Loading

அத்தியாயம் -18

தன் தாய் வீட்டினர் சபரியை விழுந்து விழுந்து கவனிப்பது கண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டாள் மீனா.

‘இன்னும் எத்தனை நாளைக்கு இவன் இவங்களுக்கு மருமகனா இருக்கப் போறானோ தெரியல! உண்மை வெளியே வர்ற வரைக்கும் தான் இவனோட இந்த ஆட்டம் எல்லாம். அதுக்கு அப்புறம் நிலைமை எப்படி எல்லாம் மாறப் போகுதோ! அதுவரை அனுபவிடா நீ’

எந்த நேரத்தில் தனது தில்லாலங்கடி வேலையை அவன் காட்டுவோனோ என்கிற நினைப்பு வேறு அவ்வப்போது தலைகாட்டி பயமுறுத்தியது அவளை. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை அதுவரை.

மாலையில் அனைவரும் சேர்ந்து ஷாப்பிங் என்று கிளம்பினார்கள். அவர்கள் எதிரே மனைவியிடம் சிரித்துச் சிரித்துப் பேசினான் சபரி. பதிலுக்கு இவளால் தான் நடிக்க முடியவில்லை.

அர்ச்சனா, தன் நாத்தனாரைத் தனியே தள்ளிக் கொண்டு சென்றாள்.

“ஏய் மீனா, மாப்பிள்ள உன் கிட்ட அவ்வளவு நல்லா அன்பா பேசுறாரு பழகுறாரு! நீ ஏன் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சிய இப்படி வச்சுருக்கே! நீயும் பதிலுக்கு கொஞ்சம் சிரிச்சுப் பேசிட்டா தான் என்னவாம்? நீ செய்றது கொஞ்சம் கூட சரியே இல்ல மீனா. பாத்த வரைக்கும் அவர் நல்லவரா தான் தெரியிறாரு. நீயும் சீக்கிரமா மனச மாத்திகிட்டு அவரோட சந்தோஷமா வாழற வழியப் பாரு. ஆமா சொல்லிட்டேன். எல்லாம் உன் நல்லதுக்குத் தான் சொல்றேன். புரிஞ்சுக்கோ மீனா!”

நீளமாக அவளுக்குப் பாடம் நடத்தி விட்டுச் சென்றாள் அர்ச்சனா. எங்காவது போய் முட்டிக் கொள்ளலாமா என்று இருந்தது மீனாவுக்கு.

மருமகனுக்கும் மகளுக்கும் புது உடைகள் வாங்கினார் சுந்தரம்.

சபரியும், அவர்கள் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தும் அவர்கள் அனைவருக்கும் வாங்கிக் கொடுத்தான். மீனாவின் அம்மா ரேணுகாவுக்கும் அண்ணி அர்ச்சனாவுக்கும் அவர்களுக்குப் பிடித்தமான புடவைகளைத் தேர்வு செய்யுமாறு கூறியவன், மீனாவுக்காகத் தானே ஒன்றைத் தேர்வு செய்தான்.

“மீனா, இது நல்லா இருக்கா பாரேன். எனக்கு இந்த தேன் கலர் ரொம்பப் பிடிச்சிருக்கு. உனக்கு இது அழகாவும் இருக்கும். என்ன சொல்றே?”

எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் மீனா. பத்தாதற்கு அவளுக்காக என்று லெஹங்கா வேறு ஒன்று எடுத்தான்.

“மீனா, நீ இதைப் போடுவேல்ல? இல்லேன்னாலும் எனக்காக ப்ளீஸ் போட்டுக்கோயேன். மாட்டேன்னு சொல்லிடாதே”

கொஞ்சல் கலந்த வார்த்தைகளுடன் கெஞ்சலான ஒரு பார்வையால் அவளை நனைத்து, ஊர் உலகத்தில் இவனைப் போல் மனைவியிடம் அன்பாக வேறு யாரும் இருக்க முடியுமா என்று நினைக்கும் அளவிற்கு இருந்தது அவன் நடிப்பு.

அதற்கும் அவள் பதில் எதுவும் கூறாமல் தலையசைத்தாள். கவலையும் கோபமும் பட்டு பட்டு மிகவும் ஆயாசமாகி விட்டது அவளுக்கு. அவளுடைய உணர்வுகள் யாவும் செயலற்றுப் போயிருந்தன.

ஆனால் அவளின் குடும்பமோ, இருவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் கவனிக்கத் தவறவே இல்லை.

‘இந்த மீனா ஏன் தான் இப்படி இருக்காளோ!’

அங்கு ஒவ்வொருவரின் மனதிலும் இருந்தது இது தான்.

ஒருவழியாக ஷாப்பிங் முடித்து விட்டு அப்படியே உணவகத்திற்குச் சென்று இரவு உணவை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

இவர்களுக்காக மாடியில் இருந்த அறையை ஒதுக்கி இருந்தார்கள். இருவரும் தூங்குவதற்காக அறைக்குள் வந்தனர்.

“ஷ்ஷ்ஷ்ஷஷப்ப்பாஆஆ.. காலையில இருந்து நடிச்சு நடிச்சு ஒரே டயர்டா இருக்கு. அந்த ஏசியப் போடு” என்றபடி கட்டிலில் காலை நீட்டிப் படுத்துக் கொண்டான் சபரி.

அவனைக் கவனிக்காமல் இரவு உடையை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமில் நுழையச் சென்றவளைச் சொடுக்கு போட்டு அழைத்தான்.

“எக்ஸ்கியூஸ் மீ மை டியர் வொய்ஃப்”

உணர்வுகள் அனைத்தும் செத்துப் போனவளாய் திரும்பிப் பார்த்தாள் அவனை.

“ஏன் பேபி, எப்படி என் பெர்ஃபார்மன்ஸ்? எதுவும் சொல்லவே மாட்டேங்கிறே! சூப்பர் இல்ல? நானே இந்த அளவுக்கு எதிர்பாக்கலேன்னா பாத்துக்கோயேன். டேய் சபரி, எப்பட்றிடா? கலக்குறே போ!”

மீனாவிடம் நக்கலாகக் கேட்டதும் அல்லாமல், தனக்குத் தானே பாராட்டவும் செய்து கொண்டான்.

அதற்கும் எந்தப் பதிலும் பேசாமல், கோபமும் காட்டாமல் தன் வேலையைக் கவனித்தாள் மீனா.

அவனிடம் கோபமும் வெறுப்பும் காட்டுவதே, அவனுக்குக் கிடைக்கும் வெற்றி என்று தோன்றியது மீனாவுக்கு. அதனால் இனிமேல் அவனிடம் தன் கோபத்தைக் காட்டி அவனை ஜெயிக்க வைக்கப் போவதில்லை என்று முடிவெடுத்து இருந்தாள்.

அவள் நினைத்தது மிகச் சரியாகவே வேலை செய்தது. அவனைச் சிறிதும் பொருட்படுத்தாமல் போனவளைப் பார்த்து கோபம் வந்தது அவனுக்கு.

‘இவ என்ன இப்படிப் போறா? இந்நேரம் இவ அழுதுருக்கணுமே! பயம் விட்டுப் போச்சா இவளுக்கு?’ பற்களைக் கடித்துக் கொண்டான். கால்களைத் தரையில் எட்டி உதைத்தான். கோபத்தில் முகம் சிவந்து போயிருந்தது அவனுக்கு.

மீனாவோ, அவனெதிரே தன்னுடைய எந்த ஒரு உணர்வையும் காட்டாமல் இருந்தாலும், மனதில் பயம் வரத்தான் செய்தது அவளுக்கு.

‘இன்னும் ஒரு நாள் முழுசா போகணும். இன்னும் என்னென்ன செய்யப் போறானோ தெரியலையே!’

அவளுக்கு எப்போது மறுநாள் பொழுது முடிந்து இரவாகும், எப்போது அங்கிருந்து கிளம்பலாம் என்று இருந்தது.

காலை உணவு நேரத்தில் மீண்டும் அனைவரும் உணவு மேஜையில் சேர்ந்தனர்.

“மீனா, மாப்பிள்ளைக்கு நீயே பரிமாறும்மா” என்றார் ரேணுகா.

மீனாவுக்கு அதில் இஷ்டமில்லை என்றாலும், தன் அம்மாவின் பேச்சை மறுக்க முடியாமல், சபரியின் தட்டில் சப்பாத்தியை எடுத்து வைத்து குருமாவை ஊற்றினாள்.

அதற்காகவே காத்திருந்த அந்த வேஷதாரிக்கு, உடனே திட்டம் ஒன்று உதித்தது மனதில்.

“சப்பாத்தி, குருமா எல்லாம் சூப்பரா இருக்கு அத்த. உங்க கை ராசின்னு நினைக்கிறேன். அதுதான் இவ்வளவு ருசியா இருக்கு”

பெரிய ஐஸ் கட்டியாகத் தூக்கி தன் அத்தையின் தலையில் வைத்தான்.

ரேணுகாவுக்கு ஒரே சந்தோஷமும் பெருமையும்.

“அப்படியாங்க மாப்பிள்ள? உங்களுக்குப் பிடிச்சிருக்குன்னா ரொம்ப சந்தோஷம்!”

“ஆனா உங்க கை வண்ணம் உங்க பொண்ணுக்கும் அப்படியே இருக்கு பாருங்க. அது தான் எனக்கு அத விட ரொம்ப ஆச்சரியமா இருக்கு!”

“அப்படியா? மீனா அப்படி என்ன செஞ்சா மாப்பிள்ள?”

“வெண் பொங்கல் சாம்பார் செஞ்சா அத்த. அவ்வளவு நல்லா தேவாமிர்தம் மாதிரி இருந்துச்சு. சாப்பிடச் சாப்பிட இன்னும் சாப்பிடணும்னு இருந்தது”

“ஓ! அப்படியாம்மா மீனா? மாப்பிள்ளை வாயால இதைக் கேக்குறதுக்கே சந்தோஷமா இருக்கு” இதைக் கூறியவர் சுந்தரம்.

ஆனால், அதன் பிறகு அவன் போட்ட குண்டில் மொத்தக் குடும்பமும் ஆடிப் போய் விட்டது.

மீனா செஞ்சது அவ்வளவு நல்லாவா மாப்பிள்ள இருந்தது?” கேட்டார் ரேணுகா.

“ஆமாங்கத்த, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கூட ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ‌வாயில போட்டவுடனே அப்படியே கரைஞ்சு உள்ளே போகுதேன்னு அப்பா சொல்லிட்டு இருந்தாரு. ஆனா பாருங்களேன்..”

பொடி வைத்துப் பேசி விட்டு நிறுத்தினான் சபரி.

உடனே அனைவரும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தனர் அவனை.

மீனாவுக்குப் பகீரென்றது.

‘என்னத்த அடிச்சு விடப் போறான் இவன்?’ யோசனையுடன் அவனையே பார்த்தாள்.

அவனும் அவளை ஒரு முறை திரும்பிப் பார்த்துக் கொண்டான்.

“ஆனா என்ன மாப்ளை? என்னாச்சு?” சுந்தரம் கேட்டார்.

“உங்க பொண்ணு தெரியாத்தனமா ஒரு வேலையச் செஞ்சா பாருங்க, அப்பாவும் அம்மாவும் அப்படியே பதறிப் போயிட்டாங்க!”

மீனாவுக்கு, அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரிந்து போனது. தலையில் கை வைத்தபடி முறைத்தாள் அவனை.

‘அப்பப்பா! எத்தனை எத்தனை பொய்யி? வாயைத் தொறந்தாலே இவனுக்கு பொய் மட்டும் தான் பேச வரும் போல. ஒரு பொய்யைச் சொல்லிட்டு அதை ஞாபகமா மெயின்டெய்ன் வேற பண்றானே!’

“கொதிக்கிற சாம்பாரை என் கையில கொட்டிட்டா மாமா உங்க பொண்ணு!”

என்னமோ அவள் தான் வேண்டுமென்றே செய்தது போல் அவ்வளவு அழகாக கூறினான் சபரி.

இப்போது அனைவரின் பார்வையும் மீனாவின் மேல் நிலைத்து இருந்தது. அதில் மிதமிஞ்சிய அதிர்ச்சி கலந்து இருந்தது.

“என்னது, சுடு சாம்பாரை உங்க கையில ஊத்திட்டாளா?” பதறிய குரலில் கேட்டார் ரேணுகா.

சுந்தரமோ, மகளைக் கோபத்துடன் பார்த்தார்.

“என்னம்மா இதெல்லாம்? உன் மனசில என்ன நினைச்சிட்டு இருக்கே? அப்படி என்ன ஒரு கோவம் உனக்கு மாப்பிள்ள மேல, சுடு சாம்பாரை கையில கொட்ற அளவுக்கு?”

அதே கோபத்துடன் கேட்டார் மகளிடம்.

“அப்.. அப்பா, அப்படி எல்லாம் எதுவும்..”

அதற்குள் அவளைப் பேச விடாமல் குறுக்கிட்டுப் பேசினான் சபரி.

“அய்யோ மாமா! நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்களா? மீனா வேணும்னே எல்லாம் எதுவும் பண்ணல மாமா. நான் கை வச்சிருந்தத கவனிக்காம சாம்பார் ஊத்திட்டா. அவ்வளவு தான். மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல”

மனைவியைத் தவறாக நினைத்து விட்டார்களே என்கிற ஒரு பதட்டத்துடனும் சங்கடத்துடனும், அவர்கள் நம்பும்படி மிகவும் சரியாக கச்சிதமாகப் பேசினான் சபரி.

அவர்களும் அதை அப்படியே நம்பி விட்டனர்.

“ஓ! அப்படிங்களா மாப்பிள்ள? கொஞ்ச நேரத்தில பதறிப் போயிட்டேன் நான்! ஆனாலும் பாத்து செய்றதில்லையாம்மா மீனா? கவனமா வேலை பாக்க வேணாம்?”

மீண்டும் மீனாவிடம் கேட்டார் சுந்தரம். மீனா, பதில் எதுவும் பேசாது பரிதாபமாகப் பார்த்தாள் தன் தந்தையை.

“மீனா, என்னடி இது? எதுக்கு இப்படி எல்லாம் பண்றே? அவ்வளவு கவனக்குறைவா உனக்கு?”

ரேணுகா, ஒரு சிறு சலிப்புடன் மகளைக் கேட்டவர், பிறகு சபரியைத் திரும்பிப் பார்த்தார்.

“உங்களுக்கு கையில எதுவும் ஆகலையே மாப்பிள்ள? மன்னிச்சுக்கோங்க! அவ தெரியாம பண்ணிட்டா. தப்பா நினைக்க வேண்டாம் மாப்பிள்ள”

தன் பெண் மேல் தான் தவறு இருக்கிறது என்று அவனிடம் கெஞ்சும் குரலில் மன்னிப்பு கேட்டார்.

மீனாவோ, யாரையும் பார்க்காமல் பேசாமல் உட்கார்ந்து விட்டாள் இருக்கையில்.

“நீங்க எதுக்கு அத்த மன்னிப்பு எல்லாம் கேக்குறீங்க? நான் தப்பா எல்லாம் நினைக்கவே இல்ல. சில நேரங்கள்ல இதெல்லாம் நடக்குறது தானே, விடுங்க! பாவம், அந்த நேரத்தில என்னை விட அவ தான் ரொம்ப பதறிப் போயிட்டா. இப்படி ஆயிடுச்சே, இப்படி ஆயிடுச்சேன்னு புலம்பிட்டே இருந்தா. கடைசியில நான் தான் அவளைச் சமாதானம் பண்ண வேண்டியதா போயிடுச்சு! நீங்க இந்த அளவுக்கு வருத்தப் படுவீங்கன்னு தெரிஞ்சு இருந்தா, நான் இத உங்க கிட்ட சொல்லி இருக்கவே மாட்டேன்”

“உங்களுக்கு ரொம்பப் பெரிய மனசுன்னு திரும்பத் திரும்ப நிரூபிக்கிறீங்க மாப்பிள்ள” ஒரேடியாக மாப்பிள்ளையைப் புகழ்ந்தார் சுந்தரம்.

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. அதான சூப்பர் சபரி … நல்லா நடிக்குறீங்க … கலக்குறீங்க … நாங்களும் உங்களை பாராட்டுறோம் …

  2. அவன் பேச்சிற்கும், செயலுக்கும் எதிர்வினையாக கோவப்பட்டுக்கொண்டோ அல்லது கவலைப்பட்டுக்கொண்டே இருந்தால், அவனும் அதனையே தொடர்ந்து செய்துகொண்டே இருப்பான். அதனால் அமைதியாக செல்வதே நலம் என்று மீனா எடுத்த முடிவு சரியே.

    அவள் கவலைபட்டு இருந்தால் கூட அதோடு போய் இருக்கும் போல, கண்டுகொள்ளாமல் செல்லவும் அடுத்த வெடிகுண்டை வீசிவிட்டான்.

    எத்துணை நேர்த்தியாக நடிக்கின்றான். அவள் மேல் தவறை திருப்பிவிட்டு தன் மேல் அனுதாபப்பார்வையை வீச செய்துவிட்டான்.

    1. Author

      உங்களின் இந்த அருமையான விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 😊

  3. அவளை பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறான்