
அத்தியாயம் -28
வரவேற்பு விழாவிற்கு, சபரி, தன் கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள் என்று சிலரை அழைத்திருந்தான். அவர்கள் வந்ததும் மேடையில் இவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டனர்.
விசேஷம் நல்லமுறையில் நடந்து முடிந்து ஒருவழியாக அனைவரும் கிளம்புவதற்கு ஒன்பது முப்பது ஆகி விட்டது.
அடுத்த இரண்டு நாட்களில் கல்பனா ஊருக்குப் புறப்பட்டுச் சென்று விட்டாள்.
மீனா, திருமணத்திற்காக என்று இருபது நாட்கள் விடுப்பு எடுத்து இருந்தாள் தன் அலுவலகத்தில். அது சரியாக அன்றுடன் முடிந்து மறுநாளில் இருந்து வேலைக்குச் செல்ல வேண்டும் அவள்.
முதல் நாளே தன் மாமியாரிடம் கூறினாள்.
“அத்தே, நான் நாளையில இருந்து வேலைக்குப் போகணும். இன்னியோட லீவு முடிஞ்சிருச்சு அத்தே”
“ஓ! அப்படியாம்மா? அன்னைக்கு ஒரு நாள் பேச்சு வாக்கில நீ சொன்னே. நான் அத மறந்து கூட போயிட்டேன். ஏம்மா, வேலைக்குக் கண்டிப்பா போயித்தான் ஆகணுமாம்மா? பேசாம வீட்டிலேயே இரேன். எனக்கும் துணையா இருக்கும் இல்லையா?”
“இல்லேத்தே.. இது எனக்கு ரொம்பப் பிடிச்ச வேலை அத்த. ப்ளீஸ், நான் போறேனே!” கெஞ்சும் குரலில் கேட்டாள்.
“சரிம்மா உன் இஷ்டம். போயிட்டு வா”
“நான் வேலையெல்லாம் முடிச்சிட்டுப் போறேன் அத்தே. நீங்க கவலைப்படாதீங்க!”
“வேலை என்னம்மா பெரிய வேலை? நான் செய்யாத வேலையா? அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீ போயிட்டு வா!”
அன்று இரவு சபரியிடமும், தான் வேலைக்குச் செல்லப் போகும் விவரத்தைக் கூறினாள்.
“நீ எங்கே வேணும்னாலும் போயிட்டு வா. அதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்ல. புரிஞ்சதா?” அலட்சியத் தொனியில் பதில் வந்தது அவனிடம் இருந்து.
“சரி, ரொம்ப நல்லது!” அவளும் அதே அலட்சியத்துடன் பதில் கூறினாள்.
மறுநாள் வேலைக்குக் கிளம்பிச் செல்லும் போதே, மாலை, அலுவலகத்தில் இருந்து வந்தவுடன், அந்த டைரியை எடுத்துப் படிக்க வேண்டும், அதில் என்ன தான் எழுதி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று யோசித்துக் கொண்டே சென்றாள்.
நினைத்தபடி மாலையில் வந்ததும் வராததுமாக, அறைக்குள் நுழைந்தவுடன் புடவையைக் கூட மாற்றாமல், அந்த டைரியைக் கையில் எடுத்து வைத்து அமர்ந்து கொண்டாள்.
முதலில் அதிலிருந்த ஷோபனாவின் புகைப்படத்தை மீண்டும் ஆசை தீரப் பார்த்து விட்டு ஆர்வமாக அடுத்த பக்கத்தைத் திரும்பினாள்.
அப்போது அவளுக்கு பின்னால் நிழலாடியதைக் கண்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். அங்கு முகத்தில் கோபம் கலந்த ஒரு சிரிப்புடன் நின்றிருந்தான் சபரி.
அப்போது தான், அவசரத்தில் கதவைத் தாழிடாமல் வந்தது நினைவில் வந்தது அவளுக்கு.
அங்கு கோபத்தில் எரிமலையாய் தகித்துக் கொண்டிருந்த முகத்துடன் நின்றிருந்த சபரியைக் கண்டதும் பயத்திலும் பதட்டத்திலும் கை கால் வெடவெடத்தது அவளுக்கு.
அவனையே பார்த்தபடி பயத்துடன் எழுந்து நின்றாள். ஆனால் தானாகவே மனதில் தைரியமும் சொல்லிக் கொண்டாள்.
‘நான் என்ன தப்பு செஞ்சிட்டேன் இப்படி பயந்து நடுங்குறதுக்கு? இந்தப் பயம் தான் எனக்குப் பிரச்சினை ஆகுது. தைரியத்தக் கெடுக்குது. என்ன ஆனாலும் பாத்துக்கலாம், தைரியமா ஃபேஸ் பண்ணலாம்’
இப்படி அவளாகவே மனதில் நினைத்துக் கொண்டு, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஏறிட்டுப் பார்த்தாள் அவனை.
“ஓ! டைரி கையில கிடைச்சாச்சா? பாத்தாச்சா? ம்ம்.. ஓகே, ஒரு பக்கம் இதுவும் நல்லதுக்குத் தான். லெட்ஸ் டாக் நவ்! அதுக்கான டைம் வந்தாச்சுன்னு நினைக்கிறேன்”
தன் கோபம் சிறிதும் குறையாமல், அதே சினத்துடன் கூறிய சபரி அவளைக் கடந்து சென்று கட்டில் மேல் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டான்.
மீனாவோ, பதில் கூறத் தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றிருந்தாள். எப்படியும் அன்று அவனிடம் இருந்து உண்மையை வாங்கி விட வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள்.
“ஓகே, கம்மிங் டு தி மேட்டர்!” என்று அவளுடைய கையில் இருந்த டைரியைப் பிடுங்கிக் கொண்டான். பிரித்தான் அதை.
“இது யாருன்னு தெரியுதா?” ஷோபனாவின் புகைப்படம் காட்டிக் கேட்டான்.
அவள் பதில் பேச வாயெடுப்பதற்குள் அவனே பேசினான் மீண்டும்.
“தெரியாம எப்படி இருக்கும்? அதுசரி, இப்ப உனக்கு எல்லாமே புரிஞ்சிருக்கணுமே!” கூறி விட்டு அவளுடைய முகத்தையே கூர்ந்து பார்த்தான்.
ஆனால் அவளோ குழப்பமான முகத்துடன் நின்றிருந்ததைக் கண்டதும், கண்களில் அனல் கக்க பார்த்தான் அவளை.
“என்னடி, செய்றதையும் செஞ்சிட்டு என்னமோ எதுவுமே தெரியாதவ மாதிரி போஸ் கொடுத்துட்டு நிக்குறே?”
“நீங்க என்ன சொல்றீங்க? எனக்கு எதுவுமே புரியல! நான் என்ன செஞ்சேன்? இதில இருக்கிறது ஷோபனா. என்னோட உயிர்த் தோழி. அவ ஃபோட்டோ உங்க கிட்ட எப்படி வந்துச்சு? என்ன ஏதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா எல்லாத்தையும்? எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு!”
அவள் பேசி முடித்த அடுத்த நிமிடம் படபடவென பலத்த சத்தத்துடன் கைகளைத் தட்ட ஆரம்பித்தான்.
“வாவ்! சூப்பர்.. சூப்பர்.. சூப்பர்டி உன் நடிப்பு! செய்றதையும் செஞ்சிட்டு எப்படி இப்படிப் பேச முடியுதுடி உன்னால?”
“இங்கே பாருங்க, நீங்க பேசுறது எதுவுமே எனக்குக் கொஞ்சம் கூட புரியல. தயவு செஞ்சு என்னன்னு சொல்லுங்க”
“நியாயமா ஷோபனாவோட ஃபோட்டோவப் பார்த்தவுடனேயே உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கணும்! நான் ஏன் உன்னைப் பிளான் பண்ணிக் கல்யாணம் பண்ணேன்? உன் கிட்ட ஏன் நான் இப்படி நடந்துக்குறேன்? இப்படி எல்லாமே இந்நேரம் உனக்குப் புரிஞ்சிருக்குமேடி! ஆனா எல்லாமே தெரிஞ்சப்புறமும் எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரி பாசாங்கு பண்றே பாரு! அது தான்.. அது தாண்டி ஏத்துக்கவே முடியல என்னால. உன்னை என்ன பண்ணலாம் சொல்லு”
ஆனால் இப்போது மீனாவும் தன் குரலைக் கொஞ்சம் உயர்த்திப் பேச ஆரம்பித்தாள்.
“இங்கே பாருங்க, நானே ஷோபனாவுக்கு என்னாச்சு, ஏதாச்சு? ஏன் இப்படி அவ அல்பாயுசுல இறந்து போனா? இப்படி இன்னைக்கு வரைக்கும் எதுவுமே தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்! நீங்க என்னன்னா, தலையும் இல்லாம வாலும் இல்லாம கண்டதையும் உளறிட்டு இருக்கீங்க?”
“ஓ! நான் உளர்றேனா? இன்னும் கொஞ்ச நேரத்தில உன் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடும்டி! அந்த பயம் கொஞ்சமும் மனசில இல்லாம எவ்வளவு தைரியமா பேசுறியே! நீ எல்லாம் எந்த மாதிரியான ஒரு ஜென்மம்டி?”
மீனாவோ, அவனுடைய பேச்சுகளைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியாகி நின்று விட்டாள்.
“என்ன? மொகமெல்லாம் பயத்தில வெளிறிப் போச்சு? உண்மைய நினைச்சுப் பயமா இருக்கா?”
அதற்கும் பதில் எதுவும் பேசாமல் அமைதியாக, அதே நேரத்தில் அதிக குழப்பத்தில் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மீனா. அவனே தொடர்ந்து பேசினான்.
“இப்ப நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். சொல்றேன் கேட்டுக்கோ. ஷோபனாவப் பார்த்தவுடனே, நடந்த உண்மைய நீயா சொல்லிருந்தா கூட, கொஞ்சம் யோசிச்சிருப்பேன் நான்.
ஆனா, எப்ப நீ எதுவுமே உனக்குத் தெரியாது, எதுவுமே நான் பண்ணலே, அப்படின்னு கல்லுளிமங்கி மாதிரி நின்னியோ, உனக்கு இனிமே அடுத்த சான்ஸ் இல்லவே இல்ல.
இப்ப நான் உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லப் போறேன். நடந்தது யாருக்குமே தெரியாதுன்னு நீ நம்பிட்டு இருக்கேல்ல? ஆனா எனக்குத் தெரியும்டி எல்லாம். ஷோபனா எல்லாத்தையும் என் கிட்ட சொல்லிட்டுத் தாண்டி தன்னோட மூச்சையே நிறுத்தினா. அதுவரை இழுத்துப் பிடிச்சிட்டு இருந்தா பாவம்!”
அவனுடைய கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
“பாவி.. பாவிப் பொண்ணு, நடந்த அத்தனையும் சாகுறப்ப என் கிட்ட சொன்னவ, கொஞ்சம் முன்னாடியே சொல்லி இருந்தான்னா, நான் அவள சாக விட்ருக்க மாட்டேனே! இப்படி அநியாயமா போயிட்டாளே!”
கண்களை மூடிக் கொண்டான். அவனுடைய உடல் குலுங்குவதைக் கண்டு, அவன் அழுகிறான் என்பதைப் புரிந்து கொண்டாள் மீனா.
‘அப்படி என்ன தான் ஆகியிருக்கும் மீனாவுக்கு?’
அவளுக்கும் கண்ணீர் வந்தது. அடக்க முடியாமல் அழுதாள் தன் தோழியை நினைத்து.
சிறிது நேரம் அழுது விட்டு நிமிர்ந்தவன், கண்களில் கண்ணீருடன் நிற்கும் மீனாவைக் கண்டு வெகுண்டான்.
“ஏய், நீலிக் கண்ணீர் வடிக்காதேடி. நீ எவ்வளவு அழுதாலும் உன்னை யாரும் இங்கே நம்பப் போறதில்ல!
இங்கே பாரு, ஒன்னு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ. ஷோபனா என் கிட்ட சொன்ன அத்தனை விஷயங்களையும் உன் கிட்ட சொல்லிட்டு மட்டும் அப்படியே விடப்போறதில்ல உன்னை. இன்னைக்கே இப்பவே எல்லார் கிட்டேயும் உண்மையைச் சொல்லிடப் போறேன். அடுத்த நிமிஷம் நீ இந்த வீட்டில இருக்கக்கூடாது தெரிஞ்சுக்கோ!
இவ்வளவு நாள் உன்னை சகிச்சுகிட்டு இருந்துட்டேன். போதும், இனியும் நீ இங்கே இருக்க வேணாம். உன் முகத்தைப் பாக்கக் கூடப் பிடிக்கல எனக்கு. நீ இங்கேயே இன்னும் இருந்தா, கோபத்திலேயும் வெறுப்பிலேயும் உன்னை நான் கொலை கிலை கூட பண்ணிருவேனோன்னு பயமா இருக்கு! அதனால போயிடு நீ!”
கண்களும் முகமும் சிவக்க, வார்த்தைகளைக் கொட்டி முடித்தவனுக்கு கோபத்தில் மூச்சு இறைத்தது.
ஆனால் மீனாவோ கூலாகப் பார்த்தாள் அவனை.
“அப்படியாங்க? ரொம்ப நல்லது. சொல்லுங்க, உங்களுக்கும் ஷோபனாவுக்கும் நான் துரோகம் செஞ்சுட்டதா சொல்றீங்கல்ல? அது என்ன துரோகம்னு சொல்லுங்க மொதோ. தெரிஞ்சுக்க நானும் ஆர்வமா இருக்கேன். ப்ளீஸ் டாக் மேன்!”
எந்த ஒரு பயமோ படபடப்போ இன்றி மிகவும் கூலாகப் பேசும் மனைவியை வியப்புடன் பார்த்த சபரி, நடந்த சம்பவங்களைக் கூற ஆரம்பித்தான்.
அவன் சொல்லச் சொல்ல, மீனாவின் கண்களில் அவை காட்சிகளாகவே விரிந்தன.
ஷோபனாவின் தந்தை வேல்முருகன். தாய் மீனாட்சி. ஷோபனா, ஒரே பெண் இவர்களுக்கு.
வேல்முருகனின் ஒரே தங்கை மாலதி. தங்கையின் குடும்பத்துடன் மிகவும் பிரியமாக இருப்பார் வேல்முருகன். மாலதியும் சீனிவாசனும் கூட அப்படித்தான்.
இரு குடும்பங்களும் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்தன என்று கூட சொல்லலாம். அப்படி இருந்தனர்.
வேல்முருகனுக்கும் மீனாட்சிக்கும் ஷோபனா பிறந்த பிறகு, அடுத்ததாக வயிற்றில் கரு எதுவும் தங்கவில்லை மீனாட்சிக்கு.
ஆனால் அவர்களோ, ஷோபனாவுடன் இன்னொரு குழந்தை இருந்தால் நல்லது என்று ஆசைப்பட்டனர்.
எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த ஆசை கைகூடவில்லை அவர்களுக்கு. அதனால் ஷோபனா மேல் அளவு கடந்த பிரியம் அவர்களுக்கு.
அவள் பத்தாம் வகுப்பு வந்தவுடனேயே, மகள் இன்னும் சில வருடங்களில் படிப்பை முடித்து விடுவாளே, அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு தங்களைப் பிரிந்து சென்று விடுவாளே! போகிற இடத்தில் அவர்கள் எப்படி பார்த்துக் கொள்வார்களோ என்கிற கவலை அப்போதிருந்தே வாட்ட ஆரம்பித்து விட்டது அவர்களுக்கு.
அப்போது தான் மீனாட்சிக்கு இந்த யோசனை தோன்றியது.

