செல்வகுமாரும் தாத்தாவும் மட்டும் மண்டபத்தில் வேலையைக் கவனித்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு விசயம் தெரியவில்லை.
பரமேஸ்வரியும் ஸ்ரீனிவாசனும் பேச்சற்று அமர்ந்திருந்தனர். மலர்விழி மௌனமாக யோசனையில் இருந்தார். ஆளாளுக்கு என்ன செய்வது என்று புரியாமல் திணறிப்போய் இருக்க, நந்தகோபாலன் வந்து சேர்ந்தார்.
விசயத்தை எவ்வளவு பக்குவமாக சொல்லியும் ஆட்டம் கண்டு விட்டார். மனைவி படுத்தபடி இருப்பதைப் பார்த்து விட்டு, அவர் கையைப் பிடித்துக் கொண்டு அருகே அமர்ந்து விட்டார்.
அவருக்கு அடுத்து என்னவென்று புரியவில்லை. வனிஷாவை தான் இப்போது எல்லோருமே நம்பி இருந்தனர்.
“வானுமா.. சரினு சொல்லுடா” என்று பாட்டி கையைப்பிடித்துக் கொள்ள, அவளுக்கு தொண்டை அடைத்தது.
பாட்டியை விட்டு விட்டு சுற்றிப் பார்த்தாள். எல்லோரும் எதோ ஒரு வகை பதட்டத்தில் இருப்பது புரிய, அவளுக்கு இப்போது சற்று நிதானம் வந்தது. ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்தாள்.
எல்லோருமே அவளிடம் மன்றாடும் பார்வையை பதித்து இருக்க, வருத்தமாக இருந்தது.
‘இப்படிப் பார்க்காதீங்க’ என்று நினைத்தவள் சில நொடிகள் கண்ணை மூடி ஆழ்ந்து சுவாசித்தாள்.
படபடவென இருந்தது மனம். அதை எப்படி சரி செய்வதென்று விளங்கவில்லை. அதனால் அதை அப்படியே ஒதுக்கி விட்டு, அடுத்து என்ன என்று யோசித்தாள்.
இவர்கள் கேட்பதற்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. நிதானமாக யோசிக்க நேரமும் இல்லை.
“பாட்டி.. இதுல உடனே முடிவெடுக்க முடியாது” என்றவள் ஒரு நொடி அமைதியாக இருந்து விட்டு, “நான் யதுநந்தன் கிட்ட பேசிட்டு அப்புறமா.. முதல்ல அவர இங்க வர சொல்லுங்க” என்றாள்.
“இதோ போய் கூட்டிட்டு வர்ரேன்” என்று கிளம்பிய பரமேஸ்வரியின் கையைப்பிடித்தாள்.
“நீங்க நில்லுங்க அத்த” என்றவள், சீதாவின் மகளை பார்த்தாள்.
அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, எதுவும் சாப்பிடாததில் பசியெடுக்க, அங்கிருந்த ஒரு ஆப்பிளை எடுத்து அவள் பல்லுக்கு வந்த அளவு கடித்துக் கொண்டிருந்தாள் சீதாவின் ஆறு வயது மகள் சமீரா.
” சமீ.. இங்க வாடா” என்று அழைக்க, ஆப்பிளோடு வந்து நின்றாள்.
“கழுவாம சாப்பிடுவாங்களா? நீ போய் யது மாமாவ பாட்டி கூப்பிட்டாங்கனு கூட்டிட்டு வா. நான் கட் பண்ணி வைக்கிறேன்” என்று கூற, “ஓகே அத்த” என்று ஓடினாள்.
“சமீ பசியோட இருக்கா அண்ணி. இதைக்கூட கவனிக்காம பேசிட்டு இருக்கோம். இதை கட் பண்ணி கொடுங்க அண்ணி”
ஆப்பிளை சீதாவிடம் கொடுக்க, அவள் உடனே கழுவி எடுத்து மகளுக்கு வெட்டி வைத்தாள்.
சிறு பிள்ளையின் பசியை உணர்ந்து கொண்டு, மற்றவர்களும் இப்படித்தான் இருப்பார்களோ என்று பார்வையை ஓட்டினாள் வனிஷா.
தாத்தா சோர்ந்து போய் அமர்ந்து இருந்தார். அவரருகே பாட்டி அவளை பார்த்தபடி வேண்டுதலோடு படுத்திருந்தார்.
ஓரத்தில் வசந்தா கலக்கமும் அதை மறைக்கும் அமைதியுமாக நின்று இருக்க, அவரருகே பரமேஸ்வரி வாழ்வே முடிந்தது போல் கண்ணீர் விட்டு அதுவும் வற்றிப்போய் அமர்ந்து இருந்தார்.
வெற்றிவேலும் ஸ்ரீனிவாசனும் என்ன செய்வதென்று யோசனையில் நிற்க, சீதாவும் மலர்விழியும் ஆப்பிளை வெட்டி வைத்துக் கொண்டிருந்தனர்.
“ம்மா.. அந்த ஃப்ரிட்ஜ்ல தண்ணி பாட்டில் இருக்கும். எடுத்து ஆளுக்கு கொஞ்சம் கொடுங்க” என்றாள் வனிஷா.
உடனே எடுத்து, அங்கிருந்த டம்ளரில் ஊற்றி எல்லோர் கையிலும் ஒன்றை திணித்து குடிக்க வைத்தார் மலர். தனியாக ஒரு பாட்டிலை எடுத்துக் கொண்டு அமர்ந்த வனிஷா, பாட்டில் காலியாகும் வரை குடித்து முடித்தாள்.
அவ்வளவு தூரம் தொண்டை வரண்டு போயிருந்தது.
இப்போது சற்று நிதானமாக கையைத்திருப்பி மணி பார்த்தாள். மணி ஐந்தை தொட ஆரம்பித்து இருந்தது.
“மாமா. பெரியப்பா.. இந்த நேரம் சொந்தகாரவங்க எல்லாருமே எந்திருச்சுப்பாங்க. அவங்க நம்மல தேடி இங்க வந்தா விசயம் விபரீதமா பரவிடும். நீங்க ரெண்டு பேரும் போய் அவங்கள கவனிங்களேன். யதுநந்தன் வந்துட்டா பேசிட்டு உங்களுக்கு ஃபோன் பண்ணுறோம்”
நிதானமாக பேசியவளை பார்த்து எல்லோருக்குமே சற்று நம்பிக்கை வந்தது.
“அப்ப உனக்கு சம்மதமா?” என்று பாட்டி பரபரப்புடன் எழுந்து கேட்க, “அவரு சரினு சொல்லிட்டா பார்க்கலாம் பாட்டி” என்று முடித்து விட்டாள்.
“அவன் சொல்லிட்டா நீயும் ஒத்துக்குவியா?” என்று பாட்டி மீண்டும் கேட்க, அவரை அழுத்தமாக பார்த்தவள், “கொஞ்சம் பொறுமையா இருங்க” என்றாள்.
பிறகு வெற்றிவேலையும் ஸ்ரீனிவாசனையும் பார்த்தாள்.
“நீங்க போய் முடிஞ்ச வரை சொந்தகாரவங்கள சமாளிங்க. எல்லாருமே இங்க இருக்கோம்னா சந்தேகம் வந்துடும். எதுக்கும் ரெடியாகிட்டே போங்க. நான்.. பேசிட்டு கால் பண்ணுறேன்” என்று அவர்களை முதலில் அனுப்ப பார்த்தாள்.
இருவருக்குமே அவள் சொன்னது சரியாகப்பட்டது. அங்கிருந்தவர்களும் அதை ஆமோதித்தனர்.
“ஆமா ஆமா. நம்மல்ல யாரையும் காணோம்னா நேரா தேடி இங்க வந்துடுவாங்க. எதாவது சொல்லி சமாளிங்க. அப்படியே காலை சாப்பாட்டுக்கு பொறுப்ப நீ போய் பாரு செல்வா. இங்கயே எல்லாரும் இருக்க வேணாம்.” என்று சுந்தரவல்லி கூற, இருவரும் கதவை நோக்கி நடந்தனர்.
திடீரென நின்ற ஸ்ரீனிவாசன், வனிஷாவின் அருகே வந்து அவளது தலையில் கைவைத்தார்.
“நீயும் என் மக தான்மா.” என்றவருக்கு குரல் தளுதளுத்தது. உடனே அதை சரி செய்து கொண்டு வெளியேறினார்.
அவர்கள் சென்றதும், “உனக்கு வேணுமா வானு?” என்று ஆப்பிளை காட்டி கேட்டார் மலர்விழி
“தாத்தாவுக்கும் பாட்டிக்கும் கொடுங்கமா.” என்று கண்ணை காட்ட, அவரிடம் சென்றார்.
“இத சாப்பிடுங்க மாமா.”
“வேணாம்மா”
“ப்ச்ச்.. அவங்க சம்மதம் சொல்லிட்டா இன்னும் நிறைய வேலை பார்க்கனும். இத சாப்பிடுங்க. அப்ப தான் நடமாட முடியும். இதுல கேள்வி கேட்குறவங்களுக்கு பதில் வேற சொல்லனும். நம்ம சொந்தக்காரவங்கள சமாளிக்கிறது அவ்வளவு ஈசி இல்ல” என்று வற்புறுத்தி இருவரையும் உண்ண வைக்க, கதவைத் திறந்து கொண்டு யதுநந்தன் வந்து விட்டான்.
“சமீ ஆப்பிள் இருக்கு பாரு. சாப்பிடு” என்று அவளிடம் சொல்லி விட்டு, வனிஷா எழுந்து நின்றாள்.
யதுநந்தன் அங்கிருந்தவர்களை பார்த்து விட்டு ஒரு பெரு மூச்சு விட்டான்.
“தாத்தா.. ” என்று அவரருகே செல்லப்போக, “நில்லுங்க” என்று வனிஷா தடுத்தாள்.
அவளை திரும்பிப் பார்த்தான்.
“நடந்தது எல்லாம் உங்களுக்கும் தெரிஞ்சுருக்கனுமே?” என்று கேட்க, மற்றவர்களைப் பார்த்து விட்டு மௌனமாக தலையாட்டினான்.
“அக்கா சொன்னா”
“மகாவ தேடச் சொல்லலாம்ல? அவ தானா தான் போயிருந்தாலும் அவள தேடனும்ல? எங்கயாவது மாட்டியிருந்தா?”
“இருக்க இடம் தெரியும்” என்று யது கூற, மற்றவர்கள் அவனை அதிர்ச்சியோடு பார்த்தார்கள்.
“எங்க?” என்று பதட்டமாக எல்லோருமே கேட்டனர்.
“ஹாஸ்பிடல்ல இருக்கா” என்றவனின் குரல் இறுக, மற்றவர்கள் பதறினர்.
“அய்யோ ஏன்?” என்று பரமேஸ்வரி பதறி விட்டார்.
இதுவரை மகள் என்ன ஆனாளோ என்ற கவலை அவருக்குள்ளும் இருந்தது.
“அங்க ஒருத்தன.. அவளோட லவ்வர் சூசைட் அட்டன் பண்ணிட்டான். அதுனால இங்க இருந்து போயிட்டா” என்று கூறியவனுக்கு அவமானமாக இருந்தது.
இந்த திருப்பத்தை அவனும் எதிர்பார்க்கவில்லை. காதல் தான் பெரிது என்றால், வீட்டில் சொல்லியிருக்கலாம். அவர்களது குடும்பத்தில் காதல் கல்யாணம் ஒன்றும் புதிதல்ல. இப்படி திருமணம் வரை வந்து விட்டு, நள்ளிரவில் சென்றிருக்கிறாளே என்று ஆத்திரமாக வந்தது.
“என்னது லவ்வரா?” என்று பரமேஸ்வரி மீண்டும் நெஞ்சை பிடித்து விட்டார்.
மற்றவர்களும் அதிர்ச்சியாகப் பார்க்க, “கன்ஃபார்ம்மா தெரியுமா?” என்று வனிஷா கேள்வி கேட்டாள்.
யது அவளை ஒரு நொடி பார்த்து விட்டு, மேலும் கீழும் தலையசைத்தான்.
“எந்த ஹாஸ்பிடல்? எப்படித்தெரியும்?”
“சொன்னது வேற யாருமில்ல.. தீபா தான்”
விசயத்தை சாதாரணமாக சொன்னாலும், அவனது குரலில் இருந்த கோபமும் வெறுப்பும் வனிஷாவை கவனிக்க வைத்தது.
“தீபாவுக்கு தெரியுமா? எங்க அவ?” என்று வேகமாக வந்த வசந்தாவை பார்வையில் அடக்கினான்.
“இப்ப அவள திட்டி என்ன ஆகப்போகுது? முடிஞ்சுடுச்சு எல்லாம். அதோட விடுங்க” என்று கூற, “எதுவும் முடியல” என்று வனிஷா கூறினாள்.
யது கேள்வியாக பார்க்க, “இவங்க எல்லாரும் இந்த கல்யாணம் நிக்க கூடாதுனு நினைக்கிறாங்க. அதுவும் உங்க கல்யாணம் நின்னுட்டா திரும்ப நடக்காதுனு வருத்தப்படுறாங்க. சோ…” என்று இழுத்து நிறுத்தினாள்.
“சோ?”
“என்னை மணப்பெண்ணா உட்கார சொல்லுறாங்க” என்று பட்டென கூறியிருக்க, அவன் முகத்தில் பேரதிர்ச்சி.
“வாட்?” என்றவன், “யாரு ஐடியா இது?” என்று கோபமாக கேட்டான்.
“எல்லாரோடதும் தான்”
“யது..” என்று பாட்டி வாயைத்திறக்க, வனிஷா பாட்டியை ஒரு பார்வை பார்த்தாள்.
“நான் பேசிக்கிறேன் பாட்டி” என்று அழுத்தமாக கூற, “வானு.. யது…” என்று மீண்டும் ஆரம்பித்தார்.
“பாட்டி.. நான் பேசிக்கிறேன்னு சொன்னேன்” என்று அவள் அழுத்தமாக மீண்டும் பேச, சத்தியபாமா வாயை மூடிவிட்டார்.
“நீங்க கொஞ்சம் வாங்க. இவங்க எதாவது பேசிட்டே இருப்பாங்க” என்று யதுவை அழைத்தவள் அறையை விட்டு வெளியேற, யதுநந்தன் அவளை ஆச்சரியமாய் பார்த்தபடி பின்னால் சென்றான்.
அருகே இருந்த அறைக்குள் சென்று நின்றாள்.
“ஃபைன்.. விசயம் இதான். மகா இல்லாததால என்னை கல்யாணப்பொண்ணா உட்கார சொல்லுறாங்க. நான் உங்க கிட்ட பேசனும்னு சொல்லிட்டேன். இது உங்க வாழ்க்கையும் தான?”
இத்தனை வருடத்தில் இன்றுதான் வனிஷா அவன் முகத்தை பார்த்து பேசுகிறாள். அதுவே அவனுக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது.
“உனக்கு இதுல சம்மதமா?” என்று அவள் முடிவை அறிய கேட்டான்.
“உங்களுக்கு ஓகேவானு முதல்ல சொல்லுங்க” என்று அவளும் கேட்க, ஒரு நொடி அமைதி காத்தான்.
“இது யாரோட ஐடியா?”
“பாட்டியோடது தான். ஆனா அத்தை மாமா எல்லாருக்குமே இது சம்மதம்னு தான் தோனுது. எனக்கு தான் ஒரு வேளை மகா எதாவது பிரச்சனையில மாட்டி இருப்பாளோ? அவள காப்பாத்தனுமோ? இல்ல திரும்பி வந்துடுவாளானு டவுட் இருந்துச்சு. இப்ப நீங்களே ரீசன் சொல்லிட்டீங்க. இனி..?”
அவளது யோசனையை எல்லாம் சொல்ல, யதுநந்தன் அவளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தான்.
“உனக்கு காதல்னு எதுவும்?”
“இல்ல. உங்களுக்கு மகாவ?”
“இல்ல. எதோ கல்யாணம். நடத்தி வைக்கிறாங்க. நடக்கட்டும்னு தான் இருந்தேன்”
“ஐ நோ”
“வாட்?”
“உங்களுக்கு இந்த கல்யாணத்துல பெருசா இன்ட்ரெஸ்ட் இல்லனு கெஸ் பண்ணிருந்தேன்”
யதுநந்தனின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.
“எப்படி?”
“அது அப்படித்தான். ஆனா மகாவுக்கு இந்த கல்யாணம் அண்ட் உங்கள ரொம்ப பிடிச்சுருக்குனு நினைச்சேன். இப்படி சொதப்பிட்டா”
யதுநந்தனின் முகம் மீண்டும் இறுகியது.
“என்ன நடந்துச்சாம்?”
“நைட் அவன் சூஸைட் அட்டன் பண்ணதா நியூஸ் வந்துருக்கு. தீபா இது மிரட்டலா இருக்கும்னு சொல்லிருக்கா. ஆனா தீபா தூங்குனப்புறம் மகா அவன பார்க்க ஹாஸ்பிடல் போயிட்டா. ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப்.”
“முன்னாடியே ஒரு லவ்வர் இருந்தான்னா.. ஏன் அத சொல்லல?”
“தெரியல. நான் கேட்கல. இப்ப அவன் வேணும்னு போயிட்டா. அவ்வளவு தான்”
“சரி போகட்டும். அவள அப்புறம் பார்க்கலாம். இப்ப நீங்க உங்க முடிவ சொல்லுங்க”
இரண்டு நொடி அவளை பார்த்து விட்டு, “வா” என்று கதவை திறந்து வெளியேறினான்.
அந்த அறையில் எல்லோரும் பதட்டத்தோடு காத்திருக்க, இருவரும் உள்ளே வந்தனர்.
“எனக்கு ஓகே” என்று யதுநந்தன் கூறி விட, எல்லோரின் பார்வையும் வனிஷாவிடம் பதிந்தது.
அவளது பார்வை மலர்விழியிடம் இருக்க, அவர் கண்ணை மூடித்திறந்தார்.
“எனக்கும் ஓகே.” என்று விட்டாள்.
தொடரும்.