Loading

 

“அம்மாவுக்கு எல்லாம் வாங்கி கொடுக்கனும்னே இந்த ஐடி பக்கம் வந்தேன். அதே போல வாங்கியும் கொடுத்தேன். தாத்தா தான் திட்டுவார். பணத்த பத்திரமா வைனு. பாட்டி நகையா வாங்குனு சொல்லுவாங்க. ஆனா எனக்கு அதுல இன்ட்ரஸ்ட்டே இல்ல. அம்மா அடம் பிடிச்சதால தான், இப்ப நான் போட்டுருக்க நகைய கூட வாங்குனேன். எனக்கு ஒரு கார் வாங்கனும்னு ஆசை.. அத வாங்க சேவ் பண்ணிட்டு இருக்கேன். அப்புறம்…”

மனதில் இருந்ததை எல்லாம் வனிஷா கொட்டிக் கொண்டிருக்க, யது அவளை குறுக்கிடாமல் அமைதியாய் தலையாட்டி கேட்டுக் கொண்டிருந்தான். பேசிப்பேசி ஓய்ந்தவள், அவன் மீது சாய்ந்து உறங்கி இருந்தாள்.

யதுநந்தனுக்கு தான் தூக்கம் வரவில்லை.

இது கூட்டுக் குடும்பம். அதில் ஒருவருக்கு ஒன்று என்றால், எல்லோரும் நிற்போம் என்றெல்லாம் வெளியே சொல்லிக் கொள்கின்றனர். ஆனால், வீட்டில் ஒரு சிறு பெண் தந்தையின் இழப்பை உணர்ந்து, தவித்து துடித்துக் கொண்டிருந்திருக்கிறாள். அது சிறியவர்களின் கண்ணுக்கு தான் தெரியவில்லை. பெரியவர்கள் கூட அதை கவனிக்கவே இல்லையே.

இதில் எடுத்துக் காட்டாக வேறு கை காட்டுவார்கள்.

“பார் வனிஷா எப்படி படித்து நிறைய மதிப்பெண்களை எடுக்கிறாள். நீ விளையாட்டில் கவனமாகிறாய்” என்று திட்டு வேறு விழும்.

அவள் தன் குழந்தை பருவத்தை தொலைத்துக் கொண்டிருந்ததை யாருமே உணரவில்லை. பிறகு எதற்கு இந்த கூட்டுக் குடும்ப பெயர்?

யதுநந்தனும் கூட வனிஷாவை பல முறை விளையாட அழைத்திருக்கிறான். எல்லோருக்கும் சொல்லும் பதிலையே அவனுக்கும் சொன்னதால், அவனும் ஒரு கட்டத்தில் ஒதுங்கிக் கொண்டான்.

அவன் படித்த கல்லூரியில் அவள் சேர்ந்திருக்கிறாள் என்பது, அவனுக்கு வெறும் செய்தியாக இருந்தது. அவன் வேலை பார்த்ததை விட, பெரிய நிறுவனத்தில் வேலையில் சேர்ந்திருக்கிறாள் என்பது அவனுக்கு மகிழ்ச்சியே. ஆனால் அதற்காக அவள் நிறைய இழந்திருக்கிறாள் என்று இன்று புரிந்தது.

அவளை இனி இப்படி எதற்காகவும் ஒதுங்க விடக்கூடாது என்று முடிவு செய்தவன், தூங்காமல் விழித்திருந்தான்.

ஒரு வழியாய் தூக்கம் வந்து கண்ணை மூட, கதவு தட்டும் சத்தம் கேட்டது.

“யது..”

வசந்தாவின் அழைப்பு காதில் விழ, உடனே வனிஷாவை தள்ளி படுக்க வைத்து விட்டு எழுந்து வந்து கதவை திறந்தான்.

“என்னமா?”

“மகாவ காணோமாம்”

“காணோமா? எங்க போனா?”

“தெரியல. அதியன் மகாவ தேடி இங்க வந்துருக்கான். உன் அப்பா பார்த்துட்டு என்ன ஏதுனு விசாரிக்கும் போது தான் தெரியுது. சாயந்தரம் போனவ வீடு திரும்பல. இங்க வந்துட்டா போலனு நினைச்சு பார்க்க வந்துருக்கான். அப்ப தான் விசயம் தெரியுது”

‘இவளுக்கு இதே வேலையா போச்சு’ என்று மனதில் கடுப்பாக நினைத்தாலும், “எங்க அவங்க?” என்று விசாரித்தான்.

“வெளிய தான் இருக்காங்க. உங்கப்பா இப்ப தான் தேடக்கிளம்புறாரு”

“நான் சேன்ஜ் பண்ணிட்டு வர்ரேன்” என்றவன், உடனே சென்று உடையை மாற்றிக் கொண்டான்.

அவன் கிளம்பும் சத்தம் கேட்டு, வனிஷா விழித்து விட்டாள்.

“இந்த நேரத்துல எங்க கிளம்புறீங்க?”

அவளது குரல் கேட்டு திரும்பியவன், “முழுச்சுட்டியா?” என்று கேட்டு அருகே வந்தான்.

நேரம் ஒன்றை தொட்டிருந்தது.

“மகாவ காணோம்”

“மறுபடியுமா?” என்று அவள் கேட்ட விதத்தில், யதுவுக்கு சிரிப்பு வந்தது.

“ஆமா. இப்ப அதியனும் அவள தேடிட்டு இருக்கார்”

“என்ன ஆச்சாம்?”

“அம்மா கிட்ட கேட்டுக்கோ. நானும் போய் பார்க்குறேன். அத்த அழுதுட்டு இருக்காங்க போல. பார்த்துக்க” என்றவன் அவள் தலையை பிடித்து ஆட்டி விட்டுக் கிளம்பி விட்டான்.

உடனே எழுந்து, வேறு உடைக்கு மாறி வெளியே வந்தாள் வனிஷா.

வாசலில் பரமேஸ்வரியின் அழுகை சத்தம் கேட்டது.

‘இவங்கள அழ வைக்கிறதே வேலையா வச்சுருக்காளே’ என்று சலித்துக் கொண்டவள், அருகே சென்றாள்.

“பெரியம்மா.. அழாதீங்க. எங்கயாச்சும் கோச்சுக்கிட்டு போய் உட்கார்ந்து இருப்பா. வந்துடுவா”

“இவ ஏன் இப்படி இருக்கா வானு?” என்று அவர் தாங்க முடியாமல் கேட்க, அவள் வசந்தாவை பார்த்தாள். மலரும் அங்கு தான் நின்றிருந்தார்.

“அண்ணி.. அழுது என்னாக போகுது? அதான் தேடிப்போயிருக்காங்கள்ள? கூட்டிட்டு வந்துடுவாங்க” என்று வசந்தா ஆறுதல் கூறினார்.

“போன் பண்ணி பார்த்தீங்களா?” என்று வனிஷா கேட்க, “ஸ்விட்ச் ஆஃப்னு வருது” என்றார் மலர்.

சில நொடிகள் நின்றவள், உடனே உள்ளே சென்று தன்னுடைய மடிக்கணினியை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

“என்ன பண்ணுற வானு?”

“மகா நம்பரோட லாஸ்ட் லொகேஷன் கிடைக்கிதானு பார்க்குறேன்மா.”

அவள் சொன்னதும் பரமேஸ்வரிக்கு உயிர் வந்தது. உடனே எழுந்து அவளருகே வந்தார்.

“அப்படி பார்க்க முடியுமா?” என்று பரபரப்பாய் கேட்க, “பார்க்கலாம் பெரியம்மா.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றாள்.

சில நிமிடங்கள் பதட்டத்தில் கரைய, இடத்தை கண்டு பிடித்து விட்டாள் வனிஷா.

“அதியன் வீட்டுக்கு பக்கத்துல தான் காட்டுது” என்றவள், உடனே யதுவை அழைத்து விசயத்தை கூறினாள்.

அதுவரை எங்கென்று தெரியாமல் சுற்றியவர்கள், வனிஷா சொன்ன இடத்தை நோக்கிக் கிளம்பினர்.

அந்த தெரு மொத்தமும் அடங்கி இருக்க, யார் வீட்டு கதவைத் தட்டி விசாரிப்பது என்று புரியவில்லை.

வரிசையாய் வந்த வாகன சத்தத்தில் சன்னல் கதவை திறந்து எட்டிப்பார்த்தார் ஒருவர்.

“யாருபா நீங்க?” என்று அதட்டலோடு கேட்க, அதியன் அவரிடம் ஓடினான்.

“சார்.. இந்த பொண்ண பார்த்தீங்களா?” என்று மகாவின் படத்தை காட்ட, “இந்த பொண்ணா.. ஆமா.. எட்டு மணி இருக்கும். பைக்ல மோதி விழுந்துடுச்சு” என்றார்.

அதியன் பதறி விட்டான்.

“இப்ப எங்க?”

“ஆம்புலன்ஸ வர வச்சு கூட்டிட்டு போயிட்டாங்க. எந்த ஆஸ்பத்திரினு தெரியலயேபா”

“அந்த பைக் காரன்?” என்று யது கேட்க, “அவன் நல்லவனா தான் தெரிஞ்சான். தண்ணிய எல்லாம் ஊத்தி எழுப்ப பார்த்தான். அந்த பொண்ணு தான் கண்ண திறக்கல. அதுனால ஹாஸ்பிடலுக்கு அனுப்பிட்டு அவனும் பின்னாடியே போயிட்டான்.” என்றார்.

“எங்க விழுந்தாங்கனு தெரியுமா?”

“அந்த கல் மேல” என்று கையை காட்டினார்.

உடனே அதியன் அங்கு ஓட, “ரொம்ப நன்றிங்க” என்றான் யது.

கல் பகுதியில் தேட, கைபேசி கிடந்தது.

“போலீஸ் கிட்ட போனா எந்த ஹாஸ்பிடல்னு சொல்லிடுவாங்க” என்று யது கூற, அங்கிருந்த காவல் நிலையத்தை அனுகினர்.

அவர்கள் விவரம் கேட்டு சொல்லும் போது, அதிகாலை மூன்று மணியாகி இருந்தது.

மருத்துவமனைக்கு ஓடிச் சென்றனர். அங்கு மகாலட்சுமியை விசாரிக்க அறையை காட்டினர்.

தலையிலும் இடது கையிலும் கட்டு போட்டிருக்க, டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது.

மருத்துவரை தேடி விசாரித்தனர்.

“பயப்படுற மாதிரி எதுவும் இல்ல. ஆனா கொஞ்சம் பெரிய அடி தான். சிடி ஸ்கேன் பார்க்கனும். காலையிலக்குள்ள கண் முழிச்சுடுவாங்க” என்று கூறினார்.

வீட்டில் இருப்பவர்களுக்கு விசயத்தை சொல்லி விட்டு, எல்லோரும் கிளம்பினர். ஒருவர் மட்டுமே இருக்க முடியும் என்று சொன்னதில், அதியன் மட்டும் தங்கினான்.

அப்போதே மகளை பார்க்கக் கிளம்பப் பார்த்த பரமேஸ்வரியை, கட்டுப்படுத்தித் தூங்க வைத்தனர்.

அதிகாலை வேலையில் திரும்பி வந்த யது, வனிஷாவை பார்த்தான். அமர்ந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்தாள்.

சத்தமில்லாமல் அவளை தூக்கி மெத்தையில் படுக்க வைத்து விட்டு, குளித்து விட்டு வந்தான்.

ஒரு மணி நேரத்தில் பொழுது விடிந்து விட, வனிஷா விழித்துக் கொண்டாள்.

“எப்ப வந்தீங்க?”

கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தவனிடம் கேட்டபடி எழ, “எப்பவோ வந்தாச்சு.. ஆஃபிஸ் கிளம்பனுமா?” என்று கேட்டான்.

“ஆமா.. நீங்க தூங்கலாம்ல?”

“அப்புறமா தூங்கிக்கலாம்”

“அவ எப்படி இருக்கா?”

“மயக்கம் தான். எந்திரிச்சா அதியன் கால் பண்ணுவாரு”

“நான் குளிச்சுட்டு வர்ரேன்” என்று கூறி விட்டு, குளிக்கச் சென்று விட்டாள்.

அவள் தயாராகும் வரை யது அமர்ந்து இருந்தான். கன்னத்தில் இருந்த காயத்தை மேக் அப் போட்டு மறைத்து விட்டாள்.

“நிஷா..”

“ம்ம்..”

“ஆஃபிஸ்ல நம்ம கல்யாண விசயத்த சொன்னியா?”

“சொன்னேனே”

“அப்ப லீவ் எப்ப போடுறதா இருக்க?”

இதை அவள் மறந்து விட்டாளே. அவனை திரும்பி பார்த்து அசடு வழிய சிரிக்க, அவன் முறைத்து வைத்தான்.

“இப்ப ப்ராஜெக்ட் முடியுற நேரம். கொஞ்சம் பிசி”

“அப்புறம்?”

“நீங்களும் வேலை பார்த்துருக்கீங்க தான? உங்களுக்குத் தெரியாதா?”

அவன் அவளை மேலும் கீழும் பார்க்க, “அடுத்த மாசம் கண்டிப்பா லீவ் எடுக்குறேன். ஓகே?” என்றவள் அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

“அதென்ன எப்பவும் கன்னத்துலயே கொடுக்குற? மத்த இடமெல்லாம் உன் கண்ணுக்கு தெரியலயா?”

“க்ரீம காலி பண்ணுற உங்களுக்கு தெரிஞ்சா போதாது?”

அவள் சிரிப்போடு கேட்க, அவனும் சிரித்து விட்டான்.

“ஒழுங்கா வாங்கி வைக்கிறீங்க. எனக்கு இன்னைக்கு நைட் வேணும். அதோட இனிமே என் மேக் அப் பொருள தொடவே கூடாது சொல்லிட்டேன்”

“அப்ப பால்கோவா தான் வேணுமா?” என்று கேட்டு அவளை ஒரு கையால் அணைக்க, “அய்யா சாமி.. ஆள விடுங்க.” என்று ஓடினாள்.

இருவரும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினர்.

“ஹாஸ்பிடல் போயிட்டு போகலாமா? கார்ல அத்தைய கூட்டிட்டுப் போகனும்”

“போகலாம். நேரமிருக்கு”

பரமேஸ்வரியும் பாட்டியும் தயாராகி இருக்க, அவர்களை காரில் ஏறச் சொன்னான். தாத்தாவும் ஸ்ரீனிவாசனும் பைக்கில் கிளம்ப தயாராக, வெற்றிவேலும் வசந்தாவும் மட்டும் வரவில்லை.

_______

அதிகாலை ஐந்தரை மணி..

அதியன் மகாலட்சுமியின் அருகே அமர்ந்திருந்தான். மனம் முழுவதும் குற்ற உணர்வு நிறைந்து இருந்தது. அவளை அடித்திருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டே இருந்தான்.

மனதில் பாரமேற அமர்ந்திருக்க, மகாலட்சுமி கண் திறந்தாள். அதியன் சற்று முன்னால் வந்து அவளை பார்த்தான்.

கண்ணை திறந்தவள் சுற்றிலும் பார்த்து விட்டு அவனையும் பார்த்தாள்.

யாரோ போல் அவள் பார்த்த பார்வையில், அதியன் புருவம் சுருக்கினான்.

“ஆர் யூ ஓகே? எங்கயாவது வலி இருக்கா?” என்று வினவ தலையை மறுப்பாக அசைத்தாள்.

“கொஞ்ச நேரம் தூங்கு. டாக்டர் ஆறு மணிக்கு தான் வருவாங்க”

“நீங்க… யாரு?” என்று சந்தேகமாக கேட்டு நிறுத்தினாள்.

அதியன் அவளை கூர்ந்து பார்த்து விட்டு, “நான் யாரா?” என்று கேட்டான்.

அவள் தயக்கமாக மேலும் கீழும் தலையசைக்க, அதியன் அதிர்ந்தான். ஆனால் உடனே அதை மறைத்துக் கொண்டு, “நீ யாருனு உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

முகம் சுருக்கி யோசித்தாள். மீண்டும் மீண்டும் யோசித்தாள். எதுவுமே நினைவு வரவில்லை.

“தெரியுமா?” என்று அதியன் மீண்டும் கேட்க, இடவலமாக தலையசைத்தவளுக்கு எதுவுமே விளங்கவில்லை.

சுற்றியும் பார்த்தாள். யாருமே இல்லை. அதியன் மட்டும் இருந்தான். உலகமே வெறுமையாக இருப்பது போல் தோன்ற, “நான்… யாரு?” என்று அவனிடமே கேட்டாள்.

அவளை ஆழமாக பார்த்தவனுக்கு குற்ற உணர்ச்சி அதிகரித்தது.

மகாலட்சுமி பதிலுக்காக அவனையே பார்க்க, “என் மனைவி” என்றான்.

“ஆ.. ஓஹ்..” என்று புரியாத பாவனையும் பிறகு புரிந்து கொண்ட பாவனையும் அவள் முகத்தில் வந்து போனது. உடனே எழ முயற்சித்தாள்.

அதியன் எழுந்து அவளை தூக்கி விட, “நான்… அது..” என்று தயங்கினாள்.

“என்ன? வாஸ் ரூம் போகனுமா?”

தலையை ஆட்டியவளுக்கு தயக்கமாக இருக்க, “வா..” என்று எழுப்பி அறையை விட்டு வெளியே அழைத்து வந்தான்.

அவளை அனுப்பி விட்டு வெளியே காவல் காத்து நின்றவன், அவள் திரும்பி வரவும் உடன் நடந்தான். மகா ஒரு முறை அதியனை நன்றாக பார்த்தாள்.

கணவன் என்கிறான். ஆனால் அவளுக்கு எதுவும் நினைவு வரவில்லையே. இந்த முகம் கூட புதியதாக தான் இருந்தது. தானாக யோசித்தவள் எதுவும் புரியாமல் போக, அவனை நன்றாக பார்த்தாள்.

“உங்க பேரென்ன?”

கண்ணை அழுந்த மூடித்திறந்தவன், “அதியன்” என்றான்.

“அதியன்… என் பேரு?”

“மகாலட்சுமி” என்றவனிடத்தில் நீண்ட பெருமூச்சு எழுந்தது.

“அதியன் மகாலட்சுமி” என்று தனக்குள் அவள் முணுமுணுக்க, அறை வந்திருந்தது.

உள்ளே சென்று அமர வைத்தவன், “உனக்கு எதுவும் ஞாபகம் இல்லையா?” என்று கேட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள், குழப்பத்துடன் மறுப்பாக தலையசைத்தாள். அவளும் யோசிக்கிறாள். ஆனால் ஒன்றும் நினைவு வரவில்லை. என்னவோ எல்லாமே அழிந்து விட்டது போல் இருந்தது.

‘மகாலட்சுமி.. நான் மகாலட்சுமி.. கல்யாணம் ஆகிடுச்சு. புருஷன் இருக்கார். ஆனா இதெல்லாம் எப்ப எங்க நடந்துச்சு? எப்படி நடந்துச்சு? முதல்ல நான் யாரு?’ என்ற கேள்விகள் மூளைக்குள் குடைந்து அதை தட்டி எழுப்ப முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தது.

“எனக்கு.. எல்லாமே வெள்ளையா இருக்கு.. உங்க முகம் கூட ஞாபகம் இல்ல” என்றவளின் குரல் கலங்கியது.

குழப்பத்தோடு, எதோ திக்கு தெரியாத காட்டில் விட்டது போல் பயமும் வந்தது. அது குரலை கலங்க வைத்தது.

“அதிர்ச்சியில மறந்துருக்கும். சரியாகிடும்” என்ற அதியனுக்கும் ஒன்றும் முழுமையாக தெரியவில்லை.

“அதிர்ச்சியா? என்ன அதிர்ச்சி?”

“அடி பட்ட அதிர்ச்சி”

உடனே கையை திருப்பிப் பார்த்தாள். அதில் இருந்த கட்டை அவள் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, “தலைய சொன்னேன்” என்றான்.

உடனே தலையை தொட்டுப் பார்த்தாள். அதில் கட்டு இருந்தது. அதை நன்றாக தொட்டுப் பார்த்தவள், “எனக்கு வலிக்கவே இல்லையே” என்றாள்.

‘தலையில அடி பட்டதுல மூளை குழம்பிடுச்சா? எல்லாமே மறந்து போச்சா? எதுவுமே ஞாபகம் வராதா?’ என்று தனக்குள்ளயே கேட்டுக் கொண்டாள்.

“பெயின் கில்லர் போட்டுருக்காங்க. அதான் வலிக்கல”

தலையை ஆட்டிக் கேட்டவளுக்குள், யோசனை ஓடியது. தன்னைப்பற்றி எதாவது நினைவு வருகிறதா என்று யோசித்துப் பார்த்தாள். எதுவுமே இல்லை என்று வந்தது.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
15
+1
25
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்