Loading

முகூர்த்த நேரத்தில் வேறு ஒரு பட்டுப்புடவையில் மணப்பெண் அலங்காரத்துடன் வந்த வனிஷாவை நிமிர்ந்து பார்த்து விட்டுத் திரும்பினான் யதுநந்தன்.

மகாலட்சுமிக்கு எடுத்த பட்டுப்புடவை இல்லை இது. அதை கட்டக்கூடாது என்று, உடனே தன் நண்பன் மூலம் வேறு பட்டுப்புடவையை ஏற்பாடு செய்து விட்டான் யது நந்தன்.

சொந்தபந்தம் மொத்தமும் மணப்பெண் மாறி விட்டதில் ஆளாளுக்குப் பேச ஆரம்பித்து விட்டனர். அட்சதை கொடுத்த கிருபாவை, ஒவ்வொருவரும் நிறுத்திப் பேசப்பார்க்க, கொஞ்சமும் பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டே இருந்தாள்.

மேடையில் மொத்த குடும்பமும் இருக்க, வனிஷா தாலியை ஒரு பார்வை பார்த்து விட்டு அமைதியாய் இருந்து கொண்டாள்.

ஐயர் மந்திரங்களை உச்சரித்து விட்டு தாலியை எடுத்துக் கொடுக்க, அதை கையில் வாங்கிய யது வனிஷாவின் கழுத்தில் கட்டி விட்டான்.

அடுத்தடுத்து சம்பிரதாயங்கள் நடந்து முடிய, உறவினர்கள் விருந்துண்ணவும் பரிசைக் கொடுக்கவும் ஆரம்பித்தனர்.

மகாலட்சுமி எங்கே? என்ற யார் கேள்விக்கும் பதில் சொல்லப்படவில்லை. மேடையில் அலங்கரித்திருந்த பெயர்களை கூட, வெட்டிங் ப்ளானர் வனிஷா என்று உடனே மாற்றி விட்டாள்.

முதலில் காகிதத்தில் இருக்க, இப்போது பூவால் இருவரின் பெயரும் எழுதப்பட்டிருந்தது.

மகாலட்சுமியுடனான திருமணத்தில் யதுநந்தன் பெரிதாக தலையிடவில்லை. ஆனால் இப்போது அவன் தான் மொத்தத்தையும் மாற்றினான்.

பட்டுப்படவை எடுக்க வைத்து, பெயரை மாற்ற வைத்து, வனிஷாவின் நகைகளை வீட்டிலிருந்து எடுத்து வர வைத்து, அத்தனை வேலையும் மின்னல் வேகத்தில் நடந்தது.

தாலி மட்டும் மாறவில்லையே? என்ற கேள்வி வனிஷாவிடம் இருக்க, அப்போதைக்கு எதுவும் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.

விருந்தினர்களை எல்லாம் பேசவிடாமல் பந்திக்கு துரத்தினார்கள் கிருபாவும் சீதாவும்.

பந்தி முடிந்தவர்களுக்கு தாம்பூலப்பையை கொடுத்து கிளப்பி விட்டனர் அவர்களது கணவர்மார்கள்.

மிகவும் தொல்லை செய்தவர்களை, தாத்தா அவரது விரைப்பான முறைப்பிலேயே சமாளித்து விட்டார்.

நல்ல காலமோ தீய காலமோ, கிருபாவின் மாமியார் குடும்பம் சாப்பிட்ட அடுத்த நொடி அங்கிருக்க மாட்டேன் என்று கிளம்பி விட்டது.

எல்லாம் வேகமாக நடந்து முடிய, மணமக்களை சாப்பிட அழைத்துச் சென்றனர். புகைப்படம் எடுத்து முடித்து எல்லோரும் விலகியதும், “என்ன யோசனையோட இருக்க?” என்று வனிஷாவிற்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டான் யது.

“அவ்வளவு ப்ரான்கா தெரியுதா?” என்று வனிஷா கேட்க, “ம்ம்.. என்ன?” என்று விசாரித்தான்.

“எல்லாத்தையும் மாத்துனீங்க. சேரி.. ஜுவல்ஸ் எல்லாம். தாலி மட்டும் மாறலயே?”

“அத ஏன் மாத்தனும்?”

“மாத்த வேணாமா?”

“வேணாம். சேரி ஜுவெல்ஸ் எல்லாம்.. ஒருத்தர் நிறத்துக்கு முகத்துக்கு பொருத்தமானு பார்த்து எடுக்குறது. ஆனா இந்த தாலி அப்படி கிடையாது. என்னோட பொண்டாட்டிக்குனு வாங்குனது. நான் கட்டுற ஆளுக்கு சொந்தமானது. அதுல மத்த யாருக்கும் உரிமை கிடையாது. அவங்க பேர சொல்லி வாங்கவும் கிடையாது” என்று கூற, ஆச்சரியமும் புன்னகையுமாய் திரும்பிப் பார்த்தாள் வனிஷா. பதிலுக்கு ஒரு புன்னகையடன் அந்த பார்வையை சந்தித்தான் யதுநந்தன்.

சொந்தபந்தங்களை புகைப்படமெடுத்துக் கொண்டிருந்த புகைப்பட கலைஞர், இந்த பார்வை பரிமாற்றத்தையும் அழகாய் பதிவு செய்தார்.

_________

கண்ணைத் திறந்து பார்த்த மகாலட்சுமிக்கு, மசமசவென எதுவும் முதலில் தெரியவில்லை. மீண்டும் கண்ணை மூடிக் கொண்டவள் சில நிமிடங்களில் கண்ணை திறக்க, இருக்கும் இடம் புரிந்தது.

சட்டென எல்லாமே நினைவு வர, பதறி எழுந்தாள். எழுந்த வேகத்தில் கண் இருட்டிக் கொண்டு வருவது போல் இருக்க, தலையை உலுக்கிக் கொண்டாள்.

கையைத்திருப்பி மணி பார்த்தவளுக்கு தூக்கிவாரி போட்டது. ஆறு மணி என்று காட்டிய கடிகாரத்தை நம்பாமல், மெத்தையிலிருந்து கீழே இறங்கியவள் பார்வை சன்னல் பக்கம் சென்றது.

வானம் விடிந்து காட்சியளிக்க, மகாவின் இதயம் எகிறி குதித்தது.

‘என்னை காணோம்னு தேடிட்டு இருப்பாங்களோ?’ என்று பதறியவள், உடனே அறையை விட்டு வெளியே வந்தாள்.

இரண்டடி எடுத்து வைக்கும் முன், “மகா..” என்று அலறிக் கொண்டு தீபா வந்து சேர்ந்தாள்.

“தீபா.. நீ இங்க.. வா வா டைம் ஆச்சு.. முகூர்த்த நேரம் முடிஞ்சுரும்ல?” என்று தீபாவின் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு நடக்க, தீபா அசையவில்லை.

“என்னடி? வா..”

“அங்க.. அங்க கல்யாணம் முடிஞ்சது”

தீபா மூச்சு வாங்க பேச, மகாவிற்கு ஒன்றும் புரிரவில்லை.

“என்ன சொன்ன?”

“நீ இல்லனதும் அவருக்கு வனிஷா கூட கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.”

மகாவிற்கு இப்போது மீண்டும் கண் இருட்டிக் கொண்டு வந்தது. காதில் விழுந்ததை நம்ப முடியாமல் திகைத்துப் போனாள். யதுநந்தனுக்கும் வனிஷாவுக்கும் திருமணமா? அதிர்ச்சி மூளைக்கு சென்று, வலியை இதயத்திற்கு கொடுத்தது. தாங்க முடியாமல் தொய்ந்து கீழே அமர்ந்து விட்டாள்.

“மகா.. மகா… என்னாச்சு?” என்று தீபா பதட்டமடைய, அங்கு நடந்து கொண்டிருந்த நர்ஸ் வந்து அவளை பார்த்தாள்.

“மயக்கமா இருக்கா மேடம்? எந்திரிங்க.” என்று அவளது கையைப்பிடித்து தூக்கி, நாற்காலியில் அமர வைத்தாள்.

மகா எதையும் உணராமல் வெறித்துப்பார்த்திருந்தாள். மெல்ல கண் கலங்க ஆரம்பித்தது.

“எந்த டாக்டர பார்க்கனும்?” என்று நர்ஸ் கேட்க, தீபா விழித்தாள்.

“எந்த டாக்டர பார்க்கனும்னு கேட்டேன். முன்னாடி ரிஜிஸ்டர் பண்ணீங்க தான?”

“இல்ல.. நாங்க ஒருத்தர பார்க்க வந்தோம்”

“ஓ.. சரி உட்கார வைங்க.” என்று கூறியதோடு நர்ஸ் நகர்ந்து விட்டாள்.

“மகா.. இங்க பாரு” என்று தீபா தன் பக்கம் முகத்தை திருப்ப, தேங்கியிருந்த கண்ணீர் இப்போது அணையை உடைத்திருந்தது.

“மகா.. அழாத மகா” என்றவளுக்கும் வருத்தமாக தான் இருந்தது.

மகா அவளது பேச்சை காதில் வாங்கவில்லை. யதுவின் திருமணம் வனிஷாவுடன் முடிந்து விட்டது என்பதிலேயே அவளது மனம் நின்று விட்டது.

“நான் சொல்லி பார்த்தேன். ஆனா அவர் கேட்கவே இல்ல. போனவ போனதா இருக்கட்டும்னு சொல்லிட்டார். வீட்டுல எல்லாரும் வனிஷா கிட்ட பேசி கல்யாணமே பண்ணிட்டாங்க. என்னால ஒன்றுமே பண்ண முடியல. கல்யாணம் முடிஞ்சதும் இங்க ஓடி வந்துட்டேன். வா வீட்டுக்குப் போகலாம்.”

மகா கண்ணீரோடு அவளை திரும்பிப்பார்த்தாள்.

“நான் இங்க வந்துருக்க கூடாது. நீ சொல்லியும் கேட்காம வந்தேன்ல.. அதுக்கு தான்.. இப்படி” என்றவளுக்கு கேவல் வர, வாயை மூடிக் கொண்டாள்.

“விடு.. வா வீட்டுக்குப் போகலாம்” என்று எழப்பார்க்க, “என்னம்மா அழுதுட்டு இருக்க?” என்று கேட்டபடி பாக்கியம் வந்து சேர்ந்தார்.

அவரை ஆத்திரத்துடன் நிமிர்ந்து பார்த்தவள், அவரருகே இருந்த வினோத்தை முறைத்தாள்.

“அண்ணா.. முழிச்சுட்டாரு..” என்று வினோத் அவளது முறைப்பை பார்த்து பாவமாக பேச, “எல்லாம் உன்னாலயும் உன் அண்ணனாலயும் தான். அங்க இவள விட்டுட்டு வேற ஒருத்தி கூட கல்யாணம் ஆகிடுச்சு” என்று தீபா எகிறினாள்.

“அய்யய்யோ.. என்னமா சொல்லுற?” என்று பாக்கியம் பதட்டமடைய, தீபா அவரை கொஞ்சமும் மதிக்கவில்லை.

“ஏய்.. வாடி போகலாம். இனி இவங்களாச்சு அவனாச்சு” என்று அதட்டி மகாவை பிடித்து எழுப்பப் பார்த்தாள் தீபா.

“நான் இதோ வர்ரேன்” என்ற வினோத் திரும்பி ஓடினான்.

“நீ எந்திரிக்கப்போறியா இல்லையா?”

“இனி.. இனிமே அங்க வந்து.. தீபா என் வாழ்க்கையே போச்சுடி” என்று மகா கண்ணீர் விட, தீபா அவளை அணைத்துக் கொண்டாள்.

“அதுக்காக இங்கயேவா இருக்க முடியும்? அங்க போய் உண்மைய சொல்லுவோம். நடக்குறது நடக்கட்டும்” என்று கூறி எழுப்பி விட்டாள்.

கண்ணை துடைத்துக் கொண்ட மகா, அருகே கையைப்பிசைந்து கொண்டு நின்றிருந்த பாக்கியத்தை திரும்பியும் பார்க்காமல் நடக்க ஆரம்பித்தாள்.

வாசலுக்கு வரும் போது, “மகாலட்சுமி” என்ற குரல் காதில் விழ, அப்படியே நின்று விட்டாள்.

தீபா மட்டும் திரும்பிப் பார்த்து விட்டு, “வா.. இன்னும் ஏன் நிக்கிற?” என்று இழுத்துக் கொண்டு நடந்தாள்.

வேக எட்டுக்களுடன் அவர்களை வழிமறித்தான் அதியன்.

“நானும் வர்ரேன்”

“எங்க?” என்று தீபா எகிற, அவன் அவளை திரும்பிப் பார்க்கவில்லை.

“இப்படியே நீ போய் நின்னா உன் வீட்டுல நம்புவாங்களானு தெரியல. இதுக்கு நானும் ஒரு காரணம். நானும் வந்து சொல்லுறேன்”

“அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல.. வாடி போகலாம்” என்று தீபா இழுக்க, மகாலட்சுமி அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு தீபாவோடு சென்று விட்டாள்.

அதியனுக்கு தான் மனம் கேட்கவில்லை.

“ண்ணா.. டாக்டர் போகலாம்னு சொல்லிட்டாரு” என்று வினோத் வந்து கூறியதும், அடுத்த நொடி மருத்துவமனை விட்டு வெளியேறினான்.

மகாவும் தீபாவும் ஒரு ஆட்டோவில் ஏறுவது தெரிய, “உன் பைக் எங்க?” என்று கேட்க, “ஆட்டோல போகலாம்ணா” என்றான் வினோத்.

“ப்ச்ச்.. பைக் எங்கடா?”

அதற்கு மேல் எதுவும் பேசாமல் பைக்கை எடுத்து வந்தவன், அதியனை பின்னால் அமர வைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

“எங்கணா போகனும்?”

“மண்டபத்துக்கு போ” என்றவன் செல்லும் பாதையை காட்டியபடி வந்தான்.

மண்டபத்தில் பலர் கிளம்பியிருக்க, மணமக்களை அழைத்துக் கொண்டு குடும்பமும் கிளம்பத் தயாரானது.

“எல்லாம் எடுத்து வச்சிட்டியா வானு? எதுவும் விட்டுப்போயிருக்கா பாரு” என்று மலர் கூற, வனிஷாவும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்நேரம் மகாலட்சுமியும் தீபாவும் ஆட்டோவில் வந்து இறங்கினர்.

“மகா…” என்று வாசலில் நின்று தாம்பூலப்பையை கொடுத்துக் கொண்டிருந்த செல்வகுமார், தங்கையை பார்த்து எழுந்து விட்டான்.

கிளம்பிக் கொண்டிருந்த சொந்தங்களில், எஞ்சியவர்கள் மகாவை பார்த்ததும் வேடிக்கை பார்க்க நினைத்து அப்படியே நின்று விட்டனர்.

கண்ணீரில் கரைந்த விழிகளோடு, மகாலட்சுமி அண்ணனை பார்த்து விட்டுத் தலை குனிந்தாள்.

“உள்ள கூட்டிட்டுப்போ.. வேற எதோ நடந்துருக்கு போல” என்று கிருபாவின் கணவன் கூற, செல்வகுமார் உடனே தங்கையை நோக்கி வந்தான்.

“எங்கடி போன? எதோ காதலிச்சவன் கூட ஓடிப்போயிட்டனு சொன்னாங்க. இப்படி தனியா வந்து நிக்கிற? அவன் என்ன ஆனான்? பதில் சொல்லுறாளா பாரேன்” என்று ஆளுக்கொரு கேள்வியோடு மகாவை வளைத்திருந்தனர்.

எல்லோரையும் தள்ளிக் கொண்டு உள்ளே புகுந்த செல்வகுமார், மகாவின் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாக சென்று விட்டான்.

பின்னால் தீபாவும் ஓடிச்செல்ல, வேலை வெட்டி இருப்பவர்கள் கிளம்பி விட்டனர். வேறு பொழுது போக்கில்லாமல், அடுத்தவன் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கும் பழக்கமுடைய வம்பர்கள், சட்டமாய் அங்கு நின்றனர்.

சிலர் செல்வகுமாரை தொடர்ந்தும் சென்றனர்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
14
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்