Loading

 

அடுத்த நாள் காலையில் அதியன் குளித்து வர, மகாலட்சுமி அவனை பார்த்துப் புன்னகைத்தாள். இருவரும் இப்போது வீட்டில் இருந்தனர்.

கடைசியாக மகாலட்சுமி தன்னை பார்த்து புன்னகைத்த நாட்கள் அதியனுக்கு நினைவு வந்தது. அதை நினைத்து எழுந்த வருத்தத்தை மறைத்துக் கொண்டு, “கிளம்பு.. வெளிய போகனும்” என்றான்.

“எங்க போறோம்?”

“பாஸ்போர்ட் எடுக்க”

“பாஸ்போர்ட்டா? அது எதுக்கு?”

“அமெரிக்கா போறோம். அதுக்கு”

“ஓஹ்.. ஹனி மூன்க்கு போறோமா?”

மகா ஆர்வமாக கேட்க, அவன் ஜெர்காகி திரும்பிப் பார்த்தான்.

“ஹனி மூன்னா?”

“ஆமா.. நான் பாக்கியம் ஆண்ட்டி கிட்ட கேட்டேன். நமக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வாரம் கூட ஆகலயாமே. அப்ப டிரிப் போனா அத ஹனி மூன்னு தான சொல்லுவாங்க?”

“அது சரி. நாம ஹனி மூன் போகல. அங்க போய் செட்டில் ஆகப்போறோம்”

“ஓஹ்..” என்று புரிந்து கொண்டு தலையை ஆட்டியவள் முகத்தில் பெருத்த யோசனை ஓடியது.

“இப்ப என்ன யோசிக்கிற?”

“நம்ம கல்யாணம் எப்படி நடந்துச்சுனு யோசிக்கிறேன். ஆனா எதுவுமே ஞாபகம் வரலயே”

“வரும் போது வரும். இப்ப போய் கிளம்பு”

யோசனையுடனே குளித்துக் கொண்டிருந்தவள், நேற்று மருத்துவர் சொன்னதை நினைத்து பார்த்தாள்.

“ஒரு சந்தேகம் டாக்டர்” என்று கேட்டதும், “கேளுங்க” என்றார்.

“எனக்கு என் பேரே ஞாபகம் இல்ல. ஆனா நல்லா பேசுறேன். சுத்தியிருக்க இடமெல்லாம் என்னனு சரியா தெரியுது. மறந்தா இதையும் தான மறந்துருக்கனும்?”

“இதெல்லாம் சப் கான்சியஸ்ல ரிஜிஸ்டர் ஆகியிருக்கது. அதான் ஞாபகம் வச்சுருக்கீங்க. இப்ப உங்க பேர மறந்துட்டீங்க தான். ஆனா யாராவது மகானு கூப்பிட்டா உடனே திரும்புவீங்க. நீங்க முழுசா எல்லாத்தையும் மறக்கல. இது டெம்ப்ரவரி தான். சீக்கிரம் எல்லாமே ஞாபகம் வந்துடும்”

நம்பிக்கையாக மருத்துவர் கூறியதை, இப்போதும் நினைத்துப் பார்த்தாள்.

‘அப்படினா அடி ஆழ மனசுல எல்லாமே புதைஞ்சு இருக்குமா? ஆனா யோசிச்சா ஏன் எதுவும் ஞாபகம் வர மாட்டேங்குது?’

சிந்தனை அதன் போக்கிலேயே ஓட, குளித்து தயாராகி வந்து விட்டாள்.

______

காலையில் வனிஷா மலரிடம் பேசி விட்டு வீட்டை விட்டு வெளியே வர, கேட் அருகே யாரோ நிற்பது போல் தெரிந்தது.

எட்டிப் பார்த்து புருவம் சுருக்கியவள், உடனே சென்று கதவை திறந்து பார்த்தாள்.

“விஷ்வா?”

வனிஷா ஆச்சரியமும் கேள்வியாக பார்க்க, விஷ்வா அதிர்ந்து போனான்.

“மேடம்.. இது உங்க வீடா?”

“ம்ம். நீங்க யாரத்தேடி வந்தீங்க?”

“மகாலட்சுமி”

“என் அக்கா தான். என்ன விசயம்?”

“ஓஹ்.. சாரி மேடம். அன்னைக்கு என் பைக்ல தான் வந்து விழுந்துட்டாங்க. கொஞ்சம் பர்ஸ்னல் வேலை இருந்ததால, ஹாஸ்பிடல்ல சேர்த்ததோட கிளம்பிட்டேன்.”

‘இவன் தானா அது’ என்று நினைத்தவள், “தென்?” என்றாள்.

“அவங்கள நேர்ல பார்த்து சாரி கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்”

“அவ இங்க இல்லையே. அவ ஹஸ்பண்ட் வீட்டுல இருக்கா”

“இந்த அட்ரஸ் தான் ஹாஸ்பிடல்ல கொடுத்தாங்க.”

“வெயிட்” என்றவள் கைபேசியை எடுக்க திரும்ப, “யாரிது?” என்று கேட்டுக் கொண்டு வந்தான் யது.

“விஷ்வா. கூட வொர்க் பண்ணுறவங்க. இவர் பைக்ல தான் மகா விழுந்துருக்கா. சாரி சொல்லனுமாம்”

“அவ இங்க இல்லயே”

“அதியன் கிட்ட கேட்டுப் பார்க்கலாம்”

உடனே அதியனை அழைத்து யது விவரம் சொல்ல, “நாங்க வெளிய கிளம்புறோமே யது” என்றான் அதியன்.

“என்ன பண்ணலாம்?”

“பாஸ்போர்ட் எடுக்க தான் போயிட்டு இருக்கோம். முடிஞ்சா அங்க வந்து பார்க்க சொல்லுங்க. இல்லனா வேணாம்.”

“ஓகே” என்றவன் விஷ்வாவிடம் விவரம் கூற, “ஓகே சார். நான் அங்க போயே பார்த்துக்கிறேன்” என்றவன் வனிஷாவிடம் திரும்பினான்.

“தேங்க்யூ மேடம்” என்று கூற, வனிஷா தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

விஷ்வா திரும்பி நடக்க, யதுவும் வனிஷாவும் வீட்டை நோக்கி நடந்தனர்.

“அவன் முன்னாடி வெரப்பா நிக்கிற? அவனும் உன்னை பார்த்து பம்முறான். மேனேஜர் கெத்து?”

“அப்படி இல்லனா வேலை வாங்க முடியாது”

“அடேங்கப்பா..! அவ்வளவு டெரர் பீஸா நீ? பார்த்தா தெரியலயே”

“ஏன் பார்க்கனுமா?”

“காட்டேன்”

அவன் ஒரு மார்க்கமாய் பார்த்து கேட்க, சிரிப்போடு அவன் முகத்தை பிடித்து திருப்பி விட்டாள்.

அவர்கள் பேச்சு கேட்காத தூரத்தில் இருந்தாலும், விஷ்வா அவர்களை நன்றாக பார்த்தான்.

திருமணமான விசயத்தை கேட்டு துடித்து, அவளை மறக்க முடியாமல் அவன் தவித்த தவிப்பு அவனுக்கு மட்டுமே தெரியும். மனம் முழுவதும் அவள் நிரம்பி இருக்க, அவளை ஒதுக்க படாதபாடு பட்டு விட்டான்.

அவளது நண்பர்கள் எல்லோருமே, அவனை மறந்து விடச் சொல்லி வற்புறுத்திப் பார்த்து ஓய்ந்திருந்தனர்.

இன்று கணவனோடு உரிமையாக பேசுபவளை பார்த்து விட்டு, மனமே இல்லாமல் அவள் மீது வைத்த காதலை கொன்று தூக்கி எறிந்தான்.

எல்லோரிடமும் ஒரு வார்த்தை அதிகம் பேசாதவள். அவள் சிரிப்பையே யாரும் பார்த்ததில்லை. ஆனால் அவள் கணவனோடு எவ்வளவு அழகாக சிரித்துக் கொண்டு செல்கிறாள்!

நீண்ட பெருமூச்சு விட்டவன், கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

நேராக அதியன் மகாலட்சுமியை சந்தித்து மன்னிப்பு கேட்டு விட்டு அலுவலகம் வர, அங்கு அவனுக்கு முன்பே வனிஷா அமர்ந்து இருந்தாள். அவளை பார்த்தவனுக்கு இப்போது ஏனோ ஏக்கம் வரவில்லை. இழந்த பொருளை பார்க்கும் பார்வையும் இல்லை. அமைதியாக பார்த்து விட்டு சென்று விட்டான்.
____

பாஸ்போர்ட் வேலைகளை முடித்துக் கொண்டு, மகாலட்சுமியை வேறு இடத்திற்கு அழைத்துச்‌ சென்றான் அதியன்.

“இங்க ஏன் வந்தோம்?” என்று மகா சுற்றியும் பார்க்க, “இங்க தான் உனக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சு” என்று காட்டினான்.

“ஓஹ்..” என்றவள் அந்த இடத்தை நன்றாக பார்த்தாள். எதுவுமே நினைவு வரவில்லை.

சற்று முன் விஷ்வா மன்னிப்பு கேட்ட போது, மகாலட்சுமிக்கு என்ன யோசித்தும் எதுவும் நினைவு வரவில்லை.

“சாரி மேடம்” என்று அவன் மன்னிப்பு கேட்க, “இட்ஸ் ஓகே. உங்க தப்பு இல்ல. ஹாரன் கேட்காம இவளும் நடுவுல வந்துருக்க கூடாது” என்று அதியன் தான் பேசி அனுப்பி வைத்தான்.

மகாலட்சுமி தீவிரமாக யோசித்து விட்டு, “எனக்கு அந்த ஆக்ஸிடென்ட் நடந்தது கூட ஞாபகம் வரல” என்றாள் வருத்தமாக.

உடனே இங்கு அழைத்து வந்து விட்டான். அடிபட்ட இடத்தை நேரில் பார்த்தால் எதுவும் ஞாபகம் வருமோ என்ற எண்ணத்தில்.

“இங்க தான் நைட் நடந்து வந்துருக்க. அந்த கல்லுல தான் விழுந்துட்ட.” என்று காட்டினான்.

“எனக்கு இதுவும் ஞாபகம் வரல”

அவள் முகம் சுருங்க கூற, அதியன் பெருமூச்சு விட்டான்.

“பரவாயில்ல விடு. வா போகலாம்” என்று அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

இருவரும் வீடு இருந்த திசை பக்கம் நடந்தனர். மகா அதியனை நிமிர்ந்து பார்க்க, “என்ன?” என்றான்.

“நம்ம கல்யாணம் எப்படி நடந்தது?”

இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அவன் பார்க்க, “பாக்கியம் ஆண்ட்டி நாம லவ் மேரேஜ் பண்ணதா சொன்னாங்க. அப்ப நாம லவ் பண்ணோமா?” என்று கேட்டாள்.

அதியனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. பாக்கியத்திடம் முகம் கொடுத்து பேசாதவள், இப்போது எல்லாம் மறந்த நிலையில் அவரிடம் விசாரித்திருக்கிறாள். அவரும் முடிந்தவரை சமாளித்திருந்தார்.

“சொல்லுங்க.. எத்தனை வருசமா லவ் பண்ணோம்?”

“ரெண்டு வருசமா”

“வாவ்..! ஆனா எனக்கு எதுவுமே ஞாபகத்துல இல்லயே”

“சீக்கிரம் ஞாபகம் வந்துடும்”

“சரி யாரு முதல்ல லவ் சொன்னது? நானா? நீங்களா?”

ஆர்வமாக கேட்டாள்.

“நீ தான்”

“சொல்லிருப்பேன்” என்றவளின் முகத்தில் வெட்கத்தின் சாயல்.

அதை அதிசயமாக பார்த்தான் அதியன்.

“ஏன் அப்படி சொல்லுற?”

“இப்பவே எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சுருக்கு. அப்படினா கண்டிப்பா உங்கள நான் தான் முதல்ல லவ் பண்ணிருப்பேன்”

‘கிழிஞ்சது போ’ என்று நினைத்தவன், வாயைத்திறக்கவில்லை.

“வேற என்னலாம் பண்ணோம்?”

“என்னலாம்னா?”

“எப்படி லவ் பண்ணோம்? எப்படி எங்க அம்மா அப்பா கிட்ட சம்மதம் வாங்குனோம்? எப்படி கல்யாணம் நடந்துச்சு? பாக்கியம் ஆண்ட்டி நிறைய சொல்லல. கொஞ்சமா தான்‌ சொன்னாங்க. அது‌ல எதுவுமே ஞாபகம் வரல. நீங்க சொல்லுங்க. நாம என்னலாம் பண்ணோம்?”

“அதெல்லாம் கதையா? கதை கேட்குற மாதிரி கேட்குற?”

“எதாவது ஒரு விசயத்த கேட்டு எனக்கு எல்லாம் ஞாபகம் வந்துடாதானு இருக்கு” என்றவள் குரல் வருத்தத்தோடு கெஞ்சலும் கலந்து வந்தது.

அவள் கெஞ்சிக்கேட்டாலும் அவனிடம் சொல்ல எதுவமே இல்லையே.

அவளுக்கு அதியனை எப்படிக்காதலித்தாள் என்ற விவரம் வேண்டும். அவனை உருகி உருகி காதலித்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். மற்ற எல்லாம் விட காதலித்த நினைவுகள் பறிபோனதில் தான் அவளது மனதில் பாரம் ஏறிக் கொண்டது.

பாவமாக பார்த்தவளை ஏமாற்றவும் முடியாமல், பொய் சொல்லவும் முடியாமல் அதியன் தான் திணறினான்.

“ரொம்ப பெரிய அளவுல எல்லாம் நாம எதுவும் பண்ணல. உங்க வீட்டுல காதலுக்கு எதிர்ப்பு இல்ல. எங்கப்பாவும் சரினு சொல்லிட்டார். சோ கல்யாணம் பண்ணிக்கிட்டோம்”

பொய்யும் இல்லாமல் உண்மையும் இல்லாமல் ஒன்றைக் கூறி முடித்து விட்டான்.

இதைக்கேட்டும் எதாவது நினைவில் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தாள் மகாலட்சுமி. ஆனால் ஒன்றும் வரவில்லை. மூளை அவளுக்கு போக்கு காட்டி விட்டு தூங்கி விட்டது போல் இருந்தது.

‘கடவுளே.. எனக்கு எப்ப தான் எல்லாம் ஞாபகம் வரும்?’ என்று கடவுளிடம் கேட்டு நொந்து கொள்ளத்தான் முடிந்தது.

அதியன் வேறு பேச ஆரம்பிக்க, மகாலட்சுமியும் அவன் பேச்சில் இணைந்தாள்.

பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். பாக்கியம் சமையலில் இருக்க, இருவரும் அறைக்குள் சென்று விட்டனர்.

அதியன் உடனே வெளியே கிளம்ப, “திரும்ப எங்க போறீங்க?” என்று விசாரித்தாள்.

“என்னோட வேலைய விடனும். நாளைக்கு போய் உன் ஸ்கூல்ல வேலைய ரிசைன் பண்ணிட்டு வந்துடலாம். இப்ப என் வேலைய ரிசைன் பண்ணிட்டு வர்ரேன்”

‘ஸ்கூலா!’ என்று யோசித்தவள், “ஆமா நீங்க எங்க வேலை பார்க்குறீங்க?” என்று அவனிடம் கேட்டாள்.

அவன் நிறுவனத்தின் பெயரை சொல்ல, அது என்னவென்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனாலும் தலையாட்டிக் கொண்டாள்.

“நான் ஸ்கூல்லயா வேலை பார்க்குறேன்?”

“ஆமா. நீ டீச்சர்”

‘டீச்சரா! நாம டீச்சரா?’ என்று அதிசயித்து அதை மனதில் பதித்தவள் உடனே அதியனை கேள்வியாக பார்த்தாள்.

“இப்ப என்ன?”

“நான் டீச்சர்.. நீங்க வேற கம்பெனில வேலை பார்க்குறீங்க. அப்புறம் எப்படி மீட் பண்ணோம்?”

“அத நீயே யோசிச்சு கண்டுபிடி. இப்ப கிளம்புறேன்” என்றவன் உடனே வெளியேறி விட்டான்.

எவ்வளவு தான் சமாளிப்பது? அவளும் எல்லாவற்றையும் கேட்டு நினைவு படுத்தி விட துடிக்கிறாள். அவனால் தான் அதற்கு ஒத்துழைக்க முடியவில்லை.

அதியன் கிளம்பிய பின் மகாலட்சுமி யோசித்துக் கொண்டே இருக்க, தலைவலி வந்தது தான் மிச்சம். அப்படியே படுத்துத் தூங்கி விட்டாள்.

அடுத்தடுத்த நாட்கள் நகர, அமெரிக்கா செல்வதற்கான வேலை துரிதமாக நடந்தது. பள்ளியில் சென்று, அவளுடைய உடல் நிலையை காரணம் காட்டி சீக்கிரமே வேலையை விட்டு விட்டு வந்து விட்டனர்.

அவள் அனைத்தும் மறந்த நிலையில் இருக்க, அவளுடைய திருமணத்தில் நடந்த குளறுபடியை பற்றி தூண்டித்துருவ காத்திருந்தவர்களுக்கு தான் ஏமாற்றமாக இருந்தது.

எல்லோரையும் அறியா பார்வை பார்த்து விட்டு கிளம்பி விட்டாள். தீபா உட்பட.

அதோடு, மிக விரைவில் மகாலட்சுமிக்கு கடவுசீட்டும், அவர்கள் அமெரிக்கா செல்ல தேவையான எல்லாமே தயாராகி விட்டது. அத்தனை விரைவில் அதியன் செய்து முடித்திருந்தான்.

அன்று மாலை வனிஷாவும் யதுநந்தனும் அதியனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

வெற்றி காம்ப்ளக்ஸ்-இன் திறப்பு விழாவுக்கு அழைக்க வந்திருந்தனர்.

சொந்த பந்தங்களில் முக்கியமான சிலருக்கு சொல்லி இருக்க, அதியனையும் அழைத்தனர்.

“என்னைக்கு?”

“ஞாயிறு.”

“எங்களுக்கு செவ்வாய் தான் ஃப்ளைட். சோ கண்டிப்பா வர்ரோம்” என்றான்.

அவனை சந்தேகமாக பார்த்த வனிஷா, “எதுக்கு இந்த அவசரம்?” என்று வினவினாள்.

அதியன் ஒரு நொடி அமைதியாக இருந்து விட்டு, “மகாவுக்கு எப்ப வேணா நினைவு திரும்பலாம்” என்றான்.

“அப்படினா?”

“அதுக்குள்ள இங்க இருந்து கூட்டிட்டுப்போகனும்னு நினைக்கிறேன்”

“வர மாட்டேன்னு எதுவும் சொல்லி இருந்தாளா?” என்று யது கேட்க, மறுப்பாக தலையசைத்தான்.

“அவ டைவர்ஸ் வாங்குற முடிவுல இருந்தா. ஞாபகம் வந்துட்டா மறுபடியும் அத தான் கேட்பா. கூட்டிட்டு போறது கஷ்டம். அங்க போனப்புறம் ஞாபகம் வரட்டும் பார்த்துக்கலாம்”

அதியன் பேச்சை கேட்டு ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, வேறு எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட்டனர்.

ஞாயிறு விடிந்தது.

நந்தவனத்தில் எல்லாம் தடபுடலாக தயாராகிக் கொண்டிருந்தனர். பாட்டி, தாத்தா, வசந்தா மற்றும் சில பொருட்களை அள்ளிக் கொண்டு, யதுநந்தன் காரை ஓட்டிச் சென்றான்.

அங்கு வெற்றிவேல் முதலிலேயே இருக்க, சில சொந்தங்களும் வந்து விட்டனர். அங்கு பாட்டி தாத்தாவை விட்டு விட்டு, மற்றவர்களை மீண்டும் வந்து அழைத்துச் சென்றான்.

அதியனும் மகாலட்சுமியும் பாக்கியத்துடன் வந்து சேர்ந்தனர். கிருபாவும் அவளுடைய கணவணோடு வந்து விட்டாள். நல்ல நேரம் பார்த்து ரிப்பனை வெட்டி உள்ளே சென்றனர்.

இரண்டடுக்கில் ஐந்து கடைகள் இருக்க, அதில் இரண்டு வெற்றி கடைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மற்ற மூன்றும் விலை போய் விட்டது.

இரண்டாவது மாடியின் வேலை முழுதாக முடிந்திருக்க, மூன்றாம் மாடிக்கான வேலையை இனி தான் ஆரம்பிக்க வேண்டும்.

வசந்தா பால் காய்ச்சி முடிக்க, அங்கேயே இருந்து குடித்து விட்டு, வந்திருந்தவர்களுக்கு இனிப்பு கொடுத்து முடித்தனர்.

வசந்தா கிருபாவிடம் “உன் மாமியார் ஏன் வரல?” என்று தனியாக விசாரித்தார்.

“அவங்க வராத வரை நல்லதுனு நினைங்கமா”

“ஏன்டி இப்படிச்சொல்லுற?”

“யது கல்யாணம் முடிஞ்சதுல இருந்து அந்த பேச்சு பேசுறாங்க. அமைதியா இருக்க மகாலட்சுமிய விட்டுட்டு அடங்காப்பிடாரி வனிஷாவ போய் உன் தம்பிக்கு கட்டி வச்சுருக்கீங்க. அவ பேசிப்பேசியே உன் அம்மாவ ஓட விட்ப்போறா. அப்படி இப்படினு கண்டமேனிக்கு வானுவ பேசிட்டு இருக்கு. நானும் எவ்வளவு தான் சமாளிச்சு பார்க்குறது? மகாவுக்கு அடிபட்டப்பவும் ஹாஸ்பிடல் கிளம்புறேன்.. அந்த ‌வனிஷா தான் மகாலட்சுமிக்கு எதாவது பண்ணிருப்பானு சொல்லுது. கடுப்பாகிடுச்சு தெரியுமா? இன்னைக்கு கிளம்பும் போது வேணும்னே கை வலிக்கு தலை வலிக்குதுனு உட்கார்ந்துடுச்சு. இவரு வேகமா அம்மாவ கொஞ்ச போறாரு. நாங்க வம்பா கூப்பிடனுமாம். தலைவலியோட அங்க வந்து என்ன அத்த செய்வீங்க? வீட்டுல தூங்குங்க. நான் பாட்டி தாத்தா கிட்ட சொல்லிக்கிறேன்னு சொல்லிட்டு அவர இழுத்துக்கிட்டு வந்துட்டேன். இங்க வந்துருந்தாலும் வானுவ தான் எதாவது பேசியிருக்கும். இருக்க சந்தோசமே கெட்டு போயிருக்கும். வராத வர நிம்மதி. விடுங்க”

ஒரே மூச்சாய் கிருபா புலம்பி தள்ளியிருந்தாள். அவ்வளவு தூரம் அவளை படுத்தி எடுத்திருந்தார் காஞ்சனா. தன் மருமகளை பேசிய பிறகும், அவரை வலிந்து அழைக்க வசந்தாவுக்கும் விருப்பம் இல்லை. அதனால் விட்டு விட்டார்.

விழா முடிந்து மற்றவர்கள் எல்லோரும் கிளம்பிச் சென்று விட, யது பாட்டியிடம் வந்தான்.

“பாட்டி.. ஊர்ல உங்க பேர்ல நிலம் இருக்காம்ல? நிஷா சொன்னா” என்று ஆரம்பித்தான்.

“ஆமாபா.. என் வீட்டுல என் அண்ணனுங்களுக்கு வீடும் தோப்பும் கொடுத்துட்டு எனக்கு நிலத்த கொடுத்தாங்க”

“உங்களுக்கு மட்டும் ஏன் நிலம்?”

“நான் வெளிய போயிருவேன். பாதுகாக்க முடியாதுல? அவங்கனா தோப்பயும் வீட்டையும் பார்த்துப்பாங்கனு எங்கப்பா கொடுத்தாரு. ஆனா அவங்க புள்ளைங்க எல்லாம் வேற வேற ஊருக்கு போயிடுச்சுங்க. இப்ப அந்த தோப்பு வீடு நிலம் எல்லாத்தையும் நான் தான் பார்த்துட்டு இருக்கேன்”

“அது மட்டுமில்ல.. அந்த வீட்ட விக்கிறதா இருந்தாங்க. அத்த தான் எங்கப்பா அம்மா அண்ணன் எல்லாரும் வாழ்ந்த வீடு. விக்க கூடாதுனு சொல்லிட்டாங்க. அவங்க எல்லாரும் அத்த பேச்ச தட்டவே மாட்டாங்க. அதுனால வீடு அப்படியே இருக்கு. ஒரு பக்கத்த மட்டும் வாடகைக்கு விட்டுருக்காங்க. நாங்க திருவிழாவுக்கு போனா இன்னொரு பக்கம் இருந்துப்போம்” என்று மலர் விவரமாக கூறினார்.

“உங்க ஊர்ல கடையே இல்லையாமே?”

“இருக்கே.. ரெண்டு மூணு இருக்கு”

“வனிஷாவுக்கு நாம அங்க கடை திறந்தா நல்லா இருக்கும்னு எண்ணம். உங்க நிலமும் அந்த ஊருக்குள்ள இருக்கு. அங்கயே கூட வைக்கலாம். அப்படி இப்படினு சொன்னா”

யது விசயத்தை கூற பாட்டிக்கு முகம் மலர்ந்தது. அவர் பிறந்த ஊரில் தன் பேரன் ஒன்றை செய்தால் பிடிக்காமல் போகுமா?

“அப்படியா? ஆமா அங்க போனா வானுவுக்கு எதுவும் வேணும்னா பக்கத்து ஊருக்கு போகனும். அங்க இருக்க மத்தவங்களும் எதாவது தேவைனா வெளிய தான் போய் வாங்கிட்டு வர வேண்டி இருக்கும். கடை அங்க கம்மி தான்.”

“அப்ப நாம வச்சுடலாமா?”

“வச்சுடலாமே.. உங்கப்பா என்ன சொன்னாரு?”

“அத நீங்களே கேளுங்க” என்றவன் வெற்றிவேலை அழைத்து பேசினான்.

பேச்சு வளர்ந்து அந்த நிலத்தில் கடை கட்டுவது உறுதியானது. அதை காம்ப்ளக்ஸாக கட்டுவதை பற்றி, பொறியியல் நிறுவனத்திடம் பேசிவிட்டு முடிவு செய்யலாம் என்று கூறி விட்டனர்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
26
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்