Loading

அறைக்கு வந்த நித்ய யுவனி ஏதோ தீவிர யோசனையில் இருக்க அவள் அருகில் வந்து அமர்ந்த சஜீவ், “என்னாச்சு யுவி… என்ன திங்க் பண்ணிட்டு இருக்க…” என்க,

நித்ய யுவனி, “சுசித்ரா எங்க சஜு… நான் இல்லாதப்போ வீட்டுல என்ன நடந்தது… அத்த எப்படி இவ்வளவு மாறி இருக்காங்க…” எனக் கேட்டாள்.

சஜீவ் மனதில், “இவ கிட்ட சுச்சிய ஜெயிலுக்கு அனுப்பின விஷயத்த சொன்னா நல்லது பண்றேன்னு ஏதாவது ஏடாகூடமா பண்ணி வெச்சிருவா… யுவிக்கு இது தெரியாமலே இருக்கட்டும்…” என நினைத்தவன்,

“சுச்சி யாருக்கிட்டயோ பேசிட்டு இருக்குறத அம்மா கேட்டுட்டாங்க… அதனால தான் அவங்க உண்மை தெரிஞ்சு உன் கிட்ட பேசிட்டாங்க… சுச்சிய வீட்ட விட்டு அனுப்பிட்டாங்க..” எனப் பாதி உண்மையும் பாதி பொய்யுமாகக் கூறினான்.

நித்ய யுவனி மீண்டும் ஏதோ கேட்க வரவும் அவள் வாயில் விரல் வைத்த சஜீவ், “ஷ்ஷ்ஷ்… போதும்.. எதுவும் பேசக் கூடாது… எதுக்கு கண்டவள பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ற… இது நமக்கான நேரம்..” எனக் கூறிக் கொண்டு நித்ய யுவனியின் முகத்தருகே நெருங்க தன் வாயின் மீதிருந்த சஜீவ்வின் விரலைக் கடித்து வைத்தாள் நித்ய யுவனி.

சஜீவ், “ஆஹ்… அம்மா…” எனக் கத்த வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்த நித்ய யுவனி,

“மவனே பக்கத்துல வந்தா கொன்னுருவேன்… குழந்தை பிறக்கும் வரை நீ என்னை நெருங்கவே கூடாது… தள்ளி உக்காரு முதல்ல…” என மிரட்ட,

“போ யுவி.. நீ ரொம்ப மோசம்… எவ்வளவு நாள் கழிச்சி உன் பக்கத்துல வரேன்… நீ இப்படி சொல்ற… அவ்வளவு நாள் எல்லாம் என்னால உன் பக்கத்துல வராம இருக்க முடியாது…” என்றான் சஜீவ் சோகமாக.

நித்ய யுவனி, “முடியாது… இது தான் உனக்கு பனிஷ்மன்ட்..” என்க,

சஜீவ், “பனிஷ்மன்ட்டா… இன்னும் என்ன பனிஷ்மன்ட்… இத்தனை நாளா அனுபவிச்ச பனிஷ்மன்ட் போதாதா… போடி… என் பொண்டாட்டி.. நான் என்ன வேணாலும் பண்ணுவேன்…” என்றவன் நித்ய யுவனியை நன்றாக நெருங்கி அமர்ந்து கொண்டான்.

உள்ளுக்குள் சிரித்த நித்ய யுவனி வெளியே சஜீவ்வை முறைக்க சஜீவ் முகத்தைத் தொங்கப் போட்டபடி தள்ளி அமர்ந்தான்.

சஜீவ் முகத்தைத் தொங்கப் போட்டபடி அமர்ந்து இருப்பதைக் கண்டு அவனை நெருங்கி அமர்ந்த நித்ய யுவனி சஜீவ்வின் தோளில் தலை சாய்த்தாள்.

நித்ய யுவனி, “சஜு… ஐ மிஸ்ட் யூ சோ மச்… நானே சொன்னாலும் நீ என்னை விட்டு தள்ளி போகாதே… என் பக்கத்துலயே எப்பவும் இரு…” என்க,

சஜீவ், “அதை நீ சொல்லனுமா யுவி… என் யுவிய பத்தி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்… சும்மா தான் நானும் உன்ன சீண்டி பார்த்தேன்..” என்றான் புன்னகையுடன்.

_______________________________________________

மறுநாள் காலை சற்று தாமதமாக நித்ய யுவனி எழுந்திருக்கும் போது சஜீவ் அறையில் இருக்கவில்லை.

குளித்து உடை மாற்றி வந்தவள் கீழிறங்கி சமையலறை செல்ல ஈஷ்வரி மும்முரமாக ஏதோ சமைத்துக் கொண்டிருந்தார்.

நித்ய யுவனி மெதுவாக அங்கு இருந்த சமையல் வேலை செய்பவரிடம், “ராணிக்கா… யாருக்காக அத்த இப்படி தடபுடலா சமைக்கிறாங்க… யாராவது கெஸ்ட் வராங்களா என்ன..” என்க,

ராணி, “எனக்கும் தெரியலமா… காலைலயே பெரியம்மா வெளிய எங்கயோ போய்ட்டு வந்தாங்க… அதுக்கப்புறம் அவங்களே சமைக்க ஆரம்பிச்சிட்டாங்க… நான் பண்றேன்னு சொன்னதுக்கும் வேணாம்னு சொல்லிட்டாங்க…” என்றார்.

நித்ய யுவனி குழப்பமான முகத்துடன் இருக்க ஹாலில் இருந்த பிரபு, “ஈஷ்வரி… அவங்க வந்துட்டாங்க…” எனக் குரல் கொடுக்கவும் அனைத்தையும் நிறுத்தி விட்டு ஈஷ்வரி ஹாலுக்கு சென்றார்.

அவரைப் பின் தொடர்ந்து சென்ற நித்ய யுவனி அங்கு வந்திருந்தவர்களைக் கண்டு அதிர்ந்தாள்.

ஏனென்றால் ராஜாராமும் வசந்தியும் அங்கு நின்றிருந்தனர்.

ஈஷ்வரி, “வாங்க… வாங்க… உக்காருங்க சம்மந்தி… ” என அவர்களை வரவேற்க நித்ய யுவனியால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

அதற்குள் அவளிடம் வந்த வசந்தி, “யுவனி… நல்லா இருங்கியாடா…” என்க,

“ஹா.. ஆமாம்மா… நான் நல்லா இருக்கேன்..” என்றாள் நித்ய யுவனி.

ஈஷ்வரி, “நீங்க பேசிட்டு இருங்க… நான் உங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வரேன்..” என்று விட்டு ஈஷ்வரி சமையலறைக்குச் செல்ல அப்போது தான் உள்ளே நுழைந்த சஜீவ்வைப் பிடித்துக் கொண்ட நித்ய யுவனி,

“எங்க போயிருந்த சஜு… அப்பாவும் அம்மாவும் எப்படி இங்க… நீ தான் கூட்டிட்டு வந்தியா…” என்க,

சஜீவ், “இல்ல யுவி… எனக்கும் தெரியாது… நான் ஆஃபீஸ் விஷயமா காலைலயே வெளிய போயிருந்தேன்… இப்போ தான் வரேன்… நீ டயர்டா தூங்கிட்டு இருந்த… அதான் உன் கிட்ட சொல்லல…” என்றான்.

பின் ராஜாராம் பிரபுவுடனும் சஜீவ்வுடனும் பேசிக் கொண்டிருந்தனர்.

வசந்தியை தன் அறைக்கு அழைத்துச் சென்ற நித்ய யுவனி அவரிடம், “மா… என்னம்மா நடக்குது இங்க… நீங்க ரெண்டு பேரும் எப்படி இங்க..” எனப் புரியாமல் கேட்க,

வசந்தி, “காலைல உங்க அத்த நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்க யுவனி…” என்றவர் காலையில் நடந்தவற்றைக் கூறினார்.

_______________________________________________

வசந்தி காலை சமையலை முடித்து விட்டு வர வாசல் அழைப்பு மணி ஒலித்தது.

ராஜாராம் தான் கதவைத் திறந்தார்.

வெளியே ஈஷ்வரி நின்றிருக்க அவரை அந்த நேரம் எதிர்ப்பார்க்காத ராஜாராம், “சம்மந்தியம்மா நீங்க…” என இழுக்க,

“உள்ள வரலாமா…” எனக் கேட்டார் ஈஷ்வரி.

ராஜாராம் அவசரமாக அவருக்கு வழி விடவும் உள்ளே நுழைந்த ஈஷ்வரி கண்களால் வீட்டை ஆராய்ந்தார்.

திடீரென காலையிலேயே ஈஷ்வரி வந்து நிற்கவும் ராஜாராமும் வசந்தியும் என்னவோ ஏதோவென பயப்பட ஈஷ்வரியோ அதற்கு அவசியமே இல்லை என்பது போல,

“முதல்ல தயவு செஞ்சு ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிடுங்க…” என்றார் கையெடுத்து கும்பிட்டபடி.

ஈஷ்வரியின் செயலில் பதறிய வசந்தி, “ஐயோ சம்மந்தி… என்ன பண்றீங்க…” என ஈஷ்வரியின் கையை இறக்கி விட்டார்.

ஈஷ்வரி, “இல்ல சம்மந்தி.. நான் உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் பெரிய அநியாயம் பண்ணிட்டேன்… உங்க கிட்ட மன்னிப்பு கேட்குற தகுதி கூட எனக்கு இல்ல…” என அழ,

“விடுங்க சம்மந்தி… எங்க பொண்ணு இதெல்லாம் அனுபவிக்கனும்னு விதி… என்ன பண்ண முடியும்… அதான் நீங்க இப்போ மாறிட்டீங்கல்ல.. யுவனியையும் புரிஞ்சிக்கிட்டீங்க.. எங்களுக்கு அது போதும்…” என்றார் ராஜாராம்.

வசந்தி, “ஆமா சம்மந்தி… பழசை எல்லாம் மறந்துடுங்க… நீங்க யுவனிய புரிஞ்சிக்கிட்டதே பெரிய விஷயம்..” என அவரும் கூற,

சற்று சமாதானம் அடைந்த ஈஷ்வரி, “ரொம்ப நன்றி சம்மந்தி… நான் எதுக்கு வந்தேன்னே சொல்ல மறந்துட்டேன்.. பசங்க கல்யாணம் தான் எப்படியோ நடந்து போச்சு… மத்த சடங்குகள் கூட ஒழுங்கா நடக்கல… நீங்களும் பொண்ண தனியா எங்க வீட்டுக்கு அனுப்பி வெச்சிட்டு நிம்மதி இல்லாம இருந்து இருப்பீங்க… அதான் இன்னைக்கு லஞ்சுக்கு உங்க ரெண்டு பேரையும் விருந்துக்கு கூப்பிடலாமேன்னு வந்தேன்… நித்யாவும் ரொம்ப சந்தோஷப்படுவா…” என்றார்.

ராஜாராம், “சம்மந்தி… அது…” என இழுக்க,

“ப்ளீஸ் சம்மந்தி… மறுத்துறாதீங்க… முன்னாடி தான் ரெண்டு ஃபேமிலியும் யாரோ போல இருந்துட்டோம்… இனியும் அப்படி இருக்க வேணாம்… நித்யாவுக்காகவாவது ரெண்டு பேரும் அவசியம் வரணும்..” என ஈஷ்வரி கேட்டுக் கொள்ளவும் அதற்கு மைல் மறுக்க முடியாமல் இருவரும் சம்மதித்தனர்.

_______________________________________________

வசந்தி கூறியதைக் கேட்டு நித்ய யுவனியின் மனம் மகிழ்ந்தது.

பின் இருவரும் கீழே சென்றனர்.

டைனிங் டேபிளில் உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்த ஈஷ்வரியிடம் சென்ற நித்ய யுவனி தண்ணீர் குவளையை எடுப்பது போல், “தேங்க்ஸ்..” என்று விட்டு சென்றாள்.

நித்ய யுவனி சென்ற திசையைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டார் ஈஷ்வரி.

அதன் பின் அனைவரும் இணைந்து உண்டு விட்டு ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அனைவரும் ஒன்றாக இருப்பதைப் பார்த்து நித்ய யுவனியின் கண்கள் கலங்கின.

அவள் அருகில் அமர்ந்து இருந்த சஜீவ் நித்ய யுவனியின் கரத்தை அழுத்தி, “ஹேப்பியா இருக்கியா யுவி…” என்க,

அவனைப் பார்த்து புன்னகைத்தவள், “ரொம்ப…” என்றாள்.

_______________________________________________

திவ்யா ஆசிரியர் ஓய்வறையில் மாணவர்களின் பரீட்சை வினாத்தாள்களைத் திருத்திக் கொண்டிருக்க அங்கு வந்த மாணவன் ஒருவன்,

“எக்ஸ்கியுஸ் மீ மேம்… காலேஜ் கேட் பக்கத்துல உங்களுக்காக யாரோ வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க.. உங்கள உடனே வர சொன்னாங்க..” என்க,

“என்னை பார்க்கனும்னு சொன்னாங்களா… சரி நீ போ… நான் போய் பார்க்குறேன்…” என்றாள் திவ்யா.

திவ்யா சென்று யார் தன்னை அழைத்தது எனப் பார்க்க வெளியே ஹரிஷ் நின்றிருந்தான்.

திவ்யா, “ரிஷி.. நீயா.. நீ இங்க என்ன பண்ற…” என்க,

ஹரிஷ், “எந்தக் கேள்வியும் கேக்காம என்னோட வா தியா.. ஒரு இடத்துக்கு போகணும்…” என்றான்.

“என்ன விளையாடுறியா ரிஷி.. இது காலேஜ் டைம்… இப்போ எப்படி வர முடியும்… அதெல்லாம் முடியாது.. நீ போ.. நாம அப்புறம் மீட் பண்ணலாம்…” என திவ்யா மறுக்க,

“ப்ளீஸ் தியா.. ப்ளீஸ் ப்ளீஸ்…” என ஹரிஷ் கெஞ்சவும்,

திவ்யா, “சரி சரி… வெய்ட் பண்ணு.. பர்மிஷன் கேட்டுட்டு வரேன்..” என்றாள்.

திவ்யா கல்லூரியில் அனுமதி பெற்று வெளியே வர அவளுக்காக பைக்கை ஸ்டார்ட் செய்து காத்திருந்தான் ஹரிஷ்.

திவ்யா வந்ததும் ஹரிஷ் ஏறக் கூற அவளோ ஏறாது அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஹரிஷ், “ஏறு தியா… என்ன பார்த்துட்டு இருக்க…” என்க,

“இதுலயா போக போறோம்…” எனக் கேட்டாள் திவ்யா.

ஹரிஷ், “ஆமா… இதுல என்ன இருக்கு… என் கூட பைக்ல வரது உனக்கு பிடிக்கலயா..” என்க,

திவ்யா, “இல்ல‌ இல்ல வரேன்… இதுக்கு முன்னாடி யாரு கூடவும் பைக்ல போனது இல்ல.. அதான் கேட்டேன்..” என்றவள் அவசரமாக பின்னால் ஏறி கொண்டாள்.

திவ்யாவுக்கு தெரியாமல் உதட்டை மடித்து சிரித்த ஹரிஷ் வேண்டுமென்றே வேகமாகப் போக பயந்த திவ்யா விழாமல் இருக்க ஹரிஷைப் பிடித்துக் கொண்டாள்.

அதற்கு தான் காத்திருந்தது போல வேகத்தைக் குறைத்தான் ஹரிஷ்.

பின் பைக் ஒரு வீட்டின் முன் நிற்க சுற்றி முற்றிப் பார்த்த திவ்யா, “யார் வீடு ரிஷி இது.. எதுக்காக இங்க வந்து இருக்கோம்…” எனக் கேட்டாள்.

“சொல்றேன் வா…” என அவளின் கைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான் ஹரிஷ்.

இருவரும் வீட்டினுள் நுழைய அவர்களுக்காகக் காத்திருந்தது போல் ஒரு பெண்மணி அவர்களை நோக்கி புன்னகையுடன் வர ஹரிஷ், “அம்மா… இது தியா… தியா.. இது எங்க அம்மா… எங்க வீட்டுக்கு தான் உன்னைக் கூட்டிட்டு வந்திருக்கேன்…” என ஒருவொருக்கொருவர் அறிமுகப்படுத்தி வைத்தான்.

திடீரென ஹரிஷ் அவன் வீட்டுக்கு அழைத்து வரவும் என்ன செய்வது எனத் தெரியாமல் திவ்யா முழிக்க ஹரிஷின் தாய், “ரொம்ப அழகா இருக்கடா நீ… எதுக்கு தயங்குற… உள்ள வா… இது உன் வீடு போல…” என்றவர் திவ்யாவை உள்ளே அழைத்துச் சென்றார்.

அவர்களைப் பின் தொடர்ந்த ஹரிஷ், “அம்மா… நீங்க தியா கூட பேசிட்டு இருங்க… நான் சீக்கிரம் வரேன்..” என்று விட்டு திவ்யா கண்களால் ஏதோ கூறுவதைக் கண்டு கொள்ளாமல் சென்றான்.

ஹரிஷின் தாய், “ஹரி எப்பப் பாரு உன்ன பத்தி தான்மா பேசிட்டு இருப்பான்… அதான் உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னேன்…” என்க,

“என்னைப் பத்தியா…” என முழித்தாள் திவ்யா.

“அவன் ரொம்ப ஜாலி டைப்… என்ன பிரச்சினையா இருந்தாலும் சிரிச்சிட்டே சமாளிப்பான்… சின்ன வயசுல அவன் கூட யாராவது சண்டை போட வந்தாலும் அவன் சிரிப்ப பார்த்தா அவங்களுக்கு சண்டை போட மனசு வராது… அப்பப்போ ரொம்ப பேசி அடி வாங்கினதும் உண்டு… எல்லாரையும் சிரிக்க வெச்சிட்டே இருப்பான்… ஆனா கோவம் வந்தா அவன போல யாராலையும் கோவப்பட முடியாது… யாராவது கவலையா இருந்தா ஏதாவது பண்ணி அவங்கள சிரிக்க வெச்சிடுவான்… பையன பத்தி பெருமை பேசுறேன்னு நெனக்காதேமா… ஹரிய போல ஒரு பையன் கெடக்க நாங்க ரொம்ப குடுத்து வெச்சிருக்கோம்…” என்றவர் ஹரிஷின் சிறு வயது சேட்டைகள் என அனைத்தையும் கூறினார் ஹரிஷின் தாய்.

ஆரம்பத்தில் தயக்கமாக அமர்ந்து இருந்தவள் ஹரிஷின் தாய் அவனைப் பற்றி கூறத் தொடங்கவும் சிரித்து சிரித்து அனைத்தையும் கேட்டாள்.

பின் வீட்டை சுற்றிக் காட்ட திவ்யாவை அழைத்துச் செல்ல சாதாரண அளவு வீடாக இருந்தாலும் ஒவ்வொரு இடத்திலும் இருந்த நேர்த்தியும் அழகும் திவ்யாவை வியப்பில் ஆழ்த்தியது.

ஹரிஷின் தாய், “முன்னாடி நாங்க வாடகை வீட்டுல தான் இருந்தோம்… ஹரி ஃபாரின் போய் சம்பாதிச்சிட்டு தான் இந்த வீட்டைக் கட்டினான்…‌ ஒவ்வொரு இடத்தையும் பார்த்து பார்த்து கட்டினான்… இந்த மொத்த வீடுமே அவனோட உழைப்பு தான்…” என்றார்.

திவ்யாவிற்கு ஹரிஷை நினைத்து மகிழ்ச்சியாகவும் பெருமையாக இருந்தது.

பின் ஹரிஷின் அறைக்கு திவ்யாவை அழைத்துச் செல்ல ஒவ்வொரு இடத்தையும் ரசித்தாள் திவ்யா.

சுவர் முழுவதும் ஹரிஷின் புகைப்படங்களே மாட்டி இருக்க அதில் ஒரு புகைப்படம் திவ்யாவின் மனதைக் கவர்ந்தது.

அதன் அருகில் சென்று அப் புகைப்படத்தை கைகளால் வருட, “இது ஹரியோட முதல் பிறந்த நாள் அப்போ எடுத்த ஃபோட்டோ… சரியான சுட்டிப் பையன்… ஒரு இடத்துல உக்காந்துட்டு இருக்க முடியாது… ஏதாவது பண்ணிட்டே இருப்பான்… இந்த ஃபோட்டோ எடுக்கும் போது நான் என்னோட கைல அவனுக்கு பிடிச்ச கார் பொம்மைய தூக்கிக் காட்டிட்டேன்.. அதை பார்த்து தான் அப்படி சிரிச்சிட்டு இருக்கான்… ஹரியோட அப்பா அதை ஃபோட்டோ எடுத்தாரு…” என ஹரிஷின் தாய் கூற,

திவ்யா, “ஆன்ட்டி.. நீங்க தப்பா நெனக்கலனா இந்த ஃபோட்டோவ நான் எடுத்துக்கட்டுமா..” எனக் கேட்க ஒரு நொடி கூட யோசிக்காது, “அதுக்கென்னமா.. தாராளமா எடுத்துக்கோ… உனக்கு இல்லாததா..” என்றார் ஹரிஷின் தாய்.

திவ்யா சந்தோஷமாக அந்தப் புகைப்படத்தை எடுத்து தன்னுடன் வைத்துக் கொண்டாள்.

பின் இருவரும் ஹாலுக்கு செல்ல அதற்குள் ஹரிஷும் வந்திருந்தான்.

ஹரிஷின் தாய், “ஹரி… திவ்யாவ கூட்டிட்டு வாப்பா சாப்பிட..” என்க,

திவ்யா மறுக்க வாய் திறக்க, “எதுவும் சொல்லக் கூடாது..‌ முதல் முறையா எங்க வீட்டுக்கு வந்திருக்க… சும்மா போக முடியுமா… சாப்பிட்டு தான் போகணும்… எல்லாம் ரெடி பண்ணி இருக்கேன்..” என ஹரிஷின் தாய் கட்டளையிடவும் அமைதியானாள் திவ்யா.

உணவை முடித்து விட்டு திவ்யாவும் ஹரிஷும் கிளம்பினர்.

திவ்யா, “இப்போ எங்க போறோம் ரிஷி.. இது எங்க வீட்டுக்கு போற வழி இல்லையே…” என்க,

ஹரிஷ், “உன்னைக் கடத்திட்டு போக போறேன்…” என்றான்.

அதற்கு சத்தமாக சிரித்த திவ்யா, “காமெடி பண்ணாதே ரிஷி… உனக்கு அவ்வளவு சீன் எல்லாம் கிடையாது… சீக்கிரம் என்னை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போற வழிய பாரு..” என்றாள் கேலியாக.

ஹரிஷ் கோவமாக முகத்தைத் திருப்பிக் கொண்டவன் சற்று நேரத்தில் பீச்சில் பைக்கை நிறுத்தினான்.

இருவரும் கடற்கரை மண்ணில் நடந்து செல்ல மெதுவாக திவ்யாவின் கரத்தோடு தன் கரம் கோர்த்தான் ஹரிஷ்.

திவ்யா அதிர்ந்து ஹரிஷைப் பார்க்க அவள் கண்களை ஆழ்ந்து நோக்கிய ஹரிஷ், “தியா… உன்னை முதல் தடவை பார்த்ததுமே நீ என் மனசுக்குள்ள நுழைஞ்சிட்ட… பிரேம் கல்யாணத்தப்போ அத்தனை பேர் இருந்தும் என் கண்ணுக்கு நீ மட்டும் தனியா தெரிஞ்ச… எனக்கு பிரபோஸ் எல்லாம் பண்ணத் தெரியாது தியா… ஆனா என் கடைசி மூச்சு வர உன்னை சந்தோஷமா பார்த்துப்பேன்… வில் யூ பீ மை பெட்டர் ஹால்ஃப்..” என திவ்யாவின் விரலில் மோதிரமொன்றை மாட்டி விட்டான்.

திவ்யா இன்னும் அதிர்ச்சி மாறாமல் ஹரிஷைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஹரிஷ், “நீ உடனே பதில் சொல்லனும்னு அவசியம் இல்ல… டைம் எடுத்துக்கோ… பட் நல்ல பதிலா சொல்லு… இந்த ரிங் என்னோட முதல் சம்பளத்துல எடுத்து வெச்சது… எனக்காக வரப் போறவளுக்குன்னு எடுத்து வெச்சது… இது உன் கைல இருந்தா தான் இந்த ரிங்குக்கே அழகு…” என்க,

திவ்யா பதிலேதும் கூறாமல் ஹரிஷின் பைக் இருந்த இடத்துக்கு சென்றாள்.

அதில் மனம் வாடிய ஹரிஷ் திவ்யாவைப் பின் தொடர்ந்து சென்று பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

ஹரிஷ் பைக்கை ஸ்டார்ட் செய்ததும் பின்னே ஏறிய திவ்யா அவளாகவே ஹரிஷின் தோளில் கரம் பதித்தாள்.

ஆனால் ஹரிஷ் திவ்யாவின் அமைதியில் கவலையில் இருந்ததால் அதனைக் கவனிக்கவில்லை.

திவ்யாவின் வீட்டை சற்றுத் தள்ளி ஹரிஷ் பைக்கை நிறுத்தவும் இறங்கிய திவ்யா த்ன வீட்டை நோக்கி சென்றாள்.

ஹரிஷ் சோகமாக திவ்யா செல்லும் திசையையே வெறித்துக் கொண்டிருக்க மீண்டும் திரும்பி வந்த திவ்யா, “அத்தையோட சாப்பாடு ரொம்ப டேஸ்ட்டா இருந்தது… நான் தேங்க்ஸ் சொன்னதா சொல்லிடு..” என்க ஹரிஷ் சரி எனத் தலையசைத்ததும் அவசரமாக சென்றாள்.

திவ்யா சென்ற பின் தான் ஹரிஷ் அவள் என்ன கூறி விட்டுச் சென்றாள் என யோசிக்க திவ்யாவின் அத்தை என்ற வார்த்தையில் ஆனந்த அதிர்ச்சி அடைந்தான்.

வானத்தைப் பார்த்து, “ஹுஹூ…” எனக் கத்தியவன் அதே துள்ளலுடன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

❤️❤️❤️❤️❤️

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. குட் பிரப்போஸல் என்ன தில்லாலங்கடி வேலை எல்லாம் பார்த்து கரெக்ட் பண்ணுறான்🤣🤣🤣🤣🤣.

      1. Author

        🤣🤣எது எப்படியோ.. காரியத்துல கண்ணா இருப்பான் 😁

    2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.