Loading

 

யது வீட்டுக்குள் நுழைய, வனிஷா அவனை முறைத்து விட்டுத் திரும்பிக் கொண்டாள்.

அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது. அடக்கிக் கொண்டு அறைக்குள் சென்றான்.

“நிஷா.. இங்க வா” என்று உள்ளே சென்ற அடுத்த நொடி அழைக்க, வனிஷா காதில் வாங்காதது போல் அமர்ந்து இருந்தாள்.

“கூப்பிடுறான் பாருமா” என்று வசந்தா கூற, “போறேன் அத்த” என்றவளுக்கு வசந்தாவின் முன்பு கோபத்தை காட்ட பிடிக்கவில்லை.

உள்ளே சென்றதும், “என்ன வேணும்?” என்று எங்கோ பார்த்துக் கொண்டு கேட்டாள்.

“நீ தான் வேணும்” என்றவன் அவளை அணைக்க, உடனே தள்ளி விட்டாள்.

“தர முடியாது போங்க”

“இப்ப ஏன் கோபப்படுற?”

“திட்டிட்டு போயிட்டு இப்ப வந்து கொஞ்சுனா? மனசு மாறிடுவனா?”

“நீ தப்பு பண்ணா நான் சொல்லக்கூடாதா?”

“நான் பண்ணது தப்பே இல்லனு சொல்லுறேன். மறுபடியும் அதயே பேசுறீங்க”

“நிஷா.. அடிக்குறது தப்பு தான்”

அவனை நன்றாக முறைத்தவள், விறுவிறுவென அறையை விட்டு வெளியேறி இருந்தாள்.

மகாலட்சுமியை அடித்ததற்கு யதுநந்தன் வனிஷாவை திட்டி இருந்தான்.

“இப்படித்தான் கோபம் வந்தா கை நீட்டுவியா? என்ன பழக்கம் இது?” என்று அவன் முறைக்க, “அவ பேசுனதுக்கு அடிக்காம கொஞ்சுவாங்களா?” என்று வனிஷாவும் கேட்டாள்.

“உன்னை கொஞ்ச சொல்லல. அதுக்காக கை நீட்டுறது நல்ல பழக்கமும் இல்ல. தப்புனா தப்புனு சொல்லு. அடிக்குறது கெட்ட‌ பழக்கம்”

“தப்புனு வாய்ல சொல்லி திருத்துற அளவு அவ ஒன்னும் சாதாரண விசயத்த பேசல”

“உனக்கு புரியுதா? இல்லையா? எவ்வளவு பெரிய தப்பா இருந்தாலும் அடிக்காதனு சொல்லுறேன்”

“அவள அடிச்சது தப்புங்குறீங்க. அப்ப அவ பேசுனது சரியா?”

“அவ சரியா தப்பானு நான் ஏன் முடிவு பண்ணனும்? நீ தான என் பொண்டாட்டி. உன்னை பத்தி மட்டும் தான் நான் பேசுறேன்”

இதைக்கேட்டு வனிஷாவிற்கு கோபம் பறந்துவிடும் போல் இருக்க, இழுத்துப் பிடித்தாள்.

“இங்க பாருங்க.. அவ ஒன்னும் பச்ச மண்ணு கிடையாது. அவ பேசுனது தப்பு. அதுக்காக அடிச்சேன். அடிச்சு திருத்துறது தப்புனா, போலீஸ் கையில எதுக்கு லத்தி கொடுத்து வச்சுருக்காங்க? நான் அப்படி தான் அடிப்பேன். திரும்பி பேசுனா திரும்பி அடிப்பேன். அவ கன்னம் பழுக்குற வரை அடிப்பேன். பேசுறாளாம் பேச்சு. ‌ஸ்டுப்பிட். தப்புனா அப்படியே வச்சுக்கோங்க. நான் பாட்டிய பார்க்க போறேன்”

அவனை பேசவிடாமல் மொத்தமாய் கொட்டி விட்டு, வெடுக்கென திரும்பிச் சென்றிருந்தாள். அந்த முறைப்பு இன்னும் தொடர்ந்தது.

சாப்பிடும் போது எப்போதும் எதையாவது வழவழத்துக் கொண்டிருக்கும் வனிஷா, இன்று சாப்பிட மட்டுமே வாயைத்திறக்க, யது அவளை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தான்.

இருவரையும் பார்த்த வெற்றிவேல் மனைவியை கேள்வியாக பார்க்க, அவர் தோளை குலுக்கினார்.

“யது..”

“என்னங்கபா”

“காம்ப்ளக்ஸ் வேலையெல்லாம் முடிஞ்சது. திறப்பு விழா வைக்கனும்”

“நாள் பார்க்கலாம்பா.”

“இப்போதைக்கு மூணு கடை மட்டும் தான் லீஸ்க்கு போயிருக்கு. மிச்சம் நாலு இருக்கே. திறப்பு விழா பண்ணிட்டு அப்புறமா அத விளம்பரத்துல போட்டுக்கலாமா?”

“அதான்பா சரியா இருக்கும்”

“காம்ப்ளக்ஸ் பேரு என்ன மாமா? எங்க கட்டுறீங்க?” என்று வனிஷா விசாரித்தாள்.

வீட்டில் எல்லோருக்குமே தெரியும். வனிஷாவைத் தவிர. அதனால் அவள் கேட்க, வசந்தா வெற்றிவேலை பார்த்தார்.

“இங்க தான்மா..” என்றவர் இடத்தை சொன்னார்.

“பேரு இன்னும் வைக்கல.”

“வெற்றினே வைங்க. அதான ஸ்டோர் எல்லாத்துக்கும் இருக்கு?”

“ஆமாபா. வெற்றிவேல் காம்ப்ளக்ஸ்னு பேரு வச்சுக்கலாம்” என்று யது ஒத்து ஊதினான்.

வனிஷா அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, திரும்பிக் கொண்டாள்.

“ஏன் மாமா ஊருக்குள்ளயே எல்லாத்தையும் வைக்கிறீங்க? பக்கத்து ஊர் எல்லாம் சும்மா தான இருக்கு? அங்கயும் ஸ்டோர் ஓபன் பண்ணலாம்ல?”

“அங்க எல்லாம் போய் அலைய முடியாதுலமா?”

“இதோ இவரிருக்காரே. அலைய சொல்லுங்க” என்று கூறி விட, யது அவளை முறைக்க முடியாமல் கஷ்டப்பட்டான்.

“இங்க இருக்க வேலை எல்லாம் முடியட்டும். அடுத்து நீ சொன்ன மாதிரி எங்க வாங்குறதுனு பார்க்கலாம்”

“நான் ஒரு இடம் சொல்லவா?”

“சொல்லுடா” என்று யது ஆர்வம் காட்டி கேட்க, வனிஷா வெற்றிவேலை மட்டுமே பார்த்தாள்.

“பாட்டி ஊர் இருக்குல.. அங்க கடைங்களே இருக்காது. ஊருக்குள்ள ரெண்டு மளிகை கடை தான். மத்த எல்லாமே பொட்டிக்கடை தான். அங்க எது வேணும்னாலும் பஸ் பிடிச்சு சிட்டிக்கு போகனும். இல்ல போறவங்க கிட்ட சொல்லி வாங்கிட்டு வரனும். அங்க ஒரு சூப்பர் மார்க்கெட் இல்லனா டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சுருக்கேன். அங்க வைக்கலாமே?”

“நீ பாட்டி ஊருக்கு போயிருக்கியா?” என்று யது கேட்க, தலையாட்டினாள்.

“அங்க பாட்டிக்கு அவங்க வீட்டுல கொடுத்த நிலமும் இருக்கு. அந்த நிலமும் கோவிலுக்கு பக்கத்துல தான் இருக்கும். ஸ்டோரா கட்டுனாலும் இல்ல காம்ப்ளக்ஸ் கட்டி லீஸ்க்கு விட்டாலும் நல்லா இருக்கும். ஜஸ்ட் தோனுனத சொன்னேன். நீங்க மிச்சத்த பார்த்துக்கோங்க.”

வெற்றிவேல் யோசிப்பதை பார்த்து விட்டு, பேச்சை முடித்துக் கொண்டாள்.

வழக்கம் போல் தன் மேக் அப் பை கலைத்து முகம் கழுவி வந்தவள், எதிரில் வந்த யதுநந்தனை பார்த்து முறைத்து விட்டு திரும்பினாள்.

“பார்ரா..” என்றவன் அவளை இழுத்து அணைத்து, முகம் பார்த்தான்.

“விடுங்க அத்தான்” என்று அவள் விலகப் பார்க்க, “எதுக்கு முறைச்சுட்டே சுத்துற?” என்று கேட்டான்.

“உங்கள முறைச்சா ஆயுசு கூடுமாம்.”

“யாரு சொன்னா?”

“கிளி ஜோசியம் பார்த்தேன்.”

“ஆமா யாருக்கு ஆயுசு கூடும்?”

“உங்களுக்கு தான். நல்லா நூறு வருசம் வாழனும்ல? அதான் முறைச்சுட்டே இருக்கேன்”

அவளது விளக்கத்தில் சிரிப்பு பொங்கி வர, “என் மேல என் பொண்டாட்டிக்கு எம்புட்டு பாசம்?” என்று கொஞ்சினான்.

“ஆமா ஆமா.. விடுங்க ” என்று விலகியவளை, இழுத்து வந்து மெத்தையில் போட்டவன், அவள் எழாமல் இருக்க அவள் மீதே விழுந்தான்.

பொய்யாய் முறைத்தவளின் இரு கைகளிலிலும் விரல்களை கோர்த்துக் கொண்டான்.

“போனாப்போகுதுனு விட்டா ரொம்ப போறியே? என்னவாம்?”

“நீங்க மகாவுக்கு சப்போர்ட் பண்ணது பிடிக்கல”

“நான் எங்கடி சப்போர்ட் பண்ணேன்”

“அவள அடிச்சது தப்புனு சொல்லல?”

“ஆமா. அடிச்சது தப்பு தான்.”

“தள்ளுங்க”

கையை விடுவிக்க பார்க்க, “இரு நிஷா” என்று கூறி பிடித்துக் கொண்டான்.

“அடிச்சது தப்பு தான். அவ தப்புக்கு நீ அடிச்ச. ஆனா எந்த தப்பும் பண்ணாத உன்னை திருப்பி அடிச்சுட்டா. புரியுதா இல்லையா?”

“அதுக்கு தான வேணும்னே கத்தி எல்லாரையும் கூட்டுனேன்”

வனிஷா கெத்தாய் சொல்ல, யது அவளை அதிர்ச்சியாகப் பார்த்தான்.

“அவ அடிச்சதுக்கு அவ்வளவு பெருசா எதுக்கு கத்துனேன்னு நினைச்சீங்க? வலியில எல்லாம் இல்ல. கத்துற அளவுக்கு அது பெரிய வலியும் இல்ல. ஆனா தப்பாவும் பேசிட்டு என்னை அடிப்பாளா? மொத்த குடும்பத்தையும் வர வச்சு பேசிக்கிறேன்னு தான் கத்துனேன்”

“அடிப்பாவி!”

“அவ அடிச்சதும் சாக்ல நின்னுட்டு, அப்புறமா சோபால சாவகாசமா உட்கார்ந்துட்டு தான் கத்துனேன். இத அவளே எதிர்பார்க்கல.”

“எவ்வளவு சேட்டைடி உனக்கு?” என்றவனுக்கும் சிரிப்பு வந்தது.

“திரும்ப திரும்ப நான் அடிச்சுருந்தா அவ விக்டிம் ஆகியிருப்பாளே. அதுக்கு தான்” என்று சிரித்தவளின் கன்னத்தை பிடித்துத் திருப்பி காயத்தை பார்த்தான்.

“இன்னும் வலிக்குதா?”

“தூங்கி எழுந்தா சரியாப்போயிடும்”

“இனிமே இப்படி எதுவும் செய்யாத”

“செய்வேன்”

“நிஷா..”

“அவ இன்னும் பேசுனா செய்வேன். உங்களுக்கு என்ன அவ மேல அவ்வளவு அக்கறை? உங்க மாமா மகள்னா? இல்ல எக்ஸ் ஃபியான்ஸினா? ரொம்ப தான் பண்ணுறீங்க. தள்ளுங்க முதல்ல”

கோபமாய் கேட்டு முகத்தை திருப்பிக் கொண்டு அவள் கையைப் பிரிக்க, யது பல் பதிய அவள் கன்னத்தை கடித்திருந்தான்.

சத்தமில்லாமல் பல்லைக்கடித்தவள், அவனை முறைத்து வைத்தாள்.

“இன்னொரு தடவ இந்த மாதிரி கேள்வி கேட்ட பல்ல கழட்டிருவேன்”

யதுவும் முறைத்துக் கொண்டே சொன்னான்.

“கழட்டிருவீங்களா? அப்ப பல் செட்டா? வேணாம். பல் இல்லாம நீங்க பார்க்க நல்லாவே இருக்க மாட்டீங்க.”

வனிஷா முகத்தை சுருக்கி அப்பாவியாய் பேச, “உன்ன…” என்றவன் கன்னத்திலிருந்து கழுத்துக்கு தாவினான்.

வனிஷா குலுங்கிச் சிரித்தாள்.

“அத்தான்.. விடுங்க”

“பேச்சு பேச்சு.. என்னமா வாய் பேசுற?”

“சரி விடுங்க. நான் நைட் க்ரீம் அப்ளை பண்ணல”

“பண்ணலாமே.. இரு நானே எடுத்து வர்ரேன்” என்று இறங்கிச் சென்று எடுத்து வந்தவன், அவளருகே படுத்துக் கொண்டு அள்ளி பூச ஆரம்பித்தான்.

“இவ்வளவா? அய்யோ.. இவ்வளவு வேணாம்”

“எனக்கு வேணும்” என்றவன் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைந்தான்.

வனிஷா கண்ணை மூடிக் கொள்ள, நைட் க்ரீம் டப்பா காலியானது.

_______

வீட்டில் தனியாய் அமர்ந்து இருந்தான் அதியன். முத்துவேலுக்கு பெங்களூர் மற்றும் டெல்லியில் சில வேலைகள் இருந்தது. அதனை பார்க்க கிளம்பியவர், பாக்கியத்தையும் வினோத்தையும் உடன் அழைத்துச் சென்றார்.

புதுமணத்தம்பதிகளுக்கு தனிமை கொடுக்க விரும்பினார். சண்டை மட்டுமே போடாமல் பேசி சமாதானம் ஆகட்டும் என்ற எண்ணத்தில் செய்தது. ஆனால் அவர்கள் அந்த பக்கம் கிளம்பியதுமே, பிரச்சனை முற்றி கை நீட்டும் அளவுக்கு சென்று விட்டது.

அடித்தது தவறு என்று அதியனின் மனசாட்சி குத்திக் கொண்டிருந்தது. அவள் எவ்வளவு பெரிய தவறு செய்திருந்தாலும், கை நீட்டி அடித்திருக்க கூடாது என்று நியாய மனம் அநியாயமாய் படுத்தியது.

அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒரு மனம் சொல்ல, அவள் செய்ததும் தவறு தானே என்று மற்றொரு மனம் வாதிட்டது.

இரண்டுக்கும் இடையில் அல்லாடிப்போனவன், தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

நேரம் பதினொன்றை தொட்டு விட்டதாக மணி அடிக்க, மன்னிப்பு கேட்கும் முடிவுக்கு வந்து விட்டான். அடி வாங்கி அவள் அழுதது இன்னும் கண்ணில் நின்றது. மன்னிப்பை வேண்டி, அவளை இங்கு அழைத்து வந்து விட வேண்டும் என்று முடிவு செய்தான்.

கைபேசியை எடுத்து அழைக்க, அது அணைத்து வைக்கப்பட்டதாக பதில் கூறியது.

‘கோபத்துல ஆஃப் பண்ணி வச்சுட்டாளா?’ என்று யோசித்தவனுக்கு மன்னிப்பு கேட்காமல் தூக்கம் வராது என்று தோன்றியது. உடனே வீட்டை பூட்டி விட்டு, நந்தவனத்தை நோக்கி கிளம்பி விட்டான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
28
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்