Loading

அதியனை மருத்துவமனையில் சேர்த்து விட்டு யதுநந்தன் திரும்பி விட, வனிஷா அவனைப் பார்த்தாள்.

“எப்படி இருக்காங்க?”

“டயர்ட்ல போகும் போதே மயங்கிட்டார். டாக்டர் கிட்ட ஒன் ஹார் பர்மிஷன் கேட்டு வந்துருக்கார். இங்க கல்யாணம் அது இதுனு நேரம் போயிடுச்சு. இப்ப ஓகேவாகிட்டாரு.”

“அவருக்கும் மகாலட்சுமிக்கும் என்ன பிரச்சனை? உண்மையாவே லவ் பண்ணாங்களா? நான் வேற சொந்தக்காரவங்க கிட்ட எல்லாம் கதை அளந்து வச்சுருக்கேன்”

“அதையே நம்பட்டும். இத பத்தி இப்ப பேச வேணாம்”

“ம்ம்.. நாங்க எல்லாம் கல்யாணமாகி ஒரு மாசம் வரையும் கூட புருஷன் மூஞ்சிய ஒழுங்கா பார்க்க வெட்கப்படுவோம். இப்ப இருக்க புள்ளைங்கள பாரு.. காதலிக்கிறேன்னு சொல்லுதுங்க. கல்யாணம் பண்ண அன்னைக்கே தனியா போய் நின்னு பேசுதுங்க. வெட்கம் கெட்டதுங்க”

பேச்சு காதில் விழுந்ததுமே புரிந்து விட்டது. பேசுவது காஞ்சனா என்று. வனிஷா “ஸ்டுப்பிட்” என்று விட, யது அவளை அதிர்ந்து பார்த்தான்.

“யார சொன்ன?”

“வேற யார? கிருபா அண்ணி மாமியாரு தான்” என்றவள் எட்டிப்பார்த்து விட்டு, “இவங்க கூட எப்படித்தான் கிருபா அண்ணி வாழுறாங்களோ? இரிட்டேட் பண்ணிக்கிட்டு” என்று சலித்துக் கொண்டாள்.

அதற்குள் காஞ்சனாவின் பேச்சைக் கேட்டு விட்டு வசந்தா மருமகளை தேடி வந்து விட்டார்.

“வானு.. இங்க வாமா” என்று கையோடு அழைத்தும் சென்று விட்டார்.

அதன் பின்பு வனிஷாவும் யதுநந்தனும் பேசிக் கொள்ளவில்லை. ஏகப்பட்ட வேலைகள் இருக்க நேரம் பறந்தோடியது.

வசந்தா முதலிரவு பற்றி யோசிக்க, “வேணாம்மா” என்றாள் கிருபா.

“என்ன வேணாம்? சாதாரணமா நடக்குறது தான?”

“கல்யாணம் சாதாரணமா நடந்துச்சா? வனிஷா யாரு கிட்டயும் பேசக்கூட மாட்டா. இன்னைக்கு என்னவோ நிறைய பேசிட்டு இருக்கா. கொஞ்சமாச்சும் அவ யது கூட பழகட்டும். சும்மா எல்லாத்தையும் ஃபோர்ஸ் பண்ணக்கூடாது. அத விட முக்கியமா இன்னொன்னு இருக்கு. இங்க ரெண்டு ஜோடிக்கு கல்யாணம் ஆகி இருக்கு. ஒருத்தர் ஹாஸ்பிடல்ல இருக்கும் போது, நாம இதெல்லாம் பண்ணா நல்லா இருக்குமா? ஃப்ரியா விடுங்க”

கிருபா விளக்கமாக கூறவும், வசந்தாவும் அமைதியடைந்தார்.

மகாலட்சுமி இரவு வீட்டுக்கு வந்து விட்டாள். நாளை காலையில் அதியன் மருத்துவமனையில் இருந்து வந்த பிறகே, அவளைக் கொண்டு சென்று அதியனின் வீட்டில் விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர்.

வனிஷாவின் உடைகளை மட்டும், அவசரமாக எடுத்து வந்து அவள் கையில் திணித்தார் மலர்விழி. முன்னேற்பாடு இல்லாமல் அல்லவா அவளது திருமணம் நடந்து விட்டது.

மலர்விழி கொடுத்ததை வாங்கி வைத்தவள், “உங்களுக்கு இந்த கல்யாணம் ஓகே தானமா?” என்று விசாரித்தாள்.

மலர் விழி புன்னகைத்து விட்டு, “உனக்கு ஓகேனா எனக்கும் ஓகே” என்றார்.

“அப்போ டபுள் ஓகே” என்று கண்ணடித்தவள், “நைட் ட்ரஸ் இருக்கா?” என்று உடையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

“இருக்கு. நாளைக்கு மத்தத கொண்டு வரலாம்னு இப்ப தேவையானத எடுத்துட்டு வந்தேன். சரி நான் கிளம்புறேன். உன் பாட்டி வேற காலையில இருந்து பிரஷ்ஷர ஏத்திட்டு சுத்துறாங்க. போய் பார்க்குறேன்”

“ஓகே மா. குட் நைட்” என்று மலரை அனுப்பி விட்டு, கட்டியிருந்த சேலையை மாற்றி, இரவுக்கு அணியும் தொளதொளவென ஒரு டீசர்ட்டும் தொளதொளவென இருக்கும் பேன்ட்டும் அணிந்து கொண்டாள்.

அப்போது தான் அவளுக்கு மூச்சே வந்தது.

“எப்படித்தான் தினமும் இந்த சேலைய கட்டிட்டு சுத்துறாங்களோ? ஹெவி வெயிட்” என்று புலம்பிக் கொள்ள, “என்ன தனியா பேசிட்டு இருக்க?” என்று கேட்டுக் கொண்டே வந்தான் யதுநந்தன்.

“ஒன்னும் இல்ல. சேலைய மாத்தவும் கொஞ்சம் ஃப்ரியா இருக்கு.. அதான் யோசிச்சுட்டு இருந்தேன்”

அவளை மேலிருந்து கீழ் பார்த்தான். அவளது முக அலங்காரத்துக்கும் உடைக்கும் சம்பந்தமில்லாமல் இருக்க, சிரிப்பு வந்தது. அதை அடக்கிக் கொண்டு கதவை அடைத்து பூட்டி விட்டு உள்ளே வந்தான்.

அவளது உடை இருக்கும் பை கண்ணில் பட, “இத உள்ள வைக்க வேண்டியது தான?” என்று கேட்டான்.

“கபோர்ட்ல இடம் இல்லயே. எங்க வைக்கிறது?”

“இல்லயா?” என்று சந்தேகமாக கேட்டவன் அலமாரியை திறந்து பார்க்க, அவனது உடைகள் நிறைந்து வழிந்தது.

அதைப்பார்த்து பதில் சொல்ல முடியாமல் விழிக்க, “விடுங்க. நாளைக்கு என்னோட எல்லா டிரஸ்ஸும் எடுத்துட்டு வந்துடுவேன். அப்புறமா இத பத்தி யோசிக்கலாம்” என்றாள்.

“அதுவும் சரி தான். புதுசா வேணா ஒன்னு வாங்கி வச்சுடலாம்” என்றவன் தன் உடையை எடுத்துக் கொண்டு, மாற்றச் சென்று விட்டான்.

அவன் திரும்பி வரும் போது தன் தலையலங்காரங்களை களைத்து விட்டு, முகத்தை துடைத்துக் கொண்டிருந்தாள்.

“நீ ஏன் மேக் அப் போட்டுக்குற வனிஷா?” என்று யது கேட்க, கண்ணாடி வழியாக அவனைப்பார்த்தவள், “ஏன்?” என்று புன்னகைத்தாள்.

“இல்ல.. நீ சும்மாவே அழகு தான். மேக் அப் போட்டு தான் நீ அழகாகனும்னு இல்லையே?”

“எனக்கு இது பிடிச்சுருக்கு. அதான் போட்டுக்கிறேன்”

புன்னகை மாறா முகத்துடன் அவள் கூற, யதுநந்தன் தலையாட்டிக் கொண்டான்.

“பிடிக்கும்ல? அப்புறம் ஏன் துடைக்கிற?”

“இதோட நைட் படுக்க கூடாது. துடைச்சுடனும்”

“இது ஸ்கின்க்கு நல்லது இல்லனு கேள்விப்பட்டு இருக்கேன்”

“நல்ல ப்ராடெக்ட்டும் இருக்கு” என்று கூறியவள் எழுந்து சென்று முகத்தை நன்றாக கழுவி வந்தாள்.

தலை முடியை ஒரு ஹேர் பேன்டில் அடக்கி விட்டு, மீண்டும் ஒன்றை எடுத்து முகத்தில் பூச ஆரம்பித்தாள்.

“இப்ப தான் அழிச்ச. திரும்ப போடுற?”

“இது நைட் க்ரீம். போட்டுக்கிட்டா நல்லா இருக்கும்”

“எத்தனை? ஒன்னு நைட் போட்டு இருக்க கூடாது. ஒன்னு நைட் மட்டும் போடுறது.. முடியல போ”

வனிஷா அவன் கூறிய பாவனையில் சிரித்து விட்டாள்.

“நிறைய டைப் இருக்கு. உங்களுக்கு இது பத்தி தெரியல அவ்வளவு தான்”

“தெரியாது தான். ஆம்பளைங்களுக்கு இதெல்லாம் எங்க விக்கிறாங்க? தெரிஞ்சுக்க?”

“ஏன் ஜென்ட்ஸுக்கும் இருக்கே. இல்லனு யார் சொன்னா?”

“இருக்கலாம். ஆனா பத்துல ஒன்பது ஆட் லேடிஸ் மேக் அப் ஐட்டம்க்கு தான் வருது. ஜென்ட்ஸ்க்கு ஒன்னே ஒன்னு அதுவும் பர்ஃபியூம்க்கு வருது. இது பத்தி எப்படித்தெரியும் சொல்லு?”

கையை விரித்து உதட்டை பிதுக்கி அவன் கேட்க, வனிஷா மெல்லிய சிரிப்போடு தலையாட்டி வைத்தாள்.

“வேணும்னா.. நான் இப்ப தர்ரேன். அப்ளை பண்ணிக்கிறீங்களா?” என்று ஒன்றை எடுத்து ஆட்டிக் காட்ட, உடனே மறுத்தான்.

“வேணாம்மா.. நான் இருக்க லட்சனமே போதும். இதுக்கு மேல அழகாகி என்ன செய்ய போறேன்? கல்யாணம் கூட ஆகிடுச்சு. நோ தாங்க்ஸ்”

“கல்யாணம் ஆகிட்டா அழகா இருக்க கூடாதா?” என்று கேட்டவள், எல்லாவற்றையும் எடுத்து அடுக்கி வைத்தாள்.

சிறு நாற்காலியில் தான் அத்தனையும் இருந்தது. அதை எல்லாம் எடுத்து ஒரு பெட்டியில் வைத்து பூட்டினாள்.

“அப்படி சொல்லல. ஆனா நீ கேள்வி பட்டது இல்ல? கல்யாண வாழ்க்கையில சந்தோசமா இருக்கவங்க, தங்களோட அழக பத்தி பெருசா கேர் பண்ணிக்க மாட்டாங்களாம். அவங்க எப்படி இருந்தாலும் பார்ட்னருக்கு பிடிக்கும். சோ பெருசா மெனக்கெட்டு மத்தவங்கள இம்ப்ரஸ் பண்ண மாட்டாங்களாம்”

“இது புதுசா இருக்கே.. அப்போ நீங்க பெருசா மெனக்கெட்டு அழகு படுத்திக்க மாட்டீங்க?”

யதுவின் அருகே வந்து பார்வையில் கூர்மையும் உதட்டோரம் அடக்கிய சிரிப்புமாக வனிஷா வினவ, “அப்படி சொல்ல முடியாது. பாயிண்ட்ட நமக்கு ஏத்த மாதிரி மாத்திக்கலாம். நாங்க எங்க பார்டனர தினம் தினம் இம்ப்ரஸ் பண்ணுறதுக்காவே அழகா காட்டிப்போம்னு மாத்திக்கலாம். யாரு கேட்பா?” என்று கையை விரித்தான்.

அவனது பல்டியில் வனிஷா அடக்கமாட்டாமல் சிரித்து விட்டாள்.

“நேரத்துக்கு ஏத்த மாதிரி ரூல்ஸ் மாத்திப்பீங்க போலயே?”

யதுநந்தன் கண்ணடித்து அதை ஆமோதித்து விட்டு, “தூங்கலாமா? காலையில இருந்து டயர்ட்” என்றான்.

வனிஷா மெத்தையை பார்த்தபடி நிற்க, “என்ன?” என்று விசாரித்தான்.

“நான் இந்த சைட் தான் தூங்குவேன்”

“ஓகே.. படுத்துக்கோ” என்று அவளுக்கு விட்டுக் கொடுத்து விட்டு, மறுபக்கம் சென்று படுத்துக் கொண்டான்.

வனிஷா தலையில் இருந்த ஹேர் பேன்ட்டை கழட்டி வைத்து விட்டு, அவனை திரும்பி பார்த்தாள்.

“தூக்கத்துல உருளுவீங்களோ?”

எதோ சொல்ல வந்தவன் அதை நிறுத்தி, “தெரியாதே” என்றான்.

“தெரியாதா?”

“யாரும் என் கூட தூங்குனது இல்ல. அதுனால உருளுவேனானு தெரியாது. சொன்னது இல்ல”

அவனை கூர்ந்து பார்த்தவளுக்கு, சட்டென விசயம் புரிந்து விட்டது.

உதட்டை கடித்து சிரிப்பு அடக்கியவள், ஒற்றை விரலை நீட்டி பத்திரம் காட்டி விட்டு, “குட் நைட்” என்று திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

அவனுக்கு முதுகு காட்டிப்படுத்தாலும், வனிஷாவிற்கு சிரிப்பு வந்தது.

அவன் இப்போது அருகே வந்து கையைப்போட்டு தூங்கினாலும், அவள் ஏனென்று கேட்க முடியாது. உருள மாட்டேன் என்றால், ஏன் வந்தாய்? என்று கேட்கலாம். உருளுவேன் என்றால், இடையில் எதையாவது வைத்து தடுக்கலாம். எதுவுமே தெரியாது என்கிறானே.

‘இவர போய் அமைதினு ஊரே நம்புது’ என்று நினைத்துக் கொண்டவள், கண்ணை மூடிக் கொண்டாள்.

அவளது மிரட்டலிலும், முதல் முறை காட்டிய வெட்கத்திலும் யதுநந்தன் தான் தடுமாறி விட்டான்.

விளக்கை அணைத்து விட்டு படுத்தவன், “நான் உருண்டு எல்லாம் வர மாட்டேன். தைரியமா தூங்கு” என்று கூற, வனிஷா வாய்விட்டு சிரித்து விட்டாள்.

“நான் ஒன்னும் பயப்படலயே.. அப்படியே உருண்டு வந்தா தரையில தள்ளி விட்டுட்டுப் போறேன்”

“பார்ரா.. தரையில தள்ளி விடுவியா?”

“ஆமா.. இப்பவே போய் தரையில படுங்க. அதான் சேஃப்”

“சீரியல் மாதிரி நம்ம கல்யாணம் நடந்துச்சுனா, அதே மாதிரி தரையில படுக்கனுமா? இந்த விளையாட்டுக்கு நான் வரல. குட் நைட்” என்று திரும்பிப் படுத்துக் கொண்டான்.

வனிஷாவும் சிரித்து விட்டு தூங்க ஆரம்பித்தாள். அருகே புதிதாய் ஒருவர் இருப்பதால், அதன் தாக்கம் இருக்கத்தான் செய்தது. மேலும் சில நிமிடங்கள் கடந்த பின்பு, இருவருமே உறங்கி இருந்தனர்.

அறையில் அமர்ந்திருந்த மகாலட்சுமியின் கையில் தாலி இருந்தது. அதில் இருந்த மஞ்சள் கிழங்கை பார்த்துக் கொண்டிருந்தாள். வனிஷாவின் கழுத்தில் தொங்கிய பொன் தாலியை நினைத்துப்பார்த்தவளுக்கு கோபம் வந்தது.

“என் வாழ்க்கைய பறிச்சுட்டா. இருக்கு அவளுக்கு” என்று கறுவிக் கொண்டவளுக்கு, கழுத்தில் மஞ்சளோடு கிடந்த தாலியை சுத்தமாக பிடிக்கவில்லை.

கழட்டி வீச முடியாத நிலைமையில் இருப்பதால், எரிச்சலாக இருந்தது.

காலையில் அதியன் இதைக்கட்டும் போது, தடுத்து தூக்கி தீயில் போட்டிருக்க வேண்டும் என்று மனம் கூறியது. ஆனால், அதை எல்லாம் அவள் செய்யவே இல்லை. அழுது கொண்டே அமர்ந்து விட்டாளே.

‘இப்படியா நடக்கும்? ச்சை.. இவன காப்பாத்த போனதுக்கு, என் வாழ்க்கை பறி போனது தான் மிச்சம். போதாத குறைக்கு இவனும் தாலிய கட்டிட்டு போய் ஹாஸ்பிடல்ல படுத்துக்கிட்டான். எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்குதோ?’ என்று நொந்து கொண்டாள்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. அவளால் அதியனோடு இயல்பாக வாழ முடியாது. யதுநந்தனை வனிஷாவிற்கு விட்டுக் கொடுக்கவும் முடியாது.

இரவு நெருங்கவுமே உள்ளே தடக் தடக்கென அடித்துக் கொண்டது. யதுநந்தனும் வனிஷாவும் வாழ ஆரம்பித்து விட்டால், அவர்களை பிரிக்கவும் முடியாது. அவளால் யதுவை அடையவும் முடியாது.

“சீரியல் வில்லி மாதிரி ஆகிட்ட மகா” என்று மனசாட்சி குத்திக் காட்ட, “யாரு வில்லி? நான் ஹீரோயின். அந்த வனிஷா தான் வில்லி. எங்கயாச்சும் வில்லி இவ்வளவு அழகான கூந்தலோட அம்சமான குடும்பப் பொண்ணா இருந்துருக்காளா? மூஞ்சில மேக் அப் அள்ளி பூசிக்கிற அவ தான் வில்லி. அந்த வில்லிய ஓட ஓட விரட்டிட்டுற நான் ஹீரோயின்” என்று மனசாட்சிக்கு பதில் சொன்னாள்.

“அவ மேக் அப் போட்டுக்கிட்டு திமிர் பிடிச்சு திரிஞ்சாலும், அவ தான் யதுவோட பொண்டாட்டி. நீ அத ஏத்துக்கிட்டு தான் ஆகனும்” என்றதோடு மனசாட்சி கிளம்பி விட, மகாலட்சுமிக்கு ஆத்திரமாக வந்தது.

‘அந்த வனிஷா யதுவுக்கு பொண்டாட்டினா? அப்ப நான்? நான் அதியனுக்கு பொண்டாட்டியா? நோ.. நோ.. நோ.. என்னால இத ஏத்துக்க முடியாது’ என்று மனதில் பொங்கிய ஆத்திரத்தோடு நினைத்துக் கொண்டிருக்க, கதவை திறந்து கொண்டு பரமேஸ்வரி வந்தார்.

மகளை திரும்பியும் பார்க்காமல் எதையோ எடுத்துக் கொண்டு செல்ல, “ம்மா..” என்று அழைத்தாள்.

அவர் காதிலேயே வாங்காமல் கிளம்பி விட்டார். மகாலட்சுமிக்கு மனம் துவண்டது.

‘அம்மாவே நம்மல புரிஞ்சுக்கலயே’ என்று வருத்தமாக இருக்க, அப்படியே சரிந்து படுத்துக் கொண்டாள்.

மனம் அதியனிடம் சென்றது. இப்போதும் அவனோடு வாழ முடியாது என்று தான் தோன்றியது. அவனோ விவாகரத்து பற்றிப்பேசினால் எரிந்து விழுகிறான். ஆனால் எப்படியாவது பேசி அவனை விட்டு பிரிந்து விட வேண்டும் என்று முடிவு செய்தவள், எப்படிப்பேசுவது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

யோசனையிலேயே அவளது இரவு கடந்து போக ஆரம்பித்தது. ஆனால், அதியன் மருந்து வீரியத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். நன்றாக சாப்பிட்டு மாத்திரைகளை போட்டுக் கொண்டவனுக்கு, வேறு எந்த எண்ணமும் எழவில்லை. நிம்மதியான உறக்கத்தில் இருந்தான்.

நான்கு பேரில் தவித்துக் கொண்டிருந்தது மகாலட்சுமி மட்டும் தான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்