வனிஷா யதுவிடமிருந்து கைபேசியை பறித்து பார்த்து விட்டு, “அதுக்குள்ள வச்சுட்டீங்க” என்று முகத்தை சுருக்கினாள்.
“அங்க மிட் நைட்னு தெரியும்ல? அப்புறம் என்ன?”
“ஆனா நான் பேசி முடிக்கலயே”
“பேசுன வரை போதும். இதுக்கே அவ நைட் முழுக்க தூங்க மாட்டா.”
யது சிரித்துக் கொண்டே சொல்ல, வனிஷா அவனை ஆச்சரியமாக பார்த்தாள். அவன் உள்ளே இருக்கும் போதே அவள் பேசியதை கேட்டிருந்தான். ஆனால், தடுக்க நினைக்கவில்லை. யாராவது அவளுக்கு புரியும்படி பேசினால் தான் உண்டு என்று விட்டு விட்டான்.
“என்னை திட்டுவீங்கனு நினைச்சேன். சிரிக்கிறீங்க?”
“இதுக்கு ஏன் திட்டனும்?”
“ரியலி!”
“ஆமா.. இப்ப போய் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா. சாப்பிடப்போகலாம்” என்று துரத்தி விட்டான்.
அவன் திட்டாத சந்தோசத்துடனே குளித்து விட்டு, ஹோட்டலில் உணவை முடித்துக் கொண்டு வெளியே சுற்ற கிளம்பினர்.
ஊரெல்லாம் பனிமூட்டத்துடனும் அவ்வப்போது பெய்யும் மழையுடனும், சுகமாக இருந்தது. முக்கியமான சில இடங்களை எல்லாம் பார்த்து ரசித்து விட்டு, பசியெடுக்கும் போது ஹோட்டலில் நுழைந்தனர்.
தேவையானதை வாங்கி சாப்பிட்டவர்கள், “போகும் போது இந்த ஸ்னாக்ஸ் எல்லாம் வாங்கிட்டு போகனும். சூப்பரா இருக்குல?” என்று கேட்டு ரசித்து சாப்பிட்டாள் வனிஷா.
“உனக்கு சாப்பாடும் உன் வேலையும் தான் உலகத்துல ரொம்ப பிடிச்சது போல?”
“அப்படி சொல்ல முடியாது. இன்னொன்னும் இருக்கு”
“என்னது?”
“நீங்க தான்”
அவள் கண்ணடித்து வைக்க, யதுவிற்கு சிரிப்பு வந்து விட்டது.
“அய்யோ..! பிக் அப் லைன் எல்லாம் எங்க இருந்து பேச கத்துக்கிட்ட?”
“எல்லாம் ஆன்லைன் மயம். எப்படி டைமிங்ல போட்டு உங்கள இம்ப்ரஸ் பண்ணிட்டனா?”
“நான் இம்ப்ரஸ் எல்லாம் ஆகல”
“நோ ப்ராப்ளம். இன்னும் பயிற்சி எடுத்து, நிறைய பிக் அப் லைன் பேசி உங்கள கரெக்ட் பண்ணுறேன்”
“எதுக்கு?”
பதில் சொல்லாமல் கண்ணடித்து விட்டு அவள் குனிந்து கொள்ள, யதுவிற்கு தான் வெட்கம் வந்து விட்டது. பொது இடத்தில் வைத்து பேசிக் கொண்டிருக்கிறாளே!
சாப்பிட்டு விட்டு ஒரு பேக்கரியில் நுழைந்தவர்கள் கண்ணில் பால்கோவா விழுந்தது. பார்த்த நொடி வனிஷாவிற்கு சிரிப்பு வந்து விட, கைகுட்டையால் வாயை மூடிக் கொண்டு சிரிப்பை அடக்கினாள்.
யதுவும் கவனித்து விட்டு, “வேணுமா?” என்று புருவம் உயர்த்தி ரகசியமாக கேட்டான்.
“வேணாம் வேணாம்.” என்று பதறியவள், “கேக் வாங்கலாம் வாங்க” என்று தள்ளிச் சென்று விட்டாள்.
அவளுடைய வெட்கம் யதுவிற்கு தான் அவஸ்தையை கொடுத்தது. அருகருகே கை பிடித்து, தோளை உரசிக் கொண்டு தூரலில் நடக்கும் போது, இருவரும் ஒரு இக்கட்டில் திருமணம் செய்தவர்கள் என்பதை, சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது.
நான்கு நாட்களும் அந்த இனிமையை அனுபவித்து விட்டு ஊர் திரும்பினர்.
______
அங்கு மகாலட்சுமியின் நிலை படுமோசமானது. ஞாபகங்கள் திரும்பி வந்தாலும், எல்லாம் மறந்த நிலையில் அதியனோடு நெருக்கமாக இருந்த காட்சிகளும் அவளுக்கு நினைவு இருந்தது.
அவன் ஒதுங்கி ஒதுங்கி போகும் காரணம் புரியாமல், செய்து வைத்த கிறுக்குத்தனத்தை நினைத்து நொந்து கொண்டாள்.
முதலில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று வாதாடியவளால், இப்போது பேசக்கூட முடியவில்லை.
காதலிப்பதாக துரத்தி விட்டு, அவனை துச்சமாக நினைத்து தூக்கி எறிந்தது தவறல்லவா? அவளுக்கு இப்போது மன்னிப்பு தேவைப்பட்டது. ஆனால் அதை அதியனிடம் எப்படிப் பெறுவது? என்று தெரியவில்லை.
அன்றைய பேச்சைக் கேட்டு, முழுவதுமாக ஒதுங்கிப்போனவன் எதற்காக திருமணம் செய்தான்? அவளுக்கு தண்டனை கொடுக்க என்று வாயால் சொன்னாலும், அவன் அவளை இதுவரை நோகடித்ததும் இல்லை. கடைசியாக கை நீட்டி அடித்ததை தவிர.
அதெல்லாம் நினைத்து நினைத்து நொந்து, செய்வதறியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.
வீட்டில் இருக்கும் யாரிடமாவது பேசிப்பார்க்கலாம் என்று நினைத்தாலும், பரமேஸ்வரியை தவிர யாரிடமும் அவள் விசயத்தை சொல்லவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு தானாகவே தெரிந்திருக்கிறது. வனிஷா திட்டியதை மறக்க முடியுமா? எல்லோருமே இப்போது அவளிடம் கோபமாகத்தான் இருப்பார்கள். பேச வழி இல்லை.
வேறு யாரிடம் ஆலோசனை கேட்பது என்றும் தெரியவில்லை. தனிமையிலேயே அவள் உழன்று கொண்டிருக்க, பாக்கியத்திற்கு தான் பாவமாக இருந்தது. அவள் பேசவில்லை என்றாலும் அவராக சென்று பேசினார்.
அவரிடமிருந்து மகாலட்சுமியால் ஒதுங்க முடியவில்லை. எல்லாம் மறந்த போது, அவர் அவளை கவனித்துக் கொண்ட விதம் மனதில் அழியாமல் இருந்தது.
முதலில் அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு, பிறகு சகஜமாக பேச ஆரம்பித்தாள்.
அதே போல் அதியனிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்ற, இரவு அவனிடம் வந்தாள்.
அவளுக்கு நினைவு வந்த நாளில் இருந்து, வெவ்வேறு அறையில் தான் இருவரும் தங்கி இருந்தனர். அன்று நடந்த தவறை திரும்பச் செய்து விடக்கூடாது என்று, அதியன் விலகி இருந்தான்.
அவனுடைய அறைக்கதவை தட்டி விட்டு உள்ளே சென்றாள். தொலைகாட்சியில் எதோ ஒரு படம் ஓடிக் கொண்டிருக்க, அதியன் அதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“உங்க.. உங்க கிட்ட பேசனும்”
“ம்ம்”
“நான் பண்ணது எல்லாம் தப்பு தான். சாரி”
“எந்த தப்ப சொல்லுற?”
“உங்கள… நான்… லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டு பணம்… இல்லனு தெரிஞ்சதும் அப்படி மாறி இருக்கக் கூடாது”
“அது மட்டும் தானா?”
“வேற என்ன?”
“அதையும் தெரிஞ்சுட்டு வந்து மன்னிப்பு கேளு”
மகாலட்சுமி யோசித்துக் கண்டு பிடித்து விட்டாள்.
“சாரி.. அதுவும் என் தப்பு தான்”
“எது?”
“வனிஷாவோட ஹஸ்பண்ட் பத்தி அப்படி பேசியிருக்கக் கூடாது”
“சோ?”
“ஐம் சாரி.. என்னை மன்னிச்சுடுங்க ப்ளீஸ்”
“பண்ணது தப்புனு தெரிஞ்சுடுச்சுல? போதும். கிளம்பு”
“அப்படினா? அப்படினா.. என்னை மன்னிக்கலயா?”
“நான் ஏன் மன்னிக்கனும்?”
இதைக்கேட்டு அவள் அவனை வெறித்து பார்க்க, அவன் தொலைகாட்சியை விட்டு பார்வையை அகற்றவே இல்லை.
“என்னை.. மன்னிக்க…” என்று ஆரம்பித்தவள், சில நொடிகள் நிறுத்தினாள்.
பிறகு ஒரு முடிவுக்கு வந்து, “என்ன பண்ணா என்னை மன்னிப்பீங்க?” என்று கேட்டாள்.
அதியன் அவளை திரும்பிப் பார்த்தான். பார்வையில் கூர்மை இருந்தது.
“நான் என்ன பண்ணுறது? தப்பு தான். அதுக்கு அன்னைக்கு மாதிரி அடிச்சுடுங்க. வாங்கிக்கிறேன். மன்னிக்கவே முடியாதுனா எப்படி? ப்ளீஸ்”
“நான் என்ன சொன்னாலும் செய்வியா?”
“சொல்லுங்க”
“பேசாத. இனிமே நீயா என் கிட்ட பேசாத. அப்படி பேசாம இருந்தா உன்னை மன்னிக்கிறேன்”
ஒரு நொடி இதைக்கேட்டு வெறித்து பார்த்தாள். பிறகு சில நொடிகள் கடக்க, அதியன் புருவம் உயர்த்தினான்.
மகாலட்சுமி சம்மதமாக தலையை மட்டும் ஆட்ட, “குட். போகும் போது டோர லாக் பண்ணிட்டுப் போ” என்று கூறி விட்டு, மீண்டும் படத்தைப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.
சில நொடிகள் அவனை நின்று பார்த்து விட்டு, வெளியேறி விட்டான்.
அதன் பிறகு, மகாலட்சுமி அதியனிடம் பேசவே இல்லை. அவனும் அவளிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. தனித்தனி அறை. தனித்தனி வாழ்க்கை. ஒரே வீட்டில் இருந்து, தனித்தனியாக வாழ ஆரம்பித்து விட்டனர்.
_____
ஆடி மாதம் வந்திருந்தது. வனிஷா சொன்ன திருவிழாவும் வர, யதுநந்தன் அவளை இழுக்காத குறையாக ஊருக்கு அழைத்துச் சென்றான்.
வேலை இருக்கிறது என்று அடம்பிடித்தால், பதிலுக்கு அவனும் அடம்பிடிக்க, விடுமுறை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
ஊரில் சென்று இறங்கும் வரை தான் அவளை வற்புறுத்த வேண்டியிருந்தது. அங்கு சென்று எல்லோரையும் பார்த்ததும், கூட்டத்தில் இணைந்து விட்டாள்.
பல வருடங்களுக்குப் பிறகு பார்ப்பதால், யதுவுக்கு யாரையும் நினைவில்லை. ஆனால் எல்லோருக்கும் யதுவை பிடித்திருந்தது. இவர்களை எல்லாம் எப்போதோ நந்தவனத்திற்கு வரும் போது யது பார்த்திருக்கிறான். அதிகம் பேசியது கூட இல்லை. அவர்களுடைய திருமணத்திற்கு கூட வந்திருந்தனர். ஆனால், யாரிடமும் அப்போது சரியாக பேசவில்லை. அவர்களும் அன்றைய சூழல் அறிந்து, உடனே கிளம்பியிருந்தனர்.
ஆனால் இப்போது யாருமே புதிதாய் பழகுவது போல் அவனை நடத்தவில்லை. யதுவும் வனிஷாவும் புதுமணத்தம்பதிகளாக வேறு இருக்க, அவர்கள் தான் பேசும் பொருளாக சிக்கினர்.
அங்கு யது புதுவித வனிஷாவை பார்த்தான். எவ்வளவு பேசினாலும், தேவையில்லாமல் ஒரு வார்த்தை கூட உதிர்க்காத வனிஷாவைத் தான் அவனுக்குத் தெரியும். இங்கு வந்த பிறகு, அவள் பேசிக் கொண்டே இருந்தாள்.
அவளைச்சுற்றி எப்போதும் ஆட்கள் இருந்து கொண்டே இருந்தனர். பலர் அவள் வயதை ஒத்திருந்தனர். பேசிப் பேசி களைப்பது என்றால் என்னவென்று அங்கு அறிந்து கொண்டான்.
அவர்கள் யதுவையும் வாயை மூடி இருக்க விடவில்லை. அவனை உள்ளே இழுத்து, வனிஷாவை வம்பிழுத்துக் கொண்டிருந்தனர்.
“எப்பவும் வனிஷாவ இவனுக்கு தான் கட்டி வைக்கனும்னு பேசுவோம். அய்யோ…! இந்த வாயாடியா? எனக்கு வேணாம்னு ஓடுவான். கடைசில நீங்க மாட்டிட்டீங்க” என்று ஒரு பெண் சிரித்துக் கொண்டே கூற, “என் விதி என்னை காப்பாத்திடுச்சு.. யது ப்ரோவ கை விட்டுருச்சு. ஆழ்ந்த வருத்தங்கள் ப்ரோ” என்றான் அவன்.
“ஹேய்.. என்ன? ஓசியா இந்த பீச என் தலையில கட்ட பார்த்தீங்க.. நான் சிக்குவனா? எப்படி மாஸா ஒருத்தர கட்டிட்டு வந்தேன்ல?”
யதுவையும் விடாமல் பேச்சையும் விடாமல் வனிஷா பேசியதை கேட்க, யதுவிற்கு சந்தோசமாக இருந்தது.
“இந்த மாஸ் பீஸ்க்கு ஒரு மொக்க நீ கிடைச்சுட்டியேங்குறது தான எங்க வருத்தம்”
விடாமல் அவன் பேச, “இந்த மொக்கைக்கே உன் மூஞ்சிய பிடிக்கலயே.. உன்னலாம் எவ கட்ட போறானு நினைச்சேன்.. சிரிச்சேன்” என்றாள் வனிஷா.
அடுத்த நொடி யது பக்கென சிரித்து விட, சுற்றியிருந்த அத்தனை பேரும் சிரித்து விட்டனர்.
“கடைசில காமெடி பீஸாகிட்டடா நீ” என்று கூறி முறைத்துக் கொண்டிருந்தவனின் தோளில் தட்டி, அவனையும் சிரிக்க வைத்தனர்.
மூன்று நாள் விசேஷமும், தூக்கத்தை கூட மறந்து கொண்டாடப்பட்டது. முக்கிய தலைக்கட்டுகளில் அவர்களது குடும்பமும் இருக்க, திருவிழா களை கட்டியது.
மூன்றாம் நாள் வேலை இருப்பவர்கள் எல்லோரும் பறந்து விட்டனர். வனிஷாவும் கிளம்பத்துடிக்க, “நிலத்தை பார்த்துட்டு ஈவ்னிங் கிளம்பலாம்” என்று விட்டான் யது.
சொன்னதுபோல் நிலத்தை பார்த்து விட்டு, காம்ப்ளக்ஸ் கட்ட தீர்மானம் செய்தனர். மிச்சமிருந்த ஊரை நன்றாக சுற்றிப் பார்த்து விட்டே வீடு வந்து சேர்ந்தனர்.
_____
திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்திருந்தது.
அன்று பேசாதே என்று சொன்ன பின்பு, அதியனிருக்கும் பக்கம் கூட மகாலட்சுமி போகவில்லை. அவனும் அவளிடம் ஒரு வார்த்தை பேசினான் இல்லை. அவள் ஒருத்தி வீட்டில் இருக்கிறாள் என்பதையே மறந்து விட்டான்.
பாக்கியம் மட்டும், இருவரையும் பேச வைக்க போராடிக் கொண்டே இருந்தார்.
மகாலட்சுமியை பற்றி எதைச்சொன்னாலும், அதியன் காதில் போட்டுக் கொள்வதில்லை. மகாலட்சுமியோ அதியனின் பேச்சு வந்தாலே மௌனமாகிவிடுவாள்.
எல்லா நேரமும் வீட்டிலேயே இருந்து மகாலட்சுமிக்கும் பிடிக்காமல் போக, பாக்கியத்துடன் ஊரை சுற்றி வந்தாள்.
“ஹனி மூன் போறோமா?” என்று சந்தோசமாக கேட்ட, நாள் நினைவில் வந்தது.
ஒரு வார்த்தை பேச்சுக்கே பஞ்சமாகி விட, ஹனிமூன் போக எங்கு வழி? தனியாக சுற்றும் போது, அதை நினைத்து வருத்தமாக இருக்கும் அவளுக்கு.
அவளது தேவையை பாக்கியம் கவனித்துக் கொண்டார். அவளுக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிக் கொடுத்தார்.
ஆனால், அவரால் அவளிடம் ஒரு எல்லைக்கு மேல் பேச முடியவில்லை. யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ளாமல், மகாலட்சுமி தனக்குள்ளேயே மறுகிக் கொண்டிருந்தாள்.
அவர்களை சேர்த்து வைக்க போராடிய பாக்கியம், முடியாமல் போனதும் முத்துவேலிடம் பேசினார்.
“ரெண்டு பேரும் பேசிக்கிறதே இல்லையா?”
“எவ்வளவு தான் நானும் போய் அதி கிட்ட கேளு.. மகா இப்படி சொன்னானு தூது போய் பேச வைக்கிறது? சத்தமா ஒருத்தர் முகத்த ஒருத்தர் பார்த்துக்கவே மாட்டேங்குறாங்க”
முத்துவேல் சில நிமிடங்கள் யோசித்து விட்டு, “நீ கிளம்பி இங்க வந்துடு” என்றார்.
“அதி வந்து கூட்டிட்டு வந்துடுவான்”
“அப்ப இன்னும் ரெண்டு வாரத்துல இந்தியா போகனும். உனக்கும் ஒரு டிக்கெட் போடுறேன். வினோத்த பார்க்கனும்னு கிளம்பி வா. உன்னை வினோத் கிட்ட விட்டுறேன். இவங்க சேர்ந்துட்டாங்கனு தெரிஞ்சப்புறம் இங்க வந்துக்கலாம்.”
“அதி கோபப்படுவானே?”
“படட்டும். அத பத்தி யோசிக்க முடியாது. ஒருத்தருக்கு இன்னொருத்தர விட்டா வழியில்லனு தெரிஞ்சா தான், கூட்ட விட்டு வெளிய வருவாங்க. இல்லனா மாற மாட்டாங்க. நான் டிக்கெட் போட்டதும் இன்ஃபார்ம் பண்ண சொல்லுறேன். கிளம்புற வரை ரெண்டு பேரு கிட்டயும் சொல்லாத”
அவர் சொன்னதற்கு சரியென்ற பாக்கியம், மற்றவர்களிடம் மூச்சு விடவில்லை. இரண்டு வாரங்களும் ஏனோதானோவென கடந்து போய் விட, அவர் கிளம்பும் நாளும் வந்தது.
“என் கிட்ட சொல்லவே இல்ல.. சொல்லிருந்தா நானும் வந்துருப்பேன்ல?” என்று கேட்டாள் மகாலட்சுமி.
“என்ன அவசரமா போறீங்க? முன்னாடியே சொல்லலாம்ல?” என்று அதியன் கோபப்பட்டான்.
இருவருக்குமே, “வினோத்த பார்க்க போறேன். வந்துடுவேன்” என்று மட்டும் கூறி வைத்தார்.
அதியன் முத்துவேலை அழைத்து கேட்டால், அவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பாக்கியமும் கிளம்பிச் சென்று விட்டார்.
தொடரும்.