Loading

 

வீடு அமைதியாக காட்சியளிக்க, மகாலட்சுமிக்கு தான் இருக்க முடியவில்லை. அதியன் வேலை பார்த்தான். அது முடிந்து வீடு வந்தால், அறைக்குள் போய் அடைந்து கொண்டான்.

சாப்பிட்டானா? இல்லையா? எதுவும் தெரியவில்லை. எப்போது போகிறான்? எப்போது வருவான்? அதுவும் தெரியவில்லை. அந்த பகுதி பாதுகாப்பானது என்பதால், அவளை தனியாக விட்டு‌விட்டுச் சென்று விட்டான்.

இரண்டு நாட்கள் தாக்குப்பிடித்த மகாலட்சுமியால், அதற்கு மேல் முடியவில்லை. அருகே இருக்கும் சூப்பர் மார்கெட் சென்று வரலாம் என்று கிளம்பி விட்டாள்.

அவள் கையில் பாக்கியம் கொடுத்த கார்ட் இருந்தது. மூன்று மணி நேரம் அந்த மார்கெட்டை நன்றாக சுற்றி வந்தாள். பொழுது பறந்தது. நேரம் போவது தெரியாமல் சுற்றி விட்டு, வேண்டியதை எல்லாம் வாங்கிக் கொண்டு வெளியே வர, ஊரே இருண்டு போனது போல் இருந்தது.

அதிக நேரமாகவில்லை என்று மணியை பார்த்து உறுதி செய்தவள், நடக்கும் தொலைவே இருந்த வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

வீட்டை நெருங்கிய நேரம், பனிமழை பொழிய ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தாள். பனிமழை எல்லாம் திரைப்படங்களில் பார்த்ததோடு சரி. முதல் முறையாக நேரில் பார்க்கவும் ஆசையாக இருந்தது.

வேகமாக வீட்டுக்குள் சென்று பொருட்களை வைத்து விட்டு, குளிராமல் இருக்க உடைய அணிந்து கொண்டு வந்து, பனியில் நனைய ஆரம்பித்தாள்.

இங்கும் அங்கும் நடந்து பனி மழையை அனுபவித்துக் கொண்டிருக்க,அதியனின் கார் வந்தது. அவளை தாண்டி சென்று நிறுத்தி விட்டு இறங்கியவன், வாசலில் நின்றிருந்தவளை ஒரு பார்வை பார்த்து‌விட்டு ஒன்றும் பேசாமல் உள்ளே சென்று விட்டான்.

அவனது பாரா முகம் அவள் முகத்திலிருந்த சிரிப்பை துடைத்து எறிந்தது.

‘இவன் மன்னிக்கவே மாட்டானா?’ என்று மனம் ஏங்கியது.

‘எதுவுமே ஞாபகம் வராம இருந்திருக்கலாம். இது லவ் மேரேஜ்னு பொய்யாவாச்சும் நிம்மதியா இருந்திருப்பேன்’ என்று நினைத்துக் கொண்டு அங்கேயே நின்றிருந்தாள்.

பனிகள் விழுந்து பாதையை மறைக்க ஆரம்பிக்க, அவளுடைய உடல் வெடவெடக்க ஆரம்பித்து விட்டது.

உடனே உள்ளே ஓடினாள். அதியன் அவள் நடுங்கியபடி ஓடி வந்ததைப் பார்த்துப் புருவம் சுருக்கி விட்டு, அமைதியாகத் திரும்பிக் கொண்டான்.

அவளோ அவனை கவனிக்காமல் ஓடிச் சென்று, கணப்பின் முன்னால் நின்று கொண்டாள். நடுக்கம் குறைய தாமதமாக, பாக்கியத்தை அழைக்க நினைக்க, அவருடைய கைபேசி இங்கு இருந்தது. இந்தியாவிற்கு வேறு எடுத்துச் சென்றிருந்தார். அந்த எண் அவளுக்குத் தெரியாது.

அதியனிடம் கேட்க வேண்டும். ஆனால் பேசாதே என்று விட்டானே.

சில நொடிகள் அதியனை பார்ப்பதும், பிறகு திரும்பிக் கொள்வதுமாக இருந்தாள்.

“என்ன?” என்று அதியனே கேட்டு விட, ஒரு நொடி ஆச்சரியமாகப் பார்த்தாள்.

பிறகு உடனே சமாளித்துக் கொண்டு, “ஆண்ட்டி.. நம்பர்.. வேணும்” என்றாள்.

“எதுக்கு?”

“ரொம்ப குளிருது. என்ன பண்ணனு கேட்கனும்”

“சுடு தண்ணில குளிச்சா நல்லா இருக்கும்”

சொன்ன அடுத்த நொடி எழுந்து ஓடினாள். டப்பில் தண்ணீரை திறந்து விட்டு, அது நிறையும் வரை நிற்க முடியாமல், அறையில் இருந்த ஹீட்டரை போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

கொதிக்கும் நீரில் இறங்கி அமிழ்ந்ததும், நடுக்கம் குறைந்து இதமாக இருந்தது. அந்த இதத்தை அனுபவித்தபடி பல நிமிடங்கள் இருந்தவள், தண்ணீரில் சூடு குறைந்தது தெரிந்து எழுந்து கொண்டாள்.

உடைமாற்றிக் கொண்டு வந்தவளுக்கு அடுத்த சோதனை ஆரம்பித்தது. உடல் கொதிக்க ஆரம்பித்தது. நிற்க முடியாமல் மெத்தையில் விழுந்தவளுக்கு, உடலெல்லாம் வலிப்பது போல் இருந்தது.

‘இருக்கது போதாதா? இந்த ஃபீவர யாரு கூப்பிட்டது?’ என்று கடுப்பாக நினைத்தவள், மாத்திரை போட நினைத்தாள்.

பாக்கியம் அறைக்குச் சென்று, அங்கிருந்த மருந்து பெட்டியை எடுத்து வந்தாள். உள்ளே பல மருந்துகள் இருக்க, எது காய்ச்சலுக்கு என்று புரியவில்லை. அவர் காட்டியிருந்தாலும், இப்போது பார்க்க எல்லாம் குழப்பமாக இருந்தது.

“தீர்ந்திடுச்சா? இது எதுவும் இல்லயே” என்று புலம்பிக் கொண்டே அவள் தேடிக் கொண்டிருக்க, கதவை தட்டி விட்டு உள்ளே வந்தான் அதியன்.

போர்வையை தலை வரை போட்டுக் கொண்டு, மருந்தை தேடிக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்.

அதியன் கையிலிருந்த ட்ரேவை நாற்காலியில் வைத்தான். சூப், மருந்து, தண்ணீர் என அவளுக்கு வேண்டியது அதில் இருந்தது.

“இத குடிச்சுட்டு டேப்ளட் போட்டுக்க” என்றவன் உடனே திரும்ப, “நில்லுங்க” என்றாள் அவசரமாக.

அவனும் திரும்பாமல் நின்று விட, “எதுக்கு டேப்ளட்?” என்று வேண்டுமென்றே கேட்டாள்.

“ஃபீவருக்கு”

“எனக்கு ஃபீவருனு யார் சொன்னா?”

வெடுக்கென திரும்பி முறைத்தவன், “மணி கணக்கா பனியில நின்னுட்டுருந்தா காய்ச்சல் வராம அவார்டா வரும்? பேஸிக் சென்ஸ் இருக்க எல்லாருக்கும் தெரியும். காய்ச்சல் வரும்னு.”

“அது ஓகே.. ஆனா இந்த சூப்?”

“இப்ப என்ன? நான் உன் மேல அக்கறை படுறேன்னு சொல்லனுமா? ஆமா அக்கறை தான். தாலி கட்டிட்டேனே? நீ என் தலையில விழுந்த பொறுப்பு. பார்த்து தான் ஆகனும். வேணும்னா இத குடி. இல்லனா…”

அதோடு நிறுத்தியவன், விருட்டென வெளியேறி விட்டான்.

அவன் சென்றதும் புன்னகைத்தவள், மாத்திரையை எடுத்துப் பார்த்தாள்.

“புதுசு வாங்கிட்டு வந்துருக்காங்க” என்று ஆச்சரியமும் சந்தோசமுமாக பார்த்தவள், உடனே நன்றாக அமர்ந்து கொண்டு சூப்பை குடித்தாள். நன்றாகவே செய்திருந்தான்.

உதட்டில் இருந்த புன்னகை மறையாமலே, ஊதி ஊதி குடிக்க ஆரம்பித்தாள்.

சாப்பிட்டு முடித்து விட்டு மெத்தையில் சுருண்டு கொண்டாள். மருந்து அதன் வேலையை ஆரம்பிக்க, நன்றாக தூங்கி விட்டாள்.

முழிப்பு வந்து எழுந்து பார்க்க, அறை இருட்டாக இருந்தது. காய்ச்சலும் குறைந்து போயிருந்தது.

“ரொம்ப நேரம் தூங்கிட்டமோ?” என்று தலையை தேய்த்துக் கொண்டு திரும்பி மணியை பார்த்தாள்.

அது மூன்று என்றது. அதிகாலை மூன்று மணி.

‘இவ்வளவு நேரமாச்சா?’ என்று ஆச்சரியப்பட்டவள், எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். திரும்பி வந்ததும் பசியெடுக்க, அப்போது தான் அது கண்ணில் விழுந்தது.

மேசை மீது எலக்ட்ரிக் குக்கர் இருந்தது. அருகிலேயே ஃப்ளாஸ்க் இருக்க திறந்து பார்த்தாள். சூடான தண்ணீர் இன்னும் கொதித்துக் கொண்டிருந்தது.

குக்கரில் கஞ்சி இருக்க, பார்த்ததும் புன்னகை மலர்ந்தது.

“சீக்கிரமா மன்னிப்பு கிடைச்சுடும் போல” என்று சந்தோசமாக நினைத்தவள், கஞ்சியை சூடு படுத்தி சாப்பிட்டு விட்டு, மீண்டும் மாத்திரையை போட்டுக் கொண்டாள்.

உடனே படுக்க மனமில்லாமல், பாத்திரங்களை கொண்டு சென்று சமையலறையில் வைத்தாள்.

திரும்பி வந்து அதியன் அறையை பார்த்தாள். அடைத்து இருந்தது. சில நொடிகள் அங்கு சுற்றி விட்டு, மீண்டும் அறைக்குள் புகுந்து படுத்து விட்டாள்.

மீண்டும் எழும் போது சூரியன் உட்சத்தை தொட ஆரம்பித்திருந்தது. தன்னைத்தானே தொட்டு பார்த்தாள். காய்ச்சல் இருந்த அடையாளமே இல்லை. ஆனால் வாய் மட்டும் கசந்தது.

எழுந்து சென்று தன் வேலைகளை முடித்து விட்டு வெளிய வர, அவளுக்கான உணவு மேசையில் பத்திரமாக இருந்தது. வாசலில் அதியனின் கார் இல்லை. ஆனால் தெருவெங்கும் வெள்ளை பனிகள் மூடிக் கிடந்தது.

“சமைச்சு மட்டும் வச்சுட்டு காணாம போயிடுறாரே” என்று வருத்தமாக பார்த்தவள், அதை சாப்பிட்டு விட்டு அமர்ந்து கொண்டாள்.

சில மணி நேரங்களிலேயே அதியன் திரும்பி வந்து விட்டான். வந்ததும் அவள் ஆர்வமாக பார்க்க, அவனோ அவளை ஒரு நொடிக்கு அதிகமாக பார்க்கவில்லை.

இரண்டு கையிலும் பைகள் இருக்க, அதை வைத்து விட்டு உடை மாற்றி வந்து வேலையை ஆரம்பித்து விட்டான்.

சமைக்கிறான் என்று புரிந்தது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எழுந்து சென்றாள்.

அதியன் அவளை திரும்பிப் பார்க்காமல் சமையல் வேலையில் இருக்க, “தாங்க்ஸ்” என்றாள்.

திரும்பிப்பார்த்து விட்டு திரும்பிக் கொண்டான்.

“ஃபீவர் போயிடுச்சா இல்லையானு கேட்க மாட்டீங்களா?”

பதில் இல்லை.

“என் கிட்ட பேச மாட்டீங்களா?”

அப்போதும் அமைதியாக இருக்க, விறுவிறுவென அருகே வந்தவள் அவன் கையிலிருந்ததை பிடுங்கி கீழே வைத்தாள். அதியன் அவளை முறைக்க, சட்டென கட்டிப்பிடித்துக் கொண்டாள். அவன் அசையாமல் நின்று விட்டான்.

“போதும்.. என்னால முடியல.. ஒருத்தர் கிட்ட பேசாம ஒதுங்கிப்போறது எவ்வளவு வலிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டேன். சாரி சாரி.. எத்தனை தடவ கேட்டாலும் சொல்லுறேன். என்னால இப்படி இருக்கவே முடியல.”

கலங்கிய கண்ணை துடைக்காமல் அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு மகாலட்சுமி பேச, அதியன் அவளை விலக்கி நிறுத்தினான்.

“இது இன்னும் முடியல. நீ தான ஆசைப்பட்ட? நான் உன் கிட்ட பேசக்கூடாது. உன்னை பார்க்க வரக்கூடாது. உன்னை விட்டு விலகி போயிடனும். எல்லாமே நீ ஆசை பட்டது தான். இப்ப என்ன வேணாம்ங்குற?”

“நான் அப்படி பண்ணிருக்க கூடாது தான். என் பாட்டி எனக்கு சொல்லிக் கொடுத்தத தான் நான் அப்போ நம்பிட்டு இருந்தேன். அதுனால நிறைய தப்பு பண்ணிட்டேன். உங்களயும் மிஸ் பண்ணிட்டேன். ப்ளீஸ்.. என்னை மன்னிச்சுடுங்க”

தவிப்பாக மன்னிப்பு கேட்க, “ம்ம்.. தள்ளு.. லன்ச் செய்யனும்” என்றான்.

“அப்போ இப்பவும் மன்னிக்கலயா?”

“மன்னிச்சுட்டேன்”

சட்டென மகம் மலர, “உண்மையா தான?” என்று கேட்டாள்.

“ஆமா.. மன்னிச்சுட்டேன்”

உடனே பெருவிரலில் எம்பி, அவனது கன்னத்தில் இதழ் பதித்தாள். திரும்பி பார்த்தவன் ஒரு உணர்வும் இல்லாமல் வேலையை பார்க்கப்போக, அவளுக்கு சொத்தென்றானது.

அவனை வேலை செய்ய விடாமல், கைகளின் நடுவே வந்து நின்றாள்.

“நீங்க மன்னிச்சீங்களா இல்லையா?”

“அதான் சொன்னேன்ல?”

“நான் கிஸ் பண்ணுறேன். ஒரு ரியாக்ஷனும் இல்ல. அப்ப நீங்க என் மேல இன்னும் கோபமா தான இருக்கீங்க?”

“கோபமெல்லாம் அவ்வளவு சீக்கிரம் போகாது மகாலட்சுமி” என்றவன், அவளை தள்ளி நிறுத்தி விட்டு வேலையை தொடர்ந்தான்.

“ஓஹ்..” என்றவள் முகம் வாடியது.

“வேற எதாவது சொல்லனுமா?”

இல்லை என தலையாட்டியவள், சில நொடிகள் மௌனமாக நின்றிருந்தாள்.

“ஆமா.. அன்னைக்கு திரும்ப வந்தீங்களா? ஏன்?” என்று திடீரென கேட்டாள்.

“உன்னை லவ் பண்ணுறேன். நாம சேர்ந்து வீட்டுல பேசலாம். கல்யாணம் பண்ணிக்கலாம். எங்கப்பா கூட சம்மதிச்சுட்டாரு. அதுனால இப்படி பயந்து விலகி போகாதனு சொல்ல வந்தேன்.”

சாதாரணமான செய்தி போல் எந்த பூச்சும் இல்லாமல் பதிலை அவன் சொல்ல, மகாலட்சுமி அதிர்ந்து போனாள். எதைச்சொல்ல வந்து எதை அறிந்திருக்கிறான்?

முணுக்கென தன் தவறை நினைத்து கண்ணீர் வந்து விட்டது. திரும்பி நின்று துடைத்துக் கொண்டாள்.

“அப்ப என்னை ரொ… ரொம்ப.. கேவலமா நினைச்சுருப்பீங்க இல்ல?”

“அப்படி இல்லனு சொன்னா அது பொய்”

அதியனின் கூற்றை ஆமோதிப்பது போல் தலையாட்டினாள்.

“அப்ப எனக்கு தெரிஞ்சதெல்லாம் பணம் பணம் பணம் மட்டும் தான். பாட்டி பணக்காரவங்க நல்லவங்க. இல்லாதவங்க கெட்டவங்கனு சொல்லி வளர்த்துட்டாங்க. வளர்ந்தப்புறமாச்சும் நான் மாறி இருக்கனும். ஆனா அதையே பிடிச்சுட்டு மாறாமலே இருந்துட்டேன். சாரி.. என் தப்பு ரொம்ப பெருசு. உங்க மனச உடைச்சுட்டு, உங்க கூட வாழ முடியாதுனு டைவர்ஸ் எல்லாம் கேட்டு.. ரியலி சாரி”

கண்ணீர் வழிய பேசியவள், அதை துடைத்துக் கொண்டே வெளியேறி‌ விட்டாள்.

அதியனும் சில நொடிகள் அமைதியாக நின்றான். நேற்று வரும் போதே, அவள் பனியில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருப்பதை பார்த்து விட்டான். பாதுகாப்பாக உடை அணிந்திருக்கிறாள் என்பதால், எதுவும் சொல்லாமல் சென்று விட்டான்.

ஆனால் அவள் பல நிமிடங்கள் நின்று விட்டாள். அவளை அழைக்கவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அக்கறையே இல்லாதது போல் காட்டிக் கொண்டாலும், அவளுக்கு நிச்சயமாக காய்ச்சல் வரும் என்பதால், மருந்து இருக்கிறதா? என்று தேடி பார்த்தான். இல்லை என்று தெரிந்தது.

அவள் குளிக்க சென்றதும், உடனே ஓடிச் சென்று மருந்தை வாங்கி வந்து, சூப் தயாரித்து அவளுக்கு கொடுத்தான். அவள் தூங்கும் போது, சத்தமில்லாமல் இரண்டு முறை வந்து அவளை தொட்டுப்பார்த்து விட்டுச் சென்றான்.

பசித்தால் சாப்பிடட்டும் என்று செய்து வைத்து விட்டவன், காலையிலும் எழுந்ததும் அவளை பார்த்து விட்டே கிளம்பி இருந்தான். இது எதையும் மகாலட்சுமி அறியவில்லை. எல்லாம் அவள் பார்வையில் படாமல் நடந்தது.

இப்போதும் அவளுக்காக தான் சமைக்கிறான். அவனுக்காக என்றால், வெளியே வாங்கிக் கொள்ளலாம். அவளுடைய வாய் கசந்து போயிருக்கும். அதற்கு ஏற்றது போல் சமைக்க வேண்டும். அதற்காக ஒரு பெரு மூச்சு விட்டு விட்டு, சமைக்க ஆரம்பித்தான்.

இவர்கள் மன்னிப்பு கேட்கும் படலம் ஒரு பக்கம் இருக்க, வனிஷா யதுவை தவிப்பாக பார்த்தபடி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
32
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்