Loading

அத்தியாயம் -7

ஆகாஷும் மீனாவும் அலைபேசியில் பேசிக்கொள்ள ஆரம்பித்து இருந்தனர்.

தங்களுடைய பிறந்த கதை, வளர்ந்த கதை, படித்த கதை என்று அவர்களுக்குப் பேச கதைகள் நிறைய இருந்தன.

ஆகாஷிடம் பேசப்பேச அவனுடைய குணங்களும் மிகவும் பிடித்து விட்டது மீனாவுக்கு.

எதையும் வெளிப்படையாக பேசும் குணமும், அனுசரித்துப் போகும் அவன் மனமும் படைத்த ஒருவன் தனக்குக் கிடைத்து விட்டான், இனி, வாழ்நாள் முழுவதும் அவனுடன் சேர்ந்து தான் வாழ்க்கைப் படகில் பயணம் செய்யப் போகிறோம் என்று நினைக்க நினைக்க மனதில் உற்சாகமும் சந்தோஷமும் குதூகலமும் நிரம்பியது அவளுக்கு.

அடிக்கடி கண்ணாடி முன் சென்று நின்று கொண்டாள். ஐந்தரை அடி உயரம் கொண்ட மீனாவுக்கு மிதமான உடல்வாகு. கோதுமை நிற தேகம். புசுபுசுவென உப்பி இருக்கும் கன்னங்கள். கூர் மூக்கு. அழகான பெரிய கண்கள். இவ்வளவும் கலந்த ஒரு அழகான தேவதை தான் மீனா.

ஆனால் திருமணப் பூரிப்பு முகத்தில் வந்ததாலோ என்னவோ, இப்போது இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகாகத் தெரிந்தாள்.

மொத்தத்தில் பார்ப்பவர்களைக் கொள்ளை கொள்ளும் ஒரு அழகு தான் மீனா. நீண்டிருந்த அவளுடைய கூந்தலில் மல்லிகைச் சரத்தை அழகாகத் தொடுத்து வைத்து, எளிமையான ஒரு காட்டன் புடவையில் இன்னமும் எளிமையாக முக அலங்காரம் செய்து கொண்டு வந்து நின்றாள் என்றால், அந்தப் பிரம்மனே மூர்ச்சையாகித் தான் போவார்.

ஆகாஷும் ஒன்றும் எதிலும் குறைந்தவன் அல்ல. மீனாவுக்கு இணையாக, ஆண்மைக்கே உரிய ஒரு கம்பீரமான அழகுடன், ஆறடி உயரத்தில் இருக்கும் ஒரு நல்ல அழகன் தான்.

இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதம் என்று மீனாவுக்கே கூடத் தோன்றி விட்டது. எல்லா பெண்களைப் போன்று அவளும் தன்னுடைய திருமணத்தை நினைத்து பலவிதமான கனவுகளில் மூழ்கி இருந்தாள்.

ஆகாஷுடன் வாழப்போகும் வாழ்க்கையை நினைக்கவே தித்தித்துக் கொண்டு இருந்தது அவளுக்கு.

நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்து திருமணத் தேதியையும் குறித்த பின்னர், வீட்டுப் பெரியவர்களின் ஒப்புதலுடன் இருவரும் சேர்ந்து அவ்வப்போது வெளியே செல்லவும் ஆரம்பித்து இருந்தனர்.

இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டனர். எப்போது திருமண நாள் வரும், ஆகாஷ் எப்போது தன் கழுத்தில் தாலி கட்டுவான் என்று ஆசையாகக் காத்திருந்தாள் மீனா.

அப்படி எல்லாம் இருந்த ஒரு பெண்ணிற்குத் தான் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து, இன்று சற்றும் எதிர்பார்த்தே இராத யாரென்றே முன் பின் தெரியாத ஒரு ஆடவனுடன் திருமணம் முடிந்து, ஏதேதோ நடந்து, இதோ இப்போது இந்த அறையின் மூலையில் தன் உடலைச் சுருக்கிக் கொண்டு படுத்து, கண்ணீர் விட்டுத் தலையணையை நனைத்துக் கொண்டு இருக்கிறாள்.

இவ்வளவும் ஒவ்வொன்றாக மனதில் வந்து அவளை அலைக்கழிக்க, திடீரென மண்டையில் அப்போது தான் உரைத்தது அவளுக்கு. தலையில் கை வைத்துக் கொண்டாள்.

‘ஆகாஷ்.. ஆகாஷ்..’

ஆகாஷைப் பற்றிய நினைவு வந்ததும் தான், அவன் எங்கும் ஓடிப் போகவில்லை, சபரி தான் அவனைக் கடத்தி இருக்கிறான் என்பதே ஞாபகம் வந்திருந்தது அவளுக்கு. உடனே உடல் முழுவதும் தூக்கிவாரிப் போட எழுந்து அமர்ந்தாள் மீனா.

‘ஆ.. ஆகாஷ் என்ன ஆனாரு? நான் தான் அவனைத் தூக்கினேன்னு இல்லே இந்தக் கயவன் சொன்னான்? அப்படின்னா அவரை என்ன பண்ணிருப்பான் இந்த ராட்சஷன்?’

அவளுடைய கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்தோடியது.

‘ஆ.. ஆகாஷ், நீங்க எங்கே இருக்கீங்க? உங்களுக்கு எதுவும் இல்லையே? நீங்க நல்லா இருக்கீங்கல்லே?’

கண்களில் கண்ணீருடன் தானாகவே பிதற்றினாள்.

‘ஒரு.. ஒருவேளை அவரை கொலை கிலை பண்ணிருப்பானா இவன்?’

நினைக்கவே உடல் நடுங்கியது அவளுக்கு.

‘இல்லேல்லே.. இவன் தான் சொன்னானே அப்பவே! கொலை பண்ணிட்டு என்னை என்ன ஜெயிலுக்கா போகச் சொல்றேன்னு கேட்டானே! அதனால அப்படி எல்லாம் செஞ்சிருக்க வாய்ப்பு இல்ல’

தானே தன் மனதை சமாதானம் செய்து கொண்டாள்.

என்ன தான் மனம் சமாதானம் அடைந்தது போல் இருந்தாலும் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை பெண்ணவளால்.

அவளுக்கு இப்போது தன்னைப் பற்றிய கவலையை விட ஆகாஷை நினைத்துத் தான் கவலையாக இருந்தது.

அவன் எங்காவது நன்றாக இருக்க வேண்டுமே என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.

‘பாவம் ஆகாஷ்! எங்கே இருக்காரோ? எப்படி கஷ்டப்பட்றாரோ? இவன் என்னைப் பழி வாங்குறேன்னு சொல்லிட்டு அவரை என்ன பண்ணி வச்சுருக்கான்னு தெரியலையே! எப்படித்தான் தெரிஞ்சுக்கிறது? இவன் கிட்ட கேட்டா ஒழுங்கா பதில் சொல்வானான்னு தெரியலையே! ஆனா அதுக்காக அப்படியே எல்லாம் விட முடியாது. நாளைக்கு விடிஞ்சவுடனே மொதோ வேலையா என்ன ஏதுன்னு ஆகாஷைப் பத்தின விவரத்தைக் கேக்கணும். இவனோட கையில கால்ல விழுந்தாவது அவனை விடச் சொல்லணும். இந்தச் சண்டாளன் கிட்ட கிடந்து கஷ்டப்பட்றதுக்கு எனக்குத் தான் தலையெழுத்துன்னா, பாவம் ஆகாஷ் என்ன பாவம் செஞ்சாரு? அப்படி மட்டும் அவரை விடலேன்னா போலீஸ்ல தான் போகணும் அப்புறம்’

இவ்வாறெல்லாம் மனதில் நினைத்துக் கொண்டே தூங்க முயன்றாள். ஆனால் சுற்றிச் சுற்றி மீண்டும் காலையில் இருந்து நடந்ததே தான் மனதில் வந்து நின்றது அவளுக்கு. எவ்வளவு முயன்றும் அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை அவளால்.

‘இவன் எனக்கு இப்படி ஒரு கொடுமையச் செய்றதுக்கு அப்படி நான் என்ன தான் செஞ்சுட்டேன்? எனக்கே தெரியாம யாருக்காவது ஏதாவது தீங்கு செஞ்சுட்டேனா? அவங்க இவனுக்குத் தெரிஞ்சவங்களா இருப்பாங்களோ? ஆனா நான் யாருக்குமே எந்தத் தீங்கும் செஞ்சதே இல்லையே! ஏன்.. யாருக்கும் அப்படி நான் நினைச்சுப் பாத்தது கூட இல்லையே!’

தன் பள்ளிப் பருவத்தில் நடந்ததையும் கல்லூரி நாட்களில் நடந்தவைகளையும் வேலை செய்யும் இடத்தில் நடந்தவைகளையும் என்று ஒவ்வொன்றாக மனதில் கொண்டு வந்து நிறுத்திப் பார்த்தாள்.

ம்ஹூம்.. அவளுக்கு, தான் எந்தத் தவறும் செய்த மாதிரி தோன்றவே இல்லை.

திடும்மென மனதில் அவளுடைய அப்பாவும் அம்மாவும் வந்து நின்றனர். அவர்களை நினைத்த மாத்திரத்தில் கண்களில் கண்ணீர் திரண்டு வந்தது அவளுக்கு.

‘மகளுக்கு நல்லபடியா கல்யாணத்த முடிச்சுட்டோம், அவ சந்தோஷமா இருப்பான்னு நினைச்சு இந்நேரம் பூரிச்சுப் போயிருப்பாங்க.

பெரிய கடமை ஒன்னு முடிஞ்ச சந்தோஷத்தில, மனசுல இருக்கிற பாரம் குறைஞ்சு நிம்மதியா தூங்கி இருப்பாங்க இந்நேரம்.

ஆனா இங்கே, நடக்கிறதே வேற. நான் அடுத்து என்ன பண்ணனும்? அவங்க மாப்பிள்ளை ரொம்ப நல்லவருன்னு இல்ல நினைச்சிட்டு இருக்காங்க. அவங்க கிட்ட நான் என்ன சொல்றது?

நடந்த உண்மை எல்லாம் அப்பா அம்மா கிட்ட சொல்றதா வேண்டாமா? சொன்னா அவங்க தாங்குவாங்களா?

சந்தோஷமா இருக்கிற அவங்க கிட்ட எப்படி நான் உண்மையைச் சொல்ல முடியும்? நீங்க நினைக்கிற மாதிரி உங்க பொண்ணு சந்தோஷமா இல்லேப்பான்னு சொன்னா, அம்மாவுக்கு ஏதாவது ஆயிட்டா?

அதுவும், என்னைப் பழி வாங்குறதுக்காகத் தான் இந்த வஞ்சகன் என் கழுத்தில தாலி கட்டி இருக்கான் என்ற உண்மை மட்டும் அவங்களுக்குத் தெரிஞ்சா என்ன நடக்கும்?

அப்புறம் அவங்க உயிரோட இருப்பாங்களா? தன் பொண்ணுக்கு இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிட்டோமேன்னு அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சா, அவர் ஏதாவது பண்ணிப்பாரோ?’

வாயை மூடிக் கொண்டு விம்மி அழுதாள் மீனா. துயரத்தில் நெஞ்சு அடைத்தது அவளுக்கு.

அழுது அழுது ஓய்ந்து கடைசியில், சபரியைப் பற்றியும், தன்னை அவன் திருமணம் செய்த காரணத்தையும், தன் திருமணம் நின்றது மட்டும் அல்லாமல் நடந்தவை அனைத்திற்கும் காரணம் அவன் தான், அவன் மட்டும் தான் என்பதைப் பற்றிய எந்தவிதத் தகவலும் தன் குடும்பத்தினரிடம் சொல்வதில்லை என்று முடிவெடுத்தாள் மீனா.

அவர்களாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்பதற்காக, முதலிரவு அறையில் நடந்தது எதுவும் யாருக்குமே தெரியவே கூடாது என்றும், எல்லா உண்மைகளையும் தன் மனதிலேயே புதைத்துக் கொள்வது என்றும் முடிவெடுத்தாள்.

எவ்வளவு முயன்றும் மனம் ஆறவே இல்லை அவளுக்கு. திரும்பி படுக்கையில் படுத்திருந்தவனைப் பார்த்தாள். நன்றாக அசந்து தூங்கி இருந்தான். அவனுடைய முகத்தைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது அவளுக்கு.

‘அப்பப்பா.. காலையில என்ன ஒரு நடிப்பு நடிச்சான்? என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக என்னவெல்லாம் எப்படி எல்லாம் பேசினான் ம்ம்?’

அப்படியே அவனைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்ய வேண்டும் போல் இருந்தது அவளுக்கு.

ஆனால் இதையெல்லாம் நினைத்துப் பார்க்க மட்டும் தானே பார்க்க முடியும் பெண்ணவளால்? இதுவரை அதிர்ந்து கூட பேசத் தெரியாத பெண் அல்லவா அவள்!

ஒரே நாளில் மாறி விட முடியுமா என்ன? தன் இயல்பில் இருந்து உடனே முற்றிலும் வெளியே வந்து விட முடியுமா?

கோபத்துடன் பார்த்தாள் அவனை. அப்போதைக்கு அவளால் அது மட்டும் தான் முடிந்தது.

அவனைத் தன் கணவன் என்று நினைப்பதற்குக் கூட மனம் ஒப்பவில்லை அவளுக்கு. இவனுடன் தினமும் ஒரே வீட்டில் ஒரே அறையில் எப்படி இருப்பது என்று நினைக்கும் போதே வயிற்றில் புளியைக் கரைத்தது அவளுக்கு.

திடீரென அவளுக்கு மனதில் சந்தேகம் ஒன்று உதித்தது.

‘இதெல்லாம் இவனோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரிஞ்சு இருக்குமா இல்லையா? அவங்களுக்குத் தெரிஞ்சு தான் எல்லாமே நடக்குதா? சேச்சே.. அப்படி எல்லாம் இருக்காது’ மறுத்தது மனம்.

இப்படியே மனதில் பலவிதமான எண்ணங்கள் அலைமோத, விடிவதற்கு சிறிது நேரம் இருக்கும் போது கண் அமர்ந்தாள் மீனா.

அவள் வாழ்க்கையில் இன்னும் என்னென்ன நடக்கக் காத்திருக்கிறதோ? யாருக்குத் தெரியும் பாவம்?

மறுநாள் பொழுது விடிந்தது. மீனா கண் முழிக்கும் போது நேரம் ஆறு முப்பதைக் கடந்து பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது.

அவசரமாகப் பதறியடித்து படுக்கையில் இருந்து எழுந்தாள்.

‘அச்சோ! இவ்வளவு நேரம் ஆயிடுச்சே! இது என்ன நம்ம வீடா? நான் பாட்டுக்கு இப்படித் தூங்கிட்டேனே. என்ன சொல்லுவாங்களோ என்னவோ?’

படுக்கையைச் சுருட்டி வைத்து விட்டு எழுந்து தன் உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

குளித்து உடை மாற்றி வந்தவள், அறையை விட்டு வெளியேறும் போது கணவன் என்கிற பெயரோடு கட்டிலில் உறங்கிக் கொண்டு இருந்தவனைத் திரும்பிப் பார்த்தாள்.

இரவு படுக்கும் போது எந்த நிலையில் இருந்தானோ, அதே போலவே இன்னமும் தூங்கி இருந்தான் சபரி. உடலில் எந்த ஒரு அசைவும் இல்லை. இலேசான குறட்டை ஒலி மட்டும் வந்து கொண்டு இருந்தது அவனிடம் இருந்து.

அவனுடைய அந்த குறட்டை ஒலியை வைத்து தான் அவன் உயிரோடு தான் இருக்கிறான் என்பதையே புரிந்து கொள்ள முடிந்தது.

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

8 Comments

  1. எத்தனை எதிர்பார்ப்புகள் கனவுகள் கற்பனைகள் எல்லாம் தகர்ந்துவிட்டது.

    எதிர்பார்ப்புகள் தான் பொய்த்து போனது என்றால் எதிர்பட்டவைகள் ஏமாற்றம் தந்து எதிர்காலம் சூன்யமாகிபோனதே!

    என்ன தவறிழைத்தோம்? யாருக்கு தீங்கிழைத்தோம்? என்று எதுவும் புரியாத குழப்பநிலை.

    தன் முன் இருக்கும் தன் வாழ்வை வறண்டு போக செய்பவனை வதைக்க யோசிக்க மட்டுமே முடிகிறது இயல்பிலேயே அமைதியான இயல்பினலான அவளால்.

    அம்மா அப்பாவின் நிம்மதிக்காக அமைதிகாக்க, உண்மையை மறைக்க முயலுகிறாள். பார்ப்போம் என்ன ஆகிறதென்று.

    1. Author

      உங்களின் இந்த அருமையான விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 😊

  2. என்னச் சொல்றதுன்னே தெரியலை அவளின் யோசனைகள் சரிதானே 😔

  3. ஆகாஷை திருமணம் செய்து சந்தோஷமாய் வாழலாம் என்று பகல் கனவு கண்டிருக்க, அவை யாவும் நிறைவேறாத கனவுகளாக கலைந்து போய்விட்டது.

    அவள் வரை எடுத்த முடிவு சரிதான். தீர விசாரிக்காமல் அவசரப்பட்டு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். இனி அனுபவித்து தான் ஆக வேண்டும்.

    அப்பாவி பெண்ணின் நிம்மதியை பறித்து விட்டு எப்படி உறங்குகிறான் பாருங்க

    😡😡😡

    1. Author

      உங்களின் இந்த அருமையான விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 😊

    2. மீனா நிலைமை பாவம் தான் … இந்த சபரி என்னெல்லாம் பண்ண காத்திருக்கானோ