Loading

பெண்களுக்கு இருக்கும் புதுமையான சக்திகளில் ஒன்று, உடனுக்குடனே அடுத்த முடிவை நோக்கி நகர்வது தான். ஒரே விசயத்திற்காக பல மணி நேரம் அழவும் செய்வார்கள். பெரிய விசயத்தை உடனே கடந்து, அடுத்த விசயத்தை பற்றி யோசிக்கவும் ஆரம்பித்து விடுவார்கள்.

அதியன் கூறியதில் இருந்து பல உள்ளர்த்தங்களை பரமேஸ்வரியால் உணர முடிந்தது. முழுதாக விளங்கவில்லை என்றாலும், மகளும் காதலித்து இருக்கிறாள் என்று புரிந்து கொண்டார்.

அதோடு, இப்போது வெளியே இருக்கும் அத்தனை பேரும், மகாலட்சுமியை அதியனோடு சேர்த்து பேச ஆரம்பித்து இருப்பார்கள். இனி மகளுக்கு வேறு வாழ்க்கை சாத்தியமில்லை என்று புரிந்து விட, முடிவுக்கு வந்து விட்டார்.

அந்த முடிவை அறிந்து கொண்டது போல், யதுநந்தன் அதியனை நிறுத்தினான். பரமேஸ்வரியும் கேட்டு விட்டார்.

அது வரை ஒரு வித அதிர்ச்சியில் ஸ்ரீனிவாசனுக்கும், மனைவியின் இந்த கேள்வி சரியென தோன்றியது.

ஆனால் மகாலட்சுமி தான் ஏகத்திற்கும் அதிர்ந்து போய் பார்த்தாள்.

“சரி வராது ஆண்ட்டி.” என்ற அதியனின் முகம் இறுகிப்போய் இருந்தது.

“நீங்க மகாவ மறந்துட்டீங்களா?” என்று வனிஷா கேட்க, அதியன் பதில் சொல்லாமல் நின்றான்.

“உங்க காதல் கதை எங்களுக்குத்தெரியாது. ஏன் பிரிஞ்சீங்கனும் எங்களுக்கு தெரியாது. ஆனா, உங்களுக்கு ஒன்னுனதும் கல்யாணத்த விட்டுட்டு ஓடி வந்துருக்கா. அவ மனசுல உங்க மேல இருக்க அன்பு மிச்சமிருக்குனு தான் தோனுது. உங்களுக்கு இல்லையா?”

பரமேஸ்வரி கேட்க, ஸ்ரீனிவாசனும் வந்தார்.

“சொல்லுபா.. இப்ப சரினு சொல்லு. உடனே கல்யாணம் பண்ணி வைக்கிறோம்” என்று கூற, அதியனின் பார்வை ஏளனமாக மகாலட்சுமியிடம் படிந்தது.

பிறகு என்ன நினைத்தானோ, “முதல்ல உங்க பொண்ணுக்கு சம்மதமானு கேளுங்க. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல” என்று கூறி விட்டான்.

அவள் சம்மதிக்க மாட்டாள் என்ற நம்பிக்கை அவன் குரலில் விரவிக் கிடந்தது.

“அவ சம்மதிப்பா. அடுத்து எத்தனை மணிக்கு முகூர்த்தம்னு பார்க்கலாம்” என்று பரமேஸ்வரி முடித்து விட்டார்.

“என்ன வேலை பார்க்குறீங்க அதியன்?” என்று யதுநந்தன் விசாரிக்க, அதியன் திரும்பிப் பார்த்தான்.

“எங்க வீட்டு பொண்ண உங்களுக்குக் கட்டி வைக்கப்போறோம். உங்க டீடைல்ஸ் தெரியனும்ல?”

“இன்னும் மகாலட்சுமி கிட்ட கேட்கலயே?”

“முதல்ல கேட்டதே போதும். இந்த கல்யாணம் நடக்கும். நான் போய் அவள ரெடி பண்ணிக் கூட்டிட்டு வர்ரேன்” என்று கூறிய பரமேஸ்வரி, மகாலட்சுமியை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறினார்.

“நீ போய் எல்லாரு கிட்டயும் விசயத்த சொல்லு” என்று வனிஷாவை அனுப்பி விட்டு, அதிர்ந்து நின்றிருந்த அதியன் பக்கம் திரும்பினான் யது.

“உங்க வேலையைப் பத்திக் கேட்டேனே?”

யதுநந்தன் வார்த்தையில் அழுத்தம் கொடுத்து கேட்க, அதியன் பெருமூச்சு விட்டான்.

“என்ன?”

“எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல”

“தெரியும்”

“என்ன தெரியும் உங்களுக்கு?”

“உங்க மனசுல மகாலட்சுமி மேல ஒரு கோபம் இருக்குனு தெரியும். ஆனா, அத பத்தி இப்ப பேசிட்டு இருக்க முடியாது. கல்யாணத்துக்கு நேரமாகுது. உங்க டீடைல்ஸ் கொடுத்தா வசதியா இருக்கும்”

“அவ ஏன் என்னை விட்டுப் பிரிஞ்சானு தெரியுமா?”

“அது எனக்கு தேவையில்ல அதியன்”

“உங்களுக்கு தேவையில்லை தான். ஆனா என்னால அத மறந்து அவ கூட வாழ முடியாது”

“அவ இல்லாமலும் வாழ முடியாது”

“அப்படினு நீங்க பார்த்தீங்களா?”

“நேத்து நடந்ததே போதுமே?”

“அது ஆக்ஸிடென்ட்”

“இஸ் இட்?”

அதியன் ஒரு நொடி யதுநந்தனை முறைத்துப்பார்த்தான்.

“நான் வாழ்க்கையில மகாலட்சுமிக்கு அப்புறம் வெறுக்குற ஒரே ஆள் நீங்க தான்”

வார்த்தையில் அழுத்தம் கொடுத்தவன் முகத்தில், சட்டென சிரிப்பு வந்து விட்டது. அதியனோடு யதுநந்தனுக்கும் சிரிப்பு வந்தது.

“மை ப்ளஷர்” என்று வேறு சிரித்துக் கொண்டே சொன்னான்.

அதியன் பெருமூச்சு விட்டு விட்டு, “என் ஃபோன் இல்ல. உங்க ஃபோன கொடுக்க முடியுமா?” என்று வாங்கினான்.

_____

அடுத்த அறையில் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த மகாவின் முன்னால், உக்கிரமாக நின்றிருந்தார் பரமேஸ்வரி.

“இப்ப நீ சேலைய மாத்தல.. பெத்த மகனு பார்க்காம நானே உன்னை கொன்னுடுவேன்.” என்று பேச, மகா பயந்து போய் பார்த்தாள்.

“ஒழுங்கு மரியாதையா மாத்து ஏந்திரி” என்று அதட்டி உருட்டி சேலையை கட்ட வைத்து, அவளது நகைகளை எல்லாம் போட வைத்தார்.

தயாராகவே சில நிமிடங்கள் கடந்து இருந்தது. அதற்குள், வனிஷா அழகாய் ஒரு கதையை பரப்பி விட்டிருந்தாள்.

“மகாவ மறக்க முடியாம அவங்க சாகவே போயிருக்காங்க. மகா வேற இளகுன மனசுக்காரி. அவளால ஒரு உயிர் போறத பார்க்க முடியுமா? ரத்தமாச்சும் கொடுத்துட்டு, கடைசியா அவங்கள பார்த்துட்டு வந்துடலாம்னு போயிருக்கா. பாவத்த ரத்தம் கொடுத்ததுலயே மயங்கிப்போயிட்டா. அப்புறம் தான் எங்களுக்கு விசயம் தெரியும். அதனால தீபாவ போய் அவங்கள கூட்டிட்டு வர சொல்லிட்டு, இங்க எனக்கும் அவருக்கு கல்யாணத்த முடிச்சோம். இப்ப அவங்க வந்துட்டாங்க. பெத்தவங்க கௌரவத்துக்காக ஆசைப்படுறவங்கள பிரிக்க முடியுமா? மகா எப்படி மனச மறைச்சுட்டு, பெத்தவங்க சந்தோத்துக்காக அவர கல்யாணம் பண்ண ரெடியானாளோ.. அதே மாதிரி மகா மனச நினைச்சு பார்த்து, நாமலும் ‌அவ விரும்புறவன் கூட சேர்த்து வைக்கனும்ல? அதான முறை? இருக்கவங்க எல்லாம் மகா கல்யாணத்த இருந்து பார்த்துட்டு போங்க”

வனிஷா கட்டி விட்ட கதையில், மகாலட்சுமி பெற்றோரின் சந்தோசத்துக்காக காதலை தியாகம் செய்த தியாகியானாள். அதியன் உண்மை காதலுக்காக உயிரைக்கூட விடக்கூடிய உயர்ந்த மனிதன் ஆனான்.

அது வரை மகாலட்சுமியை வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருந்தவர்கள் கூட, இப்போது புகழ்ந்து பேச ஆரம்பித்து விட்டனர்.

மகாலட்சுமியின் அழுத முகத்தை பவுடர் பூசி மறைக்க பரமேஸ்வரி போராடிக் கொண்டிருக்க, வனிஷா வந்தாள்.

“பெரியம்மா.. ஐயர் நம்பர் கேட்குறாங்க. இருந்தா கொண்டு போய் மாமா கிட்ட கொடுங்க. இந்த மேக் அப் நான் பார்த்துக்கிறேன்” என்று அனுப்பியவள், மகாவின் முகத்தைப் பார்த்தாள்.

மகாலட்சுமி வனிஷாவை வெறித்துப்பார்த்தாள். நெற்றியில் இருந்த குங்குமம், கழுத்தில் இருந்த தாலியும் மாகாவை வெறியேற்றியது.

“என்ன லுக்கு? சும்மா அழுது டிராமா பண்ணாம ஒழுங்கா உட்காரு. மேக் அப் போடனும்” என்றவள் முகத்தைப் பிடித்து, இருந்த மொத்த பவுடரையும் துடைத்து எடுத்தாள்.

வனிஷாவிற்கு மேக் அப் செய்து விட்டவர்கள் எப்போதோ கிளம்பி இருந்தனர். அவர்களை திரும்ப அழைக்கவும் நேரம் போதாததால், வனிஷாவே வேலையில் இறங்கி விட்டாள்.

“என் வாழ்க்கைய பறிச்சுட்டல?” என்று மகா கண்ணீரோடு கேட்க, “ஸ்ஸ்.. டிராமா குயின்” என்று சலித்துக் கொண்டாள்.

“யாரு டிராமா பண்ணது? நீ தான்…” என்றவளை பேச விடாமல், அவளது வாயில் ஒரு டேப்பை எடுத்து ஒட்டி விட்டாள்.

“மூச். நான் வேலைய முடிக்கிற வரை எதுவும் பேசக்கூடாது” என்றவள் மளமளவென வேலையை ஆரம்பித்தாள். முதலில் அவளது தலையலங்காரத்தை முடித்தாள். மணப்பெண்ணுக்கான அலங்காரமில்லை என்றாலும், அவளது நீண்ட கூந்தலுக்கு அழகிய பின்னலை தேர்வு செய்து அதையே செய்து முடித்திருந்தாள்.

அதன் பிறகு முக அலங்காரத்திற்கு வந்தாள்.

பதினைந்து நிமிடத்தில் மகாவின் முகம் பழையபடி பளிச்சிட்டது. கண்கள் மட்டும் தான் சிவந்திருந்தது.

“லிப்ஸ்டிக் போடனும். டேப்பை எடுத்துட்டேன்னு பேச ஆரம்பிக்காத” என்றவள் வாயில் இருந்ததை பிடித்து இழுக்க, வலி தாங்காமல் கத்தினாள் மகா.

“இப்படித்திரும்பு” என்று அவளது அலறலை பொருட்படுத்தாமல், உதட்டில் சாயத்தை பூச ஆரம்பித்தாள் வனிஷா.

முடித்து விட்டு பார்க்கும் போது, “பரவாயில்ல” என்று தான் தோன்றியது.

“இப்படியே மேடைக்கு வந்து சேரு. அழுது கண்ண கசக்கி, காஜல் அழிஞ்சு பேய் மாதிரி மாறிடாத”

வனிஷா வேலையை முடிக்க, மகாவை அழைக்க வந்து விட்டனர்.

“ஐயர் வந்தாச்சு.. வா” என்க “அதுக்குள்ளயா?” என்று வனிஷா விசாரித்தாள்.

“பக்கத்துல தான் இருந்தார் போல. வந்துட்டாரு. மாப்பிள்ளைய உட்கார வச்சாச்சு” என்று வனிஷாவுக்கு பதில் சொல்லியபடி சீதா நடந்தாள்.

மணமேடைக்கு முன்னால் இருந்த நாற்காலியில் யதுநந்தன் கையை கட்டிக் கொண்டு அமர்ந்திருக்க, அதை பார்த்து விட்டு வனிஷா அவனருகே சென்று அமர்ந்து கொண்டாள்.

அவளைத்திரும்பிப் பார்த்தவன், புன்னகைத்து விட்டு மீண்டும் மேடையை பார்த்தான்.

மகாலட்சுமி நிமிர்ந்து பார்க்கவில்லை. மறுக்க வழி இல்லை. அழுது ஆர்பாட்டம் செய்து மானத்தை கெடுக்கவும் முடியாது. அவளுக்கு அமைதியாக காரியத்தை சாதித்து தான் பழக்கம். இப்போதும் அமைதியாக தான் இருக்க வேண்டியிருந்தது.

அதியன் அவசரமாக கொடுத்த பட்டு வேட்டியை மட்டும் கட்டிக் கொண்டு, தலையில் கட்டோடு அமர்ந்து இருந்தான்.

புகை வேறு அவனை என்னவோ செய்து கொண்டிருந்தது. தலையில் பெரிய காயமில்லை என்றாலும், இரத்தம் நிறைய இழந்து விட்டதால் இன்னும் தலைசுற்றல் இருந்தது.

பல்லைக்கடித்துக் கொண்டு அவன் அமர்ந்திருக்க, ஐயர் தாலியை கொடுத்தார்.

அது மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கோடு இருந்தது.

தாலியை கையில் வாங்கியவன், அங்கு எழுந்து நின்ற யதுநந்தனை பார்த்து விட்டு, மகாவின் கழுத்தில் கட்டி விட்டான். அடுத்த நொடி மளமளவென கண்ணீர் கொட்டி விட்டது அவளுக்கு. தலைகுனிந்து அமர்ந்திருந்ததால் எல்லாம் மடியில் விழுந்து மறைந்து போனது.

ஆனால் அருகே வந்து தாலியை கட்டிக் கொண்டிருப்பவன், அதை நன்றாக பார்த்து விட்டான். உதறி விட்டு போகத்தோன்றியது. ஆனால் எதுவோ செய்ய விடவில்லை. மனம் இறுக முடிச்சிட்டான்.

யதுநந்தனும் வனிஷாவும் எழுந்து அட்சதை தூவ, எஞ்சி இருந்த சொந்தங்களும் அட்சதை தூவினர்.

மூன்று முடிச்சையும் போட்டு விட்டு பொட்டையும் வைத்து விட்டான். மகாலட்சுமி எதற்கும் நிமிரவில்லை. அக்னியை வலம் வந்து ஆசை பெற்று முடித்தனர்.

“இனி வீட்டுக்கு கிளம்பலாம்” என்று கூறி விட, சொந்தங்களும் கிளம்பி விட்டனர்.

இரு ஜோடியும் தங்களது இணையோடு நந்தவனத்தை நோக்கி புறப்பட்டனர்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
17
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்