269 views

நாட்கள் மாதங்களாக கடக்க சஜீவ் சுசித்ராவுடன் மேலும் நெருக்கமாகினான்.

 

எப்போதும் அவளுடன் மெசேஜ் கால் என்று இருக்க சுசித்ராவின் காதலை ஏற்றான் சஜீவ்.

 

அடுத்து வந்த நாட்கள் இருவரும் காதல் புறாக்களாக அவ்வூரை வலம் வந்தனர்.

 

சுசித்ரா அவனுடன் நெருக்கமாக முயலும் போதெல்லாம் ஏதாவது கூறி தடுப்பான்.

 

காரணம் கேட்டால் திருமணத்திற்கு பிறகு அனைத்தையும் வைத்துக் கொள்ளலாம் என்பான்.

 

சாதாரண அணைப்பு மட்டுமே இருவருக்குள்ளும் இருக்கும்.

 

ஆரம்பத்தில் எப்போதும் ஸ்லீவ்லஸ் சாரி அணிந்து கொண்டிருந்த சுசித்ரா நாட்கள் செல்லச் செல்ல உடலோடு ஒட்டிய, உடலை வெளிக் காட்டக்கூடிய நவ நாகரீக ஆடைகள் அணிய சஜீவ் அவளிடம் மேம்போக்காக வேண்டாம் என சொல்லிப் பார்த்தான்.

 

சுசித்ராவோ, “நான் இப்படியெல்லாம் பண்றது உனக்காகத் தான் சர்வா… நீ தான் ஒரு கிஸ் கூட பண்ண விட மாட்டேங்குற.. அதான் இப்படியெல்லாம் ட்ரஸ் பண்ணாலாவது உனக்கு என் மேல ஒரு ஃபீலிங் வருமான்னு பாக்குறேன்…” என்க,

 

தனக்காகத் தான் அவள் இவ்வளவும் செய்கிறாள் என அமைதியாகி விடுவான் சஜீவ்.

 

ஒருநாள் ஈஷ்வரி சஜீவ்வுக்கு அழைத்து,

 

“சீக்கிரம் மருமகள கூட்டிக்கிட்டு ஊருக்கு வாப்பா… உங்க ரெண்டு பேரோட கல்யாணத்துக்கும் நாள் குறிக்கலாம்னு அண்ணனும் நானும் முடிவு பண்ணிருக்கோம்..” என்க

 

சஜீவ், “சரிம்மா… நான் சுச்சி கிட்டயும் கேட்டுட்டு சொல்றேன்…” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தவன் அப்போதே கல்யாணக் கனவில் மூழ்கினான்.

 

இங்கு நித்ய யுவனிக்கோ முதல் செமஸ்டர் பரீட்சை நெருங்கியது.

 

ஆனால் அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.

 

எப்போதும் ஏதோவொன்றை இழந்தது போல் இருக்கும் தோழியை ஜனனியும் அவதானித்துக் கொண்டு தான் இருந்தாள்.

 

ஆனால் ஜனனிக்கு நித்ய யுவனி மீது நம்பிக்கை இருந்தது அவள் தன் சொல்லைத் தட்ட மாட்டாள் என்று.

 

தன் மனதில் பூட்டி வைத்த காதலை எப்போதும் போல் டயரியிடம் பகிர்ந்து கொண்டிருந்தாள் நித்ய யுவனி.

 

அதன் பக்கங்கள் ஒவ்வொன்றிலுமுள்ள அவள் கண்ணீர் தடங்களே நித்ய யுவனியின் காதலுக்கு சாட்சி.

 

இவ்வாறே நாட்கள் நகர சுசித்ராவிடம் சஜீவ் திருமணப் பேச்சை எடுக்கும் ஒவ்வொரு முறையும்,

 

“இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் சர்வா… இப்போ தானே நாம லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணி இருக்கோம்…” எனக்கூறி தள்ளிப் போடுவாள்.

 

சுசித்ரா சர்வாவுடன் செலவழிக்கும் நேரமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

 

சஜீவ்வோ எப்போதும் அவளது குறுஞ்செய்திக்காகவும் அழைப்புக்காகவும் வெகுவாக காத்திருப்பான்.

 

ஆனால் சுசித்ராவோ அவளாக சஜீவ்வுக்கு அழைப்பது குறைந்தது.

 

சஜீவ் அழைத்தாலும் அவசரமாக வைத்து விடுவாள்.

 

சஜீவ், “ஏதாவது முக்கியமான வேலையா இருக்கா போல… ஃப்ரீ ஆனதும் சுச்சியே கால் பண்ணுவாள்..” எனக் கூறி தன்னையே சமாதானப்படுத்திக் கொள்வான்.

 

அன்று சஜீவ்வின் நண்பன் ஒருவனின் ஆனிவர்சரி பார்ட்டி.

 

சுசித்ராவையும் அழைத்துக் கொண்டு செல்வோம் என எண்ணியவன் அவளுக்கு பல முறை அழைத்தும் அழைப்பு ஏற்கப்படவில்லை.

 

எப்போதும் போல் ஏதாவது வேலையாக இருப்பாள் என தான் மட்டும் செல்ல முடிவெடுத்தான்.

 

உயர் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றிலே பார்ட்டி நடைபெற்றது.

 

ஒரு பக்கத்தில் பார்ட்டிக்கு வந்திருந்தவர்கள் ஜோடி ஜோடியாக ஆட அங்கு ஒரு ஓரமாக இருந்த மேசையொன்றில் அமர்ந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான் சஜீவ்.

 

பேசி சிரித்தபடி திரும்பியவனின் பார்வை அங்கேயே நிலைத்து நின்றது.

 

முழங்காலிலிருந்து சற்று மேலேறி, உடலோடு ஒட்டிய ஆடையில், முகம் சுழிக்க வைக்கும் வகையில் அந் நாட்டு ஆடவன் ஒருவனுடன் மிக நெருக்கமாக இருந்தாள் சுசித்ரா.

 

சஜீவ்வால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

 

அதிர்ச்சியில் இருந்தவன் சற்று நேரத்தில் தன்னிலை பெற்று கோபத்துடன் அவளைப் பார்த்தவாறே மொபைலில் சுசித்ராவுக்கு அழைக்க, சஜீவ்வின் அழைப்பைக் கண்டவள் பதட்டமாவது அவனுக்கு தெளிவாகத் தெரிந்தது.

 

அவளுடன் நின்ற ஆடவனின் காதில் ஏதோ கூறியவள் மொபைலை எடுத்துக் கொண்டு வெளியே செல்வதைக் கண்டவன் தானும் அவளைப் பின்தொடர்ந்து சற்று மறைவாக நின்று கொண்டான்.

 

பார்ட்டி நடக்கும் இடத்திலிருந்து வெளியே வந்தவள் சஜீவ்வின் அழைப்பை ஏற்க,

 

சஜீவ், “எங்க இருக்க சுச்சி… ரொம்ப நேரமா கால் பண்ணிட்டு இருக்கேன்…” என கடினப்பட்டு குரலில் மென்மையைக் கொண்டு வந்து வினவினான்.

 

சுசித்ரா, “ஹெவி வர்க் சர்வா… அதான் வீட்டுக்கு வந்ததும் டயர்ட்ல தூங்கிட்டேன்…” என தூக்கத்தில் பேசுவது போல் பேச சஜீவ்விற்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை.

 

“ஆஹ்… ஓக்கே நீ தூங்கு… நான் நாளைக்கு மார்னிங் எப்பவும் நாம மீட் பண்ற பார்க்ல வெய்ட் பண்ணிட்டு இருப்பேன்… கட்டாயம் வந்துடு…” எனக் கூறிவிட்டு சுசித்ராவின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தான்.

 

“நான் சொல்ல வரத கூட கேக்காம கட் பண்றான்… இவன வேற நாளைக்கு மீட் பண்ண வேணுமா..” என சலித்துக் கொண்டவள் மீண்டும் பார்ட்டி நடக்கும் இடத்திற்கே சென்றாள்.

 

அவள் கூறியதை சஜீவ்வும் மறைந்து கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.

 

சுசித்ரா உள்ளே சென்றதும் மேலும் அங்கிருக்க விரும்பாமல் அங்கிருந்து கிளம்பினான்.

 

இங்கு நித்ய யுவனிக்கோ சஜீவ்வுடனான காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது.

 

ஒழுங்காகப் படிக்காமலே சென்று ஏனோ தானோவென அனைத்துப் பரீட்சைகளையும் எழுதினாள்.

 

ஜனனியுடன் இருக்கும் போது மாத்திரம் அவளுக்காக முகத்தில் போலி சிரிப்பை அணிந்து கொள்வாள்.

 

தான் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்த சஜீவ்வின் மனநிலை மிக மோசமாக இருந்தது.

 

கட்டிலில் கண்ணை மூடி மல்லாக்க விழுந்தவனின் முன் ஆயிரம் நினைவலைகள்.

 

சுசித்ராவுடன் இருந்த பொழுதுகளை எண்ணியவன் இறுதியாகக் கழிந்த நாட்களில் அவள் கூறிய அனைத்தும் பொய் என தெளிவாக உணர்ந்தான்.

 

எவ்வளவு பெரிய துரோகம்… எவ்வளவு ஏமாற்றம்…

 

ஒரு பெண்ணின் பேச்சில் மயங்கி, நம்பி காதலில் விழ தான் அவ்வளவு முட்டாளாகவா இருந்திருக்கிறோம் என்ற எண்ணமே அவனை அதிகம் வாட்டியது.

 

அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை அவன்.

 

மறுநாள் காலையில் அவசரமாக சுசித்ராவை சந்திக்க சென்றான்.

 

அவன் சென்று ஒரு மணி நேரம் கழிந்து சஜீவ் முன் மாத்திரம் அணியும் ஸ்லீவ்லஸ் சாரியில் சாவகாசமாக வந்தாள் சுசித்ரா.

 

அவளை அவ்வாறு காணவும் சஜீவ்வின் முகத்தில் ஒரு ஏளனப் புன்னகை.

 

நேற்று இரவு எவ்வாறான ஆடை அணிந்து இருந்தாள்… ஆனால் இன்று….

 

வந்ததும் வராததுமாக சுதித்ரா சஜீவ்வை அணைக்க பல்லைக் கடித்து பொருத்துக் கொண்டான்.

 

சுசித்ரா, ” லவ் யூ பேபி… என்ட் ஐ மிஸ்ட் யூ அ லாட்… ரொம்ப வர்க் ப்ரஷர் பேபி… எங்க எம்.டி ரொம்ப ஸ்ட்ரிக்ட்… அதான் உன்னோட கால்ஸ்க்கு கூட ஒழுங்கா ரிப்ளை பண்ண முடியல… பேசாம இந்த ஜாப்ப ரிசைன் பண்ணலாம்னு இருக்கேன் சர்வா… உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணவும் முடியல…” என தன் பாட்டில் பேச,

 

கை கட்டி அவள் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான் சஜீவ்.

 

சஜீவ்விடமிருந்து பதில் வராததால் அவனைக் கேள்வியுடன் நோக்கியவள் பின் அவனை நெருங்கி,

 

“கோவமா இருக்கியா பேபி… நான்..” என ஏதோ சொல்ல வர, தன் மொத்த கோபத்தையும் திரட்டி சுசித்ராவின் கன்னத்தில் அறைந்தான் சஜீவ் சர்வேஷ்.

 

சுசித்ராவுக்கு ஒரு நிமிடம் உலகமே இருண்டது போலிருந்தது.

 

அவ்வளவு வேகம் அவனின் அடியில்.

 

பின் கோவமாக, “உனக்கு என்ன தைரியம் இருந்தா என்னையே அடிச்சிருப்ப..” என்க,

 

சஜீவ், “ச்சீ.. வாய மூடுடி… என் கூட பேசவே உனக்கு தகுதியில்ல… என்ன பொண்ணுடி நீ… நானா உன்ன தேடி வந்தேன்… நானா உனக்கு பொக்கே அனுப்பினேன்… நானா உன்ன காதலிக்கிறதா சொன்னேன்…. நீயா எல்லாம் பண்ணி என்ன லவ் பண்ண வெச்சிட்டு… இப்ப என்னன்னா அரை குறையா ட்ரஸ் பண்ணிட்டு கண்டவன் கூட ஒரசி ஒரசி பேசிட்டிருக்க… எதுக்குடி அப்போ என்ன லவ் பண்ணுறன்னு சொன்ன… எல்லாமே பொய்யா அப்போ… சொல்லுடீ… ” என ஆத்திரத்தில் அவள் கழுத்தை நெருக்கினான்.

 

சஜீவ்வின் பிடியிலிருந்து கஷ்டப்பட்டு தன் கழுத்தை விடுவித்த சுசித்ரா, “ஆமாடா…. எல்லாம் பொய் தான்… உன்ன ஏமாத்த தான் எல்லாம் பண்ணேன்… 

 

நான் சொன்ன எதுவுமே நெஜம் கெடயாது… உன்ன சுத்தமா பிடிக்காது எனக்கு… எங்க அப்பாவும் உன் அம்மாவும் சின்ன வயசுல இருந்தே சொன்னது உண்மை தான்… ஆனா நான் உன்ன சின்ன வயசுல இருந்து லவ் பண்ணல… அவங்க உன்ன பத்தி பேசும் போதே எனக்கு ரொம்ப இரிட்டேட்டிங்கா இருக்கும்…” என்றவள் அவன் அதிர்ந்து விழிக்க,

 

“முதல்ல இத சொல்லு நீ… என்ன லவ் பண்ண உனக்கு என்ன தகுதி இருக்கு… ஒழுங்கா படிக்க கூட இல்ல நீ… ஏதோ நல்ல சம்பளம் கெடக்கும்னு யூ.எஸ் வந்து ஒரு கம்பனில சாதாரண எம்ப்ளாயியா இருக்க… ஆனா நான் ஃபாரின்ல படிச்சி இப்ப ஒரு நம்பர் வன் கம்பனில எச்.ஆரா இருக்கேன்…. 

 

உன் மேல எல்லாம் எனக்கு லவ் வருமா… பின்ன எதுக்கு உன்ன லவ் பண்ற மாதிரி நடிச்சேன்னு கேக்குறியா… வேற எதுக்கு தாத்தா உன் பேருல எழுதி வெச்சிருக்குற சொத்துக்காக தான்… ஆனா இந்த விஷயம் உனக்கு கூட தெரியாது… 

 

கொஞ்சம் மாசத்துக்கு முன்னாடி அப்பா கால் பண்ணி உனக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்க அத்த கேக்குறதா சொன்னாரு… நான் முடியவே முடியாதுன்னு சொன்னேன்… அப்போ தான் சொன்னாரு நம்ம ஃபேமிலி லாயர் தாத்தாவோட உயில் விஷயத்த பத்தி அப்பா கிட்ட சொல்லி இருக்காரு… அதுல உன் பேருல பெரிய பங்கு சொத்து அந்த வீணாப்போன கிழவன் எழுதி வெச்சி இருக்காரு… அதுவும் உன் கல்யாணத்துக்கு அப்புறம் தான் உன் பேருல வந்து சேருமாம்… அதுல பாதி உரிமை உன் பொண்டாட்டிக்காம்…

 

அதனால தான் அப்பா உன்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி இருக்காரு… எனக்கும் சொத்து வருதுன்னு நானும் சம்மதிச்சேன்… அதுக்கப்புறம் உங்க அம்மா கூட ரொம்ப பாசமா பேசி உன்ன பத்தி தெரிஞ்சிக்கிட்டு உன்ன ஃபாளோ பண்ணி உன்ன லவ் பண்ண வெச்சேன்…

 

போக போக தான் புரிஞ்சது நீ சரியான சாமியார்னு… உன் கூடவெல்லாம் காலம் பூரா குப்ப கொட்ட முடியுமா… சொத்தாவது மண்ணாவது… அதான் என் டேஸ்ட்டுக்கு செட்டான நல்ல படிச்ச வசதியான ஒருத்தன தேடி பிடிச்சிருக்கேன்…

 

ஆனா உனக்கு தான் என் மேல ரொம்ப லவ்வே… அதான் உனக்கு எந்த விஷயமும் தெரியாதுன்னு நான் காதலிக்கிறவன கன்வின்ஸ் பண்ணி உன்ன கல்யாணம் பண்ணி என் பேருல மொத்த சொத்தையும் எழுதி வாங்கிட்டு கழட்டி விட்டுறலாம்னு ஐடியா பண்ணேன்.. அதான் கல்யாணத்த கூட தள்ளி போட்டேன் அவன கன்வின்ஸ் பண்ண…

 

எப்படியோ உனக்கு எல்லா உண்மைகளையும் தெரிஞ்சிடுச்சி… பட் இதனால எனக்கு எந்த நஷ்டமும் இல்ல… இந்த சொத்து போனா என்ன.. அதான் பல கோடி சொத்து எனக்கு வர போகுதே…

 

பட் சர்வேஷ்… இனிமே உன்ன யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க… சரியான படிப்பு கூட இல்ல… வேண்ணா உன் சொத்துக்காக எவளாச்சும் உன்ன கல்யாணம் பண்ணினா தான் உண்டு…” என அனைத்தையும் கூறி விட்டு இறுதியில் கேலியாக முடித்தாள்.

 

சுசித்ரா கூறியதை எல்லாம் கேட்ட சஜீவ் முழுதாக உடைந்து விட்டான்.

 

அடுத்து என்ன செய்ய என்று கூட விளங்கவில்லை.

 

கண்கள் கலங்க சிலையாக நின்றிருந்தவனிடம் வந்தவள், “பாய் பேபி…” என்று விட்டு அங்கிருந்து சென்றாள்.

 

அவள் சென்றது கூட சஜீவ் அறியாதிருந்தான்.

 

அந்த நொடியே பெண்களின் காதல் மீதான அவனின் நம்பிக்கை உடைந்தது.

 

சற்று நேரத்தில் தன்னிலை அடைந்தவன் அங்கிருந்து நேராக பாருக்கு சென்றான்.

 

இது வரை அவனுக்கு எந்த தீய பழக்கமும் இருக்கவில்லை.

 

ஆனால் இன்றோ தன் மனதிலுள்ள கவலையைத் மறக்க அளவுக்கு அதிகமாகவே குடித்தான்.

 

சஜீவ் குடிக்கும் அளவைப் பார்த்து அங்கிருந்த வெய்ட்டருக்கே பயமாக இருந்தது.

 

அவன் மீண்டும் கேட்க வெய்ட்டர்,

 

“சாரி சார்… இதுக்கு மேல முடியாது… உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்புறம் நாங்க தான் போலீஸ்க்கு பதில் சொல்லனும்…” என்க,

 

“ஹேய் மேன்… எனக்கு என்ன நடந்தாலும் உனக்கு என்ன வந்துச்சி… ஓஹ்… ஒருவேளை என் மேல… சாரி சாரி என் சொத்து மேல உனக்கும் காதலா…” என சஜீவ் குடி போதையில் உளற,

 

அந்த வெய்ட்டரோ, “என்னடா இது எனக்கு வந்த சோதனை…” எனப் பார்த்தான்.

 

சஜீவ் மீண்டும், “பாஸ்… இந்த பொண்ணுங்களையே நம்ப கூடாது… அதுலயும் நம்மள ஃபர்ஸ்ட் லவ் பண்ணி ப்ரபோஸ் பண்ணுற பொண்ணுங்கள நம்பவே கூடாது… என்னமா கதை விடுவாங்க… அப்பப்பா… ” என்றவன்,

 

“ஏமாந்துட்டேன் பாஸ்… ஏமாந்துட்டேன்.. இல்ல இல்ல… ஏமாத்திட்டா… நம்ப வெச்சி கழுத்தறுத்துட்டா… இங்க வலிக்குது பாஸூ…” எனக்கூறி அழுத படி நெஞ்சைத் தொட்டுக் காட்டியவன் அப்படியே மட்டையாகினான்.

 

அந்த வெய்ட்டர் சஜீவ்வின் மொபைலை எடுத்து கடைசியாக வந்த கால் ஹிஸ்ட்ரியைப் பார்க்க தீபக் என்ற பெயரில் மிஸ்ட் கால் இருந்தது.

 

அந்த நம்பருக்கு அழைத்து சஜீவ் பற்றி கூறி விட்டு வைக்க, தீபக் என்பவன் வந்து சஜீவ்வை தன் ஃப்ளாட்டிற்கு அழைத்துச் சென்றான்.

 

இங்கு நித்ய யுவனிக்கு செமஸ்டர் பரீட்சை முடிவுகள் வர, அதைப் பார்த்த ஜனனி அவள் கன்னத்தில் அறைந்திருந்தாள்.

 

❤️❤️❤️❤️❤️

 

– Nuha Maryam –

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்