண்ணாடியை திறந்து வைத்தான்.. இயற்கை காற்று சிலுசிலுவென வீசியது..

 

 

 தோள் வரை புரண்டு இருந்த அவனது கேசத்தில் அந்த காற்று நுழைந்து கலைத்து விளையாடியது..

 

 

அவன் எளிமையானவனாக இருக்கலாம்.. ஆனால் அழகிலோ வசீகரத்திலோ குறைவில்லாதவன்..

 

 

யார் கூறியது பெண்களுக்கு மட்டுமே வில் போன்ற புருவம் மீன் போன்ற கண்களும் இருக்கும் என.. 

 

 

 அடர்ந்து வளைந்த புருவம்.. அழகிய வசிகரிக்கும் கண்கள்.. அடர்ந்த மீசை தாடி ஆனால் அழகாக ட்ரீம் செய்து இருந்தான்..

 

 

 கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பார்கள் என்னும் சொல்லிற்கு சொந்தக்கான் முத்துராமன்..

 

 

 அவனது கண்களை ஓர் ஐந்து நிமிடம் பார்த்தால் எதிரி கூட அவனுக்கு வசியம் ஆகி விடுவார்கள்..

 

 

 பார்த்து ரசிக்கக்கூடிய தோற்றம் அவன்..

 

 

 காற்று அவன் கேசத்தை கலைக்க ஸ்டேரிங்கில் தாளம் தட்டி பாடல் கேட்டுக் கொண்டு சீராக பயணம் செய்தான்..

 

 

 தொடுவானம் தொழுகின்ற நேரம் தொலைவினில் போகும்..

 

 அட தொலைந்துமே போகும்..

 

 தொடு வானமாய் பக்கமாகிறாய்..

 

 தொடும் போதிலே தொலைவாகிறாய்.

 

 இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே..

 

 உயிரே நீ உருகும் முன்னே கண்ணே காண்பேனா..

 

 

 இலை மேலே பனி துளி போல் இங்கும் அங்கும் உலவகிறோம்..

 

 காற்றடித்தால் சிதறுகின்றோம் பெண்ணே பூந்தேனே..

 

வலி என்றால் காதலின் வலி தான் வலிகளில் பெரிது..

 

அது வாழ்வினும் கொடிது..

 

உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன்..

 

 என அந்த நெடுஞ்சாலை கார் பயணத்தில் காரில் மெல்லிசை பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது..

 

அந்த பாடல் வரிகள் அவனது மனதில் ஏற்பட்ட வலிகளை உணர்த்தியது..

 

 தொடுவானம் என்று நினைத்தான்.. ஆனால் அவள் தொலைந்து போகும் மேகம் என தெரிந்த பின் தவித்தான்..

 

 

 பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் போது அவள் பேசும் சத்தம் கேட்டது..

 

 

“ யார் இப்ப மண்டைய போட்டது? ஏன் இப்ப ஓன்னு ஒப்பாரி வைக்கிற?. எவ்வளவு அழகான நல்ல பாட்டு எல்லாம் இருக்கு.. எங்க அத்தான் விஐபி பாட்டு பாடி நீ கேட்டு இருக்கியா?. இதுவரைக்கும்.. அப்படி பாட்டு கேட்கிறதை விட்டுட்டு ஒப்பாரி பாட்டு கேக்குற.. இங்க பாரு நீ என்னதான் சோகத்தை புழிஞ்சி வழிஞ்சாலும் என்னோட முடிவு இதுதான்.. உன்னை நான் திரும்பியும் பார்க்க மாட்டேன்.. சோக பாட்டு கேட்டு என்னோட மனசு மாத்தலாம்னு முயற்சி செய்யாதே.. எல்லாருக்கும் இப்ப நான் படிப்புக்காக மட்டும் தான் அங்க போறேன்னு தெரியும்.. இதே நம்ம நிரந்தர பிரிவுன்னு யாருக்கும் தெரியாது.. தெரியாம பார்த்துக் கொள்ள வேண்டியது உன்னுடைய பொறுப்பு.. அம்மா கால் பண்ணி அங்க வாங்கன்னு கூப்பிட்டா எனக்கு வேலை இருக்குன்னு சொல்லி நல்ல புள்ளையா மறுதுடனும்.. வந்து அங்க என்ன தொல்லை பண்ண கூடாது.. இப்பவும் அங்க வந்து நில்லுங்கன்னு சொன்னா ஏதாவது காரணம் சொல்லி உடனே திரும்பி வந்துடனும்..” என்று அவனை பார்த்துக் கொண்டே சொன்னாள்..

 

 

 வாரத்தில் ஒரு முறை வீட்டுக்கு தெரியாமல் சிகரெட் குடிப்பான்..

 

 மாதத்தில் ஒரு முறை அதுவும் வீட்டிற்கு தெரியாமல் பீர் குடிப்பான்..

 

 

 அந்த சிகரெட் குடிக்கும் உதடுகள் கூட கருத்து காட்டி கொடுக்காமல் சிவந்தே அழகாக அவனது உதட்டில் தோன்றிய புன்னகையை மறைத்துக் கொண்டது..

 

 

 அடுத்தும் அவனை சோதிக்கும் விதமாக ராவணன் படத்தில் இருந்து

 

உசுரே போகுது உசுரே போகுது உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே..

மாமன் தவிக்கிறேன் மனச தாடி என் மணிகுயிலே.. என்று 

பாடல் ஒலித்தது..

 

அந்த பாடலையும் கேட்க பிடிக்காமல் வேகமாக அதை நிறுத்திவிட்டு அவளது ஐபோனை ப்ளூடூத் மூலம் கனெக்ட் பண்ணி அவளுக்கு பிடித்த பாடலை கேட்க ஆரம்பித்தாள்..

 

 

 அந்தக் கள்வனோ பாடல் கேட்டபடியே தூக்கத்தில் அவன் தோளில் சாய்ந்தவளை எடுத்து மடியில் போட்டுக் கொண்டு சுகமாக பயணத்தை தொடர்ந்தான்..

 

 

 அவனுக்கு தெரியும் எந்த காலத்திலும் அவளை அவன் விடப்போவதில்லை என்று..

 

 காதல் கைகூட காத்திருபதும் அவசியம்..

 

 அவள் மனம் மாற காத்திருக்க முடிவெடுத்தான்..

 

 

 தாய் மற்றும் அத்தையுடன் சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய விஐபி.. அங்கிருந்த அவனது காரில் அவர்களை ஏற்றிக்கொண்டு யசோதாவின் வீட்டுக்கே வந்தார்கள்..

 

 

 அங்குதான் நேரடியாக சீதாராம் வருவதாக இருந்தது..

 

 

 காலை நன்றாக விடிந்ததும் தயாராகி அவனது ரெக்கார்டிங் சென்று அங்கிருந்து ரெக்கார்டிங் முடித்துவிட்டு மீண்டும் ஆபீஸ் மீட்டிங்கில் கலந்து கொண்டான்..

 

 

 அதன் பின் நேற்று பார்க்காமல் போனதால் இன்று அவனது இதய ராணியை பார்க்க ஆசைப்பட்டு பொட்டிக் முன்பு போய் நின்றான்..

 

 ஆனால் அவனுக்கே தெரியாத ஒரு விசயம் இன்று அவளது பிறந்தநாள் என்று..

 

 

 கார் யன்னல் கண்ணாடியை பாதியாக திறந்துவிட்டு காரில் இருந்தவாறு அவளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்..

 

 

 பொட்டிக் வரும் கஸ்டமர்கள் அனைவரும் அவளை வாழ்த்துவதை பார்த்து கைபேசியின் மூலம் முதல் முறையாக கண்மணிக்கு அழைத்து பேசுவதற்காக காதில் வைத்தான்..

 

 

 அப்போதுதான் எதிரே வாழ்த்து சொன்ன ஒரு கஸ்டமர் பெண்ணிற்கு நன்றி கூறினாள்..

 

 

 கூறியதைக் கேட்டதன் பின்பு தான் இன்று அவள் பிறந்தநாள் அதற்கு வாழ்த்துகிறார்கள் என்று தெரிந்து கொண்டான்..

 

 

 உடனடியாக கைபேசி அழைப்பை துண்டித்து விட்டு அவளுக்கான முதல் பரிசை அவனே சென்று வாங்கி வந்து எவ்வாறு கொடுப்பது என்று காத்துக் கொண்டிருந்தான்..

 

 

 வேறு வழியின்றி அவனே கொரியர் பாய் போல் அந்த கிப்டை எடுத்துச் சென்று அவளிடம் கொடுத்து சந்தேகம் வராதவாறு வெறும் பேப்பர் ஒன்றில் சைன் வாங்கி விட்டு சற்று தொலைவில் வந்தான்..

 

 காதல் கள்வன் காதல் மடல் வரைந்தான்.. 

 

 

 உடனடியாக மெசேஜ் ஒன்றை தட்டி விட்டான்..

 

‘ அன்பு கண்மணிக்கு மாமனின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. இன்று உன்னுடன் முதல் முதலாக பேசுவதற்காக வந்தேன்.. ஆனால் அதிர்ஷ்டவசமாக உனது பிறந்தநாள் என்று தெரிந்து கொண்ட படியால் மாமனின் அன்பு பரிசு..

 

பரிசு பிடித்திருக்கிறதா?.. என இரண்டு வரியில் பதில் கூறவும்.. நான் யார் என்று குழப்பிக் கொள்ள வேண்டாம்.. உன்னை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன்.. உன்னையே மூன்று மாதமாக உயிராக காதலிக்கிறேன்.. அதை தெரிய படுத்தும் அளவிற்கு எனக்கு இப்பொழுதுதான் தைரியம் வந்தது.. இன்று மாலை உனக்கு பிடித்த முருகன் கோயிலுக்கு நீ வந்தால் என்னை பார்க்கும் ஆவலோடும் ஏற்றுக் கொண்டதாகவும் எடுத்துக் கொள்வேன்.. இல்லை என்றாலும் உன்னை தொடர்வேன் ஆனால் தொல்லை செய்ய மாட்டேன்.. இப்படிக்கு உன் அன்பு மாமன்..’ என்று அந்த மெசேஜில் கூறியிருந்தான்..

 

 

 மெசேஜை படித்து பார்த்துவிட்டு பரிசை எடுத்து அவளது கைப்பையில் வைத்து விட்டு.. தாய்க்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தாய் அவள் முகத்தை பார்க்கவும்

 

 

 என்ன பதில் சொல்வது என தெரியாமல் “ அம்மா நம்ம மீரா ஆண்ட்டி இருக்காங்க தானே.. என்னோட பர்த்டே எப்பன்னு அன்னைக்கு கேட்டு தெரிஞ்சுக்கிட்டாங்க.. இப்போ விஷ் பண்ணி கிப்ட் அனுப்பி இருக்காங்க..” என்றாள்..

 

 

 ஏன் இந்த தயக்கம் குழப்பம் என்றால் இதுவரை காலமும் அவளுக்கு வெளியிடத்தில் இருந்து பரிசு பொருட்கள் என வந்ததில்லை அதை கொடுப்பதற்கு யாரும் இல்லை என்பதே உண்மை..

 

 

 மகன் கொடுத்ததை தாய் கொடுத்ததாக கூறி தற்பொழுது சமாளித்து விட்டாள்.. இனி அந்த காதல் கள்ளன் செய்யும் மாயாஜாலத்தை எவ்வாறு சமாளிக்க போகின்றாளோ..

 

 

 நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் பலமுறை அந்த மெசேஜை படித்து பார்த்து விட்டாள்.. யார் என்று அவளுக்கு சற்றும் பிடிபடவில்லை..

 

 

 அன்று காலை அதே நம்பரில் இருந்து கால் வந்திருப்பதையும் அதை அவள் அட்டென்ட் செய்து ஆனால் பேசாமல் இருந்ததையும் தற்பொழுது தான் கவனித்தாள்..

 

 

 பரிசு அனுப்பியது யார் என்று தெரியாது என தாய்க்கு சொன்னால் வீண் பிரச்சனைகள் வரும்..

 

 அதனால் அதைக் கூறாமல் மறைத்து விட்டாள்..

 

 

 இறுதியாக இன்று மெசேஜில் குறிப்பிட்டு இருந்த நேரத்திற்கு முருகன் கோவிலுக்கு சென்று யார் என தெரிந்து கொண்டு இத்துடன் இந்த விளையாட்டை நிறுத்திக் கொள்ளும்படி கூறிவிட்டு வரவேண்டும் என முடிவெடுத்தாள்..

 

 

 முடிவெடுத்த பின் தான் அவளால் சற்று மூச்சு விட முடித்தது..

 

 

 அவள் எதுவும் மெசேஜ்க்கு ரிப்ளை செய்யாததால் மேலும் அவளை தொல்லை செய்ய வேண்டாம் மாலை நேரம் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.. என அங்கிருந்து நேராக வீட்டுக்கு சென்று விட்டான் விஐபி..

 

 

 சீதாவை அவன் மடியில் கிடத்தி விட்டு அவள் காதில் இருந்த ப்ளூடூத்தை எடுத்து பாடலை நிறுத்தி விட்டு அவள் தூக்கம் கலையாதவாறு மெதுவாகவே கார் ஓட்டி சென்றான் ராம்..

 

 

 சேர வேண்டிய இடம் சேர்ந்ததை பற்றி எதுவும் அறியாமல் பாதுகாப்பாக தாய்மடி தேடிய குழந்தை போன்று இரண்டு நாட்களாக அலைச்சல் பயம் போன்ற காரணத்தால் உறக்கமில்லாமல் தவித்தவள் அமைதியாக இன்று அவன் மடியில் உறங்கினாள்..

 

 

 

அவன் மடியும் கார் பயணமும் தாலாட்டுவது போல் அவளுக்கு தோன்றியதோ என்னவோ சென்னை வந்து சேரும் வரை அவள் உறங்கி எழவில்லை..

 

 

 அவள் உறக்கத்தை கலைக்காமல் அவள் முகத்தையே பார்த்திருந்தவன் இனியும் தாமதிக்க முடியாது என்பதால் அவன் மடியில் இருந்து அவளை எழுப்பி அவள் சந்தேகப்பட்டு அவனை திட்டும் முன்பு கார் கண்ணாடியில் அவளை சாய்த்து விட்டான்..

 

 

அவன் அவளைத் தொட்டு கண்ணாடியில் சாய்க்கும் போது உறக்கம் கலைந்து கண்விழித்து விட்டாள்..

 

 

 ஆனால் அடுத்து அவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக காத்திருந்தவள் அவளது தோளை தொட்டு அசைக்கவும் அப்போதுதான் எழுவது போன்று எழுந்தாள்..

 

 

 எழுந்ததுமே சென்னை வந்ததை புரிந்து கொண்டவள் சென்னை மிடுக்குடன் கூடிய சீதாலட்சுமி ஆகவே மாறிவிட்டாள்..

 

 

 அவன் காரை நிறுத்திவிட்டு இறங்கி அருகே வந்த தள்ளுவண்டி டீக்கடையில் டீ ஒன்றை வாங்கி குடித்தான்..

 

 

 அதிகாலை நேரக் குளிருக்கு இதமாக இருக்கும் என்று அவளுக்கும் ஒன்றை வாங்கி வந்தான்..

 

 

 அவளிடம் அதை நீட்டும் முன்பு அதை தட்டி விட்டாள்..

 

 

“ இதெல்லாம் சுத்தம் இல்லாத இடம்.. இங்கே வந்து டீ சாப்பிடுவது என்ன பழக்கம்.. இனம் இனத்தோடு தானே சேரும்.. அங்கங்க நிக்காம சீக்கிரம் வண்டி எடுங்க நான் போய் உடனே காலேஜ் போகணும்.. ” மகாராணி தோரணையில் அவனுக்கு கட்டளையிட்டாள்..

 

 

 

அவள் பேசுவது அனைத்தையும் கேட்டானே தவிர.. வாய் பேசவில்லை அவனும் எதுத்து பேசினால் உறவு இன்னும் முறிவு நிலைக்கு செல்லுமே தவிர உறவு வழுப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும்..

 

 

 

 சிலர் இப்படி இருப்பார்கள்.. யார் எவ்வாறு பேசினாலும் அவர்களுக்கு பேச தெரியாமல் இல்லை.. ஆனால் ஏன் பேசி பிரச்சினையை இன்னும் பெரிதாக்க வேண்டும் என்று யோசித்து பிரச்சினையை தீர்ப்பதற்காகவே பேசாமல் ஒதுங்கி விடுவார்கள்..

 

 

ராம் பிடித்தவர்கள் இடத்தில் மட்டுமே அவன் இந்த பழக்கத்தை கடைப்பிடிப்பான்..

 

 

 அதன்பின் அமைதியாக அவள் வீட்டிற்கு செல்லும் பாதையை கூற அவனும் அதே வழியாக கரை செலுத்தினான்..

 

 

 இடையில் தாங்கள் சென்னை வந்து சேர்ந்து விட்டதாக தாய்க்கு அழைத்து பேசினாள் சீதா..

 

 

 அங்கு ஆரத்தி எடுப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தார்கள் மீரா மற்றும் யசோதா இருவரும்..

 

 

 மாப்பிள்ளை வீட்டுக்கு வருவதனால் யசோதா உடனடியாக காலை உணவு வகை மற்றும் இனிப்பு வகைகளை செய்து வைத்துவிட்டார்..

 

 

 அவர்கள் வீட்டின் அருகே வந்ததும் விஐபி பட்டாசு வெடித்தான்..

 

 

 யசோதா மற்றும் மீரா என அனைவரும் வாசலுக்கே வரவும் அந்த வீட்டில் வேலை செய்யும் சாரதா எனும் பெண் சுமங்கலி என்பதால் சீதாராம் இவருக்கும் ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்து சென்றார்கள்..

 

 

 

 புதுப்பெண்ணும் மாப்பிள்ளையும் வீட்டிற்குள் வந்ததும் சீதாவிடம் மாப்பிள்ளையை அவள் அறைக்கு அழைத்துச் செல்லும்படி யசோதா கூறினார்..

 

 

 அவன் இருக்கும் இரண்டு நாட்களுக்கும் தாயின் மனம் நோகாமல் நடக்க வேண்டும் என்பதற்காகவே அவனை அழைத்துக்கொண்டு அவளது அறைக்கு சென்றாள்..

 

 

“ இங்க பாருங்க இதுதான் எங்க வீடு.. வாய் பார்த்துட்டு நிக்காம சீக்கிரம் குளிச்சிட்டு எடுத்து வந்த உடுப்புல நல்லதா எடுத்து போட்டுட்டு வாங்க.. அப்புறம் உள்ள எல்லாம் கிணறும் இல்ல வாலியும் இல்ல.. அத போய் தேட வேண்டாம்.. பைப் திறந்தால் தண்ணி வரும் குளிங்க.. ” என்று கூறிவிட்டு மற்ற அறையில் சென்று அவளும் குளித்துவிட்டு காலேஜுக்கு போவதற்கு தயாராகி வந்தாள்..

 

 

 இருவரும் எதிர்பாராத விதமாக ஒன்றாகவே வந்தார்கள்..

 

 

 அவனது நேர்த்தியான உடை அலங்காரத்தில் இனி அவனிடம் உடையை பற்றி பேசக்கூடாது என முடிவெடுத்தாள் சீதா..

 

 

 மாடிப்படியில் இருவரும் ஜோடியாக இறங்கும் போது யசோதா அவர்களின் ஜோடி பொருத்தத்தை பார்த்து பூரித்துப் போனார்..

 

 

 யசோதா மீரா இருவரும் பரிமாற விஐபி மற்றும் சீதா ராம் மூவரும் உணவு உண்டார்கள்..

 

 

 அதன்பின் அவள் சொல்லிக் கொண்டு காலேஜ் போவதற்கு தயாராகி வந்தாள்..

 

 

 இன்று விடுமுறை எடுக்கும்படி கூறவும் முக்கிய எக்ஸாம் இருப்பதாக கூறினாள்..

 

 

“ லீவு எல்லாம் எதுக்கு அத்தை பரவாயில்ல போகட்டும்..” என்றான் முத்து..

 

 

 “ அப்போ தனியா நீ மட்டும் போக வேணாம்.. மாப்பிள்ளை உன்னை கொண்டு போய் விட்டுட்டு வருவார்.. இதுக்கு சம்மதம்னா நீ தாராளமா காலேஜ் போயிட்டு சீக்கிரம் வா.. ” என்றார் யசோதா..

 

 

 எப்படியும் காலேஜ் போக வேண்டும் என்பதால் தாய் பேச்சை மீறாமல் தற்போதும் முத்து கார் ஓட்ட அவள் முன் இருக்கையில் ஏறி அமர்ந்தாள்..

 

 

 அவர் மகளின் அழகில் மயங்கி காதல் என்னும் பெயரில் காலேஜ் ஆண்கள் சிலர் அவளை தொல்லை செய்வதை விஐபி மூலம் அறிந்து கொண்டவர் தற்பொழுது மாப்பிள்ளை உடன் சென்று காலேஜில் இறங்கினால் மகள் திருமணம் ஆகிவிட்டால் என்று ஒதுங்கி விடுவார்கள் என நினைத்து தான் முத்துவை அவளுடன் அனுப்பினார் யசோதா..

 

 

 இவர்கள் இருவரும் ஜோடியாக செல்வது பின்னாளில் மகள் வாழ்க்கைக்கு பிரச்சினையாகும் என்று தெரிந்திருந்தால் அந்த பேதை தாய் அனுப்பி இருக்க மாட்டாரோ என்னவோ..

 

 

 அவள் பாதை சொல்ல சொல்ல லாவகமாக அவன் கையில் கார் பறந்தது..

 

 

 காலேஜ் வாசலில் முன் இறக்கி விட்டான்..

 

 

 அவள் வருவதைப் பார்த்து அவளது நண்பர்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது..

 

 அவள் நண்பன் கரண். “ ஹாய் லட்சு.. என்னப்பா புதுசா இருக்கு.. எங்கள கூட உன்னோட காரத் தொட விட மாட்ட இன்னைக்கு புதுசா காருக்கு டிரைவர் எல்லாம் வச்சிருக்க.. ” என்றான் நக்கல் குரலில்..

 

 

“ ஹேய் சாரி டிரைவர் இல்லை.. எங்க அம்மாவோட ரிலேட்டிவ்.. நேற்று ஊருக்கு போயிருந்தோம்ல அங்கே இருந்து வந்திருக்காங்க.. பேர் முத்துராமன்..” என்றாள் சீதா..

 

 

 அதைக் கேட்ட முத்துவிற்கு சிரிப்பு தான் வந்தது..

 

 நல்லவேளை சொந்தம் என்று சொன்னாள்… இல்லையென்றால் டிரைவரோ அல்லது வேலையாளோ என்று சொல்லாமல் விட்டாளே என நினைத்து சிரித்தான்..

 

 

 அவன் சிரிப்பதை யார் பார்த்தார்களோ இல்லையோ சீதாவின் தோழி பார்த்து விட்டாள்..

 

 

 சீதாவின் கையை சுரண்டி..

 

“ வாவ் ஹேண்ட்சம் மேன்.. இவர் உனக்கு என்ன உறவுடி வேணும் அண்ணா தானே.. எனக்கு இவரை பார்த்ததுமே இவரோட ஹேண்ட்சம் லுக் ரொம்ப பிடிச்சிருச்சு எனக்கு இவரோட நம்பர் வாங்கி தாடி.. பேசி கரெக்ட் பண்ணலாம்.. ” என்றாள்..

 

 

 தோழி கூறியதைக் கேட்டு மேலிருந்து கீழ் வரை தலை முதல் கால் வரை ஒரு முறை அவனை திரும்பிப் பார்த்தாள் சீதா..

 

 

‘ ஏன் இவளோட டேஸ்ட் இவ்வளவு மட்டமா இருக்கு..? இவன்கிட்ட அப்படி என்னதான் இருக்கு. பார்த்ததுமே மயங்குறதுக்கு..’ என மனதில் நினைத்துக் கொண்டு தோழியின் பக்கம் திரும்பி

 

“ ஆளோட மேல் தோற்றத்தை பார்த்ததுமே காதல் வருவதெல்லாம் எனக்கு ஒத்து வராது.. அவனோட பேக்ரவுண்ட் தெரியுமா உனக்கு?.. ஆட்டோ ஓட்டுறான்.. பிளஸ் டூ வரைக்கும் படிச்சிருக்கான்.. சின்ன வயசு தங்கச்சி வயசான அப்பா இருக்கார்.. ரொம்ப சின்ன வீடு எந்த அடிப்படை வசதியும் இல்லாதது அவங்க ரெண்டு பேருமே இவனோட பொறுப்பு.. இதுதான் அவனோட நிலை இப்ப சொல்லு அவனை சைட் அடிக்க போறியா அவனோட நம்பர் வேணுமா?.. ” என்றாள் சீதா..

 

 

 சீதா கூறியதை கேட்ட தோழி

 

“ நான் என்ன இவனை கல்யாணம் கட்டி அங்க போய் வாழ்ந்து புள்ள குட்டி பெத்துக்கவா போறேன்.. ஆள் பார்க்க சூப்பரா இருக்கான்.. சும்மா கடலை போட்டு பார்ப்போம்னு கேட்டேன்.. நீ ஏன் அதுக்கு இவ்வளவு பெரிய லெக்சர் எடுக்குற… ” என்றாள்..

 

 

 தோழி கூறியதை கேட்டு சற்று தள்ளி ராமிடம் வந்த சீதா அவனை திட்டி அங்கிருந்து அனுப்பிவிட்டாள்..

 

 

“ உனக்கு இங்க என்ன வேலை பெரிய மன்மதான்னு நினைப்பு.. அதுதான் கொண்டு வந்து இறக்கி விட்டுட்ட இல்ல பிறகு ஏன் நிற்கிற?.. இங்க வர பொண்ணுங்க எல்லாம் உன்னை பார்த்து சைட் அடிச்சு என்கிட்ட நம்பர் கேட்டு ரொம்ப டென்ஷன் படுத்துறாங்க.. கார கொண்டு போய் பார்க்கிங்கில விட்டுட்டு நீ போ.. இந்தா ஆட்டோக்கு காசு.. உனக்கு ஆட்டோல போறது ஒன்னும் புதுசு இல்ல தானே.. ஈவினிங் நானே வந்துருவேன்.. அதுக்கு முன்ன நீ ஊருக்கு போறதா இருந்தாலும் தாராளமா போகலாம் போயிட்டு வா.. ” என சத்தம் போட்டுவிட்டு அவன் கையில் காசை வைத்து விட்டு அங்கிருந்து நண்பர்களுடன் உள்ளே சென்றுவிட்டாள்..

 

 

 

 அவள் பேச்சை மீறாமல் வீட்டுக்கு சென்று சற்று நேரம் யசோதாவின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து உறங்கி எழுந்து வெளியே வந்தவன் மதிய உணவையும் உண்டு விட்டு இல்லாத பொல்லாத பல காரணங்களை சொல்லி அவள் வருவதற்கு முன்பே வீட்டிலிருந்து வெளியேறி பஸ்ஸில் மதுரையை நோக்கி சென்றான்..

 

 

 அவள் மீது காதல் வந்தது என அறிந்ததுமே அவள் திட்டினாலும் சரி அவள் போ என்று சொன்னாலும் சரி அனைத்தையும் சிரித்துக் கொண்டே தாங்கினான்..

 

 

 இதைவிட பல வலிகளை தாங்கிய அவனுக்கு அவளின் இந்த செயல் பெரிதாக காயப்படுத்தவில்லை போல்..

 

 

 இதோ அவள் போ என்று சொன்னதும் அவள் பேச்சை மீற விரும்பாமல் சென்று விட்டான்..

 

 

 காதலுக்கு காயப்படுத்தவும் தெரியும் காயத்தை தாங்கிக் கொள்ளவும் தெரியும்..

 

 

 அவன் காதல் பல காயங்களை தாங்கிக் கொள்ளப் போகும் காதல்..

 

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்