Loading

அதியன் செய்வதறியாமல் நிற்க, மகாவின் நிலையும் அதே தான். பயத்தில் மறுத்துக் கொண்டிருந்தவள், அவன் விலகியதும் ஒரு நொடி அசுவாசம் அடைந்தாள். ஆனால் அடுத்த நொடி ஏமாற்றமாக இருந்தது.

போர்வையை எடுத்து சுற்றிக் கொண்டு அவனை பார்த்தாள். அவளுக்கு முகம் காட்டாமல் திரும்பி நின்றிருந்தான். அவனை சட்டையில்லா வெற்று மேனியாய் இன்று தான் பார்க்கிறாள்.

அவள் முன்பு அவன் கவனத்துடன் தான் எப்போதுமே இருப்பான். இன்று இருவரும் தடுமாறி இருந்தனர்.

இல்லை. மகாலட்சுமி இயல்பாய் இதை எதிர்பார்த்திருந்தாள். அதியன் மட்டுமே தடுமாறி இருக்கிறான். அவன் மனம் அவனை பார்த்து சிரித்தது.

காலுக்கடியில் கிடந்த சேலை கூட அவனை நக்கலாக பார்ப்பது போல் தான் இருந்தது. அவனது உறுதி எல்லாம் ஒரு நொடியில் தகர்ந்து விட்டதே. செய்யக்கூடாத தவறை செய்து விட்டவன் போல் உள்ளம் துடித்தது.

அறைக்குள் நிற்க முடியாமல் உடனே வெளியேறப்போக, “நில்லுங்க” என்றாள் மகா.

அவளது குரலுக்கு நின்று விட்டவன் திரும்பிப் பார்க்கவில்லை. பார்க்கும் தைரியமும் இல்லை. இதே பழைய மகாலட்சுமியாய் இருந்திருந்தால்? என்ன செய்திருப்பாள் என்று நினைக்கக் கூட முடியவில்லை.

போர்வையை சுற்றிக் கொண்டு எழுந்தவள், “எங்க போறீங்க?” என்று எதையோ கேட்டு வைத்தாள்.

அவளுக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. படபடப்பு குறைந்து மனதில் சூழ்ந்த ஏமாற்றத்தை மறைத்து, அவனை நிறுத்தினாள். அவளுடைய கணவன் அவன். கேள்வி கேட்கும் உரிமை உள்ளது என்று எடுத்துக்கூறியது மனம். அது கொடுத்த தைரியத்தில் தான் வாய் திறக்க முடிந்தது. ஆனால் எதைப்பேசுவது என்றும் விளங்காததால் எதையோ கேட்டு வைத்தாள்.

அவன் பதில் சொல்லாமல் மீண்டும் நடக்க, உடனே எட்டி கையைப்பிடித்துக் கொண்டாள். அப்போதும் அதியன் நின்றானே தவிர, அவளை பார்க்கவில்லை.

“ஏன்?”

அதோடு நிறுத்திக் கொண்டாள். அதற்கு மேல் கேட்க கூச்சம் விடவில்லை. ஒற்றை வார்த்தையில் நிறுத்தியவளுக்கு மனம் தவிக்கத்தொடங்கியது. தன்னுடைய மறுப்பு தான் அவனது விலகலுக்கு காரணமோ என்று யோசித்தது.

அதை வாய்விட்டுக் கேட்கும் தைரியம் இல்லை தான். அவனாக எதாவது கோபப்பட்டால் சமாதானம் செய்ய தயாராகிக் கொண்டாள். ஆனால் அவன் எதையும் பேசினால் தானே? அவளிடமிருந்து விலகி விடத்தான் அவன் நினைத்துக் கொண்டிருந்தான். அறைக்குள் இனி ஒரு நொடியும் இருக்க முடியாது போல் தோன்றியது.

வருத்தத்தோடு அவள் பார்த்துக் கொண்டிருக்க, கையை விலக்கியவன் உடனே அறையை விட்டு வெளியே சென்று சோபாவில் அமர்ந்து கொண்டான்.

விலக்கி விட்ட கையை ஒரு நொடி பாவமாக பார்த்தவளுக்குள் துக்கம் பொங்கியது‌. இதை அவள் எதிர்பார்க்கவில்லை. நிறுத்தி கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் முகமும் பார்க்காமல் விலகி சென்று விட்டானே?

கண் கலங்கும் போல இருந்தது. ஆழ மூச்செடுத்து அழுகை வராமல் தடுத்துக் கொண்டாள்.

வீட்டில் பாக்கியம் இல்லாதது வசதியாகப்போக இருவரும் தனித்தனியே நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தனர்.

மகாலட்சுமிக்கு அவன் விலகிய வருத்தம் இருந்தது தான். கூடவே இத்தனை நாட்கள் இல்லாமல் இன்று நெகிழ்ந்ததை நினைத்து வெட்கமும் அதிகமாக வந்தது. தரையில் கிடந்த சேலையை ஒரு நொடி பார்த்தவள் வெட்கத்துடன் அதை தூக்கி வைத்து விட்டு சுடிதாரையே மாற்றிக் கொண்டாள்.

அதே நேரம் அதியனை பற்றிய யோசனை உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. எதற்காக இந்த விலகல்? தன் மறுப்பு அவ்வளவு தூரமா அழுத்தமாக இருந்தது? ஒரு வேளை அவளது உடல் நிலையை நினைத்து வந்த மாற்றமோ? இப்படி நடந்து கொண்டதை நினைத்து தான் வருத்தப்படுவேன் என்ற எண்ணமோ?

இருவரும் கணவன் மனைவி அல்லவா? அதுவும் காதலித்து கரம் பிடித்தவர்கள். தன்னை விட்டு இப்படி தள்ளி நிற்பது அவனுக்கும் வருத்தமாக தானே இருக்கும்? காதலித்து கரம் பற்றிய மனைவியை, அவளது நலத்திற்காக தள்ளி நின்று பார்ப்பது அவனுக்கு மட்டும் இனிக்கவா செய்யும்?

அப்படி இருந்தால், பேசும் போது தெளிவாக சொல்லி விட வேண்டும். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எனக்காக பார்க்க வேண்டாம். மருத்துவரும் கூட சம்மதம் தான் சொன்னாரே. அதனால் தன்னைத்தானே கட்டுபடுத்த வேண்டாம் என்று கூறிவிட வேண்டும் நினைத்துக் கொண்டாள்.

அவனது விலகலும் இறுகிய தோன்றமும், அவன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு இருப்பது போல் தான் அவளுக்கு தோன்ற வைத்தது.

அவள் எதெதோ யோசித்துக் கொண்டிருக்க, வெளியே அமர்ந்திருந்த அதியனுக்கு தன் மீதே கோபம் வந்தது. ஒரு நொடியில் அவளை பார்க்க கூடாத நிலையில் பார்த்து விட்டு, இப்படியா நடந்து கொள்வது?

வெளிப்படையாக தலையில் அடித்துக் கொண்டான். அவனால் நடந்ததை ஜீரணிக்கவும் முடியவில்லை. கடக்கவும் முடியவில்லை. தன்னைத்தானே மன்னிக்கவும் முடியவில்லை.

மகா வேறு, ஏன்? என்று கேட்டு வைக்கிறாள். எதற்கு காரணம் சொல்வது? அவளோடு இழைந்ததற்கா? இல்லை திடீரென விலகி நிற்பதற்கா?

இயல்பாய் கணவன் மனைவியாய் அவளோடு வாழும் ஒரு வாழ்வு அமைந்திருக்க கூடாதா? என்று மனம் அடித்துக் கொண்டது.

ஊரில் நடக்கும் எத்தனையோ திருமணங்கள் போல, ஆயிரம் பிரச்சனைகள் இருந்தும் கணவன் மனைவியாய் ஒருவரை ஒருவர் புரிந்து அனுசரித்து வாழ்வது போல் அவர்களும் வாழக்கூடாதா?

காதலை கொட்டி உருகவில்லை என்றாலும், மனதை மறைக்காத வாழ்வு கிடைத்திருக்கலாமே?

அவள் அவளாக இருக்கும் போதும் அந்த வாழ்வு அவனுக்குக் கிடைக்காது. அவள் எல்லாம் மறந்த பின்பும், அவன் வேண்டும் வாழ்வை பெறவே முடியாது.

இப்படி ஒரு சாபம் எதற்கு? என்று தான் புரியவில்லை.

அவளை விட்டு விலகி வேறு பெண்ணை திருமணம் செய்தால் அவனுக்கு அந்த சாத்தியப்படலாம். ஆனால் அதுவும் அவனால் முடியாதே. அவளை விட்டு வேறு ஒருத்தியை மணப்பது என்றால், ஏன் அவளுடைய திருமணத்தன்று அப்படி ஒரு பிழையை செய்து, உயிரே போனாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வரப்போகிறான்?

யோசனையுடனே அதியன் வெளியே இருக்க, மகாலட்சுமி அவனை பார்க்க தயங்கி அறைக்குள்ளயே இருந்தாள்.

நேரம் நகர்ந்து கொண்டே இருக்க, பாக்கியத்திடம் இருந்து மகாலட்சுமிக்கு அழைப்பு வந்தது. அவளுக்கு வாங்கிக் கொடுத்த கைபேசி, சோபாவில் அதியன் முன்னால் கிடந்தது.

அதை எடுத்து ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு காதில் வைத்தான்.

“மகா எங்க அதி? அவ கிட்ட கொடு.” என்றதும் எழுந்து சென்றான்.

அறையில் நுழைந்தவனை அவள் படபடப்போடு நிமிர்ந்து பார்க்க, அவனோ அவளை சரியாக கூட பார்க்காமல் கைபேசியை நீட்டினான்.

அவள் வாங்கிக் கொண்டதும், உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

மகாலட்சுமியின் பார்வை அவனையே தொடர, பாக்கியத்திற்கு பதில் சொன்னாள். பேசி முடித்து பல நிமிடங்கள் கடந்தும் அதியன் வெளியே வருவதாக இல்லை.

பசி எடுக்க வெளியே வந்து சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அதியன் கிளம்பிச் சென்று விட்டான். அவள் தடுக்கவில்லை. அவனிடம் கேள்வியும் கேட்கவில்லை.
_________

நந்தவனத்தில்…

வனிஷா ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்தாள்.

“நாளையில இருந்து ஒன் வீக் லீவ். உங்களுக்காக அடிச்சு பிடிச்சு லீவ் போட்டேன் இனி சும்மா லீவ் எப்ப போடுவனு கோபமா முறைக்க மாட்டீங்க தான?”

“எனக்காக லீவ் போட்டியா?”

“ஆமா..”

சிரிப்போடு தலையாட்டி வைத்தான்.

“ஓஹ்..”

“நாளைக்கு வெளிய போகலாமா?”

“ம்ஹூம்.. வேற ப்ளான் இருக்கு”

“என்னது?”

“நாம பாட்டி ஊருக்கு போறோம்”

“பாட்டி ஊருக்கா? எதுக்கு?”

“நீ சொன்ன ப்ளான் தான். காண்ட்ராக்டர கூட்டிட்டு போய் நிலத்த காட்டனும். அங்க என்ன கட்டுனா சரியா இருக்கும்னு பார்க்கனும். அந்த ப்ளான் போட்டா தான் மத்த வேலைய ஆரம்பிக்க முடியும்”

“சரி.. அதுக்கு எதுக்கு நான்?”

“உன் ப்ளான் தான?”

“அதான் ப்ளான் சொல்லிட்டேனே.. மிச்சத்த நீங்க பாருங்க. என்னை ஏன் கூட்டிட்டு போறீங்க?”

“நீ ஆசைப்பட்டது நடக்குறத பார்க்க வேணாமா?”

“நான் ஆசையெல்லாம் படல. ஐடியா தான் சொன்னேன்”

“அந்த ஐடியா எப்படி வந்துச்சு?”

“மகா மேல இருக்க கடுப்புல வந்துச்சு”

“வாட்?”

“அந்த நிலத்த பாட்டி உங்களுக்கும் மகாவுக்கும் கல்யாணம் நடந்தா, உங்க ரெண்டு பேரோட பேருக்கும் எழுதி வைக்கலாம்னு நினைச்சுட்டு இருந்தாங்க”

“உண்மையாவா?”

“ஆமா. அவங்க குடும்ப நிலத்த பாதுகாத்த மாதிரியும் இருக்கும்னு ப்ளான். ஆனா நடக்கலயே”

“சோ?”

“சோ அந்த நிலம் எப்படியாவது மகா பேருக்கு போயிடக்கூடாதுனு தான் இந்த கடை ஐடியாவ சொன்னேன்”

“அடிப்பாவி!”

“பாவியாவே இருந்தாலும் பரவாயில்ல. அந்த நிலம் அவளுக்கு போகக்கூடாது. எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர்ல இருக்க நிலம் அது. என்னை அடிச்சவளுக்கு கிடைக்க கூடாது. டாட்.”

யதுநந்தன் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.

“இவ்வளவு தூரம் யோசிப்பியா நீ? நான் கூட இத ரொம்ப நாளா யோசிச்சுருப்ப. இப்ப டைம் கிடைச்சு சொல்லுறனு நினைச்சேன். ஆனா அடிச்சதுக்காக சொல்லுற. அப்ப பல நாள் ப்ளான் இல்லையா இது?”

“இல்ல. அன்னைக்கு தான் அப்படி தோனுச்சு. உடனே சொன்னேன்.”

“ஆனா ஐடியா நல்லா இருந்ததே. இப்ப தான் தெரியுது. மேடம் ஏன் மேனேஜரா இருக்கீங்கனு!” என்றவன் அவள் கன்னம் பிடித்துக் கொஞ்சினான்.

“எல்லாம் அறிவு ஆஃபிஸர்.. அறிவு”

“இன்னும் என்னலாம் உனக்குள்ள ஒளிஞ்சு இருக்கு? தினமும் சர்ப்ரைஸ் பண்ணுற”

“நிறைய இருக்கு..”

“காட்டு” என்று கள்ள சிரிப்போடு கேட்டவனின் முகத்தை தள்ளி விட்டாள்.

அவளது கையை பிடித்துக் கொண்டு சிரித்தவன், “கேட்கனும்னு நினைச்சேன். மகாலட்சுமி லாஸ்ட் லொகேஷன் எப்படிக் கண்டு பிடிச்ச?” என்று கேட்டான்.

“அவ நம்பர வச்சு தான்.”

“இதெல்லாம் தெரியுமா?”

“இது என்ன பிரமாதம்? ஹேக்கிங் ரிவர்ஸ் ஹோக்கிங்ல வனிஷா கில்லாடி தெரியுமா? ஐடி அண்ட் கம்ப்யூட்டர் தான் என் வாழ்க்கைனு முடிவு பண்ணதும் அக்குவேறா ஆணிவேறா அத்தனையும் கத்துக்க ஆரம்பிச்சுட்டேன்”

“ஏன்?”

“எனக்கு பிடிச்சது எல்லாத்தையும் கத்துக்கனும்னு ஆசை தான்”

அவளை பெருமையாக பார்த்தவன், “ஆனா உனக்குத்தெரியாத ஒன்னு எனக்கு தெரியுமே” என்றான்.

“என்ன?”

அவன் ஒவ்வொன்றாய் கூற, வனிஷாவின் முகம் வெட்கத்தில் சிவந்து விட்டது.

“அத்தான்…”

“இதெல்லாம் தெரியுது தான?”

“ஏன் தெரியாது? தெரியலனா தெரிஞ்சுப்பேன்”

“தெரிஞ்சுப்பியா!” என்று அவன் அதிர, “ஆமா.. அத்தான்னு எனக்கு ஒரு புருஷன் இருக்கார். அவர சொல்லிக் கொடுக்க சொல்லி கத்துக்கிட்டு போறேன்” என்று கூறி கண்ணடித்தாள்.

“சொல்லிக்கொடுக்க அத்தான் ரெடி.”

“கத்துக்க நிஷாவும் ரெடி” என்று அவள் வார்த்தையை முடித்த நொடி, அவளுக்கு பாடம் எடுக்க ஆரம்பித்திருந்தான்.

மார்பில் முகத்தை தேய்த்துக் கொண்டு படுத்திருந்தவளை பார்த்தவன், “தூங்கலயா?” என்று கேட்டான்.

“நாளைக்கு லீவ் தான.. அதான்…”

“அப்ப நாளைக்கு ஊருக்கு போகலாமா?”

“போலாமே”

“உனக்கு அந்த ஊரு ரொம்ப பிடிக்குமோ?”

“பிடிக்கும். நான் வெகேஷன்னு போன ஒரே ஊர் அது மட்டும் தான். வேற எங்கயும் நான் போனது இல்ல. ஆனா அப்ப நிறைய பேர் வந்துருப்பாங்க. பாட்டியோட அண்ணன் குடும்பம், தம்பி குடும்பம், நிறைய குட்டி பசங்க.. எல்லாரு கூடவும் விளையாட நல்லா இருக்கும். இப்ப யாருமே இருக்க மாட்டாங்களே. அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு.”

“அப்ப அவங்க கூட மட்டும் விளையாடுவ. எங்க கூட விளையாட மாட்ட. அப்படித்தான?”

“அவங்கள வருசத்துல வெறும் நாலு நாள் தான் பார்ப்பேன். அவங்க கிட்ட இருக்கத பார்த்து ஏக்கமும் வராது. எனக்கும் வேணும்னு ஆசையும் வராது. அங்க திருவிழாவுல கடை போட்டுருப்பாங்க. அங்க நான் கேட்காமலே பாட்டியோ அம்மாவோ வாங்கி கொடுத்துடுவாங்க. முக்கியமா பாட்டியோட அண்ணன் வீட்டு ஆளுங்க.. இருக்க எல்லா பிள்ளைங்களுக்கும் ஒரே மாதிரி தான் எல்லாமே வாங்கிக் கொடுப்பாங்க. குச்சி மிட்டாயா இருந்தாலும் சரி. பலூனா இருந்தாலும் சரி. எல்லாருக்கும் சமம் தான். இங்க உங்களுக்கு பெரியப்பாவும் மாமாவும் வாங்கிக் கொடுப்பாங்க. எனக்கு தனியா யாரும் வாங்கிக் கொடுக்க மாட்டாங்களே. அதான் இங்க ஒதுங்கி இருந்தேன். அங்க ஜாலியா இருந்தேன்”

சிறு வயதிலிருந்து நடந்ததை அவள் சாதாரணமாக சொன்னாலும், யதுவுக்கு தான் என்னவோ போலாகி விட்டது.

அவர்கள் எல்லோரும் பிள்ளைகளை சரிசமமாக கவனித்திருக்கின்றனர். இங்கு அவரவர் பிள்ளைகளை மட்டுமே கவனித்து விட்டு, இவளை யாரும் கண்டு கொள்ளவே இல்லை. சற்று கசந்தாலும் உண்மை தானே?

“அங்க திருவிழாவுக்கு போகும் போது சுடிதார் எடுத்துக் கொடுப்பாங்க. செம்ம கிராண்ட்டா இருக்கும். ஆனா அதையும் என் வயசு புள்ளைங்க எல்லாருக்கும் ஒரு மாதிரி தான் எடுப்பாங்க. கலர் மட்டும் தான் வித்தியாசமா இருக்கும். ஒன்னா போட்டுட்டு அந்த கோவிலயே சுத்தி சுத்தி வருவோம். ஆனா கடைசி ரெண்டு வருசமா போகவே இல்ல. இங்க ப்ராஜெக்ட் ஹெட் ஆனதுல லீவ் சரியா கிடைக்கல. பட் எனக்கு எடுத்தத கொடுத்து அனுப்பி இருந்தாங்க”

அவள் போக்கில் எல்லாம் சொல்லி விட்டு, “ஆனா இப்ப அங்க யாருமே இருக்க மாட்டாங்க. போனா போரடிக்கும். ஒரு நாள் வேலை தான? நீங்களே போயிட்டு வாங்க” என்றாள்.

“நோ.. நீயும் வரனும்”

“ஏன்?”

“அதெல்லாம் கேட்காத. வரனும். அவ்வளவு தான்” என்று முடித்து விட்டான்.

“அப்ப அம்மா பாட்டியயும் கூட்டிட்டுப் போகலாமா? ஆனா அடுத்த மாசம் திருவிழா இருக்கு. அதுக்கு போவாங்க.”

“திருவிழா அடுத்த மாசம் தானா?”

“ஆமா. ஆடில தான் நடக்கும்.”

“ஓஹ்..” என்றவன் உடனே யோசித்து விட்டு, “அப்ப நாம ஆடிக்கே போய் நிலத்த பார்க்கலாம்.” என்று விட்டான்.

“ஆடிக்கா?”

“ஆமா.. திருவிழாவையும் பார்த்த மாதிரி ஆச்சு. நிலத்தையும் பார்த்த மாதிரி ஆச்சுல?”

“அப்ப சரி. எனக்கு அப்ப லீவ் கிடைக்கிறது கஷ்டம். தனியா நீங்க போயிட்டு வாங்க”

“அத அப்ப பார்க்கலாம். இப்ப வேற எங்க போகலாம்?”

“என் கிட்ட கேட்டா.. வீட்டுலயே இருந்து நல்லா சாப்பிட்டு தூங்கி ரெஸ்ட் எடுக்கலாம்னு தான் சொல்லுவேன்”

“அட சோம்பேறி”

“எனக்கு வெளிய போறத விட வீட்டுல இருக்கது தான் பிடிக்கும். பத்து மணி வர தூங்கிட்டு சாப்பிட்டு டிவி பாத்துட்டு எந்த கவலையும் இல்லாம பொழுத ஓட்டலாம்”

“உன் கிட்ட போய் கேட்டேன் பாரு. நானே பார்த்துட்டு சொல்லுறேன்” என்று முடித்து விட்டான்.

அடுத்த நாள் காலையில் வந்து, “நாலு நாள் தங்குற மாதிரி பேக் பண்ணிக்க” என்றான்.

“எங்க போறோம்?”

“கோவா”

“அய்ய.. அங்கயா?”

“அய்யவா?”

“ஆமா.. அங்க போய் என்ன பார்க்க?”

“அங்க பீச் இருக்கும். நிறைய டூரிஸ்ட் ஸ்பாட் இருக்கும்”

“அங்க முதல்ல வெயில் அடிக்கும். என்னால முடியாது. நான் வரல”

“நீ வராம நானா போறதா?”

“போங்க. யாரு வேணாம்னா?”

“அடிங்க..” என்றவன் அவள் கன்னம் பிடித்துக் கிள்ளி, அருகே இழுத்து அணைத்துக் கொண்டான்.

“போறது ஹனி மூன். அதுக்கு தனியா போகச்சொல்லுறியே.. நியாயமா இருக்கா உனக்கு?”

“ஏன் தனியா ஊர சுத்தக்கூடாதா?”

“ஹனிமூன் ஊர் சுத்துறதுக்கா போவாங்க?”

“இல்லயா பின்ன?” என்று கேட்டு, அப்பாவியாய் கண் சிமிட்டினாள்.

“ஆமா ஆமா.. ஆனா எனக்கு தனியா ஊர் சுத்த பயம். தொலைஞ்சு போயிட்டேன்னா?” என்று அவளை விட பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் அவன்.

“இந்த பூனை மாதிரி லுக் விடுறது எல்லாம் வேணாம். இந்த பூனை எப்படி பால் சொம்பு கேட்கும்? பால்கோவா டப்பாவ எப்படி காலி பண்ணும்னு எனக்கு தான் தெரியும். ஆல் டீடைல்ஸ் ஐ நோ”

அவள் கிண்டலடிக்க, வாய் விட்டு சிரித்தவன் அவள் தலையில் முட்டி, “நாம கேரளா தான் போறோம்” என்றான்.

“ரியலி!” என்று முகம் மலர துள்ளியவளை, அன்று மாலையே அழைத்துக் கொண்டு கிளம்பி இருந்தான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
26
+1
0
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்