Loading

காரை விட்டு நான்கு பேரும் இறங்க, பாட்டி தாத்தாவின் வீட்டிற்கு தான் முதலில் அழைத்துச் சென்றனர்.

அங்கு ஆரத்தி எடுத்து உள்ளே நுழைய, அது வரை தாக்குப்பிடித்த அதியன் தலைசுற்றலில் தடுமாறி அருகே இருந்த மகாலட்சுமியின் மீது சாய்ந்தான்.

அப்போது தான், மற்றவர்களுக்கும் அவன் உடல் நிலை சரியில்லாதவன் என்பது நினைவில் வந்தது.

“படுக்க வைங்க. தண்ணி கொண்டு வாங்க. மாப்பிள்ளை என்ன செய்யுது?” என்று வரிசையாய் பேச்சுக்கள் எழ, அதியனால் எதற்கும் பதில் சொல்ல முடியவில்லை.

அவனது பாரத்தை மகாலட்சுமியால் தாங்க முடியாததால், ஆண்கள் பிடித்துக் கொண்டனர்.

“ப்பா.. ஹாஸ்பிடல் போயிடலாம். இது வரை தாங்குனதே பெருசு. கிளம்புங்க ” என்ற யது காரை எடுத்து வந்தான்.

அவர்களோடு பாக்கியம் வினோத்தும் கிளம்ப, “வினோத் போகட்டும். நீங்க இங்க இருங்க” என்று பாக்கியத்தை நிறுத்தி விட்டனர்.

தாத்தாவை தவிர, ஆண்கள் எல்லோரும் சேர்ந்து அதியனை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையை அடையும் முன், அதியன் மயங்கி விட்டான்.

மருத்துவர் அலைச்சலுக்கு திட்டினாலும், பெரிய ஆபத்தில்லாததால் எல்லோரும் நிம்மதியடைந்தனர்.

வீட்டில் மணமகன்கள் இல்லாமலே, இரு மணமகள்களும் விளக்கேற்றி முடித்தனர்.

“மாப்பிள்ளை மயங்கிட்டாராம். இப்ப பரவாயில்லயாம்” என்று பாட்டி மகனிடம் விசாரித்து விட்டு மற்றவர்களுக்கு கூறினார்.

எல்லோரும் அசுவாசமடைய, மகா மட்டும், ‘அவனுக்கெல்லாம் எதுவும் ஆகாது. என் உயிர எடுக்காம எப்படி போவான்?’ என்று நினைத்துக் கொண்டாள்.

அதியன் மருத்துவமனையில் இருப்பதால், யதுநந்தன் வனிஷாவிற்கும் சடங்கோ சம்பிரதாயமோ யாரும் செய்ய நினைக்கவில்லை.

மதியம் அதியனுக்கு உணவெடுத்துக் கொண்டு பரமேஸ்வரியும் வசந்தாவும் கிளம்ப, மகாவை பாட்டி வற்புறுத்தி அனுப்பி வைத்தார்.

வேண்டா வெறுப்பாய் அவளும் கிளம்பினாள்.

அங்கு தெளிவான முகத்தோடு அதியன் அமர்ந்திருந்தான்.

“இப்ப எப்படி இருக்கு மாப்பிள்ளை?” என்று நலம் விசாரிக்க, “நல்லா இருக்கேன் அத்த.. உங்கள எப்படி கூப்பிடுறது?” என்று வசந்தாவை பார்த்துக் கேட்டான்.

“பெரியம்மானு கூப்பிடுபா”

“பெரியம்மா.. அம்மானே கூப்பிடுறனே. நான் கடைசியா அம்மானு கூப்பிட்டது எப்பனு கூட தெரியல. மறந்துடுச்சு” என்று அதியன் கேட்கவும், பெரியவர்களின் மனம் உருகி விட்டது.

“அம்மானே கூப்பிடு.” என்று வசந்தா அனுமதி கொடுத்து விட்டார்.

“உன் அப்பா எங்க? எப்படி இருக்காங்க? யதுவும் அண்ணனும் விசாரிச்சுட்டோம்னு சொன்னதால நாங்க எதுவுமே கேட்கல. கேட்க நேரமும் இல்ல”

வசந்தா தட்டில் உணவை வைத்துக் கொடுத்தபடி விசாரனையில் இறங்கினார்.

உணவை மறுக்காமல் வாங்கிக் கொண்டு, நன்றாக அமர்ந்து ஒரு வாயை எடுத்து வைத்தவன், “நல்லா இருக்கு அம்மா. கல்யாண சாப்பாடு இல்ல?” என்று கேட்டான்.

“ஆமாபா”

“நீங்க என்னை அதியன்னு கூப்பிடுங்க. இல்லனா அப்பா அதினு கூப்பிடுவாங்க. அப்படி கூப்பிடுங்க. அப்பா பத்தி கேட்டீங்கள்ள? அவர் இப்போ வெளிநாட்டுல இருக்காரு”

சாப்பிட்டுக் கொண்டே இயல்பாய் பேசினான் அதியன்.

“எந்த நாட்டுல?”

“அமெரிக்கா”

“அமெரிக்காவா? அங்க தான் செல்வா கூட வேலை பார்க்குறான்” என்று அருகே சற்றுத் தள்ளி நின்றிருந்த மகனை காட்டினார்.

“தெரியும் அத்த”

‘எப்படித்தெரியும்?’ என்பது போல் எல்லோரும் பார்க்க, “அவர் வேலை பார்க்குற கம்பெனி சி.இ.ஓ தான் என் அப்பா” என்று அலட்டல் இல்லாமல் கூறினான்.

ஆளாளுக்கு அதிர்ந்து பார்க்க, செல்வகுமாருக்கு தலை சுற்றி விட்டது.

“உன் அப்பாவா?”

“இதுல ஆச்சரியப்பட என்ன இருக்குமா? நிறைய ஃபாரின் கம்பெனிக்கு இந்தியன்ஸ் தான் சி.இ.ஓ வா இருக்காங்க. அது போல என் அப்பாவும் இருக்காரு.” என்று சாதாரணமாக சொல்லி விட்டு, காய்கறி கூட்டை அள்ளி தட்டில் வைத்துக் கொண்டான்.

“இன்னும் கொஞ்சம் வைக்கவா?” என்று வசந்தா பாத்திரத்தை தூக்க, “வேணாம் நீங்க வைங்க. நானே போட்டுப்பேன்” என்றான் அதியன்.

“யதுவும் இப்படித்தான். பரிமாறுனா பிடிக்காது. எனக்கு கையில்லயானு கேட்பான்”

“நான் அப்படி எல்லாம் கேட்க மாட்டேன். பட் டிஸ் நல்லா இருந்தா நிறைய கேட்க கூச்சமா இருக்கும். நாமலே போட்டுக்கிட்டா இஷ்டத்துக்கு வச்சுக்கலாம்ல?”

அதியன் விளையாட்டு புன்னகையுடன் பேச, வசந்தா சிரித்து விட்டார்.

“இது கூட நல்ல ஐடியா தான். நீயே பிடிச்சத போட்டு சாப்பிடு” என்று எல்லாவற்றையும் அருகே தள்ளி வைத்தார்.

அவனும் இருந்ததை எல்லாம் எடுத்து ருசி பார்த்தான்.

இவர்கள் இருவர் தான் இயல்பாய் பேசிக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் எல்லோருமே அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர்.

பரமேஸ்வரிக்கு அதியனின் உயரத்தை கேட்டு சற்று யோசனையாக இருந்தது. செல்வகுமாருக்கு இன்னும் மூளை அதிர்ச்சியை விட்டு வெளியே வரவில்லை. ஸ்ரீனிவாசனுக்கு யதுநந்தன் விசாரிக்கும் போதே விசயம் தெரியும் என்றாலும், செல்வகுமார் வேலை செய்யும் நிறுவனத்தில் தான் அதியனின் தந்தையும் இருக்கிறார் என்பது புது விசயம்.

யது நந்தன் கேட்ட போது, அவசரமாக தந்தையை அவரது பிஏ மூலம் பிடித்து, விசயத்தை சொல்லி, வீடியோ காலில் சம்மதமும் வாங்கி விட்டான் அதியன். யதுநந்தனும் அதியன் சொன்ன அத்தனை விவரங்களையும் சரிபார்த்து விட்டு சம்மதம் சொல்லிய பின்பே, மணமேடையில் அமர வைக்கப்பட்டான்.

இப்போது வசந்தா விடம் பேசியபடி, சாப்பிட்டு முடித்தான்.

கைகழுவிக் கொண்டு வந்தவனிடம் மேலும் சில நிமிடங்கள் பேசி விட்டு, மகாவை மட்டும் விட்டு விட்டு எல்லோரும் வெளியேறினர்.

கையைக்கட்டிக் கொண்டு மெத்தையில் காலை நீட்டி அமர்ந்திருந்தான் அதியன். இரண்டு நாளாக நன்றாக சாப்பிடாமல் இருந்ததற்கு, இப்போது அதிகமாய் உண்டு விட்டான்.

மாத்திரையை போட்டுக் கொண்டு தூங்கி எழுந்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது.

ஆனால், அத்தனை பேரும் இருக்கும் போது தூங்க மனமில்லை. அவனருகே நாற்காலியில் அமர்ந்திருந்தாள் மகாலட்சுமி.

முகூர்த்த புடவையை மாற்றி இருந்தாள். மற்றபடி வேறு எந்த மாற்றமும் அவளிடம் இல்லை.

அதியன் அமைதியாகவே இருக்க, “எனக்கு டைவர்ஸ் வேணும்” என்றாள் மகாலட்சுமி.

அதியன் திரும்பிப் பார்க்க, “என்னால உன் கூட வாழ முடியாது” என்றாள் அழுத்தமாக.

அதியன் இமை சிமிட்டாமல் பார்த்தான். அவளும் அவனுக்கு சளைக்காமல் பார்க்க, அதியனின் உதடுகள் ஏளனமாக வளைந்தது.

“முடியாது. கெட் அவுட்”

ஏளனப்பார்வை மாறாமலே அதியன் பேச, மகாலட்சுமி அதிர்ந்து பார்த்தாள்.

“என்ன சொன்ன?”

“கெட் அவுட். வெளிய போ”

“அதியன்”

“போடி வெளிய”

“அ..”

“நீயா போறியா? இல்ல நானா வெளிய தள்ளனுமா? உன் வீட்டு ஆளுங்க இருக்காங்கனு பார்க்கிறேன். இல்லனா நடக்குறதே வேற. கெட் அவுட்”

அதியன் சீறி விட, மகாலட்சுமிக்கு அவனமாகி விட்டது. அவனை முறைத்து விட்டு, உடனே எழுந்து வெளியே வந்து விட்டாள்.

அவள் சென்றதுமே மாத்திரையை எடுத்துப்போட்டுக் கொண்டவன், அப்படியே படுத்து உறங்க ஆரம்பித்து விட்டான்.

“என்ன?” என்று பரமேஸ்வரி மகளை கேட்க, “அவங்க டேப்ளட் போட்டுத் தூங்குறாங்க” என்றாள்.

“சரி நீங்க கிளம்புங்க. நானும் மகாவும் இருக்கோம்” என்று கூறிய பரமேஸ்வரி, மற்றவர்களை அனுப்பி விட்டு வினோத்தை பார்த்தார்.

“நீ யாருபா?” என்று அவனிடம் விசாரிக்க, “நான்… பாக்கியம் என்னோட அம்மா. அம்மா தான் அதியன் அண்ணாவுக்கு நானியா இருக்காங்க.” என்று கூறினான்.

“சரி சரி. உட்காரு பா”

“நான் அண்ணன ஒரு தடவ பார்த்துட்டு வர்ரேனே?”

“உள்ள போ” என்று அனுப்பி விட்டவர், மகளை பிடித்துக் கொண்டார்.

வினோத் உள்ளே வர, அப்போது தான் தூங்க முயன்ற அதியன் கண் திறந்து பார்த்தான்.

“என் மேல கோபமாண்ணா? கோபம்னா கூட அடிச்சுடுணா” என்று ஆரம்பித்த வினோத்துக்கு கண் கலங்கி விட்டது.

“அப்படி எல்லாம் இல்லடா”

“காலையில இருந்து ஒரு வார்த்தை கூட என் கிட்ட பேசல. கோபம்னா நாலு அடி அடிச்சுடு. இப்படி பேசாம இருக்காதணா..”

வினோத் கெஞ்ச, “அட நீ வேற ஏன்டா? காலையில இருந்து எதாவது ஒன்னு நடந்துட்டே இருக்கு. நான் உன்னை ஒதுக்கல. இப்படி அழாத.” என்று சலிப்பாக பேசினான்.

“நான் அவங்கள கூப்பிட்டதுல கோபம் இல்லையே?”

“இல்லடா”

“சத்தியமா?”

“அடி வாங்காம போக மாட்டியா? எனக்கு செம்மயா தூக்கம் வருது. யாரும் என் தூக்கத்த கலைக்காம பார்த்துக்க. நாம அப்புறம் பேசலாம்” என்றவன் அதற்கு மேல் எதையும் பேசாமல் திரும்பி படுத்து தூங்கி விட்டான்.

இங்கு மகாலட்சுமியை பரமேஸ்வரி பிடித்து கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தார்.

“இப்ப நடந்தது மொத்தத்தையும் நீ சொல்லலனா, அப்புறம் அம்மானு ஒருத்தி இருக்கத மறந்துடு” என்று கூறி மிரட்ட, கண்ணீரோடு தலை குனிந்து கொண்டாள்.

“மகா பொறுமைய சோதிக்காத. வாயத்திற.. நீயும் மாப்பிள்ளையும் லவ் பண்ணீங்களா?”

மகா குனிந்த தலையோடு இல்லை என்று தலையாட்டினாள்.

“அப்புறம்?”

“அது.. ஒன் சைட் லவ்”

“மாப்பிள்ளை உன்னை ஒன் சைட்டா லவ் பண்ணாரா?”

மறுப்பாக தலையசைத்தாள்.

“நீ லவ் பண்ணியா?”

“ஆமா” என்று தலையசைத்தவளுக்கு கண்ணீர் கன்னங்களில் உருண்டோடியது.

“அப்புறம்? ஏன் அவர வேணாம்னு யதுவ கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்ன?”

மகா இதற்கு பதில் சொல்லாமல் எச்சிலை கூட்டி விழுங்க, பரமேஸ்வரியின் பார்வை மகளை துளைத்தது.

“என்ன காரணம்?”

“ம்மா..”

“சொல்லு.. என்ன காரணம்?”

உதட்டைக்கடித்தவள், கண்ணை மூடிக் கொண்டு விசயத்தை சொல்லி விட, பரமேஸ்வரி ஒரு நிமிடம் மகளின் மறுபக்கத்தை அறிந்து அதிர்ந்து போனார்.

“ஏன்டி.. இது.. போயும் போயும்… ச்சை” என்று விட்டார்.

மகாலட்சுமிக்கு அடிவாங்கிய உணர்வு.

“உன்னை என் அம்மா நல்லா வளர்த்துருக்காங்கனு நினைச்சேன்டி. ஆனா அப்படியே அவங்கள மாதிரியே வளர்த்துருப்பாங்கனு நினைக்கல. தப்பு பண்ணிட்டேன். அவங்க கேட்கும் போது அனுப்ப முடியாதுனு சொல்லி இருக்கனும். தப்பு பண்ணிட்டேன்”

“ம்மா..”

“வாய மூடு. பொது இடம்னு பார்க்குறேன். இல்லனா அடிச்சே கொன்னுடுவேன். இதுக்கப்புறம் கூட உன்னை மறக்க முடியாம அவரு சாகத்துணிஞ்சுருக்காரு.. அவருக்கு நீ தகுதியே இல்லடி. முதல்லயே தெரிஞ்சுருந்தா கட்டியே வச்சுருக்க மாட்டேன்”

“ம்மா.. ஏன்மா இப்படிப்பேசுறீங்க?”

“அசிங்கமா இல்லையா மகா? ஒருத்தன துரத்தி துரத்தி லவ் பண்ணிட்டு, கடைசியில இப்படி பேசிட்டு கை கழுவிட்டு வந்துருக்க. அந்த உறுத்தல் கூட இல்லாம, யதுவ வேற கல்யாணம் பண்ணிக்க ரெடியாகிட்ட. பெத்த மகளாச்சேனு பார்க்கிறேன். இல்லனா நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேட்டுருவேன்”

மகாலட்சுமி பதில் பேச முடியாமல் அழுது கரைய, “இனி உன் வாழ்க்கை அதியன் கூடத்தான். தப்பித்தவறி கூட இந்த கல்யாணத்த முறிச்சு வீட்டுப்பக்கம் வந்துடனும்னு நினைச்சுடாத. வெட்டி தோட்டத்துல புதைச்சுட்டு எனக்கு மகளே இல்லனு முடிவு பண்ணிடுவேன்” என்று மிரட்டியவர், அதன் பிறகு ஒரு வார்த்தையும் பேசவில்லை.

மூன்று மணி நேரம் ஆழ்ந்து உறங்கி எழுந்தான் அதியன். மகாலட்சுமி அவன் முன்னால் தலையை தொங்கப்போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

பரமேஸ்வரி ஓரமாக ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, வினோத் உள்ளே வந்தான்.

“எந்திரிச்சுட்டீங்களாணா? உங்களுக்கும் காபி வாங்கிட்டு வந்துருக்கேன். ஃப்ரஸ்ஸாகிட்டு வாங்க”

வினோத்துக்கு தலையாட்டி விட்டு எழுந்து சென்றான்.

பரமேஸ்வரியிடம் மட்டும் பேசி விட்டு, காபி குடித்து முடித்தவன், மருத்துவரிடம் வீட்டுக்குச் செல்ல அனுமதி வாங்கினான்.

நாளை காலை செல்லலாம் என்று கூறி விட, இரவு உணவும் நந்தவனத்திலிருந்து வந்தது.

இரவு கிளம்பும் போது மகாலட்சுமி அதியனிடம் வந்தாள்.

“எனக்கு டைவர்ஸ் கொடுத்துடுவ தான? என்னால இந்த கல்யாணத்த ஏத்துக்க முடியாது” என்று கேட்க, “எரிச்சல கிளப்பாம கிளம்புறியா?” என்றான்.

மகாலட்சுமி அவனை முறைத்து விட்டு வெளியேறினாள்.

“காலையில தாலி கட்டிட்டு நைட் டைவர்ஸ் கேட்குறா. இடியட்” என்று முணுமுணுத்தவன், திரும்பிப் படுத்து விட்டான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
14
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்