
அத்தியாயம் -34
முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியை, செய்வதறியாது பரிதாபமான ஒரு முகத்துடன் பார்த்தான் சபரி.
“என்ன லுக்கு? இப்படி அப்பாவி மாதிரி மூஞ்சிய வச்சிகிட்டா மட்டும் உங்கள விட்ருவேன்னு நினைக்கிறீங்களா? மூஞ்சியப் பாரு! ஒருவேளை, ஷோபனாவோட சாவுக்குக் காரணமான அந்த, அந்த மீனாவ அதாவது அந்த மீனலோசனிய எப்படி தேடிப் பிடிச்சுக் கல்யாணம் பண்ணிக்கலாம்? அப்புறம் எப்படி எல்லாம் அவளை டார்ச்சர் பண்ணலாம்னு தான் யோசனையோ சாருக்கு?”
நக்கலும் நையாண்டியும் கலந்த ஒரு குரலில் கேட்டாள் மீனா. அவளே மீண்டும் தொடர்ந்தாள்.
“ப்ச்ச்ச்ச்.. அய்யோ பாவம்! இட்ஸ் டூ லேட் மிஸ்டர் சபரி! அந்த மாதிரி ஒரு ஐடியா இருந்தா, நீங்க மேலே தான் போகணும். ஐ மீன் அந்த மேலே” என்று தன் விரலை மேலே தூக்கிக் காட்டினாள்.
“மூணு வருஷத்துக்கு முன்னாடியே, அவ ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்து போயிட்டதா சொல்லி மெசேஜ் வந்தது. சோ, இட்ஸ் நாட் பாசிபிள் மேன்! அவ ஷோபனாவுக்குச் செஞ்ச கொடுமைக்குக் கடவுளே அவளுக்கு தண்டனை குடுத்துட்டாரு. அதுவும் அப்பவே. தெரிஞ்சதா மேன்?”
மீனாவின் ஒவ்வொரு பேச்சும் அவனுடைய இதயத்தைக் குத்திக் கிழித்தது. பதில் பேச இயலாது, தலை குனிந்தான். குனிந்த அவன் தலையை, தன் கைகளால் நிமிர்த்தினாள் மீனா.
“ஆனா மிஸ்டர் சபரி, நீங்க செஞ்சது எல்லாமே ஷோபனாவுக்காக மட்டும் தான்! இல்லையா? என்னை எப்படி எல்லாம் பழி வாங்கலாம்னு பிளான் போட்டு, என்னோட கல்யாண நாள் வரைக்கும் வெயிட் பண்ணி, கரெக்டா அன்னைக்குப் பாத்து, மாப்பிள்ளையத் தூக்கி, கல்யாணத்த நிறுத்தி, அப்புறம் பெரிய மனசு பண்ணி எனக்கு வாழ்க்கை குடுத்து.. எக்சட்ரா.. எக்சட்ரா.. இதையெல்லாம் மேலே இருந்து ஷோபனா பாத்துச் சந்தோஷப்படணும். அவ ஆத்மா சாந்தி அடையணும். அது தான் உங்க நோக்கம். இல்லையா மிஸ்டர் சபரி?”
பதில் எதுவும் பேசக்கூடிய நிலையிலா இருந்தான் சபரி? அவன் மனம் பூராவும் குற்ற உணர்வால் அரித்துக் கொண்டிருந்தது.
“ஆனா, நீங்க செஞ்ச இந்த வேலைக்கு ஷோபனா இந்நேரம் அழுதுட்டு இருப்பா. அய்யோ! என் மீனாவுக்குப் போயி இப்படி ஒரு கொடுமை நடக்குதேன்னு அமைதி கிடைக்காம அலைஞ்சிட்டு இருப்பா! என்ன செய்யப் போறீங்க சார் இப்ப? சொல்லுங்க!”
கேட்டு விட்டு, கோபத்தில் கண்கள் சிவக்க,ஆத்திரத்துடன் உற்றுப் பார்த்தாள் அவனை.
கண்களில் நீர் வழிய, மன்னிப்பு கேட்கக் கூட தகுதி அற்றவனாய், தன்னுடைய முட்டாள்தனத்தை எண்ணி நொந்து போனவனாய், இடிந்து போய் உட்கார்ந்து விட்டான் சபரி.
அதற்கு மேல் அவனிடம் பேச எதுவுமின்றி அங்கிருந்து வெளியேறினாள் மீனா.
வெகு நேரம் அப்படியே இருந்தான் சபரி. எவ்வளவு நொந்து கொண்டாலும் வருத்தப்பட்டாலும், நடந்ததை மாற்ற இயலாது என்கிற உண்மை உரைக்க, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான்.
‘மீனாவுக்கு நான் செஞ்சது மிகப்பெரிய துரோகம்! அதை எப்படி நான் சரி பண்ணப் போறேன்? சரியோ தவறோ, ரெண்டு பேரும் கணவன் மனைவி என்கிற பந்தத்தில நுழைஞ்சாச்சு. அதை இனிமே மாத்தவும் முடியாது. அதனால, மீனாவுக்கு என் மேலே இருக்கிற கோபத்தையும் வெறுப்பையும் போக்கி, அவளோட மனச நான் மாத்தணும். இதுவரையும் அவளுக்குத் தராத அன்பையும் காதலையும் அவ கிட்ட கொட்டணும் நான். அவளோட நான் சந்தோஷமா வாழணும். ஷோபனாவோட ஆத்மாவும் அப்ப தான் சாந்தி அடையும். கண்டிப்பா இத செய்வேன் நான்!’
தனக்குத் தானே மனதிற்குள் உறுதியான குரலில் சொல்லிக் கொண்டான்.
மறுநாள் காலை, சபரி எழுந்ததும், முதலில் அவனுடைய பார்வை சென்ற இடம், இதுவரை திரும்பிக் கூடப் பார்க்காத, மீனா தினமும் படுக்கும் அந்த மூலையைத் தேடித் தான்.
ஆனால் அங்கு மீனாவைக் காணவில்லை என்றதும் ஒரு பெருமூச்சுடன் படுக்கையை விட்டு எழுந்தான்.
தினமும் அவள் எப்போது எழுவாள், எப்போது குளித்துத் தயாராவாள், எந்நேரம் அறையை விட்டுச் செல்வாள், இப்படி எதையுமே இதுவரை அறிந்திருக்கவில்லை அவன்.
அதைப் பற்றிய அக்கறையும் இதுவரை இருந்ததில்லை அவனுக்கு. இன்று தான் அதெல்லாம் மண்டையில் உரைத்தது அவனுக்கு.
‘பாவம் மீனா! இந்நேரம் ஆகாஷைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டியது. எந்தப் பாவமும் செய்யாம இப்படி என்னைக் கல்யாணம் பண்ணிட்டு வந்து கொடுமைய அனுபவிச்சிட்டு இருக்கா!
அவ மனச எப்படி மாத்துறது? உடனே எல்லாம் மனசு மாறிட மாட்டா அவ. ஏன்னா, நான் அவளுக்குச் செஞ்ச கொடுமை அப்படி! அவ்வளவு காயப்பட்ருக்கா மனசுல. இப்ப அவ இருக்கிற மனநிலையில நான் என்ன செஞ்சாலும் அதை அவளால ஏத்துக்க முடியாது! என் மேலே அவ்வளவு கோவம் இருக்கும் அவளுக்கு. அது முழுக்க முழுக்க நியாயமும் கூட! கடவுளே! இப்படி ஒரு முட்டாள்தனத்த செஞ்சு வச்சிட்டேனே! எப்படி இதை சரி பண்ணப் போறேன்?’
வேதனையுடன் எழுந்துக் குளியலறைக்குள் புகுந்து கொண்டான். தயாராகி வெளியே வந்து நேராக உணவு மேஜையை நோக்கிச் சென்றான்.
அவன் வருவதைக் கண்டதும் வேகமாக சமையலறையில் இருந்து வெளியே வந்தாள் மீனா.
குளித்துத் தலைமுடியைச் சேர்த்து, போனிடெய்ல் போட்டுக் கொண்டிருந்தாள். மடிப்பு கலையாத ஒரு வயலட் நிற காட்டன் புடவையில், அதில் மஞ்சள் நிறத்தில் வரி வரியாக அலை போன்ற ஒரு டிசைனில், தேவதை போல் வந்தவளை, அன்று தான் முதன் முதலில் பார்ப்பது போல் பார்த்தான் சபரி.
ஒரு கணம் இதயம் துடிப்பதையே மறந்து போனது போன்று இருந்தது அவனுக்கு. என்றும் விட அவளுடைய முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் இருப்பதாகத் தோன்றியது அவனுக்கு.
ஆனால் இதுவரை இந்த அளவுக்கு அவளைக் கவனித்திருந்தால் தானே இதெல்லாம் கண்ணுக்குத் தெரியறதுக்கு என்று தனக்குத் தானே சொல்லியும் கொண்டான்.
அவளுக்குத் தெரிந்த விதத்தில் அவனைப் பழி வாங்க தயாராகி இருந்தாள் மீனா. அவளைப் பொறுத்தவரை, தன் மாமனார் மாமியார் எதிரே, சபரியிடம் சிரித்துப் பேசி நல்லவள் பேர் வாங்கினால் தான், நாளை அவனை விட்டுப் பிரியும் போது, பிரிவுக்குக் காரணம் அவன் தான் என்று மொத்தப் பழியையும் தூக்கி அவன் மேல் போடலாம் என்பது தான் அவளுடைய திட்டம்.
அதே நேரம் அவனை எப்படி எல்லாம் வெறுப்பேத்த முடியுமோ அவ்வளவு வெறுப்பேத்தி விட்டு, அந்த வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டும் என்று நினைத்து, அதற்கான முதல் படியாக அன்றே ஆரம்பித்து வைத்திருந்தாள்.
“வாங்க அத்தான், ரெடி ஆயிட்டீங்களா? உங்களுக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் அத்தான்!”
கலகலவென்று கண்ணாடி சிதறியதைப் போன்ற ஒரு குரலில் பேசியபடி வந்தவளைப் பார்த்துத் திகைத்தான் சபரி.
‘என்ன இவ! அத்தான்னு கூப்டுட்டே வர்றா? என் மேலே இருந்த கோவம் எல்லாம் போயிடுச்சா? என்னை மன்னிச்சுட்டாளா?’
யோசித்துக் கொண்டிருந்தவனை, மீனாவின் குரல் சுயநினைவுக்கு அழைத்துக் கொண்டு வந்தது.
அதற்குள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு முன் அறையில் உட்கார்ந்து இருந்த மாலதியும் சீனிவாசனும் ஒருவரையொருவர் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.
“நீங்க இன்னைக்கு உப்புமா செய்யச் சொல்லி என் கிட்ட சொன்னீங்கல்ல அத்தான்? அதுதான் நீங்க சொன்னதால உங்களுக்காக ஸ்பெஷலா செஞ்சிருக்கேன் அத்தான், உப்புமா!”
கடைசியாக அந்த உப்புமாவை மட்டும் அழுத்திக் கூறினாள் மீனா.
“எ.. என்ன சொல்றே? உ.. உப்புமாவா?” பாவமான முகத்துடன் கேட்டான் சபரி.
அதற்குள் மாலதியும் அங்கிருந்து “என்னம்மா மீனா சொல்றே? உப்புமாவா செஞ்சிருக்கே? அவனுக்கு உப்புமா கொஞ்சம் கூடப் பிடிக்காதேம்மா!” என்று கேட்டார்.
“இல்லேங்க அத்தே, அவருக்குப் பிடிக்காது தான். ஆனாலும் அவர் தான் காலையில சொன்னாரு அத்தே, நீ செஞ்ச உப்புமா சாப்பிடணும்னு எனக்கு ஆசையா இருக்குன்னு. அதுதான் செஞ்சேன் அத்தே. நானும் கேட்டேன் அத்தே, உங்களுக்குப் பிடிக்காதே அத்தான் அப்படின்னு. ஆனா அவர் தான் செஞ்சே ஆகணும்னு வம்பு பிடிச்சாருத்தே!”
வாய்க்கு வாய் தன் மகனை அன்புடன் அத்தான் என்று அழைத்துக் கொண்டு, அப்பாவியான ஒரு முகத்துடனும் குரலில் ஒரு அப்பாவித்தனத்துடனும் பேசிய தன் மருமகளைப் பார்த்து மிகவும் மனம் நெகிழ்ந்து விட்டார் மாலதி.
“பாருங்க, நம்ம மருமகளுக்குத் தான் நம்ம பையன் மேலே எவ்வளவு பிரியம்!” மெதுவாக முணுமுணுத்தாள் கணவனிடம்.
“ஆமாமா, இப்ப தான் நிம்மதியா இருக்கு மனசுக்கு”
சீனிவாசன் பதில் கூறினார் சந்தோஷத்துடன்.
இந்தப் பக்கமோ சபரிக்கு, சாப்பிடவும் முடியாமல் சாப்பிடாமல் இருக்கவும் முடியாமல், தட்டில் இருந்த உப்புமாவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னத்தான், பாத்துட்டே இருக்கீங்க? நான் வேணா ஊட்டி விடட்டுமா அத்தான்?”
கூறியதுடன் நிற்காமல் தட்டில் இருந்த உப்புமாவை, பெரிய ஒரு உருண்டையாகக் கையில் எடுத்து, கணவனுடைய வாயில் திணித்தாள். வாய் நிறைய உப்புமாவுடன், அவளிடம் எதுவும் கூற முடியாமல் திணறினான் சபரி.
மீண்டும் ஊட்ட வந்தவளைத் தடுத்து நிறுத்தினான்.
“இரு இரு.. நானே சாப்டுக்குறேன். நீ பேசாம உக்காரு இங்கே”
பிடிக்காத உப்புமாவை வாயில் திணித்துக் கொண்டு, முழுங்க முடியாமல் முழுங்கினான்.
எதிரில் அமர்ந்து கொண்டு சிரித்த முகத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மீனா.
ஒரு வழியாக தொண்டையில் நிரப்பிக் கொண்டு கை கழுவ எழுந்தான்.
“என்னத்தான், அதுக்குள்ளேயும் எழுந்துட்டீங்க? இன்னும் கொஞ்சம் போட்டுக்கோங்க அத்தான். நல்லா சாப்பிடுங்க” என்று இன்னமும் கரண்டியில் எடுத்து தட்டில் போட வந்தவளை கை காட்டித் தடுத்து அவசரமாக எழுந்தான்.
“போதும் போதும்.. இதுவே வயிறு ஃபுல்லா போச்சு! உன் அன்புக்கு ரொம்ப நன்றி!” என்றபடி தப்பித்தோம் பிழைத்தோம் என்பது போல் கையைக் கழுவதற்காக ஓடினான் அங்கிருந்து.
பின்னாலேயே ஓடிய மீனா, கை கழுவும் இடத்தில் அவனருகே சென்று நின்றாள். அவளுடைய முகத்தில் ஏளனச் சிரிப்பு பரவியிருந்தது.
கை கழுவி விட்டுத் திரும்பியவன், அவளைப் பார்த்து பரிதாபமான ஒரு பார்வையை வீசினான்.
“என்ன மிஸ்டர் சபரி, ஆரம்பமே வயித்தைக் கலக்குதா? அடுத்து என்னன்னு யோசிச்சுப் பாத்தாலே பயமா இருக்கா? இத.. இத.. இதத்தான் நான் எதிர்பார்த்தேன் மிஸ்டர் சபரி! போயி கண்ணாடியில கொஞ்சம் உங்க முகத்தப் பாருங்களேன், எப்படி இருக்குன்னு! அப்படியே பயமும் திகிலும் தாண்டவமாடுது அதிலே. பட், இதுவும் பாக்க நல்லா தான் இருக்கு மேன்”
பேச்சிலும் குரலிலும் கிண்டல் நிறைந்திருக்க, அவனைப் பார்த்து எகத்தாளமாகச் சிரித்தாள் மீனா.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

அதானே அடுத்து மீனலோட்சனிய எப்படி பழி வாங்கலாம் என்று திட்டம் போடுங்க சபரி. 🤣
செய்த தவறுக்கு தகுந்த தண்டனை கிடைத்துவிட்டது. காலம் அனைவருக்கும் கணக்கை நேர்செய்யும்.
இப்போ தான் புதுசா கவனிக்கிறீங்களா சபரி?
அத்தான்! 🤭 மீனா சபரி காற்று அதிகமாகவே பட்டுவிட்டது போல. அவனைப்போலவே அன்பாக காட்டிக்கொண்டு அடுத்தவரிடம் மாட்டிவிட்டு முழி பிதுங்க வைக்கின்றாள்.
அன்பான அக்கறையான நல்லவன் சபரி. அவன் பழி வாங்க என்று செய்ததும் கூட ஷோபி மீதான அன்பினால் தான்.
உப்புமா செஞ்சு போட்டு கூட பழி வாங்கலாமா? 🤣🤣
ஆமா சிஸ் 😊 வீட்டில கூட ட்ரை பண்ணிப் பாக்கலாம் 😄 மிக்க நன்றி ❤️