
அத்தியாயம் -11
சபரி தன் அம்மாவிடம் கூறியது சாதாரணமாகவே தெரிந்தாலும் அவன் எந்த நோக்கத்துடன் கூற நினைத்தானோ, அது, மாலதிக்கு மட்டும் அல்ல, அவன் தந்தை சீனிவாசனுக்கும் மிகச் சரியாகவே போய்ச் சேர்ந்திருந்தது.
உங்களுடைய மருமகள், முன்னரே விஷயத்தைச் சொல்லாமல் போனது தான் இப்போது பிரச்சினை என்பது போல் மாலதி மறந்ததை மீண்டும் தன் தந்தையின் எதிரே நினைவு படுத்துவது போல் கூறினான்.
மீனாவோ, முகத்தைச் சுருக்கிக் கொண்டு பார்த்தாள் அவனை. அவன் எந்த நோக்கத்துடன் இப்படி ஒரு பொய்யைச் சொல்கிறான் என்பது அவளுக்கு இன்னும் விளங்கவே இல்லை.
மகன் இப்படிக் கூறியவுடன், சீனிவாசன் மருமகளைத் திரும்பிப் பார்த்தார்.
“நீ ஏம்மா மீனா அவன் கிட்ட முன்னாடியே சொல்லல? அதுதான் உன் அத்த சொல்லித்தான் அனுப்பி இருக்காளே உன் கிட்ட. கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கப் பாரும்மா”
கோபப்படாமல் கனிவாகத் தான் கூறினார் அவர். ஆனாலும் தான் செய்யாத தவறை ஒப்புக்கொள்ள முடியாமல் தன் மாமனாரிடம் உண்மையைக் கூற எத்தனித்தாள் மீனா.
“இல்ல மாமா..”
அவள் சரியாக பேசும் முன்பே மீண்டும் இடை புகுந்து பேசினான் சபரி.
“சரிங்கப்பா விடுங்க. அவ தெரியாம செஞ்சுட்டா. மறந்துருப்பா. விடுங்களேன் அவளை பாவம்!”
மனைவியின் மீது மிகுந்த கரிசனம் இருப்பதாகக் காட்டிக் கொண்டான் தன் பெற்றோர் எதிரே. மீனாவுக்கு, கண்களில் கண்ணீர் தெறித்து நின்றது.
“சரிம்மா மீனா, தட்டு எடுத்துட்டு வா ரெண்டு பேருக்கும்”
மருமகளைப் பார்த்துக் கூறினார் மாலதி.
சமையலறைக்குள் சென்று இரண்டு தட்டுகளைக் கொண்டு வந்து மாமனார் எதிரிலும் கணவன் எதிரிலும் வைத்தாள்.
பரிமாறச் சென்ற மாலதியைத் தடுத்தாள்.
“நான் செய்றேன் அத்தே. நீங்களும் சாப்பிட உட்காருங்க” என்று கூறினாள்.
“ஆமா மாலதி, உனக்குத் தான் ரொம்ப நேரம் நின்னுட்டே இருந்தா, கால் வலி எடுக்குதுன்னு சொல்வேல்ல. நீயும் உக்காரு. மருமக பரிமாறட்டும்”
“சரிம்மா, நீ பரிமாறு. நான் சும்மா உக்காந்துருக்கேன். அப்புறம் நீயும் நானும் சேந்து சாப்பிடலாம்”
கூறியவாறு கணவரின் அருகே அமர்ந்து கொண்டார் மாலதி.
“நான் கொஞ்சம் கையில எடுத்து டேஸ்ட் பண்ணேங்க. ரொம்ப நல்லா செஞ்சிருக்கா மீனா. வாயில வச்சா அப்படியே கரையுது. உங்களுக்கு அப்படித்தானே இருக்கணும். ரொம்ப பிடிக்கும் பாருங்க”
கணவரிடமும் ஒரு முறை மருமகளின் கைங்கரியத்திற்கு பாராட்டுப் பத்திரம் கொடுத்தார் மாலதி.
“ஓ! அப்படியா? நீ சொல்றப்பவே ஆசையா இருக்கே!”
என்றவாறு நாக்கைச் சப்புக் கொட்டினார் சீனிவாசன். சாப்பாட்டுக்கு அடிமையாகாத ஆண்கள் யாரும் இருப்பார்களா என்ன? அதற்கு சீனிவாசனும் விதிவிலக்கல்ல.
சபரியும் கூட அப்படித்தான். வகை வகையாக தினுசு தினுசாக ருசியுடன் சமைத்துக் கொடுத்தால் அவனும் அதற்கு அடிமை ஆவான் தான்.
ஆனால் அவன் இப்போது அப்படிப்பட்ட ஒரு மனநிலையில் தான் இல்லையே! மனைவியை என்ன செய்து மனதைக் காயப்படுத்தலாம், தன் தாய் தந்தையிடம் எப்படி எல்லாம் அவளுக்குக் கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கலாம் என்றல்லவா கங்கணம் கட்டிக் கொண்டு ஒவ்வொரு காயையும் நகர்த்திக் கொண்டு இருக்கிறான்!
அவன் அடுத்து செய்த ஒரு செயல் தான், பாவம் இவ்வளவு நேரம் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்த மாமனாரும் மாமியாரும் அவளை ஒரு விரோதி மாதிரி பார்க்கும் அளவுக்கு கொண்டு போகும் என்று அவள் எப்படி அறிந்திருப்பாள்?
இருவருக்கும் தட்டில் பொங்கல் போட்டு அதில் சாம்பாரும் ஊற்றினாள். இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர். அப்படியே மூவருக்குள் பேச்சும் தொடர்ந்தது.
“என்னங்க!”
“என்ன மாலதி? இரு இரு.. ஒரு ரெண்டு வாய் சாப்டுக்குறேன். அப்புறம் பேசலாம்” என்றவாறு தட்டில் இருக்கும் வெண் பொங்கல் சிறிது எடுத்து, சாம்பாரில் அதை நன்றாக நனைத்துக் கொண்டு வாயில் வைத்தார்.
அது உள்ளே செல்வது கூடத் தெரியாமல், அப்படியே தொண்டையில் வழுக்கிக் கொண்டு உள்ளே சென்றது.
“ஆஹா.. ஆஹா! என்ன ருசி, என்ன ருசி!” மனதாரக் கூறினார்.
“ஏம்மா மீனா, பரவாயில்லையே! ரொம்ப நல்லா செஞ்சிருக்கியே!”
கூறியவாறு அருகில் எதுவும் கூறாமல் அமைதியாக உண்டு கொண்டிருந்த மகனைப் பார்த்தார்.
“என்னடா, நீ எதுவுமே சொல்ல மாட்டேங்கிறே? உனக்குப் பிடிக்கலையா என்ன?”
“அப்படி எல்லாம் இல்லையே! ரொம்ப பிரமாதமா இருக்கு. அதுதான் எனக்கும் சேத்து நீங்களும் அம்மாவும் தான், மருமகளுக்கு ஒரேடியா புகழ்மாலை சூட்டிட்டு இருக்கீங்களே! நான் தனியா எதுவும் சொல்றதுக்கு நீங்க மிச்சம் வைக்கவே இல்லையேப்பா! அதுதான் பேசாம ரசிச்சுஉஉ ருசிச்சுஉஉ சாப்டுட்டு இருக்கேன்”
அவன் அழுத்தம் கொடுத்துப் பேசியது, மீனாவுக்கு என்னவோ சாதாரணமாகத் தோன்றவில்லை. ஏதோ ஒரு உள் அர்த்தத்துடன் பேசுவதாகவே பட்டது அவளுக்கு.
ஆனால் எதையும் புரிந்து கொள்ள முடியாமல் தவித்து நின்றிருந்தாள் பெண்ணவள்.
“ஏங்க, திடீர்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்ல. சபரிக்குக் கல்யாணம் முடிஞ்சு போச்சு! யாருக்குமே எதுவும் தெரியாது. ஏன், நம்ம கல்புவுக்குக் கூட எதுவுமே சொல்லல நாம. நான் நேத்து ராத்திரி தான் அவளுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தச் சொன்னேன். அவ கோவப்பட்றா”
“என்ன பண்ணச் சொல்றே மாலதி? இவன் செஞ்ச வேலை அப்படி. நமக்கே எதுவும் தெரியாது. திடீர்னு தானே ஃபோன்ல கூப்பிட்டு விஷயத்தச் சொன்னான். நாமளே விருந்தாளி மாதிரி தான் கல்யாணத்துக்கு போயிட்டு வந்த மாதிரி ஆயிடுச்சு! அந்த நேரத்தில எப்படி நாம பெங்களூர்ல இருக்கிற நம்ம பொண்ணைக் கூப்பிட்டுக் கூட்டிட்டுப் போறது? சொல்லு!”
“அது சரிதாங்க. மாப்பிள்ள கிட்ட நீங்க பேசுங்க ஃபோன் பண்ணி. என்ன நடந்ததுன்னு சொல்லுங்க”
“சரி சரி பேசுறேன். நாம சீக்கிரமாவே ரிசப்ஷன் வைக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணலாம் மாலதி. நம்ம சொந்தக்காரங்க எல்லாருக்குமே தானே சொல்லணும். ரிசப்ஷன் வச்சுட்டோம்னா நல்லதுன்னு நினைக்கிறேன். இல்லேன்னா எல்லாருமே கேட்கத்தான் செய்வாங்க”
“ஆமாங்க.. நானும் அதைத்தான் சொல்லணும்னு நினைச்சேன். உடனே நல்ல நாள் பாக்கணுங்க”
“பாத்துடுவோம். டேய் சபரி, என்ன கேட்டியா நாங்க பேசினதெல்லாம்? உனக்கும் மீனாவுக்கும் நடந்த இந்த அவசரக் கல்யாணம், நம்ம சொந்தக்காரங்க யாருக்குமே தெரியாது இல்லையா? அவங்களுக்கு முறைப்படி விஷயத்தச் சொல்லியாகணும் நாம. அதனால உங்களுக்கு ரிசப்ஷன் வைக்கணும்னு நானும் அம்மாவும் ஆசைப் பட்றோம். ரிசப்ஷனுக்கு உன் சைட்ல இருந்து யாரையெல்லாம் கூப்பிடணும்னு சொல்லு”
தன் தந்தை பேசியதைக் கேட்ட சபரிக்கோ, முகம் மாறியது.
“அவசியம் ரிசப்ஷன் வைக்கணுமாப்பா?”
ஒரு சிறு தயக்கத்துடன் கேட்டான்.
“கண்டிப்பா வைக்கணும்டா. உனக்கு என்ன பிரச்சினை அதில? கண்டிப்பா வைக்கணுமான்னு கேக்குறே?” கோபத்துடன் பேசினார் மாலதி.
“ஆமாடா சபரி. கல்யாணம் தான் நாங்க நினைச்ச மாதிரி நடத்த முடியல. ரிசப்ஷனாவது எங்க விருப்பத்துக்கு நாங்க செஞ்சு ஆகணும்பா. எதுக்கு எதுவும் வேண்டாம்னு நினைக்கிறே நீ?”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லேப்பா”
அவனால் அதற்கு மேல் மறுத்து எதுவும் பேச முடியவில்லை. அப்படியே அவன் மறுத்தாலும், அதற்கு காரணம் கேட்பார்களே என்று தன் ஒப்புதலைக் கூறினான்.
“சரி, உங்க இஷ்டம் போல செய்ங்க.ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு வைக்கிற மாதிரி பாருங்க. நானும் என் ஃபிரண்ட்ஸ் கொஞ்சம் பேருக்குச் சொல்லணும். எல்லாருக்கும் அன்னைக்குன்னா தான் வரத் தோது படும்”
“அப்பாடா, உடனே ஜோசியரைக் கூப்பிட்டு இன்னைக்கே நாள் பாத்துடுவோங்க”
மாலதியின் முகத்தில் சந்தோஷமும் மனதில் உற்சாகமும் பற்றிக் கொண்டது.
“டேய் சபரி, உன் அக்கா கிட்டேயும் மாமா கிட்டேயும் நீயும் பேசுடா. நேத்தே கேட்டா அவ”
“சரிம்மா பேசுறேன்”
மீனாவோ, சிந்தனைக்குத் தாவி இருந்தாள்.
‘ஓ! இவருக்கு ஒரு அக்கா வேற இருக்காளா? அதுவே இப்ப தான் எனக்குத் தெரியுது. எனக்கு அவ நாத்தனார் ஆகணுமில்ல! எப்படி இருக்கப் போறாளோ!’
அவள் யோசித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், அவளைப் பார்த்து,
“சாம்பார் ஊத்து மீனா. என்ன யோசிச்சுட்டு இருக்கே?” என்றான் சபரி.
உடனே அவசரமாக சாம்பாரைக் கரண்டி நிறைய எடுத்து அவன் தட்டில் ஊற்றச் சென்றாள் மீனா.
அவனோ அவளை ஏளனமான ஒரு பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்தப் பார்வைக்கு அர்த்தம் புரியாமல், குழப்பத்துடன் அவனுடைய தட்டில் சாம்பார் கரண்டியைக் கொண்டு சென்றாள்.
அப்போது சற்றும் எதிர்பாராமல், வேண்டுமென்றே தன் கைகளை, மீனா ஊற்றும் சாம்பாரில் கொண்டு சென்றான் சபரி.
அவள் சுதாரித்து எடுப்பதற்குள், கரண்டியில் இருந்த சூடான சாம்பார், சபரியின் தட்டில் விழுவதற்குப் பதிலாக அவனுடைய கையில் கொட்டியது.
“ஹாஆஆஆ… அம்மா!”
கணவனின் செய்கையைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் மீனா.
‘இவர் என்ன? இப்படி வேணும்னே எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்காரே! ஏன் இப்படி பண்றாரு, எதுக்கு பண்றாருன்னு கூட ஒன்னும் புரியவே மாட்டேங்குதே!’
அவனை அதிர்ச்சி நிறைந்த கண்களால் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சாம்பாரின் சூடு தாங்காமல் எரிச்சலில் கத்திக் கொண்டே மனைவியை ஒரு பார்வை பார்த்தான் சபரி.
அந்தப் பார்வையில் பொதித்திருந்த அர்த்தத்தைக் கண்டுபிடிக்க இயலாமல் செய்வதறியாது திகைத்து நின்றாள் அந்த அப்பாவிப் பெண்.
திடீரென மகனின் அலறல் குரல் கேட்டதும், மாலதியும் சீனிவாசனும் அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்தனர் அவனை.
கையில் கொட்டிய சூடான சாம்பாருடன், மகன் தன்னுடைய ஒரு கையால் அந்தக் கையைப் பிடித்துக் கொண்டு, கண்களில் இலேசாகத் துளிர்த்த கண்ணீருடன் இருந்தவனைப் பார்த்து இருவரும் பதறி விட்டனர்.
மாலதி, வேகமாக மகனருகே ஓடிச் சென்றார். அவனுடைய கையைத் தூக்கிப் பார்த்தார். அது இலேசாக சிவந்து போயிருந்தது.
“என்னடா இது! கை இப்படி சிவந்து கன்னிப் போயிருச்சு. எப்படி இப்படி ஆச்சு?”
பெற்ற தாய்க்கு மனம் கேட்கவில்லை.
“எப்படி ஆச்சுடா சபரி? சாம்பார் ஊத்துறப்ப நீ கையக் கொஞ்சம் தள்ளி வச்சிருக்க வேணாம்? சூடா இருக்குன்னு தெரியாது உனக்கு?”
பதறிய குரலில் கேட்டார் சீனிவாசன்.
“அப்பா, நான் சரியா தான் வச்சிருந்தேன். மீனா தான் ஏதோ யோசனையில இருந்திருப்பா போல. நான் போதும்னு சொல்லியும் அவ பாட்டுக்கு ஊத்தினா. என் கை இருக்கிறதைக் கூடப் பாக்காம அதிலேயே அப்படியே கொதிக்கிற சாம்பாரை ஊத்திட்டாப்பா. நான் என்ன பண்ண முடியும்?”
ஏற்கனவே அவன் செய்த செயலில் அதிர்ந்து போயிருந்தவள், அவன் கூறியதைக் கேட்டு மேலும் அதிர்ந்து போனாள்.
ஆனால் அவளுக்கு மேலே, மகன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போய் அவளைப் பார்த்தனர் சீனிவாசனும் மாலதியும்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அடப்பாவி சபரி நீ பண்ற டார்ச்சர் போதாதுன்னு … உன் அப்பா அம்மாவை உசுப்பேத்துற …
உங்களின் ஆர்வமிக்க விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 😊
அவளது செயல்களை வேண்டும் என்றே தவறாக சித்தரிக்கின்றான்.
மருமகள் மீது தவறான புரிதல் தொடங்கிவிட்டது.
தன்னை காயப்படுத்தியேனும் அவளுக்கு அவப்பெயர் ஏற்படுத்த துடிக்கிறான்.
சபரியின் செயல்களுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் மேலிடுகிறது.
உங்களின் இந்த ஆர்வமிக்க விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 😊
எதனால அவன் இப்படி நடந்துக்கிறான்னு தெரியலையே
மிக்க நன்றி 😊
பிரமாதமான புருஷன் கிடைச்சிருக்கான்.
வாழ்க வளமுடன்.
நீ எல்லாம் ஒரு மனுஷனாடா? எருமை இப்படியா அந்தப் பெண்ணை உன் பெற்றவர்கள் முன்பு வதைப்பது?
இதுக்கு எல்லாம் சேர்த்து பின் ஒரு நாள் நல்லா அனுபவிப்பே…
மிக்க நன்றி 😊