மகாலட்சுமியின் முகம் சுருங்க, அதியன் அவளை ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
நடிக்கிறாளோ? என்ற சந்தேகம் வரத்தான் செய்தது. ஆனால், அவளது பார்வை பொய் சொல்லவில்லை.
அடுத்து என்ன? என்று புரியாமல் அவன் பார்த்துக் கொண்டிருக்க, பெயின் கில்லர் முடிந்து வலி மெல்ல தெரிய ஆரம்பித்தது அவளுக்கு.
தலையை வலக்கையால் பற்றிக் கொண்டவளுக்கு இடது கையும் வலித்தது.
“ஸ்ஸ்..” என்று வலி பொறுக்காமல் சத்தம் எழுப்பியவள், அப்படியே மெத்தையில் சரிந்தாள்.
“வலிக்குதா?”
“ம்ம்.. ரொம்ப..” என்றவள் தலையணையில் தலையை புரட்ட, “அப்படிப்பண்ணாத.. காயம் எதாவது ஆகிடும்” என்று அவள் தலையை பிடித்துக் கொண்டான்.
“வலிக்குதுங்க..” என்றவளுக்கு கண்கலங்கி விட்டது.
“கண்ண மூடி தூங்கு.. சரியா போகும்”
அவளது பேச்சைக் கேட்டு கண்ணை முடியவள், வலியில் சில நிமிடங்கள் உழன்று விட்டு தூங்கி விட்டாள்.
____
நந்தவனத்தில் எல்லோரும் மருத்துவமனை நோக்கிக் கிளம்பும் போது, அதியனிடமிருந்து யதுவுக்கு அழைப்பு வந்தது. காலையிலேயே அவர்களை அழைத்துச் சொல்ல யோசித்தான். இரவெல்லாம் தேடி விட்டு அப்போது தான் உறங்கி இருப்பார்கள். அது போதாது என்று மகாலட்சுமி வேறு அனைத்தையும் மறந்து விட்டாள். அதை ஜீரணிக்கவே அவனுக்கு நேரமெடுக்க, எல்லோரும் எழும் நேரம் விசயத்தைச் சொல்லலாம் என்று காத்திருந்து அழைத்தான்.
“சொல்லுங்க அதியன்”
“மகா முழிச்சுட்டா”
“டாக்டர் என்ன சொன்னாங்க?”
“இப்ப சிடி ஸ்கேன் எடுக்க போயிருக்காங்க. அவளுக்கு எதுவுமே ஞாபகம் இல்ல யதுநந்தன்”
“வாட்? ஏன்?”
“தெரியல.. டாக்டர் செக் பண்ணிட்டு சொல்லுறேன்னு சொல்லிட்டாங்க.”
“நிஜம்மாவே ஞாபகம் இல்லயா?”
“ஆமா.. அவ பேரே என்னனு தெரியாம கேட்குறா”
“ஓஹ்.. நாங்க எல்லாரும் கிளம்பிட்டோம். சொல்லி கூட்டிட்டு வர்ரேன்” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு, காரில் ஏறினான்.
“என்னாச்சு?” என்று வனிஷாவும் பரமேஸ்வரியும் கேட்க, அதியன் கூறியதை அப்படியே கூறினான்.
“மறந்துட்டாளா?”
“ம்ம்.. அங்க வந்து உங்கள எல்லாம் தெரியலனு சொன்னா பெருசா ரியாக்ட் பண்ணி ரிஸ்க் எடுக்காதீங்க. டாக்டர் கிட்ட பேசிட்டு பார்த்துக்கலாம்”
யதுநந்தன் அழுத்தமாக கூறி விட்டு, காரை கிளப்பினான்.
மருத்துவமனை வந்து சேர, ஸ்கேன் முடிந்து அப்போது தான் மகாலட்சுமி அறைக்கு வந்தாள்.
“ரிப்போர்ட் வந்ததும் கூப்பிடுறோம்” என்று கூறி விட்டு, நர்ஸ் சென்று விட்டார்.
அதியன் அவளுக்கு எதாவது வேண்டுமா என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது, கதவை திறந்து கொண்டு முதலில் பரமேஸ்வரியும் ஸ்ரீனிவாசனும் வந்தனர்.
அவர்களை புரியாமல் பார்த்தவள், அடுத்தடுத்து புது ஆட்கள் வரவும் சட்டென அதியனின் சட்டையை பிடித்துக் கொண்டு பதட்டமாக பார்த்தாள்.
அவள் பிடித்திருந்ததை ஒரு முறை பார்த்தவன், “இவங்க உன் ஃபேமிலி தான்” என்றான்.
நிமிர்ந்து பார்த்தவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கண்களில் கலக்கம் தெரிய, “உன் அம்மா அப்பா மகா” என்றான்.
பரமேஸ்வரி மலர் இருவரும் இருக்க, இதில் யார் அவளுடைய தாய் என்று புரியாமல் பார்த்தாள்.
உள்ளே வந்த எல்லோரையும் பார்த்து அவள் பயந்து போயிருப்பது, ஒரு மாதிரியாகி விட்டது எல்லோருக்குமே. பரமேஸ்வரிக்கு, மகள் தன்னை அடையாளம் தெரியாமல் முழிப்பதை பார்த்து மனம் பிசைந்தது.
“மகா..” என்றழைத்தபடி பரமேஸ்வரி அருகே செல்ல, அவர் தான் தாயாக இருக்க முடியும் என்று ஊகித்தாள் மகாலட்சுமி.
“இப்ப வலி இருக்கா? டாக்டர் என்ன சொன்னாங்க?”
அவள் சட்டென பேச முடியாமல் தலையை மட்டும் ஆட்டி விட்டு நிமிர்ந்து அதியனை பார்க்க, “இன்னும் ரிப்போர்ட் வரல அத்த. வந்ததும் கூப்பிடுவாங்க. இப்ப பசிக்குதுனு சொன்னா.. சாப்பாடு கொடுங்க” என்றான்.
பரமேஸ்வரி உடனே எடுத்து வந்திருந்த உணவை தட்டில் எடுத்து வைக்க, ஸ்ரீனிவாசன் மகள் அருகே வந்து அவளது தலையை வருடி விட்டார். மகாலட்சுமி எல்லோரையும் பார்த்தாளே தவிர, வாயைத்திறந்தாள் இல்லை.
அவளது முகம் மிரண்டு போயிருப்பது போல் இருந்தது. மலர் அவளை பார்த்து இதமாக புன்னகைத்து விட்டு, “நான் உனக்கு சித்தி” என்று தன்னைத்தானே அறிமுகம் செய்து கொண்டார்.
மகாலட்சுமி தலையை ஆட்டி விட்டு, “எனக்கு யாரையும் தெரியல. சாரி” என்றாள்.
“பரவாயில்லமா.. எங்களுக்கு உன்னை தெரியுமே.. நீ எங்க வீட்டு பொண்ணு. அதுவும் இல்லாம உன் வீட்டுக்காரும் இருக்காரு. எல்லாத்தையும் திரும்ப ஞாபகத்துக்கு கொண்டு வந்துடலாம். பயப்படாத” என்றார் மலர்.
அவர் பேச்சில் மகாலட்சுமிக்கு சற்று தைரியம் கூட வந்தது. மற்றவர்கள் போல் அவர் ஆராய்ச்சியாய் பார்க்கவில்லை. அய்யோ பாவம் என்று கவலையாய் பார்த்து வைக்கவில்லை. புன்னகையுடன் தன்னம்பிக்கை தரும் விதமாய் பேச, அது தான் அவளுக்கும் வேண்டி இருந்தது.
மெலிதான புன்னகையுடன் சம்மதமாக தலையசைத்தாள்.
இன்னும் சட்டையை பிடித்திருந்தவளின் கையே விலக்கிய அதியன், “சாப்பிடு. நான் போய் டேப்லட்ஸ் வாங்கிட்டு வர்ரேன். சாப்பிட்டதும் போடச்சொல்லி இருக்காங்க” என்று கூறி விட்டு வெளியே சென்று விட்டான்.
மகாவிற்கு உலகில் அதிகம் தெரிந்த ஒருவன் அவனே. அவன் விலகியதும் மீண்டும் மகாவின் முகம் பதட்டமானது. என்னவோ அதியனும் அன்று புதிதாக அறிமுகமாகி இருந்தாலும் அவனிடம் தான் முதலில் அறிமுகமாகி இருந்தாள். இப்போது பார்த்த முகங்கள் பழகும் முன் அவன் விலகிச் சென்றது என்னவோ போல் இருந்தது.
கண்கலங்க அவள் பார்க்க அவளை அந்த நிலையில் பார்க்க வனிஷாவுக்கே சற்று வருத்தமாக இருந்தது.
“இவ நடிக்கல” என்று வனிஷா யதுவின் காதில் முணுமுணுக்க, அவனும் ஆமோதிப்பாய் தலையசைத்தான்.
“சாப்பிடு மகா.. ஊட்டி விடவா?” என்று பரமேஸ்வரி கேட்க, மறுப்பாக தலையசைத்தவள் கையை கழுவி விட்டு தானே உண்டாள்.
பார்வை நொடிக்கொரு முறை அதியன் வருகிறானா என்று வாசலை தொட்டு மீண்டது. உணவின் ருசியைக் கூட உணர முடியவில்லை. பசிக்கு உள்ளே தள்ளிக் கொண்டாள்.
“நான் கிளம்புறேன் ம்மா. ஆஃபிஸ் க்கு லேட் ஆகிடும். நீங்க பார்த்துக்கோங்க.” என்று மலரிடம் கூறி விட்டு வனிஷாவும் யதுநந்தனும் கிளம்பி இருந்தனர்.
மகாவிடம் இப்போது பேசத்தோன்றவில்லை. அவள் தான் எல்லாம் மறந்திருக்கிறாள். அவர்கள் அல்லவே. எல்லாம் மறந்து இயல்பாய் பேச வரவில்லை. அதற்காக நோயாளியாய் இருப்பவளை சந்திக்காமலும் இருக்க முடியாது. அதனால் கிளம்பி வந்தவர்கள், அவள் நிலையை பார்த்து விட்டு ஒன்றுமே பேசாமல் கிளம்பி விட்டனர்.
மருந்துகளை வாங்கிக் கொண்டு அதியன் திரும்பி வர, இருவரும் வழியில் மறித்து நின்றனர்.
“எதுனால இப்படி ஆச்சுனு எதாவது சொன்னாங்களா?”
“ம்ஹூம்”
“வேற எதுவும் பெருசா இருக்காதுல?” என்று வனிஷா கேட்க, “இருக்காதுனு தான் டாக்டர் சொல்லுறாங்க. ரிப்போர்ட் வந்தா தான் தெரியும்” என்றான்.
“ரிப்போர்ட் வந்தா கால் பண்ணுங்க. இவள டிராப் பண்ணிட்டு வந்துடுறேன்”
இருவரும் அலுவலகம் நோக்கி செல்ல, வனிஷா யோசனையுடன் வந்தாள்.
“என்ன?”
“அவ கன்னத்த பார்த்தீங்களா? ரொம்ப வீங்கி இருக்கு”
“அந்தளவுக்கு அடிச்சுருக்க நீ”
யது ஒரு முறைப்போடு கூறினான்.
“நான் அடிச்சது இல்ல. அதுக்கு தான் மருந்து போட்டாச்சே… ஒரு வேளை அதியன் அடிச்சுருப்பாரோ? ஏன்னா ரொம்ப பெருசா வீங்கி இருக்கு”
“என்ன சொல்லுற நீ?”
“அப்படித்தான் தெரியுது அத்தான். நடந்தத பார்த்து தாங்க முடியாம அவள அதியனும் அடிச்சுருக்கனும். இல்லனா இவ்வளவு பெருசா வீங்கி இருக்க வாய்ப்பில்ல”
“ஏன் கீழ விழுந்ததுல கூட வீங்கி இருக்கலாம்ல?”
“அது வேற இருக்கோ? அப்படியும் இருக்கலாம். ஆனா இப்படி யாரையுமே தெரியாம அவ முழிக்கும் போது என்னனு கேட்குறது? முதல்ல அவ கிட்ட பேசவும் தோணல. நேத்து அவ பண்ணத நான் மறக்கலயே. ஆனா அவ மறந்து தொலைச்சுட்டா.”
“அதுவும் சரி தான். கோபமா இருந்தாலும் எல்லாத்தையும் மறந்தவ கிட்ட காட்ட கூடாது.”
“அதான் அவள சும்மா விடுறேன். இல்லனா நடு ராத்திரி வெளிய போய் உசுர வாங்குறது தான் உன் வேலையானு பிடிச்சு திட்டி விட்டுருப்பேன்”
“அதுவும் ஹாஸ்பிடல்ல தான் ரெண்டு தடவையும் இருக்கா. என்ன தான் பண்ணுறதுனு தெரியல”
இருவரும் பேசிக் கொண்டே அலுவலகம் வந்து விட்டனர். வனிஷாவை விட்டு விட்டு, நேராக அவனுடைய அலுவலகம் சென்று வேலைகளை பார்த்து விட்டு, கடைகளையும் பார்க்க ஆரம்பித்தவனுக்கு, நேரம் போனதே தெரியவில்லை.
கைபேசியை கவனித்தவன், அதில் அதியனின் தவற விட்ட அழைப்பு இருக்க, உடனே திருப்பி அழைத்தான்.
“கொஞ்சம் பிசியா இருந்தேன் அதியன். டாக்டர் என்ன சொன்னாங்க?”
“எந்த பிரச்சனையும் இல்லனு சொல்லிட்டாங்க. எப்ப வேணா எல்லாம் ஞாபகம் வரலாமாம்”
“தாங்க் காட். வீட்டுக்கு எப்ப போகலாம்னு சொன்னாங்க?”
“இன்னைக்கு ஈவ்னிங்கே போகலாம்னு சொல்லிட்டாங்க”
“சரி கூட்டிட்டு வாங்க”
“நந்தவனம் வரல. நேரா எங்க வீட்டுக்கே போக போறேன்”
“ஏன்?”
“அவ எல்லாரையும் விட்டு ஒதுங்குறா. ரொம்ப ஃபோர்ஸ் பண்ண வேணாம்னு தோனுது.”
“ஓஹ்.. சரி அங்கயே கூட்டிட்டு போங்க. அத்த தான் அழுதுட்டே இருக்காங்க. உங்கப்பா என்ன சொன்னாரு?”
“அவரால உடனே அங்க இருந்து கிளம்ப முடியாது யது. அதனால வரவேணாம்னு சொல்லிட்டேன். வந்தாலும் இவ பயந்துட்டு பேச மாட்டா. ப்ச்ச்”
“என்னாச்சு?”
“எனக்கு இவள இப்படி பார்க்க என்னவோ போல இருக்கு”
“எங்க இருக்கீங்க?”
“ஹாஸ்பிடல்ல.. அவ தூங்கிட்டு இருக்கா. நான் வெளிய உட்கார்ந்துருக்கேன்”
“வேற யாரு இருக்கா?”
“அத்தையும் அம்மாவும்”
“சரி நான் அங்க வர்ரேன்”
அழைப்பை துண்டித்தவன், உடனே கிளம்பிச் சென்றிருந்தான்.
அதியன் கேண்டீனில் அமர்ந்திருக்க, இருவருக்கும் தேநீரை வாங்கிக் கொண்டு அமர்ந்தான் யதுநந்தன்.
சற்று முன்பு தான் பாட்டி தாத்தாவும், வசந்தாவும் வந்து சேர்ந்தனர். மற்றவர்களை அனுப்பி விட்டு, வசந்தாவும் பரமேஸ்வரியும் மட்டும் அங்கு இருந்தனர். அவர்களை மகாவிற்கு துணையாக விட்டு விட்டு, அதியன் தனியாய் வந்து விட்டான்.
“குடிங்க” என்று தள்ளி வைக்க, அதியன் மறுக்காமல் எடுத்துக் கொண்டான்.
“டாக்டர் கிட்ட நல்லா விசாரிச்சீங்களா?”
“ம்ம்.. எப்ப வேனா ஞாபகம் வரலாம்னு சொல்லுறாங்க”
“இப்ப ஏன் போச்சாம்?”
“அதிர்ச்சியா இருக்க சான்ஸ் இருக்குனு சொன்னாங்க. அடி பலமா பட்டாலும் ஆபத்தில்ல. ஆனா மறந்தது சீக்கிரம் நினைவுக்கு வந்துடுமாம்”
“நாம ஞாபக படுத்தலாமா?”
“அதையும் கேட்டேன். தாராளமா பண்ணுங்கனு சொல்லிட்டாங்க. இதுல நான் வேற.. பழசை எல்லாம் ஞாபகப் படுத்துனா ஆபத்து வரும்னு சொல்லுவாங்களேனு கேட்டா சிரிக்கிறாங்க. அதெல்லாம் கியூரியாசிட்டிக்காக டிராமா மூவில சொல்லுறது. அது போல எல்லாம் எதுவும் நடக்காதுனு சொல்லிட்டாங்க”
“அப்ப பேசிப்பாருங்க. அதான் டாக்டரே சொல்லியாச்சே”
“என்னனு பேசுறது?” என்றவனிடம் பெருமூச்சு.
யதுநந்தன் அவனை கேள்வியாக பார்த்தான்.
“நான் வேற நேத்து அவள அடிச்சுட்டேன்” என்று கூற, யது அமைதியாக இருந்தான்.
“என்ன? சாக் ஆகல? தெரியுமா?”
“நிஷா பார்த்துட்டு சொன்னா.”
“வனிஷா ரொம்ப புத்திசாலி இல்ல?”
அவளைப் பற்றிப்பேசவுமே யதுவின் முகத்தில் புன்னகை அரும்பியது. ஆமோதிப்பாய் தலையசைத்தான்.
“கன்னம் வீங்கி இருக்க சைஸ் பார்த்துட்டு நீங்க தான் அடிச்சுருப்பீங்கனு சொன்னா.”
“என் மேல அவ்வளவு நம்பிக்கையா?”
“உங்க பொண்டாட்டி பண்ணதுக்கு நீங்க கோபப்டபடாம இருந்தா தான் தப்பு. அத தான் வனிஷாவும் சொன்னா. பட் அவளுக்கு சொன்னது தான் உங்களுக்கும் சொல்லுறேன். கோபம் வரலாம். அத காட்ட கை நீட்டுறது தப்பு. இனிமே இப்படிப்பண்ணாதீங்க.”
அதியன் சம்மதமாய் தலையசைத்து விட்டு, சில நொடிகள் மௌனம் காத்தான்.
“உங்க கிட்ட ஒன்னு கேட்கட்டுமா யது?”
“கேளுங்க”
“மகா கூட நடக்க இருந்த கல்யாணம் நின்னதுல எதாவது வருத்தம் இருந்ததா?”
யது மறுப்பாக தலையசைத்தான்.
“அப்படி எல்லாம் எதுவும் இல்ல”
“ஆனா நீங்க சம்மதிச்சு தான கல்யாணம் ஏற்பாடாச்சு?”
“நான் எங்க சம்மதிச்சேன்? அம்மா கைய காட்டுனாங்க. சரினு ஒத்துக்கிட்டேன். மத்தபடி கல்யாணத்துல பெரிய ஆர்வமும் இல்ல. மகாலட்சுமிய மனைவியா நினைச்சதும் இல்ல. சின்ன பிள்ளையில இருந்து கூட வளர்ந்த பொண்ணு. அம்மா அப்பா எல்லாருக்கும் விருப்பம். அதுனால எதுவும் யோசிக்காம விட்டுட்டேன்”
“அதான் உடனே வனிஷாவ கல்யாணம் பண்ணிட்டீங்க போல?”
“அது வேற”
“அதுவும் வீட்டுல இருக்கறவங்க சொல்லி தான நடந்தது?”
“இருக்கலாம். உங்கள மாதிரி லவ் மேரேஜ் பண்ண எனக்கு சான்ஸ் கிடைக்கலயே”
யது கையை விரிக்க, அதியன் அவனை முறைத்து வைத்தான். அதற்கு யது புன்னகைக்க, “எதாச்சும் சொல்லிடப்போறேன்” என்றான்.
“சொல்லுங்க. கேட்போம்”
“மகா போனதுல கவலை இல்ல. ஓகே. ஆனா கல்யாணத்தன்னைக்கு உங்க முகத்துல கோபம் தெரிஞ்சதே. ஏன்?”
“கோபம் வராம எப்படி இருக்கும்? அப்ப தீபா சொல்லும் போது, அவ உங்கள விரும்புறானு தான் நினைச்சேன். இத முன்னாடியே சொல்லி இருந்தா என்ன? எதுக்காக என்னை கூட்டிட்டு வந்து இப்படி அசிங்க படுத்திட்டு ஓடிப்போகனும்னு கோபம். லவ் பண்ணுறத ஓபனா பண்ணிருக்கலாம்னு நினைச்சேன்.”
“லவ் பண்ணி கிழிச்சோம்.” என்று அதியன் கடுப்பாய் கூற, யதுவுக்கு சிரிப்பு வந்தது.
“உங்க காதல் கதை காவியக்கதை தெரியுமா?”
“இது தான் காவியமா?”
“இல்லையா பின்ன?”
“திரும்பவும் சொல்றேன். மகாவுக்கு அப்புறம் உங்க மேல தான் கோபம் அதிகமா வருது”
“நிஷா இத கேட்டா உங்கள உண்டு இல்லனு ஆக்கிடுவா”
“எதுக்கு?”
“மகா மாதிரி என்னையும் லவ் பண்ணுறேன்னு சொல்லுறீங்களே அதுக்கு தான்”
முறைக்க நினைத்தவன், முடியாமல் சிரித்து விட்டான்.
“உங்கள எவ்வளவு அமைதியான ஆள்னு நினைச்சேன். ஆனா நல்லா பேசுறீங்க”
“நான் அமைதி தான். நிஷா இருக்காளே.. பேசிப்பேசி என்னையும் பேச வச்சுட்டா.. வீட்டுக்குள்ள என்னை போலவும் வனிஷா போலவும் அமைதியான ஆள பார்க்கவே முடியாதுனு எல்லாம் சொல்லிட்டு இருப்பாங்க”
“வனிஷாவும் நீங்களும் லக்கி”
“நீங்க லக்கி இல்லயா?”
“தெரியலயே”
“பழசை எல்லாம் விடுங்க அதியன். நேத்து சொன்னது தான் இப்பவும் சொல்லுறேன். இப்ப உங்க வாழ்க்கையில மகாலட்சுமி மனைவிங்குற இடத்துக்கு வந்துட்டா. அத உணர்ந்து வாழுங்க. முன்னாடி நடந்தத பிடிச்சுட்டே இருந்தா, இனி வரப்போற வாழ்க்கையில எதையும் அனுபவிக்க முடியாது”
அதியன் தலையசைத்தாலும் உள்ளே யோசனை தான்.
நேற்று வெளியே நின்று யது இதைத்தான் பேசிக் கொண்டிருந்தான். அவன் மகாவின் பக்கமிருந்த விசயங்களை எடுத்துச் சொல்லவும், அதியனுக்கே சற்று பொறுமையாக அவளிடம் பேசி பார்க்கத் தோன்றியது. எல்லாம் ஒரு நிமிடம் தான். அதற்குள் உள்ளே இருந்து வனிஷா அலறிய சத்தம் காதில் விழுந்து விட்டது. அதியனின் பொறுமையை மகாலட்சுமி மொத்தமாய் உடைத்து விட்டிருந்தாள்.
“அவளுக்கு முதல்ல எல்லாம் ஞாபகம் வரட்டும். நாளைக்கு பாஸ்போர்ட் எடுக்க போகனும். அப்புறம் பார்த்துக்கலாம்”
யதுவும் தலையாட்டி விட்டு எழுந்து கொண்டான். இருவரின் தேநீர் கோப்பைகளும் காலியாகி இருந்தது.
தொடரும்.