Loading

அத்தியாயம் -14

மாலதி தான் மீண்டும் கேட்டும் கணவரிடம் இருந்து எந்தவித பதிலும் வராமல் போகவே, பொறுமை இழந்து அவரிடம் சத்தம் போட்டார்.

“நான் எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கேன்! நீங்க என்னன்னா, சம்பந்தமே இல்லாத மாதிரி எனக்கென்னன்னு இருக்கீங்க. ஏங்க இப்படி இருக்கீங்க நீங்க?”

“யோசிக்கிறேன் மாலதி.. நீ சொல்ற மாதிரி உண்மையிலேயே அந்தப் பொண்ணுக்கு சபரியப் பிடிக்கலேன்னாலும், நாம என்ன செய்ய முடியும் அதில? இது அவனா தேடிகிட்டது. விடு, கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியா வரும்” அவரும் சத்தமாகவே பதில் கூறினார்.

“என்னங்க இவ்ளோ ஈசியா சொல்றீங்க? இது நம்ம பையனோட வாழ்க்கை இல்லையா?”

“ஆமா மாலதி. நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாரு! மண்டபத்தில இன்னும் கொஞ்ச நேரத்தில வேற ஒருத்தனோட கையால தாலி வாங்கிக்க வேண்டியது, திடீர்னு மாப்பிள்ள மண்டபத்தில இருந்து ஓடிப் போயிட்டதால நடக்க இருந்த கல்யாணம் நின்னு போயி, யாரோ முன்னே பின்னே தெரியாத ஒருத்தன் மாப்பிள்ளையா வந்து நின்னு, அவன் கையால தாலியக் கட்டிகிட்டா, அந்தப் பொண்ணால அதை அவ்வளவு ஈசியா ஏத்துக்க முடியுமா சொல்லு? அதனால இதை அப்படியே விடு. அவ மனசு இதை ஏத்துக்குறதுக்கு கொஞ்ச நாள் எடுக்கும். அப்புறம் எல்லாம் சரியாப் போயிடும். இதில நாம நடுவில நுழையக்கூடாது. புரியுதா?”

“அது சரிதான்.. ஆனா அதுக்காக வேணும்னே புருஷன் கையில சாம்பார் கொட்றது மட்டும் சரியா?”

“சரியில்ல தான். ஆனா அது வேணும்னே தான் நடந்ததுன்னு நமக்குத் தெரியுமா?”

“சபரி அப்படித்தானேங்க சொல்லிட்டு இருந்தான் அவ கிட்ட?”

“சரி, அவன் சொன்னான். அதுக்கு அவளோட பதில் என்னன்னு கேட்டியா நீ?”

‘அட ஆமால்ல? இவர் சொல்றதும் சரி தானே?’ யோசிக்க ஆரம்பித்து இருந்தார் மாலதி.

“அதனால இனிமே அவங்க ரெண்டு பேருக்கும் நடுவில தேவையில்லாம போகாதே நீ. முக்கியமா இப்படி அவங்க ரூம் முன்னாடி நின்னு அவங்க பேசுறத ஒட்டு கேக்குற பழக்கம் எல்லாம் வச்சுக்காதே. சரியா?”

“ம்ம்..” அமைதியாகத் தலை அசைத்தார் அவர்.

“இப்ப இப்படிப் பேசுறவன், நைட்டு அவளைப் போயி கொஞ்சுவான். அது உனக்குத் தெரியுமா? புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். காலையில அடிச்சுப்பாங்க. நைட்ல சேந்துப்பாங்க. அதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது! நீ அநாவசியமா கவலைப் பட்றதை விட்டுட்டு வேலையைப் பாரு மாலதி போ”

கணவனின் கூற்றில் இருந்த நியாயம் உரைக்க, அத்துடன் மனம் சமாதானமாகி, அதை மறந்து தன் அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பினார் மாலதி.

அதற்குள் சபரியும் மீனாவும் தயாராகி வெளியே வந்தனர் கோவிலுக்குப் புறப்பட.

“என்னம்மா, நாங்க கோவிலுக்குப் போயிட்டு வரட்டுமா?” தாயிடம் கேட்டான் சபரி.

வேலையாக இருந்தவர், மகனின் குரல் கேட்டு நிமிர்ந்தார். இருவரின் அழகான ஜோடிப் பொருத்தத்தைக் கண்டு, தாயுள்ளம் பெருமிதம் அடைந்தது.

“சரிப்பா, போயிட்டு வாங்க. அப்பா உள்ளே இருக்காரு. சொல்லிட்டுப் போங்க”

“நீங்களும் அப்பாவும் கூட வாங்களேம்மா. சேந்து போயிட்டு வரலாம்”

“இல்லேடா. நீங்க ரெண்டு பேரும் புதுசா கல்யாணம் ஆகி போறீங்க. போயிட்டு வாங்க. இன்னொரு நாள் சேந்து போகலாம்”

தந்தையின் அறைக்குச் சென்று அவரிடமும் சொல்லிக்கொண்டு வந்தனர்.

“சொல்லியாச்சும்மா அப்பா கிட்ட. போயிட்டு வர்றோம்”

“நாங்க போயிட்டு வர்றோம் அத்தே”

“சரிம்மா போயிட்டு வா”

இப்போது, தன் அத்தையின் பேச்சில் கொஞ்சம் கோபம் குறைந்து இருந்ததைக் கவனித்த மீனாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அறையில் சபரி பேசியதைக் கேட்டு, தன்னிடம் தன் மாமியார் எப்படி நடந்து கொள்ளப் போகிறார்களோ என்று நினைத்த மீனாவுக்கு, மனம் கொஞ்சம் இலேசானது.

காரில் சபரி ஓட்டுநர் இருக்கையில் அமர, அவனுக்கு அருகிலேயே, ஒருவித படபடப்புடன் முன் பக்கம் ஏறி அமர்ந்து கொண்டாள் மீனா. கார் புறப்பட்டது. வழியில் எதுவும் பேசிக் கொள்ளவில்லை சபரி. அமைதியாகவே காரை செலுத்திக் கொண்டு இருந்தான்.

அவனுடைய அமைதியைக் கண்டு பயப்படுவதா இல்லை நிம்மதி அடைவதா என்பது கூட புரியவில்லை மீனாவுக்கு.

கோவிலில் போய் என்னவெல்லாம் செய்யப் போகிறானோ? இந்த அமைதிக்குப் பின்னால் காரணம் ஏதாவது இருக்குமா என்று சிந்தித்தபடி சென்றாள் மீனா.

அவளுடைய இதயம் பயத்தில் தாறுமாறாய் அடித்துக் கொண்டு இருந்தது.

சபரியும் மீனாவும் கிளம்பி நாற்பது நிமிடப் பயணத்தில் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.

அந்த நாற்பத்தைந்து நிமிடங்களும் காரில் எந்தவித சத்தமும் இன்றி அமைதியாகவே கழிந்தது.

இது புயலுக்கு முன்பான அமைதியாகத் தான் நினைக்க முடிந்தது மீனாவால்.

சிறிது நேரத்திற்கு முன்பு வீட்டில் எகத்தாளமாகப் பேசிச் சிரித்தவன், இப்போது காரில் யாரும் இல்லாத ஒரு இடத்தில், இந்த அமைதி எதற்கு எனக் கேட்டு விடலாமா என்று நினைத்தாள் மீனா.

தொண்டை வரை வார்த்தைகள் வந்து விட்டன அவளுக்கு. ஆனால் வெளியே வரத் தயங்கி பசை போட்டு ஒட்டிக் கொண்டது போல் அங்கேயே தங்கி விட்டன.

சும்மா இருக்கும் போது பேச்சு கொடுத்து எதற்காகத் தேவையில்லாமல் இவனிடம் மாட்டிக்கொள்ள வேண்டும் என்று பேசாமல் வாயை மூடிக் கொண்டு விட்டாள்.

கோவிலுக்கு வந்ததும் இருவரும் காரை விட்டு இறங்கிக் கொண்டனர்.

அந்த அம்மன் கோயில் அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோயில் கொஞ்சம் சிறியது தான் என்றாலும் எந்நேரமும் அங்கு கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

நேராக கோயிலின் முன்பாக இருந்த ஒரு பூக்கடையை நோக்கி நடந்தான் சபரி.

அவனுடன் மனைவி என்கிற பெயரில் பெண் ஒருவள் அங்கு இருக்கிறாள் என்பதையே சிறிதும் லட்சியமே செய்யாமல் அவன் பாட்டுக்கு நடந்தான் சபரி.

அவன் பின்னால் வேகமாக நடந்தாள் மீனா. கிட்டத்தட்ட சிறு வேகத்தில் ஓடினாள் என்று தான் சொல்ல வேண்டும்.

அவளை வேண்டும் என்றே அலட்சியப் படுத்த வேண்டும் என்பது தான் அவனுடைய நோக்கமாக இருந்தது.

பூக்கடையில் இருந்த பெண்மணி, சபரியைப் பார்த்ததும், ஏற்கனவே தெரிந்தவன் போல் இன்முகத்துடன் வரவேற்றாள் அவனை.

“வாங்க தம்பி, நல்லா இருக்கீங்களா?”

“ம்ம்.. நல்லா இருக்கேன்கா”

முகத்தில் கனிவு நிறைந்த ஒரு புன்சிரிப்புடன் அவன் பதில் கூறிய விதம் மீனாவை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

‘என்னது அக்காவா? அடுத்தவங்க கிட்ட இப்படி எல்லாம் இவருக்கு சிரிச்சுப் பேசக்கூடத் தெரியுமா? அதுவும் ஒரு லேடி கிட்ட, அதில இவங்க ஒரு பூக்காரம்மா.. இவங்க கிட்ட இப்படி நல்லா பழகின மாதிரி பேசுறாரே! ஒருவேளை அடிக்கடி இந்த கோவிலுக்குத் தான் வருவாரு போல’

யோசித்தபடி அவர்களுக்குள் நடக்கும் சம்பாஷணையை மேலும் கவனிக்க ஆரம்பித்தாள் மீனா.

“உங்க பாப்பா இப்ப நல்ல இருக்காளாக்கா?”

“ரொம்ப நல்லா இருக்கா தம்பி. அன்னைக்கு மட்டும் நீங்க சரியான நேரத்தில உங்க காரில கூட்டிப் போய் ஆஸ்பத்திரியில சேத்து இருக்கலேன்னா இந்நேரம் என் குழந்தைய உயிரோட பாத்துருக்க முடியுமான்னே தெரியல தம்பி. நீங்க ரொம்ப நல்லா இருக்கணும். உங்களுக்கு ஒரு குறையும் வராது. உங்க பொண்டாட்டி புள்ளைங்களோட நீங்க நூறு வருஷம் நல்லா இருப்பீங்க தம்பி”

கண்களில் கண்ணீர் துளிர்க்க நெகிழ்ச்சியுடன் அந்தப் பெண்மணி கூறிய விதம் மீனாவை மேலும் ஆச்சரியப் படுத்தியது.

“இதில என்னக்கா இருக்கு? அதுக்கு ஏன் இப்படி இவ்வளவு எமோஷனல் ஆகுறீங்க?”

“போங்க தம்பி, நீங்க அதை எவ்வளவு ஈசியா சொல்லிட்டீங்க! ஆனா நீங்க எவ்வளவு பெரிய விஷயம் செஞ்சுருக்கீங்கன்னு எனக்குத் தான் தெரியும். இங்கேயே உக்காந்து விளையாடிட்டு இருந்தவ, திடீர்னு கீழே கிடந்த காசை எடுத்து வாயில போட்டுகிட்டு, ஒரு நிமிஷத்தில என்னென்னமோ நடந்து போச்சே தம்பி!

நீங்க பக்கத்தில இருந்ததால, பாப்பா எப்படியோ மூச்சு திணறுற மாதிரி இருந்தான்னு தெரிஞ்சதும், நீங்க கொஞ்சம் கூட யோசிக்காம அவளைத் துக்கி காரில போட்டுட்டு என்னையும் கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்குப் போனீங்க!

அந்த டாக்டரே சொன்னாரே தம்பி, நீங்க உடனே அழைச்சிட்டு வந்ததால தான் தொண்டைக்குள்ள சிக்கி இருந்த காசை எடுக்க முடிஞ்சதுன்னு. இல்லேன்னா மூச்சுக் குழாயில சிக்கி இருந்ததுன்னா, உயிருக்கே கூட ஆபத்தா முடிஞ்சிருக்கலாம்னு.

எனக்கு அன்னைக்கு ஒரு நிமிஷம் உயிர் போயி உயிர் வந்துச்சு தெரியுமா தம்பி. இப்ப நினைச்சா கூட உடம்பெல்லாம் நடுங்குது எனக்கு”

அந்தப் பெண்மணியின் கண்களில் உண்மையிலேயே பயம் தெரிந்தது அந்த நேரத்தில். பய மிகுதியில், கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது அவளுக்கு.

“சரி விடுங்கக்கா, அது தான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுல்ல. எதுக்கு அதையே திரும்பத் திரும்ப நினைக்கிறீங்க? மறங்கக்கா அதை” என்று கூறினான் சபரி.

அவளும் அதை மறந்தவளாய் சிரித்தாள். அப்போது தான் சபரியின் அருகில் நின்றிருந்த மீனாவைக் கவனித்தாள் அப்பெண். மீனாவைப் பார்த்துச் சிரித்தாள்.

“இவங்க உங்க பொஞ்சாதியா தம்பி? நல்ல அழகா அம்சமா இருக்காங்க. புதுசா இப்ப தான் கல்யாணம் ஆச்சு போல! தம்பி சொல்லவே இல்ல பாருங்க” என்று உரிமையுடன் அவனிடம் கூறினாள்.

அதற்குப் பதில் எதுவும் பேசாமல் ஒரு அசட்டுச் சிரிப்போடு நிறுத்திக் கொண்டான் சபரி.

“பூ எப்பவும் குடுக்கிறத விட சேத்துக் குடுத்துட்றேன் தம்பி”

சொல்லிவிட்டு அதற்கு பதிலைக் கூட எதிர்பார்க்கவில்லை அப்பெண்மணி.

பூவை வேகமாக முழம் போட்டு ஒரு இலையில் மடித்துக் கட்டினாள்.

“இந்தாங்கம்மா, இது சாமிக்கு” என்று அதை மீனாவின் கையில் கொடுத்தாள். வாங்கிக் கொண்டாள் மீனா.

பிறகு வெள்ளைப் பூவை எடுத்து அதையும் முழம் போட்டு, இலையில் கட்டாமல், சபரியிடம் நீட்டினாள்.

“இந்தாங்க தம்பி, இதை உங்க பொண்டாட்டிக்கு நீங்களே உங்க கையால தலையில வச்சு விடுங்க” என்று கூறினாள்.

சபரி இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. திடீரென அப்பெண்மணி பூவை எடுத்து நீட்டியதும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தான்.

“இதை அவங்க கையிலேயே குடுத்துருங்கக்கா. எனக்கு வைக்கத் தெரியாது”

“இதில தெரியிறதுக்கு என்னங்க தம்பி இருக்கு? எடுத்துத் தலையில வச்சு விட்டா தானா தெரியப் போகுது. இந்தாங்க வைங்க”

அந்தப் பெண்ணோ விடவில்லை. விட்டால் அவளே அவனுடைய கையை எடுத்துத் திணித்து விடுவாள் போல் இருந்தது.

சபரிக்கு மிகவும் தர்மசங்கடமாகப் போய் விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென முழித்தான்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

8 Comments

  1. எதிர்பாராமல் நிகழ்ந்த திருமணம் அதில் அந்த பெண்ணின் மனம் குழப்பத்தில் தவிக்கும் என்று அவள் பக்கம் இருந்தும் யோசித்து புரிந்து கொண்டார் சபரியின் அப்பா.

    மகனது நலனில் இருந்த அக்கறையினால் எழுந்த பதட்டத்தினில் தவறான புரிதல் எழுந்தாலும், கணவர் கூறியதினில் இருக்கும் உண்மை புரிய சிறிது ஆறுதல் அடைந்து அமைதியாகிவிட்டார் சபரியின் அம்மா.

    இவனின் அமைதியை எண்ணி நிம்மதி கொள்வதா? அல்லது, அடுத்து என்ன செய்ய காத்து இருக்கிறானோ என்று பயம் கொள்வதா? என்ற குழப்பத்தில் உள்ளாள் மீனா.

    சபரி இயல்பாகவே இறக்க குணத்துடன் அனைவருடனும் இயல்பாக பழகுகிறான்.

    பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம் என்று இருக்க, தவறான புரிதலில் அவளை பழிவாங்க எண்ணுகிறான்.

    1. Author

      உங்களின் இந்த ஆழமான விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 😊

  2. வச்சு விடுங்க சபரி … எல்லார் மனசையும் புரிஞ்சுக்கிற நல்ல அப்பா … தப்புன்னு சொன்னதும் அதை திருத்திக்கிற நல்ல அம்மா … நீங்களும் நல்ல பையன் தான் போல … ஆனா ஏதோ காரணம் இருக்கு இப்படி எல்லாம் பண்ண … மீனாவும் நல்ல பொண்ணு தான் … என்ன பண்றது

    1. Author

      உங்களின் இந்த அழகான விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 😊

  3. சபரியின் அப்பாவுடைய புரிதலான பேச்சு அருமை

  4. அருமையான பதிவு,

    மாமனார் பேச்சு மனைவியின் மனதை கட்டுக்குள் வைக்கும் விதமாக இருந்தது.

    பொண்டாட்டியை நல்லா பழிவாங்கவும் திட்டவும் வேறு எல்லாரிடமும் பல்லை காட்டவும் தெரியுது.

    பூவை மட்டும் தலையில வச்சு விட தெரியல 😏😏😏