Loading

 

மகாலட்சுமியும் அதியனும் ஒன்றாக விமானத்தில் அமர்ந்திருக்க, அவர்களுக்கு அருகிலேயே பாக்கியம் அமர்ந்திருந்தார். வினோத்தை ஹாஸ்டலில் சேர்த்து விட்டனர். வீட்டை காலி செய்து விட்டு அமெரிக்கா கிளம்பி இருந்தனர்.

முதல் முதலில் விமானப்பயணம் என்பதால், மகாலட்சுமி அதியனின் கையை விடவே இல்லை. உள்ளே வருபவர்களை வேடிக்கை பார்ப்பதும், வெளியே இருப்பவைகளை கவனிப்பதுமாக நேரம் கடக்க, விமானம் புறப்படுவதற்கான அழைப்பு வந்தது.

சத்தம் கேட்டதும் கண்ணை மூடிக் கொண்டு அதியன் கையை கெட்டியாக அவள் பிடித்துக் கொள்ள, அவன் அசையாமல் அமர்ந்து இருந்தான். வானத்திற்கு வந்ததும் அவனாகவே கையை விடுவித்துக் கொண்டான்.

“மேல வந்துடுச்சா?” என்று கேட்க, “அங்க பாரு” என்று அவளை சன்னல் பக்கம் திருப்பி விட்டு, மறுபக்கம் திரும்பிக் கொண்டான்.

அவளோடு ஒட்டி உறவாட அவனால் முடியவில்லை. சற்று தள்ளியே தன்னை நிறுத்திக் கொண்டான். நேற்று கிளம்பும் போது மகாலட்சுமி கேட்ட கேள்விகள் எல்லாம் அவனை குடைந்து கொண்டே இருந்தது.

“எனக்கு எப்படி ஆக்ஸிடென்ட் ஆச்சு?” என்று கேட்டவளிடம், என்னவென்று பதில் சொல்வது?

அவன் அமைதியாய் இருக்க, “நாம லவ் மேரேஜ் பண்ணல தான?” என்று கேட்டு வைத்தாள்.

“ஏன் இப்படி கேட்குற?”

“நீங்க என் கிட்ட வரவே இல்லயே.. நமக்கு கல்யாணமாகி பல நாள் ஆகல. அப்ப நாம ஏன் ஒன்னா இல்ல. என் கிட்ட இருந்து விலகி விலகி போயிட்டு இருக்கீங்க”

“அப்படி எல்லாம் எதுவும் இல்ல”

அது தான் உண்மை என்றாலும், அப்போது சமாளிக்கவே செய்தான்.

“எனக்கு தோணுது. ஒரு ஹக்… ஒரு கிஸ் எதுவுமே இல்லயே. நமக்குள்ள லவ்வே இல்லயோனு தோனுது”

அவள் சந்தேகமாக கேட்க, அதியனுக்கு எதைச்சொல்வது என்று புரியவில்லை. எதையாவது சொல்லி, இங்கு வைத்தே அவளுக்கு நினைவு திரும்பி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். அப்படி நடந்தால், மீண்டும் முதலில் இருந்து அவளோடு போராட வேண்டும். அதற்கு அவனிடம் சக்தி இல்லை. எப்படியாவது இங்கிருந்து கிளம்பி விட்டால் போதும் என்ற நிலைக்கு வந்திருந்தான்.

ஆனால் மகாலட்சுமிக்கு சந்தேகம் பெரிதாய் முளைத்திருந்தது. அதியன் கண்ணில் அவள் தன்மீதான காதலை பார்த்ததே இல்லை. அக்கறையாய் பார்த்துக் கொள்கிறான். அவ்வளவு தான். உரிமையாய் நடப்பது இல்லை. அன்பாய் அரவணைப்பது இல்லை. காதலாய் உரையாடுவதும் இல்லை. அவளை நெருங்குவதே இல்லை.

இத்தனைக்குப்பிறகும் இது காதல் திருமணம் என்று கூறினால் எப்படி நம்புவது? எதையோ மறைப்பது போன்று தோன்றியது.

பரமேஸ்வரியும் கூட எதையோ மறைத்துக் கொண்டே பேசுவது போல் தோன்றியது. எல்லோரும் அவளுக்கு நினைவு திரும்ப வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். ஆனாலும் எதையோ மறைக்கின்றனர்.

அது என்னவென்று தான் அவளுக்கு புரியவில்லை. அமெரிக்கா கிளம்பும் முன் நந்தவனத்தில் ஒரு நாள் இருந்து விட்டு தான் கிளம்பினர்.

எல்லோரும் நன்றாக பேசினர். பழகினர். அக்கறையாக விசாரித்தனர். யதுநந்தன் வனிஷா மட்டும் அவளிடம் இரண்டொரு வார்த்தைக்கு மேல் பேசவில்லை. அதைப்பற்றி மகாலட்சுமி பெரிதாக வருத்தப்படவில்லை.

செல்வகுமாரின் திருமண ஆல்பத்தை எல்லாம் காட்டி எதாவது அவளுக்கு ஞாபகம் வருகிறதா? என்று பரமேஸ்வரி சோதித்தார். அவளுமே திரும்பத்திரும்ப நினைவு படுத்த முயன்று கொண்டு தான் இருந்தாள்.

அதைக்கொண்டே அதியனிடம் சந்தேகங்களை கேள்வியாக கேட்டாலும், அவனிடம் பதில் வரவில்லை. அந்த குழப்பங்களுக்கு மத்தியிலேயே கிளம்பி வந்து விட்டாள்.

______

“அடுத்த வாரம் லீவ் எடுக்கலாம்னு இருக்கேன்” என்று யதுநந்தனின் தோளில் சாய்ந்து கொண்டு கூறினாள் வனிஷா.

“பார்ரா..! மேனேஜர் மேடம்க்கு லீவ் எடுக்க நேரம் கிடைச்சுடுச்சு போல”

“என்ன பண்ண? என் புருஷன் சார் லீவ் போடச்சொல்லி டார்ச்சர் பண்ணுறார்.”

“டார்ச்சர்?”

“அதான் ஆஃபிஸ கழட்டி விட்டுட்டு புருஷனோட ஓடிப்போக போறேன்”

“ஓடுற விசயம் உன் புருஷனுக்கு தெரியுமா?”

“தெரியாது கடத்திட்டு போகப்போறேன்”

“நல்ல முடிவு. உன் புருஷன் ரெடியாம்”

“ஆசையப்பாரு..” என்று அவனை இடித்து விட்டு, “நீங்க ஏன் அத்தான் என்னை கல்யாணம் பண்ணீங்க?” என்று கேட்டாள்.

“இது என்ன கேள்வி தினுசா இருக்கு”

“சும்மா சொல்லுங்க”

“நீ சொல்லு முதல்ல”

“முதல்ல கேட்டது நானு” என்று அவள் செல்லமாய் அடிக்க, அவளை இழுத்து மடியில் போட்டுக் கொண்டான்.

“லேடிஸ் ஃபர்ட்ஸ்டா” என்று யது சிரிக்க, “எனக்கு அப்படித்தெரியலயே.. பதில யோசிக்க நேரமெடுக்குற மாதிரி தெரியுது” என்று சந்தேகமாக பார்த்தாள்.

“கரெக்ட்டா கண்டு பிடிச்சுட்ட!”

வனிஷா முறைத்து வைக்க, “சொல்லு” என்றான்.

“அன்னைக்கு மகாவ கூட்டிட்டு வராம, இது என்ன என்னைப் போய் பொண்ணா மாத்துறாங்களேனு யோசிச்சேன். அப்புறம் நீங்க வந்து அவ லவ்வர பார்க்க போயிட்டானு சொன்னதும், கல்யாணத்துக்கு சம்மதிக்கிறதா வேணாமானு குழப்பம். உங்கள கேட்டா சரினு சொல்லிட்டீங்க”

“வேணாம்னு சொல்லி இருந்தா?”

“கண்டிப்பா நடந்துருக்காது. வேணாம்னு சொல்லிட்டப்புறம் உங்கள கட்டாய படுத்தவா முடியும்?”

“அப்ப நான் சரினு சொன்னதால நீயும் சரினு சொல்லிட்ட”

“ஆமா”

“நான் சம்மதிச்சப்புறம் நீ வேணாம்னு சொல்லி இருந்தா, யாரும் தடுத்துருக்க மாட்டாங்களே?”

“அதுவும் யோசிச்சேன்”

“அப்புறம் ஏன் சொல்லல?”

“எல்லாம் மனசு தான்”

“மனசா?” என்று கேட்டவன், குரலில் ஆர்வம் அதிகரித்தது.

“ஆமா.. இளகுன மனசு எனக்கு. கல்யாணம் வர வந்து நின்னுட்டா, உங்களுக்கு கல்யாணமே நடக்காம போயிடும் பாட்டி அழுகோ அழுனு அழுகை. அத பார்த்துட்டு என் சாஃப்ட் மனசு உருகிடுச்சு. சரி போனாப்போகுதுனு அவங்க பேரனுக்கு வாழ்க்கை கொடுப்போம்னு முடிவு பண்ணிட்டேன்”

சோகமாய் சொல்லி விட்டு வனிஷா கண்ணடித்து வைக்க, தலையணையை எடுத்து அவள் மீது ஒன்று போட்டான்.

“இளகுன மனசுக்காரி.. வாழ்க்கை கொடுக்குறீங்களா மேடம்?” என்று கேட்டவன் முறைத்துப்பார்க்க, “ஈசி ஈசி மேன். அப்ப எனக்கு எதுவும் பெருசா தோணல. உங்களுக்கு ஓகேனா பண்ணிக்கலாம்னு நினைச்சேன். பண்ணிக்கிட்டேன். அவ்வளவு தான்” என்று முடித்தாள்.

“ச்சீ ப்பே” என்று யது முகத்தைத் திருப்ப, “நீங்க இன்னும் பதில் சொல்லலயே” என்று கேட்டாள்.

“நானும் அப்படித்தான்”

“அப்புறம் ஏன் மகாவ கல்யாணம் பண்ண சொன்ன போது மட்டும், எதையோ தின்னது மாதிரி மூஞ்சிய வச்சுட்டு இருந்தீங்க? உண்மைய சொல்லுங்க.. உங்களுக்கு மகாவ கல்யாணம் பண்ண இஷ்டமில்ல தான?”

“அப்படினு யார் சொன்னா உனக்கு?”

“நான் பார்த்தேன். அவ முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிஞ்சதையும் பார்த்தேன். உங்க முகத்துல அஞ்சு வாட்ஸ் பல்ப் கூட எறியாததையும் பார்த்தேன். ஏன் அப்படி இருந்தீங்க?”

“ஒரு குழப்பம்”

“என்ன குழப்பம்?”

“உன்னை ஏன் கல்யாணம் பண்ணேங்குறதுக்கும் இந்த கேள்விக்கும் ஒரே பதில் தான்”

“என்னது?”

“விசயத்த சொல்லுறேன். அதுக்கு மேல நீயே யோசிச்சுக்கோ” என்றதும் வனிஷா ஆர்வமானாள்.

அவனும் விசயத்தை சொல்ல, வாயைப்பிளந்தாள்.

“என்ன அத்தான் இப்படி சொல்லுறீங்க?”

“இதுக்கு மேல உன் இமேஜினேஷன் தான்” என்று விட்டான்.

அவள் தன் கற்பனைக்கு வண்ணம் தீட்ட ஆரம்பிக்க, யது அவள் மீது வண்ணம் தீட்ட ஆரம்பித்து விட்டான்.

முதல் முதலாக திருமண பேச்சை பரமேஸ்வரி எடுக்கும் போது, யதுவுக்கு பெரிய அக்கறை இல்லை.

அப்போது தான் கிருபாநந்தினியின் ஜாதகத்தில் இருந்த தோசங்களை எல்லாம் நிவர்த்தி செய்து கொண்டிருந்தனர். நிறைய வரன் வந்து தட்டிப்போயிருக்க, தோசம் பரிகாரம் என்று எத்தனையோ செய்து, கடைசியாக அவளது திருமணம் கூடி வந்திருந்தது.

அப்போது தான் யதுவிடம் திருமண பேச்சை ஆரம்பித்தார் வசந்தா.

“ம்மா.. என் வயசென்ன? அக்காவுக்கே இப்ப தான் கல்யாணம் ஆகப்போகுது. அதுக்குள்ள எனக்கா?”

“இப்பவே இல்லடா. உன் அக்காவுக்கு எப்பவோ பண்ணிருக்கனும். அவ ஜாதக பிரச்சனை இத்தனை வருசம் இழுத்துடுச்சு. ஆனா உனக்கு அப்படி இல்லயே. கிருபா கல்யாணம் முடிஞ்ச ஆறு மாசத்துல உனக்கு பேசலாம்”

“என்னமோ பொண்ணு ரெடியா இருக்க மாதிரி பேசுறீங்க? பார்க்கலாம் போங்கமா”

“பொண்ணெல்லாம் ரெடி தான். நீ என்ன சொல்லுற?”

“ரெடியா? யாரு?”

“என் அண்ணன் மக தான்”

‘வனிஷாவா! அவ என் கிட்ட பேசக்கூட மாட்டாளே.. அவளயா பொண்ணு பார்த்து ரெடினு வேற சொல்லுறாங்க?’ என்று யது ஒரு நொடியில் அதிர்ந்து விட, அந்த அதிர்ச்சிக்கு வைத்தியம் பார்த்தார் வசந்தா.

“மகாலட்சுமிடா. நம்ம முன்னாடி வளர்ந்த பொண்ணு. எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. கேட்கலாம்னு நினைக்கிறேன். உனக்கு ஓகேவா?”

புஸ்ஸென வடிந்து விட்ட அதிர்ச்சியை விட்டு விட்டு, “கிருபா கல்யாணம் முதல்ல முடியட்டும். அப்புறம் பேசலாம்” என்று விட்டான்.

ஆனால் மனதில், அன்றிலிருந்து வனிஷாவை ஏன் நினைத்தேன்? என்ற கேள்வி குடைந்து கொண்டே இருந்தது.

அவளை விட பெரியவள் மகாலட்சுமி. அவளுக்கு தானே முதலில் திருமணம் நடக்கும்? பிறகு ஏன் வனிஷாவை நினைத்தான்? இத்தனைக்கும் அவள் யாரோடும் ஒட்டி உறவாடுவது இல்லை. அவளின் குணங்கள் கூட இத்தனை வருடத்தில் எல்லோருமே மறந்து விட்டனர். ஆனால் மணப்பெண் மாமா மகள் என்றால், அவள் நினைவு தான் முதலில் வந்தது. அந்த எண்ணம் என்னவோ சலனமாக நெஞ்சில் பதிந்தும் போனது.

ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. கிருபாவின் திருமணம் முடிந்து, அவனது திருமண பேச்சை எடுத்து விட்டனர்.

யதுவுக்கு மகாலட்சுமியின் மீது ஆர்வம் வர மறுத்தது. திருமணமானால் சரியாகி விடும் என்று அவனே அவனை தேற்றிக் கொண்டான். ஆனால் அது சரியாகவே இல்லை. அப்படியே தான் இருந்தது.

எத்தனையோ திடீர் திருப்பங்களுடன், வனிஷாவே நேரடியாக திருமணம் பற்றிப்பேசவும், யதுவுக்கு முதலில் பேரதிர்ச்சி தான் கிடைத்தது.

போகப்போக, யோசிக்க யோசிக்க, வனிஷாவை திருமணம் செய்யத்தான் விருப்பம் என்று மனம் முடிவுக்கு வந்து விட்டது. முதலில் தோன்றிய சலனமே, மற்ற எதையும் யோசிக்காமல் அவனை சம்மதிக்கவும் வைத்திருந்தது.

அவளுடனான வாழ்வை பற்றி அவன் பெரிதாக கனவு காணவில்லை. அவளைப்போலவே எதிர்பார்ப்புகளோ கனவுகளோ ஆசைகளோ இல்லாமல் தான் அவனும் வாழ்வில் அடியெடுத்து வைத்தான்.

ஆனால் வனிஷா இயல்பாய் அவனை ஏற்றுக் கொண்டாள். அவனையும் வெளிக்கொணர்ந்தாள். இருவரும் இது தான் விதி என்று எழுதாமல், இயல்பாய் வாழ ஆரம்பித்திருந்தனர். அதுவே இருவரின் மனதிலும் தித்திப்பை விதைத்திருந்தது.

சண்டை போட வேண்டும் என்றால், அவர்களுக்குள் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அத்தனையும் மறந்து விட்டு, விளையாட்டாகவும் புன்னகையுடனும் வாழ்வை எதிர் கொண்டனர். அந்த வாழ்வும், அவர்களுக்கு அதையே திருப்பிக் கொடுத்தது.

செல்ல சினுங்கனுடன் போர்வையை நன்றாக போர்த்திக் கொண்டு வனிஷா உறங்க முற்பட, யதுவுக்கு தூக்கம் வரவில்லை.

அவளை சீண்டியபடியே இருந்தான்.

“அத்தான்.. நாளைக்கு ஆஃபிஸ் இருக்கு. தினமும் உங்களால லேட்டா தூங்குறேன்”

“என்னால?”

“சரி.. நாம.. ஆனா இப்ப தூங்கனும். குட் நைட்”

“எனக்கு வரலயே”

“வரும். கண்ண மூடுங்க” என்று வழுக்கட்டாயமாக மூட, வைத்து அவன் கண்களில் இதழ் பதித்தாள்.

“இப்ப வரும். குட் நைட்” என்றவள் அவனை நன்றாக கட்டிப் பிடித்துக் கொண்டு உறங்கி விட்டாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
24
+1
0
+1
6

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்