
அத்தியாயம் -19
தன் குடும்பத்தினரிடம் பசப்பு வார்த்தைகள் பேசும் சபரியை மறுத்துப் பேசக்கூட முடியாமல் நடப்பது நடக்கட்டும் என்று இருந்தாள் மீனா.
ஒருவழியாக அந்தப் பேச்சை அத்துடன் முடித்தான் அந்த நடிகன். அதற்குப் பிறகு எந்தப் பிரச்சினையும் இன்றி அமைதியாகவே பொழுது கழிந்தது.
மாலை நேரத்தில் தேநீர் குடித்து முடித்தவுடன் நவீன் சபரியிடம்,
“வர்றீங்களா மாப்பிள்ள? நாங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் வெளியே அப்படியே வாக்கிங் போயிட்டு வரலாம்” என்று கேட்டான்.
சபரியும் அதற்காகவே காத்திருந்தது போல் பேசினான்.
“ஓ! போலாமே மச்சான்! இன்ஃபாக்ட் நானே உங்களக் கூப்பிடணும்னு தான் நினைச்சேன். நீங்களே சொல்லிட்டீங்க”
உற்சாகத்துடன் புறப்பட்டுச் சென்றனர் இருவரும். மனைவியின் புறம் திரும்பி, ஒரு விஷமச் சிரிப்பு சிரித்தவாறு சென்றான் சபரி.
அவனுடைய பார்வையில் கலந்திருந்த நயவஞ்சகம் அவளுக்கு மேலும் பீதியைக் கிளப்பி விட்டது.
‘தனியா வேற போறான் அண்ணனோட! இன்னும் என்னென்ன பொய்ய எல்லாம் எடுத்து விடப் போறானோ தெரியலையே!’
அவளுக்கு ஏன் தான் பிறந்த வீட்டிற்கு வந்து தொலைத்தோமோ என்று இருந்தது.
சபரியும் நவீனும் சாதாரணமாக வேலை விஷயங்களையும் பிற பொது விஷயங்களையும் பேசியபடி மெதுவாக நடந்தனர்.
“இங்கே பக்கத்தில பார்க் ஒன்னு இருக்கு மாப்ள. அங்கே போயி உக்காந்து பேசலாமா நாம?” கேட்டான் நவீன்.
“ம்ம்.. போலாம் மச்சான்”
“சும்மா என்னை பேர் சொல்லியே கூப்பிடுங்க மாப்பிள்ள. எந்தப் பிரச்சினையும் இல்ல”
“ம்ம்..” சிரித்தான் சபரி.
பூங்கா பெரிதாக இருந்தது. சிலர் நடைபயிற்சி செய்து கொண்டு இருந்தார்கள். அங்கங்கே உட்காருவதற்கு என்று ஒன்றோடொன்று இணைந்த இருக்கைகள் வரிசையாக சில போடப் பட்டிருந்தன.
“இங்கே உட்காரலாம் மாப்பிள்ள வாங்க”
இருவரும் அமர்ந்து கொண்டனர். அந்த இடத்தில் வேறு எவரும் இல்லை என்பதால் அமைதியாக இருந்தது அந்த இடம்.
நவீனுக்குச் சபரியிடம், தான் கேட்க நினைத்ததை வெளிப்படையாகக் கேட்பதற்குத் தயக்கமாக இருந்தது.
கேட்க வாயெடுத்தவன் தயங்கி அப்படியே மவுனமானான்.
“என்ன மச்சான், ஏதாவது பேசணுமா? அதுக்குத் தான் தனியா கூட்டிட்டு வந்தீங்களா? ஏதோ சொல்ல நினைக்கிறீங்க. ஆனா தயங்குறீங்க!”
“ஆமா மாப்பிள்ள, ஆனா அது எப்படிக் கேக்குறதுன்னு தான் கொஞ்சம் சங்கோஜமா இருக்கு”
“பரவாயில்ல நவீன், கேளுங்க! நமக்குள்ள என்ன இருக்கு? எதுவா இருந்தாலும் தயங்காம கேளுங்க”
“இல்ல மாப்ள, நீங்க சொல்றத எல்லாம் வச்சுப் பாத்தா மீனா உங்கள இன்னும் முழு மனசோட ஏத்துக்கல்லேன்னு தோணுது. அப்படின்னா அவ உங்க கிட்ட நல்லபடியா நடந்துக்குறாளா எ..எப்படி?”
கடைசி இரண்டு வார்த்தைகளை மட்டும் வாயில் மென்று முழுங்கியபடி கேட்டான்.
அவன் எதைப்பற்றி கேட்கிறான் என்று சபரிக்கு நன்றாகவே புரிந்தது. தான் எதிர்பார்த்த கேள்வி வந்ததும் உற்சாகமானான்.
‘இத..இத.. இந்தக் கேள்வியத் தாண்டா நான் எதிர்பார்த்தேன்!’
மனதில் நினைத்தவாறு, தான் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பதிலைச் சோகம் கலந்த ஒரு குரலில் கூற ஆரம்பித்தான்.
“அதை ஏன் கேக்குறீங்க நவீன்? நானும் இதெல்லாம் போயி உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு தான் நினைச்சு பேசாம இருந்தேன். ஆனா இப்ப நீங்களா கேட்டதால சொல்றேன்”
சபரி கூறுவதைக் கேட்டு, துணுக்குற்றான் நவீன். தொடர்ந்தான் சபரி.
“சொல்றதுக்குக் கொஞ்சம் கூச்சமா தான் மச்சான் இருக்கு. ஆனாலும் சொல்றேன். உங்க தங்கச்சி, என்னை அவ பக்கத்திலேயே வரக்கூடாதுன்னு சொல்லிட்டா.
அதையும் மீறி வந்தா, செத்துப் போயிடுவேன்னு மிரட்றா மச்சான். மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு.
நான் சாதாரணமா அவ பக்கத்துல போனா கூட பிடிக்கல அவளுக்கு. அவ்வளவு ஏன், கட்டில்ல கூடப் படுக்காம கீழே தனியா போய் படுத்துக்குறா.
நானே இதையெல்லாம் அவ கிட்ட உடனே எல்லாம் எதிர்பாக்கவே இல்ல. எதிர்பாராத கல்யாணம், திடீர் மாப்பிள்ள, நடந்ததை அவளால உடனே ஏத்துக்க முடியாதுன்னு எனக்கும் தெரியும். அவளோட மனநிலை அந்த நேரத்தில எப்படி இருக்கும்னு எனக்கு மட்டும் தெரியாதா என்ன?
இது கூட புரிஞ்சுக்காம அவளைக் கட்டாயப்படுத்துற அளவுக்கு நான் என்ன கெட்டவனா மச்சான்? ஆனா உங்க தங்கச்சி என்னன்னா, என்னைப் பேசவே விடல. அவளா கோவமா என் கிட்ட மடமடன்னு வார்த்தைகளைக் கொட்டிட்டு கீழே போயி படுத்துட்டா.
சுருக்கமா சொல்லணும்னா என்னை ஒரு வில்லன் ரேஞ்சுக்கு மாத்திட்டா மச்சான். அதுதான் மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு!”
எங்கெங்கு எப்படி எப்படி எல்லாம் நீட்டி நிதானித்து பேச வேண்டுமோ அப்படி எல்லாம் பேசினான் சபரி.
நவீன் இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
‘மீனாவா இப்படி? ஏன் இப்படி பண்றா அவ? இதுக்கு எல்லாம் மாப்பிள்ளைக்கு எப்படி நான் பதில் சொல்றது?’
சங்கடமாகப் பார்த்தான் சபரியை.
“அச்சச்சோ! இதெல்லாம் போயி உங்க கிட்ட சொல்லிட்டேனே! வீணா உங்களுக்கும் மனக் கஷ்டம் தானே! சாரி மச்சான், நீங்க கேட்டதும் யோசிக்காம சொல்லிட்டேன். தயவுசெய்து இதைப் பெருசு பண்ணாம விட்ருங்க நீங்க.
மீனா கிட்டேயும் இதைப் பத்தி எல்லாம் எதுவும் கேக்காதீக்க. அவ ரொம்ப வருத்தப்படுவா. வீட்டுக்குப் போயி என் மேலே கோவப்படப் போறா அப்புறம். ஒரு ஃபிரண்டா நினைச்சு உங்க கிட்ட சொன்னத நீங்க மாமா, அத்த கிட்டேயும் சொல்லிட்டு இருக்காதீங்க மச்சான் ப்ளீஸ்! அவங்க ரொம்ப மனசு உடைஞ்சு போயிடுவாங்க!”
மிகவும் வருத்தப்படுவது போல் கூறினான்.
“சாரி மாப்பிள்ள, நீங்க ரொம்ப கிரேட்! பாருங்க, இப்ப கூட மீனாவைப் பத்தியும் என் குடும்பத்தைப் பத்தியும் மட்டுமே யோசிக்கிறீங்க. மீனா ரொம்ப நல்ல பொண்ணு மாப்பிள்ள. கொஞ்ச நாள்ல இதெல்லாம் சரியாயிடும் மாப்பிள்ள. தயவுசெய்து நீங்க அவள வெறுத்து ஒதுக்கிடாதீங்க ப்ளீஸ்!”
இதைச் சொல்வதற்குள் கண் கலங்கி விட்டது அவனுக்கு. உடனே பதறிப் போனவன் போல் செய்தான் சபரி.
“அய்யோ நவீன்! ஏன் இப்படி கண் எல்லாம் கலங்குறீங்க நீங்க? இப்ப என்ன நடந்து போச்சு? மீனாவ நான் எதுக்கு வெறுக்கப் போறேன்? ஒதுக்கப் போறேன்? அவளை நான் எத்தனை வருஷமா காதலிக்கிறேன்னு உங்களுக்குத் தெரியாது நவீன்! தயவு செஞ்சு எதுவும் ஃபீல் பண்ணாதீங்க நீங்க. என்னோட அன்பால அவளை எப்படி மாத்தணும்னு எனக்குத் தெரியும் நவீன். யூ டோண்ட் வொர்ரி!”
“ரொம்ப தேங்க்ஸ் மாப்பிள்ள! இப்ப தான் எனக்கு மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கு”
“இதுக்கெல்லாம் போயி இவ்வளவு எமோஷனல் ஆகுறீங்க? என்ன நவீன் இது?”
“என்ன மாப்ள இப்படிச் சொல்லிட்டீங்க? இது என் தங்கச்சியோட வாழ்க்கை! கவலைப்படாம எப்படி இருக்க முடியும்? அதில தப்பெல்லாம் அவ மேல வச்சுகிட்டு, நாளைக்கு அவளாலேயே அவ வாழ்க்கைக்கு ஏதாவது பிரச்சினை வந்ததுன்னா அது எங்களால தாங்க முடியாது மாப்ள. அப்புறம் அப்பா ரொம்பவே ஒடிஞ்சு போயிருவாரு. ஏதோ, நீங்க நல்லவரா இருக்கப் போயி அவளைப் பொறுத்துக்குறீங்க”
“இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல நவீன். வீட்டில எதுவும் சொல்லி வைக்காதீங்க பாவம் அவங்க! பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்ச சந்தோஷத்தில இருப்பாங்க. நீங்க இதையெல்லாம் சொல்லி அவங்க மனச வருத்தப்பட வச்சிடாதீங்க நவீன். இப்ப தானே கல்யாணம் முடிஞ்சிருக்கு. போகப் போக எல்லாம் சரியாயிடும். உங்க தங்கச்சிய நினைச்சு உங்களுக்கு எந்த பயமோ கவலையோ வேண்டாம் நவீன். நான் பாத்துக்குறேன்”
தான் நினைத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்த திருப்தியில் நவீனைப் பார்த்துச் சிரித்தான் சபரி.
ஆனால் நவீனால் இதை அப்படியே விட முடியவில்லை. தன் தங்கை, தன் வாழ்க்கைக்குத் தானே குழி பறித்துக் கொள்கிறாள் என்று ஆதங்கமாக இருந்தது அவனுக்கு.
தன் தாய் தந்தையிடம் மறைப்பது தவறு என்று பட்டது. அனைவரும் சேர்ந்து அவளுக்குச் சொல்கிற விதத்தில் புத்திமதி சொல்லி அனுப்பினால் தான் நல்லது என்று நினைத்து வீட்டிற்குச் சென்றவுடன் முதலில் மனைவி அர்ச்சனாவிடம், நடந்ததை அப்படியே ஒப்புவித்தான்.
இந்த விஷயத்தைத் தன் தாயிடம் எப்படி நேரடியாகச் சொல்வது என்று தெரியாமல், தன் தாயிடம் கூறும் பொறுப்பை அர்ச்சனாவிடம் ஒப்படைத்தான்.
தன் தந்தையிடம் சபரி கூறியதை முழுதாக அப்படியே கூறாமல் பட்டும் படாமல் கூறினான்.
சபரியும் மீனாவும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவில்லை என்றும் அதற்குக் காரணம் மீனா தான் என்றும் சபரி அவளை மிகவும் பொறுத்துக் கொண்டு போகிறான் என்றும் கூறினான்.
இதனைக் கேட்டதும் அதிர்ந்து போய் விட்டார் சுந்தரம்.
“இவளுக்கு என்ன கிறுக்கு எதுவும் பிடிச்சுப் போச்சா? மாப்பிள்ள எவ்வளவு நல்லவரா இருக்காரு! இவ என்னடான்னா இப்படிப் புரிஞ்சுக்காம அவரைக் கஷ்டப்படுத்துறாளே! பாவம் மாப்பிள்ள. இவ மேலே எவ்வளவு ஆசை வச்சிட்டு இருக்காரு! அவரை இப்படிப் பண்றதுக்கு எப்படி மனசு வருது இவளுக்கு?”
“ஆமாப்பா, மாப்பிள்ள நாம நினைச்சத விட ரொம்ப நல்லவரா இருக்காருப்பா. உங்க கிட்ட இந்த விஷயத்த சொல்ல வேண்டாம்னு தான் சொன்னாரு. ஆனா எனக்குத் தான் மனசு கேக்கல, சொல்லிட்டேன்”
ரேணுகாவோ அர்ச்சனா இந்த விஷயத்தைக் கூறியவுடன், உடனே தனியாக அமர்ந்து அலைபேசியில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த மகளிடம் வந்தார் பதட்டத்துடன்.
தன் அம்மாவும் அண்ணியும் சேர்ந்து வந்ததைக் கண்டு அலைபேசியில் ஓடிக் கொண்டிருந்த பாடலை நிறுத்தி விட்டு அவர்களை வியப்புடன் பார்த்தாள் மீனா.
அவளருகே அமர்ந்து கொண்டார் ரேணுகா. கண்கள் பனிக்க அவளையே பார்த்தார். மீனாவுக்கு எதுவும் புரியவில்லை.
“ம்மா.. என்னம்மா?”
இன்னும் சிறிது நேரத்தில், தான் மாமியார் வீட்டுக்கு திரும்பப் போய் விடுவேன் என்பதை நினைத்து தான் தன் தாய் கலங்குவதாக நினைத்தாள் மீனா.
“அய்யோ அம்மா! நான் என்ன வெளியூருக்கா போறேன்? இங்கே இதே சென்னையில தானேம்மா இருக்கப் போறேன்? நினைச்சா எப்ப வேணாலும் வரப் போறேன். இதுக்கு எதுக்கு கண் எல்லாம் கலங்குறே?”
ரேணுகாவோ, மகள் கூறியதைக் கேட்டு கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டார். மீனாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
குழப்பத்துடன் தன் அண்ணியைப் பார்த்தாள். அவளுடைய முகத்திலும் சிரிப்பு இல்லை. அவள் முகமும் கொஞ்சம் கோபமாகவும் வருத்தமாகவும் இருப்பதாகத் தான் காட்டியது அவளுக்கு.
“எ.. என்ன அண்ணி? என்னாச்சு இப்ப? எதுக்கு இப்படி? என் மேலே ஏதாவது கோவமா? நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?”
பாவம் பரிதாபக் குரலில் கேட்டாள் அந்த அப்பாவிப் பெண்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


பாவம் மீனா .. இந்த சபரி சைக்கோ கிட்ட மாட்டிக்கிட்டா … ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகிட்டா அதுக்கப்புறம் எல்லாம் புருஷன் நம்மள வச்சிருக்கதுல தான் இருக்குன்னு சொல்றது எவ்ளோ உண்மை … மீனா ரொம்ப மனசொடிஞ்சு போயிடுவா
மிக்க நன்றி 😊
ஆகச்சிறந்த மகன், ஆகச்சிறந்த மாப்பிள்ளை என்ற பிம்பத்தை உண்டாக்கியாயிற்று.
சந்தர்ப்பத்தை தானாக உருவாக்கி கலகம் செய்பவன் வசம் சந்தர்ப்பம் தானாகவே வந்து சேர்ந்தால் விட்டு விடுவானா என்ன?
தங்கை தனக்கு கிடைத்த நல்லதொரு வாழ்வை தானாகவே கெடுத்துக்கொள்வாளோ என்ற அச்சத்தில் வீட்டில் உள்ளோரிடமும் கூறி விட்டான் நவீன்.
அம்மா, அப்பா, அண்ணி, அண்ணன் என்று அறிவுரை படலம் ஆரம்பம் போல.
இந்த உறவில் பிரிவு வந்தால் எல்லோருடைய வருத்தமும் கோபமும் மீனாவின் புறம் மட்டுமே திரும்பும் படி செய்து விட்டான்.
உங்களின் இந்த அருமையான விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 😊
இவனை என்னப் பண்ணுறதுன்னே தெரியலை
மிக்க நன்றி சிஸ் 😊