அமெரிக்கா வந்து இறங்கியதுமே, புது வீட்டில் மகாலட்சுமியுடன் குடியேறினான் அதியன். பாக்கியம் அவர்களுக்கு உதவியாக இருக்க, முத்துவேல் மட்டும் அவரது வீட்டில் இருந்தார்.
வந்து இறங்கியதிலிருந்து அதியன் நிறைய வேலைகளில் தன்னை தொலைத்திருக்க, மகாலட்சுமிக்கு பாக்கியம் மட்டுமே துணையாகி இருந்தார்.
“அப்புறம்? என்னாச்சு?” என்று ஆர்வமாக அவரிடம் அவர் வாழ்வை பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
முன்பெல்லாம் பாக்கியத்திடம் அவள் முகம் கொடுத்துப்பேசியதே இல்லை. திடீரென எல்லாம் மறந்த நிலையில், இப்படி இணக்கமாக பேசுவது பாக்கியத்திற்கு சற்று சங்கடமாக இருந்தது.
நினைவு திரும்பி விட்டால், மீண்டும் பழைய நிலைக்கே சென்று விடுவாள். ஆனால் அதை நினைத்து அவளை விலக்கவும் முடியவில்லை.
“அப்புறம் அங்கயே பயந்துட்டு இருந்தேன்” என்றார்.
பாக்கியம் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் வளர்ந்தவர். வெளிநாட்டில் வேலை செய்வதாக சொல்லி அவரை திருமணம் செய்து கொண்டவன், அவரை கொண்டு வந்து அடிமையாக விற்று விட்டுச் சென்று விட்டான்.
விற்றவன் அப்படியே விற்காமல், வயிற்றில் ஒரு குழந்தையையும் கொடுத்து விட்டு தான் சென்றிருந்தான்.
பாஸ்போர்ட் விவரங்கள் எல்லாம் பாக்கியத்தை விலை கொடுத்து வாங்கியவன் பறித்துக் கொள்ள, வயிற்றில் இருக்கும் பிள்ளையோடு அங்கேயே வேலை செய்தார் அவர்.
பல துன்பங்கள் வரிசை கட்டி நின்றது. அடிமை வாழ்வு என்றால் அது எத்தகைய கொடுமை நிறைந்த வாழ்வு என்று, அணுஅணுவாய் அனுபவித்து தான் தெரிந்து கொண்டார்.
பிள்ளை பிறந்து ஆறு மாதம் வரை அந்த கொடுமையை சகித்துக் கொண்டு வாழ்ந்தவருக்கு, எப்படியாவது தப்பிக்கும் ஆசை வந்தது.
ஆசை வந்தாலும் அதை உடனே நிறைவேற்றவும் முடியவில்லை. பிள்ளை வளர்ந்து விட்டால் அவனையும் இதே துன்பங்களுக்கு தள்ளி விடுவார்கள் என்று புரிய, மிகத்தீவிரமாக தப்பிக்கும் முயற்சியை தேடினார்.
ஒரு நாள் அந்நாட்டு காவலர்களை தனியாக பார்த்து, தனக்குத்தெரிந்த உடைந்த மொழியை வைத்து விசயத்தை புரியவைத்து, தன்னையும் பிள்ளையையும் மீட்டுக் கொண்டார்.
அவரை விலைக்கு வாங்கியவன் குடும்பம் மொத்தமாய் சிறைக்கு சென்றது. ஆனால் என்ன தேடியும், பாக்கியத்தை திருமணம் செய்து ஏமாற்றியவன் மட்டும் கிடைக்கவில்லை.
அவர்களை மீண்டும் இந்தியா அனுப்ப ஏற்பாடு செய்வதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியது.
கைக்குழந்தையோடு அமர்ந்திருந்தவருக்கு, எப்படியாவது ஊர் போய் சேர்ந்தால் போதும் என்ற நிலை. ஆனால் குழந்தைக்கு பசி பிரதானமாக இருந்தது. அழுது கரைந்த குழந்தையுடன் அவர் போராடிக் கொண்டிருக்க, அதியன் ஓடி வந்து தன்னிடமிருந்த லாலிபாப்பை பிரித்து வினோத்தின் வாயில் வைத்து விட்டான்.
அதை சப்பிக் கொண்டே வினோத் அழுவதை நிறுத்தி விட, கலங்கியிருந்த கண்களை துடைத்துக் கொண்டு அதியனுக்கு நன்றி கூறினார் பாக்கியம்.
அதியனை தேடி வந்த முத்துவேலும், அவரிடம் விசாரித்து விவரம் அறிந்தார்.
அப்போது தான் அதியனின் அன்னை ஆனந்தி இறந்து மூன்று வருடங்கள் கடந்திருந்தது. எப்போதும் வேலையின் பின்னால் முத்துவேல் ஓட, படிப்பின் பின்னால் அதியன் ஓடினான். ஆனால் சில நாட்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுமுறை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு நாடாக சுற்றி வர ஆரம்பித்தனர்.
அப்படி வந்த போது தான் பாக்கியத்தை சந்தித்தனர். அவரின் விவரங்கள் கேட்டதும், முத்துவேலுக்கு பாவமாக இருந்தது. எதாவது பண உதவி செய்ய நினைத்தார்.
“அதெல்லாம் வேணாங்க. ஊர் போய் சேர்ந்தா போதும்”
“அங்க உங்க சொந்தகாரவங்க இருக்காங்களா? அவங்க உங்கள இவ்வளவு மாசமா தேடலயா?”
“எனக்கு இருக்கதே அப்பா மட்டும் தான். சொத்துனு எதுவும் இல்ல. என் கல்யாணத்துக்கு வாங்குன கடன் வேணா இப்ப மிச்சமிருக்கும். போய் பிச்சை எடுக்குற நிலைமை வந்தாலும் எடுத்து தான் ஆகனும்” என்றவருக்கு அழுகை தான் வந்தது.
ஆனாலும் அடிமை வாழ்வை விட்டு மீண்டு விட்ட நிம்மதியும் இருந்தது.
அதியன் ஆறுமாத வினோத்துடன் சிரித்து விளையாடிக் கொண்டிருக்க, முத்துவேல் ஒரு முடிவுக்கு வந்தார்.
தங்களது நிலையை விளக்கி விட்டு, தன் மகனை கவனித்துக் கொள்ளும் நானியாக பாக்கியத்தை இருக்க கேட்க, அவரும் சம்மதித்தார்.
ஒரு முறை இந்தியா சென்று, அங்கிருந்து முறையான விசாவுடன் பாக்கியத்தையும் வினோத்தையும் அமெரிக்கா அழைத்துச் சென்றார் முத்துவேல்.
அன்றிலிருந்து பாக்கியம் அதியனையும் வினோத்தையும் பிரித்துப் பார்த்தது இல்லை. வினோத் இல்லாமல் கூட இருந்து விடுவார். அதியன் இல்லாமல் அவரால் இருக்க முடியாது.
முத்துவேலின் பதவி உயர்ந்தது. வேலை அதிகரித்தது. ஆனாலும் அதியனிடம் அவரது பாசம் குறைந்தது இல்லை.
பாக்கியத்தின் மகன் என்று முத்துவேலும் வினோத்திடம் வேறுபாடு காட்டியதில்லை. இரு பிள்ளைகளும் சரிசமமாக தான் நடத்தப்பட்டனர். இருவரும் ஒன்றாக படித்தனர். ஒன்றாக வளர்ந்தனர்.
“எனக்கு ஒரு அண்ணன் இருந்திருந்தா எப்படி எல்லாம் பார்த்துருப்பாங்களோ, அப்படி தான் ஐயாவும் என்னை பார்த்துக்கிட்டாங்க. அதியனும் ஆண்ட்டி ஆண்ட்டினு என் மேல பாசமா இருப்பான். அதுனால எனக்கு வினோத்த விட அதியன் ஒரு படி மேல தான். இது வினோத்துக்கும் தெரியும். ஆனா அவனுக்கும் அண்ணன்னா நிறைய பாசம்”
பாக்கியம் எல்லாவற்றையும் சொல்லி முடிக்க, மகாலட்சுமி தலையாட்டி கேட்டுக் கொண்டிருந்தாள்.
அதியன் வீடு திரும்பி இருக்க, மகாலட்சுமி அவனிடம் ஓடிச் சென்று விட்டாள்.
“காலையிலயே போயிட்டு இப்ப தான் வர்ரீங்க. வேலை கிடைச்சதா?”
“ம்ம்”
“ஹை..! சூப்பருங்க. இத பாக்கியம் ஆண்ட்டி கிட்ட சொல்லிட்டு வர்ரேன்” என்று ஓடினாள்.
அதியன் அவளை திரும்பிப் பார்த்தான்.
‘இவ இப்படியே இருந்துட கூடாதா?’ என்று மனம் ஏங்கியது.
என்றாவது ஒரு நாள் நினைவு வரும் தான். வந்த பிறகு கசப்பான விசயங்களை எல்லாம் பேசிப்பேசி, இருவரும் ஒருவரை ஒருவர் புண் படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
இப்படியே இருந்து விட்டால் நிம்மதியாக இருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் இது நிரந்தர தீர்வல்லவே. அதனால் மனதை தேற்றிக் கொண்டு, அவளுக்கு நினைவு திரும்பத் தன்னால் ஆனதை செய்து கொண்டிருந்தான்.
அடுத்த நாள் காலை மகாலட்சுமி குளித்து விட்டு வந்தாள்.” டாப்” அணிந்து கொண்டவளுக்கு, “பாட்டம்” அளவு சிறியதாக இருந்தது.
“வேற போட்டுக்கலாம்” என்று அதை அணியாமலே கதவை திறந்து வெளியே வர, அதியன் திரும்பிப் பார்த்து விட்டு தடுமாறி விட்டான்.
“எங்க கிளம்புறீங்க? இன்னைக்கு வீட்டுல இருக்க மாட்டீங்களா?” என்று மகாலட்சுமி கேட்டுக் கொண்டே அருகே வந்தாள்.
அரை குறை உடையில் இருப்பதை மறந்து விட்டு அவள் அருகே வர, அதியன் வேகமாய் திரும்பிக் கொண்டான்.
“என்ன டிரஸ் இது? குளுரலயா உனக்கு?” என்று கேட்க, அப்போது தான் தான் இருக்கும் நிலையை உணர்ந்தாள் மகாலட்சுமி.
அதிர்ந்து நாக்கை கடித்தவள், உடனே ஓடிச்சென்று குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
இதயம் படபடவென அடித்துக் கொண்டது.
“ச்சை.. இப்படியா போய் நிப்பேன்?” என்று தலையில் அடித்து தன்னைத் தானே திட்டிக் கொண்டாலும், வெட்கம் வந்தது.
இதற்கு முன் கணவனோடு எப்படி வாழ்ந்தாள் என்பது மறந்திருக்க, இந்த சிறு தடுமாற்றமும் அவளுக்கு வெட்கத்தை வரவைத்தது.
இப்போது கையிலிருப்பதை அணியவும் முடியாது. வெளியே செல்லவும் யோசனையாக இருந்தது.
சில நிமிடங்கள் கழித்து அறைக்குள் எந்த சத்தமும் கேட்காமல் இருக்க, கதவை திறந்து பார்த்தாள். அதியன் இல்லை. உடனே வெளியே வந்து வேறு உடையை எடுத்து அணிந்து கொண்டாள்.
அன்றிலிருந்து மகாவின் மனதில் சலனம் தோன்ற ஆரம்பித்தது. ஆனால் அதியன் அவளுக்கு நேர்மாறாக இருந்தான். அவளை விட்டு முடிந்தவரை விலகினான்.
மூன்று நாட்கள் பொறுத்துப் பார்த்தவள், அவனிடமே நேரடியாக கேட்டு விட்டாள்.
“உங்களுக்கு என்னை பிடிக்கலயா?” என்று கேட்க, அதியன் புருவம் சுருங்க பார்த்தான்.
“என்ன கேள்வி இது?”
“நமக்கு நிஜம்மாவே கல்யாணம் ஆகிடுச்சா? நான் உங்க பொண்டாட்டி தான?”
“இப்ப ஏன் இதெல்லாம் கேட்குற?”
“பதில் சொல்லுங்க”
“ஆமா. நீ எனக்கு பொண்டாட்டி தான்”
“அப்புறம் ஏன் என் பக்கத்துல கூட வர மாட்டேங்குறீங்க?” என்று கேட்டு விட்டாள்.
அதியன் அதிர்ந்து அடுத்த நொடி இறுகிப்போனான்.
“சொல்லுங்க. ஏன்? என்னை உங்களுக்கு பிடிக்கலயா? அப்புறம் ஏன் லவ் பண்ணீங்க? ஏன் கல்யாணம் பண்ணீங்க?”
“அப்படி எல்லாம் எதுவும் இல்ல”
“இது தான் பதிலா? நான் நம்ப மாட்டேன். உங்களுக்கு என்னை பிடிக்கலனு அப்பட்டமா தெரியுது. நான் எல்லாத்தையும் மறந்துட்டேன் தான் . ஆனா இதெல்லாம் புரிஞ்சுக்க முடியாத அளவு நான் முட்டாள் இல்ல”
அதியன் தலையை தேய்த்துக் கொண்டான். எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டும். யோசனையை வேகமாக தட்டி விட்டவன் சில நொடிகளில் கண்டு பிடித்திருந்தான்.
“இங்க பாரு.. இப்ப உனக்கு உடம்பு சரி இல்ல. அப்படி இருக்கப்போ எப்படி இதெல்லாம்? முதல்ல உனக்கு எல்லாம் ஞாபகம் வரட்டும். சொன்னா புரிஞ்சுக்க” என்று சமாளித்து விட்டான்.
“ஓஹ்..” என்றவள் அதற்கு மேல் எதையும் பேசவில்லை.
ஆனால் இரண்டு நாட்களுக்கு பிறகு, மருத்துவமனை சென்று அவளது உடல்நிலையை ஒரு முறை சோதித்துக் கொண்டனர். அப்போது மருத்துவரிடம் நேரடியாக கேட்டு விட்டாள்.
அதியன் அதிர்ந்து பார்க்க, மருத்துவர் அதனால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறி விட்டார். விளக்கமாக கேட்டு விட்டு வீட்டுக்கு வந்தவள், அதியனை பிடித்தாள்.
“நீங்க எனக்காக பார்த்தீங்க. ஆனா அதுனால எனக்கு எந்த பிரச்சனையும் இல்லனு டாக்டரே சொல்லிட்டாங்க. இப்ப ஓகே தான?”
புன்னகையுடன் கேட்டவளுக்கு பதில் சொல்ல முடியாமல் அதியன் தான் திணறி விட்டான்.
“இல்ல மகா..”
“என்னாச்சு?”
“ஒன்னும் இல்ல”
“ஓகே” என்றவள் வெட்கம் கலந்த சிரிப்புடன் சென்று விட்டாள்.
‘இவள அப்பவும் சமாளிக்க முடியல. எல்லாத்தையும் மறந்திருக்க இப்பவும் சமாளிக்கவும் முடியல. என்னடா அதி உனக்கு வந்த சோதனை?’ என்று நொந்து கொண்டான்.
இரவு அறைக்குள் செல்லவே அவனுக்கு பயமாக இருந்தது. மகாலட்சுமி அவனுக்காக காத்திருப்பாள் என்பதே பயத்தைக் கொடுத்தது.
‘எதுக்கெல்லாம் பயப்படுற நிலைமை ஆகிப்போச்சு?’ என்று தன்னைத்தானே கேலி செய்து கொண்டு உள்ளே சென்றான்.
மகாலட்சுமி பரமேஸ்வரியிடம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தாள்.
“இங்க ரொம்ப குளிர். ஆனா பரவாயில்ல. சமாளிச்சுட்டேன்” என்று பேசிக் கொண்டிருந்தாள்.
‘இது தான் சரியான சந்தர்ப்பம். அப்படியே படுத்து தூங்கிட வேண்டியது தான்’ என்று மூளை கூற, உடனே படுத்து கண்ணை மூடிக் கொண்டான்.
பேச்சு சுவாரஸ்யத்தில் மகாவும் இதை கவனிக்கவில்லை. பேசி முடித்துப் பார்க்க, அதியன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்.
“தூங்கிட்டாரா?” என்றவள் எட்டிப்பார்க்க, அவனிடம் சலனமில்லை.
அதற்கு மேல் தொந்தரவு செய்யாமல் மகாவும் படுத்து விட்டாள். சில நொடிகள் கழித்து கண்ணைத்திறந்து பார்த்தான் அதியன். அவள் முதுகு காட்டி படுத்திருக்க, சத்தமில்லாமல் வாயில் மூச்சு விட்டான்.
‘ஒரு மனுசன் கற்ப காப்பாத்திக்கிறது எவ்வளவு பெரிய டாஸ்க்கா இருக்கு?’ என்று நினைத்தவன், உடனே கண்ணை மூடித் தூங்க முற்பட்டான்.
அடுத்த நாள் மகா எழும் முன்பே எழுந்து வெளியே கிளம்பி விட்டான். இருந்தால் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பாளே?
தன் உடை பகுதியை திறந்த மகாலட்சுமி, புடவை இருந்த பகுதியை பார்த்தாள்.
“நிறைய இருக்கு.. இத கட்டலாமா?” என்று யோசித்து விட்டு, சேலையை வெளியே வைத்து விட்டு மற்றதை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள்.
குளித்து முடித்து ரவிக்கை அணிய ,அதுவும் அளவு போதவில்லை.
“இதுவும் பத்தல.. பேன்ட்டும் பத்தல.. முதல்ல ரொம்ப ஒல்லியா இருப்பனோ?” என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டு, கண்ணாடியை பார்த்தாள்.
அவளுக்கு எதுவும் நினைவில்லை என்றாலும், முதலில் இருந்ததை விட சற்று எடை கூடித்தான் இருந்தாள்.
“இத போட்டுட்டு எப்படி வெளிய போறது?” என்று யோசித்தவள், “ஆண்ட்டி..” என்று குரல் கொடுத்தாள்.
“என்னம்மா?” என்று கேட்டுக் கொண்டு உடனே வந்தார் பாக்கியம்.
அவள் விசயத்தை விளக்க, ஒரு சுடிதார் டாப்பை எடுத்துக் கொடுத்தார். அதை போட்டுக் கொண்டு வெளியே வந்தவள், “முன்னாடி ஒல்லியா இருப்பனா ஆண்ட்டி?” என்று கேட்டாள்.
“அப்படி எல்லாம் இல்லயே..”
“அப்புறம் ஏன் இதெல்லாம் பத்தல?”
“தெரியலமா.. ஒரு வேளை தைக்கிறவங்க தப்பா தச்சு இருப்பாங்க”
“சரி.. இதுல ஒரு நூல பிரிச்சு விட்டு தான் போடனும்.” என்றவள், உடனே அமர்ந்து பிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
“நான் காய் எல்லாம் வாங்க சூப்பர் மார்கெட் போறேன். உனக்கு எதுவும் வேணுமா?”
“எதுவும் வேணாம்”
“சரி.. ஏற்கனவே டிஃபன் செஞ்சு வச்சுட்டேன். சாப்பிடு. மதியத்துக்கு வாங்கிட்டு வந்து பார்த்துக்கலாம்”
மகா தலையாட்டியதும் அவர் கிளம்பி விட்டார். நூலை நன்றாக பிரித்து முடித்தவள், “இப்ப இது போட சரியா இருக்கலாம்” என்று தனக்குத்தானே பேசிக் கொண்டாள்.
எழுந்து நின்று சுடிதார் டாப்பை கழட்டி மெத்தையில் போட்ட நொடி, கதவை திறந்து கொண்டு அதியன் வந்து நின்றான்.
கதவு திறந்த சத்தத்ததில் பதறிப்போய் கழட்டிப்போட்ட டாப்பை எடுத்து அவள் உடலை மறைக்க, அதியன் அசையாமல் சில நொடிகள் நின்று விட்டான்.
அவளது பதட்டத்தில் சட்டென சுதாரித்தவன், உடனே வெளியேறி இருந்தான்.
மகாலட்சுமிக்கு வியர்த்து விட்டது. என்ன கோலத்தில் எப்படிப்பார்த்து வைத்திருக்கிறான்.
“கதவ கூட பூட்டாம.. அய்யோ.. மகாலட்சுமி.. இப்படியா செய்வ?” என்று தன்னைத்தானே கடிந்தவளுக்கு, வெட்கம் ஒரு பக்கம் பிடுங்கியது.
உடனே சேலையை கட்டும் வேலையில் இறங்கி, வேகமாக கட்டியும் முடித்தாள்.
ஆனால் வெளியே செல்லவோ அதியனை எதிர் கொள்ளவோ தைரியம் இல்லை.
‘இதுல.. டாக்டர் கிட்ட எல்லாம் கேட்டுட்டு வந்துட்டேன். பெரிய இவ மாதிரி.. பில்டப்பா பேசிட்டு இருந்தேன்.. இப்ப என்னடானா வெளிய போகக்கூட பயமா இருக்கே’ என்று யோசித்து நகத்தை கடித்தவள், டிரையரை எடுத்து முடியை உலர்த்தும் வேலையில் இறங்கினாள்.
அதுவும் உலர்ந்து முடித்திருக்க, அடுத்து என்னவென்று யோசித்தாள். பசி ஒரு பக்கம் நானும் இருக்கிறேன் என்று கத்தியது.
‘கமான் மகா.. அவரு உன் புருஷன். அவர் பார்த்தா என்ன தப்பு? எதுக்கு இவ்வளவு வெட்கப்படுற? எதுவுமே நடக்காத மாதிரி போய் சாப்பிடு’ என்று மூளை எடுத்துக் கூற, எச்சிலை விழுங்கிக் கொண்டு கதவை திறந்து தலையை மட்டும் நீட்டி எட்டிப்பார்த்தாள்.
அதியன் கண்ணில் படவில்லை.
‘வெளிய போயிட்டாங்க போல.. ஹப்பா..’ என்று நெஞ்சில் கை வைத்து மூச்சு விட்டவள், உடனே வெளியே வந்தாள்.
சுற்றியும் பார்த்தாள். வாசல் கதவு அடைக்கப்பட்டு இருந்தது. அதில் தைரியம் முழுதாய் வந்து விட, உணவை எடுக்க சமையலறைக்குள் நுழைந்தாள்.
அங்கு அதியன் தண்ணீர் டம்ளரை கெட்டியாக பிடித்துக் கொண்டு நின்றிருந்தான்.
அவளுக்கு பாதிப்பு இருக்கும் போது அவனுக்கு இருக்காதா? எக்கச்சக்கமாய் இருந்தது. அதிகரித்த மூச்சை சீர் படுத்த தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தான். ஆனால் கண்ணில் தோன்றிய காட்சி மட்டும் மறைவேணா என்று அடம் பிடித்தது.
அவன் அவனுடைய மனதோடு போராடிக் கொண்டு நின்றிருக்க, மகாலட்சுமி சேலை கட்டிக் கொண்டு முன்னால் வந்து நின்றாள்.
அவளைத்திரும்பிப் பார்த்தவன் கீழிருந்து மேலாக பார்த்தான். சற்று முன் பார்த்த காட்சி வேறு கண் முன் தோன்றி ஒப்பிட வைத்தது. அவனது பார்வை வீச்சை தாங்க முடியாமல் தடுமாறியவள், பார்வையை திருப்பி சமாளித்தாள்.
‘பசிக்குது.. சாப்பிட வந்தோம். அவ்வளவு தான். அவர நாம பார்க்கல.. பார்க்கவே இல்ல’ என்று உள்ளுக்குள் உரு போட்டுக் கொண்டு தட்டை எடுத்தாள்.
உணவை எடுத்து வைத்து விட்டு நகர்ந்தவளின் கையை எட்டிப் பிடித்தான் அதியன்.
பதட்டத்தில் தட்டை கீழே விடாமல் கெட்டியாக அவள் பிடித்துக் கொள்ள, முன்னால் வந்து நின்றான்.
விரித்து விட்ட தலையும் முகத்தில் விழுந்த முடியையும் பார்த்தவன், அதை ஒதுக்கியபடி நெற்றியில் முத்தம் வைத்தான்.
மகாலட்சுமி கண்ணை மூடிக் கொண்டான். கொஞ்சம் முன்னேறி மூக்கில் இதழ் பதித்து கன்னத்தில் வந்து நிலைத்தான்.
இதயம் தொண்டைக்குள் வந்து துடிக்க, மகாலட்சுமிக்கு கண்ணைத்திறக்க தைரியம் வரவில்லை.
அவளை அணைக்க தடையாக இருந்த தட்டை வாங்கி ஓரமாக வைத்தவன், வாரி அணைத்து இதழில் தன் இதழை பதித்து இருந்தான்.
அடிவயிற்றிலிருந்து கிளம்பி உணர்வில் மகா தடுமாறிப்போனாள். அவனது அணைப்பு இல்லை என்றால் கீழே விழுந்திருப்பாள்.
பதில் கிடைக்கும் வரை மென்மையாக இருந்த முத்தம், பதில் கிடைத்ததும் முற்றுகையாக மாறி இருந்தது.
எந்த வேகத்தில் அவளை அள்ளிக் கொண்டு வந்து மஞ்சத்தை அடைந்தானோ!
மகாலட்சுமி நெகிழ்ந்து போயிருந்தாள். அந்த நெகிழ்ச்சி கொடுத்த இடமோ, அதியன் தாராளமாக இழைந்தான்.
இருவரின் விரல்களும் இதழ்களும் அழகாய் கதை பேசிக் கொண்டது. சற்று முன் பார்த்து பார்த்து அவள் கட்டிய சேலை தரையில் தஞ்சமடைந்தது.
அவளது இணக்கம் அதியனை முன்னேற வைத்துக் கொண்டிருக்க, ஒரு நொடி மகாலட்சுமிக்குள் பயம் கிளம்பியது. உடனே அவளிடம் ஒரு விறைப்பு தெரிந்தது. முதலில் அதை அதியன் உணரவில்லை. சில நொடிகளில் அவளது மறுப்பு புரிய, மாயவலை அறுந்து விழுந்தது.
இருக்கும் நிலையை உணர்ந்தவன் முகத்தில் உண்மை ஓங்கி அறைய, திடுக்கிட்டுப் போனான்.
சட்டென அவளை விட்டு விலகி எழுந்து நின்றவனுக்குள், பிரளயமே வெடித்தது. என்ன செய்ய இருந்தான் என்று புத்தி உடைத்துக் கூறியது.
தன்னைத்தானே நான்கு அறை விட வேண்டும் என்ற வேகம் வர, இறுகி நின்றான்.
தொடரும்.