Loading

 

ஊரெல்லாம் சுற்றி விட்டு வீடு திரும்பிய அதியன், அறையில் மகாலட்சுமி அமர்ந்திருந்த நிலையை பார்த்துப் புருவம் சுருக்கினான்.

காலில் முகத்தை புதைத்து அமர்ந்திருந்தவள், அவன் வரும் சத்தம் கேட்டும் கூட நிமிரவில்லை.

‘இன்னுமா அழுதுட்டு இருக்கா?’ என்று யோசித்தவன், “மகா” என்று அழைத்தான்.

அவள் நிமிரவில்லை.

“மகாலட்சுமி” என்று அழுத்தமாக அழைக்க, மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள். தூங்கி எழுந்ததில் அவள் முகம் தெளிந்து இருந்தது. ஆனால் கண்கள் சிவந்து போயிருந்தது.

அதே கண்களுடன் அவனை வெறுமையாக பார்க்க, அதியனும் அவளை ஆழ்ந்து பார்த்தான். அவளுள் ஊடுறுவுவது போன்ற பார்வை. அவனது ஆராய்ச்சி பார்வை பிடிக்காமல், பார்வையை திருப்பிக் கொண்டாள்.

திடீரென அவன் இதழ்களில் ஏளன சிரிப்பு உருவானது.

“எல்லாமே ஞாபகம் வந்துடுச்சோ?”

அவன் நக்கலாக கேட்க, மகாலட்சுமி வெளியே வெறித்துப் பார்த்தாள். ஒற்றை பார்வையில் அவளை கண்டு கொண்டானே! என்று கடுப்பாகவும் இருந்தது.

“இத கொஞ்சம் முன்னாடியே சொல்லிருக்கனும் போலயே. லேட் பண்ணிட்டேன்” என்று சலிப்பாக தனக்குத்தானே பேசிக் கொண்டான்.

“அதிர்ச்சி வைத்தியம் தான் வேலை செஞ்சுருக்கு. மேடம்க்கு இப்ப எல்லாம் புரிஞ்சதா? எல்லா கேள்விக்கும் பதிலும் கிடைச்சுருக்கனுமே?”

அதியன் வெறுப்பை சுமந்த குரலில் நக்கலாக சிரித்துக் கொண்டே பேச, மகாவிற்கு என்னவோ போல் இருந்தது.

“இப்ப ஏன் என்னை பார்த்து இப்படி நக்கலா சிரிக்கிறீங்க?”

மகாலட்சுமி பொறுக்க முடியாமல் கேட்டு விட, “இது நக்கல் இல்லமா.. சந்தோசம். அப்பாடா தொல்லை விட்டுச்சுனு சந்தோசம்” என்றான்.

அவனது குரலிலும் முகத்திலும் வெறுப்பு கொட்டிக் கிடந்தது. அவள் மீது அவன் கொண்ட வெறுப்பின் அளவை, இன்று தான் கண்கூடாக பார்க்கிறாள்.

மகாலட்சுமிக்கு மீண்டும் அழுகை வந்து விடும் போல் இருந்தது. உதட்டைக்கடித்து முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்து கொண்டாள்.

அவளது முகத்தில் தோன்றிய உணர்வுகளை படித்தாலும், அதியன் மனமிறங்கவில்லை.

உடனே வாசல் பக்கம் திரும்பினான்.

“ஆண்ட்டி.. ஆண்ட்டி.. இங்க வாங்களேன்” என்று அதியன் குரல், கொடுத்ததும் பாக்கியம் உடனே வந்து விட்டார்.

“என்ன அதி? எங்க போயிருந்த?”

“அத விடுங்க. இந்த பொண்ணுக்கு எல்லாமே ஞாபகம் வந்துடுச்சு. அத பாருங்க முதல்ல.”

அதியன் மகாலட்சுமியை கை காட்டி கூற, பாக்கியம் ஆச்சரியமும் ஆராய்ச்சியுமாக அவளை பார்த்தார். அவள் அவரை பார்க்காமல் எங்கோ பார்க்க, பாக்கியத்துக்கும் புரிந்து விட்டது.

நல்ல நிலையில் இருக்கும் போது தான், அவள் அவரோடு பேச மாட்டாளே.

“நல்லது தான். அவங்க அம்மா தான் ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருந்தாங்க. அவங்களுக்கு சொல்லிடலாம்”

“இப்ப அங்க நைட் ஆண்ட்டி.. அப்புறமா கால் பண்ணிக்கலாம்.”

“சரிபா. நீ சாப்பிடுறியா? சூடு பண்ணவா? அப்பவே வெளிய போயிட்ட நீ”

மகாலட்சுமி விசயத்தை அப்படியே விட்டு விட்டு, பாக்கியம் வேறு பேச்சுக்கு தாவி விட்டார். பேசியும் பயனில்லை அல்லவா? இன்னும் மகாலட்சுமி வெளியே பார்த்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தாள்.

“வர்ரேன்” என்று அதியன் சொன்னதோடு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

அதற்கு மேல் நிற்காமல் பாக்கியம் சென்று விட்டார். நேற்று வரை அவளது தேவை எல்லாவற்றிற்கும் பாக்கியம் தான் வந்தார். இன்று அவளை மதிக்கவே இல்லை. அவளாக முகம் திருப்பிய பின்பு, வலிய சென்று பேச அவரால் முடியாதே?

அதை நன்றாக உணர்ந்தாலும், ஒன்றும் செய்யாமல் இருந்தாள் மகாலட்சுமி. அவளுக்கு எல்லாமே வெறுத்த நிலை.

தவறுகள் புரிந்தது. மனம் வலித்தது. அதியனுக்கு அவள் செய்த அநியாயம் பெரியது தான். ஒருவனை விரும்புவதாக சொல்லி விட்டு, அவனை துச்சமாக தூக்கிப்போட முடியும் என்றால், அவள் உண்மையில் விரும்பவில்லை என்று தானே அர்த்தம்? அப்புறம் எதற்காக அவன் பின்னால் போனாள்? அவனிடம் இருக்கும் பணத்திற்காக என்றால், அவளை என்ன நினைத்திருப்பான்?

“பணத்துக்காக மேலே வந்து விழும் பெண் என்று தான்” என்றது மனசாட்சி.

அதுவரை, திருமணம் செய்யப்போகும் நபரிடம், பணத்தை எதிர் பார்ப்பது என்ன தவறு? அது இல்லை என்பதால், வேண்டாம் என்று விட்டேன். சாதாரணமாக பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணங்களில், பெண் வீட்டார் மாப்பிள்ளை நிறைய பணம் வைத்திருக்க வேண்டும். நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று கேட்பது தானே? அதையே காதலிக்கும் போது அவள் கேட்டால் தவறா? என்று தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் பெற்றவர்கள் அதை மட்டும் கேட்பது இல்லை. பெண்ணை நன்றாக கவனித்துக் கொள்வானா? அவனது குடும்பம் எப்படி? அவனுடைய குணங்கள் எப்படி? என்று எல்லாவற்றையும் பார்க்கும் போது, சொத்து மதிப்பும் அவன் செய்யும் வேலையும் வருகிறது.

மகாலட்சுமி இது எதையுமே பார்க்கவில்லையே. அவன் தன்னோடு சந்தோசமாக வாழ்வானா? என்று பார்க்கவில்லை. அவனுடைய குணங்கள் எப்படி என்று தெரியாது. அழகாய் இருந்தான். பணக்காரனாய் இருக்கிறான். என்னோடு நன்றாக பேசுகிறான் என்ற காரணத்திற்காக அவனை பிடித்து விட்டது. அதை மட்டுமே வைத்து திருமணம் வை யோசித்து விட்டாள். அதனால் கிடைத்த அடி தான் இது.

எல்லாம் மனதில் ஓட, காலில் மீண்டும் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

அதியன் குளித்து விட்டு வரும் வரை அப்படியே தான் இருந்தாள். அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு, எதுவும் பேசாமல் சட்டையை மாற்ற ஆரம்பித்தான்.

அவன் வந்த சத்தம் காதில் விழுந்தது. சில நொடிகள் அமைதியாக இருந்த மகாலட்சுமி, “ஐம் சாரி” என்றாள்.

அவளது குரல் அவளுக்கே மெதுவாகத்தான் கேட்டது. ஆனால் அந்த அறையில் இருந்த அமைதிக்கு, அதுவே போதுமானதாக இருந்தது.

அதியன் தான் அதை காதில் வாங்காதது போல் சென்று விட்டான். முகத்தில் அறை வாங்கி விட்ட உணர்வு அவளுக்கு. அன்று போல் இன்றும் அவன் அடித்தே இருக்கலாம். அவளாக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால், திரும்பிக்கூட பார்க்கவில்லை அவன்.

ஆனால் செய்த தவறுக்கு வெறும் மன்னிப்பு மட்டுமே மருந்தாக அமைந்து விடாதே?

______

பரமேஸ்வரிக்கு விசயம் தெரிந்து, அது வசந்தாவின் காதுக்கும் போக, அவர் வனிஷாவிடம் கூறினார்.

“உண்மையிலயே ஞாபகம் வந்துடுச்சா அத்த?”

“ஆமா வானு”

“அப்ப நான் அடிச்சதும் ஞாபகம் வந்துருக்கும்ல?”

வனிஷா கிண்டலாக கேட்க, “வந்துருக்கும்” என்று கூறி சிரித்தார் வசந்தா.

“வாய பாரு” என்ற யது, வனிஷாவிடமிருந்து கைபேசியைப் பறித்தான்.

“அதியன் கிட்ட பேசுனீங்களாமா? இப்ப அவ ஓகேவா?”

“நான் பேசல யது. அண்ணி பேசிட்டு சொன்னாங்க. அதான் உங்களுக்கும் சொல்லலாம்னு போன் பண்ணேன்.”

“சரிமா.. நான் அதியனுக்கு கால் பண்ணி கேட்டுக்கிறேன்”

“சாப்பிட்டீங்களா ரெண்டு பேரும்?”

“இப்ப தான் ஹோட்டலுக்கு வந்தோம். சாப்பிட தான் கிளம்பினோம். கால் பண்ணிட்டீங்க”

“சரி போய் சாப்பிடுங்க. நான் அப்புறம் கூப்பிடுறேன்” என்று கூறி, அழைப்பை துண்டித்து விட்டார்.

“எப்படியோ அவ நல்லாகிட்டா. அதியன் தான் அவள வச்சுட்டு பாவம் ரொம்ப கஷ்டப்பட்டாங்க.” என்றாள் வனிஷா.

“இப்ப மட்டும் அதியன் நல்லா இருந்துட போறாராக்கும்?”

யது சலித்துக் கொண்டே கூறினான்.

“ஏன்?”

வனிஷா சந்தேகமாக பார்க்க, “இப்பவும் அவ கூட அதியன் சண்டை தான் போடுவாங்க” என்றான்.

“அதான் ஏன்? அதியன் அவள லவ் பண்ணி தான கல்யாணம் பண்ணாரு?”

“இல்லயாம்”

“வாட்?”

வனிஷா புரியாமல் பார்க்க, யதுநந்தன் மகாலட்சுமி அதியனிடம் நடந்து கொண்ட விதத்தைக் கூறினான். அவர்கள் சந்தித்த கதையை விளாவரியாகக் கூற, கேட்ட வனிஷாவிற்கு கோபம் வந்து விட்டது.

“வாட் அ *****”

வனிஷா யோசிக்காமல் திட்டி விட, “ஏய்..” என்று அதட்டி அவள் வாயில் பட்டென அடித்தான் யதுநந்தன்.

“என்ன வார்த்தை எல்லாம் பேசுற?” என்று கேட்டவன் முகத்தில் கோபம் தெரிய, “பின்ன? அவள மானே தேனேனு கொஞ்சனுமா? இந்த மாதிரி ஒரு காரியத்த பண்ணவள இப்படி தான் திட்டுவேன்.” என்றாள் வனிஷா.

“உனக்கு கோபத்துல கண்ணு மண்ணு தெரிய மாட்டேங்குது. அவள அடிக்கிற.. இல்லனா இப்படி திட்டுற..”

“அவ பண்ணுற தப்பு அப்படி.. எனக்கு கோபம் வர்ர‌ மாதிரி அவ நடந்துக்காம‌ இருக்கனும்”

“ஒரு நாள் உன் கோபத்த என்ன செய்யுறேன் பாரு” என்று மிரட்டியவன், “நான் குளிச்சுட்டு வர்ரேன். சாப்பிட போகலாம்” என்று கூறி விட்டுச் சென்று விட்டான்.

வனிஷா உடனே யதுவின் கைபேசியை எடுத்தாள். மகாலட்சுமியின் புதிய எண் அவனிடம் தான் இருந்தது. அதியன் அங்கு சென்றதுமே, அத்தனை பேரின் அமெரிக்கா எண்ணெயும் யதுவிடம் தந்திருந்தான்.

மகாலட்சுமியின் பெயரை தேடி எடுத்து, வீடியோ கால் செய்தாள் வனிஷா. அங்கு இப்போது நள்ளிரவாக இருக்கும் தோன்றினாலும், பேசியே தீரவேண்டும் என்று தீவிரமாக தோன்றவும் அழைத்திருந்தாள்.

தூக்கம் வராமல் படுத்திருந்த மகாலட்சுமி, கைபேசி அதிரவும் எடுத்துப் பார்த்தாள். இந்திய எண்ணை பார்த்தவளுக்கு, யாரென தெரியவில்லை.

வீட்டிலிருந்து யாராவது அழைக்கக்கூடும் என்று நினைத்து, பச்சை நிறத்தை அழுத்த, வனிஷாவின் முகம் பளிச்சென தெரிந்தது.

“என்னை அடையாளம் தெரியுதா டீச்சர்?”

வனிஷா நக்கலாக கேட்க, “இப்ப எதுக்கு போன் பண்ண?” என்று மகாலட்சுமி உணர்ச்சி இல்லாமல் கேட்டாள்.

“அதுவா.. நீ எவ்வளவு பெரிய ஆள்னு இப்ப தான் எனக்கு தெரிஞ்சது.. அதான் பாராட்டலாம்னு கால் பண்ணேன்”

“வனிஷா.”

“முதல்ல பாராட்ட வாங்கிடுங்க டீச்சர்… எவ்வளவு பெரிய ஜகஜால கேடிடி நீ? அவ்வா… ஒருத்தர பணத்துக்காக லவ் பண்ணுற பெரிய தியாகத்த பண்ணிட்டு, ஒன்னுமே தெரியாத மாதிரி எப்படிடி உன்னால இருக்க முடியுது? அவர் கிட்ட பெரிய பங்களா இல்ல. சொந்தமா காரில்ல. நிறைய பணமில்லனு தூக்கி எறிஞ்சிட்டியாமே? இவ்வளவு பெரிய தியாகியா நீ? ப்ளடி ****”

“ஏய்…”

“உண்மைய சொன்னா ஏன்டி கோபம் வருது? எப்படி எப்படி? இவளா அவர பணக்காரன்னு நினைப்பாளாம். துரத்தி துரத்தி லவ் சொல்லுவாளாம். அவரு கிட்ட அந்த பணம் இல்லனதும், தூசி மாதிரி தட்டி விட்டுட்டு அடுத்து ஒருத்தன லவ் பண்ண ஆராம்பிச்சுடுவாளாம். இதுக்கு பேரென்ன தெரியுமா? ******* தான்”

“வேணாம் வனிஷா.. ஓவரா பேசுற நீ”

“அப்படித்தான்டி பேசுவேன். என் புருஷன பங்கு போட வந்ததுக்கு, ஒரு அறையோட விட்டேன்னு இன்னமும் வருத்தப்பட்டு இருக்கேன். எல்லாத்தையும் மறந்ததால தப்பிச்ச. இல்லனா அடிச்சு மூஞ்சி உடைச்சுருப்பேன்”

மகாலட்சுமி அவளிடம் பேச பிடிக்காமல் அழைப்பை துண்டிக்கப்போக, “கட் பண்ண.. அதியனுக்கு கால் பண்ணி அவர் முன்னாடியே உன்னை திட்டுவேன்” என்றாள்.

மகாலட்சுமியின் கைகள் நின்று விட்டது. அதியன் அவளை எவ்வளவு மோசமாக நினைத்திருப்பான் என்று அவளுக்குத் தெரியும் தான். ஆனால் அவன் முன்பு வனிஷா இதே போல் பேசினால், இன்னும் தாழ்ந்து போவாளே? அவனது கோபத்தை எப்படிக்குறைத்து? மன்னிப்பு கேட்பது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கிறாள்.

இந்த நேரம், வனிஷா அவன் முன்னால் எல்லாவற்றையும் பேசி வைத்தால், மீண்டும் கிளறப்பட்டு விடும். அதை விட, அவள் பேசுவதை கேட்பதே மேல். முக்கியமாக வனிஷாவிடம் அவள் பேசிய முறையும் தவறென்று உணர்ந்திருந்தாள். வனிஷாவும் அவளை சும்மா விடவில்லை.

“இவ்வளவு நல்லவளா நீ இருந்துட்டு, உன் ஃப்ரண்ட் ஜால்ரா என்னை பார்த்து வில்லிங்குறா? யாருடி வில்லி? ஒருத்தருக்கு ரெண்டு பேர் வாழ்க்கையில விளையாட பார்த்த நீ வில்லியா? நான் வில்லியா? ஆனா ஒன்னு.. என்னை மாதிரி திமிரு பிடிச்சவள கூட நம்மபிடலாம். உன்னை மாதிரி மூஞ்சிய அப்பாவியா வச்சுட்டு நடிக்கிறவளுங்க தான், மகா மகா வில்லியா இருக்கீங்க.. எப்பா.. எவ்வளவு பெரிய வேலைய சத்தமே இல்லாம பார்த்துருக்க”

வனிஷா கையில் கிடைத்தாள் என்று மகாவை வைத்து வாங்க ஆரம்பித்து விட்டாள்.

அன்று தீபா வனிஷாவை வில்லி என்றதும், மகாலட்சுமியை ஹீரோயின் என்றதையும் கேட்டு விட்டாள். அந்த கோபத்தோடு சென்று தான், கிருபாவின் மாமியாரை பேசியிருந்தாள். ஆனால் இன்று வாய்ப்பு கிடைக்கவும், மகாலட்சுமியை பிடித்து விட்டாள்.

“உன் ஜால்ரா என்ன சொன்னா? நான் நிறைய சம்பாதிக்கிறேன்னு திமிர்ல சுத்துறேன்னா? அப்படித்தான்டி சுத்துவேன். நான் உழைக்கிறேன். நான் சம்பாதிக்கிறேன். நான் அதுல மேக் அப் வாங்கி பூசுறேன். இல்ல என்ன வேணா செய்வேன். அது என் உழைப்பு. என் பணம். என் திமிரு.. உன்னை மாதிரி, அடுத்தவன் பணக்காரனா இருக்கனும். அவன கல்யாணம் பண்ணி சொகுசா வாழனும்னு நான் நினைக்கலயே.. இப்ப சொல்லுடி.. நீ வில்லியா? நான் வில்லியா?”

“போதும் வனிஷா. இது உனக்கு தேவையில்லாத விசயம். இதோட நிறுத்திக்க.”

“எனக்கு தேவை இருக்கு. என் புருஷன் உன்னை தான் நினைக்கிறான்னு சொல்லிட்டுப் போனல.. அதுக்கு உன்னை சும்மா விடுவேன்னா நினைச்ச?”

வனிஷாவின் குரலில் ஏளனம் நிரம்பி வழிந்தது. அழைப்பை துண்டிக்க முடியாமல் மகாலட்சுமி அவளை வெறித்தாள்.

“எனக்கு ஒரு பதில் மட்டும் சொல்லு. ஒருத்தர் உழைச்சு சம்பாதிச்சு பணக்காரனா இருந்தா, அவன கட்டிட்டு காலம் முழுக்க ஓசி சோறு தின்னுறது நல்ல காரியமா? தானா உழைச்சு, பெரிய பணக்காரனாகுறது நல்ல காரியமா? பணம் முக்கியம் தான்டி. எனக்கும் பணம் முக்கியம் தான். ஆனா அத தானா உழைச்சு சம்பாதிக்கனும். ஒரு ரூபாயா இருந்தாலும் சொந்த உழைப்புல வரனும். அத விட்டுட்டு… ச்சை… த்தூ… ****”

வார்த்தைகளை அள்ளி வீசினாள் வனிஷா. அவளுடைய கோபம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது.

“ஏய்… மரியாதையா பேசு. இன்னொரு வார்த்தை இப்படி பேசுன…”

“என்னடி பண்ணுவ? நல்லவ மாதிரி நடிச்சு, அதியன ஏமாத்தி, மொத்த குடும்பத்தையும் ஏமாத்திட்டு இருக்க ஃப்ராடு நீ.. உனக்கு மரியாதை தேவைப்படுதோ? இங்க பாரு.. இனிமே இந்தியா பக்கம் வர்ரதா இருந்தா, உன் அழுக்கு புத்திய அங்கயே தூக்கி கடாசிட்டு வரனும். மீறி இங்க வந்து எதாச்சும் பேசுன… அன்னைக்கு ஒரு அறையோட விட்டேன். அப்புறம் உன் உயிரயே எடுக்க வச்சுடாத”

“என்னடி விட்டா பேசிகிட்டே இருக்….”

மகாலட்சுமியின் கையிலிருந்து கைபேசியை பறித்து விட்டான் அதியன்.

“வனிஷா..”

“ஹாய் அதியன்”

அதியன்‌முகம் தெரிந்த உடனே, அத்தனை கோபத்தையும் ஓரம் கட்டி விட்டு, அதியனை பார்த்து புன்னகைத்தாள் வனிஷா.

“எங்க யது?”

“அவர் குளிச்சுட்டு இருக்கார். வந்ததும் சொல்லுறேன்”

“ஓகே.. எப்படி இருக்கீங்க? வீட்டுல எல்லாரும் ஓகேவா?”

“நல்லா இருக்கோம். நீங்க?”

“நீங்க ஹனிமூன்ல தான இருக்கீங்க?”

அவளது கேள்விக்கு பதிலளிக்காமல் மறு கேள்வி கேட்டான்.

“ஆமா.. சூப்பர் ப்ளேஸ்.. வெளிய மழை பெய்யுது.. இருங்க காட்டுறேன்”

உடனே பால்கனி சென்று மழையையும் இடத்தையும் சுற்றிக் காட்டினாள். அதற்குள் யது வந்து விட்டான்.

“பேசி முடிச்சுட்டியா?” என்று கேட்ட யது, கைபேசியை எட்டிப்பார்த்தான்.

“ஹனிமூன் போனா அந்த வேலைய பார்க்காம, இங்க என்ன பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்கீங்க?” என்று அதியன் முறைத்துக் கொண்டே யதுவிடம் கேட்க, “எல்லாம் விதி. இவளோட இதே வேலையா போச்சு” என்றான் யது.

“ஹலோ.. என்ன என்ன?” என்று இருவரையும் பார்த்து வனிஷா முறைத்துக் கொண்டே கேட்க, “இங்க கொடு” என்று கைபேசியை வாங்கிக் கொண்டான் யது.

“எப்படி இருக்கீங்க அதியன்?”

பதில் சொல்லாமல் பொதுவாய் தலையாட்டி வைத்தவன், “இங்க மீட் நைட். தூங்க விடுங்கடா. போய் உங்க வேலைய பாருங்க” என்றான்.

“ஓகே ஓகே.. குட் நைட்”

“அதெல்லாம் இல்ல. நான் இன்னும் பேசியே முடிக்கல” என்று அவசரமாக கூறினாள் வனிஷா.

“அடக்கடவுளே.. ஏன்மா?”

“அவ கிட்ட போன கொடுங்க அதியன். எனக்கு கேள்வி கேட்கனும்”

“அத காலையில கேளுமா.”

“நான் மறந்துடுவேன்”

வனிஷா பாவமாக கூற, அதியனும் யதுவும் சிரித்து விட்டனர். யது தலையில் தட்டிக் கொண்டான்.

“நீ மறந்தா நான் உனக்கு ஞாபகப்படுத்துறேன்.போதுமா?”

“அத செய்யுங்க. நான் வைக்கிறேன்” என்று துண்டிக்க போனான் அதியன்.

“இருங்க இருங்க.. நான் ஒன்னு கேட்கனும்.”

“நிஷா..”

யது அதட்டினான்.

“அவ கிட்ட இல்ல.. அதியன் கிட்ட தான்” என்று அவசரமாக சொன்னவள், “உங்களுக்கு அத்தான் பிரதர் தான வரனும்?” என்று கேட்டு வைத்தாள்.

“ஆமா.. அப்படியும் சொல்லலாம்”

“சகலனு கூட சொல்லலாம்” என்று யது சிரித்துக் கொண்டே கூற, “இதுவும் நல்லா தான் இருக்கு சகல..” என்றான் அதியன்.

அவன் சிரித்துக் கொண்டே சொன்னதை கேட்டு யதுவுக்கும் சிரிப்பு வந்தது. இருவருமே சிரிக்க வனிஷாவும் சிரித்தாள்.

“ஆமா சகல.. நல்லா இருக்கு சகல. இத பத்தி நாளைக்கு பேசலாம் சகல. இப்ப குட் நைட் சகல” என்று வேகமாக கூறிய யது கையாட்டி விட்டு, அழைப்பை துண்டித்து விட்டான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
28
+1
3
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்