Loading

 

மாலை நேரம்.. கசகசவென இருந்த சாலைகளின் இரைச்சலை கேட்காமல், தனி உலகத்தில் இருந்தாள் மகாலட்சுமி. ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றில் அமர்ந்து இருந்தாள். யாரையும் பார்க்கவோ பேசவோ பிடிக்கவில்லை.

கன்னம் வீங்கிப்போயிருந்தது. ஐஸ் பேக் வாங்கி கன்னத்தில் வைத்துக் கொண்டு ஓரமாக அமர்ந்து கொண்டாள்.

கண்ணீர் விடாமல் வழிந்தது. ஆளாளுக்கு அடித்து விட்டார்களே என்ற கோபம். கூடவே எல்லாமே தவறாய் போன ஆத்திரம். யார் மீதும் கோபத்தைக் காட்டப்பிடிக்கவில்லை. அதனால் தான் இங்கு வந்து அமர்ந்து விட்டாள்.

அதியன் தனியாக கிளம்பி விட்டதும், மகாலட்சுமிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. வாசலில் நின்று கொண்டு, கார் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தாள்‌.

அப்போது அங்கு வந்த சீதா, அவளது கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு செடிகள் இருக்கும் பக்கம் சென்றாள்.

“அறிவிருக்கா உனக்கு? என்ன காரியம் பண்ணிட்டு இருக்க?”

“அண்ணி..”

“வாய மூடு.. எதுக்கு தேவையில்லாம வானு கிட்ட இப்படி பேசி வச்சுருக்க?”

“அவ தான என் வாழ்க்கைய பறிச்சது?”

“அப்படியே அறைஞ்சேன்னா..” என்று கையை ஓங்கினாள்.

“நீங்களும் அடிங்க. என்னை பார்த்தா எல்லாருக்கும் அடிக்கனும்னு தோனுது இல்ல?”

“பின்ன நீ பண்ணுறதுக்கு கொஞ்சுவாங்களா? வானு ஏன் உன் வாழ்க்கைய பறிக்க போறா? நீயா தான கல்யாணத்தன்னைக்கு போன?”

“ஆனா நான் திரும்ப வர்ர வரை வெயிட் பண்ண விடாம, அவர கல்யாணம் பண்ணிக்கிட்டாளே”

“பைத்தியம் மாதிரி உளறாத. அவள எல்லாருமா சேர்ந்து ஃபோர்ஸ் பண்ணாங்க”

“சும்மா சொல்லாதீங்க”

“உன்னை பிச்சுடுவேன் மகா. சும்மா சொல்லுறாங்களாம். உன் ஃப்ரண்டுனு ஒருத்திய கூட வச்சுருக்கியே.. அவ யது கிட்ட என்ன சொல்லி தொலைச்சானு தெரியல. அவன் கல்யாணத்த நிறுத்திட்டு வீட்டுக்கே கிளம்புற முடிவுல இருந்தான். பாட்டி தான் இப்படி நின்னுட்டா திரும்ப அவனுக்கு கல்யாணம் நடக்குமோ என்னமோனு பயந்து வனிஷாவ ஃபோர்ஸ் பண்ணாங்க.”

“இவளும் சந்தோசமா சம்மதிச்சுருப்பா”

“நீ என் கிட்ட அடி வாங்க போற பாரு. அன்னைக்கு நடந்தத தீபா உன் கிட்ட சொல்லவே இல்லயா? முதல்ல உன்னை காணோம்னு தெரிஞ்சதுமே பாட்டிக்கு பிரஷ்ஷர் கூடிருச்சு. நாங்க எல்லாம் அந்த பதட்டத்துல உன்னை தேடக்கூட இல்ல. ஆனா வனிஷா உன்னை தேடி அலைஞ்சா. சிசிடிவி ஃபுட்டேஜ் எடுத்து பார்த்தா. எல்லாரும் நீ ஓடிப்போயிட்டனு நினைச்சாலும், வனிஷா மட்டும் இருக்கவே இருக்காது. மகாவுக்கு இந்த கல்யாணம் ரொம்பவே இஷ்டம் தான். யதுவ மகாவுக்கு ரொம்ப பிடிக்கும். எதாவது பிரச்சனையில இருப்பா. தேடிப் பார்ப்போம்னு சொல்லிட்டே இருந்தா. அவ சொல்ல சொல்ல கேட்காம, பாட்டி தான் அவள ஃபோர்ஸ் பண்ணிட்டே இருந்தாங்க. கடைசியில யதுவும் ஓகே சொல்லவும், கடைசியா தான் அவ சம்மதிச்சா. என்னமோ திட்டம் போட்டு உன் வாழ்க்கைய பறிச்சுட்டானு பேசுற. இது போதாதுனு யது மனசுல நீ இருக்கனு கண்டத பேசிட்டு இருக்க. லூசாகிட்டியா நீ?”

சீதா மூச்சு விடாமல் அன்று நடந்ததை சொல்ல, மகாலட்சுமி அதிர்வோடு கேட்டுக் கொண்டிருந்தாள். குடும்பத்தில் யாருமே நம்பாத போதும், வனிஷா அவளை நம்பி இருக்கிறாள். இது எதிர்பார்க்காத திருப்பம் அல்லவா? தீபாவுக்கு இது எதுவும் தெரியவில்லை. சொல்லவும் இல்லை. இப்போது மகாவுக்கு சற்று முன் அவள் பேசியது எவ்வளவு பெரிய பொய் என்று புரிந்தது.

மகாலட்சுமி கண்ணை மூடி தலையை பிடித்துக் கொள்ள, “எங்களுக்கு ஃப்ளைட்டுக்கு லேட்டாச்சு. அதுனால உன்னை சும்மா விடுறேன். இத உன் அண்ணா கேட்டாருனா என்ன நினைப்பாரு? ஏற்கனவே நீ அதியன் கூட நல்லா வாழலயோனு வருத்தப்பட்டுட்டு இருக்கார். இன்னும் என்னத்தையாச்சும் பண்ணி வைக்காத. அத்த வேற, சரியா சாப்பிடாம உள்ளயே மறுகிட்டு இருக்காங்க. மாமாவும் அமைதியாவே இருக்காரு. எல்லாருக்கும் உன்னை பத்தி கவலை தான். அத புரிஞ்சுட்டு நடக்கப்பாரு” என்று அழுத்திக் கூறி விட்டு சென்று விட்டாள்.

சீதாவுக்கும் செல்வகுமாருக்கும், பரமேஸ்வரி, மகா அதியன் கதையை சொல்லவே இல்லை. தெரிந்திருந்தால் சீதாவும் மகாவை வெறுத்திருப்பாளோ என்னவோ?

அடுத்த ஒரு மணி நேரத்தில் செல்வகுமார் வந்து சேர, அவனோடு சீதாவும் சமீராவும் கிளம்பி விட்டனர். அவர்களை விட்டு வர யதுவும் கிளம்பிச் சென்று விட்டான். அதுவரை அமைதியாக இருந்து, அண்ணன் குடும்பத்தை வழி அனுப்பி விட்டாள்.

போகும் போது, செல்வகுமார் அவளுக்கு அழகான நகை செட்டை பரிசளித்து விட்டுச் சென்றான்.

அதோடு வசந்தா அதியனுக்கும் மகாவுக்கும் கொடுத்த இரண்டு மோதிரங்களும் இருந்தது. அந்த மோதிரத்தை பார்த்தவளுக்கு, அதியனின் நினைவு வந்தது. பேசியதை எல்லாம் கேட்டு விட்டு கோபமாக போனானே. அவனை எப்படி சரி செய்வது என்று யோசித்தாள்.

இப்போதே அதியனை பார்க்க வேண்டும் என்று தோன்ற, அவளும் கிளம்பினாள். எங்கிருக்கிறான் என்று கேட்க தோன்றவில்லை. நேராக வீட்டை நோக்கி புறப்பட்டாள்.

பேசி புரிய வைக்க நினைத்தாள். அவன் கோபமாக இருப்பது என்னவோ புதிதல்ல என்றாலும், அவளுக்கு ஏனோ இந்த விசயத்தை விளக்க வேண்டும் போல் தோன்றியது. கூடவே வனிஷா அவள் நினைத்தது போல் அல்ல என்ற செய்தி, சற்று அவளை தெளிய வைத்திருந்தது.

உடனே பேசினால் அதியனும் புரிந்து கொள்வான் என்று தோன்ற, யாரிடமும் சொல்லாமல் கிளம்பிச் சென்று விட்டாள்.

அதியனின் வீட்டில் நுழைய, வீடு அமைதியாக இருந்தது. யாரையும் காணவில்லை. அறையில் மின்விசிறி ஓடுவது தெரிய, வாசல் கதவை பூட்டி விட்டு உள்ளே வந்தாள்.

அதியனை நினைத்து சற்று பயமாகத்தான் இருந்தது. ஏற்கனவே இருக்கும் கோபத்தில், இன்னும் திட்டத்தான் போகிறான் என்று தெரியும். அதையும் தாண்டி பேச வேண்டும். தைரியத்தை வர வைத்துக் கொண்டாள். அவளது நிலையை புரிய வைக்க வேண்டும்.

கூடவே பக்குவமாக பேசி திருமணத்தை முறித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். அவளால் இன்று மட்டும் அல்ல. என்றுமே அதியனோடு வாழ முடியாது. அதில் மட்டும் தெளிவாக இருந்தாள்.

மூச்சை பிடித்துக் கொண்டு அறைக்கதவை திறந்து உள்ளே வந்தவளை, ஓங்கி அறைந்திருந்தான் அதியன்.

மகாலட்சுமி இதை எதிர்பார்க்கவில்லை. அடித்த அடியில் தரையில் விழுந்திருந்தாள். எதிரே இறுகிய இரும்பாய் நின்றிருந்தான் அவன்.

எரிந்த கன்னத்தை பிடித்துக் கொண்டு அவள் நிமிர்ந்து பார்க்க, “எந்திரிடி” என்று அதட்டினான்.

தரையில் கிடந்தவள் மீது அவனுக்கு இரக்கமே வரவில்லை. அவன் மனம் எல்லாம், அவள் வனிஷாவிடம் சொன்ன வார்த்தைகளில் நிலைத்திருந்தது. அது கொடுத்த கொதிப்பில், உலைக்கலமாக நின்றிருந்தான்.

அவள் அதிர்ச்சியில் அசையாமல் பார்க்க, “எந்திரிங்குறேன்ல?” என்று குரலை உயர்த்தினான்.

பயந்து போய் வேறு எதையும் யோசிக்காமல் எழுந்து விட்டாள். வாங்கி அடியில் கன்னம் எரிய கண்கள் கலங்க ஆரம்பித்தது. எழுந்த வேகத்தில் தலையே சுற்றியது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு நின்றாள்.

“என்னடி நினைச்சுட்டு இருக்க மனசுல? நான் கட்டுன தாலி கழுத்துல இருக்கும் போது.. அடுத்தவ புருஷன் மேல ஆசைப்படுவியா? பார்த்துட்டு சும்மா இருப்பேன்னு நினைப்பா? தொலைச்சுடுவேன் பார்த்துக்க”

அவன் பேசப்பேச கண்ணீர் வந்தது மகாலட்சுமிக்கு. வனிஷா அடித்த வலியே குறையாமல் இருக்க இப்போது இவனும் அடித்து விட்டான். வலி உயிர் போனது. வாயைத்திறந்து பேச நினைத்தால் தொண்டை அடைத்தது. கன்னம் ஏற்கனவே வீங்க ஆரம்பித்திருக்க இப்போது மேலும் சிவக்க ஆரம்பித்தது.

“நீ முட்டாள்னு தெரியும். ஆனா இப்படி கேவலமா ஒன்ன செய்வன்னு நினைக்கவே இல்ல. நீ பழைய மகாலட்சுமி இல்ல‌. ஈசியா என்னை தூக்கிப்போட்டுட்டு யது பின்னாடி போறதுக்கு. இப்ப நீ என் பொண்டாட்டி. அந்த நினைப்பு மூளையில இருக்கா? இல்லனா கழுத்துல ரெண்டு தொங்குதே அத எடுத்துப்பாரு..” என்றவன், அவளது தாலியை இழுத்து எடுத்துக் காட்டினான்.

அவன் இழுத்த வேகத்தில் கழுத்து வலித்தாலும், மகா வாயைத்திறக்கவில்லை.

“இது உன் கழுத்துல இருக்க வரை இன்னொருத்தன பத்தி நினைச்ச?” என்று எச்சரித்தவன், “ச்சை” என்று விட்டு விட்டான்.

அவனால் அவளை திட்டவும் முடியவில்லை. சண்டை போடவும் பிடிக்கவில்லை. இன்னும் நன்றாக திட்டி கோபத்தை இறக்கி வை என்றது மூளை. ஆனால் மனமோ, அவளை காயப்படுத்திக் கொண்டே போவதை நினைத்து வருந்தியது. இன்று திருமணம் முடிந்ததும், அவளிடம் பொறுமையாக பேசி, அமெரிக்கா அழைத்துச் செல்ல நினைத்து இருந்தான்.

இன்னும் ஏகப்பட்ட திட்டங்கள். எல்லாமே அவனது கனவு கோட்டையாக இருக்க, மகாலட்சுமி ஒரே நொடியில் அதை கலைத்திருந்தாள். அந்த ஆத்திரம் மட்டும் குறைய மாட்டேன் என்றது.

அவன் முன்னால் அழவும் பிடிக்காமல், பேசவும் முடியாமல் மகா வலியோடு போராடிக் கொண்டிருக்க, “ஏய்”என்று சொடக்கிட்டு அழைத்தான்.

“நாளைக்கு பாஸ்போர்ட் எடுக்கப் போறோம். சீக்கிரமே அமெரிக்கா கிளம்புறோம். வரப்பிடிக்கல என்னை பிடிக்கலனு ஏதாவது சொல்லிட்டு இருந்த? மனுசனா இருக்க மாட்டேன். உனக்கு பணம் அழகு தான முக்கியம்? அங்க வந்து பாரு.. எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியும். அத பார்த்துட்டாவது யதுநந்தன மறந்துத் தொலை. அவங்க வாழ்க்கையாவது நிம்மதியா இருக்கட்டும்”

பொறிந்து கொட்டியவனை பார்க்க பார்க்க அவளுக்கு அழுகை கூடியது.

“அழுது நடிக்காதடி. எரிச்சலா வருது” என்று அதற்கும் திட்டியவன், “ஒழுங்கா மூட்ட முடிச்ச கட்டிட்டு ரெடியாகுற வழிய பாரு” என்று மிரட்டி விட்டு வெளியேறி விட்டான்.

இன்னும் இருந்தால், மேலும் அடித்து விடுவோமோ என்ற பயத்தில் கிளம்பி இருந்தான்.

அவன் சென்றதும் பொங்கி அழுதவள், உடனே கிளம்பி விட்டாள். வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. நந்தவனத்துக்கும் போக வழியில்லை. வனிஷாவிடம் பேசி அவளை அடித்து மொத்த குடும்பமும் அவளுக்கெதிராக நிற்கிறது. அதியனும் அவளை அடித்து விட்டான்.

யாரும் அவளை புரிந்து கொள்ளவில்லை. அவளுக்கு என்ன வேண்டும் என்று யாருமே கேட்கவில்லை. யாருமே அவளுக்காக இல்லை.

வாழ்வே வெறுத்துப் போனது போல் இருக்க, கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள். அழுகை மட்டுப்பட்டாலும் கன்னம் வலியெடுக்க, கண்ணில் பட்ட ஐஸ்கிரீம் பார்லரில் நுழைந்து பனிக்கட்டியை வாங்கி வைத்துக் கொண்டாள்.

காலையில் யது வனிஷாவிற்காக பனிக்கட்டியை வைத்து விட்டது நினைவு வந்தது. கண்ணீர் அதிகரித்தது. எப்படி வாழ வேண்டிய வாழ்வு? எதுவுமே இல்லாமல் போக யார் காரணம்?

இப்போதும் வினோத் அதியன் மீது தான் கோபம் வந்தது. மனதிற்குள் அர்ச்சித்துக் கொண்டு அமர்ந்திருக்க, “மேடம்.. க்ளோஸ் பண்ண போறோம்” என்றான் அந்த பார்லரில் வேலை செய்பவன்.

அப்போது தான் வெளியே பார்த்தாள். வானம் இருட்டி இருந்தது. மணியை பார்க்க அது எட்டைத்தாண்டி ஓடியது.

“கிளம்பிட்டேன்” என்றவள் பர்ஸ்ஸோடு வெளியே வந்தாள்.

இப்போது வீட்டுக்கு செல்ல வேண்டும். சுற்றியும் பார்த்தாள். எந்த இடமென்று தெரியவில்லை.

கைபேசியை எடுத்தவள், இது எந்த இடம் என்று பார்க்க முயற்சித்துக் கொண்டே நடக்க, வளைவிலிருந்து திரும்பிய பைக் ஹாரன் சத்தத்தை கவனிக்கவில்லை.

வேகமாக வந்த பைக் அவளை எதிர் பாராமல் மோதி இருக்க, கையிலிருந்த கைபேசியோடு அருகே குவிந்து கிடந்த பாறாங்கற்கள் மீது விழுந்தாள்.

கைபேசி கல்லில் மோதி உயிரை விட்டு விட, அவளது தலையும் கைகாலும் கல்லில் மோதியது. விழுந்த வேகத்தில் ரத்தம் வர, வலியை உணரும் முன்பே மயங்கி விட்டாள்.

அதியன் இரவு வீடு திரும்ப, வெளியே கதவு பூட்டி இருக்க தன்னிடம் இருந்த சாவியால் திறந்து உள்ளே வந்தான். வீடு மொத்தமும் இருட்டாக இருந்தது. மகாலட்சுமி இல்லை என்று புரிந்தது.

‘நந்தவனத்துக்கே போயிட்டா போல. போகட்டும். இருந்தா எரிச்சல தான் கிளப்புவா’ என்று விட்டு விட்டான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
24
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்