Loading

அனலெனத் தகதகக்கும் பாலை வனத்தில் நடந்து கொண்டிருந்தேன். தாகம் உயிரைக் குடிக்க ஆரம்பித்திருந்தது. வெண் மணலின் அனல் சிறிது நேரத்தில் உடலைச் சாம்பலாக்கக் காத்திருந்தது. கானல் நீர் காட்சிகள் உயிர் பிச்சை அளிப்பது போல் தோன்றி, அருகில் சென்றவுடன் ஏமாற்றி மறைந்தன. கரைகளற்ற கடல் போல், மணல் பரப்பு மனதைப் பதறவைத்தது. சுடு காற்றில் தோள்கள் பிளக்க ஆரம்பித்தன. பாழாய்ப் போன பாதங்கள் செயலிழந்தது போல் ஆகின.

அமானுசிய மொழிகள், ஊ வென்ற சத்தம் காற்றில் கலந்து வந்து காதுகளை அடைத்தது. கையில் கூறு போடும் கூர் வாளுடன் யாரோ மூச்சிரைக்கப் பின் தொடர்வது போன்ற உணர்வு மனதை நடுங்க வைத்தது. பாலைவன மணலில் முதல் அடி வைத்த போது எப்படியும் கடந்து விடலாம் என எண்ணிய என் எண்ணம் தவிடு பொடியானது போல் உணர்கிறேன்.

சுடும் மணலோடு தாகமும் சேர்ந்தது, தாகத்தோடு உச்சி சூரியன் இணைந்தது. சூரியனோடு கானல் நீர் காட்சிகள் இணைந்து கலங்கடித்தது. “ஆ… ஏதோ என் விழிகளிற்குப் புலப்படுகிறதே. அதோ அதோ நீர்” .. ஆகா தண்ணீர் நிரம்பிய குவளை மண்ணில் புதைந்து கிடக்கின்றது. “என் உயிர் இனி பிழைத்துவிடும்”. மனதில் பரவிய பரவசம் மணல் சூட்டை மறக்க வைக்க, ஒட்டிக் கொண்டு போராடும் உயிரை மீட்க, சாம்பாலாகிப் போன கால்களை இழுத்துக் கொண்டு நடக்கின்றேன். கண்களின் பார்வை மங்கியதா, காட்சிப் பிழையா என அறியா வண்ணம் என்னை விட்டுத் தள்ளி தள்ளிச் செல்கிறது குவளை.” பராவாயில்லை, முடியும் வரை முயற்சி செய்யலாம்” என ஓடுகிறேன். உடல் தளர்கிறது. விழி பிறழ்கிறது. இதோ இதோ வந்துவிட்டாய் என மனம் மட்டும் உயிரைக் காக்க போராடுகிறது. ஆகா விழிகள் ஒளி கொள்கின்றன. இன்னும் பத்து அடி தூரத்தில் குவளை. ஓடிச் சென்று கால்கள் தடுமாற அதன் அருகில் விழுந்தேன். “ஆ..அது.. அது நீர்க் குவளை அல்ல. என்றோ உடைந்து மண்ணில் புதைந்து மின்னிய உடைந்த கண்ணாடியின் பகுதி.”

தாளாத தாகம், முடியத் துடிக்கும் மூச்சு இவற்றையெல்லாம் தாண்டி ஏமாற்றமே பெரிதாய் இருந்தது. இனி ஒரு அடியும் எடுத்து வைக்க இயலாது என மனம் சத்தமாய் உரைத்தது. இனம் புரியா கோபமும் எழுந்து கண் முன் தாண்டவமாடியது.
உடல் சோர்வை விட உள்ளச் சோர்வு அடுத்த அடி வைக்க விடாமல் தடுத்தது. ஏமாற்றம், கோபம், இயலாமை எல்லாம் ஒன்று சேர்ந்து, நடக்கிறேன் என எழ முயன்ற உடலையும் மண்டி போட வைத்து ஏதோ சாதித்ததாய் மகிழ்கிறது. இறைவனின் நாமத்தை துதித்த என் நா ஏதேதோ வார்த்தைகளை உளறியது. ஒரே நொடியில் ஆத்திக எண்ணம் கொண்ட மனம் தேர்ந்தெடுத்த நாத்திகனாய் மாறி இறை நம்பிக்கையை எள்ளி நகையாடியது. இறப்பின் நொடி நெருங்குவது கண் முன்னே தெரிய பார்வை மங்குகிறது.

இது தான் கடைசி மூச்சென்று எண்ணும் நொடியில், விழிமூட எத்தனிக்கும் அக்கணத்தில் ஏதோ ஒரு ஒளிக்கற்றை விழிகளின் முன் நிழலாடுகிறது. என் கண் பிரகாசித்து நிற்கும் அதனை, திறக்க இயலா கண்களில் சிரமப்பட்டுக் காண்கிறேன்.

“எழு எழு” என மனதோடு போராடிக் கொண்டிருந்த உடலோடு, மனம் இப்போது சமாதானம் உரைப்பது போல் தெரிகிறது. ஆனாலும், விழி திறக்க மறுக்கிறது. சட்டென என் வாழ்வின் இனிமையின் அம்சமான என் தாயின் குரல் என் செவிகளுக்குள் இன்னிசை பாடுகிறது.

போன உயிர் மீண்டது போல் மனதில் உற்சாகம் பிறக்க, இமைகளைத் திறக்கிறேன். இப்போது கண் முன்னே அன்பின் ஊற்றான அம்மா நிற்கிறாள். துள்ளிக் குதிக்க முயற்சித்தேன். என் கை, கால்கள் அசைகின்றன. சுட்டெறித்த மணல் பஞ்சு மெத்தையாகியிருந்தது. மொத்தமாய் உடலை அசைத்தேன். என் உடல் என் கட்டுப்பாட்டிற்கு வந்தது. முழுவதுமாய் இமைகளை விரித்தேன். பாலை வனம் சர சரவென அழிந்து என் வீட்டின் அறையாகியது. நீல வானம் மறைந்து காற்றாடி சுற்றிக் கொண்டிருந்தது. புரியாமல் விழித்தேன். அம்மாவின் கோப முகம் விளக்கியது நான் பார்த்த அத்தனையும் கனவு என்று.

இது போன்றதொரு கனவினைக் கண்டு, பின் அது வெற்றுக் கனவு தான் என்று அறிந்த பின் மனதிற்குள் எழும் சொல்ல இயலா நிம்மதி இன்று எழவில்லை. ஏனென்றால், அக்கனவு என் மனம் முழுவதிலும் வியாபித்து இருந்தது. இன்று கனவாயினும் என்றோ ஒரு நாள் நிஜமாகிவிடுமோ என மனம் ஏனோ என்னை அச்சுருத்தியது.

மெதுவாய் எழுந்து கண்ணாடி முன் சென்று நின்றேன். கடைசியாய் விழிகளுக்குள் தெரிந்த அப்பிம்பத்தின் ஒளி என் மனதில் பதிந்திருந்தது. ஆனால் அது என்ன உருவமென்று விழிகளுக்குத் துளியும் நினைவில்லை. போராட்டம் நிறைந்த அக்கனவு என்னை உருக்குலைத்தது. கனவின் முடிவறியாமல் மனம் தத்தளித்தது. நான் பிழைத்தேனா, இறந்தேனா, அப்பாலைவனத்தைக் கடந்தேனா என அறிய மனம் ஏங்கியது. கனவின் பலன் சொல்லும் புத்தகங்களைத் தேடிப் படிக்கின்றேன். நாட்கள் கடந்தன, கனவின் நினைவு குறையத் துவங்கியது. ஆனால், அக்கனவிற்கும், நிகழும் வாழ்விற்கும் தொடர்பிருப்பதைப் போல் மனம் உரைத்தது. ஆழ்மன எண்ணம் நிஜமாவது போல் சோலை வனத்தில் இருந்த நான் விதியின் விளையாட்டில் பாலைவனத்தில் நிஜத்தில் பயணிக்க ஆரம்பித்தேன்.

சரியாகச் சென்று கொண்டிருந்த வேலை நிறுவனத்தின் நஷ்டம் காரணமாக எதிர்பாராமல் பறிபோனது. அதே சமயம் உயிரெனக் காதலித்த காதலி சண்டையிட்டுப் பிரிந்து சென்றாள். உறவுகளின் பரிதாபப் பேச்சுக்களும், கேலிப் பேச்சுக்களும் வேதனையளித்தன. மகிழ்வில் திளைத்த குடும்பத்தில் சிரிப்புச் சத்தம் எட்டாக் கனியாய்ப் போனது.

உறக்கத்தில் கண்ட கனவு உண்மையில் நிகழ ஆரம்பித்தது. பாலைவனமாய் என் மனமே மாறி என்னைச் சுட்டு எறித்தது. அக்கனவின் மேல் கோபம் வந்தது. நிஜத்திலும் நாத்திக வாதியாய் மனதிற்குள் வாதாடினேன். ஒரே சமயத்தில் அத்தனையும் இழந்த வேதனை உயிரை வாட்டியது.

அக்கனவை மீண்டும் மீண்டும் நினைக்கிறேன். கனவின் இறுதியில் கண்முன் நிழலாடிய ஒளிக்கீற்று யாதென சிந்தித்துச் சிந்தையை கசக்குகின்றேன். அவ்வொளிக்கற்றைக்கான அர்த்தம் என்ன. தேடித் தேடிப் பார்க்கிறேன். பதில் இல்லை. மணலில் கால்கள் புதையுண்டது போல் வலுவற்றுக் கிடக்கின்றேன். தூக்கமில்லா துன்பம் நிறைந்த இரவுகள் என் மேல் இறக்கம் கொண்டு ஓர் இரவை தானம் வழங்குகின்றன.

மூடிய விழிகள் காட்சியைக் காண மீண்டும் அதே கனவு என் விழிகளுக்குள் படமாகிறது, மீண்டும் அதே பாலைவனம், அதில் தவிக்கும் நான். இன்றோ என் கனவிற்குள் கனவைத் தேடுகின்றேன். ஒளிக்கீற்றைத் தேடி அனல் கக்கும் மணலில் ஓடுகின்றேன். அதோ அதோ ஒளிக்கீற்று. அதற்குள் இருக்கும் உருவம் மெல்ல மெல்ல பிம்பமாகிறது. இதோ அதன் முழு உருவமும் என் கண்களுக்குள் புலப்பட்டுவிட்டது. என் கண்முன்னே அந்த உருவம் நடந்துசெல்கிறது. நன்றாய் விழித்துப் பார்க்கிறேன். ஆம் ஆம் அது மனித உருவமே, ஆனால் ஒற்றைக் கால் மட்டுமே அதற்கு உள்ளது. உடல் உருகும் போதும், ஒற்றைக் காலில் சுடு மணலைக் கடக்க அது விடாமல் முயற்சிக்கிறது. குனிந்து பார்த்தேன் வலியைப் பகிர்ந்து கொள்ள இரு கால்கள் என்னிடம் இருந்தன. ஆனால், அவற்றின் மீது நம்பிக்கை கொள்ளாது இருந்தது கண்டு வெட்கி அவற்றிடம் மன்னிப்பு வேண்டுகிறேன். உன்னால் முடியும் என அனைத்து திசைகளும், காற்றும், மணற்துகள்களும் ஊட்டமளிக்கின்றன. மெல்ல எழுந்து கால்களின் நீளத்தைக் கூட்டி ஓடுகின்றேன். என் கண் முன்னே அந்த ஒற்றை உருவமும் மணலைத் தாண்ட முயல்கிறது. அத்தோடு மீண்டும் கனவு முடிந்து பொழுதும் மலர்ந்தது.

இன்றும் ஏமாற்றம் நிறைந்திருந்தது. ஆனால், ஒரு மூலையில் நம்பிக்கை துளிர் விட்டிருந்தது. எனினும், கனவின் முடிவைத் தெரிந்து கொள்ள பெரும் ஆவல் எழுந்தது. இரவிற்காகக் காத்திருந்தேன். உறக்கம் வந்தாலும் கனவு வரவில்லை. நாட்கள் கடந்தன கனவைத் தேடி தேடி ஏமார்ந்து போனேன். மீண்டும் இரவுகள் நீளமாயின.

காதலியிடம் கெஞ்சினேன். அவள் முற்றிலுமாய் விலகிப் போனாள். காதலியின் நினைவுகள் கண்ணீரைப் பரிசளித்தன. கண்ணாடி முன் நின்றேன். கட்டான முழுமையான உடல் ஆனாலும் பெரும் குறை என்னில் இருப்பதாய் பிம்பம் உணர்த்தியது. நீண்ட நேரம் குறையைக் கண்டறிய மனதைப் பிசைந்தேன். சட்டென அந்த ஒற்றைக் கால் மனிதன் கண் முன் வந்தான். அவனிடம் இருப்பது தான் என்னிடம் இல்லை என மனம் சொன்னது. என்னிடம் இருக்கும் இரண்டு கால்கள், அவனிடம் தான் இல்லை என மூளை வாதாடியது.

மீண்டும் சிந்தைக்குள் புகுந்தேன். நான் தளர்வுற்ற போதும் அவ்வுருவம் முன்னேறிச் சென்றது நினைவிற்கு வந்தது. “எனில் எனில் என்னிடத்தில் தான் குறை”. சிந்தித்தேன். ஆம் ஆம் அதே தான் நம்பிக்கை எனும் ஒன்றை என் மனம் கொண்டிருக்கவில்லை. அதுவே அம்மனிதனிடத்தில் மேலோங்கியிருந்தது என்பது மூளைக்கு விளங்கியது.

மீண்டும் நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்தது. பத்து நிறுவனங்கள் ஏறி இறங்கி தோல்வி தந்த வெறுப்பில் விட்டெறிந்த சான்றிதழ்களை மீண்டும் எடுத்தேன். காதலியின் நினைவுகளை ஒட்டகம் நீரைச் சேமிப்பது போல் மனதின் ஒரு ஓரத்தில் சேமித்தேன். திறமை மீது நம்பிக்கை கொண்டு மீண்டும் நடையைத் துவக்கினேன். இப்போதும் கையெடுத்த முயற்சிகள் பாலைவன மணலாய் சுட்டது. ஏமாற்றமே மிஞ்சியது. கிடைத்த தோல்விகளைக் கொண்டு அனுபவம் எனும் படிக்கட்டுகளைக் கட்டினேன். மெல்ல ஏறினேன். தோல்விகள் ஆயிரம், லட்சம் அனுபவங்கள் தந்தன. சேர்த்து வைத்த அனுபவங்கள் இதோ இன்று என் நம்பிக்கையை இழக்கச் செய்யவில்லை. முன்பை விடப் பெரிய நிறுவனத்தில் நினைத்துப் பார்க்காத ஊதியத்தில் வேலை கிடைத்து அமர்ந்தேன். ஒடிந்து விழுந்த உடலில் இரு கைகள் மீண்டும் சேர்ந்தது போல் இருந்தது. ஆனால், காதலியின் நினைவுகள் ஆழ் மனதில் இருந்து இன்னும் வருத்தத்தான் செய்தன. அவளைத் தேடிச் செல்ல நினைத்து மனதைக் கட்டுப்படுத்தினேன். நடுநிசி நேரங்களில் விட்டில் பூச்சியாய்த் துடித்தேன்.

அவளே ஒரு நாள் என்னைத் தேடி வந்தாள். மனம் துள்ளிக் குதித்தேன். உடைந்து விழுந்த அத்துனை உடல் பாகங்களும் மீண்டும் இணைந்தது போன்ற இன்பம் கொண்டேன். ஆனாலும் இடர் கடந்த நாட்களில் அறிந்து கொண்டேன், அவள் காதலித்தது என்னை அல்ல என் கையில் தவழ்ந்த அச்சடித்த காகிதங்களை என. தேடி வந்தது என் காதலி அல்ல முகமூடி கழன்று விழுந்த ஒரு மங்கை என்பதை அறிந்தேன். அவளின் மனதைக் காயப்படுத்த எண்ணமில்லை. அவளிடம் ஒன்றை உரைத்தேன். “மறுபடியும் ஒரு நாள் நான் தோற்பேன், நீ விட்டுச் செல்வாய்” என்றேன்.

“இல்லை என்றும் செல்ல மாட்டேன்” என்று நம்பிக்கை உரைத்தாள்.

மெதுவாய்ப் புன்னகைத்தேன். “இந்நம்பிக்கையின் அவசியம் துவளும் சமயங்களிலே அவசியமாகிறது. இப்போது அந்நம்பிக்கையையே நான் காதலிக்கின்றேன்” என்றேன்.

தலைகவிழ்ந்து சென்றாள்.

எனினும், அவளின் நினைவுகள் சமயத்தில் கொன்றன. ஆனாலும் நிஜங்கள் ஆறுதல் உரைத்தன.

காலம் காயங்களைத் திவ்யத்துவம் பொருந்திய மருந்தாய்க் குணப்படுத்தியிருந்தது. ஆனாலும், அக்கனவின் முடிவை அறிய மனம் இன்றும் ஏங்கியது. அப்பாலைவனத்தை நான் கடந்தேனா என்பதை விட, அவ்வுருவம் கடந்ததா என அறிய பேராவல் கொண்டு கனவின் முடிவிற்காக ஒவ்வொரு இரவுகளையும் அற்பணிக்கின்றேன். உறக்கமில்லாது கடந்த இரவுகள் ஒரு நாள் என் மனதையே கனவை கற்பனை செய்ய வற்புறுத்தின.

கண்ட கனவை நினைவில் நிறுத்தி, அது நின்ற இடத்தில் இருந்து என் கற்பனையைத் துவங்கினேன்.

இதோ எனக்கு நம்பிக்கை அளித்த அந்த மனிதன் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறான். நானும் அவனைப் பார்த்துப் பார்த்து மணலின் சூட்டிற்கு பழகிக் கொள்ள ஆரம்பித்தேன். உடல் வலி, ஊசலாடும் உயிர் இவையெல்லாவற்றையும் நம்பிக்கை என்ற ஒன்று தாங்கி இருந்தது. அது அளித்த தைரியத்தில் தொடர்ந்து முன்னேறினேன். கால்கள் வலுவிழந்தது ஆனால் கண்கள் பூப்பூத்தன. இதோ சில அடி தொலைவில் பாலைவனச் சோலை வந்துவிடப் போகிறது. என் கண்முன்னே அழகு கொஞ்சும் ஈச்ச மரங்கள், சிறு சிறு குடில்கள், அசை போடும் ஒட்டகங்கள்.

என் வேகம் அதிகரித்தது. அம்மனிதனை முந்திச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. ஆனால், அவனைச் சந்திக்க வேண்டும் என்ற பெரும் ஆவல் எழுந்து கால்களை ஓட வைத்தது. இதோ ஒரு கால் பாலை வனத்தில் சுட்டெரிக்க, மறு காலை சோலை வனத்தில் ஊன்றினேன். பிரிந்த உயிர் மீண்டது போல் இருந்தது. அன்பு பொங்கும் முகங்கள் என்னை கைத்தாங்களாய்ப் பற்றி நீர் அளித்தனர். உயிர் காக்கும் அமிர்தம் தந்த தேவதைகளாய் அவர்கள் தெரிந்தனர். ஒருவர் பிளவு கண்ட என் பாதங்களிற்கு மருந்திட ஆரம்பித்தார். வேண்டாம் என்று தடுத்தும் அவர் புன்னகை பூத்து என்னை வெல்கிறார். அருகில் நின்ற ஒட்டகமும் என்னை வாஞ்சையாய்ப் பார்த்து என் உடலை ஆதரவாய்த் தழுவுகிறது. பசி கொண்ட வயிற்றிற்கு தட்டு நிறைய பண்டங்கள் அடுக்கப்படுகின்றன. ஆனால், தவித்து அடங்கிய என் மனம் அந்த ஒற்றைக் கால் உருவத்தைத் தேடுகிறது. அவர்களிடம் வினவினேன், “எங்கே அம்மனிதர்” என.
“யார்” என்றனர் அவர்கள் விழித்தபடி. அவரின் தோற்றத்தை விவரித்து. “அவரே, எனக்கு நம்பிக்கை அளித்து என்னை இச்சோலைவனத்தை அடைய வைத்தார்” என்றேன்.

புன்னைகை பூத்தன அங்கிருந்த முகங்கள்.

மீண்டும் எங்கே அவர் என்றேன்.

மீண்டும் புன்னகைத்தவர்கள் “எங்கும் இருக்கலாம்” என்றனர்.

புரியாமல் நான் விழித்தேன்.

“இடர்களில் சிக்கும் நல்லுயிர்களைக் காக்க இறைவன் நிழலாய் என்றும் நிறைந்திருப்பார். இறைவன் ஒளி வீசும் விழிகள் கொண்டு பளபளக்கும் மேனியுடன் சிற்பங்களில் காண்பது போல் மட்டும் இருப்பதில்லை. சமயங்களில் விலங்காகவும், பறவையாகவும், பூச்சியாகவும் இதோ இங்கனம் ஒற்றைக் கால் மனிதராகவும் வந்து வழிகாட்டுகிறார்” என்றனர்.

“எனில் நான் கண்டது இறைவனா?”, என் விழிகள் பனித்தன. இடர் தரும் வேளையில் இறைவனை வஞ்சிக்கும் மனம் அறிவதில்லை, இடரோடு இறைவன் அளிக்கப்போகும் அழிக்க இயலா வரங்களை என என் மனம் புரிந்து கொண்டது. காரணம் இன்றி இடர்கள் தரப்படுவதில்லை, ஏதோ ஒரு அற்புதம், அதிசயம், அர்த்தம் அதில் ஒளிந்திருக்கும், வருகின்ற இடர் ஒளிந்து கிடக்கும் இவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான ஒரு வாய்ப்பு என்பதை அறிந்தேன்.

கற்பனையாய் துவங்கி கனவாய் முடிந்த கனவினிலிருந்து மெல்லக் கண் விழித்தேன். வேலைக்காகவும், தூய்மையற்ற ஒரு காதலைப் புரிய வைக்கவும் இறைவன் அளித்த இடர் அவை என அன்றொருநாள் சிந்தித்திருந்தேன். ஆனால், இன்று தான் புரிந்தது. நம்பிக்கை எனும் இணையற்ற வரத்தை என் மனதில் நிரந்தரமாய் விதைக்க இறைவன் அழைத்துச் சென்ற பாதைகளே அவை என. மனம் லேசாகி இருந்தது. கனவில் உதவியவர்களின் முகங்களைத், துவண்டு கிடக்கையில் ஆறுதல் மொழி உரைத்து உடன் வந்த நண்பர்களின், உறவுகளின் முகங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். ஒன்று மட்டும் தெளிவாய் விளங்கியது. உலகம் எப்போதும் பேரழகானது தான், புயல் வரும் போதும் நம்பிக்கை கொண்டு தென்றலிற்காகக் காத்திருக்கும் மனதைப் பெற்றுவிட்டிருந்தால்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. சிறந்த படைப்பு சிஸ்..நம்பிக்கை என்னும் வித்தை அனைவரிலும் பதிக்கும் படைப்பு..முகமூடி கழன்ற மங்கை அருமையான வார்த்தைக் கோர்வுகள்..நம்பிக்கையையே நான் காதலிக்கிறேன்👌👌👌..கருத்தான அழகிய படைப்பு.. வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐💐💐