Loading

 

“அம்மா..” என்ற வனிஷாவின் அலறல், வெளியே இருந்த யதுவின் காதில் விழுந்தது. கேட்டதும் பதறி உள்ளே வந்தான்.

அவனது பதட்டத்தை பார்த்து மற்றவர்களும் ஓடி வந்தனர்.

வனிஷா சோபாவில் கன்னத்தை பற்றிக் கொண்டு அமர்ந்திருந்திருக்க, அதிர்ந்து அருகே சென்றான்.

“என்னாச்சு நிஷா..?” என்று வேகமாக வந்து கன்னத்தைப் பார்த்தான் யது..

கன்னத்தில் லேசான கீறலோடு விரல் தடமும் இருக்க, யதுவின் முகம் இறுகியது.

அடுத்தடுத்து உள்ளே வந்தவர்கள், காயத்தை பார்த்து அதிர்ந்து போனார்கள்.

“மகா.. அடிச்சியா?” என்று பரமேஸ்வரி கேட்க, மகா விழித்தாள்.

என்னவென்று சொல்வது? ஆமாம் என்றால் காரணம் கேட்பார்கள். இல்லை என்று பொய் சொல்லவும் முடியாது. வனிஷா இப்படி அலறுவாள் என்று மகா எதிர்பார்க்கவில்லை‌

போதாதென்று எல்லோரும் மொத்தமாக வந்து விட்டதே அவளுக்கு மேலும் பதட்டத்தை வர வைத்திருந்தது. மேலும் கேள்வி வேறு கேட்க, பேந்த பேந்த விழித்தாள்.

“வானு.. இவ அடிச்சாளா?” என்று வசந்தா கேட்க, வனிஷா தலையை மட்டும் ஆட்டினாள்.

“என்ன மகா இது? கை நீட்டுற அளவுக்கு போயிருக்க..?” என்று சீதா அதட்டினாள்.

“எதுக்கு அடிச்ச நீ? பார்த்துட்டே நிக்கிற.. பதில் சொல்லு” என்று பரமேஸ்வரி கேட்டார்.

மகாவிற்கு இப்போது கோபம் வந்தது.

“நான் அடிச்சது மட்டும் தான் உங்களுக்கு தெரியுதா? அவ தான் முதல்ல என்னை அடிச்சா. அத கேளுங்க.” என்று மகா வேகமாக பேசினாள்.

அப்போது தான் அவளது கன்னத்திலும் அடி வாங்கியிருந்த தடம் இருந்ததை எல்லோரும் கவனித்தனர். யதுவைத் தவிர.

“வானு உன்னை அடிச்சாளா?” என்று சீதா சந்தேகமாக கேட்டாள்.

“ஆமா” என்று கூறிய மகா, எல்லோரும் இப்போது வனிஷா பக்கம் திரும்புவார்கள் என்று எதிர்பார்த்தாள்.

ஆனால், “ஏன் அடிச்சா?” என்று கேட்டார் பாட்டி.

“அதான.. அவ அடிக்கிற அளவு நீ என்ன பண்ண?” என்று வசந்தா கேட்க, மகாவிற்கு தேள் கொட்டிய உணர்வு.

அடித்த காரணத்தை சொல்ல முடியுமா என்ன? சொன்னால் மொத்த குடும்பமும் அவளை அடிக்க வருமே..

ஆனால் இந்த கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை. மகா வனிஷாவை அடித்ததை மட்டும், ஏன் எதற்கு என்று காரணமே கேட்காமல் திட்ட அவளை ஆரம்பித்தனர்.

இப்போது வனிஷா அடித்தாள் என்று சொன்னாலும் தவறு மகாவின் பக்கமே இருக்கும் என்று பேசுகின்றனர்.

இது மகாவின் மனதை பாதித்தது. யாருமே ஏன் அவள் பக்கம் பேசவில்லை? தன் பக்கம் நியாயமில்லை என்பதை மறந்திருந்தாள். யாராவது தனக்கு ஆதரவாக பேச மாட்டார்களா ஈன்று பார்த்தாள். எல்லாருமே அவளை சந்தேகமாக தான் பார்த்தனர்.

“அவ அடிச்சா மட்டும் ஏன் அடிச்சானு அவ கிட்ட யாருமே கேட்கல. என்னை மட்டும் கேள்வி கேட்டு குறை சொல்லுவீங்க இல்ல?” என்று கேட்கும் போதே மகாவுக்கு கண்கலங்கி விட்டது.

“வானு காரணமில்லாம கோபப்பட மாட்டா. கை நீட்டவும் மாட்டா” என்று பாட்டி கூற, “அப்போ நான் மட்டும் காரணமே இல்லாம எல்லாத்தையும் பண்ணுற பைத்தியம்ங்குறீங்களா பாட்டி? நல்லா பார்ஷியாலிட்டி பார்க்குறீங்க.. நீங்க கூடவா மா?” என்றவள் கண்ணீர் கன்னத்தை தொட்டு விட்டது.

ஆனால் அங்கிருந்த யாரும் அவளது கண்ணீருக்கு இறங்கியதாக தெரியவில்லை. பரமேஸ்வரியைத் தவிர.

“என்ன விசயம்னு சொல்லு மகா. எதுக்கு இப்படி ரெண்டு பேருமே மாறி மாறி அடிச்சுருக்கீங்க?” என்று விசாரித்தார்.

மகா வாயைத்திறக்காமல் அழுது வைத்தாள்.

யதுவோ இந்த பேச்சை கவனிக்காமல், வனிஷாவின்‌ கன்னத்தை ஆராய்ந்தான். மகாவின் பழக்கங்களில் ஒன்று மோதிரத்தை உட்பக்கமாக திருப்பி அணிவது. மோதிரக் கையை எங்காவது இடித்துக் கொள்வது அவளது வழக்கம். அதற்காக உள்ளே திருப்பிவிடுவாள். அந்த பழக்கத்தினால், இப்போது அவள் கையிலிருந்த மோதிரம் வனிஷாவின் கன்னத்தை பதம் பார்த்து விட்டது.

“ரொம்ப வலிக்குதா?” என்று யது கேட்க, வனிஷா முகத்தை சுருக்கி தலையை ஆட்டினாள்.

“அத்த.. மருந்து எதாவது வீட்டுல இருந்தா எடுத்துட்டு வாங்க. ஐஸ் கியூப்ஸ் இருக்கா?” என்று கேட்க “ம்ம்.. இருக்கு யது நான் முதல்ல மருந்து எடுத்துட்டு வர்ரேன்” என்று கூறி சென்று விட்டார் மலர்.

சுற்றியிருந்தவர்கள் இதை கவனிக்க, மகாவிற்கு அவமானமாக இருந்தது. சற்று முன் அவள் சொன்ன வார்த்தை அப்பட்டமான பொய் என்று காட்டி விட்டானே யதுநந்தன்.

அவள் கண்ணீர் விட்டுக் கொண்டு நிற்கிறாள். அதை திரும்பியும் பார்க்காமல் மனைவிக்கு சேவை செய்கிறான்.

உள்ளம் சல்லடையாக துளையிட, தாங்க முடியாமல் அதற்கும் கண்ணீர் விட்டாள்.

மலர் மருந்தை எடுக்கப்போக, யது பனிக்கட்டிகளை எடுக்க சென்று விட்டான்.

“வலிக்குதா வானு? கன்னத்த காட்டு” என்று வசந்தா விசாரிக்க, “ஆமா அத்த ஒரு மாதிரி கன்னம் வீங்குற மாதிரி தோனுது” என்றாள்.

“கைய வச்சு அழுத்தாத. ஐஸ் வச்சா சரியா போயிடும்” என்று கூறும் போதே, யது வந்து விட்டான்.

பனிக்கட்டியை ஒரு பாலிதின் கவரில் போட்டு அழகாக கையில் கொடுத்தான்.

“இத வை. வீங்காது” என்றதும், மலர் மருந்தோடு வந்தார்.

“இதுல இருக்கு” என்று ஒரு பெட்டியை அவர் நீட்ட, வாங்கி மருந்தை எடுத்து தடவி விட்டான்.

அவர்களை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது மகாவின் பக்கம் திரும்பினர். அவளது காயத்திற்கும் மருந்திட வேண்டுமே. பரமேஸ்வரி மருந்தை கையில் எடுத்தார்.

“சொல்லு மகா.. என்ன நடந்துச்சு?” என்று அமைதியாக கேட்டபடி மருந்தை தடவி விட்டார்.

மகள் மீது கோபம் இருந்தாலும், அவள் அடி வாங்கி நிற்பதை எந்த தாயாலும் ஏற்க முடியாதே. அவர் பொறுமையாக கேட்க, மகாலட்சுமி வாயைத்திறக்கவில்லை.

“இப்ப பதில் சொல்ல போறியா இல்லையா? வானு அடிக்குற அளவு நீ என்ன செஞ்ச?” என்று வசந்தா அழுத்திக் கேட்க, மகாவிற்கு வார்த்தை வரவில்லை.

“என்ன நடந்தது நிஷா?” என்று யது அமைதியாக மருந்தை தடவியபடி கேட்க, அவளது பார்வை உயர்ந்து மகாவை நக்கலாக பார்த்தது.

அவளது பார்வையும் வனிஷாவிடம் திரும்பியது.

“சொல்லேன் மகா. எல்லாரும் கேட்குறாங்கள்ல? என் கிட்ட பேசுனத வார்த்தை மாறாம தைரியமா எல்லாரு முன்னாடியும் சொல்லிடு பார்க்கலாம்” என்று வலியை பொறுத்துக் கொண்டு சவால் விட்டாள் வனிஷா.

மகாவின் முகம் பயத்தில் வெளுத்தது. எப்படியும் சொல்ல முடியாதே. அடி வாங்கிய கன்னம் அவளுக்கும் வீங்க ஆரம்பித்தது. அதற்கு மருந்து தடவிய பரமேஸ்வரி, வனிஷா பேசிய பேச்சை கேட்டு மகாவை கூர்மையாக பார்த்தார்.

யது வனிஷாவிடம் பனிக்கட்டி நிறைந்த பையை கொடுத்து கன்னத்தில் வைத்து பிடிக்கச் சொல்லி விட்டு, “பேசாத. வலிக்குதுல” என்று கண்டிப்பாக கூறினான்.

வனிஷா வாயை மூடிக் கொள்ள, “சொல்லு. என்ன சொன்ன நிஷா கிட்ட?” என்று நேரடியாக மகாவை பார்த்து கேட்டு விட்டான்.

அவள் முகத்தை பார்த்து பேசாதவன், இன்று நேரடியாக கேட்கிறான். மகாவுக்கு நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

“இத்தனை பேரு கேட்குறோம்ல சொல்லித்தொலையேன்” என்று சீதா எரிந்து விழுந்தாள்.

மகா எதை சொல்வாள்? வாயை மூடிக் கொண்டு நின்றாள்.

“வானு.. நீயே சொல்லு.” என்று பரமேஸ்வரி கேட்க, அவள் யதுவை பார்த்தாள்.

அவன் இமை மூடித்திறக்க, “வேணாம்மா. சொன்னா எங்களுக்கு தான் அசிங்கம்” என்றாள்.

அத்தனை பேர் முகத்திலும் அதிர்ச்சி பரவியது.

“அப்படினா?”

யது புருவம் சுருங்க கேட்டான்.

“அப்படினா சொன்னா உங்களுக்கும் எனக்கும் அசிங்கம். இவளுக்கு தான் புத்தி புல் மேயுது. அசிங்கமில்லாம பேசுவா. நானும் அத சொல்லி நமக்கு அசிங்கத்த இழுக்கனுமா?”

வனிஷா கோபமாக பேசிய போதும், சொல்ல முடியாது என்பதில் தீவிரமாக இருந்தாள்.

“அவள நீ அடிச்சுருக்க வானு. காரணம் சொல்லாம என்ன பேச்சு இது?” என்று வசந்தா கேட்க, “அத்த அவ பேசுனது அப்படி ஒரு வார்த்தை. சொல்லவே நாக்கு கூசுது. முடிஞ்சா எல்லாரு முன்னாடியும் அவள சொல்ல சொல்லுங்க. அந்த மாதிரி வார்த்தை எல்லாம் பேசுனதுக்கு இன்னும் நாலு அறை விடனும் போல வெறி வருது” என்று பல்லைக் கடித்தாள்.

ஆனால் கன்னம் வலிக்க, “ஸ்ஸ்” என்று பனியை தூக்கி கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.

அவளது கோபத்தை ஆழ்ந்து பார்த்த யதுநந்தன், சட்டென எழுந்தான்.

“கமான்.. ஸ்பீக் அவுட்” என்று மகாவின் முன்னால் வந்து நின்று விட்டான்.

மகாவிற்கு மூச்சு நின்று விடும் போலானது.

“என்னையும் நிஷாவையும் அசிங்கபடுத்துற மாதிரி எதோ சொல்லிருக்க. அவ கிட்ட தைரியமா பேசுனது சரினா.. இப்ப எங்க எல்லாரு முன்னாடியும் நீ சொல்லலாம்.”

மகாவிற்கு இதயம் படுவேகமாக துடித்தது. அவள் வியர்த்து கொட்ட நின்றிருந்தாள்.

“சொல்லித்தொலையேன்” என்று பரமேஸ்வரியும் உலுக்க, அவள் மறுப்பாக தலையசைத்தாள்.

“அப்ப எங்க முன்னாடி சொல்லக்கூட கூசுற மாதிரி ஒரு விசயத்த பேசியிருக்க?” என்று யது நாடியை சரியாக பிடிக்க, எச்சிலை விழுங்கிக் கொண்டாள்.

“எனக்கு விசயம் தெரியனும். இல்ல உன்னை விட மாட்டேன்”

“விடுங்க அத்தான் அதெல்லாம் கேட்காதீங்க” என்றாள் வனிஷா.

“நீ பேசாதனு சொன்னேன். கன்னம் வலிக்குறது தெரியலையா?” என்று நிஷாவை அதட்ட, “அவ சொல்ல மாட்டா. ஏன் திரும்ப திரும்ப கேட்குறீங்க” என்று வனிஷா சலித்தாள்.

“அப்ப நீ சொல்லு”

“ப்ச்.. சொன்னது தெரியனும். அவ்வளவு தான? நீங்க நிச்சயம் பண்ணது அவள தானாம். நான் வாழுறது அவளோட வாழ்கையாம். என் கூட சேர்ந்து வாழ்ந்தா கூட அவ….” வேகமாக பேசியவள் அப்படியே வாயை மூட, “அவ?” என்று கேட்டான்.

வனிஷா முகத்தை அருவருப்பாக திருப்பிக் கொள்ள, சொல்லாமலே அங்கிருந்த பலருக்கு புரிந்து விட்டது.

பாட்டி நெஞ்சை பிடித்து விட்டார். அவரது பார்வை மகாவை அதிர்ச்சியாக பார்த்தது. மற்ற அத்தனை பேரும் அதிர்ந்து மகாவை பார்க்க, அவளால் யாரையும் எதிர் கொள்ள முடியவில்லை.

வனிஷா சொல்ல ஆரம்பித்ததும் அதிர்ந்தவள் தலை குனிந்து நின்றாள்.

“இத எதிர் பார்க்கல மகா. நம்ம வீட்டு பிள்ளையா இப்படி?” என்று கேட்ட பாட்டிக்கு ஏமாற்றமாக இருந்தது.

அதற்கு மேல் அவளை பார்த்துக் கொண்டு நிற்க முடியாமல் பாட்டி தள்ளாடி நடக்க ஆரம்பிக்க, மலர் அவரை பிடித்து அழைத்துச் சென்று விட்டார். போகும் போது மகாவை முறைக்கவும் தவறவில்லை.

பரமேஸ்வரி மகளை பார்த்தார். மீண்டும் ஒரு அடி அவருக்கு. அந்த வேதனையில் கண்ணீர் பொங்கியது. மகளை திட்டவும் தோன்றவில்லை. என்ன பேசுவதென்றும் அவருக்கு தெரியவில்லை. ஆனால் எல்லோரின் முன்பும் மகளை எதுவும் செய்ய மனம் வரவில்லை. வெறித்து ஒரு பார்வை பார்த்தவர் விருட்டென திரும்பி நடந்தார்.

வசந்தா மகாவை முறைத்து எதோ பேச வர, யது பார்வையால் தடுத்தான்.

“போய் பாட்டிய பாருங்க. தாத்தா வந்தாச்சானு பாருங்க.” என்று துரத்தி விட்டான்.

வனிஷா மட்டும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து இருந்தாள். எல்லோரும் சென்று விட்டனர்.

யாரும் பேச்சை கேட்கும் தூரத்தில் இல்லை என்றதும், “மிச்சத்த சொல்லு” என்று கேட்டான்.

வனிஷா வாயைத்திறக்க, “நீ இல்ல. நீ சொல்லு” என்று மகாவை கேட்க, அவள் தலை நிமிரவில்லை.

“நிஷா கூட வாழ்ந்தாலும்? உன்னை மறக்க மாட்டேனா? இல்ல உன் நினைப்புல அவ கூட வாழ்வேனா?” என்று கேட்டதும் மகாவின் முகம் கறுத்து விட்டது.

“ரெண்டாவது தான் இல்ல?” என்று‌ கேட்டவன், “இத பேசுறதுக்கு முன்னாடி ஒரு செகண்ட் அதியன நினைச்சு பார்த்தியா? அசிங்கமா இல்ல?” என்று கேட்டு விட்டான்.

மகாவினால் நிமிர முடியவில்லை. யது தன்னிடம் பேசமாட்டானா என்று ஏங்கியிருக்கிறாள். இன்று பேசுகிறான். அவளால் தான் அதை கேட்க முடியவில்லை.

“அதியன் ப்ளீஸ் உங்க வொய்ஃப்ப இங்க இருந்து கூட்டிட்டுப் போங்க. இல்லனா நிஷா இவள அடிச்சே கொன்னுடுவா” என்று விட்டான்.

மகா பதறி நிமிர்ந்து பார்த்தாள். யதுவின் பார்வை வெளியே செல்ல, வேகமாக திரும்பினாள்.

அங்கே அதியன் இரும்பாய் இறுகிய தோற்றத்தோடு நின்று இருந்தான். மகாவை ஒரு பார்வை பார்த்து விட்டு, ஒன்றும் சொல்லாமல் திரும்பிச் சென்றான்.

அவனது நடை சொன்னது, பேசியது அனைத்தையும் கேட்டு‌விட்டான் என்று. மகா செத்து விட்டாள்.

வனிஷா எழுந்து மகாவிடம் வந்தாள்.

“அசிங்கமா இருக்கு மகா. நீ இப்படியெல்லாம் பேசுவனு நினைக்கல. என்னையும் அத்தானயும் அசிங்க படுத்த போய், உன்னை அசிங்க படுத்திக்கிட்ட. ப்ச்ச். இனிமே என் கிட்ட பேசாத. இல்லனா திரும்ப கோபத்துல அடிச்சுடுவேன்.”

மகா அவளது பேச்சைக்காதில் வாங்காமல் அதியனை தேடி நடக்க, “நில்லு..” என்று கையைப்பிடித்த வனிஷா, அவளது விரலில் இருந்த மோதிரத்தை கழட்டி விட்டாள்.

“இது உனக்கு சொந்தமில்ல. சொந்தமில்லாதது மேல ஆசைப்படாத. எல்லா நேரமும் சொந்தம் உள்ளவங்க சும்மா விட மாட்டாங்க” என்று கூறி விட்டு, யதுவை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
24
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்