
அத்தியாயம் -40 (இறுதி)
எதிர்முனையில் ஆகாஷ் பேசுகிறான் என்று தெரிந்தவுடன் படபடப்பின் உச்சிக்கு சென்றிருந்தாள் மீனா.
“மீனா, வெயிட் வெயிட்! பதட்டப்படாதே. எனக்கு எதுவும் ஆகல மீனா. நான் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கேன். கூல்!”
“ஆகாஷ், அன்னைக்கு உங்களுக்கு என்னாச்சு? மண்டபத்தில இருந்து உங்கள யாரு கடத்தினாங்க?”
“இங்கே பாரு மீனா. மொதோ இப்படி பயப்பட்றத கொஞ்சம் நிறுத்து. நான் நல்லா இருக்கேன். அன்னைக்கு கல்யாண மண்டபத்தில இருந்து என்னை சிலர் கடத்திட்டுப் போனது நிஜம் தான்.
ஆனா நானும் அவங்க என்னை என்ன பண்ணப் போறாங்களோ, ஏன் கடத்திட்டு வந்திருக்காங்களோ அப்படின்னு நினைச்சு மொதோ ரொம்ப பயந்து தான் போயிருந்தேன். ஆனா ஒரு நாலஞ்சு மணிநேரம் கழிச்சு ஒருத்தர் வந்தாரு. உனக்கும் தெரிஞ்சிருக்குமே அவரை.
ஆமா மீனா, உன்னோட ஹஸ்பண்ட் மிஸ்டர் சபரி தான் அங்கே வந்தாரு. என் கிட்ட மன்னிப்பு கேட்டாரு. அதுவும் எப்படின்றே? கால்ல விழுந்துக் கெஞ்சினாரு.
உன்னை ரொம்ப வருஷமா காதலிக்கிறதாலும், உன்னைப் பிரிஞ்சு இருக்கவே முடியாது என்றதுக்காகவும் தான் இப்படி ஒரு காரியத்தைச் செஞ்சுட்டதா சொல்லி மன்னிப்பு கேட்டாரு.
கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறமா என்னைப் பாக்க வந்ததா சொன்னாரு. எனக்கு அப்ப கோவம் தான் வந்தது மீனா. அவர் எல்லா விவரமும் சொல்லிட்டு, நான் செஞ்சது தப்பு தான்னும் மன்னிப்பு கேக்குறது கூட நியாயமில்லேன்னும், ஆனா எனக்கு இது தவிர வேற வழி தெரியலேன்னும் அழாத குறையா சொன்னாரு.
நான் கோவமா தான் அங்கே இருந்து வெளியே வந்தேன். அந்த நேரமே நான் வந்து இதெல்லாம் சொன்னா, வீணா உன் வாழ்க்கையில குழப்பம் தான் வரும். எப்படியோ அவர் உன்னை ரொம்ப விரும்பித் தான் கல்யாணம் பண்ணிருக்காரு. உன் வாழ்க்கை நல்லா இருக்கும் என்ற நம்பிக்கையோட பேசாம இருந்துட்டேன்.
அப்பாவையும் அம்மாவையும் கூட்டிட்டு பெங்களூருக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்துட்டேன். எனக்கு இப்ப கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருச்சு மீனா. நீயும் இப்ப எல்லாத்தையும் புரிஞ்சுட்டு, சபரி கூட சந்தோஷமா இருப்பேன்னு நினைச்சுத் தான் கால் பண்ணேன்.
நீ நல்லா இருக்கேல்லே மீனா? சபரி பாவம் நல்லவர் தான். உன் மேலே வச்சிருந்த அளவு கடந்த காதல்ல என்ன செய்றதுன்னு தெரியாம இப்படி ஒரு தப்பு செஞ்சுட்டாரு. மத்தபடி ஹீ இஸ் அ வெரி குட் பெர்சன் மீனா.
எனக்கு வரப்போற மனைவி சுவிதாவுக்கு சபரியை ரொம்ப நல்லாவே தெரிஞ்சிருக்கு. ரொம்ப ஹெல்ப்பிங் மைண்டட் பெர்னாம் இல்ல. பிளட் டொனேட் பண்ணுவார் போல. அவளோட அப்பாவுக்கு ஒரு தடவை அவசரமா பிளட் தேவைப்பட்ருக்கு. வாட்ஸ்அப் குரூப் மூலமா சபரியோட காண்டாக்ட் கிடைச்சிருக்கு. அவர் தான் பிளட் குடுத்தாராம்.
அது தான் உனக்கும் மனசில அவர் மேலே ஏதாவது குறை இருந்தா, நான் அதைத் தெளிவாக்கலாம்னு தான் கால் பண்ணேன் மீனா. நீ அவர் கூட சந்தோஷமா இருக்கியா?”
நீளமாகப் பேசிவிட்டு அவளிடம் விசாரித்தான் ஆகாஷ்.
“ம்ம்.. ஆமா ஆகாஷ். மொதோ என்ன நடந்ததுன்னே சரியா எனக்குத் தெரியல. அப்புறம் அவரே தான் எல்லாத்தையும் சொன்னாரு. உண்மை தெரிஞ்சப்புறம் கொஞ்ச நாள் அவர் மேலே கோவமா தான் இருந்தேன். அதுக்கு அப்புறம் தான் அவரோட காதலையும் அவரோட நல்ல மனசையும் புரிஞ்சிகிட்டேன். இப்ப நாங்க ஹேப்பியா இருக்கோம் ஆகாஷ்”
“ஓ! தட்ஸ் குட் மீனா. இப்ப தான் மனசு நிம்மதியா இருக்கு எனக்கு. நீ எப்படி இருக்கியோன்னு பயந்துட்டே இருந்தேன். ஓகே மீனா, பெஸ்ட் விஷஸ் ஃபார் யுவர் ஹேப்பி லைஃப்!”
“தேங்க்யூ ஆகாஷ். உங்களுக்கும் என்னோட விஷஸ்! அண்ட் உங்களுக்கும் என்னோட அட்வான்ஸ் ஹேப்பி மேரிட் லைஃப்!”
“தேங்க்யூ மீனா! பை”
“பை ஆகாஷ்!”
அவள் பேசி முடிப்பதற்கும், நவீனை அழைத்துக் கொண்டு செவிலியப் பெண்கள் வரவும் சரியாக இருந்தது.
அவர்கள் சென்றதும் தன் அண்ணனுக்குத் தண்ணீர் குடிக்க எடுத்துக் கொடுத்தாள். பிறகு சிறிது நேரம் படுத்திருப்பதாகக் கூறி விட்டுப் படுத்தான் நவீன்.
ஆகாஷ் பேசியது மனதிற்குள் ஒருவித நிம்மதி பரவியது போல் இருந்தது அவளுக்கு. அவன் எப்படி இருக்கிறானோ என்று இது நாள் வரை ஒரு குழப்பத்தில் இருந்தவளுக்கு தெளிவு கிடைத்தது போல் இருந்தது.
அதிலும் அவனுக்குத் திருமணம் நடக்கப் போகிறது என்கிற விஷயம் கூடுதல் சந்தோஷத்தைத் தந்தது. இந்நாள் வரை மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்திற்கு விடை கிடைத்த சந்தோஷத்தில் கண்களை மூடிக் கொண்டாள்.
மனதில் சபரி வந்து நின்று அவளை அழைத்தான் அருகே. இவளும் தயங்கியவாறு சென்றாள். அவளைக் கட்டியணைத்து முத்தம் தந்தான். சட்டென்று நினைவில் இருந்து மீண்டாள். வெட்கச் சிரிப்பு முகத்தில் பரவியது அவளுக்கு.
‘சபரி நல்லவர் தான். என்னைக் கல்யாணம் பண்ண விஷயத்திலே மட்டும் கொஞ்சம் அவசரப் பட்டுட்டார். அவர் அப்படி செஞ்சதுக்குக் காரணம் ஷோபனா மேலே வச்சிருந்த அன்பும் காதலும் தான். யோசிக்காம செஞ்சிட்டாரு. எப்ப, தான் செஞ்சது தப்புன்னு தெரிஞ்சதோ, அப்ப இருந்து அதுக்காக ரொம்பவுமே ஃபீல் பண்றாரு. அவர் தப்பு செஞ்ச எல்லா விஷயத்தையும் அவரே சரி பண்ணிட்டாரு. அவர நான் மன்னிச்சா தான் என்ன? இப்ப அவர் என்னைக் காதலிக்கிறது எனக்குமே நல்லா தெரியுது தான்’
சபரி செய்த காதல் குறும்புகளையும் சேட்டைகளையும் நினைக்க நினைக்க அவளுக்குள் காதல் ஊற்றெடுத்தது.
என்ன செய்வது? சில நேரங்களில் சில புரிதல்கள் தவறாகப் போய் விடுகிறது. இங்கேயும் அது தான் நடந்திருக்கிறது. அந்த தவறான புரிதலால் ஒரு நல்லவன் கெட்டவனாக மாறும் ஒரு சந்தர்ப்பம் உருவாகி விட்டது. இதை அவளின் விதி என்பதா இல்லை இந்த நல்லவனோடு சேர்த்து வைப்பதற்காக அந்த இறைவனால் நடத்தப்பட்ட நாடகம் என்பதா? அந்தக் கடவுளுக்குத் தான் வெளிச்சம்!
அப்போது அவளுடைய அலைபேசி ஒலியெழுப்பி அவளுடைய சிந்தனையைக் கலைத்தது.
அடுத்த இரண்டு நாட்கள் மருத்துவமனையில் வைத்திருந்துப் பிறகு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் நவீனை.
அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து மாமியார் வீட்டிற்குத் திரும்பினாள் மீனா.
அவளுக்குச் சபரி மேல் காதல் வந்து விட்டிருந்தாலும், தானாகச் சென்று அவனிடம் வலிய தன் காதலைச் சொல்வதற்கும் வெட்கமாக இருந்தது.
அன்று இரவு, சபரி ஆசையாக வந்தான் படுக்கையறைக்கு. தன் மனைவி தன்னை மன்னித்திருப்பாள் என்கிற நினைவுடன் வந்தவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
எப்போதும் போல் சுவர் பக்கம் திரும்பி படுத்துத் தூங்கி விட்டிருந்தாள் மீனா.
சபரிக்கு ஏமாற்றம் மட்டுமல்ல கோபமும் சேர்ந்தே வந்தது. தன் கையால் கட்டிலில் ஓங்கிக் குத்தினான் கோபத்துடன். பிறகு பேசாமல் படுத்துக் கொண்டான்.
‘அதுதான் நான் நடுவில தடுப்புக்குத் தலையணை எதுவும் வைக்கல தானே. அப்பவே புரியல இவருக்கு? பக்கத்தில வர வேண்டியது தானே! நான் என்ன வேணாம்னா சொல்லப் போறேன்?’ முழித்துக் கொண்டு படுத்திருந்த மீனாவுக்கு யோசனை இப்படிச் சென்றது.
மறுநாள் காலையில் இருந்து சபரி, மீனாவை ஏறெடுத்துக் கூடப் பார்க்கவில்லை. இன்னமும் அதே கோபத்தில் இருந்தான். அவளாக வலியச் சென்றுப் பேசினாலும் பதில் கூறாது முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
செய்வதறியாது தவித்தாள் மீனா. இப்படியே இரண்டு நாட்கள் கடந்தது. அன்று வெள்ளிக்கிழமை. மாலதியும் சீனிவாசனும் ஆன்மீகச் சுற்றுலா செல்வதற்காக என்று கிளம்பி விட்டனர். நான்கு நாட்கள் ஆகும் அவர்கள் திரும்பி திரும்புவதற்கு.
எப்படியாவது அன்று இரவு கணவனிடம் தன் காதலைச் சொல்லி விடுவது என்கிற முடிவுடன் இருந்தாள் மீனா. ஆனால் சபரியோ, அவள் வருவதற்கு முன் தூங்கி விட்டிருந்தான்.
குற்ற உணர்வில் கண்களில் கண்ணீர் திரள, படுக்கையில் விழுந்தாள்.
மறுநாள் சனிக்கிழமை. அன்று விடுமுறை நாள் அல்லவா! இருவரும் தனியாக ஒன்றாக இருக்கப் போகிறார்கள் வீட்டில். அன்றாவது தன் காதலைச் சொல்லியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டாள் மீனா.
மறுநாள் விடிந்தது. சீக்கிரமாகவே எழுந்துச் சபரிக்குப் பிடித்த வெண் பொங்கல் சாம்பார் தயார் செய்தாள்.
அப்போது வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. இந்நேரம் யார் வந்திருப்பார் என்கிற யோசிப்புடன் சென்று கதவைத் திறந்தாள் மீனா.
வெளியே, ஸ்கர்ட், டாப்ஸ் அணிந்து, தலையில் பாப் கட்டிங்குடன், ஒரு இளம் பெண், சிரிப்புடன் அழகாக ஸ்டைலாக நின்றிருந்தாள்.
“யார் நீங்க? யார் வேணும்?” குழப்பத்துடன் கேட்டாள் மீனா.
அந்தப் பெண்ணோ, அவளைச் சிறிதும் பொருட்படுத்தாமல், வீட்டின் உள்ளே தன் பார்வையைக் கொண்டு சென்றாள்.
அப்போது தான் உள்ளிருந்து வந்த சபரியைக் கண்டதும் முகம் மலர்ந்தது அந்தப் பெண்ணிற்கு.
மீனாவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள். எரிச்சலுடன் அவளைப் பின் தொடர்ந்தாள் மீனா.
“ஹேய் சபி டார்லிங்! நீங்க இன்னும் ரெடியாகல?” கேட்டவாறு சபரியின் அருகே சென்று அவனை ஒட்டிக்கொண்டு நின்றாள்.
‘என்னது.. சபி டார்லிங்கா?’
அவளுடைய பேச்சும் செய்கையும் மீனாவுக்கு எரிச்சலைத் தந்தது. அருகே சென்றாள்.
“ஏய், யார் நீ? இங்கே கேட்டுட்டே இருக்கேன்.. நீ பாட்டுக்கு உள்ளே போறே! அதிலே வேற சபி டார்லிங்காம். மூஞ்சியப் பாரு! யாருடி நீ?”
அவளோ இவள் பக்கம் திரும்பக கூட இல்லை.
“என்ன சபி டார்லிங்? யாரு இந்தப் பட்டிக்காடு? ஓ! எப்ப பாத்தாலும் சிடுசிடுன்னு முகத்த வச்சிட்டு டார்ச்சர் பண்ற மாதிரியே ஏதாச்சும் செஞ்சிட்டு இருப்பான்னு சொல்வீங்களே! இவங்க தான் உங்களோட அந்த இடியட் பொண்டாட்டியா? பாவம் டார்லிங் நீங்க!”
என்று மீனாவை ஏளனத்துடன் பார்த்தாள் அந்தப் பெண். ஆனால் மீனாவின் முறைக்கும் பார்வையோ இப்போது சபரியின் மீது நிலைத்திருந்தது.
சபரியோ செய்வதறியாது திருதிருவென முழித்துக் கொண்டு நின்றிருந்தான்.
“யு லுக் சோ ஹேண்ட்சம் சபி டார்லிங்! ஐ லவ் யூ டியர்!” என்று கூறியவாறுச் சட்டெனத் தன் கைகளால் அவனுடைய கழுத்தை வளைத்து, அவனை இழுத்து அவனுடைய கன்னத்தில் பச்சக் என்று சத்தமாக முத்தம் ஒன்றைப் பதித்தாள் அப்பெண்.
அடுத்த கணமே மீனா, சிறிதும் தாமதிக்காமல் அவளை இழுத்து, அவளுடைய கன்னத்தில் பளாரென்று அறைந்தாள்.
“நீயெல்லாம் பொண்ணாடி? நடு வீட்டில நின்னு அடுத்தவ புருஷனுக்கு முத்தம் குடுக்குறே? கொஞ்சமாவது வெக்கம், மானம் இருக்காடி உனக்கு?” உறுமினாள் மீனா.
கதிகலங்கிப் போய் விட்டாள் அப்பெண். கன்னத்தைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். கண்களில் பூச்சி பறந்தது போலும் அவளுக்கு. கண்களை மூடித் திறந்தாள்.
பிறகு கோபத்துடன் சபரியின் பக்கம் திரும்பினாள்.
“மிஸ்டர் சபரி, வாட் ஹெல் இஸ் திஸ்? இந்த லேடி இப்படி பண்றாங்க? நீங்களும் வேடிக்கை பாத்துட்டு நிக்குறீங்க? இப்படின்னு தெரிஞ்சிருந்தா, இந்த ட்ராமாவுக்கே நான் ஒத்துட்ருக்க மாட்டேன். நடிக்க வந்தா இப்படியா? இன்னும் ஒன் ஹவர்ல எனக்குப் பேசின பணத்த விட டூ தவுசண்ட் எக்ஸ்ட்ரா என் அக்கவுண்டுக்கு வரணும். இல்லேன்னா நடக்கிறதே வேற. ஆமா சொல்லிட்டேன்! பீ கேர் ஃபுல்!”
கோபத்துடன் படபடவெனப் பொரிந்துத் தள்ளிவிட்டு வேகமாகச் சென்று விட்டாள் அப்பெண். வாசலில் கதவு அறையும் சத்தம் கேட்டதில் தெரிந்தது, அவள் எவ்வளவு உக்கிரத்துடன் இருக்கிறாள் என்று.
இப்போது மீனாவோ, இடுப்பில் கையை வைத்துக் கொண்டு அப்போதே எரித்து பஸ்பமாக்குவது போல் சபரியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சபரியோ பயந்த முகத்துடன் நின்று அப்பாவியாக முழித்துக் கொண்டிருந்தான்.
“இ.. இல்லே.. எனக்கு எதுவும் தெரியாது மீனா! அவ இப்படி உளறி வைப்பான்னு நான் நினைக்கல”
“உ.. உங்கள, இருங்க..” என்று கையில் எதுவும் கிடைக்குமா என்று சுற்றிப் பார்த்தாள்.
“அச்சச்சோ! நான் இல்லேடி! எனக்குத் தெரியாது! நான் அப்பாவி!” பேசியவாறு ஓட ஆரம்பித்தான் சபரி.
அவனைத் துரத்திக் கொண்டு பின்னாலேயே ஓடினாள் மீனா.
“ஒன்னும் தெரியாதா உங்களுக்கு? இருங்க வர்றேன்”
“சாரி மீனா, சாரிடி . சாரி செல்லம்”
“சாரியா? நான் என்ன பட்டிக்காடா? சிடுமூஞ்சியா?”
“ஏய், இதெல்லாம் நான் சொல்லச் சொல்லவே இல்லேடி. அவளா தான் சொல்லிருக்கா. லூசு.. லூசுடி அவ”
இருவரும் ஓடிக் கொண்டே பேசினார்கள்.
“நடிக்கிறதுக்கு ஆளைச் செட் பண்றீங்களா நீங்க? ம்ம்..?”
அப்போது ஓடிக் கொண்டிருந்த சபரி சட்டென நின்றான். பின்னால் அவனைத் துரத்தி வந்த மீனா, அவன் நெஞ்சில் மோதி நின்றாள். கைகளால் நெஞ்சைக் குத்தினாள்.
அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டான். அவள் கண்களையே காதல் பெருகப் பார்த்தான்.
அந்தக் காதல் ததும்பும் கண்களை நேருக்கு நேர் சந்திக்க இயலாது வெட்கம் கவ்வ, கண்களைக் கைகளால் மூடிக் கொண்டாள் மீனா.
“ஏய், பாரேன் இங்கே”
“போங்க, வெக்கமா இருக்கு” முணுமுணுத்தவளை இழுத்து இன்னும் இறுக்கிக் கொண்டான்.
முகத்தை மூடியிருந்த அவளுடைய கைகளை விலக்கினான்.
“ஐ லவ் யூ டி!”
கூறியவாறு அவளுடைய இதழ்களை நோக்கிக் குனிந்தான்.
“என்னங்க இது, இப்படி நடு ஹால்ல நின்னு? விடுங்க..”
“சரி, அப்படின்னா உள்ளே போகலாம்னு சொல்றியா? போயிடலாம் வா”
இரு கைகளாலும் அவளைத் தூக்கிக் கொண்டான்.
“நீ சொல்ல மாட்டியாடி?”
“என்னது?”
“ஐ லவ் யூ!”
“ம்ஹும்.. கூச்சமா இருக்கு எனக்கு!”
“சொல்லாம நான் உன்னை விடப் போறதில்ல இன்னைக்கு”
அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டான் ஆணவன்.
சந்தோஷ அலைகள் அந்த வீடெங்கும் வியாபித்தன.
சுபம்
அனைவருக்கும் வணக்கம்!
கதை ரசிக்கும்படி இருந்திருக்கும் என்று நம்புகிறேன்! உங்கள் மேலான கருத்துக்களை கமெண்ட் பாக்சில் பதிவிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி!
அன்புடன்,
சுதா சுரேஷ்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

அருமையான படைப்பு ❤️
அமைதியான திருமண வைபவத்தில் தொடங்கி மணமகன் மாயமாகி, திடீர் காதலன் கணவனாகி, அவன் சுயரூபம் கண்டு குழம்பி தவித்து, குடும்பத்தினரின் வெறுப்பு வார்த்தைகளையும் பார்வைகளையும் வாங்கி கட்டிக்கொண்டு, எதனால் என்ற தேடலில் விடை அறிந்து வருந்தி பிறகு அவன் காதலை உணர்ந்து அவனுடனான வாழ்க்கையை தொடங்குவதில் முடிகின்றது.
சபரி மிகவும் அன்பான, பண்பானவன், இரக்ககுணம் நிறைந்தவன். அன்பானவர்களிடம் பேரண்பை வாரி வழங்குபவன்.
தன் எதிர்கால வாழ்க்கை என்றெண்ணியவளுக்காக தனது இயல்பையும் மீறி பழி வாங்கும் எண்ணத்தை வளர்த்துக்கொண்டு அதை செயல்படுத்தியவன்.
மீனா மிகவும் அமைதியான, பொறுப்பான, குடும்ப உறவுகள் மீது அளவில்லா பாசம் கொண்ட பெண்.
அம்மா அப்பா கைகாட்டியவனை அவர்கள் மீதுள்ள நம்பிக்கையில் திருமணம் செய்ய சம்மதித்து, இக்கட்டான சூழலில் அவர்கள் எடுத்த முடிவிற்கு உடன்பட்டு சபரியை கரம்பற்றி, அவர்களுக்காகவே வேதனையையும் மறைத்திருந்தவள்.
அவள் இளகிய மனதால் என்னவோ சபரியின் பழி வாங்கும் எண்ணத்திற்கு பின்னால் இருக்கும் அவனது ஆழமான அன்பினை புரிந்துக்கொண்டாள்.
உண்மை அறிந்த பிறகு சபரி மீனாவிடம் இன்னும் சிறிது விளக்கமாக பேசியிருக்கலாம்.
தவறான புரிதல்களால் எத்தகைய அனர்த்தங்கள் நிகழ்கின்றன.
இங்கு மீனாவின் பொறுமையும், சபரியின் நற்குணமும் இருந்ததனால் தவறாய் எதுவும் நிகழவில்லை.
இறுதியாக பொங்கல் சாம்பார் என்றதும் அதனை உண்மையாகவே அவன் மேல் ஊற்றி பழி வாங்கும் கணக்கை முடித்துக் கொண்டு பின் மருந்திட்டு காதல் கூறுவாள் என்றெண்ணினேன். 😁
வாழ்த்துகள் சகோதரி 👏🏼🤝♥️
உங்கள் அருமையான அழகான விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் சகோதரி ❤️ மீனா இயல்பில் அப்படிப்பட்ட பெண் இல்லை அல்லவா. அடுத்தவரை காயப்படுத்த அவளால் முடியாது. உங்கள் தொடர் விமர்சனத்திற்கு மிக்க நன்றி 😊