Loading

 

கை வளைவில் படுத்திருந்தவளை பார்த்து யது புன்னகைக்க, அவளோ காலியாக கிடந்த நைட் க்ரீமை டப்பாவை பார்த்து விட்டு முறைத்தாள்.

“என்ன திரும்ப முறைக்கிற?”

“டப்பாவே காலி..”

“ஆமா காலி”

“இப்ப தான் வாங்குனேன். இப்படியா காலி பண்ணுவீங்க? முகத்துக்கு மட்டும் தடவுறது. எத்தனை நாள் வச்சுருப்பேன் தெரியுமா? நீங்க என்னடானா…”

பாதியில் நிறுத்தி பல்லைக்கடித்தாள்.

“ம்ம்.. நிறுத்திட்ட.. சொல்லு.. முகத்துக்கு மட்டுமே தடவுனா காலி ஆகாது தான். ஆனா..”

பாய்ந்து அவன் வாயை அடைத்தவள் அதிகமாக முறைத்து வைக்க, அவனோ கண்கள் சுருங்க சிரித்தான்.

“போங்க அத்தான். பால்கோவா டப்பாவும் காலி பண்ணிடுறது. க்ரீம் டப்பாவும் காலி பண்ணிடறது”

அவளது சினுங்கலில் வாய் விட்டு சிரித்தான்.

“சிரிக்காதீங்க. ஒழுங்கா நாளைக்கு புதுசா வாங்கிட்டு வந்து கொடுக்குறீங்க. இல்ல…

“இல்லனா?”

“இல்லனா நோ பால்கோவா ஆமா”

“யாரு பர்மிஷன் கேட்டா?” என்றவன் அவள் இதழில் இதழ் பதிக்க, போலியாய் முறைத்தாள்.

“நீ எப்படி நிஷா இவ்வளவு சேட்டை பண்ணுற? எவ்வளவு அமைதியா இருப்ப நீ? ஆனா உள்ள இவ்வளவு பெரிய வாலுத்தனத்த மறைச்சு வச்சுருக்க”

“அது அப்படித்தான்.”

“எப்படித்தான்? நீ ஏன் யாரு கிட்டயும் பேசாம இருந்த? இயல்பா எவ்வளவு ஜாலியா பேசுற. ஆனா அநியாயத்துக்கு எங்கள விட்டு தள்ளி போனியே” என்று யதுநந்தன் குறையாக கேட்டான்.

“இப்ப இந்த விசயம் பேசியே ஆகனுமா?”

“எனக்கு தெரியனும். சொல்லு”

அவனது மார்பில் நன்றாக படுத்துக் கொண்டவள், “நான்‌ எப்ப இருந்து அப்படி ஆனேன்னு ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள்.

“சரியா ஞாபகம் இல்ல. ஆனா மாமா தவறி ஒரு ரெண்டு மூணு வருசத்துக்கு அப்புறம்னு நினைக்கிறேன்”

“அதான் காரணம்”

விசயம் புரிவது போல் இருக்க, அவளே சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தான்.

______

நந்தவனத்தில் முதலில் நடந்தது ஸ்ரீனிவாசனின் திருமணம் தான். தங்கைக்கு திருமணம் செய்த பிறகு தான் தன் திருமணம் என்ற ஸ்ரீனிவாசனை, நல்ல வரன்.. தட்டக்கூடாது என்று கூறி சம்மதிக்க வைத்து, பரமேஸ்வரியை திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் முடிந்த அடுத்த வருடமே செல்வகுமார் பிறந்து விட்டான். அடுத்த குழந்தை உடனே தோன்றி அழிந்தும் போனது. அதன் பின் வசந்தாவிற்கு திருமணம் செய்ய பேச்செழுந்தது. உடனே வசந்தா தன் காதல் விசயத்தை வீட்டில் சொல்லி விட்டார்.

முதலில் அதிர்ந்து கோபப்பட்டாலும் ,பிறகு அது யார் என்று விசாரித்தனர். வசந்தா தையல் வகுப்புக்கு சென்று கொண்டிருந்த காலம் அது. அந்த வகுப்பு நடக்கும் கட்டிடத்தின் அருகே தான், வெற்றி டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரும் இருந்தது. அங்கு சென்று வந்ததில், வசந்தா வெற்றியின் மீது காதல் வயப்பட்டார். சில நாட்களில் வெற்றிவேலும் காதலில் விழுந்திருந்தார். அந்த விவரம் தான் இப்போது பெற்றோரிடம் வந்தது.

முதலில் வெற்றிவேலைப்பற்றி நன்றாக விசாரித்தனர். ஒருவரும் வெற்றிவேலை குறை சொல்லவில்லை. புகழ்ந்து தள்ளினார்கள்.

வெற்றிவேலுக்கு அக்காவும் தங்கையும் உண்டு. தந்தை ஊதாரியாக சுற்ற, குடும்பத்தைத் தூக்கி சுமந்தது வெற்றிவேல் தான். படிப்பை நிறுத்தி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, குடும்பத்தையும் தாங்கி, அக்கா தங்கை இருவருக்குமே திருமணம் செய்து வைத்து விட்டார்.

அவருடைய வயதினர் எல்லோரும் பிள்ளை குட்டிகளோடு வாழ, அவர் மட்டும் இன்னும் குடும்பத்தை தாங்கிக் கொண்டிருந்தார்.

வெற்றிவேலின் குணம் நந்தகோபலனுக்கு பிடித்து விட்டது. சத்தியபாமா கூட ஒருவகையில் சரியாகி விட்டார்.

ஆனால் வெவ்வேறு இனம் என்பது பூதகரமாக கிளம்பியது.

முதல் எதிர்ப்பு வெற்றிவேலின் வீட்டிலிருந்து தான் கிளம்பியது. வெற்றிவேலின் அக்காவும் தங்கையும், தன் சகோதரனுக்கு திருமணம் செய்வதை அறவே வெறுத்தனர். அவன் தான் சரியாக சீர்வரிசை செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கு மனைவி குழந்தை என்று வந்து விட்டால், தங்களுக்கு ஒன்றும் மிஞ்சாது என்று கலைத்து விடப்பார்த்தனர்.

சில காலங்கள் வசந்தாவும் வெற்றிவேலும் அந்த குடும்பத்தோடு போராட வேண்டியிருந்தது. அது வசந்தாவின் வீட்டிலும் எதிரொலித்தது.

“நம்ம சொந்தக்காரவங்கள கூட நான் உனக்காக ஒதுக்கி வச்சுட்டு, இந்த கல்யாணத்த பண்ணலாம்னு தான் நினைக்கிறேன். ஆனா அவங்க வீட்டுல ஒத்துக்கலயேமா” என்று கூறி விட்டார் நந்தகோபாலன்.

வசந்தாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஒருநாள் தன் சகோதரிகளின் உண்மை முகத்தை வெற்றிவேல் அறிந்து கொண்டார். அதை அப்படியே வசந்தாவிடம் சொல்லி புலம்ப, அவர் தன் தந்தையை நாடினார்.

எல்லாம் கேட்ட நந்தகோபாலன், ஒரு முடிவுக்கு வந்து விட்டார்.

ஏற்கனவே நந்தவனம் இல்லம் கட்டிக் கொண்டிருந்தனர். இரண்டு வீடுகள் ஒன்றாக கட்ட முடிவு செய்தவர், இப்போது மேலும் இரண்டை கட்டினார்.

வசந்தாவுக்கும் வெற்றிவேலுக்கும் அத்தனை பேரின் எதிர்ப்பையும் மீறி திருமணத்தை முடித்து வைத்தார்.

வெற்றிவேல் இது வரை சம்பாதித்த பணத்தில் ஒரு வீட்டை வாங்கி, அதை குடும்பத்தினர் அனைவரின் பெயரிலும் எழுதி வைத்து விட்டு வெளியேறி விட்டார்.

அவரிடம் அப்போது அவரது கடை மட்டுமே இருந்தது. அதையும் பறித்துக் கொள்ளப்பார்த்த குடும்பத்தின் உறவை மொத்தமாக வெட்டி விட்டு, நந்தவனத்தில் வசந்தாவை திருமணம் செய்து கொண்டு குடியேறினார்.

அடுத்ததடுத்த வருடங்களில் கிருபாநந்தினியும் யதுநந்தனும் பிறந்தனர்.

வாழ்வு வண்ணமாக செல்லும் போதே, கோபிநாதனுக்கு மலர்விழியோடு திருமணம் முடிந்தது. நீண்ட வருடங்களுக்குப்பிறகு பரமேஸ்வரி மகாலட்சுமியை பெற்றார். அடுத்த வருடம் வனிஷாவும் பிறந்தாள்.

சந்தோசமாய் சென்று கொண்டிருந்த வாழ்வில், திடீரென சோகம் தாக்கியது. கோபிநாதன் நோய்வாய்பட்டார். வயிற்றில் அல்சர் என்றனர். இல்லை கேன்சர் என்றனர். லட்சம் லட்சமாய் செலவு செய்தாலும் கையை விரித்தனர்.

ஒருவருடம் நோயோடு போராடி விட்டு இறந்து போனார்.

தான் இருக்க மகனை பறி கொடுத்த சோகம், பெற்றோரை உலுக்கி விட்டது. குடும்பமே சோகத்தில் மூழ்கியது. கோபிநாதன் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். ஆனால் மலர்விழி அவ்வளவு படிக்கவில்லை.

அவரால் தனியாக வனிஷாவை வளர்க்க முடியாது என்பதால், பாட்டி தாத்தா அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டனர்.

மலர்விழியும் வனிஷாவும் பாட்டி தாத்தாவுடன் ஒரே வீட்டில் தங்கி விட, அவர்களது வீடு வாடகைக்கு விடப்பட்டது. அந்த பணம் தான் வனிஷாவின் கல்விக்கு உதவியது.

தந்தை இழந்த சோகத்தை சிறு பெண்ணான வனிஷா, சீக்கிரம் கடந்து விட்டாள். அவளது இயல்பான குறும்புத்தனங்களோடு சுற்றினாள்.

பத்து வயதில் அவள் ஒரு பொம்மையைக் கேட்டு அடம் பிடித்தாள். மகாலட்சுமியும் கிருபாநந்தினியும் அந்த பொம்மையை வைத்திருக்க, எனக்கும் வேண்டும் என்று கேட்டாள்.

மலர்விழி அவளை அதட்டவோ அடிக்கவோ இல்லை. அமரவைத்து அவளிடம் நிலையை விளக்கினார்.

அவளுக்கு தந்தை இல்லை. தாத்தா பாட்டியின் பணத்தில் வாழ்வது சற்று அதிகப்படி விசயம். அவர்களது கடைசி காலத்திற்கென்று இருக்கும் பணத்தை, ஏற்கனவே வனிஷாவுக்கும் மலருக்கும் செலவழிக்கிறார்கள். மலர்விழிக்கு வேலை எதுவும் தெரியாது. சம்பாதித்து மகளை படிக்க வைக்கவும் முடியாது. பாட்டி தாத்தாவின் பணத்தில் வாழும் போது, அவர்களுக்கு மேலும் தொல்லையாக அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்பது தவறு. முடிந்த வரை அவர்களுக்கு தொல்லையில்லாமல் வாழ்வது தான் நலம். இப்படி மேலும் பல விசயங்களை விளக்கி முடித்தார்.

எல்லாவற்றையும் கேட்டு முடித்த வனிஷா, தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள். அப்போது தான் தந்தை இல்லாதது எவ்வளவு பெரிய இழப்பு என்று புரிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களோடு விளையாடுவதை குறைத்தாள். அவர்களிடம் பொம்மை இருப்பதை பார்த்து ஏக்கமாக இருக்க, நிலைமை வாயை கட்டிப்போட்டு விட்டது. எதற்காக விளையாடி அந்த பொம்மைக்கு ஏங்க வேண்டும்? என்று யோசித்தவள், விளையாடுவதையே முற்றிலுமாக நிறுத்தினாள்.

மலர்விழி கூறியவைகளில், அவர் அதிகம் படித்து வேலைக்கு போயிருந்தால், இப்போது தாத்தா பாட்டியின் பணத்தில் வாழ வேண்டியிருக்காது என்பது, வனிஷாவை அதிகமாக தாக்கியிருந்தது.

“வானு.. வா விளையாடலாம்” என்று மற்றவர்கள் அழைத்தால், “நான் ஹோம் வொர்க் பண்ணனும்” என்று ஓடினாள்.

விளையாடத்தான் முடியவில்லை. படிக்கலாம் என்று முடிவு செய்தாள். முக்கியமாக, விளையாட்டிலிருந்து தப்பிக்கவே படிப்பை கையில் எடுத்திருந்தாள்.

எந்த நேரமும் படித்தவள், கொஞ்சம் கொஞ்சமாய் சுற்றுபுறத்தை உணர்ந்தாள். முக்கியமாக மலர்விழியின் கஷ்டங்களை உணர்ந்தாள்.

மலர்விழி, ஒரு நாள் கூட தாத்தா பாட்டியிடம் இது வேண்டும், இது வேண்டாம் என்று கூறியதில்லை. பிடிக்கும் பிடிக்கவில்லை என்று எதையும் சொன்னதில்லை. அவர்கள் எதைச்செய்தாலும் ஏற்றுக் கொண்டார். செய்யாவிட்டால் கேட்கவும் இல்லை.

மலர்விழியை பார்த்துப் பார்த்தே, வனிஷாவிற்குள் வைராக்கியம் வளர்ந்தது.

தன் தாய்க்கு, அனைத்தையும் வாங்கிக் கொடுக்கும் அளவு படிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தாள்.

அதன் விளைவு, அந்த வீட்டில் நன்றாக படிக்கும் இரண்டே பேர், யதுநந்தனும் வனிஷாவும் ஆகிப்போனார்கள்.

பள்ளியை முடிக்கும் போது, வனிஷாவிற்கு மேக் அப் பற்றி படிக்கத்தான் ஆசை. ஆனால் அதில் அவ்வளவு சீக்கிரம் நிறைய பணம் சம்பாதிக்க முடியாது என்று அறிந்து கொண்டாள்.

அப்போது யதுநந்தன் ஐடி பிரிவில் வேலை செய்து, நிறைய சம்பளம் வாங்குவதை பற்றித் தெரிய வர, உடனே அந்த பிரிவையே தேர்வு செய்து விட்டாள்.

“நீ மேக் அப் பத்தி படிக்க போறேன்னு சொல்லிட்டு இருந்த. இப்ப என்ன இது எடுக்குறேன்னு சொல்லுற?” என்று மலர்விழி கேட்க, “இப்ப இது தான்மா பிடிச்சுருக்கு. மேக் அப் என்ன? பார்லர் போனா போட்டுக்கலாம். எனக்கு ஐடி தான் வேணும். அது இருக்க காலேஜ் பத்தி தான் விசாரிக்கனும். யதுநந்தன் அத்தான் படிச்ச காலேஜ் கூட நல்ல காலேஜ் தான், ஆனா காசு தான் அதிகம். மெரிட்ல போனா தப்பிச்சுடலாம். அதுக்கு நல்ல மார்க் வேணும். அதுக்கு இப்போ படிக்க போறேன்” என்று கூறிவிட்டாள்.

அவளது பலநாள் ஆசையை மலர்விழிக்காகவே மாற்றியிருந்தாள்.

மொத்த குடும்பத்தையும் ஒதுக்கி வைத்து, தன் தாயை மட்டுமே மனதில் நிறுத்தியிருந்தாள். மற்றவர்களை குடும்பமாக பார்க்கும் போதும், குழந்தைகள் வேண்டியதை அடம்பிடித்து பெறும் போதும், காதையும் கண்ணையும் மூடிக் கொண்டு படித்தாள்.

அதன் விளைவு யதுநந்தன் படித்த அதே கல்லூரியில், பல உதவித்தொகையுடன் நுழைந்தாள்.

படித்து முடித்து அவளாக சம்பாதித்ததும், முதல் வேலையாக மலரிடம் தான் வந்து நின்றாள்.

“உங்களுக்கு என்னமா வேணும்?” என்று கேட்க, மலர் சிரித்தார்.

“எனக்கு என்ன வேணும்னா?”

“எதாவது.. உங்களுக்கு வாங்கனும்னு ஆசை இருந்து வாங்காம இருந்திருப்பீங்களே.. அது..”

“அப்படி எதுவும் இல்லயே”

உண்மையில், மலருக்கு அப்போது தனக்கு பிடித்தது எது என்றே மறந்து போனது. இத்தனை வருடங்களில் மறந்திருந்தார்.

வனிஷாவிற்கு அவரது பதிலில் கண்கலங்க பார்க்க, அடக்கிக் கொண்டாள்.

“சரி விடுங்க” என்று கூறியவள் தானாகவே யோசித்தாள். இரண்டு நாள் தீவிர யோசனைக்குப் பின், மலர்விழிக்கு அழகிய ஜிமிக்கி ஒன்றை வாங்கி வந்து கொடுத்தாள்.

கோபிநாதனின் மருத்துவ செலவில், கடைசியாக மலரின் தோடு விற்கபட்டது. அதன் பிறகு அவர் அணிந்த தோடு எல்லாம் பாட்டி கொடுத்தது தான்.

மகள் வாங்கி வந்ததை பார்த்தவர், “நல்லா இருக்கு வானு. ஆனா தங்கத்த பார்த்து வாங்கனும். சரி போட்டு காட்டு” என்று அவளிடம் நீட்டினார்.

“இது உங்களுக்குமா” என்றவளுக்கு, ஏனோ அன்று அழுகை வந்து விட்டது.

“எனக்கா?” என்று மலர் அதிர, அவரை கட்டிப்பிடித்துக் கொண்டு காரணமே இல்லாமல் அழுது தீர்த்தாள்.

அழுது முடித்து காரணம் சொன்னாள். அதைக்கேட்டு மலரும் அழுதிருந்தார். பிறகு இன்று வரை, மலருக்கு எது பிடிக்குமோ எது தேவையோ அது அனைத்தும் வனிஷா கேட்காமலே நிறைவேற்றிக் கொண்டிருந்தாள்.

வனிஷாவின் இயல்பு குணம் மலரிடம் மட்டும் அப்படியேதான் இருந்தது. எல்லோரையும் தள்ளி நிறுத்திக் கொண்டவளின் வாழ்வில் நிறைந்து இருந்தது மலர் மட்டுமே.

விசயத்தை சொல்லி முடித்தவளை, யதுநந்தன் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

அலட்சியமாய் முகம் திருப்புகிறாள். முகத்தில் அடித்தது போல் பேசுகிறாள். விளையாடக் கூட வராமல் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறாள். நிறைய படிக்கிறாள் என்ற திமிர். நிறைய சம்பாதிக்கிறாள் என்ற திமிர். வனிஷா என்றால் திமிர் பிடித்தவள் என்று பல முத்திரைகள் அவள் மீது குத்தப்பட்டிருந்தது .

அது அனைத்துக்கும் பின்னால், தந்தையின் இழப்பையும் தாயின் வலியையும் அவள் சுமந்து கொண்டிருந்திருக்கிறாள். அந்த சுமையை தாங்கிக் கொண்டு எவ்வளவோ ஓடியிருக்கிறாள். கடைசியாக நினைத்ததை சாதித்தும் இருக்கிறாள்.

யதுநந்தன் அவளை காற்றும் புகாதவாறு அணைத்துக் கொள்ள, அவளும் அவனில் புதைந்தாள். யாரிடமும் அவள் சொல்லாத ரகசியம். முதல் முதலாக வாய்விட்டு சொன்னதில், சோகம் தொண்டையை அடைப்பது போல் இருக்க, அதிலிருந்து தப்பித்து யதுவை அணைத்துக் கொண்டாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
27
+1
1
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்