Loading

எதுவும் சொல்லாமல் அவசரமாக கிளம்பிச் சென்றவர்களின் நலம் விசாரிக்க அதியன் மகாலட்சுமியை தொடர்பு கொள்ள, அவள் அழைப்பை ஏற்கவில்லை. அவனுடைய குறுஞ்செய்திக்கு மட்டும் ஏனோ தானோவென பதிலை சொல்லி நிறுத்திக் கொண்டாள்.

அன்று முதலே அவனை ஒதுக்க வேண்டும் என்ற தீவிரமான முடிவுக்கு வந்திருந்தாள். அதனால் அவளுக்கு அவனிடம் ஒரு அலட்சியம் தோன்றியிருந்தது.

அதன் பிறகு ஊர் திரும்பும் வரை அதியனிடம் அவளாக பேசவில்லை. அவனாக பேசினாலும், ஒன்றிரண்டு வார்த்தை தான் பேசினாள். நிறைய பேசினால் அவளின் ஏமாற்றத்தை அவளை அறியாமல் காட்டி விடுவாளோ என்று பயமாக இருந்தது.

அவனிடம் அவளால் சண்டை போடவும் முடியாது. சண்டை போட்டால் எதை கேட்பது?

இது வரை, அதியன் அவனை பற்றிய விவரங்கள் எதையும் முழுதாக பகிர்ந்தது இல்லை. எங்கு வேலை செய்கிறான். எங்கு தங்கியிருக்கிறான் என்பது மட்டுமே பகிர்ந்து இருந்தான். அதிகமாய் அவன் அவனுடைய அடையாளத்தை காட்டிக் கொள்ள மாட்டான்.

என் தந்தை, பெரிய நிறுவனத்தில் பெரிய வேலையில் இருக்கிறார் என்று சொல்லிக் கொள்வது, அவனுக்கு அவ்வளவு பிடித்தம் அல்ல. அப்படி சொல்லி தனக்கு தானே ஆபத்தும் விளைவித்துக் கொள்ள முடியாது. அதை விட, யாரோ ஒருவனாய் சுதந்திரமாய் உலகை சுற்றி வருவது அவனுக்குப் பிடித்த ஒன்று. அது மட்டும் தான் உலகிற்கு தெரியும். மகாலட்சுமி உட்பட.

அதற்கு மேல் அவனுடைய தந்தையின் விவரங்கள் அவனது சொத்து மதிப்பை எல்லாம் அவன் பகிர்ந்தது இல்லை. அதனால் மகாலட்சுமி ஏமாந்து போனாள். அந்த ஏமாற்றத்துக்கு அவனை திட்ட முடியாதே?

இவளாக ஒன்றை யூகித்து, அதை நம்பி பிறகு ஏமாந்து விட்டதற்கு, அவனிடம் சண்டை பிடித்தால் அவமானம் தான் கிடைக்கும். கௌரவமாக விலகிவிடுவது நல்லது என்று நினைத்தாள்.

அதியனிடம் சொல்லாமலே விலகிக் கொள்ள ஆரம்பித்தாள்.

அவளது திடீர் விலகல் அதியனை தான் பாதித்தது. சுற்றி சுற்றி வந்து அவனிடம் பேசிக் கொண்டிருந்த பெண், திடீரென பேச்சை நிறுத்திக் கொண்டது சந்தேகத்தை கிளப்பியது.

அவனுக்குள்ளும் மகாலட்சுமியின் மீது ஈர்ப்பு வரத் தொடங்கிய நேரம் அது. அவளது விலகல் அவனை அதிகம் பாதிக்க, அவளிடம் பேச முயற்சித்து தோற்றான்.

அவன் பேச வர மகாலட்சுமி மௌனம் சாதிக்க என்று நாட்கள் பறந்து கொண்டிருந்தது.

மீண்டும் பாட்டியோடு ஊருக்குச் சென்று விட்டாள் மகாலட்சுமி. பல நாட்களை பல விதமான யோசனைகளில் கழித்தாள். என்ன தான் அதியன் மீது காதல் இருந்தாலும், வசந்தாவை போல எதுவுமே இல்லாதவனை திருமணம் செய்ய அவளுக்கு சம்மதமில்லை.

வெற்றிவேல் எந்த வசதியும் இல்லாமல் தான் வசந்தாவை திருமணம் செய்து கொண்டார். அவரை அப்படியே ஏற்க வசந்தாவால் முடிந்தது. ஆனால் மகாலட்சுமியால் அதியனை அப்படி ஏற்க முடியாது. ஏற்கவும் மாட்டாள்.

அவர்களது காலத்தில் எப்படியோ? ஆனால் இப்போது எல்லாமே பணம் தான். முக்கியமாக மகாலட்சுமிக்கு பணம் தான் முக்கியம். அது இல்லாத ஒருவனை, கணவனாக அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. சென்றாயம்மாளின் போதனைகள் அவளுள் வேரூன்றி வளர்ந்திருந்தது. 

அதியனிடம் பணம் இல்லை. அதனால் எனக்கு அவன் வேண்டாம். காதலும் பொய் காதலித்ததும் பொய் என்று தனக்கு தானே முடிவு செய்து விட்டாள்.

ஒரு முடிவுக்கு வந்ததும் அதியனை முற்றிலுமாக ஒதுக்கினாள். சமூக வலைதளங்களை அழித்தாள். அவனுடைய எண்ணை பார்த்தால் அழைப்பை எடுப்பதும் இல்லை.

அதிலெல்லாம் அவளுக்கு வலியே தோன்றவில்லை. வருத்தம் தான் தோன்றியது. இவன் பணக்காரனாக இருந்திருக்கலாம் என்ற வருத்தம். உண்மை காதல் தீவிரக்காதல் இப்படி நொடியில் மாறுமா? என்று அவள் யோசிக்கவில்லை. அது காதலே இல்லை என்று யார் சொல்வது?

ஆனால் அதியனின் மனதில் மகாலட்சுமி இருந்தாள். அதனால் மீண்டும் மீண்டும் அவளை தொடர்பை கொண்டான் அதியன். அவளுக்கு எதுவும் பிரச்சனையோ என்று அதியன் சந்தேகமாக கேட்பதும், எதுவுமே இல்லை என்றதோடு அவள் முடித்துக் கொள்வதும் வழக்கமானது.

ஆனால் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. சரியான பதில் தராமல் சமாளிக்கிறாள் என்று தோன்றியது. நேரில் சென்று விசாரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

ஆனால் அதையும் உடனே செய்ய முடியாமல் பல வேலைகள் குவிந்தது. அதை எல்லாம் முடித்து விட்டு, ஓடிச் சென்று மகாலட்சுமியை அவள் வேலை செய்யும் பள்ளியிலேயே வைத்து சந்தித்தான்.

அவனை அடையாளம் தெரிந்து கொண்ட வாட்ச்மேன், சகஜமாக பேசினார். மகாலட்சுமி வரவும், “மிஸ்.. இங்க வாங்க” என்று அவரே அழைத்தார்.

அவரருகே நின்றிருந்த அதியனை மகாலட்சுமி எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியோடு அங்கு வந்து சேர்ந்தாள்.

“இங்க…” என்று எதோ ஆரம்பித்தவளை தடுத்து, “போயிட்டே பேசலாம்” என்றான் அதியன்.

அன்று நன்றி சொல்லிச் சென்ற, பிறகு மீண்டும் அவன் வீட்டில் தான் சந்தித்தனர். அடுத்ததாக இது மூன்றாவது சந்திப்பு. ஆனால் அதியனுக்கு அவளோடு நெருக்கமாகி விட்ட உணர்வு இருந்தது.

அவ்வளவு தூரம் கைபேசி அவர்களை நெருங்க வைத்திருந்தது. அல்லது மகாலட்சுமி அவனை நெருங்கி வந்திருந்தாள். அப்படி நெருங்கியவள், சட்டென விலகி ஓடுவது எதனால்? என்று விசாரிக்க வந்திருந்தான்.

அதியனோடு நடக்கும் போது மகாலட்சுமிக்கு படபடவென இருந்தது. எதுவும் வேண்டாம் என்று ஒதுங்கிக் கொள்ள நினைத்தாள். அதனால் அவனோடு பேசிக் கொண்டே போவது சரியாக படவில்லை.

ஆனால் அங்கேயே நின்று பேசவும் வழி இல்லை என்பதால் சற்று தள்ளி வந்தாள். கூட்டமில்லாத இடத்திற்கு வந்ததும், “என்ன விசயம்?” என்று கடுமையாக கேட்டாள்.

அலளை கூர்ந்து பார்த்தான் அவன். அவளிடம் ஒரு இறுக்கம் தெரிந்தது. எதாவது பிரச்சனையாக இருக்குமோ என்று தான் அவனுக்கு இப்போதும் தோன்றியது.

“இத நான் தான் கேட்கனும். ஏன் கால்ஸ் அட்டன் பண்ணுறது இல்ல. மெஸேஜ்க்கு ரிப்ளை பண்ணுறது இல்ல. என்ன பிரச்சனை உனக்கு?”

“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லனு சொன்னேன்ல?”

“பார்த்தா அபப்டித்தெரியலயே..”

“உங்களுக்கு தெரியுறதுக்கு நான் என்ன செய்ய முடியும்?”

“இப்ப எதுக்கு இவ்வளவு கோபமா பேசுற?”

“பின்ன? இப்படி வேலை செய்யுற இடத்துல வந்து பேசுனா.. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?”

அவளது பதிலைக்கேட்டு ஆழ்ந்து பார்த்தவன், “அன்னைக்கு நாம பேசும் போது யாரும் எதுவும் நினைப்பாங்கனு நீ கவலைப்படலயே?” என்று கேட்டு விட்டான்.

முகம் கன்றி விட உதட்டைக் கடித்தாள் அவள். அவளது மாற்றத்தை பார்த்த அதியன் ஆழ மூச்செடுத்து நிதானமானான்.

“உனக்கு வீட்டுல எதாவது பிரச்சனையா? சொன்னா எதாவது என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுவேன்ல?”

“எனக்கு எந்த ஹெல்ப்பும் தேவை இல்ல.”

அதோடு மகாலட்சுமி திரும்பி நடக்க, அதியன் விடுவதாக இல்லை. அவளோடு சேர்ந்து நடந்தான்.

“நில்லு.. மகாலட்சுமி எதாவது சொன்னா தான தெரியும்? சும்மா இப்படி முகத்த திருப்பிட்டு போனா என்னனு தெரியும்?”

“எதுவும் சொல்லுறதுக்கு இல்லைங்குறேனே.. அப்புறம் ஏன்யா பினாடியே வர்ர?”

அவள் எரிந்து விழ, அப்போதும் அதியன் அவளுக்கு எதோ பிரச்சனை என்றே நினைத்தான். அவளுடைய மனமாற்றம் அவனுக்கு புரியவில்லை.

“நீ என்ன விசயம்னு சொல்லு போயிடுறேன்” என்று கேட்டு அடம்பிடித்தான்.

“இப்படி என்னை கேள்வி கேட்டு பின்னாடி வர்ரது என் பிரச்சனையே. போதுமா? கிளம்பு இங்க இருந்து.”

“நான் உண்மையான பிரச்சனைய கேட்டேன்.” எனும் போதே ஆட்டோ ஒன்று நிறுத்த பார்த்தாள் அவள்.

சட்டென அவள் முன்னால் வந்து நின்றான் அதியன்.

“என்னனு சொல்லாம உன்னை விட மாட்டேன். மீறி போனா கால் பண்ணுவேன். இல்லனா நேரா வீட்டுக்கே வருவேன்”

அதியனின் மிரட்டல் சற்று வேலை செய்தது. மகாலட்சுமி நின்று விட்டாள். அவன் வீட்டுக்கு வந்தால் பாட்டியிடம் தேலையில்லாமல் அவமானப்படுவான். பாட்டியும் எல்லாவற்றையும் கூறி வைத்து விடுவார். அது அவளுக்கும் அவமானம். இரண்டு அவமானத்தையும் தடுக்க வேண்டும். அதனால் இங்கேயே சமாளிக்க வேண்டும்.

எதையாவது சொல்லி அனுப்ப வேண்டும் என்று அவசரமாக யோசித்தவள், “லிசன்.. எனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடுச்சு. அண்ட்.. உன்னை விட அழகான பையன, முக்கியமா பணக்கார பையன, எங்க வீட்டுல மாப்பிள்ளையா பார்த்துருக்காங்க. எனக்கும் அவன ரொம்ப பிடிச்சு போச்சு. நான் லவ் சொன்னத மறந்துரு. நானும் மறக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அதுனால இனிமே எனக்கு கால் பண்ணாத. என் கிட்ட பேச ட்ரை பண்ணாத. என்னை தேடி இப்படி வந்து நிக்காத. நான் கிளம்பனும். குட் பை” என்று படபடவென பேசியவள், அங்கு வந்த ஆட்டோவை கை காட்டி நிறுத்தி ஏறிச்சென்று விட்டாள்.

அதியன் அவள் சொன்ன விசயத்தைக் கேட்டு முதலில் அதிர்ந்து, பிறகு நிதானமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை பற்றிப் பேசியதால், மகாலட்சுமி வேறு வழியில்லாமல் காதலை மறக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறாள் என்று தோன்றியது.

அவளுடைய பெற்றோர்கள் காதலுக்கு எதிரியாக இருக்கலாம். அதனால் மகாலட்சுமி அவர்களுக்கு பயந்து எதையும் சொல்லாமல் இருக்கலாம். அதியனும் அவளுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால், அவள் பெற்றோரின் விருப்பத்தை மதித்து, அதியனை மறந்து விட்டு திருமணம் செய்து கொள்ள நினைத்து விட்டாள்.

அப்படித்தான் அவனுக்குத்தோன்றியது. உண்மையில் அப்படி இருந்தால், அவன் அவளிடம் காதலை சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு வந்து விட்டான்.

அவனால் அவளை விட்டுக் கொடுக்க முடியாது. தன் காதலை சொல்லி, அவள் வீட்டில் இருவரும் பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்.

உடனே அவளை அழைக்க நினைத்து கைபேசியை எடுத்தவன், பிறகு அதை கை விட்டான்.

நேரில் சென்று பார்த்து பேசுவது தான் சரியாக இருக்கும். நாளை பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தவன், அங்கு ஒரு ஹோட்டலில் தங்கினான்.

அன்று இரவு, முத்துவேலை அழைத்து தன் காதலை பற்றிச் சொல்லி சம்மதம் வாங்கி இருந்தான். அடுத்த நாள் மாலை, அவள் வேலை முடிந்து வரும் வரை காத்திருந்தான்.

அவள் பள்ளியை விட்டு வெளியே வருவது தெரிந்தும், அவளிடம் செல்லவில்லை. தினம் தினம் அவளோடு தனியாக நின்று பேசுவது தவறு என்று பாக்கியம் கூறியிருந்தார்.

அதனால் நேராக அவளுடைய வீட்டுக்கு செல்ல நினைத்தான். மகாலட்சுமி ஆட்டோவில் வீடு நோக்கி கிளம்ப, அவனும் பின் தொடர்ந்தான்.

வீடு வந்ததும் அவள் உள்ளே சென்று விட, அதியனுக்கு உடனே செல்ல மனமில்லை. உள்ளே என்ன நிலைமை என்று தெரியாது. திடீரென போய் நின்று, பிரச்சனையை கிளப்பவும் முடியாது. அவளும் அப்போது தான் பணி முடிந்து திரும்பி இருக்கிறாள்.

பத்து நிமிடம் கழித்து அழைத்து, தான் வந்திருக்கும் விசயத்தைக்கூறி, பிறகு உள்ளே செல்லலாம் என்று வெளியே சற்று மறைவாக நின்று கொண்டான்.

பத்து நிமிடங்களும் கடந்தது. இனி அழைக்கலாம் என்று கைபேசியை எடுக்க, மகாலட்சுமியே வெளியே வந்தாள். அவளை பார்த்து கை ஆட்டப் போனவன், பின்னால் வந்த பாட்டியை பார்த்து விட்டு சட்டென மறைந்து கொண்டான்.

எடுத்த எடுப்பில் அவர் முன்னால் நின்று, அவனால் பிரச்சனையை கிளப்ப முடியாது. முதலில் அவனது மனதை மகாலட்சுமியிடம் தான் கூற வேண்டும். அதன் பின்பு தான், தைரியமாக மற்றவர்களிடம் பேச முடியும்.

அவன் மறைந்து நிற்க, மகாலட்சுமி துடைப்பத்தை எடுத்து வாசலை பெருக்க ஆரம்பித்தாள். சென்றாயம்மாள் வாசலில் அமர்ந்து கொண்டார்.

“அந்த பூ தொட்டிய தள்ளி வச்சுட்டு கூட்டு” என்று கூற, மகாலட்சுமியும் செய்தாள்.

“ஆமா.. அந்த பையன் கூட இன்னும் பேசிட்டு இருக்கியா என்ன?”

“இல்ல பாட்டி”

“நேத்து ஸ்கூல்ல வந்து பார்த்தான் போல?”

காலையில் தான் அவருக்கு செய்தி வந்திருந்தது. அதை தான் பேத்தியிடம் விசாரித்தார்.

“ஆமா.. வந்தாரு”

“என்ன சொன்ன? ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தீங்கனு கேள்வி பட்டேன்”

“என்னத்த சொல்ல? எனக்கு போன் பண்ணாத. தேடி வராதனு சொல்லி அனுப்பினேன்”

“மறுபடியும் அவன் பேசலயா?”

“இல்ல”

“இங்க பாரு மகா.. அவன நீ மறந்து தான் ஆகனும். மனசுல எதுவும் வச்சுகிட்டு சுத்தாத”

“இல்ல பாட்டி. நான் ஏன் நினைக்க போறேன்?”

“அந்த பிச்சைகார பயனுக்கெல்லாம், என் பேத்திய நான் என்னைக்கும் கட்டி வைக்க மாட்டேன்”

“எனக்கே அவன் வேணாம் தான்.”

தெளிவாக சொல்லி விட்டு, தண்ணீர் வாளியை எடுத்தாள்.

“மறுபடியும் வந்து பேசுனா என் கிட்ட விடு. நான் நாக்க புடுங்குற மாதிரி பேசிவிடுறேன்”

“இனிமே வர மாட்டான்னு தான் நினைக்கிறேன். வந்தாலும் நானே துரத்தி விட்டுருவேன். அவன் வீடும் அவன் வாழுற வாழ்க்கையையும் பார்த்துட்டு, எவளாவது கல்யாணம் பண்ணுவாளா? என்னால முடியவே முடியாது. எனக்கு அந்த வீட்டை பார்த்ததுமே, மனசு விட்டுருச்சு. எனக்கு பணக்காரன் தான் வேணும். அவன் சம்பாதிச்சு நான் வாழனும். நான் சம்பாதிச்சு அவன் செலவ பார்க்குற மாதிரி இருக்கு இவன் நிலைமை. இவன் கூட வாழனும்னு எனக்கென்ன விதியா?”

“அதான…? பிச்சைக்காரனா தான் இருக்கான்னு பார்த்தா, ஊதாரியா ஊர் சுத்துறவனா இருக்கான். பணத்த தண்ணியா செலவு பண்ணுறவனா இருக்கானே. இவனுக்கெல்லாம் என் பேத்திய போய் கொடுப்பேனாக்கும்?”

மகாலட்சுமி வாசலில் தண்ணீரையும் அதியனின் மனதில் நெருப்பையும் அள்ளி தெளித்துக் கொண்டிருக்க, பாட்டி அதில் மேலும் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தார்.

“நீங்க விடுங்க. நான் பார்த்துக்கிறேன். இப்ப எட்டு புள்ளி கோலம் போடவா? இல்ல நாலு புள்ளி போதுமா?” என்று கேட்டவள், கோலம் போட புள்ளி வைத்தாள்.

அதியனின் மனதை அலங்கோலமாக சிதைத்து விட்டு, வீட்டு வாசலில் அழகாக கோலமிட்டுக் கொண்டிருந்தாள் மகாலட்சுமி.

அதியன் எல்லாம் கேட்டு விட்டு, வந்த சுவடு தெரியாமல் திரும்பி நடந்தான். முகம் கற்பாறையாய் இறுகி விட்டது. இப்படி ஒரு திருப்பத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.

அவனிடம் இருக்கும் பணத்திற்கு, எத்தனையோ பெண்களோடு எப்படி வேண்டுமானாலும் அவனால் வாழ முடியும். அதற்கு அவன் வளர்ந்த நாட்டில் தடையும் இல்லை. ஆனால் அவன் அதை எல்லாம் செய்யாமல், தான் சம்பாதித்த பணத்தை அளவாக செலவு செய்து சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

அதற்கு கிடைத்த பட்டம் பிச்சைக்காரன் ஊதாரி.

அதியன் முகத்தில் ஏளன சிரிப்பு வந்தது. மற்ற பெண்கள் போல் மகாலட்சுமி இல்லை என்று நினைத்து இருந்தான். ஆனால் அத்தனை பெண்களையும் விட அவள் மோசமாக இருப்பாள் என்று அவன் நினைக்கவில்லை.

அவள் மீது கட்டுக்கடங்காமல் கோபம் வருவதற்கு பதில், அவள் பொய்த்துப்போனதில் தாங்க முடியாத வலி தான் அவனுக்கு வந்தது. அவனும் காதலித்து தொலைத்து விட்டானே.

அதுவும் அவளைப்போல போலியாக இல்லாமல், பணத்துக்காக இல்லாமல், அவள் மீது உண்மையான நேசம் உருவாகி இருந்தது. அது மிகவும் வலித்தது.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
19
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்