Loading

“சாரி..” என்று வனிஷா வருத்தமும் தயக்கமுமாக கூற, யது அவளை இமை சிமிட்டாமல் பார்த்தான்.

சில மணி நேரங்களுக்கு முன்பு…

யதுநந்தன் அப்போது தான் ஊர் திரும்பியிருந்தான். பாட்டி ஊரில் காம்ப்ளக்ஸ் கட்டும் வேலை ஆரம்பித்திருந்தது. அதை பார்த்து விட்டு, அங்கு நான்கு நாட்கள் தங்கி விட்டு திரும்பியிருந்தான்.

வீட்டில் யாரும் இல்லை. வெளியே தாழ்ப்பாள் மட்டுமே போடப்பட்டிருக்க, கதவை திறந்து உள்ளே சென்றான். வசந்தா பரமேஸ்வரியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அறைக்குள் சென்றவன் காதில், கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

‘யாரு வர்றது?’ என்ற கேள்வியுடன் சன்னல் வழியாக பார்க்க, வனிஷா தான் காரை விட்டு இறங்கினாள்.

அவளை பார்த்ததும் சட்டென முகம் மலர, உடனே வெளியே வந்தான். வனிஷா காரில் இறங்கி மலரை பார்க்கப்போக, அங்கும் வீடு பூட்டி இருந்தது.

‘எங்க போனாங்க? பெரியம்மா வீட்டுல இருக்காங்களோ?’ என்று தோன்றி உடனே திரும்பி நடக்க, “நிஷா” என்று யது அழைத்தான்.

அவனது குரல் கேட்டு முகம் மலர திரும்பியவள், “எப்ப வந்தீங்க அத்தான்? சொல்லவே இல்ல? வேலை முடிஞ்சதா?” என்று அடுத்தடுத்து கேள்வி கேட்டு அவனை நோக்கிச் சென்றாள்.

“இப்ப தான் வந்தேன். சும்மா சர்ப்ரைஸ்”

“அப்ப நானும் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சுருக்கேன்” என்றவள், அவனை இழுத்துச் சென்று காரின் முன்பு நிறுத்தினாள்.

“எப்படி இருக்கு? அம்மாவுக்காக வாங்குறேன்னு சொன்னேன்ல?”

ஆச்சரியமாய் அவளை பார்த்தவன், காரை நன்றாக பார்த்தான். அப்போது தான் ஞாபகம் வந்தது. வனிஷா ஓட்டுநர் பக்கமிருந்து இறங்கியது.

“எப்ப வாங்குன?”

“இப்ப தான். அம்மாவுக்கு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு.. ஆனா ஆள காணோம். எங்க போனாங்கனு தெரியல”

“வெளிய போயிருப்பாங்க. அம்மா அத்த கிட்ட இருக்காங்க. கூப்பிட்டு கேட்போம். வா”

“இருங்க வரட்டும். நீங்க கார பத்தி சொல்லுங்க. எப்படி இருக்கு?”

“செம்மடா” என்றவன் காரை ஆராய்ந்தான்.

ஆழ் கடலின் நீல நிறத்தில் இருந்தது கார். மிகவும் பிரபலமான நிறுவனத்தின் கார் தான். அதன் விலை சொல்லாமலே அவனுக்குத்தெரிந்தது.

“கலர் நீ சூஸ் பண்ணியா?”

“எப்படி கண்டு பிடிச்சீங்க?”

“உன் கிட்ட இருக்க பல டிரஸ் இந்த கலர்ல தான இருக்கு?*

“ஆமா. இந்த கலர்ல தான் வேணும்னு கஸ்டமைஸ் பண்றேன். உள்ள உட்காருங்க” என்றவள் கதவை திறந்து விட, யதுநந்தன் அமர்ந்து கொண்டான்.

காரை பற்றி வாய் மூடாமல் பேசினாள் வனிஷா. எல்லாம் தெரிந்தாலும், அவளுக்காக சிரிப்போடு தலையாட்டிக் கேட்டுக் கொண்டான்.

“நீ தான் ஓட்டிட்டு வந்தியா? லைசன்ஸ் இருக்கா?”

“இருக்கே.. எப்பவோ வாங்கிட்டேன். அப்ப அப்ப ஆஃபிஸ் கார் ட்ரைவ் பண்ணுற மாதிரி இருக்கும். அதான் வாங்கிட்டேன்”

“ஆசைப்பட்டத நிறைவேத்திட்ட.. வாழ்த்துக்கள் பொண்டாட்டி” என்றவன், அவள் சிரிக்கவும் உடனே இழுத்து அழுத்தமாய் முத்தமிட்டான்.

வெளியே வசந்தா வருவது தெரிய, இருவரும் இறங்கினர்.

“ஹேய்.. இது என்ன காரு?” என்று வசந்தா ஆச்சரியத்துடன் கேட்க, “நல்லா இருக்கா அத்த?” என்று கேட்டாள் வனிஷா.

“நல்லா இருக்கு.. புதுசா வாங்குனீங்களா? அடப்பாவிங்களா.. ஒரு வார்த்தை எங்க கிட்ட சொல்லவே இல்ல”

“எப்ப வாங்குனீங்க? நீ எப்ப வந்த யது?” என்று பரமேஸ்வரி கேட்க, “இப்ப தான். மலரத்த எங்க?” என்று கேட்டான்.

“யாரையோ பார்க்க அத்தையும் மலரும் போயிருக்காங்க” என்று கூறும்போதே, ஆட்டோவில் வந்து இறங்கினர்.

“ம்மா.. ம்மா.. இங்க வாங்க” என்று ஓடிச் சென்று, அவரது கையைப்பிடித்து இழுத்து வந்தாள் வனிஷா.

“என்ன வானு? எதுக்கு இழுத்துட்டு போற? பாட்டி வரட்டும்”

உடனே பாட்டியின் கையையும் பிடித்துக் கொண்டவள், இருவரையும் அழைத்து வந்து காரை காட்டினாள்.

“பிடிச்சுருக்கா?”

“நல்லா இருக்குடா.. உனக்கு பிடிச்ச கலர்ல இருக்கு.”

“உங்களுக்கு தான். இனி ஆட்டோல போக வேணாம். கார்ல போங்க”

“எனக்கு கார் ஓட்டத் தெரியாது வானு”

மலர் சிரித்துக் கொண்டே கை விரிக்க, “இது ஆட்டோமேடிக் மா. தனவே ஓடும்” என்றாள்.

“அப்ப லைசன்ஸ் இல்லாம போனா போலீஸ் பிடிக்காதா?”

“ஹி ஹி.. ஆமால.. சரி உங்களுக்கு லைசன்ஸ் எடுக்கலாம்”

“ஆளப்பாரு.. எனக்கு வேற வேலை இல்ல?”

மலர் எவ்வளவு சிரித்துப் பேசினாலும், அவரது கண்கள் கலங்கி இருந்தது.

“சரி சரி பேசிட்டே இருக்காதீங்க. நிஷா அத்தை கூட ஒரு ரவுண்ட் போயிட்டு வா. அத்த ஏறுங்க”

அவன் கதவை திறந்து விட, “எல்லாரும் போகலாம்” என்றார் மலர்.

“ஆமா.. வாங்க எல்லாரும் போகலாம்”

வனிஷாவும் அழைக்க, “என்னால முடியாது. ஆட்டோல வந்ததே தலை சுத்திடுச்சு. முதல்ல மலர கூட்டிட்டு போ” என்று ஒதுங்கிக் கொண்டார் சத்தியபாமா.

அவருடைய குரலும் தளுதழுத்ததையும் பார்த்து விட்டு, வசந்தாவும் பரமேஸ்வரியும் ஒருவரை ஒருவர் யோசனையோடு பார்த்தனர். கூடவே மறுத்து விட்டனர்.

“அத்த.. உங்க மகளோட டிரைவிங்க நினைச்சு பயமா இருக்கா? அதெல்லாம் நல்லா தான் ஓட்டுவா. உட்காருங்க” என்று சிரித்துக் கொண்டே, மலரை அமர வைத்தான் யதுநந்தன்.

வனிஷாவும் சந்தோசமாக ஏறிக் கொண்டு, தெருவை சுற்றி வந்தாள்.

மீண்டும் வீடு வந்து இறங்கியதும் பரமேஸ்வரி, “எவ்வளவு விலை யது? எதுக்கு திடீர்னு கார் வாங்கியிருக்கீங்க? வீட்டுல ஒன்னு இருக்குல?” என்று கேட்டார்.

கதவை திறந்து இறங்கிய வனிஷாவின் காதிலும் விழுந்தது.

“எவ்வளவு இருந்தா என்ன அத்த? வீட்டுல ஒண்ணுக்கு ரெண்டு இருப்பது நல்லது தான?” என்று கேட்டான் யதுநந்தன்.

பரமேஸ்வரி வசந்தாவை பாருங்க, “நல்லது தான். ஆனா விலை அதிகமா இருக்கும் போலயே.. எங்க கிட்ட சொல்லிட்டு வாங்கிருக்கலாம்ல? ஊருல இருந்து வந்தது கூட தெரியல. நேரா போய் கார வாங்கிட்டு வந்து நிக்கிறீங்க” என்றார் வசந்தா.

வனிஷாவிற்கு சட்டென சிரிப்பு மறைந்து விட, யதுவை பார்த்தாள்.

“ம்மா.. எதுக்கு இப்ப இத்தனை கேள்வி கேட்குறீங்க? காருக்கு ஒரு பூஜை போட ஏற்பாடு பண்ணுங்க. போங்க.” என்றவன் வனிஷாவிடம் வந்தான்.

மலர், அருகே நின்று காரைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ஒழுங்கா ஓட்டுனாளா இவ?” என்று கேட்க, மலர் சந்தோசமாக தலையாட்டினார்.

“விலை தான் நிறைய சொல்லுறா.. அதான்…”

“கருணா அவ்வளவு தான் அத்த இருக்கும். நீங்களும் போய் அம்மா கூட சேர்ந்து, இதுக்கொரு பூஜைய ரெடி பண்ணுங்க. இல்லனா நாளைக்கு கோவிலுக்கு போய் பூஜை பண்ணிடலாம்”

“ஆமா.. நானும் அதான் நினைச்சேன். அண்ணி கிட்ட சொல்லுறேன்” என்றவர் வசந்தாவை தேடிச்சென்றார்.

“நீ ஏன் இப்படி நிக்கிற?” என்று வனிஷா நிற்பதை பார்த்து கேட்க, அவள் சமாளிப்பாக தலையசைத்தாள்.

“கார பூட்டிட்டு உள்ள போகலாம் வா” என்றவன், அவள் விரலால் பூட்டி விட்டு, தோளில் கைபோட்டுக் கொண்டு நடந்தான்.

“இங்க கரேஜ் கட்டுவோமா? ரெண்டு காரும் வாசல்ல சும்மா நிக்க வேணாம். இங்க கட்டுவோமா? இல்ல அங்க கட்டுவோமா?”

இரண்டு இடங்களை காட்டி யது கேட்க, “எங்கனாலும் சரி” என்றாள்.

குரலில் சற்றுமுன் இருந்த துள்ளலை காணவில்லை.

“நிஷா.. என்னாச்சு?”

“உள்ள போய் பேசலாம்” என்றவள், வேகமாக உள்ளே சென்று விட்டாள்.

யதுவிற்கு அவளது நடவடிக்கை விசித்திரமாக தெரிய, யோசனையுடன் பின்னால் சென்றான்.

அறையில் சென்று கதவை அடைத்தது, “சாரி” என்றாள் வனிஷா.

யது புரியாமல் பார்த்தான்.

“எதுக்கு சாரி?”

“நான் கார் வாங்குறத பத்தி உங்க கிட்ட எதுவும் சொல்லல..?”

“அதான் சர்ப்ரைஸ்னு சொன்னியே..?”

“இல்ல.. எல்லாரும் நீங்களும் நானும் சேர்ந்து போய் வாங்குனதா நினைக்கிறாங்க. நானும் உங்க கிட்ட சொல்லிட்டு வாங்கியிருக்கனும். தனியாவே எல்லாம் பண்ணி பழகிட்டானா.. அதான் கார் வாங்கும் போதும் அப்படியே… சாரி.. உங்க கிட்ட சொல்லக்கூடாதுனு இல்ல. என்னோட ஹஸ்பண்ட் நீங்க. உங்க கிட்ட சொல்லி இருக்கனும். பண்ணிட்டனோனு தோணுது. அதான்… சாரி..”

ஒரு நொடி இமை சிமிட்டாமல் பார்த்தவன், அடுத்த நொடி அவளை இழுத்து கன்னத்தை கடித்திருந்தான்.

“வலிக்குது அத்தான்” என்றவள் பிடித்து தள்ளி விட்டாள்.

யது மீண்டும் மறு கன்னத்தை கடிக்க வர, அவசரமாக கைகளால் மறைத்துக் கொண்டாள்.

“நீங்க என் ஹஸ்பண்ட். அதுனால உங்க கிட்ட சொல்லிட்டு தான் நான் வாங்கி இருக்கனும். உங்க சொல்லிட்டு தான் இனிமே நான் மூச்சு கூட விடுவேன். இல்லனா மூச்ச பிடிச்சுட்டு உட்கார்ந்து இருப்பேன்”

அவளைப்போலவே அவன் சொல்லிக்காட்ட, இமை தட்டி பாவமாக பார்த்தாள்.

“அப்படியே கடிச்சு துப்பிடுவேன். நான் என்ன உனக்கு அப்படியா தெரியுறேன்? புருஷன் கிட்ட சொல்லாம எதையும் செய்யக்கூடாதுனு ரூல்ஸ் போடுற ஆள் மாதிரியா இருக்கேன்? ஆளப்பாரு.. வந்துட்டா சாரி சொல்ல..”

“எல்லாரும்..”

“எல்லாரு கிட்டயும் நானே சொல்லுவேன். இது என் பொண்டாட்டி வாங்குன காரு. அதுவும் என் அத்தைக்கு வாங்கி கொடுத்துருக்கா. அத நினைச்சு நான் பெருமை படுறேன்னு. அத விட்டுட்டு என் பொண்டாட்டி என் கிட்ட பர்மிஷன் கேட்கல. எனக்கு தராம, அவ அம்மாக்கு கொடுக்குறானு சண்டை போட மாட்டேன். புரியுதா?”

இதழ் மலர தலையாட்டியவள், உடனே உதட்டை பிதுக்கினாள்.

“இத சும்மா சொல்ல வேண்டியது தான? இப்படியா கடிப்பீங்க? மார்க் இருக்கு பாருங்க”

“மேக் அப் போட்டு மறைச்சு விடு. வேற எதுக்கு க்ரீம் டப்பாவ எல்லாம் புதுசு புதுசா வாங்கிட்டு வந்து வைக்கிறேனாம்? நான் கடிக்கிற இடத்த எல்லாம் மறைக்கத்தான்”

“அத்தான்..”

“கத்தவா செய்யுற?” என்று கேட்டவன், மேலும் பல அடையாளங்களை பரிசாக வழங்கினான்.

இரவு அவன் மீது கை போட்டுக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த வனிஷாவை பார்த்தான். எத்தனை அதிசயங்கள் நடந்து இவள் தன் வாழ்வில் வந்தாள்! நினைக்கும் போது நிம்மதியாகவும் இருந்தது. ‘நல்ல வேளையாக அன்று சரியான முடிவெடுத்து இவளை மணம் செய்தேன்’ என்று தனக்குள் கூறிக் கொண்டான்.

முதலில் திருமணம் பேசியது என்னவோ மகாலட்சுமியுடன் தான். ஆனால் அவள் மீது எந்த எண்ணமும் தோன்றவில்லை. மகாலட்சுமிக்கும் இவளுக்கும் என்ன வித்தியாசம்? எதற்காக இவள் மீது அந்த அன்பு தோன்றியது? பதில் கிடைக்காவிட்டாலும், வனிஷாவை மனைவியாக நினைக்க இனிப்பாக இருந்தது.

மகாலட்சுமியை பற்றி, மருத்துவமனையில் இருக்கும் போதே அதியன் யதுவிடம் எல்லாம் கூறி விட்டான். அதைக் கேட்டதிலிருந்து யது மகாவை விட்டு மொத்தமாக ஒதுங்கிக் கொண்டான்.

ஆனால், அதியன் அவளை விரும்புவதால், அவளை மன்னித்து வாழும் படியும் கூறினான். இக்கட்டில் நடந்த திருமணம் என்றாலும், அவர்களுக்குள் காதல் இருந்தது.

ஆனால் யதுவுக்கும் வனிஷாவுக்கும் இடையில் எதுவுமே இல்லாமல், திடீரென தொடங்கிய உறவு இது. அவனே எதிர் பார்க்காத வகையில், பல ஆச்சரியங்கள் நிறைந்து கிடந்தது.

சாதாரணமாக பார்த்தால், வனிஷாவுக்கும் மகாலட்சுமிக்கும் வித்தியாசம் இல்லை. இருவரும் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, வாழ்வில் பல முடிவுகளை எடுத்தனர்.

ஒரே வித்தியாசம், வனிஷாவின் முடிவுகள் மலருக்காக இருந்தது. மகாலட்சுமியின் முடிவுகள், அவளது நலத்துக்காகவும் பிறரை நோகடிப்பது போலவும் அமைந்து விட்டது.

இன்றும் காரை வாங்கி விட்டு வனிஷா மன்னிப்பு கேட்டபோது, ​​யதுவுக்கு கோபம் தான் வந்தது. ஆனால் அதே கேள்வியை வசந்தா கேட்கும் போது தான், வனிஷா எவ்வளவு யோசித்திருக்கிறாள் என்று புரிந்தது.

“காரோட விலைய சொல்ல மாட்டேங்குற நீ” என்று வசந்தா கேட்டு முறைக்க, தோராயமான ஒரு விலையை சொன்னான்.

“அது என்ன இவ்வளவு இருக்கும்ங்குற? காச கொடுத்து வாங்குன உனக்கு தெரியாதா? மறைக்க பார்க்குற தான?”

“நான் வாங்குனனா? ம்மா.. வாங்குனது நிஷா. அவ தான் பணம் கொடுத்தது”

“முழுக்க முழுக்க அவ சம்பளமா?”

“ஆமா. பல மாசமா காரு வாங்க சேவ் பண்ணி வச்ச பணம்”

“அப்ப நீ எதுவும் கொடுக்கலயா?” என்று கேட்டு, அதிர்ந்தார் வசந்தா.

“எதுக்கு வானுவ மொத்த பணத்தயும் கொடுக்க விட்ட? நீ பாதிய போட்டுருக்கலாம்ல?” என்று கடிந்து கொண்டார் வெற்றிவேல்.

“நம்ம கிட்டயாவது முன்னாடியே சொல்லி இருக்கலாம். ஏதாவது பண்ணிருக்கலாம். இப்ப மொத்தமா கொடுத்துட்டு வந்துருக்கா. இவன் வேடிக்கை பார்த்துருக்கான்”

“அவ மொத்தமா எல்லாம் கொடுத்துருக்க மாட்டா. சேவிங்ஸ் இருக்கும்”

“அதுவும் தெளிவா தெரியாதா உனக்கு? எல்லாத்தையும் யூகத்துல தான் சொல்லுவியா?”

“என்னால முடியல.. முதல்ல என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்கோங்க. வனிஷா தான் கார வாங்கிட்டு வந்தது. நான் கார் வாங்க போகல. அதுனால அதோட விலைய அவ எனக்குச் சொல்லல. மொத்த பணமும் அவளோட சொந்தப் பணம். அதுவும் அந்த கார மலரத்திக்காக மட்டும் தான் அவ வாங்குனதே”

விசயத்தை தெளிவாக அழுத்தமாக விளக்கினான்.

“உனக்கும் தெரியாதா?”

“ஆமா..”

“என்ன இது?” என்று வசந்தா தன் அதிருப்தியை முகத்தில் காட்டினார்.

“உன் கிட்ட கூட சொல்லாம செஞ்சுருக்காளா?”

“என் கிட்ட ஏன் சொல்லனும்? எனக்கும் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நினைச்சுருக்கா. அவ்வளவு தான்”

“ஆனா.. காரு மலருக்கு மட்டும்னு சொல்லுறது தான் இடிக்குது.”

வசந்தாவின் குரலில் தெளிவில்லாமல் இருக்க, மொத்த கதையும் சொன்னால் தான் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தவன் சொல்லி விட்டான்.

சிறு வயதில், வனிஷாவின் மாற்றம் ஏன் வந்தது? என்று ஆரம்பித்து, கார் மலருக்கு மட்டும் ஏன்? என்பது வரை முடித்தான்.

“மலரத்த எந்த தேவைக்காச்சும் கார எடுக்க சொல்லி போயிருக்காங்களா? நீங்க போவீங்க. ஏன்னா அப்பா ஓட்டுவாரு. நான் ஓட்டுவேன். நாம வாங்குன கார். பரமேஸ்வரி அத்த போவாங்க. ஏன்னா செல்வா ஓட்டுவான். மலரத்த? அவங்க இது நாள் வரை எந்த அவசர தேவைக்கும் கார தொட்டது இல்ல. என்னை கூட்டிட்டு போங்கனு கேட்டதும் இல்ல. பாட்டியும் தாத்தாவும் போனா மட்டும் தான், கார்ல ஏறுவாங்க.எங்க போனாலும் ஆட்டோவே போதும்னு போயிடுவாங்க.இந்த குடும்பத்துல கேட்பாரற்று கிடக்குறது மலரது வனிஷாவும் தான்.அப்ப அவங்களுக்கு அவ தான் செஞ்சுக்கனும்?அத தான் நிஷா செய்யுறா.அவ சம்பாதிக்கிறா.அத அம்மாவுக்கு செலவு பண்ணுறா. இத்தனை வருசமா அவ தான் அவ தேவைய கவனிச்சுக்கிட்டது.நாம எல்லாம் கண்டுக்காம கண்ண மூடிட்டு தான இருந்தோம்.இனிமே மட்டும் அவ என் கிட்ட பர்மிஷன் வாங்கி செய்யனுமா? மலருக்கு வாங்குறானு கேள்வி கேட்காதீங்க.இதுவரை அக்கறையில கேட்கல.இனி உரிமையிலயும் கேட்க வேணாம். அவ்வளவு தான் சொல்லுவேன்”

மனதில் இருந்ததை எல்லாம் சொல்லி முடித்து விட்டான். கேட்ட இருவரும் தான் ஸ்தம்பித்து அமர்ந்திருந்தனர். இப்படி ஒரு விசயத்தை எதிர்பார்க்காத அதிர்ச்சி. அவர்கள் முகத்தைப் பார்த்தாலும், அவன் மேலும் எதுவும் பேசவில்லை.

வசந்தா நினைத்து அதிருப்தி கொண்டதை நினைத்து தான், வனிஷாவும் வருந்தியிருக்க வேண்டும். ஆனால் இன்று மட்டுமல்ல, இனி என்றும் அவள் இது போல கவலைப்பட விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டு, அவள் பக்கம் திரும்பி நெற்றியில் இதழ் பதித்தான்.

அடுத்த நாள் காலையில் யது வெற்றிவேலிடம் பேசி விட்டு உள்ளே வர, வனிஷா அலுவலகம் கிளம்பாமல் யோசனையுடன் அமர்ந்து இருந்தாள்.

“கிளம்பலயா நிஷா? டைம் ஆச்சே?”

இந்த நேரத்தில் வேலைக்கு செல்ல பறப்பவள், அமைதியாக அமர்ந்திருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டான்.

“உன்னை தான்டா கேட்குறேன். என்ன யோசிக்கிற?” என்று கேட்டவன் அருகே அமர, “லீவ் போட்டேன்” என்றாள்.

யது அதிர்ந்து பார்த்தான். அவளை விடுமுறை எடுக்க வைக்க அவன் எவ்வளவு போராட வேண்டும் என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும். இன்று அவளாகவே விடுப்பு எடுத்துக் கொண்டாளா?

“லீவா? நீயா? என்ன அதிசயமா இருக்கு?”

“உங்களுக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்கா?”

“இல்லையே”

“அப்ப என் கூட ஒரு இடத்துக்கு வர்றீங்களா?”

“எங்க?”

“போகும் போது சொல்லுறேன்.”

“கோவிலுக்கு போய் காருக்கு பூஜை போடனுமே?”

“ஈவ்னிங் பண்ணிக்கலாம். இப்ப வாங்க”

வசந்தாவிடம் சொல்லி விட்டு, காரையே எடுத்துக் கொண்டு கிளம்பினர். வனிஷா ஓட்ட, யது அருகே அமர்ந்திருந்தான்.

எங்கு போகிறோம்? என்று சொல்லாமலே அழைத்துச் சென்றாள். கார் ஒரு மருத்துவமனையின் முன்னால் நிற்க, யது புரியாமல் பார்த்தான்.

“யார பார்க்க வந்துருக்கோம்?”

“உள்ள போய் சொல்லுறேன்” என்றவள், அவனை அழைத்து சென்று பெயரை பதிவு செய்தாள். மகப்பேறு மருத்துவரை பார்க்க வேண்டும் என்று அவள் கூற, யதுவின் மூளையில் மின்னலடித்தது.

“நிஷா…”

“உஸ்ஸ்.. பேசாதீங்க”

அவள் தடுக்,க அவன் அவளை நன்றாக பார்த்தான். பதட்டத்தை மறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அதை பார்த்து புன்னகை மலர, அவள் கையைப்பிடித்துக் கொண்டான். அவர்களின் நேரம் வர, உள்ளே சென்றனர். மருத்துவர் சோதித்து முடித்து விட்டு, விசயத்தை உறுதி செய்தார்.

சந்தோசத்தில் கண்ணீர் வந்து விட்டது வனிஷாவிற்கு. உடனே முகத்தை இரண்டு கையாலும் மூடிக் கொண்டாள்.

“தேங்க்யூ டாக்டர்” என்ற யது, வனிஷாவை தட்டிக் கொடுத்தான்.

அவர் சொன்ன விசயங்களை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டு, எழுதிக் கொடுத்த மருந்துகளையும் வாங்கிக் கொண்டார்கள். மீண்டும் காரில் அமர்ந்ததும், வனிஷாவை பார்த்தான். கட்டுப்படுத்த முடியாமல் அவளது இதழ்கள் புன்னகையில் விரிந்தே இருந்தது.

“இவ்வளவு எமோஷனல் பர்ஷனா நீ?” என்று கேட்டவன் அவள் தலையை பிடித்து ஆட்ட, “அவ்வளவு ஹாப்பி” என்று சிரித்தாள்.

“எப்ப தெரிஞ்சது?”

“நேத்து சோ ரூம்ல ஒரு பிரக்னெண்ட் லேடிய பார்த்தேன். அவங்க டெலிவரிக்காக கார் வாங்கி வந்துருக்காங்க. எமர்ஜென்ஸி யூஸ்க்கு. அப்ப தான் எனக்கு தோனுச்சு. பட் வீட்டுக்கு வந்ததும் மறந்துட்டேன். அதான் இன்னைக்கு டாக்டர் கிட்டயே கேட்டுரலாம்னு வந்தாச்சு”

இருவரும் முகம் கொள்ளா சந்தோசத்துடன் வந்து வீட்டில் சொல்ல, எல்லோரும் சந்தோசத்தை கொண்டாடினர். அப்போதே காருக்கு பூஜை போட்டு விட்டு, இனி தினமும், வனிஷாவை அலுவலகத்தில் விடுவதும், யதுவின் பொறுப்பும் முடிவு எடுக்கப்பட்டது.

விசயம் அதியனிடமும் மகாலட்சுமியிடமும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

“கான்கிராட்ஜ்” என்ற மகாலட்சுமிக்கு, இப்போது வருத்தமே இல்லை.

அதியனை திரும்பிப் பார்த்தாள். அவன் இயல்பாய் யுதுவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

இவனிருக்கும் போது வேறு எதுவும் வேண்டாம் என்று தோன்ற, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பேசி முடித்தவன், அவளது பார்வையை கவனித்து புருவம் உயர்த்தினான்.

“என்ன?”

“அவங்களுக்கும் நம்ம கூட தான் கல்யாணம் ஆச்சுல? குழந்தையே வந்துடுச்சாம்”

திடீரென அதியனுக்கு இருமல் வந்து விட்டது. குரலை செறுமியவன், “ம்ம்ம்” என்றான்.

“உங்களுக்கு குழந்தை பிடிக்குமா?”

“பிடிக்கும்”

“எனக்கும் கூட பிடிக்கும். தூக்கி கொஞ்ச ஆசையா இருக்கும்.”

“எட்டு மாசம் பொறு. யதுவோட பிள்ளை வரும். தூக்கிக் கொஞ்சலாம்”

சொல்லி விட்டு அவன் செல்ல, மகாலட்சுமி அவன் முதுகை முறைத்தாள்.

அன்றிலிருந்து ஒவ்வொரு பேச்சுக்கும் இடையில் குழந்தையை இழுத்தாள். அதியன் என்ன சமாளித்தும் விடுவதாக இல்லை. குழந்தை பற்றியே பேசி, அவனை பாடாய் படுத்துக் கொண்டிருந்தாள். இன்னும் இருவரும் தனித்தனி அறையில் தான் இருந்தனர். பாக்கியம் திரும்பி வரவில்லை. வினோத்திற்கு ஹாஸ்டல் உணவு சேராமல் போக, அவனுக்காக இந்தியாவில் தங்கி விட்டார்.

அதியனும் மகாலட்சுமியும் மீண்டும் காதலிக்க ஆரம்பித்துவிட்டனர். திருமணத்திற்கு முன்பு காதலித்தார்களா? என்றே தெரியாத நிலை. பல காயங்களை அனுபவித்தனர்.

ஆனால் திருமணத்திற்கு பிறகு காதலித்தார்கள். ஆத்மார்த்தமாய்.. அழகாய்.. உண்மையாய் காதலித்தார்கள். இருவரும் ஒருவரை விட்டு மற்றொருவர் இருக்கவே முடியாத நிலைக்கு வந்து சேர்ந்தனர்.

அந்த சாப்பிங் சென்று வந்த மகாலட்சுமி, குழந்தைகள் வைத்து விளையாடும் பொம்மை ஒன்றை வாங்கி வந்து விட்டார்.

“இத எதுக்கு வாங்கிட்டு வந்தா? பேபிஸ் விளையாடுறது”

“எனக்கு பேபி வராததால என்னை நானே பேபியா நினைச்சு வாங்கிட்டு வந்தேன்”

அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு அவள் கூற, “நீ பேபியா?” என்று முறைத்தான்.

“ஆமா.. நான் அம்மா ஆகிட்டா தான் பேபி கிடையாது. அது வரை நான் பேபி தான்”

புதிதாய் சட்டம் பேசியவளின் அருகே வந்தவன், “நீ பேபியா இல்லையானு இனி நான் சொல்லுறேன்.” என்றவன் அவளிதழில் தன்னிதழை பதித்தான்.

நினைத்தது நடந்த சந்தோசத்தில், மகாலட்சுமியும் அவனை அணைத்துக் கொண்டாள். அவளது ஒத்துழைப்பு கிடைத்ததும், அள்ளிக் சென்றான்.

இருவரும் தங்களது வாழ்வின் பல முள் பாதைகளை கடந்து, நந்தவனத்திற்குள் நுழைந்தனர்.

முற்றும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
40
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்