Loading

 

நேற்று நள்ளிரவு…

வனிஷா அறையை விட்டு வெளியேறியதும், “இவ மட்டும் என்னடி உங்க குடும்பத்துல தினுசா இருக்கா?” என்று கேட்டாள் தீபா.

“அவள பத்தி தான் தெரியுமே.. விடு”

“ஆனாலும் இவ பேசுறது கொஞ்சம் ஓவரா இல்ல? மெஹந்தி நல்லா தான் வச்சுருக்காங்க. இவளுக்கு மட்டும் பிடிக்கலயாம்”

“அவளுக்கு பிடிக்கலனா நாம என்ன செய்ய முடியும்?”

“அதான? மூஞ்சி முழுக்க மேக் அப் போட்டுக்குறது.. முடிய வெட்டி விடுறது.. மார்டனா டிரஸ் பண்ணுறது.. எல்லாம் ஐடில வேலை பார்க்குற திமிரு. நம்மல மாதிரி டீச்சரா வேலை பார்த்திருந்தா இப்படி எல்லாம் திரிய முடியுமா?”

“அது என்னவோ சரி தான். புடவை கட்டி, பின்னல் பின்னி, பூ வைக்க கூட பர்மிஷன் இல்லாம, காலையில இருந்து சாயந்தரம் வரை தொண்டை கிழிய கத்தனும்.”

“இந்த வேலையில எல்லாம் வனிஷா ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்க மாட்டா. ஏசில உட்கார்ந்துட்டு, கம்ப்யூட்டர்ல வேலை பார்த்துட்டு, ஈசியா சம்பளம் வாங்குறா. அதான் இந்த ஆட்டம்”

“விடுடி.. அவ என்ன செஞ்சா நமக்கென்ன?”

“எனக்கு மேக் அப் போடுற பொண்ணுங்கள கண்டாலே பிடிக்காது மகா”

“ஏனாம்?”

“பார்த்தது இல்ல? கதையில சீரியல்ல மூவில எல்லாம் மேக் அப் போடுற அத்தனை பொண்ணுங்களும் வில்லிங்க தான். உன்னை மாதிரி சிம்பிளா சிரிச்சுட்டு, நீளமா கூந்தல் வச்சுருக்கவங்க தான் ஹீரோயின். ஆனா எனக்கு தான் முடி வளரவே மாட்டேங்குது”

தீபா பெருமூச்சு விட, மகா சிரித்து விட்டாள்.

“சரி சரி படு. இப்ப தூங்குனா தான் காலையில எந்திரிக்க முடியும்” என்ற மகாலட்சுமி கையை கழுவி விட்டு வந்து படுத்துக் கொண்டாள்.

தூங்கப்போகும் நேரம் கைபேசி அழைத்தது.

“இந்நேரத்துல யாரு?” என்று தீபா கேட்க, “தெரியல. புது நம்பரா இருக்கு” என்ற மகா எடுத்துக் காதில் வைத்தாள்.

“ஹலோ யாரு?”

“ஹலோ.. அ.. அ.. நான் வினோத் பேசுறேன்”

“வினோத்?”

“ப்ளீஸ் ப்ளீஸ்.. எங்கண்ணன காப்பாத்துங்க ப்ளீஸ்..” என்று அழ ஆரம்பித்து விட்டான்.

“அண்ணன்? அவருக்கு என்ன?”

“யாருடி?” என்று தீபா கேட்க, “அதியனுக்கு எதோ பிரச்சனையாம்” என்றாள்.

“என்ன பிரச்சனை? “

“உஸ்ஸ்..” என்று தீபாவை அடக்கி விட்டு, “அழாம விசயத்த சொல்லுறியா?” என்று வினோத்திடம் கேட்டாள் மகா.

அது தான் அவளது பெரிய தவறு. விவரம் வாங்கியதும், “இல்ல என்னால வர முடியாது. நாளைக்கு எனக்கு கல்யாணம். சோ சாரி.” என்று வைத்து விட்டாள்.

தீபா என்னவென்று கேட்டதும் விவரம் கூற, “ப்ளாக் மெயிலா இருக்கும். நீ போகாத. ஒழுங்கா தூங்கு. உன் சாஃப்ட் மனச யூஸ் பண்ணிக்க பார்க்குறாங்க” என்று எரிச்சலடைந்தாள்.

“சரி விடு. அதான் சொல்லிட்டேன்ல? படு” என்ற மகா, கைபேசியை சைலண்ட்டில் போட்டு விட்டு படுத்துக் கொண்டாள்.

தூக்கம் வரவில்லை. மீண்டும் மீண்டும் வினோத்திடமிருந்து அழைப்பு வர, பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு மனம் கேட்கவில்லை.

தீபா எப்போதோ தூங்கி இருக்க, சத்தமில்லாமல் சென்று வரலாம் என்று முடிவு செய்து விட்டாள். அந்த முடிவின் பலனாக வனிஷா தாலியோடு நிற்க, வனிஷாவின் அருகே மாலையோடு நின்றிருந்தான் யதுநந்தன்.

செல்வகுமார் இழுத்த இழுப்புக்கு வந்தவள், மணமகள் அறைக்குள் நுழைந்ததும் தான் நிமிர்ந்து பார்த்தாள்.

வீட்டினர் மொத்தமும் மகா வந்து விட்டதை அறிந்து மணமகள் அறைக்கு வந்து சேர்ந்தனர்.

சொந்தங்கள் எல்லாம் வாசலில் நிற்க, “அதான் சாப்பிட்டு மொய் எழுதி தாம்பூலம் கூட வாங்கியாச்சுல? இன்னும் இங்க என்ன வேலை? போய் உங்க வேலைய பாருங்க” என்று வெற்றிவேல் ஆரம்பிக்க, “என்ன வேணுமாம் எல்லாருக்கும்?” என்று முறைப்புடன் கேட்டார் தாத்தா.

வெற்றிவேலை எதிர்த்துப்பேச வாய்திறந்தவர்கள் கூட, தாத்தாவை பார்த்து பம்மி விட்டனர்.

“வேலை எதுவும் இல்லையா? அப்படினா மண்டபத்துல இருக்க சேர எல்லாம் அடுக்கி வச்சுட்டு கிளம்புங்க. ஏம்பா.. நீ சமையல் கட்டுல மிச்சமிருக்க சாப்பாட என்ன செய்யுறதுனு பாரு. நீ என்னமா? உனக்கு என்ன வேணும்?”

நந்தகோபாலன் ஒவ்வொருவருக்கும் வேலை கொடுக்க ஆரம்பிக்க, வம்புக்கு நின்றிருந்தவர்கள் வேலைக்குப் பயந்து தெறித்து ஓடினர்.

முறுக்கிய மீசையோடு தாத்தாவும் உள்ளே நுழைய, கதவு அடைக்கப்பட்டது.

அறைக்குள் எல்லோரும் இருக்க, பரமேஸ்வரி மகளை உலுக்கினார்.

“லவ் பண்ணுறனா சொல்லித் தொலைக்க வேண்டியது தான? எதுக்குடி இப்படிப்போன?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

மகா பதில் சொல்ல முடியாமல் விம்மி அழுதாள்.

“ஓடிப்போனவ எதுக்கு திரும்ப வந்த?” என்று கேட்க, அவளிடம் பதில் இல்லை.

பேசத்தான் நினைக்கிறாள். ஆனால் தொண்டையை அடைத்துக் கொண்டு வார்த்தைகள் வர மறுத்தது.

“வாயத்திறடி” என்று பரமேஸ்வரி கை ஓங்க, “பெரியம்மா.. நிறுத்துங்களேன்” என்று வனிஷா சலிப்பாக அவரை தடுத்தாள்.

“இப்ப எதுக்கு இவ்வளவு எமோஷனலா கேட்டுட்டு இருக்கீங்க? அதான் வந்துட்டாள்ல? வீட்டுக்குப் போய் பேசிக்கலாம். எல்லாம் காத கதவுல வச்சுட்டு ஒட்டுக்கேட்டுட்டு நிப்பாங்க. விடுங்க”

வனிஷா பொறுமையாக நிலைமையை விளக்க, கதவு தட்டும் சத்தம் கேட்டது.

எல்லோரும் கதவின் பக்கம் திரும்ப, செல்வகுமார் கதவை கொஞ்சமாக திறந்து பார்த்தான்.

தலையில் கட்டோடு நின்றிருந்தவனை அவனுக்கு அடையாளம் தெரியாமல் போக, “யார் நீங்க?” என்று விசாரித்தான்.

“மகாலட்சுமிய பார்க்கனும். உள்ள தான இருக்காங்க?”

“மகாவயா?”

“ஆமா.. கொஞ்சம் வழி விடுங்க” என்று உள்ளே நுழைந்து விட்டான்.

அவனைப்பார்த்ததும் தீபா அதிர, அவன் அழுது கொண்டிருந்த மகாலட்சுமியை தான் பார்த்தான்.

“யாருபா நீ?” என்று பாட்டி முன்னால் வந்து கேட்டார்.

“வணக்கம் பாட்டி. என் பேரு அதியன். நேத்து என்னைப் பார்க்கத் தான் மகாலட்சுமி வந்தாங்க”

“நீ தானா அது?” என்று கேட்டு செல்வகுமார் அவன் சட்டையைப்பிடித்து விட, “சார்.. பேசிட்டு போகத் தான் வந்தேன். கைய எடுங்க” என்றான் அதியன்.

“என்னடா பேச்சு? நடுராத்திரி இவள கூட்டிட்டுப் போயிட்டு.. காலையில வந்து நல்லவன் மாதிரி நடிக்கிறியா?”

“சார்.. நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல”

“என்னடா…”

“செல்வா கைய எடு” என்று யதுநந்தன் முன்னால் வந்தான்.

“யது.. நீ பேசாத.. இவன..”

“கைய எடுனு சொல்லுறேன்ல?” என்றவன், செல்வா அப்போதும் எடுக்காமல் இருக்க, கையைப்பிடித்து வழுக்கட்டாயமாக எடுத்து விட்டான்.

அதியன் ஒரு பெருமூச்சு விட்டு சட்டையை நீவியபடி யதுநந்தனை பார்த்தான். அதியன் அளவு உயரம் தான். ஆனால் அழகாக இருந்தான். புது மாப்பிள்ளை களையாக இருக்கலாம். அல்லது அவன் அழகானவன் என்பதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும் என்று தோன்றியது.

“முதல்ல பொறுமையா பேசப்பழகு. எடுத்ததும் சட்டைய பிடிப்பியா?” என்று அதட்டி விட்டு, அதியன் பக்கம் திரும்பினான்.

“கோபத்துல பண்ணிட்டான். பெருசா எடுத்துக்காதீங்க” என்று அதியனிடமும் கூறி விட்டு மற்றவர்களை பார்த்தான்.

“நீங்க எல்லாரும் போய் வெளிய இருக்கவங்கள அடக்குங்க. அத்த.. அவள உலுக்குறத நிறுத்திட்டு தள்ளி வாங்க” என்று கட்டளையிட்டவன் வனிஷாவை பார்க்க, அவள் பெருமூச்சொன்றை விட்டு விட்டு, பரமேஸ்வரியை இழுத்துச் சென்று ஒரு நாற்காலியில் அமர வைத்தாள்.

“மாமா.. நீங்க கேளுங்க.” என்று ஸ்ரீனிவாசனை இழுத்து முன்னால் விட்டு விட்டு, மற்ற அத்தனை பேரையும் வெளியே துரத்தினான்.

செல்வகுமார் உட்பட அத்தனை பேரும் வெளியே இருக்க, அங்கே இருந்தது மகாலட்சுமியும் அவளுடைய பெற்றோர்களும், யதுநந்தன் வனிஷாவும் மட்டும் தான்.

ஸ்ரீனிவாசன் தொண்டையை செருமிக் கொண்டார். இவ்வளவு நேரம் மகள் செய்த காரியத்தில் நொந்து போயிருந்தவர், இப்போது மகள் முழுதாக வந்து விட்டதில் சற்று அசுவாசமாகி இருந்தார்.

இருந்தும் விசயம் வெளியே வர வேண்டும் என்பதால், விசாரிக்க ஆரம்பித்தார்.

“நீ… பேரென்ன சொன்ன?”

“அதியன்”

“என் மகள உனக்குத் தெரியுமா?”

“ம்ம்.”

“எப்ப இருந்து?”

“ரெண்டு வருசமா தெரியும்”

“லவ் பண்ணீங்களா?”

இதற்கு உடனே பதில் சொல்லாமல் மகாலட்சுமியை பார்த்தான்.

அவள் இன்னும் தலை நிமிர்ந்து அவனை பார்க்கவில்லை. கண்ணீர் விட்டபடி இருந்தாள்.

“சொல்லுபா.. நீங்க லவ் பண்ணதா தீபா சொன்னாளே.. உண்மையா?”

“அப்படி தான் நான் நினைச்சுட்டு இருந்தேன்” என்றவன் குரலில் ஒரு வெறுப்பும் ஏமாற்றமும் தெரிந்தது.

“அப்படினா?”

“எல்லாமே பொய்.. இவ…” என்று வேகத்தோடு ஆரம்பித்தவன், சட்டென நிறுத்தினான்.

“சொல்லுங்க அதியன்” என்று யதுநந்தன் கூர்மையாக பார்க்க, “எதுக்குங்க? வேணாம். இங்க நான் வந்தது நேத்து நடந்தத எக்ஸ்ப்ளைன் பண்ண தான். அத மட்டும் சொல்லிட்டுப் போயிடுறேன்” என்றான்.

யதுநந்தனுக்கு தான் விசயம் தெரியுமே. அதனால் அவனை கூர்மையாக பார்த்தான்.

இன்று காலையில் குளித்து விட்டு வந்தவனின் அறைக்கதவை தட்டினாள் கிருபா. கதவைத்திறந்து அக்காவை பார்த்தவன், “என்னகா?” என்று கேட்டான்.

அதை முழுதாக கேட்டு முடிக்கும் முன், உள்ளே வந்து கதவை அடைத்தவள், நடந்ததை மளமளவென கூறி முடித்தாள்.

“நைட் அவ கூட யார் இருந்தா?” என்று அத்தனையும் கேட்டுக் கொண்டு, இறுகிய முகத்தோடு கேள்வி எழுப்பினான் யது.

“தீபா மட்டும் தான் இருந்தா. வனிஷா பாட்டி ரூம்ல போய் தூங்கிட்டா. தீபாவ கேட்டா தெரியாதுங்குறா” என்று சொல்லும் போதே அவளது கணவன் அழைக்க, “என் மாமியாருக்கு விசயம் தெரிஞ்சா கையில வேப்பிலை கொடுத்த மாதிரி ஆடும். நீ போய் பாட்டிய பாரு. நான் அவங்கள சமாளிக்கிறேன்” என்றவள் அங்கிருந்து சென்று விட்டாள்.

பாட்டியை பார்ப்பதற்காக அறையை விட்டு வெளியே வந்தவன், தூரமாக பதட்டத்தோடு நின்று இருந்த தீபாவை பார்த்து விட்டான்.

அவளை இழுத்துச் சென்று யாருமில்லா இடத்தில் நிறுத்தியவன், “இப்ப எங்க இருக்கா?” என்று மட்டும் தான் கேட்டான்.

“தெரியல” என்று தீபா எல்லோருக்கும் சொன்ன பதிலை சொல்ல, யதுநந்தன் முறைத்துப்பார்த்தான்.

“நீயா சொல்லலனா நீ தான் ப்ளான் போட்டு அவள அனுப்பிருக்கனு உன் அம்மா அப்பா பாட்டி கிட்ட சொல்லுவேன். ஒழுங்கா சொல்லிடு. என்ன நடக்குது?” என்று கேட்டான்.

பெற்றோர்களின் மீது இருந்த பயத்தில், மொத்தத்தையும் ஒப்பித்து விட்டாள்.

“இப்ப ஹாஸ்பிடல்ல தான் இருப்பா. போனா கூட்டிட்டு வரலாம்” என்று கூற, “தேவை இல்ல. போனவ போனதாவே இருக்கட்டும்.” என்று முடித்து விட்டுத் திரும்பினான்.

அப்போது தான் சமீரா அவனை அழைத்துச் சென்றாள். வனிஷாவை இப்போது திருமணமும் செய்து கொண்டான்.

அதியன் என்ன சொல்கிறான் என்று கேட்க மற்றவர்கள் ஆர்வமானார்கள்.

“நேத்து எனக்கு ஒரு ஆக்ஸிடெட்ன்ட். சூசைட் அட்டம்ட் எல்லாம் எதுவும் பண்ணல. கார்ல எதோ பிரச்சனை. அடிபட்டுருச்சு. எனக்கு அடி பட்டா அவ்வளவு சீக்கிரத்துல ரத்தம் நிக்காது. எனக்கும் உங்க பொண்ணுக்கும் சேம் ப்ளட் குரூப் தான். ரேர் ப்ளட் குருப் வேற. அந்த நேரத்துல டோனர் வர லேட் ஆகுதுனு சொன்னதும், என் தம்பி அவனுக்குத்தெரிஞ்ச உங்க பொண்ண கூப்பிட்டு ஹெல்ப் கேட்டுருக்கான். ப்ளட் டொனேட் பண்ண வந்தவங்க தான், கிளம்பும் போது வாசல்ல மயங்கி விழுந்துட்டாங்க. மயக்கம் தெளிஞ்சாலும் காலையில வர அசைய முடியாம தூங்கிட்டாங்க. கீழ விழுந்தப்போ இந்த போன் உடைஞ்சுருக்கு. அது மேல வண்டி எதோ ஏறிடுச்சு போல. அத கொடுத்துட்டு, உங்க கிட்ட விசயத்த சொல்லிட்டுப்போகலாம்னு தான் வந்தேன். இப்ப கிளம்புறேன்”

உடைந்து போன கைபேசியை அங்கிருந்த மேசையில் வைத்தவன், “உங்க பொண்ணு ஓடி எல்லாம் போகல. வெளியில பேசுனத கேட்டேன். அப்படி ஓடிப்போற அளவு எல்லாம் லவ் இல்ல.. இட்ஸ் ஜஸ்ட்…. லீவ் இட். நான் கிளம்புறேன். டாக்டர் என்னை ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காங்க. ஒரு மணி நேரத்துல வந்துடுறேன்னு சொல்லிட்டு வந்துருக்கேன். வர்ரேன்” என்று திரும்பி நடக்க, யதுநந்தன் கையை நீட்டித்தடுத்தான்.

“ஒரு பேஷண்ட்ட நிக்க வச்சுப்பேறது தப்பு தான். ஆனா இப்படியே நீங்க போக விட முடியாது” என்றவன், பரமேஸ்வரியை பார்த்தான்.

அவர் முகத்தில் இப்போது தெளிவு வந்திருந்தது. கணவனை ஒரு நொடி பார்த்தவர், எழுந்து அதியன் முன்னால் வந்தார்.

“நீங்க என் மகள கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” என்று கேட்டு வைத்தார்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
14
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்