Loading

 

மகாலட்சுமி அவளது பாட்டி வீட்டில் நிரந்தரமாக தங்கி விட, அவளிடம் பல மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தது.

முதலில் சென்றாயம்மாள் அவளுக்கு தேவையான எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார்.

“படிப்பு முக்கியம் தான். அதே நேரம் வீட்டு நிர்வாகம், சமைக்கிறது எல்லாமே தெரிஞ்சுருக்கனும்” என்றவர் அவளுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தார்.

அவளது கூந்தலை பராமரித்து அழகாக்கினார். சமையல் கலையை கற்றுக் கொடுத்தார். மேலும் என்னென்ன தெரியுமோ அத்தனையும் அவளுக்குள் புகுத்தினார். அதோடு அவருடைய சில குணங்களும் அவளுள் கலந்தது.

சென்றாயம்மாளுக்கு பணம் தான் பிரதானம். பணம் இல்லாதவர்களை அவர் மதிப்பது கூட கிடையாது. மிகவும் அலட்சியமாக நடத்துவார். பணமிருப்பவர்கள் மட்டுமே அவரிடம் மரியாதையை எதிர்பார்க்க முடியும்.

இதைப்பற்றி மகாலட்சுமியும் கேட்டு விட்டாள்.

“ஏன் பாட்டி அவங்கள அப்படி பேசுறீங்க?”

“அவன் எல்லாம் ஒரு ஆளா? பிச்சைகார பையன்”

“அவங்க கிட்ட பணம் இல்லயா?”

“ஒன்னும் கிடையாது. இவனெல்லாம் வீடு தேடி வரலனு யார் அழுதா?”

“அதுக்காக ஏன் அவங்கள திட்டனும்?”

“அவன திட்டாம? ஊர்ல இருக்கவனயா திட்ட முடியும்? நாலு காசு சம்பாதிக்க துப்பில்ல. அவனுங்களுக்கு என்ன மரியாதை?”

“ஏழையா இருக்கது அவங்க தப்பு இல்ல தான?”

“அப்படினு யார் சொன்னது? ஒரு அனாதை பையன் ஏழையா இருக்கான்னா, அவனால அவ்வளவு தான் சம்பாதிக்க முடியும். அது அவனுக்கு போதும். ஆனா ஒரு குடும்பஸ்தன் ஏழையா இருந்து அந்த குடும்பத்தையும் கஷ்டப்பட விடுறான்னா, அவன் சம்பாதிக்க துப்பில்லாதவன்”

“பட் பணம் சாம்பாதிக்க தான செய்யுறாங்க? இல்லனா எப்படி வாழுவாங்க?”

“அதெல்லாம் சம்பளமா? இங்க பாரு மகா.. பணமில்லாதவன் சோம்பேறி. சம்பாதிக்க வழி இல்லாதவன். அவன எல்லாம் மதிக்கனும்னு அவசியம் கிடையாது. வறுமை‌ ஏன் வருது? பணமில்லாம. பணம் ஏன் இல்ல? அவன் சம்பாதிக்கல. ஏன் சம்பாதிக்கல? உழைக்கல. உழைக்காத சோம்பேறிங்க தான் வறுமைய கட்டிட்டு அழனும். ஊர்ல உலகத்துல ஆயிரம் வேலை இருக்கு. அத செஞ்சு காச வாங்கி நல்ல நிலைமையில வாழ வேண்டியது தான? அத விட்டுட்டு பஞ்சம் பாட கூடாது”

“அப்ப எவ்வளவு ட்ரை பண்ணாலும் பணம் சம்பாதிக்க முடியாதவங்க?”

“அதுங்க தரித்திரம் பிடிச்சதுங்க. தன்னோட தரித்திரத்துல இருக்க எல்லாரையும் இழுத்து விட்டுருங்க. “

“அப்படியும் இருக்கோ?”

“ஒன்னு நல்லா சம்பாதிச்சு நம்மலயும் குடும்பத்தையும் நல்லா பார்த்துக்கனும். இல்லனா அவனுக்கு உழைக்க தெரியல. அவனுக்கு மரியாதையும் கிடையாது.”

அவர் அவரது விளக்கத்தை கூற, அது மகாலட்சுமியின் மனதில் அழுத்தமாக பதிந்து விட்டது.

பாட்டியின் பேச்சில் நியாயம் இருப்பதாக தான் அவளுக்குத் தோன்றியது. உழைத்து சம்பாதித்து வாழ முடியும் என்ற போது, எதற்காக ஏழையாகவே வாழ வேண்டும்?

அவளது மனதில் அதுவே ஆழமாக பதிந்து போக, அவளிடம் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களை மட்டுமே நண்பர்களாக மதித்தாள். மற்றவர்களை அலட்சியமாக நடத்தினாள்.

முதலில் ஆரம்பித்த போது சாதாரணமாக இருந்த பழக்கம், போகப்போக பணமில்லாதவர்களை வெறுக்கவும் செய்யும் நிலைக்கு வந்தது.

கல்லூரியில் பணக்கார பிள்ளைகளோடு மட்டுமே ஒட்டி உறவாடினாள். ஆனாலும் அவளிடம் எல்லோருமே அன்பு காட்டவே செய்தனர்.

அவளது முகம் அகத்தை பிரதிபலிக்கவில்லை. அதனால் யாருக்கும் அவள் ஆழ் மனம் பற்றி தெரியவில்லை.

பாட்டியும் அமைதியாக இருந்து விடவில்லை. எப்போதும் எதையாவது பணத்தை பற்றியே போதித்துக் கொண்டிருந்தார்.

“என் பேத்திக்கு என்ன? பேருக்கேத்த மாதிரி மகாலட்சுமி அவ. நல்ல குடும்பமா பணக்கார பையனா பார்த்து கட்டி வைப்பேன்” என்று எல்லோரிடமும் கூறினார்.

அப்போது தான் செல்வகுமாரின் திருமணம் முடிந்து இருந்தது. சீதா பணக்கார வீட்டுப்பெண் என்பதே சென்றாயம்மாளுக்கு போதுமானதாக இருந்தது.

அந்த திருமணத்திற்கு வந்திருக்கும் நேரம், சென்றாயம்மாள் வசந்தாவையும் அவரது குடும்பத்தையும் மதித்த அளவு, வனிஷாவையும் மலரையும் மதிக்கவில்லை.

அவர்களும் இவரை கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவரது பழக்கங்கள் எல்லாம், சொல்லாமல் கொள்ளாமல் மகாவிற்குள் நுழைந்து கொண்டிருந்தது.

படித்து முடித்து பள்ளி ஆசிரியையாக அவள் பணி புரிந்த போதும், அவளுடைய குணம் மாறவில்லை.

அப்போது தான் எதிர்பாராத விதமாக அதியனை சந்தித்தாள்.

மருத்துவமனைக்கு பாட்டியோடு சென்றிருக்கும் போது, அங்கு இரத்தம் தேவைப்படுவதை கேள்வி பட்டு, தானம் செய்து விட்டு வந்தாள்.

வினோத், அவள் பெயரையும் வேலை செய்யும் இடத்தையும் பற்றிக் கேட்டுக் கொண்டான். அவனுடைய அண்ணனுக்கு தான் இரத்தம் கொடுக்கிறாள் என்பதால், ஆயிரம் முறை நன்றியும் சொல்லி வைத்தான்.

அதை அதோடு மறந்து விட்டு, மகாலட்சுமி வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதியன் அவள் வேலை செய்யும் பள்ளியின் வாசலில் நின்றிருந்தான்.

கேட்டில் இருந்த வாட்ச்மேனிடம் விசாரிக்க, அவர் அவனை மேலும் கீழும் பார்த்தார்.

“அது எதுக்கு உனக்கு?”

“அவங்க என் உயிர காப்பாத்தி இருக்காங்க. அதுக்கு நன்றி சொல்ல வந்தேன்” என்றான் அதியன்.

அவனது கையிலிருந்து கட்டை பார்த்து விட்டு ஓரளவு நம்பியவர், மகாலட்சுமியை கை காட்டினார்.

பள்ளி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தாள் மகாலட்சுமி. அவளை அழைத்தார் வாட்ச்மேன்.

அவரருகே வந்த மகாலட்சுமி, அதியனை ஆச்சரியமாக பார்த்தாள். அவனது தோற்றமே அவளை கவர்ந்து இழுத்தது. வயதிற்கேற்ற துடுக்குடன் அவனை பார்வை இட்டாலும், முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள்.

“இவங்கள தெரியுமா மிஸ்?”

“தெரியாதே”

“ரெண்டு நாளைக்கு முன்னாடி ப்ளட் டொனேட் பண்ணீங்களா?”

“ஆமா”

“அது எனக்கு தான்”

அதியன் சொன்னதும், அவளது விழிகள் வட்டமாக விரிந்தது.

‘வாவ்..! இவ்வளவு அழகான பையனவா காப்பாத்திருக்கோம்!’ என்று நினைத்து உள்ளே குதூகலித்தவள், “ஓஹ்.. நீங்க தானா? இப்ப ஹெல்த் ஓகேவா?” என்று முறையாய் நலம் விசாரித்தாள்.

“நல்லா இருக்கேன். இன்னைக்கு தான் டிஸ்சார்ஜ் ஆனேன். உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லாம்னு வந்தேன்”

‘பரவாயில்லனு சொன்னா போயிடுவானோ?’ என்று யோசித்தவள், “கொஞ்சம் தள்ளிப்போய் பேசலாமா? பாதையில நிக்கிறோம்” என்றாள்.

“வாங்க” என்றவன் அவளோடு தள்ளிச் சென்று நின்றான்.

“பெரிய அடியா? இப்ப ஓகேவா?” என்று அவள் கேட்க, “ரொம்ப பெரிய அடியெல்லாம் இல்ல” என்றான்.

“அப்புறம் எப்படி ரத்தம்?”

“ஆக்ட்சுவலி எனக்கு ஹீமோஃபிலியா இருக்கு.. அதான்.”

அவள் புரியாமல் பார்க்க, “ப்ளட் சீக்கிரம் உறையாது அடிபட்டா” என்று விளக்கினான்.

“அச்சச்சோ.. அப்படினா பார்த்து இருக்கலாம்ல?”

“கவனமா தான் இருப்பேன். பட் இந்த டைம் மிஸ் ஆகிடுச்சு”

“இனிமே பத்திரமா இருங்க. இப்ப உங்க உடம்புல என் இரத்தமும் இருக்கு. சோ வேஸ்ட் பண்ணிடக்கூடாது”

மகாலட்சுமி சிரித்துக் கொண்டே கூற, அவனும் புன்னகைத்துத் தலையாட்டினான்.

“உங்க பேரு?”

“அதியன்”

“நைஸ்.. உங்க நம்பர் தர்ரீங்களா? இல்ல என் நம்பர் நோட் பண்ணிக்கோங்க. எதாவது எமர்ஜென்ஸினா கூப்பிடுங்க. உங்களுக்கு திரும்ப அடி படக்கூடாது தான். ஆனா ஒரு சேஃப்டிக்கு?”

அக்கறை காட்டி அவனுடைய கைபேசி எண்ணை பெற்றுக் கொண்டாள். அவளது அக்கறையில் தவறேதும் தெரியாததால், அவனும் கொடுத்து விட்டான்.

அவளிடம் மீண்டும் நன்றி கூறி விட்டு கிளம்பி விட்டான்.

ஆனால் மகாலட்சுமியின் மனதில் பதிந்து போனான். உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் அவன் யாரென்று விசாரிக்க, ‘தெரிந்தவன்’ என்று சொல்லி வைத்தாள்.

வீட்டுக்கு வந்தவள், அவனுடைய எண்ணை பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் முகம் கண்ணை விட்டு மறைய மாட்டேன் என்றது.

வாழ்வில் அதிகம் ஆண்பிள்ளைகளோடு பழகாதவள். வீட்டில் இருக்கும் ஒரே ஆண்பிள்ளை யதுநந்தன் தான். அதுவும் அவனது மதிப்பெண்ணை காட்டி பரமேஸ்வரி திட்டும் போது, அவன் மீது வெறுப்பு தான் வந்தது.

இப்போது அதையெல்லாம் நினைத்து சிரிப்பு வந்தாலும், வேறு யாரின் மீதும் இவ்வளவு ஆர்வம் வரவில்லை.

முதல் முறையாக அதியனின் மீது தான் கொள்ளை கொள்ளையாக ஆர்வம் வந்தது. ஒரு நாள் முழுவதும் அவனிடம் பேசுவதா? வேண்டாமா? என்ற சிந்தனையிலேயே கடத்தினாள்.

ஆனால் தானாய் சென்று பேச தைரியமில்லை. அல்லது இறங்கிப்போக மனம் விடவில்லை. அதனால் அவனது பெயரை போட்டு சமூக வலைதளங்களில் தேடினாள். பல மணி நேர தேடலுக்கு பிறகு, அவனை கண்டு பிடித்து விட்டாள்.

விதவிதமாய் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தான். எத்தனையோ நாட்டில் இருக்கும் முக்கிய தளங்களில் எடுத்த புகைப்படங்கள் அணிவகுத்து நின்றன.

பல நாடுகள் சுற்றி இருக்க வேண்டும் என்று புரிய, மகாலட்சுமிக்கு ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. இத்தனை நாடுகளை சுற்றிப்பார்க்க வேண்டும் என்றால், அவன் பணக்காரனாக இருப்பான் தானே?

அவனுடைய அத்தனை விவரங்களையும் அடி முதல் நுனி வரை ஆராய்ந்து முடித்தாள். ஆனாலும் பேசத் தோன்றவில்லை.

இப்படியே தினமும் அவனது புகைப்படங்களை பார்ப்பதும், அவனைப்பற்றி நினைப்பதுமாக பொழுதை ஓட்டினாள்.

ஒருவாரம் கடந்திருக்க, அதியன் புதிதாய் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தான்.

அதில் எதோ கடற்கரை சாலையில் நடந்து கொண்டிருந்தான்.

பார்த்ததும் உள்ள துள்ள உடனே அந்த பதிவுக்கு விருப்பம் தெரிவித்து விட்டு அவனுக்கு, “ஹாய்” என்ற செய்தியும் அனுப்பி வைத்தாள்.

அனுப்பி விட்டு பரபரப்புடன் காத்திருக்க, அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

நிமிடங்கள் பறந்து மணிக்கணக்கானது. அவனுக்காக காத்திருந்து ஓய்ந்து போனாள். திரும்பவும் ஒரு செய்தியை அனுப்பலாமா? என்று யோசித்தாலும், இறங்கிப்போனதாக தெரியக்கூடாது என்று அமைதி காத்தாள்.

அடுத்த நாளும் அவளை ஏமாற்றி இருந்தான் அதியன். மகாலட்சுமிக்கு அவன் அலட்சிய படுத்துவதாக தோன்றி கோபமும் வந்தது. ஆனாலும் அவனிடம் பேச வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது.

பதிலுக்காக காத்திருந்து நொந்து போன நேரம், மீண்டும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டான். அதில் எதோ ஒரு கோவிலில் நின்று இருந்தான்.

வலிந்து சென்று பேசுவது கூடாது என்று ஈகோ அதட்டியும் கேட்காமல், அன்று மீண்டும் பேச முயற்சித்தாள்.

ஆனால் அன்று மட்டும் உடனே பதில் வந்தது.

“என்னை ஞாபகம் இருக்கா?”

“மகாலட்சுமி தானே? உங்கள எப்படி மறக்க முடியும்?”

அவன் சிரிக்கும் ஸ்மைலிகளோடு அனுப்பி வைக்க, மகாலட்சுமியின் மனம் ஜிவ்வென வானில் பறந்தது.

அவன் மறக்கவில்லை. தன்னை மறக்கவில்லை என்று திரும்ப திரும்ப தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

அவனிடம் பொதுவாய் இரண்டொரு வார்த்தை பேசி விட்டு, எங்கிருக்கிறான் என்று விசாரித்தாள்.

வேலை செய்யும் ஊர் இடத்தை சொல்ல, மகாவிற்கு சந்தோசம் அதிகரித்தது.

“அது தான் என்னோட சொந்த ஊரு. இங்க பாட்டி வீட்டுல இருக்கேன்” என்று அவன் கேட்காமலே விவரம் கூறினாள்.

சில நிமிட உரையாடலுக்குப் பிறகு அதியன் சென்று விட, மகாலட்சுமிக்கு சந்தோசத்தில் குதிக்க வேண்டும் போல் இருந்தது.

ஹீரோவைப்போல இருக்கும் அவனும், ஹீரோயின் போல் இருக்கும் அவளும், மிக மிக பொருத்தம் என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்.

அதே ஆர்வத்திலும் ஆசையிலும், தினமும் அவனோடு பேச விளைந்தாள். விளைவு விபரீதமாக இருக்கும் என்று அவள் அப்போது அறியவில்லை.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
14
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்