Loading

 

அதியன் அதன் பிறகு மகாலட்சுமியை தொடர்பு கொள்ளாமல் போய் விட, மகாலட்சுமிக்கும் நிம்மதியாக இருந்தது. சற்றே வலித்த போதும், அவனது ஒதுக்கத்தை ஏற்றுக் கொண்டாள். அதியன் தனது திருமண விசயத்தை நம்பி விட்டான் என்று நினைத்துக் கொண்டாள்.

நாட்கள் பறந்தோட சென்றாயம்மாள் கண்ணில் விழுந்தான் யதுநந்தன். அவனை எப்போதும் சாதாரணமாக வீட்டுப்பையன் என்று பார்த்திருந்தவருக்கு, திடீரென மகாலட்சுமியை கட்டி வைக்கும் எண்ணம் வந்தது.

அதற்கு காரணமும் இருந்தது. எப்போது அந்த அதியன் மீது காதல் அதிகரித்து, மகாலட்சுமி மனம் மாறிவிடுவாளோ? என்ற பயம் அவரை பிடித்துக் கொண்டது.

அவசரமாக ஒருவனை பார்த்து பேசி விட்டால், மகாலட்சுமியின் மனதை மாற்றி விடலாம். இப்போதைக்கு அவளும் அதியன் வேண்டாம் என்று முடிவெடுத்து இருந்தாலும், அவன் திரும்பி வந்து பேசினால் பேத்தி மனம் மாறிவிடக்கூடாது அல்லவா?

அதற்காக வேறு ஒருவனுடன் அவள் மனதை பிணைத்து விட வேண்டும்.

சீக்கிரமே கிடைக்கும் மாப்பிள்ளையாகவும், வசதியாகவும் ஒருவன் வேண்டுமென்று நினைக்கும் போது தான், யதுநந்தனின் பக்கம் கவனம் சென்றது.

உடனே அதை பரமேஸ்வரிடயிடம் கூற, “இப்பலாம் யாருமா சொந்தத்துல கல்யாணம் பண்ணுறா? அதெல்லாம் சரி வராதுமா” என்று மறுத்து விட்டார்.

முதலில் கிருபாநந்தினியை செல்வகுமாருக்கு கேட்ட போது, ஜாதக பிரச்சனை இருந்தது. அதை விட, முக்கியமாக சொந்தத்தில் திருமணம் வேண்டாம் என்று இருவருமே மறுத்து விட்டனர். அதனால் தான் செல்வகுமாருக்கு சீதாவை திருமணம் செய்து வைத்தனர். அந்த எண்ணத்தில் தான் பரமேஸ்வரி இதற்கும் மறுத்தார்.

ஆனால் சென்றாயம்மாளுக்கு யதுவை விட விருப்பமில்லை. வசந்தாவிடம் பேசும்படி பரமேஸ்வரியை வற்புறுத்த ஆரம்பித்தார். அதே நேரம் மகாலட்சுமியிடமும் விசயத்தைக் கூறி வைக்க, அவளுக்கு அதில் சுத்தமாக விருப்பமில்லை. யதுவை பற்றி நினைத்தாலே, அவனோடு ஒப்பிட்டு பரமேஸ்வரி திட்டியது தான் ஞாபகம் வந்தது.

அவனை திருமணம் செய்வதெல்லாம் முடியாத காரியம் என்றே நினைத்தாள்.

அவளுக்கு விருப்பமின்மையை நேரடியாக சொன்னாலும், சென்றாயம்மாளுக்கு அது பெரிதாக தெரியவில்லை. அதியனை நினைத்துக் கொண்டு மறுக்கிறாளோ என்று தான் பயந்தார்.

விசயம் வேறு இருவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. பரமேஸ்வரியிடம் கூட இருவரும் கூறவில்லை. பரமேஸ்வரி அவரது அம்மாவை போல இல்லை. பணம் பதவி எல்லாம் அவருக்கு பெரிய விசயம் கிடையாது. அதியனை பார்த்து விட்டு, மகள் விரும்பி விட்டாள் என்று திருமணமே செய்து வைத்து விடக்கூடியவர்.

சென்றாயம்மாள் மகளை சரியாகவே கணித்திருந்தார். அவர் பயந்தது தான் பிற்காலத்தில் நடந்தது. ஆனால் அப்போது எதுவும் அறியாமல், யதுநந்தனை மகாவுக்கு மணமுடிக்க போராடினார்.

பேத்தியிடம் பேசி உபயோகம் இல்லை என்று அறிந்ததும், மகளிடமே பேசினார்.

பரமேஸ்வரியை பேசி பேசிக் கரைத்தார். கிருபாவை செல்வகுமாருக்கு பேசும் போது ஜாதக பிரச்சனையில் தட்டிப்போய் விட்டது. ஆனால் சொந்தம் விட்டுப்போகக்கூடாது. உன் நாத்தனாரே உனக்கு சம்பந்தியாக வருவது சிறப்பல்லவா? என்று எதெதோ பேசினார்.

இது போதென்று அடுத்த பூதம் கிளம்பியது. வனிஷா யதுவைப்போலவே படித்து, அவனை விட நல்ல வேலையில் சேர்ந்திருக்கிறாள் என்று கேட்டதும், மேலும் தீவிரமானார் சென்றாயம்மாள். அவருக்கு வனிஷா யதுவை வளைத்துப்போட விரும்புகிறாளோ என்ற எண்ணம்.

இல்லை என்றால் எதற்காக அவன் படித்த கல்லூரியில், அவன் படித்த அதே படிப்பை வனிஷாவும் எடுத்துப் படித்து, வேலை செய்ய வேண்டும்?

சென்றாயம்மாளுக்கு ஏனோ வனிஷாவையும் மலரையும் பிடிப்பது இல்லை. வனிஷாவின் அலங்காரமும் குட்டை முடியும் அவருக்கு பிடிக்காது. அவளை பற்றி பேத்தி சொன்னது வேறு அவரது மனதில் அழியாமல் இருந்தது. திமிர் பிடித்தவள். மற்றவரை மதிக்காதவள். மேக் அப்பை அள்ளி பூசிக் கொள்ளும் வேசக்காரி என்று எத்தனையோ பெயர்கள் வனிஷாவிற்கு இருந்தது.

வனிஷா தான் இப்படி என்றால் மலரையும் பிடிக்காது. அவர் மாமனார் மாமியார் வீட்டில் ஓசியாக வாழ்வதாக நினைத்தார். அவரை என்றும் சென்றாயம்மாள் மதித்தது இல்லை. சொந்தமாய் வாழாமல், அடுத்தவர்கள் பணத்தை உறிஞ்சுகிறார்களே என்ற கோபம். மலரோ மிகவும் அமைதியானவர். யாருடைய அலட்சியத்துக்காகவும் அவர் சண்டை போட்டதும் இல்லை. வருத்தப்பட்டதும் இல்லை. அதனால் சென்றாயம்மாளை அவர் பகைத்துக் கொண்டதும் இல்லை.

அப்படி அடுத்தவர்களின் உழைப்பில் அண்டி பிழைக்கும் மலரின் மகள், திமிர் பிடித்த வனிஷா யதுவை திருமணம் செய்து விடக்கூடாது. அவனை திருமணம் செய்யும் தகுதி, மகாலட்சுமிக்கு மட்டுமே உண்டு என்று நினைத்தவர் அதை பரமேஸ்வரியின் மனதிலும் வசந்தாவின் மனதிலும் பதிக்க ஆரம்பித்தார்.

அவர் நினைத்ததும் நடந்தது. இத்தனை வருடங்களாக பிரிந்திருந்த மகளை, தன் நாத்தனாரின் மகனுக்கே மணம் முடித்து வைத்தால், அவளும் நிரந்தரமாக தன்னுடன் இருப்பாள் என்று நினைத்தார் பரமேஸ்வரி.

அண்ணன் மகளை திருமணம் செய்து வந்தால், பெரிய பிர்ச்சனைகளோ குடும்பப் பிரிவோ ஏற்படாது என்று நினைத்தார் வசந்தா. மகாலட்சுமியும் அமைதியே உருவாய், பார்க்க லட்சணமாக இருக்க, அவரது மனதிலும் உறுதி பிறந்தது.

கிருபாவின் திருமணம் முடிந்த அடுத்த வருடமே யதுவுக்கு அவளை திருமணம் செய்து விட முடிவுக்கு வந்து விட, நினைத்தது நடந்த சந்தோசத்துடனே சென்றாயம்மாள் இறந்து போனார்.

அதன் பிறகு மகாலட்சுமி நந்தவனத்துக்கு வந்து சேர்ந்து விட்டாள். அங்கு தீபா வேலை செய்யும் அதே பள்ளியில் வேலையும் பார்க்க ஆரம்பித்தாள்.

அவளிடம் யதுவை பற்றி பரமேஸ்வரி பேச, கடுப்பாகிப்போனாள். பாட்டி போனதும் அந்த பேச்சும் போனது என்று நினைத்தால், அம்மா ஆரம்பிக்கிறாரே என்ற கோபம். ஆனால், பரமேஸ்வரி அவள் மீது தனக்கிருக்கும் பாசத்தையும், அவள் தன்னுடனே இருக்க வேண்டும் என்ற ஆசையையும் எடுத்துக் கூறினார்.

அவருக்காக முதன் முறையாக, வெறுப்பை ஒதுக்கி விட்டு யதுவை பார்க்க ஆரம்பித்தாள் மகாலட்சுமி. அவளுக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது. அமைதியான குணமும். அழகான முகமும். முக்கியமாக ஏழு கடைகளுக்கு சொந்தகாரரின் ஒரே மகன் அவனல்லவா? புதிதாய் காம்ப்ளக்ஸ் வேறு கட்டுகிறார்களாம். அதனால் மொத்தமும் பிடித்து விட்டது.

அவனும் முதலில் அவள் வந்து போகும் போது மாமன் மகள் என்ற பாசத்தில் சாதாரணமாக தான் பேசிக் கொண்டிருந்தான். திருமண பேச்சு ஆரம்பித்த பிறகு தான், அவனிடம் மௌனம் நிலவியது. அதற்கான உண்மையான காரணத்தை யாருமே அறியவில்லை.

மகாலட்சுமி திருமணத்திற்கு சம்மதித்து விட, யதுவும் தலையாட்டி வைத்தான்.

இங்கு மகாலட்சுமி யதுவுடனான வாழ்வை ஆனந்தமாக எதிர்பார்த்திருக்க, அங்கு அதியன் வாழ்வோ வெறுமையாக போய்க்கொண்டிருந்தது.

அன்று மகாலட்சுமியின் சுயரூபம் தெரிந்து கொண்டு, வீடு வந்து சேர்ந்தவனிடம் பாக்கியம் விசாரிக்க, ஏளன சிரிப்போடு நடந்ததை கூறினான்.

“இப்படி பட்டவளா இருப்பானு நினைச்சு கூட பார்க்கல ஆண்ட்டி” என்று அவன் வெறுப்பாக கூற, பாக்கியத்திடம் பெரிய அதிர்வில்லை.

அவள் வீட்டை பார்த்து விட்டு முகம் இறுகி அமர்ந்திருந்ததும், அவளுடைய பாட்டி அலட்சியமாக பேசியதையும் அவர் மறக்கவில்லை. அதனால் அவர்களிடம் இது போன்ற குணங்கள் இருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை.

விசயம் முத்துவேலுக்கும் போக, அவருக்கும் என்ன சொல்வதென்று புரியவில்லை.

“நம்ம கிட்ட தான் பணம் இருக்கேபா. அத சொல்லிடலாம்ல? இப்ப எல்லாம் பொண்ணுங்க, பையனோட ஃபைனான்ஷியல் ஸ்டேட்டஸ் பார்க்குறது தப்பு இல்லனு தான் தோனுது”

“அத அவ என் கிட்ட நேரடியா கேட்டுருக்கலாம்பா. அவளா நினைச்சு, அது இல்லனதும் குப்பை மாதிரி தூக்கி எறிஞ்சுட்டா. அட்லீஸ்ட் நீ பணக்காரன் இல்லையா? அப்புறம் ஏன் ஏமாத்துனனு என் கிட்ட சண்டை போட்டுருந்தா கூட, நேரடியா கேட்டுட்டானு சந்தோசப்பட்டு இருப்பேன். அவ லவ் பண்ணது என்னை இல்ல. என் மேல அவ வச்ச பணக்காரன் பிம்பத்த. அது அழிஞ்சு போகவும், நான் அவளுக்கு யாரோவாகிட்டேன். சொல்லுறா.. தேடி வந்தா துரத்துவாளாம். அவள யாரு இனி தேடிப்போகப்போறா?”

அதியன் வெறுப்பில் உட்சத்தில் பேச, மற்றவர்களுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் விட்டு விட்டனர்.

ஆனால், அதியன் இனி மகாலட்சுமியை பற்றி பேசவே கூடாது என்று முடிவு செய்து விட்டான். அதை எல்லோரும் அவனுக்காக ஆமோதித்தாலும், அவனிடம் தெரிந்த மாற்றங்கள் தான் எல்லோரையும் கவலைக்குள்ளாக்கியது.

முத்துவேல் அவனை அமெரிக்கா வந்துவிடும்படி அழைத்தார்.

“எவளுக்கோ பயந்து நான் ஓடனுமா? ஏன்பா? எனக்கு இந்தியாவ பிடிச்சுருக்கு. நிறைய சுத்தி பார்க்கனும். வினோத் வேற இப்ப தான் காலேஜ்ல சேர்ந்திருக்கான். அவன் படிப்பு முடிஞ்சதும் தான் வருவேன்” என்று கூறி விட்டான்.

அதற்கு மேல் அவனை யாரும் வற்புறுத்தவில்லை. வினோத் கல்லூரிக்கு போக வசதியாக இருக்கும் என்று, வேறு வீடு மாறிக் கொண்டனர்.

மேலோட்டமாய் வாழ்க்கை அமைதியாக சென்றாலும், உள்ளே அதியனின் குமுறல் இருந்து கொண்டே இருந்தது.

தன்னை காதலித்தாள் என்று நினைத்திருந்தான். அவளோ பணக்காரன் ஒருவனை காதலித்து இருக்கிறாள். அந்த பணக்காரன் இல்லை என்றதும், அவளது காதலும் கரைந்து விட்டது. இதை விட பெரும் அவமானம் எதுவும் இல்லை என்றே நினைத்தான்.

“என் சொத்து பத்தி என்னடி தெரியும் உனக்கு?” என்று கேட்டு கத்த வேண்டும் போல் வெறி எழும்.

அடக்கிக் கொள்வான். அவளுக்கு அதைத்தெரிந்து கொள்ள தகுதி இல்லை என்று முடிவெடுத்து விட்டான்.

அதியனின் புது வீடு, மகாலட்சுமி வேலை செய்யும் பள்ளியின் அருகே இருக்க, அவளை மீண்டும் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்ந்தது.

பள்ளி முடிந்து தீபாவோடு வந்து கொண்டிருந்தவளை வெறித்து பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். அவளை அங்கு வைத்து பார்ப்பான் என்று நினைக்கவில்லை. அதிர்ச்சியிலும் வெறுப்பிலும் பார்த்துக் கொண்டே நின்று விட்டான். அவள் பார்க்கவும் வெடுக்கென பார்வையை திருப்பிக் கொண்டு திரும்பிச் சென்று விட்டான்.

மகாலட்சுமியும் அவனை பார்த்து விட்டு, சில நொடிகள் அதிரத்தான் செய்தாள். ஆனால் உடனே சமாளித்துக் கொண்டாள்.

அதியன் வெறுப்போடு பார்த்துச் சென்றது, மகாலட்சுமியுடன் இருந்த தீபா கவனித்து விட்டாள்.

“யார் அது?” என்று கேட்டு நச்சரிக்க, மகாலட்சுமி கதையை புரட்டி போட்டுக் கூறினாள். உண்மையை சொல்ல மனம் இல்லை. தன்னை பெரிய நாயகியாக தூக்கி வைத்துக் கொண்டாடும் தீபாவின் முன் குறையக்கூடாது என்று நினைத்தாளோ? அல்லது தனக்கும் பாட்டிக்கும் அதியனுக்கும் மட்டுமே தெரிந்த விசயத்தை சம்பந்திமில்லாத தீபாவிடம் சொல்ல பிடிக்கவில்லையோ?

எப்படியோ உண்மையை மட்டும் கூறாமல், விசயத்தை மாற்றி இருந்தாள்‌

மகாலட்சுமி இரத்த தானம் கொடுத்ததால், அதியன் அவளை ஒருதலை பட்சமாக காதலித்திருக்கிறான். ஆனால் மகாலட்சுமி அவனை மறுத்ததாகவும், அதனால் அவன் கோபமாக இருப்பதாகவும் சொல்லி வைத்தாள். அதை தீபா நம்பும் அளவு மேலும் பல பொய்களை கூறியிருந்தாள். அதனால் தீபா உண்மையை அறியவில்லை.

இரண்டு மூன்று முறை மகாலட்சுமியை சந்தித்து கடந்து போனான் அதியன். பாதிப்பில்லை என்பது போல் காட்டிக் கொண்டாலும், உள்ளே நிறைய பாதிக்க தான் செய்தது.

அதனால் மீண்டும் வேறு வீடு மாறிக் கொண்டான். அங்கும் அவனுக்கு அடுத்த சோதனை காத்திருந்தது. யதுநந்தன் மகாலட்சுமிக்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்த மண்டபத்தை சுற்றித்தான், அவன் வேலைக்கு சென்று வர வேண்டும்.

முதல் நாளே அலங்கரிக்கப்பட்டிருந்த மண்டபத்தின் வாசலில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த மகாலட்சுமியின் படத்தைப் பார்த்து நொந்து விட்டான்.

நண்பனின் காரை எடுத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தவன், மனம் மகாவை நினைத்து துடித்தது. நாளை அவள் வேறு ஒருவனின் மனைவியாகி விடுவாள். ஆனால் இந்த பாலாய் போன மனம் மட்டும், அவளையே நினைத்து உருகுகிறதே. தகுதியே இல்லாதவளை நினைத்து உருகும் மனதை கொல்லும் வெறி வர, காரை தாறுமாறாக ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளானாள்.

அடிபட்டால் இரத்தம் உறையாது என்று தெரிந்தும், அதனால் உயிருக்கே ஆபத்து என்று தெரிந்தும், அந்த காரியத்தை செய்து விட்டான்.

காரை கொடுத்திருந்த நண்பன் விவரம் அறிந்து, வினோத்துக்கு சொல்ல, உடனே இரத்தம் கிடைக்காமல் அவன் மகாலட்சுமியை தொடர்பு கொள்ள, எல்லாம் கை மீறிப்போனது.

அன்று அதியனுக்கு மகாலட்சுமியை திருமணம் செய்ய ஆசையில்லை. தன்னை துட்சமாக தூக்கி போட்டவளை திருமணம் செய்ய வேண்டுமா? என்று ஈகோ கேட்டது.

ஆனால் அவள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்ததை தாங்கவும் முடியவில்லை. அவனுடன் திருமணம் என்று சொன்னதும், அவள் அதிர்ந்து மறுத்தது அவனது ஈகோவை மேலும் கிளப்பி விட்டது.

‘இப்பவும் மாறல இவ. கல்யாணம் பண்ணிட்டே இவள கவனிக்கிறேன்’ என்ற முடிவுக்கு வந்து, திருமணம் செய்து கொண்டான்.

ஆனால் அவளோ, திருமணமான அன்றே விவாகரத்து கேட்டு நின்றாள்.

‘தன்னுடன் வாழ்வது இவளுக்கு அவ்வளவு வெறுப்பாகவா இருக்கிறது?’ என்று நினைத்து கோபம் கொண்டவன், “தர முடியாது” என்று கூறி விட்டான்.

அதுவும் அவனுடைய தந்தை யார் என்று மருத்துவமனையில் வைத்து கூறும் போது, அதிர்ந்த மகாலட்சுமியை கவனித்து இருந்தான். பணம் இருக்கிறது என்று தெரிந்தும் அவள் விவாகரத்து கேட்டது, தூங்கிய தன்மானத்தை தேவையில்லாமல் எழுப்பி விட்டது போல் இருந்தது.

இத்தனையும் மனதில் ஓட, அதியனின் கையில் கார் இலக்கில்லாமல் சென்று கொண்டிருந்தது. இது அவனது சொந்த கார். இங்கு வந்தால் மட்டும் பயன்படுத்த வைத்திருந்தான். காரின் விலையை மகாலட்சுமி கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. ஆனாலும் அவளுக்கு அவன் வேண்டாமாம். பணமில்லை என்று மறுத்த போது கூட கோபம் இருந்தது. இன்று அவள் கேட்ட பணம் அவனிடம் இருந்தாலும் கூட வேண்டாம் என்கிறாள். அவளை காதலிக்கும் மனம் தான் அடிபட்டு துடித்தது.

அது போதாது என்று, இப்போது எல்லாம் மறந்து விட்டவளிடம் அவளுடைய இன்னொரு முகத்தை பற்றி பாவம் பார்க்காமல் கூறி விட்டு வந்து விட்டான். நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பாள். அதற்கும் சேர்த்து அவன் மனம் தான் வாடியது.

ஆனால் நல்ல நிலையில் இருக்கும் போது, அவளுடைய தவறை அவள் உணரப்போவதே இல்லை. இப்போதாவது உணர்ந்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டான்.

வெகுநேரம் வெளியே சுற்றி விட்டு விட்டு, வீடு நோக்கி திரும்பினான்.

அதியன் சென்றதும் அழுது கொண்டே படுத்திருந்த மகாலட்சுமி, அப்படியே தூங்கி இருந்தாள். உறக்கமும் விழிப்புமாக ஒரு நிலையில் இருக்கும் போது, யாரோ யாரையோ அடிக்கும் சத்தம் காதில் விழுந்தது. அதில் அவளது உறக்கம் பாதி களைய, மீண்டும் ஒரு முறை அடிக்கும் சத்தம் கேட்டது.

ஒரு பெண் கண்டபடி ஆங்கிலத்தில் ஒருவனை திட்டிக் கொண்டிருக்க, அது எல்லாம் மகாலட்சுமியின் காதில் விழுந்து, தூங்கிக் கொண்டிருந்த மூளையை தட்டி எழுப்பியது.

அவள் வனிஷாவிடமும் அதியனிடமும் அடி வாங்கிய காட்சிகளை நினைவுக்கு கொண்டு வர, திடுக்கிட்டு எழுந்தாள். மறந்து போன எல்லாமே அவளுக்கு நினைவு வந்து விட்டது.

குப்பென வியர்த்து விட்டது. வேகவேகமாக மூச்செடுத்தவளுக்கு எல்லாம் நினைவு வந்து விட, சற்று முன் அதியன் கத்தியதையும் நினைத்துப் பார்த்தாள்.

இவ்வளவு நாளும் தன் தவறென்ன என்று புரியாமல் திமிராய் இருந்தவளுக்கு, இன்று எல்லாம் விளங்கி விட்டது.

வெளியே தாறுமாறாக திட்டிக் கொண்டிருந்த பெண்ணில் பேச்செல்லாம், மகாவை தான் திட்டுவது போல் இருக்க, காலைக்கட்டிக் கொண்டு அதில் முகத்தை மறைத்தபடி அமர்ந்து விட்டாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
26
+1
2
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்