அதியன் பதினெட்டு வயது கடந்த பிறகு, பல நாடுகளை சுற்றி பார்த்திருக்கிறான். சிறுவயதில் தந்தையோடு சில நாடுகள் சென்று வந்தாலும் வளர்ந்த பிறகு தான் நிறைய சுற்றிப்பார்க்க ஆசை வந்தது. அவன் படிப்பை முடித்தது ஒரு நாட்டில். வேலை பார்த்தது பல நாடுகளில். எங்கு செல்கிறானோ அங்கு ஒரு வேலையும் தேடிக் கொள்வான்.
வினோத் அமெரிக்காவில் இருக்க, பாக்கியமும் அதியனும் மட்டுமே நாடு விட்டு நாடு பறந்து கொண்டிருப்பார்கள். அதியனுக்கு தனியாக சுற்ற விருப்பம். ஆனால் அவன் மீது கொண்ட அதீத அக்கறையில் பாக்கியம் அவனை தனியாக விட வில்லை. அவனுடைய பிரச்சனையும் ஒரு காரணம். விசயம் தெரிந்தவர் உடன் இருப்பது தானே நலம்?
அதனால் பெற்ற மகனை கூட விட்டு விட்டு அவன் பின்னால் சென்றார் பாக்கியம். நாடும் வேலையும் பிடித்திருந்தால், வருடக்கணக்கில் அங்கிருப்பார்கள். பிடிக்கவில்லை என்றால், சுற்றி பார்த்து விட்டுக் கிளம்பி விடுவார்கள்.
சில நாடுகளை, சுற்றிப்பார்க்க மட்டுமே சென்று விட்டு வருவார்கள்.
“இதெல்லாம் உனக்கு ஒரு பொண்டாட்டி வந்து அவ கூட சுத்தனும். ஆண்ட்டிய கூட்டிட்டு சுத்திட்டு இருக்க நீ?” என்று முத்துவேல் கலாய்த்தால் சிரித்து வைப்பான்.
சில நேரம் பாக்கியத்தை கொண்டு சென்று அமெரிக்காவில் விட்டு விட்டு தனியாகவும் பல இடங்களை சுற்றி இருக்கிறான்.
அப்படி பத்து நாடுகள் சுற்றியிருக்க பதினோறாவதாக தான் இந்தியா வந்து சேர்ந்தனர்.
இங்கு வந்ததும், பாக்கியத்தின் சொந்தங்களை சந்தித்துப் பேசினர். அதியனின் அன்னை ஆனந்தியின் குடும்பம், முத்துவேலின் சொந்தங்கள் எல்லோரையும் சந்தித்தனர். எல்லோரும் அதியனிடம் அன்பை பொழிந்தனர்.
அதியனுக்கும் இந்தியா மிகவும் பிடித்துப்போய் விட, ஒரு வேலையை தேடிக் கொண்டு தங்கி விட்டான்.
எந்த நாடு சென்று தங்குவதாக இருந்தாலும், அங்கு வேலை செய்து சம்பாதிக்கும் பணம் தான் செலவுக்கு பயன்படுத்துவது. அதிகமாக சேமிப்பில் இருக்கும் பணத்தை தொடுவது இல்லை. ஒரு வேலை கிடைத்ததும் அமெரிக்கா சென்று விட்டு வேலைக்கான விசாவோடு வந்து தங்கி விடுவார்கள்.
இங்கு சம்பாதித்து இங்கேயே செலவு செய்வது அவர்களுக்கு பெரிதாக தெரியவும் இல்லை. எது எவ்வளவு குறைவான பணமாக இருந்தாலும் அதை வைத்தே வேலையை முடித்து விடுவார்கள்.
வினோத் பள்ளிப்படிப்பை முடித்திருக்க, அவனுக்கும் இந்தியா செல்ல ஆசை வந்தது. உடனே அழைத்து வந்து, ஒரு கல்லூரியில் சேர்த்து விட்டனர். அவனுடைய செலவு மட்டும் இன்றும் முத்துவேலுடையதாகத் தான் இருந்தது.
ஊரைச்சுற்றிப்பார்க்க முவரும் கிளம்பிய போது தான், எதிர்பாராத விதமாக அதியன் அடிபட்டு மருத்துவமனையில் சேர்ந்தான். மற்றவர்கள் பெரிய காயமில்லாமல் தப்பி விட்டனர். ஆனால் அதியனிடம் இருந்த நோய், அவனது மொத்த இரத்தத்தையும் உடலை விட்டு வெளியே கொண்டு வருவேன் என்றது.
இரத்தத்திற்கு அழைந்து திரிய ஆரம்பித்தனர்.
அப்போது தான் மகாலட்சுமியும் அவனை காப்பாற்றி இருந்தாள். அவளை தேடிப்பிடித்து நன்றியை கூறினான்.
அதற்கு மேல் அவளை பற்றி யோசிக்காமல் அதியன் நாட்டை சுற்றி பார்க்க கிளம்பி விட, மகாலட்சுமி மட்டுமே அவனை நினைத்துக் கொண்டிருந்தாள்.
அவனுக்கு குறுஞ்செய்திகளை வரிசையாக அனுப்பினாள். அவன் பதில் சொன்னாலும் இல்லை என்றாலும், அவளுடைய செய்திகளை அனுப்பிய வண்ணம் இருந்தாள்.
ஒரு கட்டத்தில் அதியனும் பதில் பேச ஆரம்பித்தான். அவனுக்கு இந்நாட்டில் நண்பர்கள் அதிகம் கிடையாது. அதனால் மகாலட்சுமியை ஒரு தோழியாக பார்க்க ஆரம்பித்து விட்டான்.
அவர்களது பேச்சு தினமும் தொடர்ந்தது. மகாலட்சுமி அவனை இழுத்து வைத்து பேசினாள். அவன் மீது அதிக அக்கறை கொண்டாள். அவனை பற்றி மட்டுமே நினைக்க ஆரம்பித்தாள்.
மூன்று மாதத்தில் காலையில் வணக்கம் சொல்லி ஆரம்பித்து, இரவு வணக்கம் சொல்லாமல் உறங்குவது இல்லை என்ற நிலைக்கு வந்து சேர்ந்தது அவள் நிலை. அவன் எங்கிருந்தாலும் என்ன செய்து கொண்டிருந்தாலும், அவள் தன்னுடைய வேலையை செய்யாமல் விட்டது இல்லை. முழு நேரமும் அதியனின் எண்ணங்களே அவளை ஆக்கிரமித்து விட்டது.
அவளது மாற்றங்களை பார்த்து, பாட்டி கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.
“எப்பவும் அந்த போனு தானா? அதையே ஏன் பார்த்துட்டு இருக்க?” என்று சென்றாயம்மாள் அதட்டினால், வழிந்து வைத்து ஒரு சிரிப்பை உதிர்த்து வைப்பாள்.
அவரிடம் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. அதியனை பற்றிக்கூற சற்று பயமாகவும் இருந்தது. ஆண் தோழர்கள் கூடாது என்று விடுவாரோ? என்ற பயம்.
பயம் அதன் போக்கில் இருந்தாலும், அதியன் மீது அவள் கொண்டிருந்த ஈர்ப்பு, அவளையும் அறியாமல் வளர ஆரம்பித்தது. அதியனிடம் யாராவது பெண்கள் பேசுவதை பார்த்தால் பொறாமை வந்தது.
பொறாமை கொஞ்சம் கொஞ்சமாக கோபமாக மாறியது. ஆனால் எதையும் அதியனிடம் வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை. காரணம் அவன் எல்லைக்குள்ளேயே நின்றான். அவளைப் போல கோபப்படவும் இல்லை. பொறாமைப்படவும் இல்லை. அவள் தான் எல்லையை கடந்திருந்தாள்.
ஒரு நாள் சமூக வலைதளங்களில், ஒரு பெண் அதியனை காதலிப்பதாக பதிவு செய்து விட, மகாலட்சுமிக்கு தாங்க முடியவில்லை. உடனே எதையும் யோசிக்காது அதியனை அழைத்திருந்தாள்.
“அவ எதுக்கு உங்களுக்கு லவ் யூ னு போஸ்ட் போடுறா?” என்று கோபமாக கேட்க, “அந்த பொண்ணு என் ஃப்ரண்ட்.. இதுல என்ன இருக்கு?” என்று சாதாரணமாக திருப்பிக் கேட்டு வைத்தான் அவன்.
“ஃப்ரண்ட் எதுக்கு லவ் யூ சொல்லுறா?”
“இதெல்லாம் சாதாரண விசயம் மகா. இத போய் இப்ப ஏன் கேட்டுட்டு இருக்க?”
அதியன் சாதாரணமாக பேசப்பேச, மகாலட்சுமிக்கு கோபம் வெடித்தது.
“எது சாதாரண விசயம்? லவ் யூ சொல்லுறதா? அப்ப நானும் சொல்லவா?”
“நீ எதுக்கு கோபப்படுறனே தெரியல.. எனக்கு வேலை இருக்கு. நாம அப்புறம் பேசலாம்” என்று அப்போதைக்கு முடித்து விட்டான்.
ஆனால் அடுத்த நாளே மகாலட்சுமி அவனை காதலிப்பதாக கூறி விட்டாள். இதை அதியன் எதிர்பார்க்கவில்லை. நண்பியாக நினைத்தவள், திடீரென காதலை சொன்னதும் தடுமாறி விட்டான்.
மறுத்து தன் நிலையை புரிய வைக்க முயற்சி செய்தான். அவன் மனதில் அப்படி எதுவும் இல்லை என்று கூறினான். ஆனால் மகாலட்சுமி கேட்பதாக இல்லை. மீண்டும் மீண்டும் அவளது காதலை காட்டிக் கொண்டே இருந்தாள்.
அதியனால் அவளை கட்டுப்படுத்த முடியாமல் போக, அவள் போக்கில் விட்டு விட்டான். அவளும் அவன் மீது தான் கொண்ட காதலை காட்டிக் கொண்டே இருந்தாள். பதில் வாராமல் போனாலும் கவலைப்படுவது இல்லை.
அந்த நேரம் அவள் வேலை செய்யும் பள்ளி ஆண்டு விடுமுறை வர, அதியனின் வீட்டு முகவரியை கேட்டு வாங்கினாள்.
“உங்க வீட்டுக்கு வர்ரேன்.” என்று கூறி இருக்க, “வா வா.. ஆல்வேஸ் வெல்கம்” என்றான் அதியன்.
அதியனுக்கு அவள் மீது முதலில் அபிப்பிராயம் எதுவும் இல்லை என்றாலும், ஒரு பெண் தன்னை துரத்தி துரத்தி காதல் சொல்லும் போது, அவனால் ஒட்டு மொத்தமாய் விலகவும் முடியவில்லை.
மகாலட்சுமியும் எப்போது என்றில்லாமல், எல்லா நேரமும் காதலை கொட்டிக் கொண்டிருந்தாள். அத்தனையும் கைபேசி வழியாக தான் சென்று கொண்டிருந்தது.
ஊருக்கு செல்வதால், அவனை நேராக சந்தித்து காதலை சொல்ல முடிவு செய்தாள். அப்போது தான் அவளுடைய தீவிரமான காதல் அவனுக்குப்புரியும் என்று நினைத்தாள்.
அவனை சம்மதிக்க வைக்க வேண்டும். காதலை ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும். தோடு வீட்டிலும் சொல்லி,, சம்மதம் வாங்கி, உடனே அவனை திருமணம் செய்து கொள்ள நினைத்தாள்.
வீட்டில் சம்மதம் வேண்டும் என்றால், அதற்கு முதலில் பாட்டி சம்மதிக்க வேண்டும். பாட்டி சம்மதித்து விட்டால், அவர் பரமேஸ்வரியை பார்த்துக் கொள்வார். மேலும், ஏற்கனவே வசந்தாவின் காதல் வீட்டில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது தானே? அதனால் பெரிய எதிர்ப்பு இருக்காது. இருந்தாலும் பாட்டி பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையும் இருந்தது. அதனால் முதலில் பாட்டியின் காதில் விசயத்தை போட்டு வைத்தாள்.
அவளை மேலும் கீழும் பார்த்த சென்றாயம்மாள், “நினைச்சேன். அந்த போன்லயே கண்ண வச்சுருக்கும் போதே இப்படி வந்து நிப்பனு. பையன் யாரு?” என்று விசாரித்தார்.
அதியனின் படத்தை காட்டி விவரத்தை கூறினார்.
“பார்க்க நல்லா தான் இருக்கான். வேலை குடும்பம் எப்படி?”
“அவங்க அப்பா அமெரிக்காவுல வேலை பார்க்குறாங்களாம். இங்க அதியன் வேலை பார்க்குறார். சம்பளம் பத்தி எல்லாம் பேசுனது இல்ல.”
“நல்ல பணக்காரனா.. உன்னை நல்லா வச்சு வாழுறவனா இருந்தா மேல பேசுவோம்.”
“பாட்டி.. அவர் பணக்காரர் தான் பாட்டி”
“சம்பளம் தெரியாது. ஆனா பணக்காரன்னு தெரியுமா?”
“அவர் கையில வச்சுருக்க போனே லட்ச கணக்குல இருக்கும்”
“அப்படியா?”
“ஆமா.. லட்ச கணக்குல பணத்த கொட்டி தான் அந்த போன வாங்க முடியும். போன வாங்கவே அவ்வளவு செலவு பண்ணுறவர், பணக்காரனா இல்லாம எப்படி இருப்பார்?”
“நீ எந்த கணக்குல அவன பணக்காரன சொல்லுறன்னு புரியல. எதுக்கும் நான் நேர்ல பார்த்துட்டு சொல்லுறேன். வர சொல்லு”
“அவர் இங்க இல்ல. அந்த இருக்க ஊர்ல இருக்காரு. அங்க தான் வேலையும் பார்க்குறாரு. நாம அங்க போறப்போ அவங்க வீட்டுல போய் பார்க்கலாம். அட்ரஸ் இருக்கு”
மகாவட்சுமி பாட்டி சம்மதித்து விட்டார் என்று நினைத்து, சந்தோசமாக விவரங்களை கூறினாள்.
சென்றாயம்மாளுக்கு பேத்தியின் செய்கை வருத்தமாக இருந்தாலும், அவள் மீது வைத்த பாசத்தால் இதற்கு சம்மதித்தார். அவருக்கு பெரிய ராஜகுமாரனை பார்த்து மகாலட்சுமிக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை. ஆனால் பேத்தி ஒருவனை கை காட்டும் போது, அதை மறுத்து மனதை உடைத்து வேறு ஒருவனுக்கு கட்டி வைப்பதும், அவரால் முடியாது.
முதலில் அவனை பற்றி நன்றாக விசாரிக்க வேண்டும். அவன் பணக்காரனாக இல்லை என்றால் உடனே மறுத்துவிடுவார். அவனால் பேத்தியை நன்றாக வாழ வைக்க முடியும் என்றால் மட்டும், எப்பாடு பட்டாவது இவர்கள் திருமணத்தை நடத்தி விட நினைத்தார்.
விடுமுறையும் வந்தது. பேத்தியோடு மகளை பார்க்க சென்றவர், இரண்டு நாள் பொறுத்து விட்டு மகாவை அழைத்துக் கொண்டு அதியனின் வீட்டை நோக்கிச் சென்றார்.
அங்கு தான் அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. இருப்பது இரண்டே நபர்கள் என்பதால், ஒற்றை அறை கொண்ட மிகவும் சிறிய வீட்டில் தான் தங்கி இருந்தனர் அதியனும் பாக்கியமும். வினோத் திடீரென வந்து விட்டாலும், அந்த வீடு போதுமானதாக தான் இருந்தது.
மிகப்பெரிய பங்களாவை எதிர்பார்த்து வந்த மகாலட்சுமிக்கும், பேத்தியின் மீது வைத்த நம்பிக்கையில் வந்த சென்றாயம்மாளுக்கும், அது பேரதிர்ச்சி தான்.
மகாவின் முகம் அந்த வீட்டை பார்த்ததுமே கறுத்து இறுகி விட்டது. சென்றாயம்மாள் பேத்தியை பார்த்து விட்டு, ஒரு முடிவுக்கு வந்தார்.
அதாவது அதியன் மகாலட்சுமியை ஏமாற்றி விட்டான். பணக்காரன் என்று பொய் சொல்லி, மகாலட்சுமியின் மனதை களைத்திருக்கிறான். மகாவோ அப்பாவி பெண். உடனே நம்பி இருக்கிறாள்.
அவள் முகம் போன போக்கில் அவளுக்கும் இது புது செய்தி என்று தெரிய, ஏமாற்றிய அதியன் மீது தான் கோபம் வந்தது. ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல், பாக்கியம் வரவேற்றதும் உள்ளே சென்றனர்.
“உட்காருங்க. அதி சொன்னான். நீ தான் அவன் ஃப்ரண்ட்டாமா? என்ன சாப்பிடுறீங்க?”
பாக்கியம் முறையாய் வரவேற்க, மகாலட்சுமி வாயைத்திறக்கவில்லை.
சென்றாயம்மாள் அந்த வீட்டை நன்றாக பார்த்தார். ஆரம்பிக்கும் முன்பே முடிந்து விட்டது அந்த வீடு.
“எதுவும் வேணாம். இவ பார்க்கனும்னு சொன்னா. அதான் வந்தோம். எங்க அந்த பையன்?”
“அதி அவசரமாக யாரையோ பார்க்க போனான். நீங்க உட்காருங்க. வந்துடுவான். நான் ஜூஸ் எதாவது எடுத்துட்டு வரட்டா? நீ என்னமா குடிப்ப?”
சென்றாயம்மாளிடம் பேசி விட்டு மகாலட்சுமியிடமும் கேட்க, அவள் தலையை மட்டும், “வேண்டாம்” என்று அசைத்து வைத்தாள்.
ஏமாற்றத்தில் தொண்டை அடைத்திருக்க, வார்த்தை எங்கிருந்து வரும்?
இருவரும் வேண்டாம் என்ற போதும், பாக்கியம் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார்.
அவர் பேசியதற்கெல்லாம் மகாலட்சுமி பதில் சொல்லவில்லை. சென்றாயம்மாள் மட்டும், வீடு தேடி வந்து விட்டோமே என்ற எண்ணத்தில் அலட்சியமாக வேண்டாவெறுப்பாக பேசினார்.
சில நிமிடங்களில் அதியன் வந்து சேர்ந்தான். ஆட்டோவில் அவன் வந்து இறங்க, பார்த்த சென்றாயம்மாளுக்கு மொத்த நம்பிக்கையும் போய் விட்டது. மகாலட்சுமிக்கோ கோபம் கோபமாக வந்தது.
அவனும் இவர்களை பார்த்ததும் புன்னகைத்து வரவேற்க, தலையசைப்பை மட்டுமே பதிலாக கொடுத்தார் பாட்டி. மகாலட்சுமி அதையும் செய்யவில்லை.
பரமேஸ்வரியிடம் அப்போது பாட்டிக்கு அழைப்பு வர, எடுத்துப்பேசினார்.
“ம்மா.. அந்த டப்பாவ எங்க வச்சுட்டு போனீங்க? காணோம்”
“உடனே வரவா? சரி நாங்க கிளம்பிட்டோம். இப்பவே வர்ரோம்” என்று கூறி விட்டு பாட்டி எழ, மகாவும் எழுந்து விட்டாள்.
என்னவென்று விசாரித்தவர்களிடம் எதுவும் சொல்லாமல், “அவசரம்” என்று மட்டுமே கூறிவிட்டு கிளம்பினர்.
மகாலட்சுமி அதியனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கிளம்பி விட்டாள். அவன் பேசியதற்கு தலையை மட்டும் ஆட்டி விட்டு கிளம்பி விட்டாள்.
இருவரும் ஆட்டோவில் செல்லும் போது பேசிக் கொள்ளவில்லை. பாட்டி ஒரு கோவிலை பார்த்து விட்டு, ஆட்டோவை நிறுத்தி இறங்கிக் கொண்டார். மகாலட்சுமியும் அமைதியாக இறங்க, அவளை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்றார்.
சாமியை கும்பிட்டு முடித்ததும், மகாவை அழுத்தமாக பார்த்தார். அவளிடம் பதிலே இல்லை.
“என்னென்னமோ சொன்ன? இப்ப என்ன இப்படி இருக்கு?”
அவள் அமைதி காக்க, “சொல்லு மகா. பதில் சொல்லாம இருந்தா எப்படி?” என்று கேட்டார்.
“எனக்கும் தெரியாது பாட்டி”
“அந்த பையன் நான் ஒரு பணக்காரன்னு சொல்லி ஏமாத்திட்டானா?”
“இல்ல.. நானா தான் அப்படி நினைச்சுட்டேன் போல.. அவர் பல நாடு சுத்தி பார்த்துருக்கத பார்த்து…”
“அப்போ அவன் ஊதாரி பையன்”
பாட்டி பட்டென கூற, மகாலட்சுமியால் எதுவும் சொல்ல முடியவில்லை.
“சம்பாதிக்கிற காச வச்சு நல்லா வாழாம, ஊர் ஊரா சுத்தி இருக்கத எல்லாம் செலவு செஞ்சுட்டு, அடுத்த வேலை சாப்பாட்டுக்கு கடன் வாங்குறவனா இருக்கும். அது தெரியாம நீ என்னலாம் பண்ணி வச்சுருக்க?”
பாட்டி கோபத்துடன் கேட்க, மகா தலை குனிந்து கொண்டாள்.
“நல்ல வேளை இப்பவே உண்மை தெரிஞ்சது. இல்லனா வாழ்க்கை முழுக்க கண்ணீர் விட்டுட்டு இருந்துருப்ப. இனிமே அவன் கூட பேசாத. இந்த காதல் கீதல் எல்லாத்தையும் மறந்துட்டு ஒழுங்கா வேலையைப்பாரு” என்று கட்டளையாக கூறி விட்டார்.
கலங்கிய கண்ணை துடைத்துக் கொண்டவள், சம்மதமாக தலையை ஆட்டி வைத்தாள். அவளுக்குமே இப்படி ஏமாந்து போனோமே என்று வருத்தமாக இருந்தது.
வீடு வந்து சேர்ந்ததும், பரமேஸ்வரி மகாவின் முகத்தை பார்த்து விட்டு என்னவென்று விசாரிக்க, எதையோ சொல்லி சமாளித்து விட்டனர்.
அதன் பிறகு மகாலட்சுமி அதியனை முழுதாக தவிர்க்க ஆரம்பித்தாள்.
தொடரும்.