Loading

 

அன்று மாலை செல்வகுமாரும் சீதாவும் சமீராவை அழைத்துக் கொண்டு மகாலட்சுமியை பார்க்க வந்திருந்தனர்.

மகாலட்சுமிக்கு நடந்த விபத்தும், அவள் எல்லாவற்றையும் மறந்து விட்டதும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அப்போது தான் ஊர் திரும்பி இருந்ததால், அவர்களால் விடுமுறை எடுத்துக் கொண்டு அவளை பார்க்கச் செல்ல முடியவில்லை.

அதியனோடு அவளும் அமெரிக்கா வருவதாக சொன்னதும், அவர்கள் வரும் நாளுக்காக காத்திருந்தனர். இங்கு வந்து அவர்கள் தங்கிய பிறகு முகவரியை கொடுக்க, கிளம்பி வந்திருந்தனர்.

அண்ணன் அண்ணியை ஆல்பத்தில் பார்த்திருந்ததால், மகாலட்சுமி அடையாளம் தெரிந்து கொண்டாள். அவர்களோடு நன்றாக பேசிக் கொண்டிருக்க, அதியன் இரவு தான் வீடு வந்து சேர்ந்தான்.

அவனோடு பேசி விட்டு, இரவும் அங்கேயே தங்கி விட்டு மறுநாள் தான் கிளம்பினர்.

அதுவரை அதியன் மகாலட்சுமியுடன் தனியாக இருப்பதை தவிர்த்தான். அவளிடம் தேவைக்கு அதிகமாய் பேசவில்லை. அதை மகாலட்சுமி உணர்ந்து கொண்டாலும், தனிமை கிடைத்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.

மறுநாள் செல்வகுமாரின் குடும்பம் கிளம்பிச் சென்று விட, வெளியே ஓடப்போன அதியனை பிடித்துக் கொண்டாள் மகாலட்சுமி.

“எங்க போறீங்க?”

“வேலை இருக்கு”

“ஏன் என்னை பார்த்து ஓடுறீங்க?” என்று கேட்டு விட, அதியனிடம் ஒரு நொடி அசைவில்லை.

“நான் எதாவது தப்பு பண்ணிட்டனா? ஏன் என் கிட்ட முகம் கொடுத்து பேசக்கூட மாட்டேங்குறீங்க? இந்த உலகத்துல எனக்கு நல்லா தெரிஞ்ச ஒரே ஆள் நீங்க தான். அம்மா, அப்பா, அண்ணா, பாட்டி, தாத்தா யாரையுமே எனக்குத் தெரியல. உங்கள தான் முதல்ல பார்த்தேன். நீங்க தான் எனக்கு முக்கியமா இருக்கீங்க. ஆனா உங்களுக்கு நான் அப்படி இல்லல?”

பொறுமையாக ஆரம்பித்து, கடைசியில் கோபமாக கேட்டு முடித்தாள். நீண்ட மூச்சை எடுத்துக் கொண்டான் அதியன்.

“இங்க பாரு.. நான் உன்னை விட்டு விலகிப் போகல. எனக்கு வேலை இருக்கு”

“பொய் சொல்லாதீங்க. நேத்து நடந்ததுக்காக தான விலகி போறீங்க? ஏன்? அதுல என்ன தப்பு? நான் வேணாம்னு சொன்னதுக்கா? கொஞ்சம் வெட்கம் தான். பயமும் கூட. என்ன தான் நாம புருஷன் பொண்டாட்டியா இருந்தாலும், நான் எல்லாத்தையும் மறந்துட்டேன். அதனால எதுவும் ஞாபகம் இல்லாம கொஞ்சமா பயமா இருந்துச்சு. நீங்க என்னை கன்வின்ஸ் பண்ணிருக்கலாம் தான? அத விட்டுட்டு இப்படி விலகிப்போனா நான் எதோ தப்பு பண்ணுன மாதிரி இருக்கு”

“இவ்வளவு பேசனும்னு இல்ல. நேத்து நடந்ததுல உன் மேல எந்த தப்பும் இல்ல. போதுமா?”

“அப்ப யார் மேல தப்பு?”

“என் மேல தான். எல்லாத்தையும் மறந்துட்ட உன் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டது என் தப்பு தான்”

“இப்படி ஏன் பேசுறீங்க? நான் மறந்ததால உங்க பொண்டாட்டி இல்லனு ஆகிடாது. டாக்டரே எந்த பிரச்சனையும் இல்லனு சொல்லிட்டாங்க. எனக்கும் ஒரு வேளை இதால நினைவுகள் திரும்பலாம் இல்லயா? ஆழ் மனசுல உங்க மேல வச்ச லவ் கூட எனக்கு மருந்தா இருக்கலாம்”

“மகா.. போதும். இது சரி வராது. விட்டுரு”

“ஏன் வராது? ஒன்னு நீங்க எதுக்கோ பயந்துட்டு இருக்கீங்க. இல்லனா உங்களுக்கு என் மேல அன்பே இல்லனு தான் அர்த்தம்”

“ஆமாடி. உன்னை நான் லவ் பண்ணவே இல்ல. போதுமா?”

“இப்ப ஏன் கோபப்படுறீங்க? என் ஹெல்த் ஓகே தான். அதுக்காக பார்க்க வேணாம்னு தான் சொல்லுறேன். உங்க மனசுல என்ன இருக்குனு சொல்லுங்க. சரி பண்ணிடலாம்”

“ஒரு மண்ணும் இல்ல. ஏன் இப்படி உயிர வாங்குற?”

“என்னங்க.. நான்…”

“ப்ச்ச்.. ஏய்.. சொல்லுறது புரியல? எதுக்கு திரும்பத் திரும்ப எதையாவது கேட்டு உயிர எடுக்குற? நீ நல்லா இருந்தப்ப தான் என் உயிர எடுத்தனா.. எல்லாம் மறந்துட்டும் கூட என்னை டார்ச்சர் பண்ணுறத விட மாட்டேங்குற.. ச்சை”

அதியன் எரிந்து விழ, மகாலட்சுமி அதிர்ந்து போய் பார்த்தாள்.

“அப்படினா?”

“அப்படினா.. நாம ஒன்னும் உருகி உருகி லவ் பண்ணி கல்யாணம் பண்ணல. நீ தான் என்னை துரத்தி துரத்தி லவ் பண்ண. அதுவும் நான் பெரிய பணக்காரன்னு நினைச்சு. அது இல்லனதும் என்னை அப்படியே கழட்டி விட்டுட்டு, வீட்டுல பார்த்த பையன கல்யாணம் பண்ணிக்க ரெடியாகிட்ட. இடையில எதெதோ நடந்து, உன்னை என் தலையில கட்டி வச்சுட்டாங்க. விதியேனு வாழ்ந்துட்டு இருந்தா, அந்த நிம்மதியும் பொறுக்காம, எல்லாத்தையும் மறந்துட்டு வந்து என் உயிர எடுக்குற. எங்க யாருக்கு பாவம் பண்ணேன்னு தெரியல. உன்னை பார்த்து தொலைச்சுருக்கேன். எல்லாம் தலையெழுத்து…”

பொரிந்து கொட்டி தலையில் அடித்துக் கொண்டவன், அவள் கண்கலங்க வெறித்து பார்ப்பதை பொருட்படுத்தாமல், விருட்டென அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

சொல்லக்கூடாது என்று நினைத்ததை மொத்தமாய் உடைத்து விட்டு, அதற்கு மேல் அவளை பார்க்கவும் விருப்பமில்லாமல் கிளம்பி விட்டான்.

அதியன் சென்ற அடுத்த நொடி, குளம் காட்டி இருந்த கண்ணீர் கன்னத்தில் இறங்கியது அவளுக்கு.

பணக்காரன் என்று நினைத்து காதலித்து விட்டு, இல்லை என்றதும் கை கழுவி விடும் அளவு மோசமானவளா அவள்? கேட்ட செய்தியில் இதயம் துடித்து கதறியது. எல்லோரும் எதையோ சொல்ல முடியாமல் தவித்தபடி, அவளிடம் இயல்பாய் பேச முயற்சிப்பதை உணர்ந்திருந்தாள்.

அதற்கு எல்லாம் இது தான் காரணமா? அவ்வளவு மோசமாக இருக்கும் தன்னை யாருக்குமே பிடிக்காதா? நான் மறந்து விட்டதால் மட்டுமே, கோபத்தை காட்ட முடியாமல் சாதாரணமாக பேச முயற்சித்தார்களா? இல்லை என்றால் எப்படி நடத்துவார்கள்?

சட்டென அழுகை வர, வாயை மூடிக் கொண்டாள். அதியன் மனதில் அவள் மீது காதலே இல்லை. வெறுப்பு தான் இருந்திருக்கிறது. அதனால் தான் அவளை விட்டு விலகி இருந்திருக்கிறான். நேற்று தடுமாறிய பின், அவன் மொத்தமாய் அவளை ஒதுக்க காரணமும் வெறுப்பு தான். இருவரும் ஆசையாய் திருமணம் செய்யவில்லை. அன்பாய் வாழவும் இல்லை. வேண்டாவெறுப்பாய் கட்டாயத்தில் நடந்த திருமணம். கடமையே என்று ஒரு வாழ்க்கையைத் தான் வாழ்ந்திருக்கின்றனர்.

ஆனால் மற்ற எல்லாவற்றையும் விட, அதியன் அவளை விரும்பவில்லை என்ற விசயம் தான், அவளை பலமாக தாக்கியது. காதல் திருமணம், கணவன், சந்தோசமான வாழ்க்கை என்று, அவள் மனதில் சில நாட்களாக இருந்தாலும் ஒரு ஆசைக்கோட்டையை கட்டி இருந்தாள்.

அது எல்லாம் அவளது கடந்த காலம் நினைவு வரும் வரை தான். இப்போது கேட்ட விசயத்திலேயே பாதி உடைந்து போயிருக்க, மற்றதும் நினைவு வந்தால் மொத்தமாய் உடைந்து போய்விடும்.

அழுகை அழுகையாக வந்தது. அவள் மறந்ததை நினைத்துக் கூட இவ்வளவு அழவில்லை. அதியனின் அன்பு தனக்கில்லை என்பது தான் அதிகமாக அழ வைத்தது.

அழுது கொண்டே அவள் அறைக்குள் இருக்க, காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்ற அதியனுக்கு கோபம் குறைவதாக இல்லை.

அவளிடம் பொறுமை காக்க நினைக்கும் போதெல்லாம், அது முடியாமல் போய் வெடித்து விடுவதே அவனது வழக்கமாக இருந்தது.

அவன் மனதில் மகாலட்சுமியின் மீது காதல் இருக்கிறது தான். இல்லை என்று கத்தி கத்தி ஊர் முன்னால் பொய் சொன்னாலும், உள் மனம் அறியுமே! ஆனால், அந்த காதலை காதலியிடம் கூட ஒப்புக் கொள்ள அவனது தன்மானம் விடவில்லை.

பணமில்லை என்றதும் குப்பையாய் தூக்கி எறிந்தவளிடம், காதலை சொல்வது சுயமரியாதையை கொன்று புதைத்தால் ஒழிய நடக்கவே நடக்காது.

அன்று மட்டும் மகாலட்சுமி இரத்தம் கொடுத்து காப்பாற்றாமல் போயிருந்தால், ஒன்று அவன் நிம்மதியாய் செத்து போயிருப்பான். அல்லது அவளை சந்திக்காமல் எங்காவது வாழ்ந்திருப்பான்.

மனம் மீண்டும் பழைய நாட்களை புரட்ட ஆரம்பித்தது.

____

மகாலட்சுமியின் பதினைந்தாவது வயதில், பரமேஸ்வரி தனது தந்தையை பறி கொடுத்தார்.

பரமேஸ்வரி ஒரே பெண். அவரது திருமணத்திற்கு பிறகு, அவருடைய தாய் தந்தை தனியாக தான் வாழ்ந்து வந்தனர். தந்தை இறந்ததும், தாயை தனியே விட பரமேஸ்வரிக்கு மனமில்லை. அவரை நந்தவனத்தில் வந்து இருக்கும் படி அழைத்தார்.

ஆனால் பரமேஸ்வரியின் அன்னை சென்றாயம்மாள் மறுத்து விட்டார்.

“மக வீட்டுல வந்து தங்குறதா? வேணாம்மா” என்று மறுத்து விட்டவர், மகாலட்சுமியை துணைக்கு அனுப்பக் கேட்டார்.

“அங்க வந்து படிக்கட்டும். அங்கயும் ஸ்கூல் எல்லாம் இருக்குல.. நல்ல பெரிய ஸ்கூல் காலேஜ் எல்லாம் இருக்கு. என் கூட அனுப்பு” என்று கேட்டார்.

பரமேஸ்வரிக்கு மகளைப் பிரிய மனமில்லை தான். ஆனால் தாய் தனியே கிடந்து தவிப்பதை ஏற்கவும் முடியவில்லை. அரை மனதாகவே மகாலட்சுமியிடம் கேட்க, அவளோ உடனே தலையாட்டினாள்.

மகாலட்சுமி உயிர்ப்புள்ள விளையாட்டுப் பெண் தான். அவளுக்கு படிப்பு எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. முடிந்ததை படித்தோமா, தோல்வியை சந்திக்காமல் இருந்தோமா என்ற அளவில் தான் இருப்பாள்.

ஆனால் வீட்டில் அதை ஏற்க மாட்டார்களே. முக்கியமாக பரமேஸ்வரி ஏற்கவில்லை. முதலில் யதுநந்தனை போல் படிக்க வேண்டும் என்று கூறி, உயிரை எடுத்தார்.

“என்னடி மார்க் இது? அறுபது எழுபது வாங்குனா கூட பரவாயில்ல. ஜஸ்ட் பாஸ்ல நிக்கிற? அறிவே இல்லயா? யது எல்லாம் பாரு.. என்ன விளையாண்டாலும் மார்க் மட்டும் கரெக்டா எடுக்குறான். உனக்கு விளையாட்டு மட்டும் தான் பெருசா இருக்கு” என்று திட்டிக் கொண்டே தான் இருப்பார்.

சில நேரங்களில் இரண்டு அடி கூட விழும். ஆனால் அப்போதெல்லாம் மகாலட்சுமி திருந்தவில்லை. யதுவின் மீது கோபம் தான் வந்தது.

‘இவன யாரு ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கச் சொன்னது?’ என்று முறைத்துக் கொண்டிருப்பாள்.

அவளுக்கு ஸ்ரீனிவாசன் மற்றும் செல்வகுமாரிடம் கிடைக்கும் அதீத செல்லம், பரமேஸ்வரியின் பேச்சை மூளைக்குள் நுழைய விட்டது இல்லை.

ஒரு பக்கம் யதுநந்தன் போதாதென்று, வனிஷா மறுபக்கம் கிளம்பினாள். விளையாடுவதும் இல்லை. யாரிடமும் பேசுவதும் இல்லை. எந்த நேரமும் படிப்பு தான். அப்படி படித்து யதுவுக்கு சரிசமமாக நின்றாள் வனிஷா.

யதுவை வைத்தே மகாலட்சுமியை திட்டும் பரமேஸ்வரி, அவளை விட சிறிய பெண் வனிஷாவை காட்டி திட்ட மாட்டாரா என்ன? மகாலட்சுமிக்கு ஒவ்வொரு தேர்வின் முடிவிலும் பூசை தான் கிடைத்தது.

தங்களை அறியாமல் வனிஷாவும் யதுவும் மகாலட்சுமிக்கு எதிரிகள் ஆகியிருந்தனர். அப்போது தான் பத்தாம் வகுப்பை முடித்து மதிப்பெண்கள் வந்த நிலையில், ஏற்கனவே திட்டு வாங்கிக் கொண்டிருந்தாள்.

இனி வனிஷாவும் படிப்பாள். நிச்சயமாக மகாவை விட அதிக மதிப்பெண்கள் தான் எடுப்பாள். பிறகு அதை கேட்டு விட்டு, பரமேஸ்வரி மகள் மீது பாய்வார். அதை எல்லாம் கேட்க மகாலட்சுமிக்கு பிடிக்காது.

அதற்கு பதில் பாட்டி வீட்டில் சென்று இருந்து கொள்ளலாம். அங்கு சென்று விட்டால், பரமேஸ்வரியின் கோபத்திலிருந்து தப்பித்து விடலாம். பாட்டியும் பாசமானவர். இங்கிருக்கும் கெடுபிடி எதுவும் பாட்டி வீட்டில் இருக்கப்போவது இல்லை. அதனால் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தவள், பரமேஸ்வரி கேட்டதுமே தலையாட்டி விட்டாள்.

ஸ்ரீனிவாசனுக்கும் செல்வகுமாருக்கும் மகாவை பிரிய மனமில்லை. ஆனால், மகாலட்சுமி அடம்பிடித்து பாட்டியுடன் கிளம்பி விட்டாள்.

அங்கு சென்றதும், அவள் நினைத்தது போல் நிம்மதியாக நாட்கள் நகர்ந்தது. புது பள்ளி. புது நண்பர்கள். கட்டுப்படுத்தாத பாட்டி. துள்ளி குதித்துக் கொண்டிருந்தாள்.

என்ன தான் தூரமாக இருந்தாலும், பரமேஸ்வரியின் மீது இருந்த பயத்தில் படிப்பையும் விட்டு விடாமல், காப்பாற்றிக் கொண்டாள்.

இரண்டு மாதம் ஒரு முறை மகளை வந்து பார்க்கும் பரமேஸ்வரியும், அதிகம் திட்டுவது இல்லை. அறிவுரை கூறுவதோடு முடித்துக் கொண்டார். அதட்டினாலும் பாட்டி விடுவது இல்லை. மகாலட்சுமிக்கு ஆதரவாக நிற்பார். அதுவே மகாலட்சுமியை சந்தோசமாக்கியது. 

பள்ளி முடிந்ததும் திரும்பி அழைக்க பரமேஸ்வரி வந்து நிற்க மகாலட்சுமி மறுத்து விட்டாள். அங்கு சென்றால் மீண்டும் பரமேஸ்வரி அடிக்கவும் தயங்க மாட்டார்.

“இங்க நான் ஜாலியா இருக்கேன்மா. அங்க வந்து படிச்சா என்ன? இங்க படிச்சா என்ன? எல்லாம் ஒன்னு தான்” என்று கூறி மறுத்து விட்டாள்.

அவள் மறுப்பதின் முதல் காரணமே, அங்கு சென்று மீண்டும் யதுவுடனோ வனிஷாவுடனோ ஒப்பீடை சந்திக்க வேண்டும் என்பதற்காக தான். இருவரும் நன்றாக படித்தால் அது அவர்களோடு. மகாலட்சுமி அவர்களை போலவே இருக்க வேண்டும் என்ற என்ன கட்டயாம்?

பாட்டியின் ஆதரவுடன் நந்தவனம் செல்வதை தள்ளிப்போட்டு விட்டாள். அதோடு அங்கு ஒரு கல்லூரியிலும் சேர்ந்து கொண்டாள்.

அங்கிருப்பதால், அவளது வாழ்வில் நடக்கப்போகும் மாற்றங்களை அவள் அப்போது அறியவில்லை.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
21
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்