அலாரம் காதோரம் ஒலிக்க, அதன் சத்தத்தில் கண் விழித்தாள் வனிஷா. எழுந்து அலாரத்தை அணைத்து விட்டுப் பார்க்க, அறை காலியாக இருந்தது.
“எல்லாரும் அதுக்குள்ளயா எந்திரிச்சு கிளம்பிட்டாங்க?” என்று ஆச்சரியமாகப் பார்த்தவள், தானும் எழுந்து கொண்டாள்.
அறைக்குள் குளியலறை இருக்க, குளித்து விட்டு ஒரு சல்வாரை அணிந்து வந்தாள்.
திருமணத்திற்குப் புடவை கட்ட வேண்டும். அது அவளுக்குத் தெரியாது. மலர்விழியை அழைத்து வர வேண்டும்.
“தலைய காய வச்சு மேக் அப் பண்ணி முடிப்போம். அப்புறம் கட்டிக்கலாம் சேலைய” என்று முதலில் தலையை காய வைக்க அமர்ந்தாள்.
அவளிடம் இருக்கும் சில மேக் அப் பொருட்களை எடுத்து வேலையை ஆரம்பிக்க, கதவைத் திறந்து கொண்டு மலர்விழி வந்தார்.
“ம்மா.. சேலை கட்டி விடுங்கமா. எனக்கு கட்டத் தெரியாதுனு சொன்னா கேட்காம வாங்கிட்டு இப்ப பிசியாகிட்டீங்க” என்றவள் சேலையை எடுக்கத் திரும்ப, மலர்விழி எதையோ தேடிக் கொண்டிருந்தார்.
“ம்மா..”
“மகாவ காணோம் வானு” என்று பதட்டமாக பேசியவர், மாத்திரையை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தார்.
“மகாவ? ம்மா.. என்ன சொன்னீங்க?”
“பாட்டிக்கு மயக்கம் வந்துடுச்சு. நீ வா.” என்றவர் முன்னால் நடக்க, உடனே ரூம் கார்டை எடுத்துக் கொண்டு வனிஷாவும் அவரோடு வெளியேறினாள்.
இரண்டு அறை தள்ளி தான் மகாலட்சுமியும் தீபாவும் இருந்த அறை இருந்தது.
உள்ளே சென்று தண்ணீரை எடுத்துக் கொடுத்து, “இத போடுங்க அத்த” என்று கொடுத்தார் மலர்விழி.
வனிஷா சுற்றியும் பார்த்தாள். நெஞ்சை பிடித்தபடி பரமேஸ்வரி அமர்ந்து இருக்க, வசந்தா தன் தாயை தோளில் சாய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
அங்கு சற்று திடமாக தெரிந்த சுந்தரவல்லியிடம் திரும்பி, “என்னாச்சு பாட்டி?” என்று விசாரித்தாள்.
“காலையில மேக் அப் போட வந்த புள்ளைங்க மகாவ காணோம்னு வந்து சொல்லுறாங்க. தீபா இங்க தான் தூங்கிட்டு இருந்துருக்கா. அவள கேட்டா தெரியாதுங்குறா. எங்க போனானு தெரியல.”
“எங்கயும் போயிருக்க மாட்டா. ஹோட்டல சுத்திப் பார்க்கப் போயிருக்கலாம். எதுக்கும் ஹோட்டல்ல கேட்டுப் பார்க்கலாம்”
“அந்த மேனேஜர் பொண்ணு கேட்டுட்டு வந்துட்டா. ஹோட்டல சுத்தி தேடியாச்சு. எங்கயும் காணோம்” என்று பாட்டியும் பதட்டமாக பேச, வனிஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
இரவு இங்கிருந்தவள் காலையில் காணவில்லை என்றால்? எதாவது பிரச்சனையில் மாட்டிக் கொண்டாளோ? என்று யோசனைகள் ஓடியது.
“பெரியப்பா, மாமா, தாத்தா எல்லாரும் எங்க?”
“அவங்க மண்டபம் போயிருக்காங்க சமையல் வேலையைப் பார்க்க” என்று கிருபா பதில் சொன்னாள்.
“விசயம் தெரியுமா?”
“ம்ஹும்”
“கால் பண்ணி வர சொல்லுங்க. விசயத்த சொல்ல வேணாம். மேரேஜ்க்கு ரெடியாக கூப்பிடுற மாதிரி கூப்பிடுங்க” என்று கூறி விட்டு, பாட்டியிடம் வந்தாள்.
“பாட்டி.. ரிலாக்ஸ். மகா எங்கயும் போயிருக்க மாட்டா. இங்க தான் இருப்பா. எதுக்கு இப்படி டென்சன் ஆகுறீங்க? நான் கீழ போய் விசாரிக்கிறேன்” என்று கூறியவள், “ம்மா.. அந்த ப்ளானர் கிட்ட பேசி விசயம் பெருசா வெளிய போகாம பார்த்துக்கோங்க. நான் வர்ரேன்” என்று மலர்விழிக்கும் சொல்லி விட்டு வெளியேறினாள்.
கீழே ரிசப்ஷனில் வந்து, சிசிடிவி காட்சிகளை பார்க்க வேண்டும் என்று கேட்டாள். அவர்கள் மேனேஜருக்கு அழைத்துக் கேட்டனர்.
சில நிமிடங்களில் மேனேஜர் வந்து விட, விசயத்தை சொல்லி காட்சிகளை பார்க்கக் கேட்டாள். உடனே அவரும் அழைத்துச் சென்றார்.
இரவு, வனிஷா அறையை விட்டு கிளம்பிய பின் இருந்த காட்சிகளை பார்க்க ஆரம்பித்தனர். சரியாக நள்ளிரவு ஒரு மணிக்கு, வேறு உடையில் முகத்தை முழுதாக மறைத்து துப்பாட்டாவை போட்டுக் கொண்டு, மாஸ்க் அணிந்து வேகமாக லிஃப்ட்டில் நுழைந்தாள் மகாலட்சுமி.
சட்டென மற்றவர்கள் பார்த்தால் அடையாளம் தெரியாது தான். ஆனால், அந்த அறையிலிருந்து வெளியே வருபவளை வனிஷாவிற்குத் தெரியுமே.
லிஃப்டிலிருந்து கீழே வந்து, ஹோட்டலை விட்டு அவளாக வெளியேறும் காட்சிகளை பார்த்தவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
‘இப்படித் திருட்டுத்தனமாக ஓட வேண்டிய அவசியம் என்ன?’ என்று குழம்பி விட்டாள்.
“இத எனக்கு ஒரு காபி கொடுக்குறீங்களா?” என்று கேட்டு வாங்கிக் கொண்டு, மீண்டும் அறைக்கு வந்தாள்.
அவள் உள்ளே நுழைந்ததும் எல்லோரும் அவளைக் கேள்வியாகப் பார்த்தனர்.
“மகா.. அவளா தான் நைட் ஒரு மணிக்கு வெளிய போயிருக்கா” என்று கூறி, அந்தக் காட்சிகளை பரமேஸ்வரியிடம் காட்டினாள்.
அதுவரை எதோ ஒரு நம்பிக்கையை இழுத்துப்பிடித்திருந்தவர், மகள் வெளியேறிய காட்சியைப் பார்த்து உடைந்து போய் அழ ஆரம்பித்து விட்டார்.
மற்றவர்களும் பார்த்து விட்டுப் புரியாமல் திகைத்தனர்.
“அண்ணி.. அழாதீங்க.” என்று வசந்தா சமாதானம் செய்ய, “இவ இப்படிப் பண்ணுவானு நினைக்கலயே வசந்தா.. பிடிச்சுருக்குனு சம்மதம் சொன்னப்புறம் தான கல்யாணம் வச்சோம்? இப்படி நடு ராத்திரி மூஞ்சிய மூடிட்டு…” என்று பேசியவருக்கு அழுகையில் வார்த்தைகள் திணறியது.
வனிஷாவுக்கும் இது புரியவில்லை தான். ஏன் அங்கிருக்கும் யாருக்குமே புரியவில்லை. மகாலட்சுமி இந்த திருமணத்தில் மிக மிக சந்தோசமாகத் தான் இருந்தாள். அப்படியே யாரையும் காதலித்து இருந்தாலும் கூட, இந்த வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவது இல்லை. வசந்தகுமாரியே காதல் திருமணம் தான் செய்து கொண்டார். வேறு என்ன பிரச்சனை என்று புரியவில்லை.
“பெரியம்மா.. அழாதீங்க. மகா எங்க போயிருக்கானு தேடலாம்”
“இனி தேடி? பார்த்தல.. அவளா தான் போயிருக்கா. அதுவும் எப்படி? மூஞ்சிய மறைச்சுட்டு யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமா.. அய்யோ.. பெத்த வயித்துல நெருப்ப அள்ளி போட்டுட்டாளே. மொத்த குடும்பத்தையும் சந்தி சிரிக்க வைக்கிறதுக்கா அவள வேண்டி பெத்தேன்?” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.
“அய்யோ அழாதீங்க.. நாம தேடலாம்னு சொல்லுறேன்ல.. எனக்கு தெரிஞ்சு மகாவுக்கு இந்த கல்யாணம் பிடிக்காம எல்லாம் இல்ல. ஒரு வேளை எதாவது பிரச்சனையில மாட்டி இருக்கலாம். நாம போலீஸ் கம்ப்ளைண்ட் வேணா கொடுப்போம். தேடிக் கண்டு பிடிச்சுடுவாங்க”
“போலீஸா? அய்யோ.. ஊருக்கே விசயம் தெரிஞ்சுடும். அப்புறம் என் தம்பி வாழ்க்கை?” என்று கிருபா பதறினாள்.
“இப்ப மகா கிடைக்கனும்னா அதான் வழி.” என்று வனிஷா பேசிக் கொண்டிருக்க, “வானு” என்று சத்தியபாமா அழைத்தார்.
“பாட்டி…” என்று அருகே செல்ல, அவள் கையைப்பிடித்துக் கொண்டார்.
“வானுமா.. நீ.. நீ யதுவ கட்டிக்கிறியா?” என்று கேட்டு வைத்தார்.
மொத்தமாய் எல்லோருமே இதில் அதிர, வனிஷாவிற்கு பேச்சே வரவில்லை.
“அக்கா சொல்லுறது தான் சரி. நீ கட்டிக்கிறியாமா? நம்ம யது நல்ல பையன். உனக்கே தெரியும். இப்ப கல்யாணம் நின்னா மொத்த குடும்பத்துக்கும் அவமானம் தான?” என்றார் சுந்தரவல்லி.
“என்ன பேசுறீங்க? நான் மகாவ தேடச்சொன்னா… நீங்க என்னைப் போய்.. இல்ல இதெல்லாம் சரி வராது. இது என்ன டிராமாவா? இல்ல சீரியலா? பொண்ண மாத்துறதுக்கு..? நாம மகாவ தேடுவோம்”
வனிஷா பதட்டமாக பேச, “என்ன? யார தேடப்போறீங்க?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தனர் வெற்றிவேலும் ஸ்ரீனிவாசனும்.
“அப்பா.. மாமா.. மகாவ காணோம்” என்று கிருபா கூற, இருவருமே அதிர்ந்தனர்.
“காணோமா?”
“நைட் ஒரு மணிக்கு ஹோட்டல விட்டு போயிருக்கா. திரும்பி வரல. இங்க பாருங்க” என்று வீடியோவை காட்ட, பார்த்த ஸ்ரீனிவாசன் நெஞ்சை பிடித்துக் கொண்டு தடுமாறி விட்டார்.
“மச்சான்” என்று பதறி வெற்றிவேல் பிடிக்க, “மாமா” என்று கிருபாவும் ஒரு பக்கம் பிடித்துக் கொண்டாள்.
“இது.. இது..” என்றவர் பேச்சுக்குத் திணற, உடனே தண்ணீரை எடுத்துக் கொடுத்துக் குடிக்க வைத்தனர்.
“நைட் நல்லா தான இருந்தா? ஏன் போனா?” என்று வெற்றிவேல் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கேட்டார்.
“தெரியலபா. ஆனா போனவ இப்ப வரை திரும்பி வரல. போனும் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கு”
“இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லாம போயிட்டாளா?” என்று கேட்க, “அப்படித்தெரியல மாமா. அவளுக்கு பிடிச்சு தான் இருந்துச்சு” என்று வனிஷா அடித்துச் சொன்னாள்.
“பின்ன?” என்று கேட்டவருக்கு பதில் சொல்ல முடியவில்லை யாராலும்.
ஸ்ரீனிவாசன் மனைவியைப் பார்த்தார். மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார் பரமேஸ்வரி.
“உனக்குத் தெரியாதா ஈஸ்வரி?” என்று கேட்க, அவர் உதட்டைப் பிதுக்கி மேலும் அழுதார்.
“வானுமா.. நீ சரினு சொல்லுமா. யதுவ உனக்கு பிடிக்கும் தான? குடும்ப மானத்த நீ தான் தாயி காப்பாத்தனும்” என்று சத்தியபாமா பேச, வனிஷா தவிப்பாய் தாயை பார்த்தாள்.
மலர்விழிக்கும் இதில் என்ன பதில் சொல்வது தெரியவில்லை.
“பாட்டி.. நாம மகாவ..”
“அவ வர்ரதா இருந்தா இந்நேரம் வந்துருக்க மாட்டாளா? அவளுக்கு பிடிக்காம தான போயிட்டா..” என்று சுந்தரவல்லியும் சேர்ந்து கொண்டார்.
கிருபாவின் கைபேசி வேறு பாட ஆரம்பிக்க, எடுத்துப் பார்த்தாள்.
“என் வீட்டுக்காரு கூப்பிடுறாரு. என் மாமியாருக்கு விசயம் தெரிஞ்சா ஆடிருவாங்க. நீங்க எதாவது ஒரு முடிவுக்கு வாங்க. நான் முடிஞ்ச வரை அவங்கள சமாளிக்கிறேன்” என்று வெளியேறி விட்டாள்.
அவள் சொன்னது புரிந்த பின்பு எல்லோரின் முகத்திலும் பீதி தெரிந்தது. இவ்விசயம் சொந்தபந்தங்களுக்குத் தெரிந்தால்? அதுவும் வம்பு பேசவென்றே வந்திருப்பவர்களுக்குத் தெரிந்தால்?
சத்தியபாமாவுக்கு மீண்டும் படபடவென இதயம் அடித்துக் கொள்ள, வியர்க்க ஆரம்பித்து விட்டது.
அதை கவனித்து, உடனே ஏசியை கூட்டி வைத்தாள் வனிஷா.
“பாட்டி ரிலாக்ஸ்..ப்ரஷ்ஷர் கூடிறப் போகுது” என்று அமைதிப்படுத்தப் பார்த்தாள்.
பாட்டிக்கு கண் கலங்கி விட, அவரால் வாயைத்திறந்து எதுவும் பேச முடியவில்லை. மெத்தையில் படுத்துக் கொண்டார்.
வனிஷாவிற்கு என்னவோ போல் இருந்தது.
“உனக்கு யதுவ பிடிக்கலயா வானு? இல்ல இப்படி கட்டாயப்படுத்தக் கூடாது தான். ஆனா.. கல்யாணம் நின்னுட்டா ரொம்ப கஷ்டமாகிடும்” என்று வசந்தா கேட்டு விட்டார்.
“அத்த. நான் அதெல்லாம் நினைக்கல”
“வேற என்னமா? உன் மனசுல வேற யாரும் இருக்காங்களா?”
“இல்ல அத்த” என்று யோசிக்காமல் பதில் சொன்னாள்.
“அப்புறம் ஏன்மா தயங்குற?”
அவளுக்கு சட்டென பதில் சொல்ல வரவில்லை.
அந்நேரம், யாரையும் காணவில்லை என்று மகளோடு தேடி வந்தாள் செல்வகுமாரின் மனைவி சீதா. மகாவின் அண்ணி.
செல்வகுமார் எழுந்து மண்டபத்திற்கு கிளம்பும் போதே, மனைவியை எழுப்பி விட்டான். பிள்ளையை வேறு தயார் படுத்த வேண்டும் என்பதால், சீதா முழுதாக தயாராகி, சமீராவையும் தயார் படுத்தி விட்டு, மணப்பெண்ணை பார்க்க வந்தாள்.
உள்ளே நுழைந்தவள், அங்கிருந்த எல்லோரையும் பார்த்துக் குழம்பி விட்டாள்.
“என்ன எல்லாரும் இப்படி உட்கார்ந்துருக்கீங்க? பாட்டிக்கு என்ன?” என்று விசாரித்து சுற்றியும் பார்த்தாள்.
ஆளாளுக்கு ஒரு சோகத்தில் இருக்க, அப்போது தான் மணப்பெண் அறையில் அவளைத்தவிர எல்லோருமே இருப்பது கருத்தில் பதிந்தது.
“மகா எங்க?” என்று வினவ, சுந்தரவல்லியே விசயத்தைக் கூறினார்.
“மை காட்..” என்று வாயில் கை வைத்தவள், “இல்லயே.. மகாவுக்கு இந்த கல்யாணம் ரொம்ப பிடிச்சுருந்துச்சு. யதுவ கூட பிடிச்சுருந்துச்சு. அவ எப்படி?” என்று குழப்பமாக கேட்டாள்.
“எனக்கும் அதான் அண்ணி புரியல. நீங்க செல்வா அண்ணாவுக்கு போன் பண்ணி, தாத்தாவ கூட்டிட்டு வரச்சொல்லுங்க. அவங்களுக்குத் தான் இன்னும் விசயம் தெரியல” என்றாள் வனிஷா.
சீதாவும் உடனே கணவனை அழைத்தாள். அவளுக்கு நாத்தனாரின் செய்கை பிடிபடவும் இல்லை. எல்லோரின் முகத்தையும் பார்த்துக் கவலை வந்தது.
செல்வகுமாரை அழைத்து விசயத்தை மேலோட்டமாக சொல்லி, தாத்தாவை அழைத்துக் கொண்டு வரச்சொன்னாள்.
தொடரும்.